Monday, August 17, 2015

வாடகை வீட்டுக்கு முன்பணம் எவ்வளவு?



சொந்த வீடு வைத்திருப்பவர்களைவிட வாடகை வீட்டில் குடியிருப்பவர்கள்தான் சென்னை போன்ற நகரங்களில் அதிகம். வாடைகை வீடு என்று வரும்போது வாடகையைத் தவிர்த்து முன்பணமாக (அட்வான்ஸ்) ஒரு பெரிய தொகையைக் கொடுக்க வேண்டியிருக்கும். ஏழை எளிய மக்களை பொறுத்தவரை முன்பணம் கொடுப்பது பெரும் சவாலகவே இருக்கும். 10 மாத வாடகை அல்லது 5 மாத வாடகை என்று வீட்டு உரிமையாளர்கள் கேட்பார்கள். ஆனால், ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாகக் கொடுத்தால் போதும் என்று சமீபத்தில் சென்னை 13-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. இந்த உத்தரவின் மூலம் கூதலாகக் கொடுத்த வாடகை முன்பணத்தைத் திரும்பப் பெற முடியுமா?

வழக்கும் தீர்ப்பும்

அண்மையில் சென்னை வீட்டு வாடகைதாரருக்கும் உரிமையாளருக்குமான வழக்கு விசாரணையின் தீர்ப்பு வாடகைதாரர்களின் வயிற்றில் பாலை வார்த்தது என்று சொல்லலாம். இரண்டு மாத வாடகையைக் கொடுக்காத வாடகைதாரர் வீட்டைக் காலி செய்ய உத்தரவிட வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கில், முன் பணமாக எவ்வளவு கொடுப்பட வேண்டும் என்று நீதிமன்றம் தெளிவுப்படுத்தியுள்ளது. 1996-ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் நடந்த, வீட்டு வாடகை தொடர்பான வழக்கில், வீட்டு உரிமையாளருக்கு, வாடகைதாரர், ஒரு மாத வாடகையை முன்பணமாகக் கொடுத்தால் போதும் எனத் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளதை மேற்கோள்காட்டி சென்னை நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. நிலுவையில் உள்ள வாடகைப் பணம், ஒரு மாத முன்பணம் ஆகியவற்றைப் பிடித்துக்கொண்டு மீதிப் பணத்தை வாடகைதாரருக்கு வீட்டு உரிமையாளர் கொடுத்துவிட வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவு கூறுகிறது.

இந்த வழக்கை முன்மாதிரியாகக் கொண்டு தற்போது வீட்டில் குடியிருப்பவர்கள் ஒரு மாத வாடகையை முன் பணமாக வைத்துக்கொண்டு, எஞ்சிய தொகையைக் கேட்டால் உரிமையாளர்கள் கொடுப்பார்களா? ஒரு வேளை ஒரு மாதத்துக்கு மேல் கொடுக்கப்பட்ட வாடகைப் பணத்தை உரிமையாளர்கள் கொடுக்க மறுத்தால் எங்கு முறையிடுவது?

வழக்கறிஞரின் விளக்கம்

“வாடகை வீட்டுக்குச் செல்பவர்கள் ஒரு மாத வாடகையைக் கொடுத்தால் போதும் என்று சட்டம் சொல்கிறது. எனவே முன்பணமாக ஒரு மாத வாடகைப் பணத்துக்கு மேல் உரிமையாளர்கள் கேட்க முடியாது. ஏற்கெனவே கூடுதலாக முன்பணம் கொடுத்திருந்தால் அதை உடனே கேட்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஒரு மாத வாடகைப் பணத்தை முன் பணமாக வைத்துகொள்ளச் சொல்லிவிட்டு மீதிப் பணத்தை கழிக்கச் சொல்லிவிடலாம். வீட்டைக் காலி செய்வதற்கு முன்பாக நீங்கள் திட்டமிட்டு வாடகைப் பணத்தைக் கழித்துவிடலாம்” என்கிறார் சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் எஸ்.பி. விஸ்வநாதன்.

“பத்து மாதங்களில் வாடகைதாரர் வீட்டைக் காலிசெய்யத் தீர்மானித் திருக்கும் பட்சத்தில் அதை முன்கூட்டியே உரிமையாளர்களுக்குச் சட்டப்படி ஒரு நோட்டீஸை அனுப்பித் தெரிவித்தால் போதுமானது. அதை உரிமையாளர் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். மறுக்க முடியாது. ஆனால், இன்னொரு விஷயத்தை மறக்கக் கூடாது. வாடகைதாரர்கள் கூடுதலாக வீட்டு உரிமையாளர்களுக்கு முன்பணம் கொடுத்ததற்குச் சான்று இருக்க வேண்டும். வீட்டு வாடகை ஒப்பந்தம் மட்டுமல்லாமல், ரசீது, செக் மூலம் கூடுதல் முன்பணம் கொடுத்ததற்கு அத்தாட்சி இருந்தாலும் போதுமானதே” என மேலும் அவர் கூறினார்.

வாடகைதாரர்கள் என்ன நினைக்கிறார்கள்?

வீட்டு வாடகையாக 5 ஆயிரம் ரூபாய் கொடுத்தால், அதற்குப் பத்து மாத வாடகை முன் பணமாக 50 ஆயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. பெருந்தொகையாக இருக்கும்பட்சத்தில் பலரும் கடன் வாங்கியோ நகைகளை அடமானம் வைத்தோ அந்தப் பணத்தை உரிமையாளர்களுக்குத் தர வேண்டியிருக்கிறது. இது பற்றி வீட்டு வாடகைதாரர்கள் என்ன நினைக்கிறார்கள்?

“ஒரு மாத வாடகைப் பணத்தை முன்பணமாகக் கொடுத்தால் போதும் என்பது வாடகை வீட்டில் குடியிருக்கும் எங்களைப் போன்றவர்களுக்கு ரொம்ப இனிப்பான செய்திதான். ஆனால், என்னதான் சட்டங்கள் இருந்தாலும் அதைப் பின்பற்ற வேண்டுமே. முதலில் கூடுதல் முன்பணத்தைக் கழித்துகொள்வதாக உரிமையாளரிடம் சொன்னால், உடனே வீட்டைக் காலி செய்துவிடுங்கள் என்றுதான் பதில் வரும். இதுதான் யதார்த்தம். குழந்தைகளுடன் மூட்டை முடிச்சுகளைத் தூக்கிக்கொண்டு உடனடியாகப் புதிய வீட்டுக்குக் குடியேறுவது நடைமுறையில் கஷ்டம்.

இதற்காக உரிமையாளருக்கு எதிராக வழக்குப் போடுவதையெல்லாம் வீட்டில் யாரும் விரும்பவும் மாட்டார்கள். எனவே வீட்டு உரிமையாளர்கள் சட்டப்படி நடந்துகொண்டால் மட்டுமே ஒரு மாத வாடகையை முன் பணமாகக் கொடுப்பதும், கூடுதலாகக் கொடுத்தப் பணத்தைக் கழிப்பதும் சாத்தியமாகும்” என்கிறார் திருச்சியைச் சேர்ந்த ராஜகோபால்.

ஆனால், வீட்டில் குடியிருப்பவர்கள் வீட்டில் ஏதேனும் சேதம் ஏற்படுத்தினாலோ, பழுது ஏற்படுத்தினாலோ அந்தப் பணத்தை அவர்களிடம்தான் வசூலிக்க வேண்டியிருக்கும். கூடுதல் முன் பணம் கையில் இருக்கும்போது சேதத்திற்குரிய பணத்தை எடுக்க வழி உள்ளது. அப்படிப் பணம் இல்லாதபோது வாடகைதாரர்களிடம் பணத்தைக் கேட்டுப் போராட வேண்டியிருக்குமே என்பது வீட்டு உரிமையாளர்களின் எதிர்க் கேள்வியாக உள்ளது.

சொல்லத் தோணுது 47 - விடுதலை எதற்காக? தங்கர் பச்சான்



இந்த ஆண்டின் சுதந்திர தினத்தை முழுமனதோடு அனுபவிக்க முடி யாததுதான் இந்திய மக்கள் பெரும் பாலானோரின் பெரும் கவலை. சனி அல்லது ஞாயிற்றுக்கிழமையில் சுதந்திர தினம் அமையாமல், திங்கள்கிழமை அமைந்திருந்தால் சுதந்திர தினத்தை முழுமையாக அனுபவித்திருப்பார்களோ என்னவோ?

சுதந்திரம் என்றால் என்ன? இந்த சுதந்திரம் எப்படிக் கிடைத்தது என்பதை எல்லாம் அறியாத ஒரு தலைமுறை உருவாகிக் கொண்டிருக்கிறது. சுதந்திர தினம் ஒரு சடங்காகவே கடைபிடிக்கப் பட்டு, மற்ற விடுமுறை நாட்களைப் போல் இதுவும் ஒரு விடுமுறை நாளாக மட்டும் மாற்றப்பட்டுவிட்டது.

சுதந்திர தினத்தைக் குறிவைத்து எப்படியெல்லாம் பணம் பண்ணலாம் என்பதை தொலைக்காட்சிகள் நன்றாக புரிந்து வைத்திருக்கின்றன. சுதந்திரப் போராட்ட வரலாறு தொடர்பான நிகழ்ச்சிகளை, அதில் பங்கெடுத்த தியாகி களின் நேர்காணல்களை வெளி யிடுவது பற்றிய அக்கறை தொலைக் காட்சிகளுக்கு இல்லை. சுதந்திரப் போராட்டம் தொடர்பான படங்களின் உரிமை அவர்களிடம் இருந்தாலும்கூட அதனை அவர்கள் ஒளிபரப்பத் தயாரில்லை. நாள் முழுக்க பொழுது போக்கு என்கிற பெயரில் காண்பிக்கப் படுகிற நிகழ்ச்சிகளை வைத்தே ஊடகத்தினிரிடமும், நம் மக்களிடமும் உள்ள சுதந்திரம் குறித்த உணர்வினை மதிப்பிட்டுவிடலாம்.

