Sunday, February 15, 2015

திருமண செலவில் குரங்கு வாடகை ரூ.10,000: ஆக்ராவில் வினோதம்

திருமண செலவில் குரங்குகளை வாடகைக்கு அமர்த்துவதும் கட்டாய மாகி விட்டது. உத்தரப்பிரதேச மாநிலம் ஆக்ராவில்தான் இந்த வினோதம் நடந்து வருகிறது.

ஆக்ராவில் குரங்குகளின் தொல்லை அதிகம். திருமண விசேஷங்கள் நடைபெறும் இடங்களுக்கு வந்து குரங்குகள் அட்டகாசம் செய்கின்றன. அவற்றை விரட்ட சாம்பல் நிற லங்கூர் வகை குரங்குகளை திருமண வீட்டார் வாடகைக்கு அமர்த்தி வருகின்றனர்.

சாம்பல் நிற லங்கூர் குரங்கு களுக்கு மற்ற குரங்குகளைக் கண்டால் பிடிக்காது. அவற்றை துரத்தி விட்டுவிடும். எனவே, லங்கூர் குரங்களை வைத்திருக்கும் குரங்காட்டிகளுக்கு நல்ல தேவை உள்ளது. குறிப்பாக திருமண சமயங்களில் இவர்களுக்கான தேவை அதிகரித்து விடுகிறது. திருமண வீட்டார் இவர்களை முன்கூட்டியே முன்பதிவு செய்து விட்டால், அவர்களுக்கு ரூ.3,000 கொடுத்தால் போதுமானது. இல்லாவிட்டால், விசேஷத்தில் குரங்குகள் புகுந்து விட்டால் அவற்றை விரட்ட ரூ.10 ஆயிரம் வரை செலவிட வேண்டியிருக்கும்.

குறிப்பாக குளிர்காலங்களில் நடைபெறும் திருமணங்களில் இவர்களுக்கான தேவை அதிக மாகவே உள்ளது. இதனால், திருமணத்தில் மற்ற செலவுகளுடன் லங்கூர் குரங்குகளுக்கான வாடகைச் செலவும் கட்டாயம் இடம்பெறுகிறது.

ஆக்ராவில் கடந்த சில ஆண்டுகளில் குரங்குகளின் எண் ணிக்கை பல மடங்கு அதி கரித்து விட்டது. வட இந்தி யாவின் பெரும்பாலான நகரங் களில் குரங்குகளின் தொல்லை அதிகரித்திருக்கிறது. தோட்டங் களைச் சிதைத்தல், வீடு, அலுவலகங் களின் மேற்கூரையில் அமர்தல், உள்ளே நுழைந்து பொருட்களை சேதப்படுத்துதல், உணவுக்காக மனிதர்களைத் தாக்குதல் போன்ற பல்வேறு செயல்களில் ஈடுபடுகின்றன.

எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? by பாரதி ஆனந்த்

படங்கள்: க.ஸ்ரீபரத்.

ஒவ்வொரு ஆண்டும் வருகிறது இந்த காதலர் தினம். அந்த நாள் வருவதற்கு முன்னரே 'நாங்கள் எதிர்க்கிறோம்', 'நாங்கள் வன்மையாக கண்டிக்கிறோம்', 'நாங்கள் கடும் நடவடிக்கை எடுப்போம்' என மிரட்டல், கண்டன அறிக்கைகள் வந்துவிடுகின்றன.

சிலர் (கலாச்சாரக் காவலர்கள் என சொல்லிக் கொள்பவர்கள்) அறிக்கைகளோடு மட்டும் நிறுத்திவிடாமல், களத்திலும் இறங்குகின்றனர்.

அன்றைய தினம் இவர்கள் கையில் கொடி, தடியுடன் புறப்பட்டுவிடுகிறார்கள். இவர்களது மெயின் டார்கெட் பஸ் ஸ்டாண்ட், பீச், பார்க், மல்டி பிளக்சுகள் இத்யாதி இத்யாதி இடங்கள். கண்ணில் ஏதேனும் ஜோடி சிக்கினால் போதும் நீங்கள் கணவன், மனைவியா என்ற கேள்வி தொடங்கி அறிவுரை என்ற பெயரில் நாராசமான வார்த்தைகளும் சொல்லப்படுகின்றன. இந்தக் கலாச்சாரக் காவலர்கள் காதலர்களை கையாளும் விதத்தை விட்டுவிடுவோம். அது இங்கு விவாதப் பொருளல்ல.

இந்த ஒட்டுமொத்த காதலர் தின எதிர்ப்பு நிகழ்ச்சியிலும் வேதனை அளிக்கும் விஷயம் என்னவென்றால், நாய்களுக்கு நடத்தப்படும் திருமணம். நாய்களுக்கு ஏன் திருமணம் நடத்த வேண்டும். காதலர் தினத்துக்கும் நாய்களுக்கும் என்ன சம்பந்தம். காதலர்களை இழிவுபடுத்த நாய்களுக்கு திருமணம் செய்வது காதலர்கள் மனதில் தாக்கத்தை ஏற்படுத்துமா என்று தெரியவில்லை. ஆனால், நிச்சயமாக பிராணிகள் ஆர்வலர்களுக்கு வேதனை அளிக்கிறது என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

நாய்கள், நாம் பழக்கப்படுத்தும் வகையில் வாழும் ஜீவன்கள். உயிருள்ளவரை எஜமானனுக்கு விசுவாசமாகவே இருக்கின்றன. தனிமையில் வாழும் எத்தனை, எத்தனையோ முதியவர்களுக்கு உற்ற தோழமையாக இருக்கின்றன. உள்ளூர் உதாரணம் ஒன்று சொல்ல வேண்டுமானால், சென்னை மவுலிவாக்கத்தில் நடந்த விபத்தின் போது ஆட்கள் புக முடியாத இடங்களுக்குள் எல்லாம் நுழைந்து இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்தவர்களை மீட்புக் குழுவினருக்கு அடையாளம் காட்டி உதவின சில நாய்கள்.

இறைவன் படைப்பில் எந்த ஒரு ஜீவராசியையும் தாழ்வாக நினைக்க யாருக்கும் உரிமை இல்லை. அப்படி இருக்கும்போது கலாச்சாரத்தை காக்க நாய்களுக்கு திருமணம் செய்வது மிகவும் அபத்தமானது. அலங்காரம் செய்து, சீர்வரிசை வைத்து, முடிந்தால் தாலி கட்டக்கூட வைத்து நீங்கள் செய்யும் அத்தனை அக்கிரமங்களுக்கும் எதுவும் அறியாமல் துணை போகின்றன என்பதற்காகவே அத்துமீறலாமா?

