Monday, August 17, 2015

மண முறிவும் மனநிலையும்!

மண முறிவு பெற்று கணவரிடம் ஜீவனாம்சம் பெறும் பெண், தனியே வாழ்ந்தபோதிலும் கற்புடன் (பாலியல் தூய்மையுடன்) வாழ்ந்தால் மட்டுமே ஜீவனாம்சம் பெறத் தகுதியுடையவர் என்று சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் ஒரு வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
கணவர் அல்லது மனைவி இன்னொருவருடன் தகாத உறவு வைத்துக் கொண்டார் என்பதற்காக, அது ஒரே ஒரு முறைதான் நிகழ்ந்தது என்றாலும்கூட, அதை விவாகரத்து கோருவதற்கான காரணிகளில் ஒன்றாக முன்வைக்கலாம் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், நீதிமன்றத்தில் இதனை நிரூபித்தாக வேண்டும்.
ஆனால், ஒரு பெண் மண முறிவு பெற்று தனித்துச் சென்ற பிறகும், அவர் ஜீவனாம்சம் பெறுகிறார் என்பதாலேயே அவர் விரும்பியபடி வாழ முடியாது என்றால், அவர் கற்புடன் அல்லது பாலியல் தூய்மையுடன் வாழ வேண்டும் என்றால், அவர் மண முறிவு முழுமையற்றதாகிவிடுகிறது. மண முறிவுக்கும், மனைவியைத் தள்ளிவைப்பதற்கும் வேறுபாடு இல்லாமல் ஆகிவிடுகிறது.
ஜீவனாம்சம் என்பது மண முறிவு பெற்ற பெண்ணின், அவரது குழந்தைகளின் வாழ்க்கைச் செலவுக்கா அல்லது அவரது வாழ்க்கை நெறிமுறைக்கா என்ற கேள்வி எழுகிறது. மண முறிவு பெற்று ஜீவனாம்சம் தந்து கொண்டிருக்கிற கணவர் எப்படி வேண்டுமானாலும் வாழலாம், அவருக்குப் பாலியல் தூய்மைக்கு எந்த நிபந்தனையும் இல்லை. ஜீவனாம்சம் பெறுவதாலேயே ஒரு பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்றால், மண முறிவு பெற்ற பிறகும் முந்தைய கணவருக்காக அந்தப் பெண் மாங்கல்ய பூஜையா செய்ய முடியும்?
ஜீவனாம்சம் என்பது ஒரு பெண் தனது வாழ்க்கையை நடத்த முந்தைய கணவர் வழங்கும் ஆதரவுத் தொகை என்று கருதப்படுவதால்தான் மண முறிவுக்குப் பிறகும் ஒரு பெண் பாலியல் தூய்மையுடன் இருக்க வேண்டும் என்கிற கருத்தாக்கம் உண்டாகிறது. ஒரு பெண் தன்னால் சேர்ந்து வாழ முடியாத ஓர் ஆணிடம் இழக்க நேர்ந்த வாழ்க்கைக்கான இழப்பீடாக ஜீவனாம்சம் கருதப்பட்டால், இத்தகைய கற்பு நெறி கட்டாயங்கள் இருக்காது.
மண முறிவு வழக்குகள் இந்தியாவில் மிகமிக அதிகமாகி வரும் இன்றைய சூழ்நிலையில், ஜீவனாம்சம், மண முறிவு பெறுவதற்கான காலம் ஆகியவற்றில் மாற்றங்கள் கொண்டு வருவது அவசியமாக இருக்கிறது.
ஜீவனாம்சத்தைப் பொருத்தவரை, நீதிமன்றம் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயிப்பதைக் காட்டிலும், ஆணின் ஆண்டு வருமானம் அல்லது தொழிலில் ஆண்டுக்கான விற்றுமுதல் அளவு ஆகியவற்றில் குறிப்பிட்ட விழுக்காட்டை பெண்ணுக்கும், குழந்தைகளுக்கும் தனித்தனியாக வழங்குவதுமான நடைமுறைகள் இன்றைய தேவை. பெண் குழந்தைகளாக இருப்பின் அவர்களின் திருமணச் செலவுக்காகத் தனியாக ஒரு தொகையை வைப்புநிதிச் சான்றாக சமர்ப்பிக்கும் நடைமுறைகளும் தேவை.