நெடுங்காலத் தொடர் போராட்டத் துக்குப் பின்புதான் நமக்கு ஆங்கிலேயர் களிடம் இருந்து விடுதலை கிடைத்தது. எதற்காக அவர்களிடம் இருந்து விடுதலை பெறப் போராடினோம்? அந்த விடுதலையின் மூலம் என்னென்ன பலன்களை அடைந்திருக்கிறோம்? உண் மையிலேயே நமக்கு விடுதலையைப் பெற்றுத் தந்த நம் முன்னோர்களின் கனவு நனவாகி இருக்கிறதா? சுதந்திரம் என்பது ஒவ்வொரு குடிமகனுக்கு மானது. அப்படிப்பட்ட சுதந்திரம் நாம் அனைவருக்கும் கிடைத்திருக்கிறதா?

ஆங்கிலேயரிடம் இருந்து சுதந்திரத்தைப் பெற்றதற்காக மட்டுமே ஒவ்வோர் ஆண்டும் இதேபோன்று சுதந்திர தினத்தைக் கொண்டாடப் போகிறோமா? ‘நாம் நினைத்த இந்தியா அமைந்துவிட்டது; ஒவ்வோர் இந்தியனும் வெள்ளைக்காரனிடம் இருந்து பெற்ற சுதந்திரத்தை நினைத்து பெருமைப்படுவதும் கொண்டாடுவதும் தேவைதான்’ என நினைக்கிறோமா?

உண்மையான விடுதலையை இம்மக்களுக்குக் கிடைக்காமல் செய்து வருபவர்கள், அவ்வாறு நடக்காமல் பார்த்துக்கொள்ளும் சிலரின் கையிலேயே நமது தேசியக்கொடி சிக்கிக் கொண்டிருப்பதைப் பற்றிப் பேசவே நாம் தயங்குகிறோம். இந்நாட்டுக்கும், இம்மக்களுக்கும், இம்மண்ணுக்கும், இம்மொழிகளுக்கும் துரோகம் இழைப்பவர்களாலும், அழிப்பவர் களாலும்தான் பெரும்பாலும் நம் தேசியக்கொடி ஏற்றப்படுகிறது. வெள் ளைக்காரனிடம் இருந்து விடுதலையைப் பெற்று, கொள்ளைக்காரர்களிடம் நாட்டைக் கொடுத்துவிட்டு, சுதந்திர தினத்தைக் கொண்டாடிக் கொண் டிருக்கிறோம்.

இன்று காந்தியடிகள் உயிரோடு மீண்டெழுந்து வந்து இந்த நாட்டைச் சுற்றிப் பார்த்தால் என்ன கூறுவார்? நாம் கொண்டாடும் இந்த சுதந்திர தினத்தைப் பார்த்து என்ன சொல்வார்? நம் நாட்டை ஆண்டவர்களிடமும், இன்று ஆள்பவர்களிடமும் என்ன கேட்பார்? அவர்கள் அவருக்கு என்ன பதிலைச் சொல்ல முடியும்?

வெள்ளைக்காரனிடம் இருந்து நம் நாட்டை மீட்டெடுத்தபோது அந்த மகிழ்ச்சி இருந்தது. அப்போது ஒவ்வொரு குடிமகனுக்கும் தன் நாடு விடுதலைப் பெற்ற நாளைக் கொண்டாடுவதைத் தவிர முதன்மையான மகிழ்ச்சி வேறென்ன இருக்க முடியும்?

கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை, தீண்டாமை, சாதிக் கலவரங்கள், பெண்ணடிமை போன்ற வற்றில் எது இங்கே குறைவு? மதுவை எதிர்த்து காந்தியடிகள் நாடு முழுக்கப் பயணம் செய்து போராடினார். இன்று ஆட்சி செய்பவர்களே மக்களிடத்தில் மதுவை ஊற்றிக் கொடுப்பதும், அதைப் பற்றிக் கண்டுகொள்ளாமல் சுதந்திர தினத்தைக் கொண்டாடுவதெல்லாம் எப்படி உண்மையான விடுதலையாக இருக்க முடியும்?

ஊழலிலும், லஞ்சத்திலும் திளைத் திருக்கும் நாட்டில், சுதந்திர தினக் கொண்டாட்டம் என்பது சிறிதும் குற்றவுணர்வின்றி ஆண்டுதோறும் அரங்கேறிக் கொண்டேயிருக்கிறது.

இத்தனை ஆண்டுகள் கடந்தும் நாட்டின் மக்கள் தொகையில் பாதி பேருக்கு சொந்த வீடு கிடைக்க வழி யில்லை. கழிப்பிட வசதி கூட பெறாத மக்கள் வாழும் நாடுகளின் வரிசையில் உலகிலேயே நம்நாட்டுக்குத்தான் முதலிடம். உணவுப் பண்டங்களை வீண டிப்பதிலும் ஒருவேளை உணவுகூட கிடைக்காமல், அதற்கு உத்திரவாதமும் இல்லாமல் அலைவதும் நம்நாட்டில் தான்.

சொந்த நாட்டு மக்களுக்கான அடிப்படைத் தேவையைக் கூட 68 ஆண்டுகள் கடந்தும் செய்து தர முடியாத அவலத்துடன்தான் மக்கள் ஆட்சியின் மூலமாக உருவாக்கப்பட்ட அரசாங்கங்கள் தொடர்ந்து சுதந்திரத் தைப் பெருமையுடன் கொண்டாடிக் கொண்டு வருகின்றன.

நமக்கு விடுதலை கிடைத்த பின் நமது நாட்டின் உயிரான கிராமங்கள் அழியத் தொடங்கின. உள்ளூர் உற்பத்தி அழிந்து, சிறு தொழில்கள் அழிக்கப்பட்டு காலங்காலமாக செய்து வந்த தொழில்களை விட்டுவிட்டு, தன் மண்ணை விட்டுவிட்டு நகரத்துக்கு இடம் பெயர்ந்தோம்.

வீணாகிற நீரினை கடலுக்கு அனுப்பினாலும் அனுப்புவோம்; அதைப் பயன்படுத்த உங்களுக்கு தர மாட்டோம் என ஒவ்வொரு மாநிலமும் இன்னொரு மாநிலத்தின் மீது பகைமையை வளர்த்துக்கொண்டு வருகிறது. தண்ணீர் தேவை தீர்ந்தாலே நாட்டின் பெரும்பான்மையான சிக்கல்களிடம் இருந்து விடுதலை கிடைத்துவிடும். உண்மையான முன்னேற்றம் உருவாகித் தன்னிறைவை அடைந்துவிடலாம். அதன் பின்தான் வல்லரசு கனவெல்லாம் சாத்தியமாகும். ஆனால், அதற்கான எந்தவித முன்னேற்பாடும் இங்கு நடக்கிற மாதிரி தெரியவில்லை.

70 ஆயிரம் ராணுவத்தினரைப் பாது காப்புக்கு வைத்துக்கொண்டு சுதந்திர தினம் கொண்டாடுவதையே பெருமை யாக நினைக்கிறோம். சுதந்திரம் எதை கொடுத்ததோ, இல்லையோ நாட்டின் வளத்தை சுரண்டி, மக்களை ஏமாற்றி, சொத்துக்களை கொள்ளையடிப்பதற்கு அரசியல் கட்சிகளுக்கு அரசியல் என்னும் தொழிலைக் கொடுத்திருக்கிறது.

சேர்த்ததை,கொள்ளையடித்ததை எங்கே வைப்பது எனத் தெரியாமல் தான் வெளிநாடுகளில் பதுக்கி வைக்கி றார்கள். வாக்கு ஒன்று கையில் இருப்பதனாலேயே நம்நாட்டில் ஏழை எளியவர்களை உயிரோடு வைத் திருக்கிறார்கள். அது ஒன்றுதான் இந்த எளிய மக்களுக்கு இங்கேயிருக்கும் மதிப்பு. ஆட்சியை உருவாக்குபவர்கள் ஏழைகளாகவும், அதனை முழுமை யாக அனுபவிப்பவர்கள் பணக்காரர் களாகவும் இருக்கும் வரை இங்கே எந்த முன்னேற்றமும் உருவாகப் போவ தில்லை.

இனி எந்த ஒரு ஏழையும் தேர்தலில் போட்டியிட்டு மக்களாட்சியின் அதி காரத்தில் பங்கெடுக்க முடியாது. பணமுள்ளவர்கள் மூலமாகவே தேர்தல் போட்டிகள் நடக்கும். மீண்டும் மீண்டும் புதிய புதிய ஆட்சிகள் உருவாகும். எந்நாளும் எதுவும் இல்லாதவனுக்கு இனி எதுவும் கிடைக்கப் போவதில்லை.

- இன்னும் சொல்லத்தோணுது
எண்ணங்களைப் பகிர்ந்து கொள்ள: thankartamil@gmail.com

நெஞ்சில் வலி ஏற்படுவது ஏன்?



நெஞ்சில் வலி வந்தால், அது ‘வாய்வு வலி’யாக இருக்கும் என நினைத்து, தகுந்த சிகிச்சை பெறாமல் அலட்சியமாக இருப்பவர்கள் இருக்கிறார்கள். அதேவேளையில், நெஞ்சு லேசாக வலித்தாலே அது மாரடைப்பாக இருக்குமோ என்று பயந்து மருத்துவமனைக்கு ஓடுபவர்களும் இருக்கிறார்கள்.

