Monday, October 26, 2015

அல்லல் படும் ஆதார்..தினகரன்


ஆதார் எண் - அமெரிக்காவில் எப்படி சமூக பாதுகாப்பு எண் முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவுக்கு, இந்தியர்களுக்கு மிக முக்கியமானது என்றால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; காரணம், எல்லா உரிமையும் உள்ள இந்தியர் என்று நாம் சொல்லிக்ெகாள்ள வேண்டுமானால், அதற்கான ஒரே அதிகாரப்பூர்வ அடையாளமாக அது வருங்காலத்தில் இருக்கும் என்று நம்பப்பட்டது. பாஸ்போர்ட் எப்படியோ அப்படி மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய ஆதார் அட்டை வழங்குவதில் தான் எவ்வளவு குழப்பங்கள்; குளறுபடிகள்; திருப்பங்கள். ஏன் இப்படி...? உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அதற்கு மத்திய அரசும் பணிந்து பயந்து நடுங்கி, தெளிவான விஷயங்களை சமர்ப்பித்து தன் தரப்பை வலுவாக எடுத்து காட்ட முடியாமல் தவிக்கிறதே...?

சுப்ரீம் கோர்ட்டும், இப்படி ஒரு தெளிவில்லாத, தனி மனிதனின் அடிப்படை உரிமை, சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான ஆதாரை எப்படி கட்டாயமாக்க முடியும் என்று திரும்ப திரும்ப அடித்து கேட்கிறதே? ஆதார் திட்டத்துக்காக நாடு முழுவதும் கணக்கெடுத்து பிரமாண்ட முறையில் நடைமுறை ஏற்பாடுகளை செய்ய சாப்ட்வேர் நிறுவன தலைவர் நந்தன் நிலகேனியை அமர்த்தி முந்தைய மன்மோகன் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆனால், மக்களவை தேர்தலுடன் நிலகேனி மூட்டை கட்டி விட்டு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு தோற்றார். அத்தோடு ஆதாரும், யாரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அம்போ நிலைக்கு தள்ளப்பட்டது.

மோடி வந்ததும், ஆதார் வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து, கடைசியில் வேண்டா வெறுப்பாக அதை தொடர அனுமதித்தது அரசு. ஆதார் மூலம் தான் காஸ் மானியம், நலத்திட்ட உதவிகளை மோடி அரசு செய்தாலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தவிக்கிறது.
மன்மோகன் அரசு செய்ததை தவிர, ஆதார் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் மோடி அரசு செய்யவே இல்லை. அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று அறிந்தும் அரசு பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
ஆதார் திட்டம் ஆரம்பித்ததில் இருந்தே குழப்பம் தான்; நாடு முழுக்க, ஏன் தமிழ்நாட்டை எடுத்து கொண்டாலே, ஆதார் அட்டை பதிவுக்கு எந்த அளவுக்கு போலீஸ் தடியடி, குளறுபடிகள் நடந்தன என்பது தெரிந்ததுதான்.

பதிவு செய்வதில் ஆரம்பித்து, அட்டை தருவது வரைக்கும் பல கட்டங்களில் திடமான, வலுவான நடைமுறை பின்பற்றப்படவே இல்லை. இனியாவது மோடி அரசு விழித்தால் ஆதாருக்கு வழி பிறக்கும். இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிற குறைகளை சரிவர ஆராய்ந்து, பரிசீலித்து பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக்க வேண்டும். ஆதாரை வைத்து தனி மனிதர்களுக்கு பிரச்னை வந்தால் அதை தீர்க்கவும், ஆதாரை தவறாக பயன்படுத்தினால் அதற்கு கடும் தண்டனை வழங்கவும் தேவையான திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும். அப்போது தான் ஆதார் அட்டைக்கும் ஒரு தேசிய அங்கீகாரம் கிடைக்கும். அதை இனியாவது செய்யுமா மத்திய அரசு?

