Sunday, February 8, 2015

கத்திப்பாராவில் குளிர்சாதன வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் சென்னையில் முதல்முறையாக அமைப்பு


சென்னையில் முதன்முதலாக கத்திப்பாரா ஆசர்கானாவில் ரூ.1 கோடி செலவில் குளிர்சாதன வசதியுடன் நவீன பஸ் நிறுத்தம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பஸ் நிறுத்தம் இன்னும் ஒரு வாரத்திற்குள் திறந்து வைக்கப்படும் என கண்டோன்மென்ட் போர்டு அதிகாரி தெரிவித்தார்.

பொதுமக்கள் அவதி

சென்னைக்கு நுழைவு பகுதியாக ஆலந்தூர் கத்திப்பாரா உள்ளது. கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் அரசு மற்றும் ஆம்னி பஸ்கள் அதிக அளவில் நின்று செல்கின்றன. மாநகர பஸ்களும் நின்று செல்கின்றன. தினமும் 10 ஆயிரத்திற்கும் அதிகமானவர்கள் இங்குள்ள பஸ் நிறுத்தங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த பகுதி பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டு எல்லையில் வருகிறது. மேலும் வெளிமாவட்டங்களில் இருந்து வரும் வாகனங்களில் பயணம் செய்யும் பெண்கள், வயதானவர்கள் கழிப்பிட வசதி இன்றி கடும் அவதிக்கு உள்ளானார்கள். மேலும் வெயில் மற்றும் மழைக்காலங்களில் பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வந்தனர்.

நவீன பஸ்நிறுத்தம்

பொதுமக்களின் நீண்ட கால கோரிக்கையை ஏற்று பரங்கிமலை-பல்லாவரம் கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகத்தின் சார்பில் கத்திப்பாரா ஆசர்கானா பகுதியில் குளிர்சாதன வசதி, டி.வி. மற்றும் ஏ.டி.எம். வசதிகளுடன் ரூ.1 கோடியே 25 லட்சம் செலவில் நவீன பஸ் நிறுத்தங்கள் அமைக்கும் பணி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்கியது.

பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய வகையில் கழிப்பிட வசதியும் அமைக்கப்பட்டு உள்ளது. பஸ் நிறுத்தம் முழுவதும் ரகசிய கேமராக்கள் மூலமாக கண்காணிக்கப்படும். பஸ் நிறுத்தத்தில் 24 மணி நேரமும் பாதுகாப்புக்காக ஆட்கள் இருப்பார்கள். பொதுமக்கள் குளிர்சாதன வசதியுடன் கூடிய அறையில் இருந்து டி.வி. பார்த்துக் கொண்டு இருக்கலாம்.

எந்த பகுதிக்கு செல்லும் பஸ் வருகிறது என்பதை அறையில் உள்ள டி.வி.யில் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.

ஒரு வாரத்தில் திறப்பு

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் முதன்முதலாக குளிர்சாதன வசதியுடன் கூடிய பஸ் நிறுத்தம் இது தான்.

இந்த புதிய பஸ் நிறுத்தம் இன்னும் ஒருவாரத்திற்குள் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்க கண்டோன்மென்ட் போர்டு நிர்வாகம் முடிவு செய்து உள்ளதாக அதன் தலைமை நிர்வாக அதிகாரி எஸ்.பிரபாகரன் கூறினார்.

மின் இணைப்பு பெயர் மாற்றத்தில் தவறான தகவல்:ஒரே விவரம் இல்லாததால் மக்கள் கடும் அதிருப்தி

மின் இணைப்பு பெயர் மாற்றத்தின் போது, மின் கணக்கீட்டு அட்டை, கம்ப்யூட்டர் ரசீதில், தவறான தகவல் இருப்பதால், மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, 1.73கோடி உட்பட, மொத்தம், 2.53 கோடி மின் நுகர்வோர் உள்ளனர்.