சாதாரண தசை வலியிலிருந்து இதய நோய்வரை பல நோய்களுக்கு நெஞ்சு வலி ஒரு முக்கிய அறிகுறியாக இருப்பதால், இதை அலட்சியப்படுத்த முடியாது. அதேவேளையில் எல்லா நெஞ்சுவலியும் மாரடைப்பாகத்தான் இருக்கும் என்று எண்ணி, தேவையில்லாமல் பயப்பட வேண்டிய அவசியமும் இல்லை. நடைமுறையில் பெரும்பாலான நெஞ்சு வலிக்கு இதய நோய்கள் காரணமாக இருக்காது; வேறு காரணங்கள்தான் இருக்கும்.

காரணம் என்ன?

நெஞ்சு வலிக்குப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் இரண்டு காரணங்கள் மிக முக்கியமானவை. ஒன்று, ‘ஆஞ்சைனா’ (Angina pectoris) எனும் இதய வலி. மற்றொன்று, மாரடைப்பு. இவற்றை எந்த வகையிலும் அலட்சியப்படுத்தக் கூடாது. அப்படி அலட்சியப்படுத்தினால் உயிருக்கே ஆபத்து ஏற்படலாம்.

ஆஞ்சைனா / மாரடைப்பால் ஏற்படுகிற நெஞ்சு வலியானது இதயத் தசையில் உருவாகி நெஞ்சில் உணரப்படுகிறது. இதயத் திசுக்களுக்கு ரத்தத்தைக் கொண்டு செல்லும் தமனிக் குழாய்களில் கொழுப்புப் படிந்து, அதன் விட்டத்தைக் குறுகச் செய்வதுதான் இந்த வலிக்கு அடிப்படைக் காரணம். முதுமை காரணமாக தமனிக் குழாய் தடித்துப் போனாலும், இந்த நிலைமை ஏற்படுவதுண்டு.

இதயத் தமனிக் குழாய் உள்அளவில் சுருங்கும்போது, இதயத் திசுக்களுக்குச் செல்லக்கூடிய ரத்தத்தின் அளவு குறைகிறது. நாம் ஓய்வாக இருக்கும்போது இதயத் திசுக்களுக்குத் தேவையான ரத்தம் கிடைத்துவிடும். ஆனால், உழைப்பு அதிகப்படும்போது இதயத் தசைகளின் தேவையும் அதிகரிக்கிறது. குறுகிவிட்ட இதயத் தமனியால் இந்தத் தேவையை ஈடுசெய்ய இயலாது. இதனால் இதயத் திசுக்களுக்குத் தேவையான ஆக்சிஜன் மற்றும் உணவு கிடைக்காமல் அழியத் தொடங்கும். அந்த நேரத்தில் இதயத் தசைகள் எழுப்புகிற கூக்குரலே நெஞ்சு வலியாக உணரப்படுகிறது.

இதய வலி - அறிகுறிகள்

மாடிப் படிகளில் ஏறும்போதும், வேகமாக நடக்கும்போதும் நடுநெஞ்சில் பாரம் வைத்து அழுத்துவதுபோல் வலிக்கும். நடப்பதை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்துக்கொண்டால் அல்லது கிளிசரில் டிரைநைட்ரேட் (Glyceryl trinitrate) மாத்திரையை நாக்கின் அடியில் வைத்தால் நெஞ்சு வலி குறைந்துவிடும்.

மாரடைப்பு - அறிகுறிகள்

சிலருக்கு திடீரென்று நெஞ்சு முழுவதும் கயிறு கட்டி அழுத்துவதுபோல் கடுமையாக வலிக்கும். இந்த வலி தாடை, கழுத்து, இடது புஜம், இடது கை விரல்களுக்குப் பரவும். உடல் அதிகமாக வியர்க்கும். ஓய்வெடுத்தாலும் வலி குறையாது. நேரம் ஆக ஆக வலி கூடிக்கொண்டே போகும். மூச்சுத் திணறல் உண்டாகும். மயக்கம் வரும். இதுதான் மாரடைப்பு (Myocardial infarction).

தூண்டும் சூழல்கள்

இந்த வலியை முதன்முறையாகத் தோற்றுவிக்கவும் அல்லது வலியை அதிகப்படுத்தவும் சில சூழல்கள் காரணமாகின்றன. அவை: பரம்பரை, அதிக உடலுழைப்பு, கடுமையான அலைச்சல், அதிகமான உடற்பயிற்சி, நெடுநாள் உறக்கமின்மை, அளவுக்கு மீறிய கொழுப்பு உணவு, குளிர்ச்சி மிகுந்த தட்பவெப்பநிலையால் திடீரெனத் தாக்கப்படுவது, உயரமான இடங்களுக்குச் செல்வது ((எ-டு ) மாடிப்படி ஏறுதல், மலை ஏறுவது; மன அழுத்தம்), அதிகமாக உணர்ச்சி வசப்படுவது (( எ-டு ) கோபம், கவலை, பயம், பீதி, விரக்தி, சண்டை).

யாருக்கு அதிக வாய்ப்பு?

புகைபிடிப்போர், மது அருந்துவோர், உயர் ரத்த அழுத்தம், ரத்த மிகைக் கொழுப்பு, நீரிழிவு நோய், இதயத் தசை அழற்சி போன்ற நோய்களைக் கொண்டவர்கள், உடற்பயிற்சி இல்லாதவர்கள், உடலுழைப்பே இல்லாதவர்கள், ஓய்வின்றிக் கடுமையாக உழைப்பவர்கள், பரபரப்பான வாழ்க்கை முறையைக் கையாள்கிறவர்கள், முதியோர் ஆகியோருக்கு இந்த வகையான நெஞ்சு வலி ஏற்படுவதற்கு அதிக வாய்ப்புண்டு.

நுரையீரல் நோய்கள்

‘நிமோனியா’ எனும் நுரையீரல் அழற்சி நோய், நுரையீரல் உறைக் காற்று நோய் (Pneumo thorax), நுரையீரல் உறை அழற்சி நோய் (Pleurisy), கடுமையான காச நோய் ஆகியவற்றிலும் நெஞ்சு வலி வரும். அப்போது துணை அறிகுறிகளாக இருமல் இருக்கும். இருமும்போது நெஞ்சு வலி அதிகரிக்கும். இழுத்து மூச்சு விட்டால்கூட வலி அதிகமாகும். காய்ச்சல், சளி ஏற்படும்; பசி குறையும். இந்த வலி பொதுவாக இளம் வயதினருக்கும் நடுவயதினருக்கும் வருகிறது.

நுரையீரல் புற்றுநோய் உள்ளவர்களுக்கும் நெஞ்சில் வலி வரலாம். அப்போது சளியில் ரத்தம் கலந்து வரும். இது பெரும்பாலும் 50 வயதுக்குப் பிறகு வரும். மேற்சொன்ன அறிகுறிகள் மூலம் மாரடைப்பிலிருந்து மற்ற பிரச்சினைகளைப் பிரித்துணரலாம்.

நுரையீரல் ரத்த உறைவுக் கட்டி (Pulmonary embolism) காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம். இது பெரும்பாலும் ரத்தக் குழாய் நோயுள்ளவர்கள், சமீபத்தில் அறுவை சிகிச்சை செய்துகொண்டவர்கள், நீண்டகாலமாகப் படுத்த படுக்கையாக இருப்பவர்கள், நெடுங்காலம் கருத்தடை மாத்திரைகளைச் சாப்பிடும் பெண்கள், சமீபத்தில் பிரசவித்த பெண்கள் ஆகியோருக்கு ஏற்படுவதுண்டு.

தசை / எலும்பு வலிகள்

மார்புப் பகுதியில் உள்ள தசை, நரம்பு, எலும்பு மற்றும் எலும்பிடைத் தசைகளில் உண்டாகும் நோய்கள் காரணமாகவும் நெஞ்சில் வலி ஏற்படலாம். நெஞ்சில் எந்தப் பகுதியில் வேண்டுமானாலும் இந்த வலி வரலாம். வலியுள்ள பகுதியைத் தொட்டு அழுத்தினால் வலி அதிகரிக்கும். உடல் அசைவின்போதும் மூச்சுவிடும்போதும் வலி அதிகரிக்கும். மார்பில் அடிபடுவது, தசைப் பிசகு, மார்பு / விலா எலும்பு முறிவு போன்றவை இவ்வகை நெஞ்சு வலியை உண்டாக்கும்.

உணவுப்பாதை புண்கள்

தொண்டையில் தொடங்கி இரைப்பைவரை உணவு செல்ல உதவும் உணவுக் குழாய் இரைப்பை, முன் சிறுகுடல் ஆகியவற்றில் புண்கள் ஏற்படும்போது நெஞ்சில் வலிக்கும். பொதுவாக, இந்த நோயாளியிடம் உணவுக்கும் நெஞ்சு வலிக்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதை அறிய முடியும். இந்த நோயின் முதல் அறிகுறி நெஞ்சுப் பகுதியில் எரிச்சல் ஏற்படுவதுதான்.

காரணம் என்ன?

நெஞ்செரிச்சலுக்கு அடிப்படைக் காரணம், இரைப்பையில் இருக்கும் அமிலம் தன் எல்லைக் கோட்டைக் கடந்து, உணவுக் குழாய்க்குள் தேவையில்லாமல் நுழைவதுதான். இந்த அமில அலைகள் அடிக்கடி மேலேறி வரும்போது, அங்குள்ள திசுப்படலத்தை அரித்துப் புண்ணாக்கிவிடும். இதனால், நெஞ்செரிச்சல் ஏற்படும்.

மிகவும் இனிப்பான, காரமான, கொழுப்பு மிகுந்த உணவை அடிக்கடி சாப்பிட்டால் உணவுக் குழாயின் கீழ்முனைக் கதவு பழைய சல்லடை வலை போல ‘தொள தொள' வென்று தொங்கிவிடும். விளைவு, இரைப்பையில் இருக்கும் அமிலம் மேல்நோக்கி வரும்போது, அதைத் தடுக்க முடியாமல் உணவுக் குழாய்க்குள் அனுமதித்துவிடும். இந்த நிலைமையில் உள்ள நெஞ்செரிச்சலுக்குத் தகுந்த சிகிச்சை பெறத் தவறினால், இரைப்பையில் புண் உண்டாகும்.

