Friday, November 6, 2015

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!...vikatan

சென்னை: தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சேலம் மாவட்டத்தை சேர்ந்த பிரித்திகா யாஷினி, சப்-இன்ஸ்பெக்டர் தேர்வுக்காக விண்ணப்பித்த முதல் திருநங்கை. ஆணாக பிறந்தாலும் பின்னர் உடலில் ஏற்பட்ட பெண்மை உணர்வு காரணமாக, அறுவை சிகிச்சை செய்து கொண்டு பெண்ணாக மாறியவர். பிரித்திகா யாஷினி என்று தன் பெயரையும் மாற்றிக்கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன் தமிழக காவல்துறையில் சப்–இன்ஸ்பெக்டர் பணிக்கு அறிவிப்பு வெளியானபோது அதற்கு விண்ணப்பித்தார் பிரித்திகா. திருநங்கை என்ற காரணத்துக்காக அவருடைய விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து சென்னை உயர் நீதிமன்றத்தில், ரிட் மனு தாக்கல் செய்தார் பிரித்திகா.

மனுவை விசாரித்த நீதிமன்றம், எழுத்துத்தேர்வில் பிரித்திகாவை அனுமதிக்க உத்தரவிட்டது. அந்த தேர்வில் பிரத்திகா யாசினி கலந்துகொண்டு தேர்ச்சி பெற்றார். அடுத்து நடந்த உடல் தகுதி தேர்வில் ஓட்டப்பந்தயத்தில் ஒரு நொடி காலதாமதமாக வந்ததாக கூறி, பிரித்திகாவை தகுதி நீக்கம் செய்தது சீருடை பணியாளர் தேர்வாணையம்.

இதை எதிர்த்து மீண்டும் நீதிமன்றத்திடம் மனு செய்தார் பிரித்திகா. வழக்கு விசாரணைக்கு வந்தபோது, மனுதாரரை நேர்காணலில் அனுமதிக்க வேண்டும் என கறார் காட்டியது நீதிமன்றம். 

இதன் பின்னர் அவர் அனுமதிக்கப்பட்டு, எழுத்துத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தொடர்ந்து, 400 மீ. நீளம் தாண்டுதல், எறி பந்து ஆகிய போட்டிகளில் தேர்ச்சி பெற்றார். இறுதியாக 100 மீ ஓட்டப்பந்தயத்தில் 17.5 நொடிகளில் கடக்க வேண்டிய தூரத்தை 18.5 நொடிகளில் கடந்து தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டார்.

இந்த தேர்வு முடிவின் வீடியோ ஆதாரங்களை வைத்து, மறுபரிசோதனை செய்யுமாறு நீதிமன்றத்தில் கோரிய மனுவின் காரணமாக, மனிதாபிமான அடிப்படையில் மீண்டும் நடத்தப்பட்ட  100 மீ ஓட்டத்தில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில்,  பிரித்திகா யாசினி குறித்த வழக்கு இன்று (5-ம் தேதி) விசாரணைக்கு வந்தது. '
இதை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சய் கிஷன்கவுல் மற்றும் நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா, ''தமிழக காவல்துறையில் பணியாற்ற திருநங்கை பிரித்திகா யாசினி முழுதகுதி உடையவர். அவருக்கு எஸ்.ஐ. பணி வழங்க வேண்டும். அவர் அர்ப்பணிப்போடும், மற்ற திருநங்கைகளுக்கு உற்சாகம் அளிக்கும் வகையில் இருப்பார்.

எதிர்காலத்தில் மூன்றாம் பாலினத்தவர் கலந்து கொள்ளும் வகையில் தேர்வு முறையை மேற்கொள்ள வேண்டும்'' என்றும் உத்தரவிட்டனர்.
உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவின்படி, இந்தியாவில் எஸ்ஐ ஆகப்போகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி ஆவார்.   இதற்கு முன் இந்திய அளவில் 2 திருநங்கைகள் கான்ஸ்டபிளாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

சுகாதாரத் துறை அமைச்சரை நீக்க ராமதாஸ் வலியுறுத்தல்

Return to frontpage

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் விஜயபாஸ்கர் முயல்வது கண்டிக்கத்தக்கது என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.

மேலும், சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்றும் ராமதாஸ் கூறியுள்ளார்.

இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்திய முத்தரையர் சமுதாயத்தைச் சேர்ந்த 18 ஆயிரத்திற்கு மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்து சட்டவிரோத காவலில் வைத்துள்ளனர். அமைச்சரின் தூண்டுதலால் ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு எதிராக அடக்குமுறை கட்டவிழ்த்து விடப்பட்டிருப்பது கண்டிக்கத்தக்கது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுக செயலாளராகவும், சுகாதாரத்துறை அமைச்சராகவும் பதவி வகித்து வரும் விஜயபாஸ்கருக்கு எதிராக பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. உள்ளூரில் மக்கள் நலப் பணிகளை செய்வதில் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாகவும் புகார்கள் கூறப்படுகின்றன.