புதிய மின் இணைப்பு:புதிய மின் இணைப்பு பெற, ஒரு முனை, 1,650 ரூபாய்; மும்முனை, 8,500 ரூபாய் கட்டணத்துடன், மீட்டர், 'கேபிள்' போன்றவற்றிற்கு, மதிப்பீட்டு தொகை, தனியாக செலுத்த வேண்டும். ஒருவர் பெயரில் உள்ள மின் இணைப்பை, வேறு ஒருவரின் பெயருக்கு மாற்ற, அதற்கான விண்ணப்பத்தை, மின் வாரிய இணையதளத்தில், பதிவிறக்கம் செய்ய வேண்டும். அதை பூர்த்தி செய்து, வீடு பெயர் மாறியுள்ள சொத்து பத்திரம், சொத்து வரி ரசீது, குடிநீர் வரி ரசீது, வாரிசு சான்றிதழ் என, ஏதேனும் ஒன்றின் நகலுடன் இணைத்து, 200 ரூபாய் கட்டணத்துடன், உதவி பொறியாளர் அலுவலகத்தில் வழங்க வேண்டும். உதவி பொறியாளர், விண்ணப்பத்தை சரிபார்த்து, செயற் பொறியாளர் அலுவலகத்தில் உள்ள, கணக்கீட்டு பிரிவிற்கு, அனுப்பி வைப்பார்.

செயற் பொறியாளர் அலுவலகத்தில், விண்ணப்பதாரர் கோரிய பெயருக்கு, மின் இணைப்பு செய்யப்பட்டு, அதன் விவரம், உதவி பொறியாளர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். அதன் அடிப்படையில், உதவி பொறியாளர் அலுவலகத்தில், மின் பயன்பாடு கணக்கீட்டு அட்டையில், புதிய பெயர் எழுதப்பட்டு, விண்ணப்பதாரரிடம் வழங்கப்படும். இந்த விவரம், அனைத்தும், பிரிவு அலுவலகத்தில் உள்ள, கம்ப்யூட்டரில் பதிவு செய்ய வேண்டும்.

கம்ப்யூட்டர் ரசீதில்...:ஆனால், அவ்வாறு, பதிவு செய்வது கிடையாது. இதனால், மின் கட்டண மையங்களில், மின் கட்டணம் செலுத்தும் போது, தரப்படும், ரசீதில், சொத்தின் பழைய உரிமை யாளர் பெயர் உள்ளது. ஒரே மின் இணைப் பில், மின் கணக்கீட்டு அட்டையில், ஒருவர் பெயரும், கம்ப்யூட்டர் ரசீதில், வேறு ஒருவர் பெயரும் இருப்பது, மக்களிடம், கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் அலுவலகத்தில்,மக்கள் தரும் விண்ணப்பம், அனைத்தும், பதிவேடுகளில்,பதிவு செய்ய வேண்டும். ஆனால், அவ்வாறு, பதிவு செய்யாமல், இடைத்தரகர் மூலம் விண்ணப்பம் பெறுவதால், இதுபோன்ற பிரச்னை ஏற்படுகிறது. ஊழியர் பற்றாக்குறை நிலவுவதால், விண்ணப்பத்தை, கம்ப்யூட்டரில் பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. இதை தவிர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு, அவர் கூறினார்.

ஏழு நாட்கள்:மின் இணைப்பில், பெயர் மாற்றம் செய்ய வழங்கப்படும், விண்ணப்பம் மீது, ஏழு நாட்களுக்குள், தீர்வு காண வேண்டும். ஆனால், உதவி, செயற் பொறியாளர், ஒரு மாதத்திற்கு மேல், அதை மாற்றி தராமல், மக்களை அலைக்கழிக்கின்றனர். எனவே, மின் வாரிய இயக்குனர்கள், தலைமை, மேற்பார்வை பொறியாளர்கள், பிரிவு அலுவலகங்களில், நேரடி ஆய்வு செய்தால் மட்டும், மக்கள் பிரச்னைக்கு தீர்வு காணப்படும்.

- நமது நிருபர் -



காஸ் மானியத்தின் நிலை என்ன இணையதளத்தில் பார்க்கலாம்

மதுரை:ஆதார் அட்டை இல்லாதவர்கள் நேரடியாக காஸ் வினியோக மையத்திற்கு சென்று வங்கிக்கணக்கு நகலை கொடுத்து மானியத்திற்கு விண்ணப்பிக்கலாம். இணையதளத்திலும் சரிபார்க்கலாம்.