ஆம்னி பேருந்துகளில் செல்ல அடையாள அட்டை கட்டாயம்.......dinamani


By எம்.மார்க்நெல்சன், சென்னை,

First Published : 26 October 2015 04:07 AM IST




ஆம்னி பேருந்துகளில் அடையாள அட்டையுடன்தான் இனி பயணிக்க முடியும். மேலும், இவற்றில் பல்வேறு பாதுகாப்பு நடைமுறைகளும் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன.
ஆம்னி பேருந்துகளில் அண்மைக்காலமாக பயணிகளின் உடைமைகள் திருடப்படுகின்றன; பேருந்துகளும் விபத்துக்குள்ளாகி வருகின்றன. இதனால், இவற்றில் பயணிப்போர் அச்சத்துடனே பயணிக்க வேண்டிய நிலை இருந்து வந்தது.
இந்த நிலையில், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையிலும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன்படி, அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் தமிழகத்தில் 1,200 பேருந்துகள், தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினர் சார்பில் 800 பேருந்துகள் என மொத்தம் 2 ஆயிரம் பேருந்துகள் பாதுகாப்பு நடைமுறைகள் அமலுக்கு வருகிறது.
இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் பாண்டியன், பொதுச் செயலர் இளங்கோவன், செயலர் அன்பழகன் ஆகியோர் கூறியதாவது:
அடையாள அட்டை இருந்தால்தான், ஆம்னி பேருந்துகளில் இனி பயணிக்க முடியும்.
ரயில்களில் உள்ளதுபோல் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையை பயணிகள் கட்டாயம் காண்பிக்க வேண்டிய வகையில் புதிய நடைமுறையை ஆம்னி பேருந்து நிறுவனங்கள் கொண்டுவந்துள்ளன.
தவிர்க்க முடியாத ஒரு சில சூழலில், அடையாள அட்டை இல்லாமல் வரும் பயணியிடம் செல்லிடப்பேசி எண், முகவரி உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டு பின்னரே பேருந்தில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என்றனர்.
நவீன தீயணைப்பான்கள்
ஆம்னி பேருந்துகளில், தீ விபத்து ஏற்பட்டால், அதை உடனடியாகக் கட்டுப்படுத்தும் வகையில் நவீன ரக தீயணைப்பான்கள் இடம்பெறும். பாட்டில் வடிவில் இவற்றை திறக்கவோ அல்லது அழுத்தவோ வேண்டியதில்லை. தீப் பிடித்த பகுதியை நோக்கி, தூக்கி எரிந்தால் போதும். தீ கட்டுக்குள் வந்துவிடும். இதைப் பயன்படுத்துவது தொடர்பான செய்முறை பயிற்சி ஆம்னி பேருந்துகளின் ஊழியர்களுக்கும் அண்மையில் வழங்கப்பட்டது. ரூ.2,300 மதிப்பிலான இதில், 3 தீயணைப்பான்கள் பேருந்துக்குள்ளும், 2 ஓட்டுநரிடமும் இருக்கும்.
கண்காணிப்பு கேமரா

பயணிகளின் உடைமைகள் திருடு போவதைத் தடுக்கும் வகையில், கண்காணிப்புக் கேமராக்கள் 10 சதவீத பேருந்துகளில் பொருத்தப்பட்டுள்ளன. மீதமுள்ள பேருந்துகளிலும் விரைவில் பொருத்தப்பட்டு விடும்.

கடந்த ஆண்டு கட்டணமே!

பயணிகளிடம் ஆம்னி பேருந்துகள் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதில்லை.

கடந்த ஆண்டு தீபாவளியின்போது, வசூலிக்கப்பட்ட பேருந்து கட்டணத்தையே, இந்த ஆண்டும் வசூலிக்க உள்ளோம் என்று ஆம்னி உரிமையாளர்கள் கூறினர்.


