Thursday, February 5, 2015

பெற்றோரின் கனவுகளை சுமப்பவர்களா பிள்ளைகள்?



பிளஸ் 2 தேர்வுகள் நெருங்கி வருகின்றன. அதற்கு முன்னதாக பிளஸ் 2 படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களுக்கு எளிமையாக ஒரு தேர்வு...

உங்கள் குழந்தைக்கு பிடித்த உணவு எது?

பிடித்த உடை எது?

பிடித்த விளையாட்டு எது?

பிடித்த பாடம் எது?

பிடித்தமான ஆசிரியர் யார்?

உங்கள் குழந்தை என்னவாக விரும்புகிறார்?

மேற்கண்ட ஆறு கேள்விகளில் ஐந்து கேள்விக்கு பதில் தெரியும் எனில் நீங்கள் தேர்ச்சி அடைந்துவிட்டீர்கள். தேர்ச்சி அடையவில்லையா? ஒன்றும் பிரச்சினை இல்லை. இப்போதுகூட உங்கள் குழந்தையிடம் கேட்டு அறிந்துகொண்டு தேர்ச்சி பெறுங்கள்.

சரி, விஷயத்துக்கு வருவோம். வரும் பிளஸ் 2 பொதுத் தேர்வில் உங்கள் மகன்/மகள் பெறும் மதிப்பெண் களுக்கான பொறுப்பு அவர்களுக்கானது மட்டும் அல்ல... அது ஆசிரியர்களுக்கு நிகராக உங்களையும் சார்ந்தே உள்ளது. இன்று பிளஸ் 2 பொதுத் தேர்வை எதிர்கொண்டுள்ள ஒவ்வொரு வீடும் பரபரப்பு களமாக மாறியுள்ளது. தேர்வைச் சுற்றியே பெற்றோர், குழந்தைகளின் கவனம் சுழன்று கொண் டிருக்கும் தருணம் இது. இப்போது நிதானமாக பெற்றோர்கள் யோசித்து, ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்க வேண்டும்.

இந்த போட்டியில் மூன்று தரப்பிலி ருந்து உங்கள் குழந்தை அழுத்தங்களை எதிர்கொள்கிறது. 1. பெற்றோர் 2. பள்ளி நிர்வாகம் 3. சமூகம். உங்கள் குழந் தையின் பலம், பலவீனம், எதிர்பார்ப்பு, கோபம், ஆனந்தம், ஆத்திரம் உள்ளிட்ட சகல குணங்களை அறிந்து ஏற்றுக் கொண்டிருக்கும் பெற்றோரால் மட்டுமே மேற்கண்ட மன அழுத்தத்தை நேர்மறை மன அழுத்தமாக, ஆரோக்கியமான மன அழுத்தமாக உங்கள் குழந்தையின் மீது செலுத்த முடியும். ஏனெனில் சமூகத்துக்கும் பள்ளி நிர்வாகத்துக்கும் அந்த பொறுப்புகள் கிடையாது. பொரு ளியல் அல்லது ஏதோ ஓர் எதிர்பார்ப்பு அடிப்படையில் அவை இயங்குகின்றன.

பெரும்பாலான பெற்றோர் தங்களின் குழந்தைகள் முதல் மதிப்பெண் பெற வேண்டும்; மருத்துவராக அல்லது பொறியாளராக வர வேண்டும் என்று ஆசை கொண்டுள்ளனர். இது இயலும் அல்லது இயலாது என்பது அடுத்த விஷயம்.

ஆனால், ஒவ்வொரு குழந்தையும் தங்களிடம் இருக்கும் திறமைக்கு ஏற்ப மட்டுமே மதிப்பெண் பெறும் என்கிற அடிப்படை உண்மையை பெற்றோர் உணர வேண்டும். படிப்பு வராத குழந் தைக்கு ஓவியத்திலோ அல்லது வேறு ஏதோ ஒன்றிலோ அபரிமிதமான தனித் திறமை இருக்கும். திறமையே இல்லாத குழந்தை என்று யாரும் கிடையாது.