ஆதார் அட்டை உள்ளவர்கள் கணக்கு வைத்துள்ள வங்கியில் ஆதார் நகலை காண்பிக்க வேண்டும். அதன்பின் காஸ் வினியோக மையத்திற்கு சென்று பதிய வேண்டும். இரண்டு பதிவுகளும் முழுமையானால் உடனடியாக வங்கிக்கணக்கில் மானியம் வரவு வைக்கப்படும்.மதுரையில் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் இரண்டு இணைப்புகளும் முழுமை பெற்றதா என்பதை காஸ் இணைப்புக்கு பதிவு செய்துள்ள மொபைல் போன் எண்ணிலிருந்து *99*99# க்கு எஸ்.எம்.எஸ்., அனுப்ப வேண்டும். வங்கியில் தாமதமா அல்லது காஸ் வினியோக மையத்தில் தாமதமா என்பதை சரிபார்க்கலாம். இரண்டும் சரியாக இருந்தால் எந்த தேதி இணைப்பு முழுமையானது என்ற விபரம் தெரிவிக்கப்படும்.

ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு இரண்டு மாதங்கள் முன்பே மொபைல் போன் எண்ணுக்கு 17இலக்க காஸ் எண் அனுப்பப்பட்டுள்ளது. அந்த எண்ணை காஸ் வினியோக மையத்தில் காண்பித்து வங்கிக்கணக்கு நகலை ஒப்படைத்தால் உடனடியாக மானியத்திற்கு வரவு வைக்கப்படும்.வங்கியின் ஐ.எப்.எஸ்.சி., கோடு எண்ணை தெரிவிக்க வேண்டும் அல்லது mylpg.in இணையதளத்தில் காஸ் எண்ணை பதிவு செய்யும் போது 17 இலக்க எண் குறிப்பிடப்படும். அதன்மூலம் மானியம் குறித்த நிலையை தெரிந்து கொள்ளலாம்.

இதுகுறித்து முன்னோடி வங்கி அலுவலர் முருகபிரபு கூறியதாவது:மதுரையில் பாரத் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் நிறுவனங்கள் மூலம் 6.5 லட்சம் காஸ் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இதில் 7.2 சதவீத இணைப்புகள் ஆதார் அட்டை பெற்றுள்ளன. ஆதார் அட்டை பெற்றவர்களில் 54 சதவீதம் பேர் காஸ் வினியோக மையத்தில் பதிவு செய்துள்ளனர். 45 சதவீதம் பேர் வங்கியில் பதிவு செய்துள்ளனர். மீதி உள்ள 9 சதவீத பேருக்கு வங்கிக்கணக்கு பரிவர்த்தனைகள் நடந்து வருகின்றன, என்றார்.

மின் வாரியத்தை மிரட்டும் உலக கோப்பை கிரிக்கெட்:கூடுதல் செலவாகும் அபாயம்



உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, விரைவில் துவங்க உள்ளதால், தமிழக மின் தேவை வழக்கத்தை விட அதிகரிக்கும் என்பதால், மின் வாரியம், கூடுதலாக செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் மின் தேவை, சராசரியாக, 13 ஆயிரம் மெகாவாட் என்றளவில் உள்ளது. இதை பூர்த்தி செய்யும் அளவிற்கு, மின் உற்பத்தி ஆகாததால், மின்தடை செய்யப்படுகிறது.

இந்தியா உட்பட, 14 நாடுகள் பங்கேற்கும், உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள், ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில், வரும் 14ம் தேதி துவங்கி, மார்ச் 29ம் தேதி வரை நடக்கிறது. இந்திய நேரப்படி, அதிகாலை 3:00 மணிக்கு துவங்கி, பகல் 1:00 மணி வரை, நாள்தோறும், இரு போட்டிகள் நடக்க உள்ளன. தமிழகத்தில், சிறியவர் முதல் பெரியவர் வரை, கிரிக்கெட் போட்டியை ஆர்வமுடன் பார்க்கின்றனர். இதனால், கிரிக்கெட் போட்டி நடக்கும் போது, மின் தேவை வழக்கத்தை விட, 500 மெகாவாட் அதிகரிக்கும்.

