Thursday, February 12, 2015

சலுகைக் கட்டணத்தில் 4 லட்சம் டிக்கெட்: ஸ்பைஸ்ஜெட் விற்பனை



ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் சலுகை கட்டண பயண அறிவிப்பை நேற்று வெளியிட்டது.

ரூ. 599 முதல் ரூ. 3,499 என்கிற சலுகைக் கட்டணத்தில் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான சேவைகள் வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதன்படி நான்கு லட்சம் டிக்கெட்டுகள் இந்த சலுகை கட்டணத்தில் ஒதுக்கியுள்ளதாக கூறியுள்ளது.

இந்த சலுகை கட்டண பயணத்தை ஜூலை 01 ம் தேதி முதல் அக்டோபர் மாதம் 24 தேதி காலகட்டத்தில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இந்த சலுகைக் கட்டண பயணத்தை பிப்ரவரி 13 வெள்ளிக்கிழமை வரை முன்பதிவு செய்யலாம்.

ரயில் கட்டணத்தை விட குறைவாக என்று சலுகை வெளியிட்டுள்ள ஸ்பைஸ்ஜெட் ரூ. 3,499 கட்டணத்தில் வெளி நாட்டு பயண சேவையை வழங்குகிறது.

ஓரியோ பிஸ்கெட்டின் வயது 103



நடிகர் கார்த்தி தோன்றும் ஓரியோ பிஸ்கெட் விளம்பரத்தை நீங்கள் அடிக்கடி தொலைக்காட்சிகளில் பார்த்திருப்பீர்கள். இரண்டு வட்ட வடிவச் சாக்லெட் பிஸ்கெட்கள், அவற்றுக்கு நடுவே கிரீம். கார்த்தியும் அவர் தங்கை(யாகத் தோன்றும் நடிகை)யும் வருவார்கள். கையில் ஓரியோ பிஸ்கெட்டை வைத்துக்கொண்டு கார்த்தி தங்கையைச் செல்லமாகச் சீண்டுவார். பிறகு பிஸ்கெட்டை இரண்டாக உடைப்பார். இருவரும் பாலில் முக்குவார்கள். சிரித்துக்கொண்டே சாப்பிடுவார்கள்.

அமெரிக்காவில் உருவானது

ஓரியோ பிஸ்கெட் இந்தியாவுக்கு வந்தது 2011- ம் ஆண்டு. ஆனால், ஓரியோ வயது என்ன தெரியுமா? 103! ஆமாம், 1912 இல் அமெரிக்காவில் நபிஸ்கோ (Nabisco) என்னும் நிறுவனம் ஓரியோவை அறிமுகம் செய்தார்கள். அன்றைய பெரும்பாலான கிரீம் பிஸ்கெட்கள் சதுர வடிவில் இருந்தன, சாதாரண பிஸ்கெட்டுகளுக்கு நடுவில் ஓரளவு கிரீம் இருந்தது.

ஓரியோவில், இரண்டு வட்ட வடிவ சாக்லெட் பிஸ்கெட்களுக்கு நடுவில் கணிசமான வனிலா கிரீம் இருந்தது. சாக்லெட் கசப்பும், வனிலா இனிப்பும் தனிச் சுவை தந்தன. வித்தியாசத் தோற்றம், சுவை ஆகியவற்றால், ஓரியோ விரைவில் பிரபலமானது.

அதிலும், ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதில் ஏனோ குழந்தைகளுக்குத் தனி த்ரில். இதனால், நபிஸ்கோ கம்பெனியும் குழந்தைகள் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுபோல் ஓரியோவை விளம்பரம் செய்தார்கள். ஓரியோ அமெரிக்காவின் நம்பர் 1 பிஸ்கெட் ஆனது.

