Saturday, August 22, 2015

பென்ஷன் திட்டத்துக்கு ஏன் வரவேற்பு இல்லை?

கடந்த மே மாதம் 9–ந்தேதி மேற்குவங்காளத்தில் மம்தா பானர்ஜி முன்னிலையிலேயே, பிரதமர் நரேந்திர மோடி 3 புதிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். ஜன் சுரக்ஷாவின் 3 புதிய திட்டங்கள் என்று இந்த திட்டங்கள் பெருமையாக பேசப்பட்டன. ‘‘பிரதான் மந்திரி சுரக்ஷா பீமா’’ என்ற ஆண்டு பிரிமியம் வெறும் 12 ரூபாயில் 2 லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு, ஆண்டு பிரிமியம் 360 ரூபாயில், 18 முதல் 50 வயதுள்ளவர்களுக்கான
2 லட்சம் ரூபாய்க்கான ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்கள் தொடங்கப்பட்டன. இதேநாளில் 18 வயது முதல் 40 வயதுள்ள அனைத்து சேமிப்பு வங்கி கணக்குதாரர் களுக்கும் மாதாந்திர ஓய்வு ஊதியம் வழங்கும் திட்டமும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலம் மாதாமாதம் 42 ரூபாய் முதல் 1,454 ரூபாய்வரை முதலீடு செய்வதன் மூலம், 60 வயது முதல் மாதம் ஆயிரம் ரூபாய், 2 ஆயிரம் ரூபாய், 3 ஆயிரம் ரூபாய், 4 ஆயிரம் ரூபாய், 5 ஆயிரம் ரூபாய் என பென்ஷன் பெறும் திட்டம் இது.

இந்த 3 திட்டங்களில் விபத்து காப்பீடு திட்டத்துக்கும், ஆயுள் காப்பீடு திட்டத்துக்கும் பொதுமக்களிடையே அதிக வரவேற்பு இருக்கிறது. வேறு திட்டங்களில் சேர்ந்து இருப்பவர்கள்கூட இந்த திட்டங்களில் பிரிமியம் தொகை மிகக்குறைவு, மேலும் வங்கிக்கணக்குகளில் இருந்து நேரடியாக பிரிமியம் தொகை சென்றுவிடும் என்பதால் ஆர்வத்தோடு சேர்ந்தனர். கடந்த மாதம் எடுத்த கணக்குப்படி விபத்து காப்பீடு திட்டத்தில் 7 கோடியே
84 லட்சம் பேர்களும், ஆயுள் காப்பீடு திட்டத்தில் 2 கோடியே 70 லட்சம் பேர்களும் சேர்ந்திருந்தனர். ஆனால், பரபரப்பாக பேசப்பட்ட பென்ஷன் திட்டத்தில் 4 லட்சத்து 69 ஆயிரம் பேர்கள் மட்டுமே சேர்ந்து இருந்தனர். இன்சூரன்சு திட்டங்களில் சேரும் ஆர்வம் பென்ஷன் திட்டத்தில் சேர மக்களிடையே இல்லை என்பது பட்டவர்த்தனமாக தெரிகிறது.

இந்த பென்ஷன் திட்டத்தின் மிக முக்கிய நோக்கமே, எந்த வகையிலும் பென்ஷன் பெறாத, அமைப்பு சாரா பணிகளில் வேலைபார்ப்பவர்கள் உள்பட ஏழை–எளிய மக்கள் 60 வயதுக்குமேல் தங்கள் முதிய வயதில் யார் கையையும் எதிர்பார்க்காமல் வாழ்வாதாரம் பெறவேண்டும் என்பதுதான். இந்த திட்டத்தின்படி பிரிமியம் கட்டியவருக்கு 60 வயதுக்குமேல் அவர் உயிரோடு இருக்கும்வரை மாத பென்ஷன் கிடைக்கும். அவர் மறைந்தவுடன் அவரது நாமினிக்கு கிடைக்கும். அவரும் மறைந்தபிறகு அவரது வாரிசுக்கு கட்டிய தொகை முழுமையாக கிடைக்கும். இவ்வளவு இருந்தும் மக்கள் விரும்பாததற்கு காரணம், இப்போதுள்ள பணவீக்கத்தில் 60 வயதுக்குமேல் பெறும் தொகையின் பண மதிப்புதான். எடுத்துக்காட்டாக, இப்போது 18 வயதுள்ள ஒருவர் 60 வயதுவரை மாதாமாதம் பணம் கட்டி, 60 வயதில் அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் பெறும்போது, இப்போதுள்ள 5 ஆயிரம் ரூபாயின் மதிப்பு அப்போது 644 ரூபாயாகத்தான் இருக்கும், அதை வைத்து எப்படி வாழ்க்கை நடத்தமுடியும் என்ற பேச்சு இருக்கிறது. மேலும் முழுத்தொகை பெறுகிற காலத்தில் அது வருமானவரிக்கு உட்பட்டது என்பதும் இந்த திட்டத்தின் மீது ஆர்வத்தைக் குறைத்துவிடுகிறது. இந்த திட்டத்தின் நோக்கம் நிச்சயமாக நல்லதுதான். ஆனால், அதன் பலன் 60 வயதுக்குமேல் முழுமையாக கிடைக்கும் வகையில், அரசுடைய பங்களிப்பை இன்னும் உயர்த்தி கூடுதல் பென்ஷன் கிடைத்தால்தான் நல்லது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...