இதனால், மின் வாரியத்திற்கு கூடுதல் செலவாகும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. இதுகுறித்து, எரிசக்தி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:பள்ளி, அலுவலகம் செல்ல வேண்டி இருப்பதால், காலை 6:00 மணி முதல் 10:00 மணி வரை, உச்ச மின் தேவை இருக்கும். அந்த சமயத்தில், நீர்மின் நிலையங்களில் மின் உற்பத்தி செய்யப்படும். உலக கோப்பை கிரிக்கெட் போட்டி, காலையில் நடப்பதால், மின் தேவை, வழக்கத்தை விட, 750 - 1,000 மெகாவாட் அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இதை சமாளிக்க, தனியாரிடம் மின்சாரம் வாங்க வேண்டிய சூழல் உருவாகி உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.

தேவை எகிறியது எப்போது? :தமிழகத்தில், கடந்த ஆண்டு, ஜூன் 24ம் தேதி, இரவு 8:25 மணிக்கு, மின் தேவை, 13,775 மெகாவாட் என இருந்தது. அதே ஆண்டு, ஜூன் 20ம் தேதி, ஒருநாள் முழுவதுமான மின் நுகர்வு, 29.34 கோடி யூனிட் என்றளவில் இருந்தது. அதிக மின் தேவை மற்றும் மின் நுகர்வில், இதுவே அதிகபட்ச அளவு. நடப்பாண்டில், இரண்டும் அதிகரிக்கும் என தெரிகிறது.

- நமது நிருபர் -

கஞ்சா போதையில் 'மட்டை'யானவருக்கு கொள்ளி: நெருப்பு சுட்டதும் எழுந்து ஓட்டம் பிடித்தார்



வேலூர்: கஞ்சா போதையில், 'மட்டையானவர்' இறந்ததாக நினைத்து, அவரது உடலை, தகன மேடையில் வைத்து, மகன் கொள்ளி வைத்தார்; நெருப்பு சுட்டதும், போதை ஆசாமி, எழுந்து ஓட்டம் பிடித்ததால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இந்த சுவாரஸ்ய தகவல்:
வயிற்றுவலி:

வேலூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த ஜலகம்பாறையைச் சேர்ந்தவர் விவசாயி செண்பகராயன், 50. இவர், வயிற்றுவலிக்காக, அதே பகுதியை சேர்ந்த நாட்டு வைத்தியர் மனோகரன், 55, என்பவரிடம் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம், இரவு 10:00 மணிக்கு, செண்பகராயனுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டது. இதற்காக, மனோகரனிடம் லேகியம் வாங்கி சாப்பிட்ட பின், வீடு சென்று தூங்கினார். நேற்று காலை 7:00 மணிக்கு, செண்பகராயனை, மனைவி அஞ்சையம்மாள் எழுப்பினார். அவர் எழுந்திருக்காததால், அதிர்ச்சியடைந்த அஞ்சையம்மாள், நாட்டு வைத்தியர் மனோகரனை அழைத்து வந்தார். மனோகரன், செண்பகராயனை சோதித்துப் பார்த்து, இறந்து விட்டதாக கூறினார். பின், பகல் 12:00 மணிக்கு, செண்பகராயனை தகனம் செய்ய, அப்பகுதியில் உள்ள மயானத்துக்கு எடுத்துச் சென்றனர். இறுதிச் சடங்கு முடிந்த பின், செண்பகராயன் உடலுக்கு, மகன் சீத்தாராயன் கொள்ளி வைத்தார்.
பயந்த உறவினர்கள்:

