Sunday, August 30, 2015

நுழைவுத்தேர்வு வேண்டவே வேண்டாம்

இந்தியா முழுவதிலும் உள்ள அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளுக்கும், மாணவர் சேர்க்கைக்காக ஒரு பொது நுழைவுத்தேர்வு நடத்தும் அறிவிப்பு விரைவில் வரக்கூடும் என்ற அதிர்ச்சியான தகவல் வந்துள்ளது. தொழில் கல்லூரிகளில் அதாவது மருத்துவம், பொறியியல் போன்ற கல்லூரிகளில் மாணவர்கள் பிளஸ்–2 முடித்தவுடன் சேர நுழைவுத்தேர்வு நடத்தும் முறை எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் 1984–ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. அரசு தொழில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடப்பதைத் தடுக்கும் வகையிலும், அறிவாற்றல்மிக்க மாணவர்களுக்கு தானாக இடம்பெறுவதற்குமான வாசலை இந்த நுழைவுத்தேர்வு திறந்துவிட்டது என்று அப்போது பாராட்டப்பட்டது. ஆனால், நாளடைவில் நகர்ப்புறத்தில் படித்த மாணவர்களால்தான் தொழிற்கல்லூரிகளில் சேரமுடியும், ஏழை கிராமப்புற மாணவர்கள் நுழைவுத்தேர்வு முறையால் சேரமுடியவில்லை என்ற மனக்குறை பெரிய அளவில் கிளம்பியதால், 2007–ல் இந்த நுழைவுத்தேர்வு முறை ரத்து செய்யப்பட்டது. ஆனால், மாணவர் சேர்க்கையில் முறைகேடு நடக்கமுடியாதபடி பிளஸ்–2 தேர்வில் எடுத்த மதிப்பெண்களுக்கு ‘கட் ஆப்’ முறை வந்தது. இப்போது தமிழ்நாட்டிலும், அரியானாவிலும் நுழைவுத்தேர்வு இல்லை. பிளஸ்–2 தேர்வில் பெற்ற ‘கட் ஆப்’ மார்க்குகளின் அடிப்படையில்தான் தொழில் கல்லூரிகளுக்கு மாணவர் சேர்க்கை நடக்கிறது.

ஆனால், மற்ற மாநிலங்களிலும், தமிழ்நாட்டில் தனியார் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் மாணவர்கள் ஒவ்வொரு வகையான என்ஜினீயரிங் கல்லூரிக்கும் தனித்தனி நுழைவுத்தேர்வு எழுதும் நிலை இருக்கிறது. நாடு முழுவதும் ஆண்டுதோறும் 8 லட்சம் மாணவர்கள் என்ஜினீயரிங் கல்லூரிகளில் சேர்க்கை பெற ஒவ்வொருவரும் பல நுழைவுத்தேர்வுகள் எழுத விண்ணப்பங்கள் வாங்கவேண்டியது இருக்கிறது. ஒரு விண்ணப்பத்தின் விலை சராசரியாக 500 ரூபாய் இருக்கும் நிலையில், ஏழை மாணவர்களுக்கு நிச்சயமாக இது பெரும் பொருட்செலவுதான். நுழைவுத்தேர்வு விண்ணப்பங்களுக்காக மட்டும் மாணவர்கள் ஆண்டுதோறும் 16 ஆயிரம் கோடி ரூபாய் செலவழிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில், அனைத்து என்ஜினீயரிங் கல்லூரிகளின் மாணவர் சேர்க்கைக்கும் ஒரே நுழைவுத்தேர்வை நடத்தும் அறிவிப்பை வெளியிட, அகில இந்திய தொழில் நுட்ப கவுன்சில் பரிந்துரை செய்துள்ளது. இதை மத்திய அரசாங்கம் தீவிரமாக பரிசீலித்து வருகிறது. மற்ற மாநிலங்களுக்கு இது பொருந்தினாலும், தமிழ்நாட்டுக்கு சரிவராது. நுழைவுத்தேர்வுக்கான பயிற்சி நிலையங்கள் புற்றீசல்போல தொடங்கப்பட்டுவிடும். நகர்ப்புற மாணவர்களும், வசதி படைத்தவர்களும் மட்டுமே அதில் சேர்ந்து படித்து என்ஜினீயரிங் கல்லூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பை பெறுவார்களே தவிர, கிராமப்புற மாணவர்களுக்கும், ஏழை–எளிய மாணவர்களுக்கும் இப்போதைய சமூகநீதி நிச்சயமாக மறுக்கப்பட்டுவிடும். மேலும், பிளஸ்–2 தேர்வுக்கே இரவு–பகலாக கஷ்டப்பட்டு படித்த மாணவர்கள், உடனடியாக இந்த நுழைவுத்தேர்வுக்கும் படிக்கும் நிலை ஏற்பட்டால், அவர்களுக்கும் ஒரு சலிப்பு, வீணான சிரமம்தான் ஏற்படும். இப்போதே கிராமப்புறங்களில் இருந்தும், அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிக்கூடங்களில் படித்த மாணவர்களின் ‘கட் ஆப்’ மார்க்குகள் குறைவாக இருப்பதால் அதை மேம்படுத்தும் முயற்சிகள் தீவிரமாக நடந்துவரும் சூழ்நிலையில், திடீரென நுழைவுத்தேர்வு வந்தால் இவ்வளவு நாளும் மேற்கொண்ட முயற்சிகள் மணல் கோட்டைபோல சரிந்துவிடும். மேலும், கல்வி பொது பட்டியலில் இருக்கும் நிலையில், மத்திய அரசாங்கம் இந்த முடிவை எடுத்தால் அது மாநில உரிமைகளை பறிப்பது போலாகிவிடும். எனவே, தமிழக அரசின் கல்வித்துறையும், கல்வியாளர்களும் இதற்கு கடுமையான எதிர்ப்பை தெரிவித்து, நுழைவுத்தேர்வு மீண்டும் தலையெடுக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும்.