பிற நாடுகளுக்கு 1990 களில் வியாபாரம் உலகமயமாகத் தொடங்கியது. சீனா, இந்தியா போன்ற நாடுகள் தங்கள் கதவுகளைப் பன்னாட்டுக் கம்பெனிகளுக்குத் திறக்கத் தொடங்கின. மக்கள் தொகை, உயரும் பொருளாதார வளர்ச்சி ஆகிய காரணங்களால், பன்னாட்டு நிறுவனங்கள் இந்தப் புதிய சந்தைகளைத் தேடி வந்தார்கள்.

சீனாவில் படு தோல்வி

1996. சீனாவில் ஓரியோ விற்பனை தொடங்கியது. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்கள் (அன்றைய டாலர் மதிப்பில் இது சுமார் 25 ரூபாய்). அமெரிக்காவில் மாபெரும் வெற்றி கண்ட அதே வடிவம், அதே சுவை. நாளிதழ்கள், பத்திரிகைகள், தொலைக்காட்சி ஆகியவற்றில் ஏகப்பட்ட விளம்பரங்கள். அவை அனைத்திலும், குழந்தைகள் ஓரியோவைப் பாலில் தோய்த்துச் சாப்பிடும் காட்சி.

2005. ஒன்பது ஆண்டுகள் ஓடி விட்டன. ஏனோ, விற்பனை சூடு பிடிக்கவேயில்லை. ஏகப்பட்ட நஷ்டம். சீன நாட்டிலிருந்து வெளியேறிவிடலாம் என்னும் சோகமான முடிவை நபிஸ்கோ எடுத்தார்கள். ஒரே ஒரு விற்பனை மேனேஜருக்கு மனம் நிறையக் கேள்விகள்.

அமெரிக்கா, கனடா போன்ற நாடுகளில் வெற்றிக் கொடி நாட்டிய ஓரியோ சீனாவில் மண்ணைக் கவ்வியது ஏன்? சீனாவை விட்டு வெளியேறும் முன், கருத்துக் கணிப்பு நடத்தித் தோல்விக்கான காரணங்களைக் கண்டுபிடிக்க விரும்பினார். நபிஸ்கோவின் அமெரிக்கத் தலைமைச் செயலகம் பச்சை விளக்குக் காட்டியது.

கருத்துக் கணிப்பு முடிவால் பிரபலமானது

கருத்துக் கணிப்பு சொன்ன உண்மைகள் நபிஸ்கோவுக்கு ஞானோதயம் தந்தன. சாக்லெட் கசப்பும், கிரீம் இனிப்பும் கலந்த இரட்டைச் சுவைக் கலவை சீனர்களுக்கு மிகவும் பிடித்தது. ஆனால், ஒரு பிரச்சனை “இனிப்பு திகட்ட வைக்கிறது: கசப்பு வயிற்றைப் புரட்டுகிறது. இரண்டுமே அதிகமாக இருக்கின்றன. இனிப்பு, கசப்பு இரண்டையும் மிதமாக்கவேண்டும்.”

நபிஸ்கோ கம்பெனி கிரீம் இனிப்பையும், சாக்லெட் கசப்பையும் வெவ்வேறு அளவுகளில் குறைத்து, 20 வகையான சாம்பிள்கள் தயாரித்தார்கள். அவற்றை ஆயிரக் கணக்கான சீன ஆண், பெண்கள், பல்வேறு வயதுள்ள குழந்தைகள் ஆகியோரிடம் சாப்பிடச் சொல்லி, அவர் களுக்கு எந்த சாம்பிள் பிடிக்கிறது என்று அவர்கள் கருத்துகளைக் கேட்டார்கள். இந்த அடிப்படையில், 20 சாம்பிள் களிலிருந்து பெரும்பாலா னோருக்குப் பிடித்த ஒரு சாம் பிளைத் தேர்ந்தெடுத்தார்கள்.