அப்போது, திடீரென அலறியபடி, விறகு கட்டைகளை தள்ளிவிட்டு, செண்பகராயன் வெளியே ஓடினார்; பயந்த உறவினர்கள், நான்கு பக்கமும் சிதறி ஓடினர். அவர்களை கூப்பிட்ட செண்பகராயன், தான் உயிருடன் இருப்பதாக கூறினார். நிம்மதியடைந்த உறவினர்கள், நாட்டு வைத்தியர் மனோகரனை பிடித்து விசாரித்தனர். இதில், மனோகரன், லேகியத்தில் கஞ்சா பவுடர் கலந்து விற்பனை செய்வது தெரியவந்தது. செண்பகராயனுக்கு கஞ்சா கலந்த லேகியத்தை கொடுத்ததால், போதையில் மயங்கிக் கிடந்த அவர், இறந்து விட்டதாக கருதி உள்ளனர். பின், மனோகரனை மரத்தில் கட்டி வைத்து, மக்கள், 'பின்னி' எடுத்தனர். எல்லாம் முடிந்தபின் வந்த திருப்பத்தூர் போலீசார், வைத்தியரை கைது செய்தனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Saturday, February 7, 2015

வரிபாக்கியை அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..? - கொந்தளிக்கும் ரோஸ்



சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டல் ஒன்றின் முன்பு சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் திருநங்கைகளை நடனமாட வைத்த சம்பவம் திருநங்கைகள் மத்தியில் மட்டுமல்லாது, சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஈக்காட்டுத்தாங்கலில் உள்ள தனியார் நட்சத்திர ஹோட்டல் முன்பு நேற்று (வெள்ளிக்கிழமை) காலை சொத்துவரி பாக்கியை வசூலிக்க சென்னை மாநகராட்சி அதிகாரிகள் 2 திருநங்கைகளை அழைத்துவந்து நடனமாட வைத்துள்ளனர்.

இதனையடுத்து ஹோட்டல் நிர்வாகத்தினர், 33 லட்ச ரூபாய் வரிபாக்கியை ஒரே செக்கில் அளித்துள்ளனர்.

இந்த சம்பவம் திருநங்கைகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. வரிபாக்கி வைத்துள்ள அனைத்து தனியார் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் முன்பும் சென்னை மாநகராட்சி திருநங்கைகளை ஆடவைக்குமா என்றும், இது போன்ற நிகழ்வுகள் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்றும் திருநங்கைகள் ஆவேசம் காட்டுகின்றனர்.

கடந்த மாதம் திரைக்கு வந்த `ஐ` திரைப்படத்தில் திருநங்கைகள் பற்றி தவறான கண்ணோட்டத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளதாக கூறி, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து அந்தப் படத்தின் இயக்குனர் ஷங்கர் வீட்டு முன்பு முற்றுகைப் போராட்டம் நடந்தது.அதில் பங்கேற்ற திருநங்கைகள் சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்கவேண்டும் என்றும், இது போன்று காட்சிகளை அமைத்த இயக்குனர் ஷங்கர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், தவறினால் திரையுலகைவிட்டே ஷங்கர் போகவேண்டும் என்றும் முழக்கங்கள் எழுப்பினர்.

தமிழகம் அளவில் ஊடகங்களிலும், திரையுலகிலும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த போராட்டம், `ஐ` திரைப்பட இயக்குனர் ஷங்கர் மனதில் எந்த சலனத்தையும் ஏற்படுத்தவில்லை போலும். பதில் ஏதும் அவர் கூறவில்லை. இது திருநங்கைகள் மத்தியில் இன்னும் நீறு பூத்த நெருப்பாய் கனன்று கொண்டிருக்கிறது.

இந்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பில் சொத்துவரி பாக்கியை வசூலிக்க திருநங்கைகளை ஆடவைத்துள்ளது பெரும் அதிருப்தியை உண்டாக்கியுள்ளது.

இது தொடர்பாக திருநங்கைகள் செயல்பாட்டாளர் `இப்படிக்கு ரோஸ்`நமக்களித்த பேட்டியில் தனது கடுமையான கண்டனத்தை தெரிவித்தார்.