Friday, August 28, 2015

விண்ணைத்தாண்டும் வெங்காய விலை

பொதுவாக சமையல் அறையில் வெங்காயத்தை உரிக்கும்போதுதான் இல்லத்தரசிகளின் கண்களில் இருந்து கண்ணீர் பெருக்கெடுத்து ஓடும். ஆனால், இப்போது வெங்காயத்தின் விலை விண்ணைத்தொட்டதோடு மட்டுமல்லாமல், விண்ணைத்தாண்டியும் செல்வதால் இல்லத்தரசிகளுக்கு மட்டுமல்லாமல், குடும்ப தலைவர்களுக்கும் கண்களில் கண்ணீரை வரவழைத்துவிடுகிறது. ஓரிரு மாதங்களுக்கு முன்பு இருந்த விலையைவிட, நான்கு மடங்கு விலை உயர்ந்துவிட்டது. தமிழ்நாட்டில் கூட சாம்பார் வெங்காயம் என்று அழைக்கப்படும் சின்ன வெங்காயத்தின் விலையும், பெரிய வெங்காயத்தின் விலையும் தினமும் உயர்ந்துகொண்டேயிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் வெங்காய விலை உயரும்போதெல்லாம், நிச்சயமாக நிரந்தர தீர்வுவேண்டும் என்றும், அந்த இலக்கை நோக்கி திட்டங்கள் வகுக்கப்படும் என்றும் பெரிதாக பேசப்படும். ஆனால், நிலைமை சரியானவுடன் இந்த உறுதிமொழிகள் எல்லாம் காற்றிலே கலந்த கீதங்களாகிவிடும்.

இவ்வளவுக்கும் வெங்காயத்தாலேயே மத்தியிலும், டெல்லியிலும் ஆட்சி மாற்றங்கள் ஏற்பட்ட வரலாறுகள் எல்லோருக்கும் தெரியும். 1980–ல் நாடு முழுவதும் அபரிமிதமான வெங்காய விலை உயர்வால், மத்தியில் ஜனதா அரசாங்கம் கீழே இறக்கப்படுவதற்கும், 1998–ல் டெல்லியில் பா.ஜ.க. அரசாங்கம் தோல்வியை சந்தித்து, ஷீலா தீட்சித் தலைமையில் காங்கிரஸ் ஆட்சி அமைவதற்கும் வெங்காயம்தான் காரணம். இவ்வளவுக்கும் உலகில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் வெங்காயம் அதிக விளைச்சலை காண்கிறது. இந்தியாவில் அரியானா, ராஜஸ்தான், உத்தரபிரதேசம், பீகார், குஜராத், மத்திய பிரதேசம், மராட்டியம், தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகம், தமிழ்நாடு ஆகிய 11 மாநிலங்களில் வெங்காயம் சாகுபடி செய்யப்படுகிறது. இதில், மராட்டிய மாநிலத்தில்தான் அதிகபட்சமாக ஆண்டுக்கு 46 லட்சத்து 60 ஆயிரம் டன் விளைகிறது. இந்த 11 மாநிலங்களில், தமிழ்நாட்டில்தான் வெங்காய விளைச்சல் குறைவு. பெரும்பாலும் சின்ன வெங்காயமே சாகுபடி செய்யப்படும் தமிழ்நாட்டில் ஆண்டுக்கு 4 லட்சத்து 29 ஆயிரத்து 720 டன்கள்தான் விளைகிறது. இவ்வளவுக்கும் வெங்காயம் ஒரு குறுகியகால சாகுபடி பயிர் ஆகும். எல்லா இடங்களிலும் தாராளமாக சாகுபடி செய்யமுடியும். இந்த ஆண்டு வெங்காய தட்டுப்பாட்டுக்கு சில இடங்களில் சீசன் இல்லாத நேரங்களில் பெய்த பெரு மழையையும், சில இடங்களில் மழை தட்டுப்பாட்டையும் காரணமாக கூறுகிறார்கள்.