ஆனால், அதனை கண்டறிவதுதான் பெற்றோரின் சாமர்த்தியம். குழந்தை யின் திறமை குறித்து தெரிந்து கொள்ள முடியாத பெற்றோர், உங்கள் பிள்ளையின் நண்பர்கள், நெருங்கிப் பழகும் உறவினர்கள், குழந்தையின் ஆசிரியர் ஆகியோரிடம் கேட்டு அறிந்து கண்டறிய வேண்டும். அந்த தனித் திறமைக்கு ஏற்ற வகையிலான துறை சார்ந்த பணிக்கான பாடப் பிரிவுகளை தேர்வு செய்ய பெற்றோர் உதவ வேண்டும்.

ஆனால், மேற்கண்ட விருப்பத்தை நிறைவேற்றுவதற்கு தடையாக இருப்பது பெற்றோரின் சுயநலமே. விருப்பத்தை, நிறைவேறாத அல்லது தங்களால் சாதிக்க இயலாத ஒன்றை குழந்தையின் தலையில் சுமத்துவதே நடைமுறையில் அதிகமாக இருக்கிறது. உங்கள் நிறைவேறாத ஆசைகளின் வடிகால் அல்ல உங்கள் பிள்ளைகள். உங்களின் நிறைவேறாத கனவுகளை கண்டடையும் தேவதூதர்களும் அல்ல அவர்கள். அவர்களுக்கு உங் களைப் போன்றே சுயமான ஆசைக ளும் கனவுகளும் கொண்ட சராசரி மனிதர் கள்தான். அவர்களை சூப்பர் மேன்களாக கற்பிதம் செய்துகொள்ளாதீர்கள். எனவே, ஒருபோதும் உங்கள் பிள்ளையின் விருப்பத்துக்கு மாறான படிப்பை, தொழிலை உருவாக்கி கொடுக்கும் சூழலை ஏற்படுத்திவிட வேண்டாம்.

மிரட்டல் அல்லது கட்டாயப்படுத்தும் விதத்தில் மதிப்பெண் இலக்கு நிர்ண யிக்கக் கூடாது. இலக்கு அடைய முடியாதபட்சத்தில் விபரீதமாக எதையும் செய்யத் துணியும் பதின்ம வயதில் உங்கள் பிள்ளை இருக்கிறார் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாறாக தேர்வுக்கு தயாராகி வரும் குழந்தைகளிடம் கனிவாக நடந்து கொள்ளுங்கள். இரவு 10 மணிக்கு படுக்கைக்கு குழந்தைகளை அனுப்பி அதிகாலை 5 மணிக்கு எழுப்பி படிக்க வையுங்கள். ஒரு நாளைக்கு ஏழு மணி நேரம் ஓய்வு அவசியம்.

தேர்வு சமயத்திலும்கூட குழந்தை கள் தினமும் அரை மணி நேரமாவது அவர்கள் விரும்பிய இசை, தொலைக் காட்சி, விளையாட்டு உள்ளிட்ட பொழுது போக்குகளில் ஈடுபட வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும். அப்போது தான், கவனக்குறைவின்றி (Lack of concentration) தேர்வுக்கு அவர்க ளால் தயாராக முடியும்.

பெற்றோரின் அன்பும் அரவ ணைப்புமே குழந்தைகளின் தேர்வு பயத்தை போக்கும் அருமருந்து. தினமும் குழந்தைகளை பத்து நிமிடம் தியானப் பயிற்சி எடுக்கச் செய்யலாம்.

தியானத்தில் இருக்கும் போது, தேர்வு அறையில் பதற்றமின்றி அமர்ந்து இருப்பதை போன்றும், கேள்வித்தாள் எளிமையாக இருப்பதாகவும், நல்ல முறையில் தேர்வு எழுதி முடிப்பதை போலவும் அழகான கற்பனை உலகை நினைவில் நிறுத்த கற்றுக்கொடுங்கள். இதனால், உளவியல் ரீதியாக மனதில் நேர்மறை சிந்தனை அதிகரித்து, நல்ல முறையில் தேர்வுக்கு தயாராக முடியும்.