அப்போது அடிக்கடி புளித்த ஏப்பம் உண்டாகும். பசி இல்லாமல் இருக்கும். குறைந்த அளவு உணவு சாப்பிட்ட உடனேயே வயிறு நிரம்பிவிட்ட உணர்வு உண்டாகும். பிறகு, வயிற்றில் வலி தோன்றும். குறிப்பாக, இரைப்பை காலியாக உள்ள நள்ளிரவு நேரத்திலும், விடியற்காலையிலும் மேற்புற வயிற்றில் அடிக்கடி வலி வரும். புண் உள்ள இடத்தில் அமிலம் படுவதால், இந்த வலி ஏற்படுகிறது. அதுபோல் உணவு சாப்பிட்ட பின்பும் இதே வலி உண்டாகும். புண்ணின் மீது உணவு படுவதால் இப்படி வலிக்கிறது. பொதுவாக, சாப்பிட்டதும் வயிற்று வலி அதிகமானால், அது கேஸ்ட்ரிக் அல்சர். சாப்பிட்டதும் வலி குறைந்தால், அது டியோடினல் அல்சர். இவற்றைத் தவிர, குமட்டலும் வாந்தியும் வரும்.

உளவியல் காரணங்கள்

குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

பிற நோய்கள்

மகாதமனிக் குழாய் வீக்கம், இதய வெளியுறை அழற்சி நோய், அக்கி அம்மை, அஜீரணம், கணைய நோய், பித்தப்பை நோய், கடுமையான ரத்தசோகை, தைராய்டு பிரச்சினைகள் காரணமாகவும் நெஞ்சில் வலி வரலாம்.

பரிசோதனைகள் என்ன?

வழக்கமான ரத்தப் பரிசோதனை களுடன் ரத்த அழுத்தம், இதயத் துடிப்பு ஆகியவை பரிசோதிக்கப்படும். இவை தவிர, மார்பு எக்ஸ்-ரே, இ.சி.ஜி., எக்கோ, சி.டி. ஸ்கேன், டிரெட்மில், எண்டாஸ்கோபி போன்ற பரிசோதனைகளும் தேவைப்படும். இவற்றின் மூல காரணம் அறிந்து, சிகிச்சை பெற்றுவிட்டால் நெஞ்சு வலி விடைபெற்றுக்கொள்ளும்.

இதய வலிக்கு முதலுதவி

இதய வலி அல்லது மாரடைப்புக் கான அறிகுறிகள் தெரியவரும்போது உடனடியாக ஆஸ்பிரின் 325 மி.கி., அட்டார்வாஸ்டாடின் 80 மி.கி., குளோபிடோகிரில் 150 மி.கி. ஆகியவற்றைச் சாப்பிட்டால், தமனி ரத்தக் குழாயில் ரத்தம் உறைவது தடுக்கப்படும். இதன் பலனாக மாரடைப்பின் தீவிரம் குறைந்து நெஞ்சில் வலி குறையும். இந்த முதலுதவியைத் தொடர்ந்து எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெறுகிறோமோ அந்த அளவுக்கு உயிருக்கு ஆபத்து வருவதைத் தடுக்க முடியும்.

கட்டுரையாளர், பொதுநல மருத்துவர்.

தொடர்புக்கு: gganesan95@gmail.com

தடுப்புமுறைகள்

l புகைபிடிக்கக் கூடாது. மது அருந்தக் கூடாது. பான்மசாலாவைப் பயன்படுத்தக் கூடாது.

l சரியான உடல் எடையைப் பராமரிக்க வேண்டும்.

l தினமும் முறையாக உடற்பயிற்சி / யோகாசனம் / தியானம் செய்ய வேண்டும்.

l உயர் ரத்த அழுத்தம், நீரிழிவு நோய், கொழுப்புக் கோளாறு போன்றவற்றுக்குச் சரியான சிகிச்சை எடுத்து, அவற்றைக் கட்டுப்பாட்டில் வைத்துக்கொள்ள வேண்டும்.

l கொழுப்பு உணவைக் குறைத்துக்கொள்ள வேண்டும்.

l மாசடைந்த சுற்றுச்சூழலைத் தவிருங்கள். அசுத்தமான காற்றுதான் பல நுரையீரல் நோய்களுக்குக் காரணம்.

l அசுத்தமான உணவைச் சாப்பிடாதீர்கள்.

l இரைப்பைப் புண் உள்ளவர்கள், சமச்சீரான உணவை அடிக்கடி கொஞ்சம் கொஞ்சமாகச் சாப்பிடுவது நல்லது. மசாலா மிகுந்த, காரம் நிறைந்த, எண்ணெயில் பொரித்த உணவை எவ்வளவு குறைக்க முடியுமோ, அவ்வளவு குறைத்துச் சாப்பிட வேண்டும். பட்டினி கிடக்கக் கூடாது; விரதம் வேண்டாம்; நேரத்தோடு சாப்பிடும் பழக்கம் முக்கியம்.

l வேகவைத்த இந்தியப் பாரம்பரிய உணவை அதிகமாக உட்கொள்ளுங்கள். துரித உணவு, பதப்படுத்தப்பட்ட உணவு, அதிக இனிப்புப் பண்டங்கள், புளித்த உணவு ஆகியவற்றை ஓரங்கட்டுங்கள்.

l நெஞ்செரிச்சல் உள்ளவர்கள் சாப்பிட்டதும் படுக்கக் கூடாது. இரண்டு மணி நேரம் கழித்துப் படுக்கப் போவது நல்லது. படுக்கையின் தலைப் பகுதியை அரை அடியிலிருந்து ஒரு அடிவரை உயர்த்திக்கொள்வது நல்லது,

l மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் வலி நிவாரணி மாத்திரைகள், ஆஸ்துமா மற்றும் அலர்ஜி நோய்களுக்குத் தரப்படுகிற ஸ்டீராய்டு மாத்திரைகள், மூட்டுவலி மாத்திரைகள் போன்றவற்றைத் தேவையில்லாமல் அளவுக்கு அதிகமாக சாப்பிடக் கூடாது.

l மன அழுத்தம் தவிருங்கள்.

l தேவையான அளவுக்கு ஓய்வும் உறக்கமும் அவசியம்.

l நெஞ்சில் அடிபடாமல் பார்த்துக்கொள்ளுங்கள்.

குடும்பத்தில் சண்டை, இழப்பு, பொருளாதார நெருக்கடி, வேலைப் பளு, வேலையின்மை, தனிமை, வாழ்க்கையில் தோல்வி, தேர்வு பயம், கோபம் போன்ற காரணங்களால் ஏற்படுகிற மனச்சோர்வு, மன அழுத்தம், மனப் பதற்றம், பரபரப்பான வாழ்க்கைமுறை ஆகியவற்றாலும் நெஞ்சு வலி ஏற்படுகிறது.

பூரண மது விலக்கு என்பது கானல்நீர் கனவு!