தற்போது வெங்காய ஏற்றுமதியை தடுப்பதற்கு குறைந்தபட்ச ஏற்றுமதி விலையை ரூ.425–ல் இருந்து, ரூ.700 ஆக உயர்த்தியிருக்கும் மத்திய அரசாங்கம், இறக்குமதியில் இன்னும் அதிக கவனம் செலுத்தவேண்டும். உடனடியாக லட்சக்கணக்கான டன்கள் வெங்காய தேவை இருக்கும் நிலையில், 10 ஆயிரம் டன் இறக்குமதி செய்ய உலகளாவிய டெண்டர்விடப்பட்டு, இன்னும் முடிவாகவில்லை. அரசு உடனடியாக தானோ, அல்லது தனியார் மூலமாகவோ, பாகிஸ்தான், சீனா, எகிப்து போன்ற நாடுகளில் இருந்து வெங்காயம் இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும். எதிர்காலத்தில் இதுபோன்ற நிலைமை ஏற்படாமல் தடுக்க வெங்காய சாகுபடி பரப்பை உயர்த்தவும், சிறு விவசாயிகள் வெங்காயத்தை சேமித்து வைக்க குறைந்த கட்டணத்தில் குளிர்சாதன கிட்டங்கி வசதிகளை ஏற்படுத்தவும், மத்திய–மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுக்கவேண்டும். எல்லாவற்றுக்கும் மேலாக வெங்காயத்தை பதுக்கி வைத்தால் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்ற உணர்வில் இப்போதும் பதுக்கல் நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்களை இரும்புக்கரம் கொண்டு நசுக்கி, அந்த வெங்காயத்தை எல்லாம் வெளியே விற்பனைக்கு கொண்டுவரவேண்டும். பொதுவினியோக கடைகள் மூலம் மாநில அரசுகளே வெங்காயத்தை பொதுமக்களுக்கு குறைந்த விலையில் விற்பனை செய்ய நடவடிக்கை எடுக்கவேண்டும்.

Thursday, August 27, 2015

வேளாங்கண்ணி திருவிழா :ஓட்டை, உடைசல் பஸ்கள் ஓரம் கட்டப்படுமா?

வேளாங்கண்ணி திருவிழாவுக்காக இயக்கப்படும் பஸ்கள், மோசமான நிலையில் இருப்பதால், பயணிகள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர்.
வேளாங்கண்ணி மாதா ஆலய திருவிழாவை முன்னிட்டு, ஒரு வாரமாக வேளாங்கண்ணிக்கு பஸ்சில் செல்வோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. முக்கிய நகரங்களில் இருந்து வேளாங்கண்ணிக்கு செல்லும் அனைத்து பஸ்களிலும் முன்பதிவு இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.
சென்னையில் இருந்து, 30 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதற்காக, அரசு விரைவு போக்குவரத்துக் கழகத்தின் பிற பணிமனைகளில் இருந்தும் பஸ்கள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.
ஆனால், அந்த பஸ்கள், பராமரிப்பு இல்லாமல் மிகவும் மோசமான நிலையில் உள்ளன. கடந்த, 21ம் தேதி இரவு, 9:00 மணிக்கு, சென்னை, கோயம்பேட்டில் இருந்து வேளாங்கண்ணி வழியாக வேதாரண்யம் சென்ற அரசு விரைவு பஸ்சில், பெரும்பாலான ஜன்னல் கண்ணாடிகளை திறக்க முடியவில்லை. மேற்கூரையில் ஓட்டை இருந்ததால், பஸ்சுக்குள் மழைநீர் கொட்டியது. இதனால், பயணிகள் கடும் அவதிப்பட்டனர். தரங்கம்பாடி அருகே, அந்த பஸ்சின் டயர் பஞ்சர் ஆகி விட்டது. இதனால், மாற்று பஸ்சில், பயணிகள் நின்று கொண்டே பயணம் செய்தனர்.
இதுபோல், வேளாங்கண்ணிக்கு விடப்பட்டுள்ள சிறப்பு பஸ்கள் எல்லாமே மிகமோசமாக உள்ளது என, பயணிகள் குற்றஞ்சாட்டி இருக்கின்றனர்.

- நமது நிருபர் -

இன்றைய இன்றியமையாத் தேவை!