மேலும் ரோஸ் கூறுகையில், " அரசு அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைதான் வரி வசூலிப்பது. இதில் திருநங்கைகளை நடனமாட வைத்து வரிபாக்கியை வசூலித்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். உடன்பாடு இல்லாத விஷயம். வரிவசூலுக்காக திருநங்கைகளை பயன்படுத்தியிருப்பது தவறான முன் உதாரணம்.மக்கள் மத்தியில் மேலும் அதிருப்தியையும் அருவெறுப்பையும் மட்டுமே ஏற்படுத்தும்" என்றார் கொதிப்போடு.

மேலும் ரோஸ், "அரசு அதிகாரிகள் செய்யவேண்டிய வேலைக்கு திருநங்கைகள் எதற்கு? அவர்களே அதை செய்துவிட்டு போகலாமே. வரியை வசூலிக்கும் அளவிற்கு அதிகாரிகள் செயல்படவில்லை என்பதையே இது காட்டுகிறது.

இவ்வாறு ஆடித்தான் வரியை வசூலிக்க முடியும் என்றால் அரசு அதிகாரிகளே ஆடி வசூலிக்க வேண்டியதுதானே..?

வெறுமனே இதுபோன்ற நடவடிக்கைகளில் அரசு ஈடுபடுவதை தவிர்த்துவிட்டு திருநங்கைகளுக்கு நிரந்தர அரசு வேலை தரவேண்டும். எனவே மீண்டும் இது போன்று நிகழ்வுகள் நடக்க கூடாது.

நடந்தால் திருநங்கைகள் பொறுமை காக்க மாட்டோம்" என்றார்.

- தேவராஜன்

அலைபேசி நாகரிகத்தை அறிந்துகொள்ளுங்கள்!



டேய் எங்க இருக்குற?”- இன்றைய தினங்களில் மிக அதிகமான அலைபேசி அழைப்புகளில் கேட்கப்படுகின்ற கேள்வி இதுதான்!

ஹலோ! நான் இன்னார், இங்கிருந்து பேசுகிறேன், இன்னாருடன் பேச வேண்டும், நலமா? என்பது போன்ற வார்த்தைகள் (சம்பிரதாயத்துக்குக்கூட) அரிதாகிவிட்டது. முந்தைய தலைமுறையின் தொலைபேசி நாகரிகம், இந்த தலைமுறையின் அலைபேசியில் இருகிறதா என்றால் சந்தேகமே...

அலைபேசி எண், உங்கள் நண்பருடயதுதான். ஆனால், அழைப்பைப் பெறுபவர் உங்கள் நண்பராக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. பொதுவாக நான் எப்போது யாரிடம் அலைபேசினாலும், என் பெயரைச் சொல்வதுண்டு (பெற்றவர்களிடம் கொஞ்சம் குறும்புடன்...) “அதான் போன்லயே காட்டுதே, சொல்லுங்க” என்பார்கள். அழைப்பைப் பெறுபவரை உறுதி செய்ய வேண்டாமா?. அப்போதும் சில கேரக்டர்கள் தங்கள் பெயரைச் சொல்வதில்லை, குரலை வைத்து அடையாளம் கண்டால்தான் உண்டு. இன்னும் சிலர், நான் என் பெயரைச் சொன்னாலும் அதை சட்டை செய்வதில்லை.

எனக்கும் என் அப்பாவுக்கும் ஒரே குரலமைப்பு. பல சமயங்களில் நான் அலைபேசியை எடுத்து பதில் சொல்ல நேரிடும். அப்போதுகூட நான் அவரது மகன் பேசுகிறேன் என்பேன். ஆனால், கடைசியில்தான் என்னை சொல்லவிடுவார்கள். (அது வரையில் நாம் காத்திருக்க வேண்டும்).