புதிய சுவைகளில் இன்னும் சில தனிப்பட்ட சுவைகளும் வந்தன. வனிலா கிரீம் மட்டுமே முதலில் இருந்தது. பல குழந்தைகளுக்கு வனிலாவைவிடச் சாக்லெட் கிரீம் இன்னும் அதிகமாகப் பிடித்தது. ஆகவே, ஓரியோ, சாக்லெட் கிரீம் அறிமுகம் செய்தார்கள். சீனர்கள் கிரீன் டீ என்னும் கொழுந்து வகைத் தேநீருக்கு அடிமைகள். அது புத்துணர்ச்சி தருவது என்னும் உறுதியான நம்பிக்கை கொண்ட வர்கள்.

நாள் முழுக்க கிரீன் டீ குடிப்பார்கள். ஆகவே, அடுத்து வந்தது இன்னொரு ஓரியோ . அதன் நடுவே கிரீன் டீ கிரீம். இதைப்போல் உள்ளூர் டேஸ்ட்டுக்கு ஏற்றபடி ஆரஞ்சு, மாம்பழம் இரண்டின் சுவையும் கலந்த புளிப்பும் இனிப்புமான கிரீம் அறிமுகம் செய்யப்பட்டது. .

ஓரியோ ஏன் வட்டவடிவமாக மட்டுமே இருக்கவேண்டும்? பல சீனர்கள் கேட்டார்கள். மக்கள் குரல் மகேசன் குரல் என்று கம்பெனி நிர்வாகிகள் முடிவு செய்தார்கள். கை விரல்கள் போன்ற வடிவம் பலருக்கும் பிடித்தமானதாக இருந்தது. வந்தது குச்சிபோல் நீளமான ஓரியோ. 14 பிஸ்கெட்கள் கொண்ட பாக்கெட் விலை 72 சென்ட்.

இத்தனை விலை கொடுத்துப் பிஸ்கெட் வாங்க சாமானியச் சீனக் குடும்பம் தயாராக இல்லை. இந்தத் தேவையைப் பூர்த்தி செய்ய, நபிஸ்கோ 5 ஓரியோக்கள் கொண்ட சின்ன பாக்கெட் 29 சென்ட் விலையில் அறிமுகம் செய்தார்கள். பெரிய பாக்கெட்களும் தொடர்ந்தன.

உத்தியில் மாற்றம்

அமெரிக்க அனுபவத்தின்படி, ஓரியோ பாலில் தோய்த்துச் சாப்பிடும் பிஸ்கெட் என்னும் பொசிஷனிங்கை நபிஸ்கோ மக்கள் மனங் களில் உருவாக்கிக் கொண்டிருந்தது.

இந்தப் பொசிஷனிங்கைச் சீனர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. இந்தப் பழக்கம் அமெரிக்கத் தனமானது, சீனப் பழக்க வழக்கங்களுக்கு ஏற்றதல்ல என்று நினைத்தார்கள்.

ஓரியோ நிர்வாகிகளுக்கு ஒரே குழப்பம் பாலில் தோய்த்துச் சாப்பிடுவதுதான் ஓரியோவின் வித்தியாசமான தனித்துவம். இதை இழக்கக் கம்பெனி தயாராக இல்லை. என்ன செய்யலாம் என்று யோசித்தார்கள்.

சீனாவிலும் முதலிடம்

பால் ஆரோக்கியம் மிகுந்த பானமாகச் சீனாவில் கருதப்படுகிறது தினமும் குழந் தைகளைப் பால் குடிக்க வேண்டுமென்று சீனப் பெற்றோர்கள் வற்புறுத்துவார்கள். எல்லா ஊர்களையும்போல், சீனாவிலும் குழந்தைகள் பால் குடிக்க அடம் பிடிக்கும்.

நபிஸ்கோ ஓரியோ விளம்பரங்களில் சிறு மாற்றம் கொண்டுவந்தார்கள். குழந்தைகள் பால் குடிக்க ஓரியோ உதவும் என்னும் கருத்தை மையப்படுத்தினார்கள். சீனப் பெற்றோர்கள் மனம் மாறியது. ஒவ்வொரு வருடமும் ஓரியோ விற்பனை இரண்டு மடங்கானது. இன்று சீனாவில் நம்பர் 1 பிஸ்கெட் ஓரியோதான்!