இன்று மருத்துவச் செலவு என்பது, தனி ஆலோசனைக்காக மருத்துவரிடம் நேரிடையாகக் கொடுக்கும் குறைந்தபட்ச கட்டணம் ரூ.100 முதல் ரூ.200 தவிர்த்து, அவர்கள் எழுதிக் கொடுக்கும் ஸ்கேன், எக்ஸ்ரே, ரத்தப் பரிசோதனை, பயாப்ஸி போன்ற சோதனைகளுக்கும், மெய்யான நோய் தெரியும் முன்பாகவே சாப்பிட்டாக வேண்டிய மருந்து, மாத்திரைகளுக்கும் ரூ.1,500 வரை செலவாகிறது. "ஒரு நோயாளியை வைத்து எல்லாரும் பிழைக்கிறார்கள்; நோயாளியைத் தவிர!'- என்கிற கவிப் புலம்பல்தான் இன்றைய சூழல்.
நடுத்தர வருவாய்ப் பிரிவினரைத் திணறடித்து, சேமிப்பைக் கரைக்கும் இத்தகைய "பரிசோதனை'க் காலத்தில், முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள 4 மருத்துவத் திட்டங்களும் இன்றைய இன்றியமையாத் தேவை.
அம்மா மகளிர் சிறப்பு முழு உடல் பரிசோதனைத் திட்டம், அம்மா ஆரோக்கியத் திட்டம் ஆகியன பெண்களுக்கு வரப்பிரசாதம் போன்றவை. இத்திட்டத்தில் இடம்பெறும் தைராய்டு, கர்ப்பப்பை வாய்ப் பரிசோதனை, மார்பகப் பரிசோதனை, எலும்புத் திறன் அறிதல் ஆகியவை அனைத்துப் பெண்களும், குறிப்பாக மாதவிடாய் நின்றுபோன அனைத்துப் பெண்களும் செய்துகொள்ள வேண்டிய பரிசோதனைகள்.
கணவர்களின் புறக்கணிப்பாலும், விழிப்புணர்வு இல்லாததாலும், தனியார் மருத்துவமனைகளில் மேற்சொன்ன ஒவ்வொரு பரிசோதனைக்கும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை கட்டணம் என்பதால் அந்தப் பணத்துக்கு வழியில்லாமலும்தான் பெண்கள் இந்த அடிப்படையான சோதனைகளை செய்து கொள்ளாமல் துன்பத்தை மெüனமாகத் தாங்கிக் கொள்கின்றனர். மற்ற மருத்துவத் திட்டங்களைக் காட்டிலும், மகளிர் முழுஉடல் பரிசோதனைத் திட்டத்துக்கு அதிகபட்சமான அக்கறை கொள்ள வேண்டிய தேவை அரசுக்கு உள்ளது.
கர்ப்பிணிகளுக்கான அம்மா மகப்பேறு சஞ்சீவி திட்டத்தில் சித்த மருத்துவப் பொருள்கள், லேகியம் வழங்கப்பட இருப்பதும் மிகவும் பயனுள்ள, கர்ப்பிணிகளுக்கு உடல்வலு சேர்க்கும் திட்டம்.
சென்னை ராஜீவ் காந்தி அரசு தலைமை மருத்துவமனையில் முழு உடல் பரிசோதனைத் திட்டம் மிகக் குறைந்த கட்டணத்தில் தற்போது நடைமுறையில் இருந்தாலும்கூட, அதில் இடம்பெறும் பரிசோதனைகள் மிகச் சிலவே. தற்போது முதல்வர் அறிவித்துள்ள அம்மா முழு உடல் பரிசோதனைத் திட்டத்தில் எட்டுக்கும் மேற்பட்ட பரிசோதனைகள் இடம் பெறுவதோடு, ரத்தத்தில் சர்க்கரையின் மூன்று மாத அளவைக் கணக்கீடு செய்யும் எச்பிஏ1சி பரிசோதனையும் இடம்பெற்றிருப்பது வரவேற்கத்தக்கது.
385 ஆரம்ப சுகாதார நிலையங்களில் வாரம் இருநாள்கள் இலவச ரத்தப் பரிசோதனை, சர்க்கரை அளவு பரிசோதனை, சிறுநீர், ரத்தக் கொழுப்பு பரிசோதனை நடத்தப்படும் என்ற அறிவிப்பும் ஊரக மக்களுக்குப் பயன் தருபவை.
இவ்வளவு நல்ல திட்டங்களை முதல்வர் அறிவித்தாலும், இத்தகைய திட்டங்கள் தங்களுக்கு கூடுதல் பணிச்சுமை என்று அறிக்கை விடுவதுதான் அரசு மருத்துவமனை ஊழியர்களின் முதல் எதிர் வினையாக இருக்கும். அடுத்ததாக, இந்த சோதனைகளுக்காக வருவோரை அலைக்கழித்து, இயந்திரம் பழுது என்று பல முறை திருப்பி அனுப்பி, அரசு மருத்துவமனையின் மீது வெறுப்பும் நம்பிக்கை இழப்பும் ஏற்படுத்துவது ஒருசில பொறுப்பில்லாத ஊழியர்களின் வாடிக்கை.
தனியார் மருத்துவமனைகளையும், பரிசோதனைக் கூடங்களையும் நடுத்தர வருவாய்ப் பிரிவினர் நாடுவதன் காரணம் அவர்களிடம் செலவழிக்கும் சக்தி இருக்கிறது என்பதால் அல்ல, அரசு மருத்துவமனைகளில் இத்தகைய அலைக்கழிப்புகளைத் தவிர்க்கத்தான், வயிறு எரிய, சாபங்களுடன் தனியாரிடம் பணத்தைக் கொடுக்கிறார்கள்.
பல ஊர்களில், கட்டணம் பெறும் தனியார் ரத்தப் பரிசோதனை நிலையங்கள் இந்த ரத்த மாதிரிகளை அரசு மருத்துவமனையில் உள்ள நண்பர் அல்லது ரத்த உறவுகளிடம் கொடுத்து பரிசோதனை முடிவுகளை மட்டும் செல்லிடப்பேசியில் வாங்கி, தங்கள் நிறுவன ரசீதில் எழுதித் தருகிற முறைகேடுகள் நடப்பதாக பரவலாக குற்றச்சாட்டு நிலவுகிறது. அது எந்த அளவுக்கு உண்மை என்று கண்டறிந்து தடுப்பது அரசின் கடமை.
இவ்வளவுக்குப் பிறகும் அரசு மருத்துவமனைகளின் சேவை மக்களுக்கு கிடைப்பதன் காரணம் சில அர்ப்பணிப்புள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், ஊழியர்கள் இருப்பதுதான். மிக அரிய சிகிச்சைகள் குறித்த பேட்டிகளும், நோயாளிகளின் மனம் நெகிழ்ந்த நன்றிகளும் செய்திகளாக வந்துகொண்டுதான் இருக்கின்றன. அரசின் கண்டிப்பும், கூடுதல் கண்காணிப்பும் இருந்தால் இன்னும் சிறப்பான சேவை, அரசு மருத்துவமனைகளில் சாத்தியமாகும்.
தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு வருவோரில் விபத்தில் காயமடைவோர்தான் அதிகமாக இருக்கிறார்கள். விபத்து நடந்த சில நிமிடங்களில் அவசர உதவி வாகனம் வந்துவிடுகிறது என்றாலும், அவை அடிபட்டவரைக் கொண்டு சேர்க்கும் இடம் 90% தனியார் மருத்துவமனையாகவே இருக்கிறது. தனியார் மருத்துவமனைகள் சிகிச்சை அளித்த பிறகு கேட்கும் மிகப் பெருந்தொகை, விபத்தில் பிழைத்த நோயாளியை நடைப்பிணமாக்கிவிடுகிறது.
விபத்தில் காயமடையும் அனைவருக்கும் காப்பீடு வழங்கும் திட்டம் கொண்டுவரப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்திருக்கிறார். இருப்பினும் அத்தகைய திட்டத்தை தமிழக அரசே அறிவித்து முன்னோடி மாநிலமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதற்கான சந்தா தொகையை வாகன விற்பனை, வாகன ஓட்டுநர் உரிமக் கட்டணம் ஆகியவற்றில் சேர்த்து வசூலிக்கவும், இந்த வரையறைக்குள் வராதவர்களுக்கு அரசே சந்தா தொகையை செலுத்தவுமான ஒரு திட்டத்தையும் முதல்வர் பரிசீலிக்கலாம்.