கட்டாயம் தவிர்க்க வேண்டிய வசனங்கள்...

 “உனக்கு என்ன வேண்டுமோ கேட்டு வாங்கிக்கொள்... எது வேண்டுமானாலும் செய்துகொள். மதிப்பெண் மட்டும் வாங்கிவிடு...” ரீதியிலான வசனங்களை தவிர்க்கவும். காசு கொடுத்து வாங்குவது அல்ல மதிப்பெண்கள்!

 அவரைப் போல வரவேண்டும்; இவரைப் போல வர வேண்டும் என்று ஒப்பிடாதீர்கள். ஏனெனில் உங்கள் பிள்ளை என்பவர் உங்கள் பிள்ளை மட்டுமே. நீங்கள் குறிப்பிடும் அவரோ இவரோ அல்ல.

 “மதிப்பெண் குறைவாக எடுத்துவிட்டால் எங்களால் வெளியே தலைகாட்ட முடியாது...” என்று சொல்லி உங்கள் பிள்ளையின் தனிப்பட்ட திறன் சார்ந்த விஷயத்தை சமூகம் சார்ந்த பிரச்சினையாக உருவாக்காதீர்கள்.

 “நீ எடுக்கும் மதிப்பெண்ணில்தான் நம் குடும்பத்தின் எதிர்காலமே இருக்கிறது...” என்று உங்கள் பொறுப்பை உங்கள் பிள்ளையின் மீது சுமத்தாதீர்கள்.

பேராசிரியர் எஸ்.கதிரவன், உளவியல் துறைத் தலைவர், பெரியார் பல்கலைக்கழகம்

மாணவர்கள் அசல் சான்றிதழ் வழங்குவதிலிருந்து விலக்கு: பாஸ்போர்ட் அதிகாரி தகவல்


''பாஸ்போர்ட் பெற அசல் கல்வி சான்றிதழ் வழங்குவதில் மாணவர்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளது,'' என மதுரை மண்டல பாஸ்போர்ட் அதிகாரி மணிஸ்வரராஜா தெரிவித்துள்ளார்.

அவர் கூறியுள்ளதாவது:

விதிகளின்படி பாஸ்போர்ட் பெற அசல் சான்றிதழ்களை பாஸ்போர்ட் சேவை மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர்களுக்காக இந்த விதியிலிருந்து மத்திய வெளியுறவு அமைச்சகம் விதிவிலக்கு அளித்துள்ளது. அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்காத போது, சில ஆவணங்களை முக்கியமாக மாணவர்கள் சமர்ப்பிக்க வேண்டும். அசல் சான்றிதழ்கள் இருப்பதாக பள்ளி, கல்லூரி நிறுவனங்கள் வழங்கும் சான்றிதழ், பாஸ்போர்ட் பெற தேவையான அசல் சான்றிதழ்களின் ஜெராக்ஸ் நகல் ( பள்ளி, கல்லூரி நிறுவனங்களில் சான்றொப்பத்துடன்), தற்போது பயிலும் கல்வி நிறுவனங்களின் அடையாள அட்டை ஆகியவற்றை சமர்ப்பிக்க வேண்டும். இதில் சந்தேகம் ஏற்பட்டால், சம்பந்தப்பட்ட பள்ளி, கல்லூரி நிறுவனங்களிடம் விளக்கம் பெறப்படும். மேலும் பாஸ்போர்ட் பெற வழிமுறைகள் குறித்து மதுரை ரேஸ்கோர்ஸ் மண்டல அலுவலக விழிப்புணர்வு மையத்தை வேலைநாட்களில் காலை 10 முதல் மாலை 5 மணி வரை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு கூறியுள்ளார்

ரேஷன் கார்டு இருந்தால்தான் ஆதார் கார்டா?