இன்றைய தேதியில் மண முறிவு கேட்டு குடும்ப நீதிமன்றங்களைத் தேடி வருவோரில் 75% பேர் மணமாகி ஆறு மாதங்கள்கூட நிறைவு பெறாத இளம் தம்பதிகள். இவர்களில் 99 விழுக்காட்டினர் இருவருமே நல்ல வேலையில் இருப்பவர்களாகவும் தாங்கள் யாருடைய தயவையும் சார்ந்து வாழ வேண்டிய அவசியமில்லை என்ற பொருளாதார வசதி படைத்தவர்களாகவும் இருக்கிறார்கள்.
இவர்கள் தங்களுக்குத் திருமணம் எவ்வளவு மணி நேரத்தில் நடந்து முடிந்ததோ, அதே கால அளவில் மண முறிவும் முடிய வேண்டும் என்று துடிக்கிறவர்கள். இருவரும் பரஸ்பரம் விருப்பம் தெரிவித்து மண முறிவுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இவர்கள் ஜீவனாம்சம் தேவை இல்லை என்று சொல்பவர்கள். எங்கள் குணாதிசயம் வெவ்வேறு. இருவராலும் இணைந்து வாழ்வது சாத்தியமில்லாதது. எங்கள் வாழ்க்கையின் இளமைக் காலத்தை வீணாக்க விரும்பவில்லை என்று மண முறிவு கோருகிறார்கள்.
அதற்காக, இவர்கள் அவசரப்படும் அளவுக்கு மண முறிவை உடனே அளித்துவிடுவது சாத்தியமில்லை. ஆனால், தற்போது சுமார் ஓராண்டு வரை நீடிக்கும் இந்த வழக்குகளில் நூறு நாள் அவகாசத்தில் முடித்து விடுவதே நல்லது. இவர்களுக்கு கால அவகாசம் கொடுப்பதால் இவர்கள் மீண்டும் இணைந்து வாழும் வாய்ப்புகள் குறைவு.
அதேவேளையில், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக குடும்பம் நடத்தியவர்கள் மண முறிவு கேட்டு வரும்போது, அவர்களது வழக்கில் சமரசத்துக்கு வாய்ப்புகள் அதிகம். ஆகவே, கால அவகாசம் கொடுப்பதும், வழக்கைத் தள்ளிவைப்பதும் நியாயமானதும்கூட. மண முறிவு கோரி வருபவர்கள் எத்தனைக் காலம் தம்பதியாகச் சேர்ந்து வாழ்ந்தார்கள் என்பதைப் பொருத்து அவர்களது சமரசக் காலங்களை நீட்டிக்கும் நடைமுறைகள் மாற்றப்பட வேண்டும்.
மண முறிவை தம்பதிகளில் ஒருவர் எதிர்க்கும் வழக்குகளிலும், ஒரு முறை மண முறிவு பெற்று மறுமணம் செய்து கொண்டவர், மீண்டும் இரண்டாவது முறையாக மண முறிவு கோருகின்ற (அது பரஸ்பர விருப்பமாக இருப்பினும்) வழக்குகளிலும் மிக நுட்பமாகவும், போதிய கால அவகாசத்துடனும் நீதிமன்றம் விசாரிக்க வேண்டியது அவசியம்.
உயர் கல்வியும் நல்ல படிப்பும் வேலையும் உள்ள இளம் தம்பதிகள் அதிக அளவில் மண முறிவு கோரும் மனப்போக்குக்குக் காரணம் இன்றைய வாழ்க்கை முறையும், மேலதிகமான எதிர்பார்ப்புகளும்தான். புதிய செல்லிடப்பேசி அறிமுகமானதும் அதனை வாங்கிட வேண்டும், புதிய கார் வந்தால் அதற்கு மாற வேண்டும் என்ற வாழ்க்கை முறையானது, தன்னிடம் பயன்பாட்டில் உள்ளதை நேசிக்க முடியாத மனநிலைக்குத் தள்ளுகிறது. வாழ்க்கைத் துணை ஒரு "செல்லப்பிராணி' போல இருக்க வேண்டும் என்று ஆணும், பெண்ணும் எதிர்பார்க்கும் மனநிலை, வெகு விரைவில் மனக்கசப்பை ஏற்படுத்திவிடுகிறது.
இந்த இரு மனநிலையும் முறியும்போதுதான் மண முறிவுகளும் முறியும்!

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...