Friday, October 2, 2015

விமானம் பறக்கட்டும்... விமான நிலைய மேற்கூரையும் பறக்க வேண்டுமா?...vikatan



சுமார் 2,300 கோடி ரூபாய் செலவில் புதிதாக (?) கட்டப்பட்ட சென்னை விமான நிலைய வளாகத்தில், அவ்வப்போது மேற்கூரை மற்றும் கண்ணாடி தடுப்புகள் உடைந்து விழுவது அன்றாடச் செய்திகளில் ஒன்றாகி விட்டது. விமானம் பறக்கும் முன்பே மேற்கூரையும், சத்தம் போட்டு பேசினால் உடையும் கண்ணாடி தடுப்புகளும் சென்னை விமான நிலையத்தின் அடையாளங்கள்.

கடந்த 2013ஆம் ஆண்டு இந்த புதிய விமான நிலையம் திறக்கப்பட்ட பின்னர் இங்கு கண்ணாடி மேற்கூரைகள், தானியங்கி கண்ணாடி கதவுகள், தடுப்பு கண்ணாடிகள், விளக்கு கண்ணாடிகள் உடைந்து, நொறுங்கி விழும் சம்பவங்கள் இதுவரை 54 முறை நிகழ்ந்துள்ளன. கிரிக்கெட் வீர்களைப் போல தலைக்கவசம், கை, கால் மூட்டு கவசம் அணிந்து செல்லும் அளவிற்கு, எது எப்போது பறக்கும் என்பது தெரியாமல் ஒரு வித பயத்தில் 'பறக்கும் தட்டு' உலகத்தில் நடப்பது போன்ற அனுபவத்தை பயணிகள் பெற்றுள்ளனர்.

நம் பணத்தில் விமானத்தில் பறக்க கூட பல முறை சோதனை செய்வதும், உள்ளே வரக் கூட பணம் கட்டினால்தான் விமானத்தை கண்ணில் காண்பிக்கும் அரசு அதிகாரிகள், இப்படி ரூ.2300 கோடிகள் செலவழித்து கட்டப்பட்ட விமான நிலைய தரத்தை பரிசோதிக்காமல் விட்டு விட்டார்களா, இல்லை மறந்து விட்டார்களா? சி.பி.ஐ அதிகாரிகள் படை, கட்டாயம் விமான நிலைய ஒப்பந்ததாரர்களை நெருங்குவார்களா என்று கேள்வி கேட்கும் நிலையில் கூட, மேலும் பல பொருள்கள் உடைந்து சென்னை விமான நிலையம் 'சாதனையை' நோக்கி நடை போட்டு வருகிறது.

சென்னை விமான நிலையத்தில் இருந்து நாள் ஒன்றிற்கு சுமார் 342 விமானங்கள் இயக்கப்படுகின்றன. பல லட்சம் பேர் வந்து செல்லும் விமான நிலையத்தின் தரம் மற்றும் வெளிநாட்டினர் மத்தியில் இந்தியாவின் உள்கட்டமைப்பு வசதிகள் பற்றிய மதிப்பு போன்றவைகள் கேலிக்குரியதாக்கி உள்ளது. உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நிலையத்தில் அடிக்கடி இதுபோன்ற விபத்துகள் நடப்பதை பற்றி மத்திய அரசும் கண்டுகொள்ளவில்லை.

அரசு அனுமதி பெறாத கட்டடத்தை இடிக்கச் சொல்லும் நீதிமன்றம் அரசு ஆதரவு பெற்ற லஞ்ச ஊழல் ஒப்பந்ததாரர்களால் போடப்படும் மோசமான சாலைகள், கட்டப்படும் கட்டுமானங்கள், விமான நிலைய பராமரிப்பு பணியை கேள்வி கூட கேட்காத மர்மம் என்ன? சாலை, பாலம், கட்டடம் திறப்பு விழா என கட்சி விழாவாக கொண்டாடும் கட்சிகள், அடுத்த சில மாதங்களிலேயே பல்லைக் காட்டும் பாதாள குழிச் சாலைகள், பலவீனமான பாலங்களின் அவல நிலைக்கும் பொறுப்பேற்றுக் கொள்வார்களா?