கலாச்சாரக் காவலர்களே, காதலர் தினத்தை எதிர்க்கும் உங்கள் கருத்துகளுக்கு பின்னணியில் நியாயமான காரணங்களே இருக்கலாம். ஆனால், அதற்காக நாய்களுக்கு திருமணம் செய்வதற்குப் பின்னணியில் எந்த நியாயமும் இருக்க முடியாது.

அடுத்த ஆண்டும் காதலர் தினம் வரும். அப்போது நாய்களை விட்டுவிடுங்கள். ஏனெனில், பூமாலை, அலங்காரத்துடன் காட்சியளிக்கும் நாய்களின் கண்கள் 'எங்களுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? நாங்கள் என்ன பாவம் செய்தோம்?' என்று கேட்பது போலவே உள்ளன.

குறிப்பு: எதற்கும், நாய்கள் ஜாக்கிரதையாக இருந்து கொள்வது நல்லது.

உலகக் கோப்பை: சென்னையில் 'கிரிக்கெட் காய்ச்சல்'


உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் தொடங்கியுள்ள நிலையில், சென்னையில் ரசிகர்களிடம் ஆர்வம் மேலோங்கியுள்ளது

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் இன்று துவங்கிவிட்டாலும், இந்திய ரசிகர்களைப் பொறுத்தவரை ஞாயிறன்றுதான் உண்மையிலேயே போட்டி துவங்குகிறது.

இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியா ஆடவிருக்கும் முதல் போட்டியே பாகிஸ்தானுடனான போட்டி என்பது கிரிக்கெட் ரசிகர்களுக்கு பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழகத்தில் ஒளிபரப்பாகும் சில தனியார் தொலைக்காட்சிகள், இந்தியா விளையாடும் போட்டிகளுக்கு தமிழில் வர்ணனை அளிக்கும் ஏற்பாட்டையும் செய்துள்ளன.

காலிறுதி, அரையிறுதி ஆட்டங்களை விட்டுவிட்டால், ஒவ்வொரு அணியும் ஆறு ஆட்டங்களில் விளையாடும்.

இந்தியாவைப் பொறுத்தவரை இந்த முறை பேட்டிங்கிலும் பந்துவீச்சிலும் மிகப் பலீவனமான அணியாகவே காட்சியளிக்கிறது.

ஏற்கனவே பலம்வாய்ந்த அணிகளாக இருக்கும் நியூசிலாந்து, ஆஸ்திரேலிய அணிகளின் சொந்த மண்ணில் இந்தப் போட்டிகள் நடப்பதால், இந்திய அணியின் வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்கள் விமர்சகர்கள்.

சென்னையில் உள்ள மைதானங்களில் கிரிக்கெட் ஆடிக்கொண்டிருக்கும் இளைஞர்களைக் கேட்டால், இந்த முறை இந்தியாதான் வெற்றிபெறும் என்று உற்சாகமாகச் சொல்கிறார்கள்.

ஆனால், கிரிக்கெட் விமர்சகரான சுமந்த் சி ராமன், இந்த முறை இந்திய அணிக்கு வாய்ப்பு மிகக் குறைவு என்கிறார்.

இதுவரை உலகக் கோப்பைத் தொடரில் நடந்த எந்த இந்திய - பாகிஸ்தான் ஆட்டத்திலும் இந்தியா தோற்றதில்லை என்பதால், இந்திய ரசிகர்கள் இந்திய- பாகிஸ்தான் போட்டிக்காக மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருக்கின்றனர்.

பாகிஸ்தான் அணி மிகப் பலவீனமாக இருப்பதால், இந்த ஆட்டத்தில் இந்தியா ஜெயிப்பது உறுதி என்கிறார் சுமந்த்.

தமிழ்நாட்டில் உள்ள பல கல்லூரிகளில் இந்தியா விளையாடும் கிரிக்கெட் ஆட்டங்களைப் பார்ப்பதற்காக விடுதிகளில் பெரிய திரைகளுடன் பிரத்தியேக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன.

உலகக் கோப்பை சென்டிமென்ட்ஸ்: நாட்-அவுட் 'பால்'ய நினைவுகள்!



'ஏன்டா பரீட்சையை வைச்சுக்கிட்டு அழுக்கு சட்டையோட ஸ்கூலுக்குப் போற?' 'இல்லம்மா, நேத்து இந்த ட்ரெஸ்ல போனதாலதான் எக்ஸாம் ஈஸியா இருந்தது.'

'என்னடி எலுமிச்சை சாதமே கேக்கறே?' 'நேத்து காலைல அதுதான்மா சாப்டேன். இண்டர்வியூல கிளியர் பண்ணிட்டேன். இன்னைக்கு ரெண்டாவது ரவுண்ட கிளியர் பண்ணனும்.!'

நம்மில் எத்தனை பேர் இந்த வகையைச் சேர்ந்தவர்களாக இருக்கிறோம்? சென்டிமென்ட் என்பது விளையாட்டான விஷயம் சிலருக்கு; ஆனால் விளையாட்டிலேயே சென்டிமென்ட் பார்ப்பவர் பலர். முக்கியமாக கிரிக்கெட் ரசிகர்கள்.

விளையாடும் வீரர்களுக்கு அதுதான் தொழிலே. வாழ்க்கையும் கூட. அவர்களின் சென்டிமென்ட் வேறு. ஆனால் ஆட்டத்தைத் தொலைக்காட்சியில் பார்க்கும் ரசிகர்கள் புரியும் சென்டிமென்ட் அதகளத்திற்கு அளவே இல்லை. இதோ, உலகக் கோப்பைக்கான அறிவிப்பு வந்துவிட்டது. சூதாட்டம் ஒரு பக்கம்; பரபரப்பைக் கிளப்பும் சர்ச்சைகள் மற்றொரு பக்கம் என இந்த முறையும் ரணகளத்திற்குப் பஞ்சமே இருக்காது.

இதற்கிடையில் கொஞ்சம் ரிலாக்ஸாக, கிரிக்கெட் வீரர்களின் சென்டிமென்டையும், ரசிகர்களின் நம்பிக்கைகளையும் பார்க்கலாமா?