ஆதார் அடையாள அட்டை... இந்த வார்த்தையை தற்போது உச்சரிக்காதவர்களே இல்லையென்றே சொல்லலாம். அந்த அளவுக்கு ஆதார் என்ற வார்த்தை மக்கள் மனதில் பதிந்துவிட்டது. ஏனென்றால் வங்கி கணக்கு முதல் சமையல் எரிவாயு மானியம் பெற இந்த அடையாள அட்டையின் எண்தான் கேட்கப்படுகிறது.

ஏற்கனவே அந்தந்த ஊர்களுக்கு சென்று ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்றது. அப்போது வெளியூரில் இருந்து வரமுடியாத சூழல் என பல்வேறு காரணங்களினால் பலர் ஆதார் அடையாள அட்டை எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அவர்களுக்கு ஒரு வாய்ப்பாக மாநகராட்சி பகுதிகளில் உள்ள மண்டல அலுவலகங்களிலும், மற்ற பகுதிகளில் தாசில்தார் அலுவலகங்களிலும் தற்போது ஆதார் அடையாள அட்டை எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

2010 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது ஒரு அடையாள சிலிப் வழங்கப்பட்டது. அந்த அடையாள சிலிப் உள்ளவர்களுக்கு மட்டுமே இப்போது ஆதார் அடையாள அட்டைக்கான புகைப்படம் எடுக்கப்படுகிறது.

மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப்பட்ட சிலிப் கொண்டு வராதவர்களுக்கு ஜனவரி மாதம் முதல் ஆதார் அட்டைக்கு புகைப்படும் எடுக்கும் பணி நடந்து வருகிறது. ஆதார் அடையாள அட்டைக்கு போட்டோ எடுக்க கூடியவர்கள் என்.பி.ஆர் விண்ணப்பத்தை நிரப்பி கொடுத்து வருகிறார்கள்.

ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க 18 அடையாள சான்றிதழை மத்திய அரசு அறிவித்துள்ளது. அவைகள்: பாஸ்போர்ட், பான் கார்டு, ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், அரசு அடையாள அட்டை, என்ஆர்இஜிஎஸ் வேலைக்கான அடையாள அட்டை, அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, துப்பாக்கி லைசென்ஸ், புகைப்படத்துடன் கூடிய வங்கி ஏடிஎம் கார்டு, புகைப்படத்துடன் கூடிய கிரெடிட் கார்டு, ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை, கிசான் பாஸ்புக், சிஜிஎச்எஸ்/இசிஎச்எஸ் அடையாள அட்டை, அஞ்சலக அடையாள அட்டை, கெஜட் அதிகாரி மற்றும் தாசில்தாரால் வழங்கப்பட்ட அடையாள அட்டை, அரசால் வழங்கப்பட்ட மாற்றுதிறனாளிகள் அடையாள அட்டை / மருத்துவ ஊனமுற்றவர் அந்தந்த மாநில / யூனியன் பிரதேச சான்றிதழ்.

இதேபோல், ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்க அரசால் அறிவிக்கப்பட்டுள்ள 20 முகவரி சான்றிதழ்கள் வருமாறு: பாஸ்போர்ட், வங்கி பாஸ்புக், அஞ்சல பாஸ்புக், ரேஷன் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், வீட்டு மின்சார ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), வீட்டு குடிநீர் ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), தொலைபேசி ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), சொத்து வரி ரசீது (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), கிரெடிட் கார்டு ஸ்டேட்மெண்ட் (கடைசி 3 மாதங்களுக்கு உள்பட்டது), இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி முத்திரையுடன் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதம், அரசால் பதிவு செய்யப்பட்ட நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைக்படத்துடன் கூடிய கடிதம், அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய கடிதம், என்ஆர்இஜிஎஸ் வேலைக்கான அடையாள அட்டை, துப்பாக்கி லைசென்ஸ், ஓய்வூதிய அடையாள அட்டை, சுதந்திர போராட்ட வீரருக்கான அடையாள அட்டை.