2009 இல் ஓரியோ பிஸ்கெட்டை நபிஸ்கோ கம்பெனியிடமிருந்து சாக்லெட் தயாரிக்கும் காட்பரீஸ் கம்பெனி வாங்கிவிட்டார்கள். 2010 இல் இந்தியாவில் ஓரியோவை அறிமுகம் செய்திருக்கும் காட்பரீஸ், சீனாவில் நபிஸ்கோ படித்த பாடத்தை இந்தியாவில் பின்பற்றி வருகிறார்கள்.

நம் நாட்டில் ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய சுவைகள் ஏராளமான குழந்தை களுக்குப் பிடித்தவை. ஆகவே ஓரியோ வனிலா, ஸ்ட்ராபெர்ரி, ஆரஞ்சு ஆகிய கிரீம்களோடு வருகிறது.

இந்தியாவில் இந்தியப் பாக்கெட்களும், விலைகளும் அமெரிக்க பாணியில் அல்ல, சீனப் பாணியில்தான். 3 ஓரியோக்கள் கொண்ட பாக்கெட் 3 ரூபாய்: 7 ஓரியோக்கள் பாக்கெட் 10 ரூபாய்: 14 ஓரியோக்கள் பாக்கெட் 20 ரூபாய்.

சீன முறைப் பொசிஷனிங் இந்தியாவிலும் வெற்றிகண்டு வருவதாக ஆரம்ப தகவல்கள் சொல்கின்றன. இந்த வெற்றி தொடருமா? வருகின்ற நாட்கள் பதில் சொல்லும்.

slvmoorthy@gmail.com

நீங்கள் அவமானப்படுத்தியது யாரை?

Return to frontpage

நல்ல முன்னுதாரணங்களைத் தேடி எடுத்துக்கொள்வது முன்னேற்றப் பாதையில் செல்வோருக்கான அடையாளங்களில் ஒன்று. சென்னை மாநகராட்சியின் ‘புதிய வரிவசூல்’ முறையை என்னவென்று சொல்வது?

சொத்துவரி செலுத்தத் தவறிய நட்சத்திர விடுதியின் முன்பு திருநங்கையரை ஆட விட்டு வரி வசூல் செய்த சென்னை மாநகராட்சியின் செயல் அவமானகரமானது மட்டுமல்ல; மனித உரிமை மீறலும்கூட. பெங்களூரு, தெற்கு டெல்லி போன்ற மாநகராட்சிகள்தான் சென்னை மாநகராட்சிக்கு இந்த விஷயத்தில் ‘முன்னோடிகள்’! பிஹாரின் பாட்னா மாநகராட்சி இன்னும் ஒரு படி கீழிறங்கி, பொதுமக்களிடம் இருந்து வரி வசூலிக்கவும் திருநங்கைகளை ரசக் குறைவான விதத்தில் பயன்படுத்தியது. வசூலிக்கும் வரியில் 4%-ஐ பாட்னா மாநகராட்சி திருநங்கைகளுக்கு வழங்கியது. மனித உரிமை ஆர்வலர்களின் எதிர்ப்புக்குப் பிறகு அந்த மாநகராட்சி இந்த நடைமுறையைக் கைவிட்டது. அதேபோல், பெங்களூரு மாநகராட்சியின் நடவடிக்கையை ‘நாகரிகமற்ற செயல்’ என்று கர்நாடக உயர் நீதிமன்றம் கண்டித் திருந்ததும் இங்கே குறிப்பிடத் தக்கது.