வலது காலை எடுத்து வெச்சு:

இந்தியக் கிரிக்கெட்டின் சுவரான ராகுல் திராவிட், நம் பாரம்பரியத்தை கடைபிடிக்கத் தவறியதில்லை. மைதானத்தினுள் நுழையும்போது தனது வலது காலைத்தான் முதலில் எடுத்து வைப்பாராம்.

முதலில் இடது:

கிரிக்கெட் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் முதலில் தன்னுடைய இடது பேடைத்தான் அணிவாராம். நம் சுனில் கவாஸ்கர் பேட் செய்வதற்குப் பொசிஷனுக்கு வருவதற்கு முன்னர் மட்டையைத் தரையில் வைத்துவிட்டுத்தான் இடது காலைச் சரியான நிலையில் வைப்பாராம்.

கைக்குட்டையும் புகைப்படமும்:

இறந்து போன தன்னுடைய தாத்தாவின் நினைவாக அவர் கொடுத்த சிவப்பு நிறக் கைக்குட்டையை ஸ்டீவ் வாஹ் எப்போதும் தனது இடது பாக்கெட்டில் வைத்திருப்பாராம். ஆஸ்திரேலியாக்காரர் ஏன் நம் சவுரவ் கங்குலி கூட விளையாடும்போது தன்னுடைய ஆசானின் நினைவாக அவரின் படத்தைப் பாக்கெட்டில் வைத்திருப்பாராம்.

அணிபவை அதிர்ஷ்டத்துக்கா?

எளிதில் உணர்ச்சிவசப்படும் யுவராஜ் சிங், தான் வைத்திருக்கும் பெரிய கைக்குட்டை, தனக்கு விளையாட்டில் அதிர்ஷ்டத்தை வழங்குவதாக நம்புவாராம்.

மொஹமத் அசாருதீன் அரங்கில் இருக்கும்போது, கழுத்தில் ஒரு வகையான தாயத்தை அணிந்திருப்பாராம்.

முத்தத்துடன்:

மகிள ஜெயவர்த்தனே தன்னுடைய மட்டையை முத்தமிட்டுத் தன் ஆட்டத்தைத் தொடங்குவதை நீங்களே பார்த்திருப்பீர்கள். விக்கெட் எப்போதெல்லாம் விழ வேண்டுமென்று தென் ஆப்பிரிக்காவின் ஹியூஜ் டேஃபீல்ட் நினைக்கிறாரோ அப்போதெல்லாம் தனது தொப்பியில் இருக்கும் துள்ளியோடும் சிறு மானின் படத்தை முத்தமிடுவாராம்.

தனிமையும் இசையும்:

இங்கிலாந்து ஆட்டக்காரரான ஜெஃப்ரி பாய்காட் விளையாடுவதற்கு முன் தன்னுடைய அறையில் சிறிது நேரம் தனியாக இருக்க விரும்புவார். அன்றைய ஆட்டத்தைக் குறித்து ஆழ்ந்து சிந்தித்த பின்னரே வெளியே வருவாராம். ஆஸ்திரேலியாவின் மைக்கேல் கிளார்க் பேட் செய்வதற்கு முன் சத்தமான இசையைக் கேட்டுவிட்டுத்தான் ஆடத் தொடங்குவாராம்.

சனத் ஜெயசூர்யா என்ன செய்வார் தெரியுமா? பேட் செய்யும்போது அடிக்கடி தன் பாக்கெட்டுக்குள் கைவிட்டு எதையாவது துழாவுவாராம்.

பார்க்கவே சென்டிமென்ட் :

ஸ்டார் ரசிகரான அமிதாப் பச்சன், நேரடியாக ஒளிபரப்பாகும் ஆட்டங்களைப் பார்ப்பதே அறவே தவிர்த்துவிடுவார்.

உலகமே ஆவலுடன் பார்த்து ரசித்த சச்சினின் ஆட்டத்தை, தான் பார்த்தால் விரைவில் அவுட்டாகி விடுவார் என்ற எண்ணத்தில் அவரின் அம்மா கடைசி ஆட்டம் தவிர மற்ற ஆட்டங்களை மைதானத்திற்குச் சென்று பார்த்ததே இல்லை.

ரசிகர்களின் நம்பிக்கை

என்ன மாதிரியான விஷயங்களில் எல்லாம் கிரிக்கெட் ரசிகர்களுக்கு கண்மூடித்தனமாக நம்பிக்கை இருந்தது தெரியுமா?

ஆட்டம் தொடங்கும் நாளன்று கோயிலுக்கோ, சர்ச்சுக்கோ, மசூதிக்கோ சென்று பிரார்த்தனை செய்தவர்கள் அனேகம் பேர். முந்தைய தடவை இந்தியா ஜெயித்த போது அணிந்திருந்த உடையையே அணிந்தது, கடைசி ஓவரிலோ, முக்கியமான ஆட்ட நேரத்திலோ உட்கார்ந்திருக்கும் நிலையை மாற்றாமல் அப்படியே இருந்தது.

நண்பர்களில் யாராவது நின்று கொண்டிருந்த போது எதிரணியில் யாராவது அவுட்டானால் ஆட்ட முடிவு வரை அப்படியே அவரை நிற்க வைப்பது, ஒரு தடவை எல்லாரும் பேசிக் கொண்டிருந்தபோது நம் அணி வீரர் விக்கெட் விழுந்ததால் கடைசி வரை மெளன விரதத்தையே அனுஷ்டித்தது.

இந்தியா ஜெயித்தால் இவ்வளவு தேங்காய் உடைக்கிறேன் என்று பிள்ளையாரை வேண்டிக் கொண்டது. குறிப்பிட்ட இடத்தில் டிவி இருந்தால்தான் அணி ஜெயிக்கும் என்று அதன் இடத்தை, திசையை மாற்றாமல் இருந்தது.

'ராசி'க்காக நாற்காலியில் உட்கார்ந்து மேட்ச் பார்க்கக்கூடாது; கீழேதான் உட்கார வேண்டும் என்ற விதிமுறைகளைக் கடைபிடித்தது. வீட்டில் இத்தனையாவது டைல்ஸில்தான் உட்கார்ந்துதான் ஆட்டத்தைக் காண வேண்டும் என்று வீட்டில் உள்ளவர்களை டார்ச்சர் செய்தது.