கற்பழிப்பு முயற்சியில் பெண் டாக்டர் கொல்லப்பட்டார் போலீசார் வெளியிட்ட திடுக்கிடும் தகவல்கள்

சென்னையில் நடந்த பெண் டாக்டர் கொலை வழக்கில் போலீசார் திடுக்கிடும் தகவல்களை வெளியிட்டனர்.கற்பழிப்பு முயற்சியில் அவர் கொலை செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

கணவர் சந்தேகம்

சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மேற்படிப்பு படித்து வந்த டாக்டர் சத்யா கொடூரமாக கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டார்.கடந்த 20-ந் தேதி அன்று இந்த படுகொலைச்சம்பவம் நடந்தது.சென்னை கீழ்பாக்கம் டெய்லர்ஸ் சாலை,கும்மாளம்மன் கோவில் தெருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள அறையில் டாக்டர் சத்யா தங்கி இருந்தார்.அவர் தங்கி இருந்த அறையில் இந்த படுகொலைச்சம்பவம் நடந்தது.

இந்த படுகொலை வழக்கில் கீழ்பாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள்.டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்ட அறைக்கு பக்கத்து அறையில் தங்கி இருந்த என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத்(வயது 22) இந்த வழக்கில் கைது செய்யப்பட்டார்.

அரிந்தம் தேப்நாத் திரிபுரா மாநிலம் அகர்தலாவைச் சேர்ந்தவர்.டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு,அவரது செல்போனை,என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் எடுத்துச் சென்று விட்டார்.செல்போனுக்காக கொலை நடந்தது போன்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.

ஆனால் டாக்டர் சத்யாவின் கணவர் டாக்டர் ஜேசு, செல்போனுக்காக கொலை நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை என்றும்,கொலைக்கு வேறு பின்னணி இருக்க வேண்டும் என்றும்,பின்னணியில் இருப்பவர்களை கைது செய்ய வேண்டும் என்றும்,பரபரப்பு பேட்டி கொடுத்தார்.இது தொடர்பான புகார் மனு ஒன்றையும்,சென்னை போலீஸ் கமிஷனர் ஜார்ஜூக்கு அனுப்பி வைத்தார்.

உயர் அதிகாரி பதில்

டாக்டர் சத்யாவின் கணவர் எழுப்பி உள்ள சந்தேகங்களுக்கு உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று பதில் அளித்தார்.அத்தோடு டாக்டர் சத்யாவின் கொலை வழக்கில் வெளி வராத அதிர்ச்சி தகவல் ஒன்றையும் அவர் வெளியிட்டார்.அவர் கூறியதாவது:-

டாக்டர் சத்யாவின் கணவர் புகாராக தெரிவித்துள்ள சந்தேகங்கள் ஏற்றுக்கொள்ள முடியாதவை.இந்த வழக்கில் வேறு பின்னணி நபர்கள் யாரும் இல்லை.என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் தான் கொலையாளி.அதற்கான முழு ஆதாரங்கள் விசாரணையில் கிடைத்துள்ளது.