வயதை கணக்கிட பிறப்பு சான்றிதழ், 10ஆம் வகுப்பு சான்றிதழ், பாஸ்போர்ட், குரூப் ஏ கெஜட் அதிகாரியால் வழங்கப்பட்ட பிறப்பு சான்றிதழ் ஆகியவற்றில் ஒன்று போதுமானது என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இப்போது பிரச்னை என்னவென்றால், தாசில்தார் அலுவலகங்களில் ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பம் வாங்க சென்றால் முதலில் ரேஷன் கார்டு இருக்கிறதா என்று கேள்வி கேட்கப்படுகிறது. இல்லாத பட்சத்தில் அவர்களுக்கு விண்ணப்பம் கொடுக்கப்பட மாட்டாது என்று மறுக்கிறார்கள். தன்னிடம், வாக்காளர் அடையாள அட்டை, இன்சூரன்ஸ் பாலிசி, வங்கி பாஸ்புக் உள்ளிட்டவை இருக்கிறது என்று கூறினாலும், ரேஷன் கார்டுதான் வேண்டும் என்று தடாலடியாக பேசி அவர்களை அனுப்பி வைத்துவிடுகிறார்கள் அலுவலக ஊழியர்கள்.

இது குறித்து திருவள்ளூர் மாவட்ட தாசில்தாரின் உதவியாளர் காந்திமதியிடம் கேட்டபோது, "நாங்கள்தான் ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் கொடுங்கள் என்று சொல்லியிருக்கிறோம். இதற்கு காரணம், ஏற்கனவே ஆதார் அடையாள அட்டைக்கு விண்ணப்பித்து இதுவரை அடையாள அட்டை வராதவர்களும் வந்து விண்ணப்பம் வாங்கிச் சொல்கிறார்கள். இதனை தடுக்கவே ரேஷன் கார்டு இருந்தால் மட்டுமே விண்ணப்பம் கொடுக்கப்படுகிறது. இந்த விண்ணப்பத்தை நாங்கள் கணினியில் பதிவு செய்யும் போது ரேஷன் கார்டு நம்பர் ஏற்கனவே பதிவாகியுள்ளதா என்பது தெரிந்துவிடும். இதனாலேயே ரேஷன்கார்டு கேட்கிறோம். ஆதார் அடையாள அட்டைக்கு ஏற்கனவே புகைப்படம் எடுத்திருந்தால் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டாம். அவர்களுக்கு கண்டிப்பாக ஆதார் அடையாள அட்டை வந்துவிடும்" என்றார்.

-சகாயராஜ்

கால் லிட்டர் ஆவின் பால் பாக்கெட்: முதல்கட்டமாக வடசென்னையில் விற்பனை தொடக்கம்



பொதுமக்கள் வசதிக்காக புதிதாக கால் லிட்டர் (250மி.லி.) அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனையை ஆவின் நிறுவனம் தொடங்கியுள்ளது.

சந்தையில் தற்போது 4 வகையான ஆவின் பாலில், 500, 1,000 மில்லி லிட்டர் கொள்ளளவு கொண்ட பாலை ஆவின் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது.

இந்த வரிசையில், பொதுமக்கள் வசதிக்காக 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனையைத் தொடங்குவதற்கு ஆவின் நிறுவனம் திட்டமிட்டிருந்தது. அதன்படி, முதல் கட்டமாக வட சென்னைப் பகுதிகளில் 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனையை புதன்கிழமை தொடங்கியுள்ளது.

இதுகுறித்து ஆவின் நிறுவன உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:

பால் சந்தையில் கடும் போட்டி நிலவுகிறது. இந்தப் போட்டியை சமாளிக்கத் தேவையான புதிய தொழில்நுட்பங்கள், பல்வேறு திட்டங்களை செயல்படுத்தும் நடவடிக்கையை ஆவின் நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, நிலைப்படுத்தப்பட்ட பால் வகையில் (பச்சை நிறம்) 250 மில்லி லிட்டர் அளவு கொண்ட பாக்கெட் பால் விற்பனை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சென்னையில் முதல் கட்டமாக ராயபுரம், எண்ணூர், திருவொற்றியூர், வண்ணாரப் பேட்டை, தண்டையார்பேட்டை, கொருக்குப்பேட்டை போன்ற வடசென்னைக்கு உள்பட்ட பகுதிகளில் இயங்கும் ஆவின் பாலகங்களில் (ஙண்ப்ந் ஆர்ர்ற்ட்) புதன்கிழமையன்று விற்பனை செய்யப்பட்டுள்ளது. புதிதாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட 250 மி.லிட்டர் கொள்ளளவு கொண்ட பாக்கெட் பாலின் அதிகபட்ச சில்லறை விற்பனை விலை (எம்.ஆர்.பி.) ரூ.11 ஆகும் என்றார் அவர்.



ஆவின் பால் (1 லிட்டர்) வகை அட்டை விலை சில்லறைவிலை



சமன்படுத்தியது (நீல நிறம்) 34(17) 37(18.50)

நிலைப்படுத்தப்பட்டது (பச்சை நிறம்) 39(19.50) 41(20.50)

கொழுப்புச் சத்து நிறைந்தது (ஆரஞ்சு) 43(21.50) 45(22.50)

இரு முறை சமன்படுத்தப்பட்டது ( மெஜந்தா) 33(16.50) 34(17)



(அடைப்புக் குறிக்குள் 500 மில்லி லிட்டருக்கான விலை-ரூபாயில்)

பத்தாம் வகுப்பு 'டாக்டர்' கைது

திருநெல்வேலி: நெல்லையில் பத்தாம் வகுப்பு படித்து விட்டு மருத்துவம் பார்த்தவர் கைது செய்யப்பட்டார். தென்காசி அருகே ஆய்க்குடி, கிருஷ்ணன்கோயில் தெருவை சேர்ந்த மாணிக்கவாசகம் 65, என்பவர் பத்தாம் வகுப்பு படித்து, நீண்ட காலமாக வீட்டில் வைத்து மருத்துவம் பார்த்துவருவதாக, ஆய்க்குடி அரசு டாக்டர் வெண்ணிலா ராஜேஸ்வரியின் புகாரின் பேரில் போலீசார் அவரை கைது செய்தனர்.

மேலும் எட்டு அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள்

'தமிழகத்தில் கூடுதலாக, எட்டு அஞ்சலகங்களில், ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்கள் செயல்பட உள்ளன,'' என, சென்னை வட்ட, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல், மெர்வின் அலெக்ஸாண்டர் தெரிவித்து உள்ளார்.

மத்திய அரசு, நாடு முழுவதும் உள்ள, 5,000 அஞ்சலகங்களில் ரயில் டிக்கெட் முன்பதிவு மையங்களை அமைக்க முடிவு செய்துள்ளது. தமிழகத்தில், 31 அஞ்சலகங்களில் இந்த மையங்கள் உள்ளன. இதுகுறித்து, தலைமை போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் மெர்வின் அலெக்ஸாண்டர் கூறியதாவது: தமிழகத்தில், 40 அஞ்சலகங்களில், இந்த மையங்கள் செயல்பட, தடையில்லா சான்று வழங்கப்பட்டு உள்ளது; ஏற்கனவே, 31 இடங்களில் மையங்கள் உள்ளன. புதிதாக, தெப்பகுளம் (திருச்சி), திருவையாறு, ஒரத்தநாடு, கேளம்பாக்கம் (சென்னை), சிவகாசி, ராசிபுரம், மோகனூர் மற்றும் தேரனாம்பேட் ஆகிய, எட்டு அஞ்சலகங்களில், இந்த மையங்கள் விரைவில் செயல்பாட்டிற்கு வரும். இவ்வாறு, அவர் கூறினார்.

வாடகையை உயர்த்த வலியுறுத்தி போராட்டம் 5 நாட்களாக நடைபெற்ற டேங்கர் லாரிகள் வேலைநிறுத்தம் வாபஸ்



மத்திய அரசின் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சமையல் கியாஸ் டேங்கர் லாரிகளை ஒப்பந்த அடிப்படையில் பயன்படுத்தி வருகின்றன.