நண்பனொருவன் சிறுநீர் கழிக்கப் போனபோது நம் அணி சிக்ஸர் அடித்ததால், அவனைக் கடைசி வரை பாத்ரூமே கதியென்று அங்கேயே இருக்கச் சொன்னது. இந்தியா பாகிஸ்தான் விளையாடும்போது எதாவது மந்திரங்கள் சொல்லிக் கொண்டே இருப்பது.

சமையலறையில் இருக்கும் அம்மாவை வெளியே ஹாலுக்கு வந்துவிடக் கூடாது என்று சொன்னது. சாமி படங்களை அருகிலேயே வைத்து அடிக்கடி தொட்டுக் கும்பிட்டுக் கொள்வது. இறுதி ஆட்டம் இந்தியா-பாகிஸ்தானுக்கு இடையில் என்றால் டிவிக்கு கற்பூரம் காட்டுவது. இதுபோன்ற இன்னும் பல சம்பவங்கள் நடந்தன.

அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஊருக்கு ஒன்றிரண்டு தொலைக்காட்சிகள் மட்டுமே இருந்த காலகட்டத்தில் கூட்டமாய் அமர்ந்து கிரிக்கெட்டைக் கண்டுகளித்த காலச் சித்திரங்கள் அனேகமாய் எல்லோரின் நினைவடுக்குகளில் அமிழ்த்தப்பட்டிருக்கும்.

ஆர்வத்தோடு ஆட்டத்தைப் பார்க்கும் அப்பாவை, ஆத்திரத்தோடு பார்க்கும் அம்மா, அப்பாவை நேரடியாகத் திட்டாமல், நம்மை 'பயன்படுத்தி' அவரைத் தாளித்த தருணங்களுக்கு கொஞ்சம் போய் வரலாமா?

குண்டாய் இருப்பவர்களை ரணதுங்கா, இன்சமாம் என்றும், ஒல்லியாய் முடிவெட்டாமல் சுற்றிக் கொண்டிருப்பவர்களை ஒலங்கா என்றும் கலாய்த்தோம். ஹிந்தி தெரிந்தது போல ஊருக்குள் பில்டப் கொடுத்து வர்ணனையாளர்களின் கமென்டுகளை குத்துமதிப்பாய் தமிழில் மொழிபெயர்த்தது இன்னொரு வரலாறு.

உள்ளூர் கிரிக்கெட் ஆட்டத்தில் தாண்டி தாண்டி கேட்ச் பிடிப்பவர்களை 'ஜான்டி ரோட்ஸ் மாதிரி வருவடா' என்று பாராட்டினோம். அண்ணனும் தம்பியும் ஒரே மேட்சில் ஆடினால், 'மனசுல பெரிய ஸ்டீவ் வாஹ், மார்க் வாஹ்னு நினைப்பு' என்று எல்லையில்லாமல் 'வாஹ்'ரினோம்.

எப்பொழுதும் ஓப்பனிங் இறங்குபவரை 'சேவாக்கா நீ?' என்று கேட்டோம். சையது அன்வரின் ஒரு நாள் போட்டியில் 194 ரன்கள் சாதனையை சச்சின் ஒருநாள் ஆட்டத்தில் முறியடித்துவிடுவார் என்று பல நாள் எதிர்பார்த்துக் காத்திருந்தோம்.

அஜய் ஜடேஜா விளையாட வரும்போது பெண்கள் ஆர்வமாய் எட்டிப் பார்த்தது, வீட்டுக்கு மேட்ச் பார்க்க வருபவர்களிடம் காசு வாங்கிக் கொண்டு பார்க்க விட்டது, எல்லா நாட்டு வீரர்களின் தகவல்கள் இருக்கும் சீட்டுக்கட்டுகளைப் பார்த்து மனப்பாடம் செய்து வெளியில் பெருமையாக சொல்லித் திரிந்தது, இந்தியா பாகிஸ்தானிடம் தோற்றுப்போன இரவுகளில் விடிய விடிய அழுது படுக்கையை நனைத்தது என இன்னும் எத்தனை எத்தனையோ அனுபவங்கள்.

பல்கிப் பெருகி விட்ட தொலைக்காட்சி சேனல்களும், மாறியவாழ்க்கை முறையும் எத்தனையோ விஷயங்களைத் தொலைத்துவிட்டாலும் இது போன்ற நினைவுக் கற்றைகள் தான் இன்னமும் நம்முள் ஒளிந்திருக்கும் கிரிக்கெட் 'பால்'யத்தை மீட்டெடுக்கும். எப்போதும் இத்தகைய நினைவுகள் - நாட் அவுட் தான்!

வாட்ஸ்ஆப் வறுவல்: விஜயகாந்த் ஒரு மாறுபட்ட பார்வை


‘கேப்டன் பிரபாகரன்’ படத்தில் விஜயகாந்த்.

கேப்டன் பிரபாகரன்’ படத்தில் விஜயகாந்த்.

வாட்ஸ்ஆப், ஃபேஸ்புக் போன்ற சமூக வலை தளங்களில் தேமுதிக தலைவர் விஜயகாந்தை இழிவுபடுத்தும் வகையில் செய்திகளையும், கிண்டல்களையும் வெளியிடுவதாக அக்கட்சியினர் சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் செய்துள்ளனர். விஜயகாந்தை கிண்டல் செய்யும் அதே வாட்ஸ்ஆப்பில் அவரை போற்றும் பதிவுகளும் வெளியிடப்பட்டு வருகின்றன. விஜயகாந்தின் அட்டகாசமான பிளாஷ்பேக்கை சொல்லி புருவம் உயர்த்த வைக்கிறது இந்த வாட்ஸ்ஆப் பதிவு.

சினிமாவில் நடிக்கும் ஆசையில் எழுபதுகளின் இறுதியில் மதுரை மாவட்டத்தில் இருந்து சென்னைக்கு வந்த விஜயராஜ்தான் பின்னாளில் வெற்றிகரமான நடிகரான விஜயகாந்த்.

சிவப்பு நிறமில்லை. சிலிர்க்க வைக்கும் உடற்கட்டு இல்லை. சினிமா பின்னணி இல்லை. இத்தனைக்கும் அந்த நேரத்தில் ரஜினியும், கமலும் மசாலா படங்களின் மூலம் கோலோச்சிய காலம். நெடிய போராட்டத்துக்கு பின்பு ‘இனிக்கும் இளமை’ என்றொரு படத்தின் மூலம் அறிமுகம் ஆனார். இவரின் அடுத்த படமான ‘தூரத்து இடி முழக்கம்’ மாநில மொழி திரைப்படத்துக்கான தேசிய விருதினை பெற்றது.