தமிழ்நாட்டில் இப்போது பல்வேறு அரசியல் கட்சிகள் டாஸ்மாக் கடைகளின் முன் ஆர்ப்பாட்டம் செய்து, அதன் மூலம் மது விலக்கு கொள்கையைத் திரும்பவும் அமல்படுத்த முடியும் என்று நினைக்கிறார்கள். அது அவ்வளவு சுலபமல்ல.
மூதறிஞர் ராஜாஜி 1937-இல் அன்றைய சென்னை மாகாணத்தின் பிரதமராக இருந்தபோது சேலம் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் முதன்முதலாக மது விலக்கை அமல்படுத்த சட்டத் திருத்தத்தைக் கொண்டு வந்தார். அதன்மூலம் அரசுக்கு ஏற்பட்ட வருவாய் இழப்பை சரி செய்ய விற்பனை வரியைக் கொண்டு வந்தார். விற்பனை வரி இன்றளவிலும் அமல்படுத்தப்படுகிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்து ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் முதல்வரானதும், அன்றைய மெட்ராஸ் ராஜதானி முழுமைக்குமாக அதை விரிவுபடுத்தி நடைமுறைப்படுத்தினார். 1971 வரை இந்தக் கொள்கை அமலில் இருந்தது. அதன் பிறகு, தமிழகத்தை ஆண்ட அரசியல் கட்சியினர் அவ்வப்போது இந்தக் கொள்கையை மாற்றி அதற்கான காரணங்களையும் சொல்லி வந்தனர்.
குறிப்பாக, மது விலக்கு கொள்கையைத் தளர்த்த வேண்டாம் என்று மூதறிஞர் ராஜாஜி மன்றாடியும், மூடிய மது விற்பனை கடைகளை 1971-இல் அன்றைய அரசு திறந்தது. அதன்மூலம் அரசுக்குக் கிடைத்த பணம்தான் முக்கியமாகக் கருதப்பட்டது. அந்தப் பணத்தை ராஜாஜி "கறை படிந்த பணம்' என்று கூறினார். அதே அரசு சில வருடங்களில் திரும்பவும் மது விலக்குக் கொள்கையை அமல்படுத்த சட்டத் திருத்தம் கொண்டு வந்தது என்பது வரலாறு.
பல்வேறு நிறுவனங்கள் செய்த ஆய்வின் முடிவுகள் பூரண மது விலக்குக்கு எதிராக இருக்கின்றன. உலகத்தில் உள்ள எல்லா நாடுகளிலும் பூரண மது விலக்கு தோல்வியில்தான் முடிந்திருக்கிறது. உதாரணமாக, அமெரிக்காவில் மது விலக்கு 1920 முதல் 1933 வரை 13 ஆண்டுகள் அமலில் இருந்தது.
அதன் விளைவாக அமெரிக்காவில் ஊழல் மலிந்து, திருட்டுச் சந்தையில் மது விற்கும் மாஃபியா கூட்டங்கள் உருவானதால் குற்றங்கள் பெருகி, உரிமம் இல்லாத துப்பாக்கிகள் எங்கும் கிடைக்கும் நிலை ஏற்பட்டது. தாதாக்களின் சாம்ராஜ்யம் கொடிகட்டிப் பறந்தது.
பின்னாளில் அமெரிக்க அதிபரான ஜான் கென்னடியின் தந்தையான ஜோசப் கென்னடி கோடீஸ்வரரானது, திருட்டுச் சந்தையில் மது விற்றதால்தான் என்பது அதிர்ச்சி தரும் உண்மை.
அமெரிக்காவில் இந்தக் காலகட்டத்தில் உருவான பெரிய தாதா "அல் கபோன்' தனி ராஜ்யமே நடத்திக் கொண்டிருந்தார். அவர் இறந்தபோது அவரது சடலத்துக்கு மரியாதை செலுத்தும் வகையில் சவ ஊர்வலத்தில் உயர்நிலை போலீஸ் அதிகாரிகள், நீதிபதிகள் உள்ளிட்டோருடன் அமெரிக்காவில் மேல்நிலைகளில் உள்ள தொழிலதிபர்களும் கலந்து கொண்டார்கள் என்று சொல்லப்படுகிறது.
இந்தச் சம்பவம் அந்த "தாதா' எந்த அளவுக்கு செல்வாக்குடன் வாழ்ந்தார். அந்த அதிகாரிகளும், நீதிபதிகளும் அந்த தாதாவுடன் எவ்வளவு நெருக்கமாக இருந்தார்கள் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.
இந்தியாவைப் பொருத்தவரையில், மது விலக்குக் கொள்கையைப் பரிசீலித்து அதுபற்றிய பரிந்துரைகளை முன்வைக்கப் பல ஆண்டுகளுக்கு முன்பு மத்திய அரசு தேக்சந்த் தலைமையில் ஒரு குழுவை நியமித்தது. அந்தக் குழு தன்னுடைய அறிக்கையில் பூரண மது விலக்கை அமல்படுத்த வேண்டும் என்று பரிந்துரை செய்தது. ஆனால், அதேசமயத்தில் பூரண மது விலக்கின் விளைவாக ஏற்படும் தீமைகளையும் சுட்டிக் காட்டியது. பெரும் அளவில் கள்ளச் சாராயம் காய்ச்சுதல், அதன் தொடர்பாக ஏற்படும் லஞ்ச ஊழல்கள் ஆகியவற்றையும் கோடிட்டு காட்டியுள்ளது.
இந்தியாவில் குஜராத் மாநிலத்தில்தான் மது அருந்துபவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவு. ஆயினும், அங்கேயும் கள்ளச் சாராயம் காய்ச்சும் தொழில் நடக்கத்தான் செய்கிறது என்றும் அந்தக் குழு சுட்டிக்காட்டியுள்ளது.
தமிழ்நாட்டைப் பொருத்தவரையில், இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வில் தமிழ்நாட்டில் 40 விழுக்காடு கிராம இளைஞர்கள் மதுப் பழக்கத்துக்கு அடிமையாக உள்ளனர் என்று தெரிவிக்கிறது. இதனால், அவர்களின் வருமானம் பெருமளவில் பாதிக்கப்பட்டு அதன் விளைவாகப் பல குடும்பங்கள் சீரழிந்து விட்டன என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
இதற்கெல்லாம் தீர்வு, பூரண மது விலக்கா என்பதுதான் கேள்வி? கிட்டத்தட்ட 35 ஆண்டுகள் இந்தியக் காவல் துறைப் பணியாற்றிய அனுபவம், குறிப்பாக மது விலக்கை அமல்படுத்தும் பிரிவில் பணியாற்றிய அனுபவம், இன்னும் குறிப்பாக ஆயத்தீர்வைப் பிரிவில் பணியாற்றிய அனுபவம் ஆகியவற்றைப் பின்னணியில் கொண்டு நான் கூற விரும்புவதெல்லாம் பூரண மது விலக்கு அமலில் இருந்தபோது, அதன் விளைவாக இங்கு ஒன்று அங்கு ஒன்று என்று இல்லாத வகையில் கள்ளச் சாராயம் காய்ச்சுவது என்பது ஒரு தொழிலாகத் தமிழ்நாட்டில் பல இடங்களில் நடந்து கொண்டிருந்தது.
அதன் விளைவாக எங்கும் எதிலும் ஊழல் என்ற நிலை ஏற்பட்டது. மதுவுக்கு அடிமையான பல இளைஞர்கள் குளோரல் ஹைட்ரேட், மீத்தேன் போன்ற விஷப் பொருள்களைக் கள்ளச் சாராயத்தில் கலந்து அருந்திவிட்டுக் கொத்துக்கொத்தாக இறந்தனர். இதனால், கிராமப் பொருளாதாரம் சீரழிந்து நின்றது.
இது மட்டுமல்ல, ஒரு புதிய வகையான தொழிலதிபர்கள் கள்ளச் சாராயத்தின் மூலமாகப் பணபலம் பெற்று உருவாகவும் செய்தனர்.
அமெரிக்காவில் உருவான "அல் கபோன்' மாதிரி இந்தச் சாராய அதிபர்களின் செல்வாக்கு, நாணயமற்ற அதிகாரிகள், அரசியல்வாதிகள் வரை வியாபித்திருந்தது. அந்தக் காலகட்டத்தில் கள்ளச் சாராயம் காய்ச்சுபவர்களுக்கு எதிராகத் தொடுக்கப்பட்ட வழக்குகள் ஒரு சதவீதம்தான் வெற்றி பெற்றன என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
கள்ளச் சாராய அதிபர்கள் நீதித் துறையையும் தங்களது பண பலத்தாலும், புஜ பலத்தாலும் வலையில் வீழ்த்தி அதன் மூலம் வெளியே வந்து சுதந்திரமாக பவனி வந்தனர். ஆளும்கட்சி, எதிர்க்கட்சி என்கிற பேதமில்லாமல் அரசியல்வாதிகள், மேலிருந்து அடிமட்டம் வரையிலான அரசு ஊழியர்கள், ஏன், பத்திரிகையாளர்கள் என்று எல்லோரையுமே விலைக்கு வாங்கி, தனி ராஜாங்கமே நடத்தி வந்தனர்.
இப் பின்னணியில் நம்முள் எழும் கேள்வி என்னவெனில், இந்தச் சம்பவங்களினால் நாம் சாராயக் கடைகளைத் திறந்துவிடலாமா என்பதுதான். அதற்கு என் பதில் "தயவு செய்து மதுக் கடைகளைத் திறந்துவிடாதீர்கள் என்பதுதான். ஆயினும், நமது கொள்கையை பூரண மது விலக்கு என்ற நிலையிலிருந்து மாற்றி, கட்டுப்படுத்தப்பட்ட வரம்புக்கு உள்பட்ட கொள்கையாக்குவது என்பதும், அதற்கு ஏற்றார்போலச் சட்டத்தை அமல்படுத்தும் அமைப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான்.
மது வகைகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க முதலில் டாஸ்மாக் கடைகளையும், தனியார் கடைகளையும் மூடுவது. பொது இடங்களில் மது அருந்துவதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடுப்பது. மது அருந்த அதிகமான பர்மிட் கட்டணம் விதித்து, மது அருந்துவதைக் குறைப்பது. பெரிய அளவில் நட்சத்திர விடுதிகளில் மது அருந்த அனுமதி வழங்கினால் அதற்கு அதிகமான கேளிக்கை வரி, ஆயத்தீர்வை விதித்து அங்கு வந்து மது அருந்தும் வாடிக்கையாளர்களிடம் அதிக அளவில் கட்டணம் வசூலிக்க வேண்டும்.
கள்ளச் சாராயத்தை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்க வேண்டும். அவசியம் ஏற்பட்டால் திரும்பத் திரும்ப இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களை பாதுகாப்புச் சட்டத்தில் கைது செய்து அவர்கள் ஒரு வருடமாவது சிறைத் தண்டனை அனுபவிக்க சட்டத் திருத்தங்களைக் கொண்டு வரவேண்டும்.
எல்லாவற்றுக்கும் மேலாக, காவல் துறை கள்ளச் சாராய லாபியின் கைக்கூலியாக மாறிவிடாமல் இருக்க, நேர்மையான அதிகாரிகளைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்கு முழு அதிகாரமும், ஆட்சியாளர்களின் ஒத்துழைப்பும் இருப்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும்.
மேற்கூறிய நடவடிக்கைகளை எடுத்தால் நாம் பெருமளவில் மது உற்பத்தி, விற்பனை, மது அருந்துபவர்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம். அதைவிடுத்து ஏதோ மந்திரக்கோலை அசைத்து மதுக் கடைகளை மூடலாம் என்று நினைத்து ஆர்ப்பாட்டம் செய்பவர்கள் இதைப் பற்றி சிந்திக்க வேண்டும்.
உடனடியாக பூரண மது விலக்கு என்பது சாத்தியமற்றது. ஏறத்தாழ அரை நூற்றாண்டு காலம் மதுவை ஆறாக ஓட விட்டுவிட்டு, உடனடியாக மது அருந்துபவர்களை மது அருந்தக் கூடாது என்று சொன்னால், அதன் விளைவுகள் மிகவும் மோசமானதாகவே இருக்கும். பூரண மது விலக்கு என்று சொல்லிக் கொத்துக் கொத்தாக மக்கள் கள்ளச் சாராயம் குடித்துச் செத்து மடிவதை நாம் பார்த்துக் கொண்டிருக்க முடியாது.
மது அருந்துபவர்கள் செத்து மடியட்டுமே என்று மதுவின் மீதான கோபத்தாலும், சமுதாயத்தின் மீதான அக்கறையாலும் சொல்லலாமே தவிர, கண் முன்னால் இளைஞர்கள் மரணமடைவதைப் பார்த்துக் கொண்டா இருக்க முடியும்?