துபை விமான நேரத்தில் மாற்றம் இன்று முதல் அமலுக்கு வருகிறது..dinamani


By dn, திருச்சி,

First Published : 25 October 2015 08:49 AM IST


திருச்சி - துபை இடையே இயக்கப்பட்டு வரும் ஏர்-இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நேரத்தில் தாற்காலிக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி இரவு நேரத்தில் இயங்கப்பட்ட விமானம் பகல் நேரத்தில் இயக்கப்படவுள்ளது.

துபையிலிருந்து தினசரி நள்ளிரவு 12.05 மணிக்கு திருச்சி வந்து பயணிகளை இறக்கி ஏற்றிக்கொண்டு மீண்டும் 12.55 மணிக்கு துபை செல்லும். இந்த விமானம் குளிர்கால அட்டவணை மாறுதல் தொடர்பாக பகல் நேர விமானமாக மாற்றப்பட்டுள்ளது. அந்த வகையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) முதல் இந்த விமானம் இனி பகல் 12.45-க்கு திருச்சி வந்து அதன் பின்னர் 1.30-க்கு மீண்டும் துபை புறப்பட்டுச்செல்லும்.

இந்த நடைமுறை இன்று தொடங்கி டிசம்பர் 6-ம் தேதி வரை நடைமுறையில் இருக்கும். அதன் பின் மீண்டும் மாற்றம் செய்யப்படும் என ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

கட்டண சேவையை இந்த வாரம் முதல் துவங்குறது யூடியூப்..dinamani

By dn

First Published : 25 October 2015 02:36 PM IST


பத்தாண்டு காலம் இலவச சேவையை வழங்கிவந்த யூடியூப் இணையதளம், அதன் முதலாவது கட்டண சேவையை இந்த வாரம் துவங்கியிருக்கின்றது.

சந்தாதாரர்கள் இதன் மூலம், விளம்பரங்கள் இல்லாத, பிரத்தியேக காணொளி நிகழ்ச்சிகளை பார்க்க முடியும். யூடியூப் ரெட் என்ற இந்த சேவையில், மாதம் 9.99 டாலர் பணம் (ரூ. 650) செலுத்தினால், செல்பேசி, கணினி, என எல்லா தளங்களிலும் விளம்பரமின்றி வீடியோக்களை காணலாம். அக்டோபர் 28 முதல் அறிமுகமாகும் இந்த சேவை, முதலில் அமெரிக்காவில் மட்டும் தொடங்கப்படுகிறது. இணையம் மூலமான ஒளிபரப்புச் சந்தையில் வலுத்துவரும் போட்டிச் சூழலை, யூடியூப் எப்படி எதிர்கொள்ளப் போகின்றது என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அபராதம்

dinamani

By DN, தைபே

First Published : 25 October 2015 04:05 PM IST


அமெரிக்க விமானத்தில் குழந்தை பெற்ற தைவான் பெண்ணுக்கு அந்நாட்டு அரசு அபராதம் விதித்துள்ளது.

கடந்த 8 ஆம் தேதி சீனவைச் சேர்ந்த விமானம் ஒன்று தைவான் நாட்டின் தலைநகர் தைபேவிலிருந்து அலாஸ்கா வழியாக அமெரிக்காவின் லாஸ் ஏஞ்செல்ஸ் நகருக்கு இயக்கப்பட்டது.

அந்த விமானத்தில் தைவான் நாட்டைச் சேர்ந்த நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் பயணித்தார். விமானத்தில் பயணம் செய்தபோது, திடீரென்று அந்த பெண்ணுக்கு பிரசவ வலி ஏற்பட்டு அலாஸ்கா நகரின் மீது பறந்தபோது, அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. அதன்பின்பு அந்த விமானம் மீண்டும் தைபேவுக்கு திருப்பி விடப்பட்டது.