எஸ்.ஏ.சந்திரசேகர் இயக்கத்தில் இவரின் வெற்றி நடை ஆரம்பமானது. திரைப்படக் கல்லூரி மாணவர்களுக்கு வாய்ப்புகளை அளித்து ஊக்கம் அளித்தவர், இவர் மட்டுமே. ஆபாவாணன், ஆர்.கே.செல்வமணி, ஆர்.வி.உதயகுமார் என இந்த பட்டியல் நீளும்.

‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தாள்’, ‘சின்னக் கவுண்டர்’, ‘கேப்டன் பிரபாகரன்’, ‘ஊமை விழிகள்’, ‘புலன் விசாரணை’ என சிறு தயாரிப்பாளர்களின் வசூல் சக்ரவர்த்தியாக இவர் திகழ்ந்தார்.

இயக்குநர்கள் மட்டும் அல்ல; இவர் மூலம் அறிமுகம் செய்யப்பட்ட, இவரால் வளர்ந்த இன்னும் பல சினிமா பிரபலங்கள் உண்டு. அ.செ.இப்ராகிம் ராவுத்தர், சரத்குமார், அருண் பாண்டியன், ஆனந்த்ராஜ், மன்சூர் அலிகான், விஜய் என இந்த பட்டியலும் நீளும்.

இவ்வளவு ஏன்? கடந்த தேர்தலில் இவரை கடைந்தெடுத்த வடிவேலு கூட இவரால் வளர்ந்தவரே. அவருக்கு அறிமுகம் கொடுத்தது ராஜ்கிரணாக இருக்கலாம். ஆனால், தொடர்ச்சியாக வாய்ப்பளித்தது விஜயகாந்த் தான்.

இவரின் நிர்வாகத் திறமையை சிலர் குறைத்து மதிப்பிடுகின்றனர்.

திரைப்பட நடிகர் சங்கத்தின் தலைவராக இவர் தேர்ந்தெடுக்கப்பட்டதும் அதன் கடனை முற்றிலும் அடைத்ததோடு மட்டுமின்றி கையிருப்பையும் அதிகப்படுத்தினார்.

அனைத்து நடிகர்களையும் மலேசியாவுக்கு அழைத்துச் சென்று கலை நிகழ்ச்சிகள் நடத்தியது இவர்தான். அந்த சமயத்தில் இவரது திறமை யான நிர்வாகம் அனைவராலும் பாராட்டப் பட்டது.

‘அரசியலுக்கு வருவேன்’ என பூச்சாண்டி காட்டிக் கொண்டிருக்காமல் அதிலும் காலூன்றி சாதித்தவர் விஜயகாந்த். கருணாநிதி, ஜெயலலிதா, போன்றவர்கள் மத்தியில் யாதொரு அனுபவமும் இன்றி தனி ஆளாக இவரின் ஆவர்த்தனம் ஆரம்பம் ஆனது. எவரு டனும் கூட்டணி இல்லாமல் இவர் வாங்கிய ஓட்டுக்கள் அரசியலில் ஜாம்பவானாக அறியப்பட்ட வைகோவையும் கலங்க வைத்தது.

இவரின் தேர்தல் வாக்குறுதியான ‘கறவை மாடுகள் வழங்கப்படும்’ என்கிற திட்டம் அதிமுகவால் இப்போது செயல்படுத்தப்பட்டு வருகிறது. எங்கு துயர சம்பவங்கள் நடந்தாலும் முதலில் நிவாரண நிதி அறிவிப்பதும் அளிப்பதும் விஜயகாந்த்!

இயற்கையிலேயே சிவந்த கண்களுக்கு சொந்தக்காரரான இவருக்கு முன் கோபம் அதிகம். இதன் மூலம் மற்ற கட்சிக்காரர்களுக்கு கேலிச் சித்திரமானார். விஜயகாந்தின் பல திறமையான செயல்பாடுகளும், மக்கள் மனதில் இவர் பெற்ற இடமும் இதனால் இருட்டடிப்பு செய்யப்பட்டது என்பதே உண்மை..

விஜயகாந்தின் புகழை இருட்டடிப்பு செய்யவே, அவரை சிலர் காமெடியாக சித்தரித்து ஊடகங்களில் பரப்புகின்றனர். அவர்களை நாம் ஊக்குவிக்காமல் இருப்போம்.

உலகம் ஆடும் இந்திய ஆட்டம்



கிரிக்கெட் என்பது தற்செயலாக ஆங்கிலேயர்களால் கண்டுபிடிக்கப்பட்ட இந்திய விளையாட்டு - ஆஷிஷ் நந்தி

பிப்ரவரி 10-ம் தேதி காலையில் டெல்லி சட்டமன்றத் தேர்தல் அலசல்கள் தொலைக்காட்சிகளில் ஓடிக்கொண்டிருந்தன. முன்னணி நிலவரங்கள், வந்துகொண்டிருந்தன. என்.டி.டி.வி.யின் பிரணாய் ராய், ஆம் ஆத்மி கட்சியின் முன்னணி நிலவரத்தைச் சொல்லப் பயன்படுத்திய உத்தி சுவாரசியமானது. நடப்பு ஸ்ட்ரைக் ரேட் 52%, பெரும்பான்மை பெற அது இன்னமும் அடிக்க வேண்டிய ஸ்ட்ரைக் ரேட் 42% என்றார். கடைசியில் அந்த ஸ்ட்ரைக் ரேட் கிட்டத்தட்ட 100-ஐ நெருங்கியது என்பது வேறு விஷயம். தேசமே எதிர்நோக்கியிருந்த ஒரு தேர்தலின் முடிவுகளைச் சுவையாக முன்வைக்க கிரிக்கெட் சார்ந்த சமன்பாடு பயன்படுகிறது என்பதைக் கவனிக்க வேண்டும். கிரிக்கெட் பிறந்த நாடான இங்கிலாந்தில் தேர்தல் அலசலின்போது கிரிக்கெட் அதில் ஊடாடுமா என்பது சந்தேகம்தான்.