இதை வெறும் சென்னை மாநகராட்சியின் தவறாக மட்டும் பார்க்க முடியாது. நம் மனோபாவத்தின் குறியீடுகளில் ஒன்று இது. இயக்குநர் ஷங்கரின் ‘ஐ’ திரைப்படத்தில் மூன்றாம் பாலினத் தோரை இழிவுபடுத்தியதும் இதே போன்ற செயல்தான். ‘ஐ’ படத்துக்கெதிராகத் திருநங்கைகள் போராடியும் அந்தப் படத்தின் இயக்குநரோ தயாரிப்பாளரோ கொஞ்சமும் அலட்டிக்கொள்ளவில்லை. திருநங்கைகளின் எதிர்ப்பு அந்தத் திரைப்படத் தரப்பிடம் மட்டுமல்ல; பொதுமக்களிடமும் எந்தச் சலனத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதும் ஒரு குறியீடுதான்.

காலம்காலமாகச் சமூகத்தால் புறந்தள்ளப்பட்டு ஒதுங்கி வாழ்பவர்கள் தான் மூன்றாம் பாலினத்தோர். ஒடுக்கப்பட்ட தரப்புகளிலேயே கடைநிலையில்தான் அவர்களை நாம் வைத்திருக்கிறோம். அவர்களில் சிலர் பிச்சை எடுத்துப் பிழைக்கிறார்கள்; குறிப்பாக, வலுக்கட்டாயமாகப் பிச்சை பெற்றுக்கொள்கிறார்கள்; இன்னும் சிலர் பாலியல் தொழிலில் ஈடுபடுகின்றனர் என்பது உண்மைதான். ஆனால், இதற்கான சூத்ரதாரிகள் நாம்தான் என்பதை மறந்துவிட முடியாது. அவர்கள் கண்ணியமாக வாழ நாம் என்ன வாய்ப்புகளை உருவாக்கி வைத்திருக்கிறோம்? சக மனிதர்களாகக் கூட அவர்களை மதிப்பதில்லையே? கடந்த சில ஆண்டுகளாகத்தான் அவர்களுடைய குரல் பொதுச் சமூகத்தின் காதுகளில் சற்றே விழ ஆரம்பித்திருக்கிறது. சில உரிமைகளும் சலுகைகளும் அவர்களுக்குக் கிடைத்திருக்கின்றன. அவர்களுடைய வாழ்நிலையில் மிகச் சிறிய அளவிலாவது முன்னேற்றம் ஏற்பட்டிருக்கும் இந்தக் காலத்தை மீண்டும் பின்னோக்கித் தள்ளுகின்றன இந்தச் சம்பவங்கள்.

ஒருவரை அவமானப்படுத்துவது தவறு என்றால் ஒருவர் மேல் சமூகம் தொடர்ந்து சுமத்திவந்திருக்கும் அவமானத்தைக் கருவியாகக் கொண்டு இன்னொருவரை அவமானப்படுத்துவது எவ்வளவு பெரிய தவறு? எவ்வளவு பெரிய மனித உரிமை மீறல்? மாநகராட்சியின் உயர் அதிகாரிகளுக்கு இந்தப் பிரக்ஞையெல்லாம் சற்றும் இல்லை என்பது அவர்கள் மற்ற விஷயங்களில் எப்படி நடந்துகொள்வார்கள் என்பதற்கான ஒரு சோறு பதம். உண்மையில், மாநகராட்சி அவமானப்படுத்தியது நட்சத்திர விடுதிக்காரர்களையோ திருநங்கைகளையோ அல்ல; தன்னையே அவமானப்படுத்திக்கொண்டிருக்கிறது.

ஒரு சமூகம் தனது சிறுபான்மையினரையும், விளிம்புநிலையி னரையும் நடத்தும் விதத்தைக் கொண்டுதான் அது எவ்வளவு நாகரிகம் அடைந்த சமூகம் என்று மதிப்பிடப்படும். எனில், நமது நாகரிகத்தின் முகமோ தற்போது கிழிந்து தொங்குகிறது!

