Monday, October 26, 2015

அல்லல் படும் ஆதார்..தினகரன்


ஆதார் எண் - அமெரிக்காவில் எப்படி சமூக பாதுகாப்பு எண் முக்கியத்துவம் பெறுகிறதோ அந்த அளவுக்கு, இந்தியர்களுக்கு மிக முக்கியமானது என்றால் நிச்சயம் ஒப்புக்கொள்ள வேண்டும்; காரணம், எல்லா உரிமையும் உள்ள இந்தியர் என்று நாம் சொல்லிக்ெகாள்ள வேண்டுமானால், அதற்கான ஒரே அதிகாரப்பூர்வ அடையாளமாக அது வருங்காலத்தில் இருக்கும் என்று நம்பப்பட்டது. பாஸ்போர்ட் எப்படியோ அப்படி மிகுந்த பாதுகாப்பு அம்சங்களுடன் நடைமுறைப்படுத்த வேண்டிய ஆதார் அட்டை வழங்குவதில் தான் எவ்வளவு குழப்பங்கள்; குளறுபடிகள்; திருப்பங்கள். ஏன் இப்படி...? உச்ச நீதிமன்றம் தலையிட்டு, அதற்கு மத்திய அரசும் பணிந்து பயந்து நடுங்கி, தெளிவான விஷயங்களை சமர்ப்பித்து தன் தரப்பை வலுவாக எடுத்து காட்ட முடியாமல் தவிக்கிறதே...?

சுப்ரீம் கோர்ட்டும், இப்படி ஒரு தெளிவில்லாத, தனி மனிதனின் அடிப்படை உரிமை, சுதந்திரத்தை பறிக்கும் வகையிலான ஆதாரை எப்படி கட்டாயமாக்க முடியும் என்று திரும்ப திரும்ப அடித்து கேட்கிறதே? ஆதார் திட்டத்துக்காக நாடு முழுவதும் கணக்கெடுத்து பிரமாண்ட முறையில் நடைமுறை ஏற்பாடுகளை செய்ய சாப்ட்வேர் நிறுவன தலைவர் நந்தன் நிலகேனியை அமர்த்தி முந்தைய மன்மோகன் அரசு அதிரடி நடவடிக்கை எடுத்தது. ஆனால், மக்களவை தேர்தலுடன் நிலகேனி மூட்டை கட்டி விட்டு, காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து போட்டியிட்டு தோற்றார். அத்தோடு ஆதாரும், யாரும் உரிய நடவடிக்கை எடுக்காமல் அம்போ நிலைக்கு தள்ளப்பட்டது.

மோடி வந்ததும், ஆதார் வேண்டுமா, வேண்டாமா என்று ஒரு பட்டிமன்றமே நடந்து, கடைசியில் வேண்டா வெறுப்பாக அதை தொடர அனுமதித்தது அரசு. ஆதார் மூலம் தான் காஸ் மானியம், நலத்திட்ட உதவிகளை மோடி அரசு செய்தாலும், அதை முழுமையாக பயன்படுத்த முடியாமல் தவிக்கிறது.
மன்மோகன் அரசு செய்ததை தவிர, ஆதார் விஷயத்தில் எந்த மாற்றத்தையும் மோடி அரசு செய்யவே இல்லை. அதில் உள்ள பாதுகாப்பு அம்சங்கள் இவ்வளவு சர்ச்சைக்குரியதாக இருக்கும் என்று அறிந்தும் அரசு பெரிதாக எந்த மாற்றத்தையும் செய்யவில்லை என்பது தான் வருத்தமான விஷயம்.
ஆதார் திட்டம் ஆரம்பித்ததில் இருந்தே குழப்பம் தான்; நாடு முழுக்க, ஏன் தமிழ்நாட்டை எடுத்து கொண்டாலே, ஆதார் அட்டை பதிவுக்கு எந்த அளவுக்கு போலீஸ் தடியடி, குளறுபடிகள் நடந்தன என்பது தெரிந்ததுதான்.

பதிவு செய்வதில் ஆரம்பித்து, அட்டை தருவது வரைக்கும் பல கட்டங்களில் திடமான, வலுவான நடைமுறை பின்பற்றப்படவே இல்லை. இனியாவது மோடி அரசு விழித்தால் ஆதாருக்கு வழி பிறக்கும். இப்போது உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிற குறைகளை சரிவர ஆராய்ந்து, பரிசீலித்து பாதுகாப்பு அம்சங்களை கடுமையாக்க வேண்டும். ஆதாரை வைத்து தனி மனிதர்களுக்கு பிரச்னை வந்தால் அதை தீர்க்கவும், ஆதாரை தவறாக பயன்படுத்தினால் அதற்கு கடும் தண்டனை வழங்கவும் தேவையான திருத்தங்களை கொண்டு வந்து முழுமையாக பயன்படுத்தும் வகையில் செய்ய வேண்டும். அப்போது தான் ஆதார் அட்டைக்கும் ஒரு தேசிய அங்கீகாரம் கிடைக்கும். அதை இனியாவது செய்யுமா மத்திய அரசு?

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...