3 ஆண்டுகளுக்கு ஒரு முறை லாரிகளுக்கான வாடகை மறு நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

புதிய வாடகை ஒப்பந்தம்

அதன்படி, கடந்த 2011-ம் ஆண்டு போடப்பட்ட ஒப்பந்தத்தின் படி, டேங்கர் லாரி உரிமையாளர்களுக்கு டன் அடிப்படையில் கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் 76 காசுகளை எண்ணெய் நிறுவனங்கள் வழங்கி வந்தன. இந்த ஒப்பந்தம் கடந்த அக்டோபர் மாதம் 31-ந் தேதியுடன் முடிவடைந்துவிட்டது.

இந்த நிலையில் கிழக்கு, வடக்கு, மேற்கு மண்டல டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினத்தினரிடம், எண்ணெய் நிறுவனங்கள் பேச்சுவார்த்தை நடத்தி கிலோ மீட்டருக்கு 2 ரூபாய் 80 காசுகள் வழங்குவதாக புதிய வாடகை ஒப்பந்தம் போடப்பட்டது.

போராட்ட அறிவிப்பு

நாமக்கல்லை தலைமையிடமாக கொண்டு செயல்படும் தென் மண்டல மொத்த சமையல் கியாஸ் (பல்க் எல்.பி.ஜி.) டேங்கர் லாரி உரிமையாளர்கள் (தமிழ்நாடு, புதுச்சேரி, கர்நாடக, ஆந்திரா,கேரளா மாநிலங்களை உள்ளடக்கியது) சங்கத்தினரிடம், எண்ணெய் நிறுவன அதிகாரிகள் வாடகை ஒப்பந்தம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.

லாரி உரிமையாளர்கள் கிலோ மீட்டருக்கு 3 ரூபாய் 9 காசு (1 டன் அடிப்படையில்) வாடகை தர வேண்டும் என்று எண்ணெய் நிறுவனங்களிடம் வலியுறுத்தினர். எண்ணெய் நிறுவனங்கள் 2 ரூபாய் 96 காசு வழங்குவதாக அறிவித்து வந்தன. இந்த நிலையில் எண்ணெய் நிறுவனங்கள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் இடையே நடைபெற்ற 3 கட்ட பேச்சுவார்த்தையிலும் சுமுக உடன்பாடு ஏற்படாததை அடுத்து, கடந்த மாதம் 30-ந் தேதி நள்ளிரவு முதல் தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட தொடங்கினர்.

தமிழக அரசு முயற்சி

பொதுமக்கள் நலன் பாதிக்காத வகையில் லாரி உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும் முயற்சியில் தமிழக அரசு ஈடுபட்டது. அதன்படி, கடந்த 2-ந் தேதி சென்னை எழிலகத்தில், தமிழக அரசின் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன், எண்ணெய் நிறுவன அதிகாரிகள், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் இந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.

சமையல் கியாஸ் டேங்கர் லாரி சங்கத்தினரின் வேலைநிறுத்த போராட்டம் 5-வது நாளாக நேற்று தொடர்ந்தநிலையில், மீண்டும் சென்னை எழிலகத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன் தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை நடைபெற்றது. எண்ணெய் நிறுவனங்கள் தரப்பில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசன்(ஐ.ஓ.சி.) மும்பை பொதுமேலாளர் மாலிக், பாரத் பெட்ரோலியம் மும்பை பொதுமேலாளர் சுதிஜ் மாலிக், இந்துஸ்தான் பெட்ரோலிய நிறுவனத்தின் துணை பொதுமேலாளர் சுகுமார் நந்தி மற்றும் அதிகாரிகளும், தென்மண்டல மொத்த சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் உள்பட 10 நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.