பேருந்துகளை எளிதாக அடையாளம் காண வழித்தட எண்களில் மாற்றம்

பேருந்துகளை பயணிகள் எளிதாக அடையாளம் காணும் வகையில், பேருந்து வழித்தட எண்ணை ஒரே மாதிரியாக மாற்றியமைக்கும் பணியை சென்னை மாநகரப் போக்குவரத்துக் கழகம் மேற்கொண்டு வருகிறது.

முதல் கட்டமாக 20 வழித்தடங்களில் இந்த மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாநகரப் போக்குவரத்துக் கழக உயர் அதிகாரி ஒருவர் கூறியது:

மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் இப்போது 806 வழித் தடங்களில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

இதில் ஒரு சில வழித் தடங்களில் பயணிகளின் தேவையை அடிப்படையாகக் கொண்டு அதிக எண்ணிக்கையில் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் சில பேருந்துகள் மாறுபட்ட வழித்தட எண்களிலும் இப்போது இயக்கப்பட்டு வருகின்றன.

இது குழப்பத்தை ஏற்படுத்தும் என்பதால், குறிப்பிட்ட வழித் தடத்தில் ஒரே எண் கொண்ட பேருந்துகளை இயக்குவது என முடிவு செய்யப்பட்டுள்ளது.

அதாவது பிராட்வேயிலிருந்து வெவ்வேறு வழிகளில் தாம்பரம் நோக்கி செல்லும் பேருந்துகள் அனைத்தும் 102 என்ற எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றப்பட்டுள்ளது.

அதாவது 21ஹெச் பேருந்து வழித்தடம் 102 எனவும், டி21 என்ற வழித்தடம் 102கே என்ற வகையில் மாற்றப்பட்டுள்ளன.

இதுபோல் டி51 வழித்தட பேருந்துக்கு 95 என்ற எண்ணும், டி51எஸ் என்ற வழித்தடத்துக்கு 95சி என ஒரே எண்ணில் தொடங்கும் வகையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இதுபோல் 20 வழித் தடங்களில் முதல் கட்டமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்த மாற்றம் பொதுமக்களுக்குத் தெரியும் வகையில் அனைத்துப் பேருந்துகளிலும் பழைய எண், புதிய எண் அடங்கிய ஸ்டிக்கர்களும் ஒட்டப்பட்டுள்ளன. பேருந்து நிறுத்தங்களில் அறிவிப்புகள் அளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

அடுத்த மூன்று வார காலங்களில் பிற பேருந்துகளிலும் இந்த மாற்றம் கொண்டு வரப்படும் என்றார்.

அரசு பணியில் ஆர்வம் காட்டாத சிறப்பு பிரிவு டாக்டர்கள்: 1,737 இடங்களுக்கு 433 பேர் மட்டுமே தேர்வு

அரசு மருத்துவமனைகளுக்கு, 1,737 சிறப்பு பிரிவு டாக்டர்கள் இடங்களை நிரப்ப மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியமான எம்.ஆர்.பி., நேரடி ஆட்தேர்வு நடத்தியும் டாக்டர்கள் ஆர்வம் காட்டவில்லை. போதிய ஆட்கள் கிடைக்காததால் 433 பேரை மட்டுமே தேர்வு செய்ததாக வாரியம் அறிவித்துள்ளது.