இதுகுறித்து விமானத்துறை அதிகாரிகள் அந்த பெண்ணின் உறவினர்களிடம் விசாரணை நடத்தியபோது, பிறக்கும் குழந்தைக்கு அமெரிக்க குடியுரிமை கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில் குழந்தை பிறக்கும் தருவாயில் இருந்தபோதும் அதை மறைத்து விமானத்தில் அந்த பெண் பயணம் செய்துள்ளதாக தெரிவித்தனர்.

இதையடுத்து அமெரிக்கா சென்ற விமானத்தை மீண்டும் தைபே நகருக்கு திருப்ப காரணமாக இருந்த பெண்ணிடம் இழப்பீடு கேட்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்று விமானத்தின் செய்தித் தொடர்பாளர் வீனி லீ கூறினார்.

வெளிநாடுகளிலிலிருந்து அடிக்கடி பணம் வரும் வங்கி கணக்குகளை கண்காணிக்க முடிவு

Dinamani

By Venkatesan Sr, புதுதில்லி

First Published : 25 October 2015 09:53 PM IST


வெளிநாடுகளில் இருந்து அடிக்கடி பணம் வந்தால் அந்த வங்கி கணக்கை கண்காணித்து, தவறு நடக்கிறதா என்று விசாரிக்க வேண்டும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

பாங்க் ஆப் பரோடா வங்கி மூலம் ரூ.6,100 கோடி பண பரிமாற்ற மோசடி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. தில்லியில் உள்ள பரோடா வங்கி கிளையில் இருந்து ஹாங்காங்கிற்கு பணம் பரிமாற்றம் நடந்ததில், 59 போலி நிறுவனங்கள் அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.

அதாவது, போலி நிறுவனம் உருவாக்கி அந்நிய செலாவணி பரிவர்த்தனை மூலம் சுங்க வரியை திரும்ப பெற்றுள்ளனர். இதுபோன்ற சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், மத்திய ஊழல் கண்காணிப்பு ஆணையம் ஒரு லட்சம் டாலருக்கு குறைவான பரிவர்த்தனை விவரங்களையும் தெரிவிக்குமாறு வங்கிகளை கேட்டுக்கொண்டுள்ளது.

இதுகுறித்து ஊழல் கண்காணிப்பு ஆணையர் டி.எம்.பாஷின் கூறுகையில், ‘ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கும் குறைவான தொகை பரிமாற்றம் செய்யப்பட்டாலும் அது எங்கள் கவனத்துக்கு கொண்டு வரப்பட வேண் டும் என்று ரிசர்வ் வங்கிக்கு கடிதம் எழுதியுள்ளோம். சிறிய அளவிலான அந்நிய செலாவணி பரிமாற்றம் நடைபெற்றாலும் அதை கவனித்து தகவல் தர வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்துமாறு கேட்டுக்கொண்டுள்ளோம்’ என்றார்.

தற்போதுள்ள நடைமுறைகளின்படி அந்நிய செலாவணி வர்த்தகத்தில் ஒரு லட்சம் அமெரிக்க டாலருக்கு மேல் பரிவர்த்தனை நடந்தால்தான் அதனை வங்கிகள் கண்காணித்து கேஒய்சி விதிப்படி அறிவிக்கின்றன.

ஆனால், சிறிய அளவிலான பரிவர்த்தனைகள் ஒரே வங்கி கணக்கில் சிறிது சிறிதாக சேரும்போது இது கவனத்துக்கு எடுத்துக் கொள்ளப்படுவதில்லை. இதை பயன்படுத்தி மோசடிகள் நடந்தா லும் தெரியாமல் போய் விடுகிறது. குறைந்த அளவிலான பரிவர்த்தனைகளை தெரிவிக்கும் பட்சத்தில், வெளிநாடுகளில் இருந்து ஆயிரம், இரண்டாயிரம் டாலர் அனுப்பினால் கூட கண்காணிக்கப்படும்.