போராட்டம் வாபஸ்

காலை 11 மணிக்கு முத்தரப்பு பேச்சுவார்த்தை தொடங்கியது. மதியம் 1.30 மணி அளவில் உணவு இடைவெளி விடப்பட்டது. பின்னர் 3.45 மணிக்கு மீண்டும் பேச்சுவார்த்தை தொடங்கியது. கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன், எண்ணெய் நிறுவன அதிகாரிகளிடமும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடமும் தனித்தனியாகவும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

பேச்சுவார்த்தையின்போது, கமிஷனர் சூ.கோபாலகிருஷ்ணன், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரிடம், பொதுமக்கள் நலன் கருதி வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெற வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வந்தார்.

இந்த நிலையில் மாலை 5.45 மணி அளவில் பேச்சுவார்த்தை முடிந்து வெளியே வந்த லாரி உரிமையாளர்கள் சங்கத்தினர் வேலைநிறுத்த போராட்டத்தை வாபஸ் பெறுவதாக அறிவித்தனர்.

லாரி உரிமையாளர்கள் பேட்டி

இதுகுறித்து, சங்கத்தின் தலைவர் நடராஜன், செயலாளர் கார்த்திக் ஆகியோர் இணைந்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசின் வேண்டுகோளை ஏற்றும், பொதுமக்கள் நலன் கருதியும் வேலைநிறுத்த போராட்டத்தை உடனடியாக வாபஸ் பெறுகிறோம். ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள சமையல் கியாஸ் டேங்கர் லாரிகள் தற்போதிலிருந்து இயங்க தொடங்கும்.

இன்று (நேற்று) நடைபெற்ற பேச்சுவார்த்தையில் எண்ணெய் நிறுவனங்களுடன் வாடகை நிர்ணயம் பற்றி நாங்கள் எதுவும் பேசவில்லை. வாடகை நிர்ணயம் குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன் மீண்டும் பேச்சுவார்த்தை நாளை (இன்று) நடக்க உள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

இன்று மீண்டும் பேச்சுவார்த்தை

எண்ணெய் நிறுவன அதிகாரிகள், சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் பேச்சுவார்த்தை சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஐ.ஓ.சி. அலுவலகத்தில் இன்று நடைபெற வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

நேற்று நடைபெற்ற பேச்சுவார்த்தை தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறும்போது, ‘எண்ணெய் நிறுவனங்களும், லாரி உரிமையாளர்கள் சங்கத்தினரும் ஒரு சுமுக முடிவுக்கு வந்துவிட்டனர். நாளை (இன்று) நடைபெறும் இரு தரப்பு பேச்சுவார்த்தையில் அவர்களுக்குள் புதிய வாடகை ஒப்பந்தம் ஏற்படும் சூழல் உள்ளது’ என்றார்.

கியாஸ் நிரப்பும் பணி பாதிப்பு

சமையல் கியாஸ் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 நாள் வேலைநிறுத்த போராட்டம் காரணமாக தமிழகத்தில், திருச்சி, மதுரை, கோவை, ஈரோடு, திண்டுக்கல் உள்ளிட்ட இடங்களில் சமையல் கியாஸ் நிரப்பும் மையங்களில் கியாஸ் நிரப்பும் பணி வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு இடங்களிலும் 40 ஆயிரம் சிலிண்டர்கள் வரை நிரப்பும் பணியில் தேக்கம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அத்திப்பட்டில் இருந்து சீரான சமையல் கியாஸ் சப்ளை இருந்ததால் சென்னை, காஞ்சீபுரம், திருவள்ளூர், வேலூர், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் சமையல் கியாஸ் நிரப்பும் பணியில் தேக்கம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் சமையல் டேங்கர் லாரி உரிமையாளர்கள் 5 நாள் வேலைநிறுத்தம் போராட்டம் முடிவுக்கு வந்ததை அடுத்து சமையல் கியாஸ் தட்டுப்பாடு அபாயம் நீங்கி உள்ளது. வேலைநிறுத்த போராட்டத்தால் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்ட 3200-க்கும் மேற்பட்ட சமையல் கியாஸ் லாரிகளும் இயங்க தொடங்கின.

NEWS TODAY 11.06.2026