Friday, November 1, 2019

மழையில் ஒழுகும் அரசு பேருந்து! - தென்னங்கீற்றால் அடைத்த மக்கள்

கே.குணசீலன்  vikatan news

கும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்தின் மேற்கூரை ஓட்டையாக இருந்ததால் மழை நேரங்களில் பேருந்துக்குள் ஒழுகத் தொடங்கி விடும். இதைச் சரி செய்யாததால் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டம் நடைபெற்றது.


போராட்டத்தில்

கும்பகோணம் அருகே அரசு நகரப் பேருந்து ஒன்று மழையில் ஒழுகி வந்ததால் மேற்கூரை வழியாக தண்ணீர் உள்ளே கொட்டியது. இதைச் சரி செய்யாததால் பேருந்தின் மேற்கூரையில் தென்னங்கீற்றைக் கொண்டு ஓட்டையை அடைக்கும் நூதனப் போராட்டத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் ஈடுபட்டனர்.


போராட்டத்தில்


கும்பகோணத்திலிருந்து திருப்புறம்பியம் கிராமத்திற்குத் தடம் எண் 6 என்ற அரசு நகரப் பேருந்து சென்று வருகிறது. இந்தப் பேருந்து முறையாக பராமரிக்கப்படாததால் மேற்பகுதியில் ஓட்டைகள் விழுந்தன. இதனால் மழை நேரங்களில் பேருந்திற்குள் மழை நீர் ஒழுகி தண்ணீர் உள்ளே புகுந்துவிடுவதால் அந்தப் பேருந்தில் செல்லும் பயணிகள் அனைவரும் கடும் சிரமப்பட்டு வந்தனர்.

பள்ளி, கல்லூரி மாணவர்கள் மற்றும் வேலைக்குச் செல்பவர்கள் என அனைவரும் கும்பகோணத்துக்குச் செல்வதற்கு இந்தப் பேருந்தைத்தான் பயன்படுத்தி வருகின்றனர். பொதுமக்கள் இந்தப் பேருந்தை சரி செய்ய வேண்டும் எனப் பல முறை கோரிக்கை விடுத்து வந்தனர். தற்போது தொடர்ந்து மழை பெய்து வருவதால் பேருந்து ஒழுகத் தொடங்கி விடுகிறது. பள்ளி மாணவர்கள் தொடங்கி அனைத்துப் பயணிகளும் மழைநீரில் நனைந்து கொண்டே செல்கிற நிலை உள்ளது. மேலும், ஓட்டுநர் இருக்கைக்கு மேலேயே மழைநீர் சொட்டுவதால் ஓட்டுநரும் நனைந்து கொண்டே பேருந்தை ஓட்டி வருகிறார் எனப் பொதுமக்கள் தரப்பில் கூறப்படுகிறது.


போராட்டம்


இதையடுத்து முறையாக பராமரிக்கப்படாத அரசுப் பேருந்தின் மேற்கூரையை கீற்று அமைத்து மழைநீர் வராமல் தடுக்கும் நூதனப் போராட்டத்தை நடத்த முடிவு செய்தனர். அதன்படி இன்னம்பூர் கிராமத்திற்கு வந்த அரசு நகரப் பேருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியக் குழு உறுப்பினர் தட்சிணாமூர்த்தி தலைமையில் அக்கட்சியினர் மற்றும் பொதுமக்கள் சிலரும் மறித்தனர்.

பின்னர் பேருந்தின் மேற்கூரையில் ஏறி கீற்றுகளைக் கொண்டு ஓட்டைகளை அடைத்தனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து தகவலறிந்த சுவாமிமலை போலீஸார் மற்றும் அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன் வரும் 17ம் தேதி இந்தப் பேருந்துக்குப் பதிலாக புதிய பேருந்து இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்தனர். அதைத்தொடர்ந்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர்.



போராட்டத்தில்

இது குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், ``கும்பகோணத்தில் அரசு போக்குவரத்துக் கழகத்தின் டெப்போ இயங்கி வருகிறது. ஆனால், இங்கிருந்து லோக்கல் ஏரியாவிற்குச் செல்லும் பேருந்துகள் ஓட்டையும் உடைசலுமாக இருக்கின்றன. இதைப் பராமரிப்பதற்கு எந்த நடவடிக்கையும் எடுப்பது இல்லை. `பஸ் ஒழுகுது. வேற பஸ்ஸோ அல்லது ஒழுகும் பஸ்ஸை சரி செய்தோ அனுப்புங்க' எனப் பல முறை கோரினோம். இதைக் கண்டு கொள்ளவே இல்லை. எப்படி ஒழுகுற கூரை வீட்டைக் கீற்று கொண்டு அடைப்போமோ அதே போல் ஒழுகும் இந்தப் பேருந்தை தென்னங்கீற்றைக் கொண்டு மேற்கூரையில் ஓட்டை அடைக்கும்படியான போராட்டத்தை நடத்தினோம்'' என்றனர்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...