கட்டுரையாளர்:
தமிழக முன்னாள் டி.ஜி.பி.
மது வகைகள் அவ்வளவு எளிதாகக் கிடைக்காது என்ற நிலையை உருவாக்க முதலில் டாஸ்மாக் கடைகளையும், தனியார் கடைகளையும் மூடுவது. பொது இடங்களில் மது அருந்துவதைக் கடுமையான சட்டத்தின் மூலம் தடுப்பது. மது அருந்த அதிகமான பர்மிட் கட்டணம் விதிப்பது.

மண முறிவும் மனநிலையும்!

மண முறிவு பெற்று கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் பெண், தனியே வாழ்ந்தபோதிலும் கற்புடன் (பாலியல் தூய்மையுடன்) வாழ்ந்தால் மட்டுமே ஜீவனாம்சம் பெறத் தகுதியுடையவர் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கணவர் அல்லது மனைவி இன்னொருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டார் என்பதற்காக, அது ஒரே ஒரு முறைதான் நிகழ்ந்தது என்றாலும்கூட, அதை விவாகரத்து கோருவதற்கான காரணிகளில் ஒன்றாக முன்வைக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இதனை நிரூபித்தாக வேண்டும்.
ஆனால், ஒரு பெண் மண முறிவு பெற்று தனித்துச் சென்ற பிறகும், அவர் ஜீவனாம்சம் பெறுகிறார் என்பதாலேயே அவர் விரும்பியபடி வாழ முடியாது என்றால், அவர் கற்புடன் அல்லது பாலியல் தூய்மையுடன் வாழ வேண்டும் என்றால், அவர் மண முறிவு முழுமையற்றதாகிவிடுகிறது. மண முறிவுக்கும், மனைவியைத் தள்ளிவைப்பதற்கும் வேறுபாடு இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஜீவனாம்சம் என்பது மண முறிவு பெற்ற பெண்ணின், அவரது குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுக்கா அல்லது அவரது வாழ்க்கை நெறிமுறைக்கா என்ற கேள்வி எழுகிறது. மண முறிவு பெற்று ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிற கணவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், அவருக்குப் பாலியல் தூய்மைக்கு எந்த நிபந்தனையும் இல்லை. ஜீவனாம்சம் பெறுவதாலேயே ஒரு பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்றால், மண முறிவு பெற்ற பிறகும் முந்தைய கணவருக்காக அந்தப் பெண் மாங்கல்ய பூஜையா செய்ய முடியும்?
ஜீவனாம்சம் என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையை நடத்த முந்தைய கணவர் வழங்கும் ஆதரவுத் தொகை என்று கருதப்படுவதால்தான் மண முறிவுக்குப் பிறகும் ஒரு பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் உண்டாகிறது. ஒரு பெண் தன்னால் சேர்ந்து வாழ முடியாத ஓர் ஆணிடம் இழக்க நேர்ந்த வாழ்க்கைக்கான இழப்பீடாக ஜீவனாம்சம் கருதப்பட்டால், இத்தகைய கற்பு நெறி கட்டாயங்கள் இருக்காது.
மண முறிவு வழக்குகள் இந்தியாவில் மிகமிக அதிகமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், ஜீவனாம்சம், மண முறிவு பெறுவதற்கான காலம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியமாக இருக்கிறது.
ஜீவனாம்சத்தைப் பொருத்தவரை, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பதைக் காட்டிலும், ஆணின் ஆண்டு வருமானம் அல்லது தொழிலில் ஆண்டுக்கான விற்றுமுதல் அளவு ஆகியவற்றில் குறிப்பிட்ட விழுக்காட்டை பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் தனித்தனியாக வழங்குவதுமான நடைமுறைகள் இன்றைய தேவை. பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்களின் திருமணச் செலவுக்காகத் தனியாக ஒரு தொகையை வைப்புநிதிச் சான்றாக சமர்ப்பிக்கும் நடைமுறைகளும் தேவை.
இன்றைய தேதியில் மண முறிவு கேட்டு குடும்ப நீதிமன்றங்களைத் தேடி வருவோரில் 75% பேர் மணமாகி ஆறு மாதங்கள்கூட நிறைவு பெறாத இளம் தம்பதிகள். இவர்களில் 99 விழுக்காட்டினர் இருவருமே நல்ல வேலையில் இருப்பவர்களாகவும் தாங்கள் யாருடைய தயவையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற பொருளாதார வசதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்குத் திருமணம் எவ்வளவு மணி நேரத்தில் நடந்து முடிந்ததோ, அதே கால அளவில் மண முறிவும் முடிய வேண்டும் என்று துடிக்கிறவர்கள். இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்து மண முறிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் ஜீவனாம்சம் தேவை இல்லை என்று சொல்பவர்கள். எங்கள் குணாதிசயம் வெவ்வேறு. இருவராலும் இணைந்து வாழ்வது சாத்தியமில்லாதது. எங்கள் வாழ்க்கையின் இளமைக் காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்று மண முறிவு கோருகிறார்கள்.
அதற்காக, இவர்கள் அவசரப்படும் அளவுக்கு மண முறிவை உடனே அளித்துவிடுவது சாத்தியமில்லை. ஆனால், தற்போது சுமார் ஓராண்டு வரை நீடிக்கும் இந்த வழக்குகளில் நூறு நாள் அவகாசத்தில் முடித்து விடுவதே நல்லது. இவர்களுக்கு கால அவகாசம் கொடுப்பதால் இவர்கள் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்புகள் குறைவு.
அதேவேளையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பம் நடத்தியவர்கள் மண முறிவு கேட்டு வரும்போது, அவர்களது வழக்கில் சமரசத்துக்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, கால அவகாசம் கொடுப்பதும், வழக்கைத் தள்ளிவைப்பதும் நியாயமானதும்கூட. மண முறிவு கோரி வருபவர்கள் எத்தனைக் காலம் தம்பதியாகச் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பதைப் பொருத்து அவர்களது சமரசக் காலங்களை நீட்டிக்கும் நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.
மண முறிவை தம்பதிகளில் ஒருவர் எதிர்க்கும் வழக்குகளிலும், ஒரு முறை மண முறிவு பெற்று மறுமணம் செய்து கொண்டவர், மீண்டும் இரண்டாவது முறையாக மண முறிவு கோருகின்ற (அது பரஸ்பர விருப்பமாக இருப்பினும்) வழக்குகளிலும் மிக நுட்பமாகவும், போதிய கால அவகாசத்துடனும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டியது அவசியம்.
உயர் கல்வியும் நல்ல படிப்பும் வேலையும் உள்ள இளம் தம்பதிகள் அதிக அளவில் மண முறிவு கோரும் மனப்போக்குக்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறையும், மேலதிகமான எதிர்பார்ப்புகளும்தான். புதிய செல்லிடப்பேசி அறிமுகமானதும் அதனை வாங்கிட வேண்டும், புதிய கார் வந்தால் அதற்கு மாற வேண்டும் என்ற வாழ்க்கை முறையானது, தன்னிடம் பயன்பாட்டில் உள்ளதை நேசிக்க முடியாத மனநிலைக்குத் தள்ளுகிறது. வாழ்க்கைத் துணை ஒரு "செல்லப்பிராணி' போல இருக்க வேண்டும் என்று ஆணும், பெண்ணும் எதிர்பார்க்கும் மனநிலை, வெகு விரைவில் மனக்கசப்பை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த இரு மனநிலையும் முறியும்போதுதான் மண முறிவுகளும் முறியும்!