கொள்ளை அடிக்கப்பட்ட டாக்டர் சத்யாவின் செல்போனை,என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத்,மதுரவாயல் செல்போன் கடையில் விற்றுள்ளார்.செல்போனை விற்கும் போது,அரிந்தம் தேப்நாத்தை,செல்போன் கடைக்காரர் தனது செல்போனில் படம் பிடித்துள்ளார்.

செல்போனில் படம் எடுக்கப்பட்ட தேதி,நேரம் எல்லாம் செல்போனில் பதிவாகி உள்ளது.கொலை நடந்த 20-ந் தேதி அன்று பகல் 12.30 மணிக்கு செல்போன் படம் எடுக்கப்பட்டுள்ளது.அதாவது அன்றைய தினம் காலையில் சத்யா கொலை செய்யப்படுகிறார்.செல்போன் பகலில் விற்கப்படுகிறது.விற்றவர் கொலையாளி அரிந்தம் தேப்நாத். விற்கப்பட்ட செல்போன் மீட்கப்பட்டுள்ளது.இது முக்கிய தடயம்.

சாவி சிக்கியது

அடுத்து டாக்டர் சத்யாவை கொலை செய்து விட்டு,என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் அறைக்கதவை வெளியில் பூட்டி விட்டு செல்கிறார்.அந்த சாவியை அரிந்தம்தேப்நாத்திடம் இருந்து கைப்பற்றி உள்ளோம்.

இன்னொரு முக்கிய சந்தேகத்தை டாக்டர் ஜேசு கிளப்பி உள்ளார்.டாக்டர் சத்யாவின் கழுத்து கச்சிதமாக ரத்த நரம்பை பார்த்து அறுக்கப்பட்டுள்ளது.இது கைதேர்ந்த டாக்டர் ஒருவர் சொல்லிக்கொடுத்துதான் செய்திருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

டாக்டர் ஒருவர் கொலைக்கு பின்னணியில் இருக்க வேண்டும் என்பது அவரது வாதம்.

அவர் தெரிவித்த சந்தேகம்,டாக்டர் சத்யா மெரிட் அடிப்படையில் மேற்படிப்புக்கு தேர்வாகி உள்ளார்.மேற்படிப்பு சீட்டு ரூ.2 கோடி வரை விற்கப்படுகிறது.எனவே பணத்துக்கு ஆசைப்பட்டு டாக்டர் சத்யா கொலை செய்யப்பட்டுள்ளார்.அவர் கொலை செய்யப்பட்டு விட்டதால்,அவரது மேற்படிப்பு இடம் காலியாகி விட்டது.

அந்த இடத்தில் ரூ.2 கோடி பணத்தை பெற்றுக்கொண்டு இன்னொரு நபரை நியமிக்க இந்த கொலை நடந்திருக்க வேண்டும்,என்பது டாக்டர் ஜேசுவின் குற்றச்சாட்டு.

மேற்படிப்பில் சேர்வதற்கான காலக்கெடு கடந்த ஜூன் மாதத்தோடு முடிவடைந்து விட்டது.இனிமேல் டாக்டர் சத்யாவின் காலி இடத்தில் வேறு யாரையும் நியமிக்க முடியாது.எனவே அந்த பின்னணியில் இந்த கொலை நடக்கவில்லை.

கழுத்தில் 4 இடங்களில் குத்து

மேலும் ரத்தம் ஓடும் நரம்பை பார்த்து சத்யாவின் கழுத்தில் கத்திக்குத்து விழுந்துள்ளது என்று,டாக்டர் ஜேசு கூறியுள்ளதும் தவறு.சத்யாவின் கழுத்தில்

தாறுமாறாக 4 இடங்களில் கத்திக்குத்து விழுந்துள்ளது.ரத்த நரம்பை குறிபார்த்து குத்தவில்லை.

முழுக்க,முழுக்க இந்த வழக்கில் என்ஜினீயர் அரிந்தம்தேப்நாத் ஒருவர்தான் குற்றவாளி.கொலை செல்போனுக்காக நடந்தது என்று சொல்வதை நம்ப முடியவில்லை,என்று டாக்டர் ஜேசு சொல்லி இருக்கிறார்.

அது உண்மைதான்.செல்போனுக்காக மட்டும் கொலை நடக்க வில்லை. டாக்டர் சத்யா ஒரு ஒழுக்கமான நல்ல பெண்மணி என்பதால்,சில தகவல்களை நாங்கள் வெளியிட வில்லை.தற்போது அதை வெளியிட வேண்டிய கட்டாயம் வந்து விட்டது.

கற்பழிக்க முயற்சி

என்ஜினீயர் அரிந்தம் தேப்நாத் பெண்சுகத்துக்காக அலைகிறார்.மேலும் அவருக்கு பணத்தேவையும் உள்ளது.தனது சுகத்துக்கும்,பணத்தேவைக்கும் டாக்டர் சத்யாவை பயன்படுத்திக்கொள்ள திட்டமிடுகிறார்.