தமிழகம் முழுவதும் அரசு மருத்துவமனைகளில் டாக்டர்கள் ஓரளவு இருந்தாலும் அறுவை சிகிச்சை நிபுணர்கள், உயர் மருத்துவம் படித்த (எம்.எஸ்., - எம்.டி.,) சிறப்பு டாக்டர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. இதைக் கருத்தில் கொண்டு, '1,737 சிறப்பு டாக்டர்கள் தேர்வு செய்யப்படுவர்' என, அரசு அறிவித்தது. தேர்வு நடத்தாமல் மருத்துவப் பணியாளர் தேர்வு வாரியத்தால், 'வாக் இன் இன்டர்வியூ' முறையில், ஆட்தேர்வு நடந்தது. அரசு பணியில் சேர சிறப்பு டாக்டர்கள் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. நீண்ட காலம் ஆட்தேர்வு நடத்தியும் 25 சதவீத டாக்டர்கள் கூட கிடைக்கவில்லை. தேர்வான டாக்டர்கள் பட்டியலை எம்.ஆர்.பி., வெளியிட்டுள்ளது. மகப்பேறு சிகிச்சை, மகளிர் நோய் பிரிவில் - 73; பொது அறுவை சிகிச்சை - 46; குழந்தைகள் சிகிச்சை - 43 பேர்; முடநீக்கியல் பிரிவில் - 27 பேர் உட்பட, மொத்தம், 433 பேர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். பல்வேறு துறைகளுக்கு ஒருவர் கூட வரவில்லை. எம்.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிறப்பு பிரிவு டாக்டர் இடங்களை நிரப்ப போதிய ஆட்கள் கிடைக்கவில்லை.

அரசுப் பணியில் அவர்கள் ஆர்வம் காட்டவில்லை என்பதையே காட்டுகிறது. வந்தவரை தேர்வு செய்தோம்' என்றார். இப்படி சிக்கலான நிலையில் அரசு எப்படி மற்ற இடங்களை நிரப்பப் போகிறது என்பது புரியாத புதிராக உள்ளது. சமூக சமத்துவத்துக்கான டாக்டர்கள் சங்க பொதுச்செயலர் ரவீந்தரநாதன் கூறுகையில், ''சிறப்பு பிரிவு டாக்டர்களை தனியார் மருத்துவமனைகள் சிவப்பு கம்பளம் விரித்து வரவேற்கின்றன. அரசு மருத்துவமனைகளில் சம்பளம் குறைவு ஒரு பிரச்னை என்றாலும், போதிய கட்டமைப்பு வசதிகள் இல்லாததால், அவர்கள் வரத் தயங்குகின்றனர். மருத்துவமனைகளில் கட்டமைப்பு வசதிகளை அரசு மேம்படுத்தினால் இந்த சிக்கல்கள் தீரும்,'' என்றார்.

பிளஸ் 2 பொதுத்தேர்வு: மாணவர்களுக்கு அறிவுரை

பரமக்குடி: 'பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் வினாத்தாளில் கருப்பு, நீல மை பேனாக்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்' என அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

பிளஸ் 2 பொதுத்தேர்வுகள் மார்ச் 5 ல் துவங்குகின்றன. விடைத்தாட்கள் தைக்கும் பணி முடிந்துள்ளது. விடைத்தாள் பயன்படுத்தும் முறை குறித்து மாணவர்களுக்கு தேர்வுத்துறை அறிவுறுரை வழங்கியுள்ளது. அதன் விபரம்: விடைத்தாளின் முகப்புத்தாளில் மாணவரின் கையெழுத்து மட்டுமே இட வேண்டும். மற்ற எந்த தாள்களிலும் குறியீடு, பெயர், தேர்வு எண் எழுதக் கூடாது. வினா எண்களை தவறாமல் எழுத வேண்டும். நீலம், கருப்பு மை பேனாவை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கலர் ஸ்கெட்ச், பென்சிலை தவிர்க்க வேண்டும். ஒவ்வொரு பக்கத்திலும் 20 முதல் 25 வரிகள் எழுத வேண்டும். வினாத்தாளை சேதப்படுத்துவது, கிழிப்பது போன்ற செயல்களில் ஈடுபடக்கூடாது. இவ்வாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அண்ணாபல்கலைக்கழகத்தில் என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் துணைவேந்தர் மு.ராஜாராம் தகவல்



அண்ணாபல்கலைக்கழகத்தில் மாணவர் சேர்க்கைக்கான என்ஜினீயரிங் கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கும் என்று அண்ணாபல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