Friday, August 14, 2015

நடனக்கலையில் முத்திரை பதித்த நடிகை வைஜெயந்திமாலா


நடனக்கலையில் முத்திரை பதித்த நடிகை வைஜெயந்திமாலா
வைஜெயந்திமாலா சென்னையில் திருவல்லிக்கேணியில் பார்த்தசாரதி திருக்கோயிலின் அருகில் வசித்த வைதீக அய்யங்கார் வகுப்பை சேர்ந்த பிராமண குடும்பத்தில் பிறந்தார்.
இவரது தாயார் வசுந்தராதேவியும் 1940களில் புகழ்பெற்ற ஒரு பழம்பெரும் தமிழ் நடிகை ஆவார். இவரது தந்தையார் பெயர் எம். டி. ராமன். வைஜயந்தி தனது பள்ளிப் படிப்பை செக்ரடு ஹார்ட் மேல்நிலை பள்ளி, ப்ரசெண்டசன் கான்வென்ட், சர்ச் பார்க், ஆகிய பள்ளிகளில் முடித்தார். இவர் குரு வழுவூர் ராமையா பிள்ளையிடம் சிறுவயதிலேயே பரதநாட்டியம் பயின்றார். மேலும் மனக்கல் சிவராஜா அய்யர் என்பவரிடம் கர்நாடக சங்கீதமும் பயின்றார். இவர் தனது அரங்கேற்றதினை தனது 13வது வயதிலேயே முடித்தார்
ஏவி.எம். தயாரித்த 'வாழ்க்கை' படத்தின் மூலம், ஒரே நாளில் புகழின் சிகரத்தை அடைந்த வைஜயந்திமாலா, இந்திப்பட உலகிலும் வெற்றிக்கொடி நாட்டி, முதல் இடத்தைப் பெற்றார். 1952 தீபாவளி தினத்தன்று வெளிவந்த 'பராசக்தி', பெரும் பரபரப்பை உண்டாக்கியது.
அதில் அறிமுகமான சிவாஜி கணேசன், ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தை பெற்றார். இதற்கு முன் 1949-ல் ஏவி.எம். தயாரித்த 'வாழ்க்கை' படமும், ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது. அதில் கதாநாயகியாக அறிமுகமான வைஜயந்திமாலா, ஒரே நாளில் நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றார். இதற்குக் காரணம், அந்தக் காலக்கட்டத்தில் திரைப்படக் கதாநாயகிகளில் பெரும்பாலோர் முதிர்கன்னிகளாக இருந்தார்கள்.அல்லது, ஒன்றிரண்டு குழந்தை பெற்றவர்கள்தான் கதாநாயகிகளாக வலம் வந்தார்கள்!
டி.ஆர்.மகாலிங்கம் போன்ற இளம் நடிகர்கள், தங்களைவிட மூன்று நான்கு வயது மூத்த நடிகைகளுடன் இணைந்து நடிக்க வேண்டியிருந்தது! அந்த நேரத்தில், இளமையும், அழகும், திறமையும், படிப்பும் கொண்ட 17 வயது வைஜயந்தி மாலாவின் திரை உலகப்பிரவேசம், ரசிகர்களைப் பரவசப்படுத்தியது.
எல்லா பத்திரிகைகளும் வைஜயந்தியின் பேட்டியையும், புகைப்படங்களையும் போட்டி போட்டுக்கொண்டு பிரசுரித்தன. 'வாழ்க்கை' படம், 'ஜீவிதம்' என்ற பெயரில் தெலுங்கிலும், 'பஹார்' என்ற பெயரில் இந்தியிலும் தயாரிக்கப்பட்டன. அந்தப் படங்களிலும் வைஜயந்திமாலாதான் கதாநாயகி. 'பஹார்' படத்தில் கதாநாயகனாக நடித்தவர் கரன்திவான். 'ரத்தன்' படத்தின் மூலம் பெரும் புகழ் பெற்றவர்.
'பஹார்' படத்தின் மகத்தான வெற்றியினால், வைஜயந்திமாலா வடநாட்டிலும் புகழ் பெற்றார். அந்தக் காலக்கட்டத்தில், நர்கீஸ், மதுபாலா, நளினி ஜெய்வந்த், சுரையா போன்றவர்கள், இந்திப்பட உலகின் முன்னணி கதாநாயகிகளாக விளங்கினர். அவர்களும் முப்பது வயதை நெருங்கிக் கொண்டிருந்தார்கள். எனவே, வைஜயந்திமாலாவை வடஇந்திய ரசிகர்களும் விரும்பி வரவேற்றனர். ஏராளமான இந்திப்படங்களில் நடிக்கும் வாய்ப்பு வைஜயந்தியைத் தேடிவந்தன. இதன் காரணமாக, தமிழ்ப்படங்களை விட இந்திப்படங்களில் அதிகமாக வைஜயந்திமாலா நடிக்க நேரிட்டது.
வெகு விரைவிலேயே, இந்திப்பட உலக கதாநாயகிகளில் முதல் இடத்தைப் பெற்றார். தமிழ்நாட்டில் இருந்து வடநாட்டுக்குச் சென்று, வெற்றிக்கொடி நாட்டிய முதல் நடிகை வைஜயந்தி மாலாதான். . சிறு வயதிலேயே வைஜயந்திமாலா வழுவூர் ராமையாப்பிள்ளையிடம் நடனம் கற்றார்.
1954-ல், ஏவி.எம். தயாரித்த 'பெண்' படத்தில் நடித்தார். இதில் கதாநாயகன் ஜெமினிகணேசன். மற்றும் அஞ்சலிதேவி, எஸ்.பாலசந்தர் ஆகியோரும் நடித்தனர். 'வாழ்க்கை' படத்தைப் போல 'பெண்' பெரிய மெகாஹிட் படம் அல்லவென்றாலும், இனிய பாடல்களும், நடனங்களும் நிறைந்த படம். இந்தப் படத்தில் வைஜயந்திமாலா சிறப்பாகவே நடித்திருந்தார்.
சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா நடித்த ‘இரும்புத் திரை’ என்ற திரைப்படத்தில் (1960 ஆம் ஆண்டு வெளிவந்தது) பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இயற்றி, எஸ்.வி.வெங்கடராமன் இசையமைப்பில் டி.எம். சௌந்தரராஜன், பி. லீலா 'சண்முகப்பிரியா' ராகத்தில் மிக இனிமையான குரலில் பாடிய ஒரு அருமையான பாடல். சிவாஜி கணேசன், வைஜயந்திமாலா இருவரும் அருமையாக நடித்திருப்பார்கள்.
நெஞ்சில் குடியிருக்கும் அன்பருக்கு நானிருக்கும்
நிலைமை என்னவென்று தெரியுமா
நினைவை புரிந்து கொள்ள முடியுமா
என் நினைவை புரிந்து கொள்ள முடியுமா .....என்ற பாடல் அனைவரது கருத்தையும் கவர்ந்தது
வஞ்சிக்கோட்டை வாலிபன், ஜெமினியின் பிரமாண்டமான படம். இதில் பத்மினியும், வைஜயந்திமாலாவும் பங்கு கொண்ட “போட்டி நடனம்”, கண்ணுக்கும், செவிக்கும் அரிய விருந்தாகும். இந்தியப் படங்களில் இடம் பெற்ற மிகச்சிறந்த நடனக் காட்சி எது என்று கேட்டால், “வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் வரும் பத்மினி – வைஜயந்திமாலா போட்டி நடனக் காட்சி” என்று தயங்காமல் கூறலாம்.
ஜெமினியின் 'வஞ்சிக்கோட்டை வாலிபன்' படத்தில் இடம் பெற்ற வைஜயந்திமாலா -பத்மினி போட்டி நடனம், மிகப்பிரமாதமாக அமைந்தது. 1958-ல் ஜெமினி அதிபர் எஸ்.எஸ்.வாசன் தயாரித்த பிரமாண்டமான படம்
"வஞ்சிக்கோட்டை வாலிபன்.'' இதில் ஜெமினிகணேசன் கதாநாயகன். அவரை அடைய பத்மினி, வைஜயந்திமாலா இருவரும் போட்டி போடுவார்கள். இதில் பத்மினிதான் வெற்றி பெறுவார்.
படத்தின் சிறப்பு அம்சம், பத்மினியும், வைஜயந்திமாலாவும் ஆடும் போட்டி நடனம். எந்தப்படத்திலும் இதுபோன்ற அற்புத நடனம் இடம் பெற்றது இல்லை. இருபெரும் நடன மணிகள், தங்கள் முழுத்திறமையையும் பயன்படுத்தி அழகாகவும், எழிலாகவும் ஆடினார்கள்.
இந்த நடனக் காட்சி படமாக்கப்பட்டது பற்றி, வைஜயந்திமாலா கூறியதாவது:-
"நானும் பப்பியம்மாவும் (பத்மினி) மிகவும் புகழோடு இருந்த நேரம் அது. எங்கள் இருவரையும் வைத்து, "போட்டி நடனம்'' எடுக்க வேண்டும் என்ற எண்ணம் ஜெமினி ஐயாவுக்கு (எஸ்.எஸ். வாசனுக்கு) எப்படி வந்ததோ தெரியாது. ஆனால் இது விஷயம் எங்கள் 2 பேருக்கும் சொல்லப்பட்டதும், ரொம்பவே தீவிரமாக டான்ஸ் பயிற்சியில் ஆர்வம் காட்ட ஆரம்பித்தோம். ஓயாத ரிகர்சல்தான்.
இப்போதுகூட சிலர் என்னைப் பார்க்கும்போது, இந்த நடனத்துக்காகவே 30 தடவை 40 தடவை வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தைப் பார்த்ததாகச் சொல்கிறார்கள். இன்று இப்படிச் சொல்கிறார்கள் என்றால் எனக்கு வியப்பில்லை. காரணம் அன்று இந்த நடனக் காட்சிக்காக உழைத்த உழைப்பு அப்படி.
இரண்டு பேருக்குமான போட்டி நடனத்தில் கூட, யார் ஜெயித்தது என்கிற மாதிரி காட்சி இல்லை. ஆனால், முழுப்பாடலுக்குள்ளும் இருவரது திறமையையும் வெளிப்படுத்தி ரசிகர்களை கவரவேண்டும். அப்போது இருந்த கலைஞர்களுக்குள் எந்தவித ஈகோவும் கிடையாது. அதனால்தான் இப்படி ஒரு அற்புதமான போட்டி நடனம் அமைந்தது.
நானும் பப்பிம்மாவும் சேர்ந்து ஆடினது 2 நாள்தான். மற்றபடி எனது தனிப்பட்ட காட்சிகளை மட்டும் 12 நாள் எடுத்தார்கள். அதாவது தனித்தனி ஷாட்டுகள் ஒவ்வொரு நாள் தனித்தனியா பண்ணும்போதும் நம்முடைய பார்ட்டை நன்றாக பண்ணிடணும். பப்பிம்மா பண்ணினதைவிடவும் பெட்டரா பண்ணனும் என்று நினைத்துக்கொண்டே டான்ஸ் மூவ்மெண்ட் கொடுப்பேன். அதாவது ஒவ்வொரு நடன முத்திரையையும் பார்த்து பார்த்து தனி ஈடுபாடு காட்டி ஆடினேன். அப்புறம்தான் தெரிஞ்சது.பப்பிம்மாவும் இதே நிலையோடுதான் தனி நடனக் காட்சிகளை பண்ணினாங்களாம். பாடல் காட்சி எடுக்கப்பட்டு `ரஷ்' போட்டுப் பார்த்ததுமே எங்கள் இருவருக்கும் ஒரே பாராட்டு. அப்பவே இந்தப்படம் பேசப்படுகிற அளவுக்கு போட்டி நடனமும் பேசப்படும் என்று எண்ணினேன்.''
இவ்வாறு வைஜயந்திமாலா கூறினார்.
1960-ல் வெளிவந்த "பாக்தாத் திருட''னில் எம்.ஜி. ஆருடன் வைஜயந்திமாலா இணைந்து நடித்தார். இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த படம் இது ஒன்றுதான். இதே ஆண்டில் வெளிவந்த "பார்த்திபன் கனவு'' படத்தில் ஜெமினிகணேசனும், வைஜயந்திமாலாவும் ஜோடியாக நடித்தனர்.
வைஜயந்திமாலா திரைப்படங்களில் நடித்து வந்ததுடன், பரதநாட்டிய நிகழ்ச்சிகளும் நடத்தி வந்தார். "நாட்டிய மாலா'' என்ற பத்திரிகையையும் நடத்தினார். ஐ.நா.சபை சார்பில் நடந்த "மனித உரிமை நாள்'' விழாவில், வைஜயந்திமாலாவின் பரதநாட்டியம் இடம் பெற்றது.
இங்கிலாந்து ராணி எலிசபெத், ரஷிய பிரதமர் புல்கானின், யூகோ அதிபர் டிட்டோ, கிரீஸ் மன்னர், பெல்ஜியம் மன்னர் ஆகியோர் இந்தியாவுக்கு வந்தபோது, அவர்களுக்கு இந்திய அரசாங்கம் அளித்த வரவேற்பில் வைஜயந்திமாலா நடனம் ஆடினார்.