அதற்காக சத்யாவுக்கு வலை விரிக்கிறார்.அவர் விரித்த விலையில் சத்யா விழவில்லை.சத்யாவிடம் பணம் கறக்கலாம் என்று ரூ.2 ஆயிரம் கேட்கிறார்.சத்யா பணம் கொடுக்கவில்லை.

இதனால் அடுத்த கட்டமாக தனியாக அறையில் இருக்கும் சத்யாவிடம் வலுக்கட்டாயமாக சுகத்தை அனுபவிக்க திட்டமிடுகிறார்.அதிலும் தோல்வி.இதனால் அநியாயமாக சத்யா கொலை செய்யப்படுகிறார்.சத்யாவின் தனிமை,கொலையாளியின் காம வெறி இவை சேர்ந்து ஒரு உயிரை பறித்து விட்டது.

காவலில் எடுத்து விசாரணை

மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் உண்மை.இதை கொலையாளி வாக்குமூலமாக கொடுத்துள்ளார்.கொலையாளியை மேலும் சில நாட்கள் காவலில் எடுத்து விசாரணை நடத்த உள்ளோம்.

அப்போது இந்த கொலைக்கு மேலும் சில ஆதாரங்களை திரட்ட இருக்கிறோம்.அடுத்த கட்டமாக விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படும்.குற்றவாளிக்கு கோர்ட்டில் உரிய தண்டனை பெற்று தரப்படும்.

இவ்வாறு அந்த அதிகாரி தெரிவித்தார்.

இதுதான் உண்மையான ‘ராக்கி பரிசு’

‘மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள், அண்ணன் வாழவைப்பான் என்றே அமைதிகொண்டாள்’’ என்ற திரைப்பாடல், தமிழ்நாட்டிலும், இதுபோன்ற பலமொழிகளில் இருக்கும் பாடல்கள், அந்தந்த மொழிகளைப்பேசும் மக்களுக்கும், சகோதர, சகோதரி உறவுகள், அதாவது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளின் மேன்மையை உணர்ச்சிபூர்வமாக நெஞ்சைத் தொடவைக்கின்றன. ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும் முன்பும் சரி, அவளுக்கு திருமணம், அவள் குழந்தைகளுக்கு திருமணம் என்று அனைத்து சமூக சடங்குகளிலும் அண்ணன்–தம்பியின் பங்கு முக்கியமாக இருக்கும். இதுதான் இந்தியாவின் சிறப்பு. ஆண்டுதோறும் ‘ரக்ஷா பந்தன்’ நாளில் கூடப்பிறந்தவர்கள் மட்டுமல்லாமல், ஒரு பெண்ணை சகோதரியாக நினைக்கும் ஆணுக்கும், அதுபோல தன் உடன்பிறந்த சகோதரர்களாக இல்லையென்றாலும், கூடப்பிறக்காத சகோதரராகவே ஒரு ஆணை நினைக்கும் பெண்ணுக்கும் இந்தநாள் தங்கள் பாசப்பிணைப்பை பறைசாற்றும் நன்னாள்.

இந்தநாள் இந்தியாவில் வடநாடுகளில் ஆதிகாலம் முதலே இருந்திருக்கிறது என்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர பாசத்தை உறுதிப்படுத்தும் வகையில், சகோதரர்கள், சகோதரர்களாக கருதுபவர்களின் மணிக்கட்டில் ‘ராக்கி கயிறு’ கட்டுவதும், அந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகள் அளித்து மகிழ்வதும் மரபு. ரஜபுத்திர, மராட்டிய ராணிகள் கூட முகலாய மன்னர்களுக்கு ‘ராக்கி கயிறு’ அனுப்பியதாக கூறப்படுகின்றன. இதுபோல, சித்தூரில் ஆட்சிபுரிந்த ராணியான கணவரை இழந்த பெண் கர்னாவதி, தன் நாட்டை குஜராத் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து தாக்கிய நேரத்தில், முகலாய சக்கரவர்த்தி ஹுமாயூனுக்கு ராக்கி கயிறு அனுப்பியதால், மனம் நெகிழ்ந்த ஹுமாயூன் அவருக்கு உதவ தன் படையோடு ஓடோடி வந்தார் என்றும் சரித்திரம் கூறுகிறது.

இந்த ஆண்டு இந்த ரக்ஷா பந்தன் தினம் நாளை மறுநாள் 29–ந் தேதி வருகிறது. இந்த நாளில் அனைவரும் தங்கள் சகோதரிகளுக்கு கொடுக்கும் சிறந்த ராக்கி பரிசு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்களில் அவர்களை சேர்ப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராக்கி சகோதரிகள் பட்டியலில் வீடுகளில், வயல்களில் வேலைபார்க்கும் பெண்களையும் சேர்த்துக்கொள்ள கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து சகோதரிகளும் இந்த திட்டத்தின் பயனை பெறும்வகையில் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார். ஒரு சகோதரி அதாவது, மம்தா பானர்ஜி முதல்–மந்திரியாக இருக்கும் மேற்குவங்காளத்தில்தான், பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டும் பிரிமியம் கட்டி ரூ.2 லட்சம் பெறும் விபத்து காப்பீடு, ஆண்டு பிரிமியம் ரூ.330 ரூபாயில் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார். இந்த ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகளுக்கு ராக்கி பரிசாக இந்த திட்டங்களில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். வேறு இனிப்புகளோ, மலர்களோ கொடுத்தால் அந்த ஒரு நாள்தான் பலனளிக்கும். அதற்கு பதிலாக, இந்த திட்டங்களில் சேர்த்துவிடுவது ஒரு சமூக பாதுகாப்பை அளிக்கும். வடஇந்தியாவில் மட்டுமல்லாமல், சகோதர பாசத்தை மென்மேலும் வளர்க்கும் இந்த ராக்கி கயிறு கட்டும் நாள், இப்போது தென்இந்தியாவிலும் உள்ளே நுழைந்துவிட்டது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டினாலும், கட்டாவிட்டாலும் சகோதரர்கள் அளிக்கும் அன்பு பரிசாக பிரதமர் கூறியபடி, இந்த திட்டங்களையே சகோதரிகளுக்கு அளிக்கலாமே!