திரைப்படத்துக்கு இணையாகவும், பல சமயம் அதற்கு மேலும் இந்தியர்களின் சிந்தனைகளிலும் மொழியிலும் கிரிக்கெட் தாக்கம் செலுத்திவருகிறது. அதனால்தான் இந்தியர்கள் இன்றைய தினத்தை ஆவலோடு எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள். கிரிக்கெட்டின் ஆகப் பெரிய அரங்கில் ஆகப் பெரிய பெருமிதத்தைத் தரக்கூடிய ஒரு கோப்பையைப் பெறுவதற்கான நீண்ட தொடரின் முதல் ஆட்டம் இன்று அரங்கேறுகிறது.

மொத்தம் 14 அணிகள். 49 ஆட்டங்கள். முதல் சுற்றில் 42 ஆட்டங்கள். எந்த அணிகள் காலிறுதிக்கு வரும் என்பது கிட்டத்தட்ட தெரிந்த விஷயம்தான். 2007, 2003 ஆகிய ஆண்டுகளில் நடந்ததுபோல எதிர்பாராத அதிர்ச்சிகள் அரங் கேறினாலொழிய இந்தக் கணக்கில் பெரிய மாற்றம் இருக்க வாய்ப்பில்லை. எனினும் 14 அணிகளுக்கும் அந்நாடுகளின் ரசிகர்களுக்கும் இது கொண்டாட்டமாக இருக்கப்போகிறது. அன்றாட உரையாடலின் ஒரு பகுதியாகவும் தினசரிக் கனவின் அங்கமாகவும் அமையப் போகிறது. தொலைக்காட்சிகள், கணினிகள், கைபேசிகள் ஆகியவை உலகம் முழுவதிலும் உள்ள ரசிகர்களை வரும் இரண்டு மாதங்களிலும் கிரிக்கெட்டோடு பிணைத்து வைத்திருக்கும்.

உலகக் கோப்பைப் போட்டிகளுக்கு ஏன் இவ்வளவு வரவேற்பு? டெஸ்ட் போட்டிகளோடு ஒப்பிடும்போது நிர்ணயிக்கப்பட்ட ஓவர்கள் கொண்ட போட்டிகள் பெற்றிருக்கும் வரவேற்பு பல மடங்கு அதிகம் என்பது வெளிப்படை. கிரிக் கெட்டின் ஆன்மா டெஸ்ட் போட்டியில்தான் இருக்கிறது என்றாலும் ஒரு நாள், அரை நாள் போட்டிகளில்தான் பெரும்பாலான மக்களின் உயிர் இருக்கிறது. விறுவிறுப்பும், முடிவுகள் அறியக்கூடிய தன்மையுமே அதற்கான காரணங்கள். ஆனால், ஒரு நாள் போட்டிகள் இவ்வளவு பிரபலமானதற்குக் காரணம் உலகக் கோப்பைப் போட்டிகள் என்பது அதன் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

ஒரு நாள் போட்டியின் வரலாறு

1975-ல் உலகக் கோப்பைப் போட்டி தொடங்கப்பட்டபோது பெரிய கனவுகளோ திட்டங்களோ இல்லை. மற்ற விளையாட்டுகளைப் போல கிரிக்கெட் ஆட்டத்துக்கும் ஒன்றுக்கு மேற்பட்ட அணிகள் பங்கேற்கும் போட்டித் தொடர் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கமாக இருந்தது. டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடத்தும் யோசனை நடைமுறைக் காரணங்களுக்காகக் கைவிடப்பட்டது. 1975-க்கு முன்பு ஒருநாள் போட்டிகள் 20-க்கும் குறைவாகவே நடைபெற்றன.

பெரிய கனவுகள் எதுவும் இல்லாமல் தொடங்கப் பட்ட உலகக் கோப்பை இன்று விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. கிரிக்கெட் உலகின் ஆகப் பெரிய போட்டியாகவும், இதில் கோப்பையை வெல்வது ஆகப் பெரிய கவுரவமாகவும் கருதப்படுகிறது. எண்பதுகளில் தொலைக்காட்சியில் நேரடி ஒளிபரப்பு வந்த பிறகு அதன் வீச்சே மாறிவிட்டது. ஒளிபரப்பில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பத் தேர்ச்சிகள் ஆட்டத்தின் நுணுக்கங்களை அனைவருக்கும் துல்லியமாகக் கொண்டுசேர்த்தன. கால் காப்பில் பந்து பட்டதால் ஆட்டமிழக்கும் விதிகள் பற்றிப் பாமரர்களும் பேசுகிறார்கள் என்றால் அதற்குக் காரணம் ஒளிபரப்பின் நுட்பங்கள்தான்.

60 ஓவர் போட்டிகளாகவும் டெஸ்ட் போட்டிகளைப் போலவே வெள்ளை ஆடை அணிந்து ஆடும் போட்டிகளாகவும் இருந்த இந்தப் போட்டிகள் காலப் போக்கில் பெரும் மாற்றங்களுக்கு ஆளாகிவிட்டன. ஆடைகளின் நிறம், பந்தின் நிறம், ஆடும் நேரம், ஓவர்களின் எண்ணிக்கை, களத்தடுப்பு வியூகம், வைட், நோபால் விதிகள் எனப் பல அம்சங்களில் மாற்றங்கள் வந்துவிட்டன. கிரிக்கெட்டை உயிர்ப்புடன் வைத்துக்கொள்ளவும் கிரிக்கெட்டின் வீச்சைப் பரவலாக்கவும் இந்த மாற்றங்கள் உதவுகின்றன என்பதில் சந்தேகமில்லை. அதே சமயம் கிரிக்கெட்டின் ஆதாரமான சில அழகுகளையும் நளினங்களையும் இந்த மாற்றங்களும் அவற்றுக்குக் காரணமான ஒரு நாள் போட்டிகளும் குறைத்துவிட்டன என்ற விமர்சனத்திலும் நியாயம் இருக்கிறது. ரன் எடுப்பதுதான் முக்கியம் என்று வந்துவிட்டால் அழகையும் நேர்த்தியையும் ஓரளவேனும் தியாகம் செய்துதான் ஆக வேண்டும். பரவலாக்கம் பெறும் எல்லாக் கலைகளுக்கும் நேரும் நெருக்கடி இது.