Thursday, August 13, 2015

தலைநிமிர்கிறான் தமிழன்!

வலைதளச் சேவையில் மிக முக்கிய நிறுவனங்களில் ஒன்றான கூகுள் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக, சென்னையில் பிறந்து வளர்ந்து படித்து கல்விச் சிறகு பெற்று கடல் கடந்த சுந்தர் பிச்சை (43) என்கிற சுந்தர்ராஜன் பிச்சை தேர்வு செய்யப்பட்டிருப்பது இந்தியாவுக்குப் பெருமை; தமிழனுக்குத் தலை நிமிர்வு! இன்னோர் இணையசேவை நிறுவனமான மைக்ரோசாப்டின் தலைமைப் பொறுப்பிலும் சத்யா நாதெல்லா என்கிற இந்தியர் இருக்கிறார் எனும்போது, சர்வதேச அளவில் இந்தியாவின் மரியாதை மேலும் உயர்கிறது.
இன்று சர்வதேச அளவில் பல பன்னாட்டு வணிகக் கூட்டாண்மை நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பில் இந்திரா நூயி (பெப்சிகோ), அஜய் பங்கா (மாஸ்டர் கார்ட்), சஞ்சய் மெஹ்ரோத்ரா (சேன்டிஸ்க்), சஞ்சய் ஜா (குளோபல் பவுண்டரிஸ்), பிரான்சிஸ்கோ டிசெüசா (காக்னிசன்ட்), ராஜீவ் சூரி (நோக்கியா) போன்றவர்கள் இருப்பது, எந்த அளவுக்கு மேலைநாடுகளுக்கு இணையாக அறிவுசார் துறைகளில் இந்தியா வளர்ச்சி அடைந்திருக்கிறது என்பதை வெளிச்சம் போடுகிறது.
லாரி பேஜ், செர்ஜி பிரின் என்கிற நண்பர்களால் 1998-இல் தொடங்கப்பட்ட கூகுள், அண்ட சராசரத்தை விரல் நுனியில் கொண்டுவந்து சேர்த்து, தகவல் தொழில்நுட்பப் புரட்சிக்கு வித்திட்டது. எதைப் பற்றி வேண்டுமானாலும் கூகுள் சேவையை இணையத்தில் தொடர்பு கொண்டு தேவைப்பட்ட தகவலைப் பெற முடியும் என்கிற பிரம்மாண்ட கலைக் களஞ்சியத்தை உருவாக்கித் தந்ததுடன் அவர்கள் நின்றுவிடவில்லை. ஜி மெயில் மின்னஞ்சல் சேவை, குரோம் என்கிற செயலி, யூ-டியூப், ஆண்ட்ராய்ட் செல்லிடப்பேசி பயன்பாடு என்று கூகுளின் செயல்பாடுகள் பரந்து விரிந்தவை.
கூகுள் நிறுவனம் மிகப் பெரிய நிறுவனமாக வளர்ந்துவிட்ட நிலையில், ஆல்பபெட் என்ற புதிய நிறுவனத்தை இணைய சேவைக்கென உருவாக்கி, அதன் கீழ் இயங்கும் சகோதர நிறுவனமாக கூகுள் மாற்றப்பட்டுள்ளது. இதுவரை கூகுள் நிறுவனத்தின் பொறுப்பை நிர்வகித்த லாரி பேஜ், ஆல்பபெட் நிறுவனத் தலைவராகச் செல்வதால், இந்த வாய்ப்பு சுந்தர் பிச்சைக்கு கிடைத்துள்ளது.
மேலைநாடுகளைப் பொருத்தவரை, திறமை மட்டுமே மதிக்கப்படும் என்பதையும், ஒரு மனிதனின் அர்ப்பணிப்பான, திறன் மிளிர் உழைப்புக்கு (ஸ்மார்ட் வொர்க்) மிகப் பெரும் மரியாதை கிடைக்கிறது என்பதையும் உணர்ந்தவர்களுக்கு சுந்தர் பிச்சை என்ற தனி மனிதனின் சாதனை எத்தகையது என்பது தெரியும். அதையடுத்து, அவர் இந்தியர் என்பதால் நமக்கு ஏற்படுத்தி இருக்கும் பெருமிதமும் புரியும். அதற்கும் மேலாக சென்னையில் பிளஸ் 2 வரை படித்தவர் என்பதால் தமிழர்களை தலைநிமிரச் செய்கிறார். ஒரு மனிதனின் உலகளாவிய வளர்ச்சியை இப்படித்தான் நாம் பார்க்க வேண்டும்.
மேற்கு வங்கம், கரக்பூர் ஐ.ஐ.டி.யில் படித்து முடித்த பிறகு, மேலாண்மைப் பட்டமும் பெற்று 2004-ஆம் ஆண்டு கூகுள் நிறுவனத்தில் சேர்ந்த சுந்தர் பிச்சை, கூகுள் குரோம் என்கிற வலைதள மென்பொருள் வடிவமைப்பில் முக்கியப் பங்காற்றியவர். இந்த மென்பொருளே தற்போது உலக அளவில் அதிகம் பயன்பாட்டில் உள்ளது. கூகுள் நிறுவனத்தின் ஆபரேடிங் சிஸ்டம் உள்பட பல்வேறு புதிய மென்பொருள் செயலிகள், செல்லிடப்பேசியில் ஆண்ட்ராய்ட் உள்ளிட்டவற்றை உருவாக்குவதிலும் முக்கியப் பங்காற்றியவர்.
சுந்தர் பிச்சையின் வளர்ச்சி இன்றைய இளைஞர்களுக்குச் சொல்லாமல் சொல்லும் அறிவுரை இதுதான்: இன்றைய உலகத்தின் தேவை கடின உழைப்பு மட்டும் அல்ல. திறன்மிளிர் உழைப்பு (ஸ்மார்ட் வொர்க்). இரண்டாவதாக, அர்ப்பணிப்பும், தகுதியும் இருந்தால் வளர்ச்சியைப் பற்றிக் கவலைப்பட வேண்டியதில்லை. உழைப்பும், திறமையும் இருந்தால் வளர்ச்சி தேடி வரும் என்கிற ஆக்கப்பூர்வ நம்பிக்கையை விதைத்திருக்கிறார் சுந்தர் பிச்சை. கூகுள் நிறுவனத்தின் தலைவர் பதவி என்பது இத்தகைய விளைவுகளையே இந்திய இளைஞர்கள் மனதில் கொண்டு சேர்க்கும். இதுதான் இன்றையத் தேவையும்கூட.
இத்தகைய சிந்தனைகள் உருவாகும்போது, இந்தியாவுக்கு மட்டுமேயான கூகுள் போன்ற மற்றொரு வலைதள சேவை நிறுவனத்தை உருவாக்கவும், விரிவாக்கவும் இளைஞர்கள் ஆர்வம் கொள்வார்கள். சீனாவில் கூகுள், யாஹூ, முகநூல் (ஃபேஸ்புக்) போன்றவற்றுக்கு கட்டுப்பாடுகள் உள்ளன. பல்வேறு இணைய சேவைகள், செயலிகளை சீனா தன் நாட்டுக்கு மட்டுமானதாக உருவாக்கிக் கொண்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடி இங்கே சுட்டுரையில் கருத்து தெரிவித்தாலும், சீனா செல்கிறபோது, அங்கே டுவிட்டருக்கு இணையான மற்றோர் இணைய சேவை நிறுவனத்தின் மூலமாகத்தான் தனது வருகையையும் சீனர்களுக்கு தன் முகமனையும் தெரிவிக்க முடிந்தது.
கூகுள் நிறுவனத்தின் பல்வேறு சேவை, செயலிகளுக்கு மூலகாரணமாக ஓர் இந்தியர், தமிழர் இருக்க முடியுமானால், ஏன் இந்தியாவுக்கான தனித்துவமான சேவை நிறுவனங்கள் உருவாதல் கூடாது? இத்தகைய சிந்தனையை சுந்தர் பிச்சையின் உயர்வு ஏற்படுத்தும், ஏற்படுத்த வேண்டும்.
சென்னை அசோக் நகரில் உள்ள ஜவஹர் வித்யாலயா மெட்குரிலேஷன் பள்ளியில் படித்த, சாதாரண, நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந்த சுந்தர் பிச்சையால் சர்வதேச அளவில் புகழ்பெற முடிந்திருக்கிறது என்பதைத் தமிழகத்தில் உள்ள மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் கல்வி நிலையங்கள் உணர்த்த வேண்டும். சுந்தர் பிச்சைக்கு தினமணியின் வாழ்த்துகளும், பாராட்டும். ஆயிரக்கணக்கான சுந்தர் பிச்சைகள் தமிழகத்திலிருந்து உருவாக வேண்டும் என்பதுதான் நமது எதிர்பார்ப்பும், நம்பிக்கையும்!

NEWS TODAY 27.01.2026