Wednesday, August 26, 2015

தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது.

சென்னை: மக்களை வாட்டி வதைக்கும் வெங்காய விலை உயர்வைக் கட்டுப்படுத்தாமல் மத்திய, மாநில அரசுகள் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன என்று பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் குற்றம் சாட்டியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

" தமிழ்நாட்டில் கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை உயர்ந்து வருகிறது. 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட ஒரு கிலோ வெங்காயத்தின் விலை இப்போது 100 ரூபாயைத் தாண்டிவிட்டது. கடுமையான வறட்சி காரணமாக கர்நாடகம் மற்றும் மராட்டியத்தில் பெரிய வெங்காயத்தின் விளைச்சல் குறைந்து விட்டது தான் இந்த விலை உயர்வுக்குக் காரணம் என்று கூறப்படுகிறது. இது ஒருபுறம் இருந்தாலும் வெங்காயத்தின் விலை உயர்வைப் பயன்படுத்திக் கொள்வதற்காக சிலர் வெங்காயத்தை பெருமளவில் பதுக்கி வைத்திருப்பதும் இதற்கு முக்கியக் காரணம் என்பதை எவரும் மறுக்க முடியாது.

வெங்காயத்தின் விலையைக் கட்டுப்படுத்த பாகிஸ்தானில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டும் என்று வணிகர்கள் வலியுறுத்தி வருகின்றனர். ஆனால், மத்திய அரசு அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டதாக தெரியவில்லை. அதேபோல் அதிரடி ஆய்வு மேற்கொண்டு பதுக்கி வைக்கப்பட்டுள்ள வெங்காயத்தை வெளிக்கொண்டு வருவதற்கு தமிழக அரசும் நடவடிக்கை எடுக்க வில்லை. இந்த விஷயத்தில் தமிழக அரசின் நுகர்வோர் பாதுகாப்புத்துறை உறங்கிக் கொண்டிருக்கிறது.

அதேபோல், பருப்பு விலையை கட்டுப்படுத்தவும் மத்திய, மாநில அரசுகள் எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளவில்லை. இவற்றின் விலை உயர்வுக்கும் போதிய விளைச்சலின்மை மற்றும் பதுக்கல் தான் முக்கியக் காரணம் ஆகும்.

ஆன்லைன் வணிகத்தை பயன்படுத்தி வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை பதுக்கி வைத்து செயற்கையாக ஏற்படுத்தப்படும் தட்டுப்பாட்டை தடுக்க மாநில அரசால் முடியும். ஆனால், ஏனோ பதுக்கல் காரர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் தமிழக அரசு தயாராக இல்லை. வெளிச்சந்தையில் அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரிக்கும் போது, அதன் தாக்கத்தைக் குறைப்பதற்காக மலிவு விலையில் பொருட்களை விற்பனை செய்வது தான் பொது வழங்கல் திட்டத்தின் நோக்கமாகும். ஆனால், இவ்விஷயத்தில் தமிழகத்தின் பொதுவழங்கல் துறை முற்றிலுமாக தோல்வியடைந்து விட்டது. காய்கறிகளை மலிவு விலையில் விற்பனை செய்வதற்காகத் தான் பண்ணை பசுமைக் கடைகள் திறக்கப்பட்டன. அங்கு வெளிச்சந்தையை விட சற்று குறைந்த விலையில் வெங்காயம் விற்கப்படும் போதிலும், அது பெயருக்காக மிகக்குறைந்த அளவிலேயே விற்பனை செய்யப்படுவதால் மக்களுக்கு எந்த பயனும் இல்லை; வெளிச்சந்தையில் எந்தவித சாதகமான தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

தமிழகஅரசின் இத்தகைய போக்கால் வெங்காயம் பருப்பு வகைகள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதே நிலை தொடர்ந்தால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வாழ்வதற்கே வழியில்லாமல் போய்விடும்.

எனவே, வெங்காயம் மற்றும் பருப்பு வகைகளை அதிக அளவில் இறக்குமதி செய்வதன் மூலமும், பதுக்கலைத் தடுப்பதன் மூலமும் அவற்றின் விலையைக் கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

NEWS TODAY 06.12.2025