ரன் எடுக்க வேண்டும் என்னும் ஆவேசம் அல்லது வெறி கிரிக்கெட்டின் மரபார்ந்த அழகியலைச் சிதைத்தாலும் பல புதுமைகளையும் அது புகுத்தியுள்ளதை மறுப்பதற்கில்லை. ஆகச் சிறந்த மட்டையாளர்களில் ஒருவரான விவியன் ரிச்சர்ட்ஸ், இரண்டாவது உலகக் கோப்பைப் போட்டியின் இறுதி ஆட்டத்தில் இன்னிங்ஸின் கடைசிப் பந்தை அடித்த விதம் அதற்கு ஒரு உதாரணம். ஆஃப் திசையில் வலுவான களத்தடுப்பு அமைத்து ஆஃப் ஸ்டெம்புக்கு வெளியே வீசப்பட்ட பந்தை ஆஃப் ஸ்டெம்ப் வரிசையை விட்டு நன்கு வெளியே வந்து லெக் திசையில் அநாயாசமாகத் தூக்கி அடித்து எல்லைக் கோட்டுக்கு வெளியே அனுப்பினார். அதுவரை அப்படி ஒரு ஷாட்டை யாரும் அடித்ததில்லை. பின்னாட்களில் பிரையன் லாரா, சச்சின் டெண்டுல்கர், கில்கிறிஸ்ட், சனத் ஜெயசூர்யா, வீரேந்திர சேவாக், ஏபி டிவிலியர்ஸ் போன்ற பலரும் பல புதுமையான ஷாட்களை உருவாக்கியிருக்கிறார்கள். இவர்கள் 50 ஓவர் அதிரடியாளர்கள் மட்டுமல்ல. டெஸ்ட் போட்டியிலும் கைதேர்ந்தவர்கள்.

ஒரு நாள் போட்டிகளும் அதன் உச்ச வடிவமான உலகக் கோப்பைப் போட்டிகளும் ஆட்டத்தின் எல்லைகளைப் பல விதங்களில் விரிவுபடுத்தி யிருக்கின்றன. கிரிக்கெட் ஆடும் நாடுகள் அதிகரித்திருக்கின்றன. பார்க்கும் மக்கள் அதிகரித்திருக்கிறார்கள். ரன் எடுக்கும் வேகம், பந்து வீச்சின் நுணுக்கம், களத்தடுப்புத் திறன்கள், ஆட்டத்தைத் திட்டமிடும் விதம் எனப் பல விதங்களிலும் இது மிகவும் சவால் மிகுந்த வடிவமாகவே இருந்துவருகிறது. 20 ஓவர் போட்டிகளின் கண்மூடித்தனமான வேகம், டெஸ்ட் போட்டிகளின் நிதானம் ஆகிய இரண்டுக்கும் நடுவில் நிற்கும் இந்த ஆட்டத்தில் அந்த இரு வடிவங்களின் தன்மைகளும் காணப்படுவதில் ஆச்சரியமில்லை. மரபார்ந்த கிரிக்கெட்டின் ரசிகர்கள் பலரும் 20 ஓவர் போட்டிகளை இளக்காரமாகப் பார்க்கிறார்கள். ஆனால், ஒரு நாள் போட்டிகளை அவர்கள் டெஸ்டுக்கு இணையாக மதிக்காவிட்டாலும் அலட்சியப்படுத்து வதில்லை. வரலாற்றின் ஆகச் சிறந்த மட்டையாளரான டான் பிராட்மேன், சச்சின் டெண்டுல்கரின் ஒரு நாள் ஆட்டத்தைப் பார்த்துத்தான் “இந்தப் பையன் ஆடுவது நான் ஆடும் விதத்தை நினைவுபடுத்துகிறது” என்று சொன்னார். பிராட்மேன் காலத்தில் ஒரு நாள் போட்டியே கிடையாது.

மட்டையாளர்களின் ஆட்டம்

விக்கெட் எடுப்பதைக் குறிக்கோளாகக் கொண்ட பந்து வீச்சாளர்கள் ரன்னைக் கட்டுப்படுத்துவதற்கு முக்கியத்துவம் கொடுக்கும் பழக்கமும் ஒரு நாள் போட்டிகளின் பங்களிப்புதான். ஆனால் பந்து வீச்சாளர்கள் சிக்கனமாக வீச வீச, ரன் குவிப்பு குறைந்து, ஆட்டங்களின் விறுவிறுப்பும் குறைவதைக் கண்ட கிரிக்கெட் நிர்வாகம் பந்து வீச்சாளர்களுக்குப் பல கட்டுப்பாடுகளை விதித்தது. தடுப்பு வியூகத்தில் கட்டுப்பாடுகள், நோ பாலுக்கான புதிய விதிகள் என்று பலவாறாக அமைந்த இந்தக் கட்டுப்பாடுகள் ஒரு நாள் போட்டிகளைக் கிட்டத்தட்ட மட்டையாளர்களின் ஆட்டமாக ஆக்கிவிட்டன. அதுவும் வேகப் பந்து வீச்சுக்குத் தோதில்லாத ஆடுகளங்களில் பந்து வீச்சாளர்கள் வெறுத்துப்போகிறார்கள். மிகச் சிறந்த பந்து வீச்சாளர்களால் மட்டுமே தங்கள் இருப்பை நிலைநாட்டிக்கொள்ள முடிகிறது. டிவிலியர்ஸ், க்லென் மேக்ஸ்வெல் போன்றவர்களின் கணிக்க முடியாத ஷாட்களால் வீச்சாளர்களுக்கான சவாலும் கூடிக்கொண்டே போகிறது.

இந்த ஆண்டு போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆடுகளங்களில் நடக்கின்றன. நல்ல பந்து வீச்சாளர்களுக்கு ஓரளவேனும் உதவும் ஆடுகளங்கள் இந்நாடுகளில் உள்ளன என்பதால் மட்டையாளர்கள் சகட்டுமேனிக்கு வாண வேடிக்கை நடத்த முடியாது. ஆனால், 20 ஓவர் போட்டிகளால் மாறிவரும் மட்டையாட்டத்தின் புதிய பரிமாணங்கள் இங்கும் பந்து வீச்சுக்குச் சவாலாகவே விளங்கும். அதே 20 ஓவர் போட்டிகளால் மேம்பட்டிருக்கும் தடுப்பாற்றலாலும் அசாத்தியமான கேட்ச் பிடிக்கும் திறன்களாலும் மட்டையாளர்கள் அதிர்ச்சிக்குள் ளாவதும் நடக்கும்.