என்ஜினீயரிங் கலந்தாய்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்–2 தேர்வு மார்ச் மாதம் 5–ந்தேதி தொடங்கி மார்ச் 31–ந்தேதி முடிவடைகிறது. விடைத்தாள்கள் திருத்தப்பட்டு முடிவு மே மாதம் வெளிவரும். மே மாத முதல் வாரத்தில் என்ஜினீயரிங் சேர்வதற்கான விண்ணப்ப படிவங்கள் அண்ணாபல்கலைக்கழகம் உள்பட தமிழ்நாடு முழுவதும் 58 இடங்களில் கொடுக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் அண்ணாபல்கலைக்கழக ஒருங்கிணைப்பு கல்விக்குழு கூட்டம் நேற்று துணைவேந்தர் பேராசிரியர் மு.ராஜாராம் தலைமையில் நடைபெற்றது. கூட்டம் முடிந்ததும் அவரிடம் என்ஜினீயரிங் கலந்தாய்வு குறித்து நிருபர்கள் கேட்டதற்கு அவர் அளித்த பேட்டி வருமாறு:–

கடந்த ஆண்டு போல கலந்தாய்வு

தமிழ்நாட்டில் 539 என்ஜினீயரிங் கல்லூரிகள் உள்ளன. கட்டிடக்கலை கற்பிக்கும் கல்லூரிகள் 44 உள்ளன.

இந்த கல்லூரிகளில் பி.இ., பி.டெக்., பி.ஆர்.சேர்வதற்கு பிளஸ்–2 முடித்த மாணவ–மாணவிகள் விண்ணப்பிப்பார்கள்.




கடந்த வருடம் போலவே என்ஜினீயரிங் கலந்தாய்வு சென்னையில் மட்டுமே நடக்கும். எந்தவித மாற்றமும் இல்லை. விண்ணப்பம் ரூ.500–க்கு விற்கப்படுகிறது. ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினருக்கு ரூ.250 ஆகும். ஆனால் அவர்கள் அதற்கு உரிய சான்று கொடுக்கவேண்டும்.

ஜூன்மாத இறுதியில் கலந்தாய்வு

விண்ணப்ப படிவம் 2 லட்சத்து 40 ஆயிரம் அச்சடிக்கப்பட உள்ளது. கலந்தாய்வு ஜூன் மாத இறுதியில் தொடங்கப்பட உள்ளது. மொத்தம் 40 நாட்களுக்கு மேல் கலந்தாய்வு நடைபெறும். புதிதாக வரக்கூடிய என்ஜினீயரிங் கல்லூரிகள் எத்தனை என்பது பற்றி இப்போதைக்கு எதுவும் கூற இயலாது. என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும் தேதி இன்னும் முடிவு செய்யவில்லை. மருத்துவ படிப்பில் சேர்வதற்கான கலந்தாய்வு தொடங்கிய 3 நாட்களுக்கு பின் என்ஜினீயரிங் கலந்தாய்வு தொடங்கும். என்ஜினீயரிங் கலந்தாய்வுக்கு விண்ணப்பிக்கும்போது மாணவர்கள் தங்களை, முதல் பட்டதாரி மாணவர் அல்லது மாணவி என்று குறிப்பிடவேண்டும். அவ்வாறு குறிப்பிட்டால் அதற்கான சலுகையை அவர்கள் பெறமுடியும்.

இவ்வாறு பேராசிரியர் மு.ராஜாராம் தெரிவித்தார்.

பேட்டியின்போது அண்ணாபல்கலைக்கழக பதிவாளர் கணேசன், என்ஜினீயரிங் மாணவர் சேர்க்கை செயலாளர் பேராசிரியர் ரைமண்ட் உத்தரியராஜ், பேராசிரியர் நாகராஜன், பேராசிரியர் ராமலிங்கம் ஆகியோர் இருந்தனர்.

NEWS TODAY 28.01.2026