கவனக் குறைவால் பணம் போட மறந்த காசோலை வழக்கிற்கு கூட கடுமை காட்டும் நீதிமன்றம், கோடிக்கணக்கில் கணக்கில்லாத பணத்தை வாரிச் சுருட்டும் அரசு ஒப்பந்த வேலைகள் பற்றி கடுமை காட்டாதது ஏன்? நூறு ரூபாய் திருடிய ஆண், பெண்ணை புகைப்படத்துடன் வெளியிடும் காவல் துறை, பல கோடி ஏப்பமிட்ட அரசியல்வாதிகள், அரசு அதிகாரிகள், ஒப்பந்த வேலை செய்த ஊழல்வாதிகளின் படங்களைப் போட முடியுமா?



அரசு ஒப்பந்தப் பணியில் உள்ள லஞ்சத்தை ஒழித்தாலே நாட்டின் கடனை அடைத்து விட முடியும். ப்ளெக்ஸ் போர்டு வைத்து, பொதுப்பணித் துறையை சேர்ந்த லஞ்ச அதிகாரிகளை அடையாளம் காட்டியும் நீதிமன்றம், லஞ்ச ஒழிப்புத் துறை தானாகவே வழக்கை விசாரிக்காமல், கண்டுகொள்ளாமல் போனது லஞ்சத்தின் பலம், நேர்மையானவர்களை விட அதிகம் என்பதை படம் போட்டு காட்டி விட்டது.

சென்னையை சிங்கப்பூராக்குவேன், கூவத்தை கோபுரமாக்குவேன், கடலை கடைந்து குடிநீர் தயாரிப்பேன் என பல கோடிகள் கொட்டி திட்டம் தீட்டி, இவர்களே ஊழலுக்கு வழி செய்து விட்டு, பின் கருப்பு பண மீட்பு அறிவிப்பும், வருமான வரித்துறை சோதனையும் செய்வது வேடிக்கையாக உள்ளது.

அரசு ஒப்பந்த வேலை தரம் உயர...

மத்திய, மாநில அரசு ஒப்பந்த வேலைகளை கண்காணிக்க, அதி நவீன குழுக்களை நீதிமன்றம் நியமிக்க வேண்டும். ஒப்பந்த வேலைக்கு தரச்சான்று, ஆயுள் உத்தரவாதம் அளிக்க சட்டம் வேண்டும். சான்று தவறாக அளிக்கும் பட்சத்தில், தவறும் பட்சத்தில் பணப்பட்டுவாடா நிறுத்தம், சொத்துக்கள் பறிமுதல், வாரிசுகள் அரசு வேலையில் சேரத் தடை வேண்டும்.

பொதுவாகவே அரசு ஒப்பந்த வேலைகளில் பல கட்டங்களில் பணம் கை மாறுவதாக செய்திகள் வருகின்றன. தேவை இல்லாமல் பணத்தைக் கொட்டி வேலை செய்வது, திட்ட மதிப்பீட்டு தொகையை அதிகமாக காண்பித்து 

பணத்தை கொள்ளை அடிப்பது, ஒப்பந்தம் போடுவதில் ஊழல், வேலையில் பயன்படுத்தப்படும் தரமற்ற பொருள்களின் பயன்பாடு, வேலையை கண்காணிக்காத அரசு அதிகாரிகள், பணம் பெறுவதில் என பலவகையான ஊழல் நடைபெறுவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. மேற்கண்ட விஷயங்களையும் லஞ்ச ஒழிப்பு, மத்திய புலானய்வு மற்றும் ஊழல் எதிர்ப்பு குழு கண்டறிந்தால் பெரும்பாலான அரசு வேலைகள் தரத்துடன் நடக்கும்.

ஒருவர் வாங்கும் லஞ்சப்பணம் பணத்தோடு, அவரோடு தொலைவதில்லை. தரமற்ற ஒப்பந்த வேலையால் பல கோடிபேரின் இயல்பு வாழ்க்கை பாதிப்பும், தரமற்ற விமான நிலைய பராமரிப்பால் நம் அரசைப்பற்றிய 'மானமும்' சேர்ந்தே பறக்கிறது.

லஞ்சத்தையும் ஊழலையும் ஒழிக்காத வரையில் ஸ்மார்ட் சிட்டி, தொழில் முனையம் எனப் பல பெயர்களில் பணத்தைக் கொட்டினாலும், விமான நிலையக் கூரை மற்றும் கண்ணாடி சிதைந்து உடைவதுபோல பணம் சிதறி ஓடும் என்பது உறுதி.

-எஸ்.அசோக்

No comments:

Post a Comment

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court

KWA Service | Once Appointed As Assistant Engineer, Right To Opt For Degree Or Diploma Quota For Promotion Remains Open: Supreme Court Prana...