பல சமயங்களில், “எங்க இருக்குற?” என்ற கேள்வி என்னை எரிச்சலூட்டும். பொதுவாகவே, நான் எல்லா அழைப்பையும் பேச நினைப்பவன். தவறுவது நம்முடைய வாய்ப்பாகக்கூட இருக்கலாம். தவறினாலும் மீண்டும் அழைத்து கேட்டுவிடுவேன். அழைப்பை எப்போதும் தவறவிடாது எடுப்பவனை, வேலை இல்லாதவன், இளிச்சவாயன் மற்றும் சில பல நல்ல பட்டங்களை தருவதேன்? என்னுடைய தேவைக்காக மட்டுமல்லாமல், உங்களுடைய வேலைகளுக்கும் நான் தேவையாக இருந்திருக்கலாம். அதை எல்லாம் வேலை பளுவாக கருதாமல், உதவி செய்ய வாய்ப்பு என்று நினைத்ததால் கிடைத்த பட்டமா?

இரண்டு அல்லது மூன்று முறை அழைப்பை எடுக்காமல் விட்டு (சும்மாவே வேலை இல்லாமல் இருக்கும் கேரக்டர்கள் மட்டுமே...) பின்னர் பேசுவதால் நீங்கள் என்றும் உயர்ந்தவராகி விட முடியாது. மற்றவர்களுக்காக வாழும் வாழ்வே உங்களை உயர்த்துமே தவிர, அலைபேசியில் காட்டும் பகட்டால் அல்ல.

பலமுறை என்னை “எங்க இருக்குற?” என்று கேட்டுவிட்டு, ''அங்கேயே இரு... ரெண்டே நிமிஷத்துல அங்கே இருப்பேன்” என்று சொல்லி, இரண்டு மணி நேரம் கழித்து, ஏதோ ஒரு நொண்டி சாக்கு சொல்பவர்களை என்ன சொல்வது? நானாகவே நடந்தே சென்று வேலையை முடித்திருப்பேன். இன்னொரு நண்பர் 50 கி.மீ முன்பிருந்தே “இதோ அஞ்சே நிமிசம்” என்பர், அது எந்த அஞ்சு நிமிசம் என்பது கடவுளுக்கு மட்டுமே தெரியும்.

என்னை போலவே பல நல்ல கேரக்டர்களால் எரிச்சலுற்ற, என் நண்பரிடம் அலைபேசிய இன்னொருவர் “எங்கிருக்குற?” என கேட்க, இரண்டு காதிலும் ரத்தம் வருமளவுக்கு கெட்ட கெட்ட வார்த்தைகளால் அர்ச்சனை செய்துவிட்டார். 'மந்திரப் புன்னகை' படத்தில், டைரக்டர் கரு.பழனியப்பன் சொல்வாரே... மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் அதேதான்...

எனக்கு நீண்ட நாட்களாகவே சந்தேகம். என் நண்பர் அந்தப் படம் வெளிவருவதற்கு சுமார் ஒரு வருடத்துக்கு முன்பிருந்தே அந்த கெட்ட வார்த்தையைச் சொல்லி வந்தார். பின்னர், படத்திலும் அதே வார்த்தை, மாற்றமே இல்லை. ஆச்சர்யம். ஒருவேளை கரு.பழனியப்பனுக்கும் இதேபோல நண்பர்களால் பி.பி. எகிறி இருக்கலாம்!

பல நேரங்களில் என்னுடைய அழைப்பை எடுக்காதவர்களின் (தோழிகளுடன் கடலை) அழைப்பைக்கூட, சில டிராஃபிக் போலீஸைத் தாண்டி, வண்டியை ஓரங்கட்டி, 'ஏதோ அவசரம் போல' என்று நினைத்து எடுத்தால், ''மச்சி... அரை பாக்கெட் சிகரெட்” என்பார்கள். அப்போது வரும் கோவத்துக்கு...

எதிர்முனையில் இருப்பவர், எங்கே, எப்படி, எந்த சூழ்நிலையில் இருக்கிறார்கள் என்பதை பற்றி எல்லாம் சிறிதும் யோசிக்காமல் அலைபேசும் நண்பர்களே, எதிராளியின் சூழ்நிலையைப் புரிந்துகொண்டு பேசுங்கள். இல்லையேல், கரு.பழனியப்பனின் மியூட் செய்யப்பட்ட வார்த்தைகள் லவுடு ஸ்பீக்கரில் ஒலிக்கும்!

- கார்த்திக் குமார் (மலேசியா)

NEWS TODAY 27.01.2026