உலகக் கோப்பையை ஒவ்வொரு அணியும் மிகவும் தீவிரமாக எடுத்துக்கொள்வதால்தான் ஜான்டி ரோட்ஸ் போன்ற களத் தடுப்பாளர்களும் ரிச்சர்ட்ஸ், மியாண்டாட், சச்சின், ஜெயசூர்யா கில்கிறிஸ்ட் போன்ற மட்டையாளர்களும் மெக்ரா, ஷேன் வார்ன், ஃப்ளின்டாஃப், ஸ்டெயின் போன்ற வீச்சாளர்களும் திறமைகளின் எல்லைகளைத் தொடர்ந்து மறுவரையறை செய்துகொண்டே இருக்கிறார்கள். பல்வேறு ஜாம்பவான்கள் இல்லாத இந்த ஆண்டின் உலகக் கோப்பை புத்தம் புதியதாய்ப் பல திறமைசாலிகளை அடையாளம் காட்டலாம். பல புதிய ஷாட்களையும் புதிய பந்து வீச்சு நுணுக்கங்களையும் அறிமுகப்படுத்தலாம். அசரவைக்கும் சில கேட்சுகள் ரசிகர்கள் மனங்களில் நீங்கா இடம் பெறலாம். ஆஃப்கானிஸ்தான் போன்ற அணிகள் பெரிய அணிகளுக்கு அதிர்ச்சி கொடுக்கலாம்!

ஆடப்படும் இடங்களையும் பல்வேறு அணிகளின் திறமைசாலிகளையும் பார்க்கும்போது கிரிக்கெட் ரசிகர்களுக்கு இந்த உலகக் கோப்பை திருப்தியான விருந்தாக இருக்கும் என்று நம்பலாம். ஆனால், இந்திய ரசிகர்களாக மட்டும் இருப்பவர்களுக்கு அது அப்படி அமையும் என்பதற்கான உத்தரவாதம் எதுவும் இல்லை. ஆஷிஷ் நந்தியின் பார்வையில் இந்திய ஆட்டமான கிரிக்கெட்டை ஒவ்வொரு அணியும் எப்படி ஆடுகிறது என்பதைப் பார்க்கும் ஆர்வத்தை வளர்த்துக்கொண்டால் இந்திய ரசிகர்களும் உலகக் கோப்பையின் ஆனந்தத்தில் திளைக்கலாம். இந்திய ரசிகர்களாகவும் அவர்களை மகிழ்ச்சியுறச் செய்வது மகேந்திர சிங் தோனியின் இளம் படையினர் கைகளில்தான் உள்ளது.

-அரவிந்தன், தொடர்புக்கு: aravindan.di@thehindutamil.co.in

பந்து வீச்சாளர்களைப் பதம் பார்க்கும் விதிகள் - எஸ்.சசிதரன்

ஆட்ட நுணுக்கங்களுக்காகக் கூர்ந்து கவனிக்கப்பட்ட டெஸ்ட் போட்டிகளிலிருந்து, பொழுதுபோக்கு நோக்கத்துடன் அறிமுகப்படுத்தப்பட்ட ஒரு நாள் போட்டிகளுக்கு என்று முக்கியத்துவம் மாறியதோ, அன்றே பந்து வீச்சாளர்களுக்கான போதாத காலம் தொடங்கிவிட்டது. முதலில் பவுன்ஸர்களுக்குக் கட்டுப்பாடு. பின்னர், எல்லைக் கோட்டின் தூரம் குறுகியது. பின்னர், பிட்ச்சில் இருந்து 90 அடி தூரத்தில் உள்ள உள்வளையத்துக்கு அப்பால், இத்தனை தடுப்பாளர்களைத்தான் நிறுத்த வேண்டும் என்று விதி உருவாக்கப்பட்டது.

இந்த உலகக் கோப்பையிலும் புதிய விதிமுறைகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆட்டத்தின் பெரும்பாலான நேரங்களில், வளையத்துக்கு வெளியே நிறுத்தப்படும் தடுப்பாளர்களின் எண்ணிக்கை ஐந்தில் இருந்து நான்காகக் குறைக்கப்பட்டுள்ளது. இது பந்து வீச்சாளர்களுக்கு, குறிப்பாக சுழல் பந்து வீச்சாளர்களுக்குப் பெரும் பாதிப்பாக அமையும்.

தடுப்பரணில் கட்டுப்பாடுகள் விதிக்கும் ‘பவர் பிளே’யிலும் மாற்றங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. முன்பு 3 ஆக இருந்த ‘பவர் பிளே’க்கள் இரண்டாக மாற்றப்பட்டுள்ளன. முதல் 10 ஓவர்களில் முதல் ‘பவர் பிளே’யின்போது இரண்டு பீல்டர்கள் மட்டுமே வளையத்துக்கு வெளியே நிறுத்தப்பட வேண்டும். இரண்டாவது ‘பவர் பிளே’, 5 ஓவர்கள் கொண்டது. இது எப்போது என்பதை பேட்டிங் செய்யும் அணி 40-வது ஓவருக்கு முன் தேர்ந்தெடுத்துக்கொள்ளலாம். அப்போது வளையத்துக்கு வெளியே மூன்று பேர் மட்டும் நிறுத்தப்பட வேண்டும்.

‘பவர் பிளே’ இல்லாதபோது. உள்வட்டத்துக்கு வெளியே முன்பு 5 தடுப்பாளர்கள்; இப்போது 4. ரவீந்திர ஜடேஜா போன்ற பகுதி நேரப் பந்து வீச்சாளர்களை நம்பியிருக்கும் இந்தியா போன்ற அணிகளுக்கு இது பெரும் பின்னடைவாக இருக்கும்.

முதல் 25 ஓவர்களுக்கு ஒரு பந்தும், அடுத்த 25 ஓவர்களுக்கு மற்றொரு புதிய பந்தும் பயன்படுத்தப்படும். இது வேகப் பந்து வீச்சாளர்களுக்குச் சாதகமாக இருக்கும். சுழல் பந்து வீச்சாளர்களின் நிலை பரிதாபம்தான். அதே சமயம் வேகப் பந்து வீச்சாளர்களுக்கு ‘ரிவர்ஸ் ஸ்விங்’ செய்ய முடியாமல் போகும். பொதுவாக, 30 ஓவர் வீசப்பட்ட பிறகுதான் பந்து ‘ரிவர்ஸ் ஸ்விங்’ ஆகத் தொடங்கும். ஆனால், 25-வது ஓவரில் புதிய பந்து எடுக்கலாம் என்பது பந்து வீச்சாளர்களுக்கு ஆறுதல் தரும்.

UGC-NET EXAM DECEMBER 2014


NEWS TODAY 28.01.2026