Thursday, October 8, 2015

விருதுக்கு அவமரியாதை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 08 October 2015 01:57 AM IST


உத்தரப் பிரதேச மாநிலம், தாத்ரி அருகே பசுவின் கறியை உண்டதற்காக ஒரு முஸ்லிம் அடித்துக் கொல்லப்பட்ட விவகாரத்தில் தனது எதிர்ப்பைக் காட்டும் விதமாக சாகித்ய அகாதெமி விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார் பண்டித நேருவின் சகோதரி மகள் நயன்தாரா ஷகல். அவரைத் தொடர்ந்து அசோக் வாஜ்பாயும் விருதைத் திருப்பிக் கொடுத்துள்ளார்.
இதேபோன்று, இரு மாதங்களுக்கு முன்பு கர்நாடகத்தில் கொலை செய்யப்பட்ட, மூடநம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய எழுத்தாளர் கலபுர்கி கொலையில் தீவிர விசாரணையை வலியுறுத்தி, அவருடன் ஒரே மேடையில் கர்நாடக சாகித்ய அகாதெமி விருதுகள் பெற்ற ஆறு பேர் தங்கள் விருதுகளைத் திருப்பித் தந்தார்கள். தமிழகத்தைச் சேர்ந்த சாகித்ய அகாதெமி விருது பெற்ற இடதுசாரி சிந்தனை எழுத்தாளர்கள் தங்களது விருதையும் பரிசுப் பணத்தையும் திருப்பி அளிக்க வேண்டும் என்றுகூடக் கோரிக்கைகள் எழுகின்றன.
சாகித்ய அகாதெமி விருது அரசியல் கட்சிகளின் பரிந்துரையால் வழங்கப்படுபவை அல்ல என்பதை நாம் முதலில் கருத்தில் கொள்ள வேண்டும். ஓர் எழுத்தாளன் ஏதாவது ஓர் அரசியல் கட்சியையோ, சித்தாந்தத்தையோ சார்ந்தவராக இருக்கலாம். ஆனால், விருது வழங்கப்படுவது அவரது படைப்புக்காகத்தானே தவிர, அவரது அரசியல் தொடர்புக்காக அல்ல.
சில நேரங்களில் சில எழுத்தாளர்களின் அரிய நூல்களுக்கு விருது அளிக்கப்படாமல், அவர் எழுதிய சாதாரண புத்தகத்துக்கு விருது அளிக்கப்படும்போதும்கூட, விருதுக்கான நிபந்தனைக்காக அப்படி அமைந்து விடுகிறது என்பதே உண்மை. ஆயினும்கூட, அந்த எழுத்தாளரின் ஒட்டுமொத்த படைப்பாக்கத்துக்கான விருதாகவே, கௌரவமாகவே அது கருதப்படுகிறது.
இந்தியாவில் மகாத்மா காந்தி ஒத்துழையாமை இயக்கத்தைத் தொடங்கியபோது, கிலாபத் விவகாரத்தில் பிரிட்டிஷ் அரசின் அநீதியான போக்கைக் கண்டித்து, அன்றைய பிரிட்டிஷ் அரசால் தனக்கு போயர் போர், ஜூலு போர், தென் அமெரிக்காவில் சமூக சேவை ஆகியவற்றுக்காக அளிக்கப்பட்டிருந்த விருதுகளைத் திருப்பித் தந்தார். அன்றைய காலகட்டத்தில், மகாத்மா காந்தியைப் பின்பற்றி, பலரும் தங்கள் விருதுகளை பிரிட்டிஷ் அரசுக்குத் திருப்பிக் கொடுத்தார்கள். ராவ் பகதூர் பட்டங்களைத் துறந்தவர்களும் நிறையப் பேர். ஆனால், அது ஓர் அரசியல் போராட்டம். பிரிட்டிஷார் ஆட்சிக்கு எதிரான அந்தப் போராட்டத்தில் விருதுகளைத் தூக்கியெறிவதும்கூட, எதிரியின் மீது வீசப்படும் ஆயுதம்தான்.
ஆனால், இப்போது இந்தியாவில் நடப்பது மன்னராட்சி இல்லை. மக்களாட்சி. எல்லாரும் இந்நாட்டு மன்னர். இந்நிலையில் விருதைத் திருப்பிக் கொடுப்பதன் மூலம் எந்த அரசை, அல்லது எந்த அரசியல் கட்சியை, எந்த அரசியல் தலைவரை ஓர் எழுத்தாளர் அவமானப்படுத்துவதாகக் கருத முடியும்?