இதன்மூலம் அந்நிய செலாவணி பரிவர்த்தனை மோசடிகளை தடுக்க முடியும் என ஊழல் கண்காணிப்பு ஆணையம் கருதுகிறது

குழந்தைகளிடம் பாலியல் தொந்தரவு குற்றவாளிகளுக்கு ஆண்மை அகற்ற பரிந்துரை..dinamalar


சென்னை:குழந்தைகளிடம், பாலியல் தொந்தரவு செய்யும் குற்றவாளிகளுக்கு, ஆண்மை அகற்ற சட்டம் கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும் என்று, சென்னை ஐகோர்ட் பரிந்துரைத்துள்ளது.இங்கிலாந்தை சேர்ந்த டேவிட் வில்லியம்ஸ், தமிழகத்தில் ஏழை மாணவர்கள் காப்பகம் ஒன்றுக்கு, 2011ல் வந்தார். அந்த காப்பகத்தில் இருந்த, ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை, படிக்க வைப்பதாக கூறி, டில்லிக்கு அழைத்துச் சென்றார். மேலும், மாணவனின் தாய்க்கு, பண உதவியும் செய்துள்ளார்.

டில்லி, ஒய்.எம்.சி.ஏ., விடுதியில், தங்கியிருந்த போது, மாணவனுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்து, இயற்கைக்கு மாறாக உறவு கொண்டார். பின்னர், மாணவனை அங்கேயே விட்டு விட்டு, லண்டனுக்கு சென்று விட்டார்.பிறகு, அந்த மாணவன், சிலர் செய்த பண உதவியால், சென்னைக்கு திரும்பினான். மாணவனுக்கு நடந்த கொடுமையை அறிந்த, குழந்தைகள் நல அமைப்பு ஒன்று, போலீசில் புகார் செய்தது.

புகாரை பதிவு செய்த போலீசார், இது தொடர்பாக, மாஜிஸ்திரேட் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கில், வில்லியம்ஸ் மீது குற்றம்சாட்டி, குற்றப்பத்திரிகையை போலீசார் தாக்கல் செய்தனர்.

வில்லியம்ஸ் மீது, கோர்ட், பிடிவாரன்ட் பிறப்பித்தது . இதன் அடிப்படையில், வில்லியம்சை, தேடப்படும் குற்றவாளி என, இன்டர்போல் என்கிற சர்வதேச போலீஸ் அறிவித்தது.

தன் மீது பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவாரன்டையும், தன்னை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்துள்ளதையும், ரத்து செய்ய கோரி, சென்னை ஐகோர்ட்டில், வில்லியம்ஸ் மனு தாக்கல் செய்தார்.

மனுவில், 'டில்லியில் நடந்த சம்பவத்துக்கு, தமிழக போலீசார், வழக்கு பதிவு செய்ய முடியாது, தமிழக கோர்ட்டுக்கு விசாரிக்கவும் அதிகாரம் இல்லை.

மாணவனிடம் நான் எந்த தவறும் செய்யவில்லை. குழந்தைகள் நல அமைப்பு உள்நோக்கத்துடன், எனக்கு எதிராக வழக்கு பதிவு செய்துள்ளது' என கூறியிருந்தார்.

மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன் கூறியதாவது:

நாட்டில், குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள், அதிகரித்து வருகிறது, 2012ல், 38 ஆயிரத்து 172 வழக்குகளும், 2014ல், 89 ஆயிரத்து 423 வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களை தடுக்க, கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலியல் குற்றங்களில் இருந்து, குழந்தைகளை பாதுகாக்க பெற்றோரும், குடும்ப உறுப்பினர்களும், பள்ளி நிர்வாகமும், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களில், ஈடுபடும் குற்றவாளிகளுக்கு, அறுவை சிகிச்சை மூலம், ஆண்மை அகற்றும், தண்டனை வழங்கும் சட்டத்தை கொண்டு வருவது பற்றி, மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு நீதிபதி கிருபாகரன் தெரிவித்தார்.

NEWS TODAY 25.01.2026