ஓர் அரசியல்வாதி தனக்கு அளிக்கப்பட்ட பதவியை, கொடுக்கப்பட்ட விருதைத் தூக்கி எறிவதில் அர்த்தமுள்ளது. ஆனால், ஒரு படைப்பாளி தனக்கான விருதைத் திருப்பிக் கொடுத்த பிறகு, அவர் படைப்பாளி அல்ல என்றாகி விடுவாரா? அல்லது விருது பெற்ற அவரது படைப்பு இலக்கியஅங்கீகாரத்தை இழந்துவிடுமா?
ஓர் இலக்கியவாதியின் கடமை தொடர்ந்து எழுதுவதுதான். படைப்பாளிக்கு எழுத்து மட்டுமே ஆயுதம். சமூகத்தின் ஏற்றத்தாழ்வு, அரசியல் அநீதிகளை இன்னும் படு தீவிரமாக, காத்திரமான எழுத்தில் முன்வைக்க வேண்டும். விருதுகளைத் திருப்பித் தருவதைக் காட்டிலும், இத்தகைய எழுத்துதான் அரசுக்கு மிகப்பெரும் நெருக்கடியை ஏற்படுத்தும், மக்கள் மத்தியில் விழிப்புணர்வைத் தரும்.
எந்தவொரு நாடும், சர்வாதிகார நாடு உள்பட, எழுத்தாளனின் காத்திரமான எழுத்துகளைத்தான் சகித்துக்கொள்ள முடியாமல் திணறும். அதை ஒடுக்க நினைக்கும். உலக வரலாற்றில் கவிகளும், படைப்பாளிகளும் கொல்லப்பட்டும், நாடு கடத்தப்பட்டும் இருக்கிறார்கள் என்றால், அதற்கு அவர்கள் எழுத்தும் படைப்பும்தான் காரணம்.
அரசினால் எதிர்கொள்ள முடியாத ஆயுதம் எழுத்துதான். மக்களாட்சி நடைபெறும் ஒரு நாட்டில், ஓர் ஆளும் கட்சி அநீதியை நிகழ்த்துமானால், ஒரு படைப்பாளி அதைத் தன் எழுத்தாலும் படைப்பாலும் எதிர்ப்பதுதான் சிறந்த வழியாக இருக்க முடியும். விருதுகளைத் திருப்பித் தருவதால் அரசுக்கு எந்தவிதப் பாதிப்பும் ஏற்பட்டுவிடாது. மாறாக, அந்த விருது வேறொரு கட்சியின் ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்டிருந்தால், அரசு அதை மகிழ்ச்சியுடன் வேடிக்கையாகவே பார்க்கும்.
தாத்ரி அருகே நடந்திருக்கும் சம்பவம் கண்டனத்துக்குரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. அதேநேரத்தில், பா.ஜ.க. ஆட்சிக்கு வருவதற்கு முன்பும்கூட காங்கிரஸ் உள்ளிட்ட ஏனைய கட்சிகளின் ஆட்சிக் காலத்திலும் இதேபோன்ற வன்முறைகள் இந்தியாவின் ஏதோ ஒரு மூலையில் நடந்து வந்திருக்கிறது என்பதை மறந்துவிடக் கூடாது. மீண்டும் காங்கிரஸ் ஆட்சி அமைந்தாலும்கூட இந்தியாவில் இத்தகைய தாக்குதல்கள் நடக்கவே செய்யும். இதற்காக இலக்கியவாதிகள் அனைவரும் எல்லா விருதுகளையும் திருப்பித் தருவது என்பது விருதை அவமதிப்பதாக இருக்குமே தவிர, அரசை எதிர்ப்பதாகவோ, விமர்சிப்பதாகவோ இருக்காது.
மத்தியில் ஆளும் கட்சி மதவாத அரசியலுக்கு ஆதரவாக நிற்பதால்தான் தாத்ரி கொலை அல்லது கலபுர்கி கொலை என்று படைப்புலகம் கருதுமேயானால், அவர்கள் அரசுக்கு எதிரான போராட்டத்தை எழுத்தின் மூலம்தான் நடத்த வேண்டும். ஒரு படைப்பாளிக்கு எழுத்துதான் கூரிய வாள். விருது, வெறும் தாள்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...