இந்த நிலையில், புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி ஒன்றிய பெருந்தலைவர் கெங்கையம்மாள், கருப்பட்டிப்பட்டி ஊராட்சி மன்றத் தலைவர் சொக்கலிங்கம் , ஊராட்சி ஒன்றியக் குழு உறுப்பினர்கள் திருநாவுக்கரசு, கணேசன் ஆகியோர் தங்கள் பகுதியில் மருத்துவமனை அமைத்துத் தரும்படி கோரிக்கை வைப்பதற்காக கடந்த சில நாட்களுக்கு முன் அமைச்சர் விஜயபாஸ்கரை அவரது இல்லத்தில் அனுமதி வாங்கி சந்தித்திருக்கின்றனர். அவர்கள் அனைவரும் அதிமுகவை சேர்ந்தவர்கள் என கூறப்படுகிறது.

அவர்களை வீட்டுக்குள் அழைத்த அமைச்சர் விஜயபாஸ்கர், ‘‘ எனக்கு எதிராக கொடி பிடிக்கிறீர்களா? வலையர் (முத்தரையர்) சாதியை சேர்ந்த உங்களால் என்னை எதுவும் செய்யமுடியாது’’ என்பதில் தொடங்கி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

பெண் என்றும் பார்க்காமல் இப்படி திட்டுவது சரியா எனக் கேட்ட போது, ஊராட்சி ஒன்றியத் தலைவர் கெங்கையம்மாள் மற்றும் அவருடன் சென்றவர்களுக்கு அமைச்சர் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் அச்சமடைந்த அவர்கள் அமைச்சர் விஜயபாஸ்கருக்கு எதிராக காவல் நிலையத்திலும், காவல்துறை உயரதிகாரிகளிடமும் புகார் கொடுத்துள்ளனர். ஆனால், அவற்றை ஏற்றுக் கொள்ள காவல்துறை அதிகாரிகள் மறுத்து விட்டனர். மாறாக அமைச்சர் தூண்டுதலில் அவர்கள் மீண்டும் மிரட்டப்பட்டுள்ளனர்.

முத்தரையர் சமுதாயத்தை அவமதிக்கும் வகையிலும், இழிவுபடுத்தும் வகையிலும் பேசிய அமைச்சர் விஜயபாஸ்கரைக் கண்டித்து புதுக்கோட்டை, ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, தஞ்சாவூர், திருச்சி, பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் கூடுதலான முத்தரையர்கள் புதுக்கோட்டை நகரில் இன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி, மீமிசல், திருமயம், இச்சடி உள்ளிட்ட பகுதிகளிலும் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் அனைவரையும் கைது செய்த காவல்துறையினர் புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய நகரங்களில் 20 மண்டபங்களில் அடைத்து வைத்திருக்கின்றனர். விஜயபாஸ்கருக்கு எதிராக போராட்டம் நடத்தியதற்காக அவர்கள் மிரட்டப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

புதுக்கோட்டை மாவட்ட அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் அவர்களுக்குள் பேசித் தீர்க்கப்பட வேண்டிய ஒன்றாகும். அதிமுகவில் தமக்கு பிடிக்காதவர்களை அவர்களின் சமூகத்தின் பெயரைக் கூறி அருவருக்கத்தக்க வார்த்தைகளால் அமைச்சர் திட்டியிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது ஆகும்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பல சமூகங்களைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக வாழ்ந்து வருகின்றனர். அரசியல் சுயநலத்திற்காக அவர்களிடையே மோதலை ஏற்படுத்த அமைச்சர் முயல்வது கண்டிக்கத்தக்கது. இதுபோன்ற செயல்களை அதிமுக ஆதரிக்கிறதா என்பதை முதலமைச்சர் ஜெயலலிதா விளக்க வேண்டும்.

அனைத்து சமுதாயத்தினரும் ஒற்றுமையாக வாழ வேண்டும் என்பதில் ஜெயலலிதாவுக்கு அக்கறை இருந்தால் சமூக அமைதியை சீர்குலைக்க முயலும் விஜயபாஸ்கரை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டும். அதுமட்டுமின்றி, போராட்டம் நடத்தியதற்காக கைது செய்யப்பட்டவர்கள் அனைவரையும் விடுதலை செய்வதுடன், பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகார் மனு மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

அஜித்தின் 'வேதாளம்' - அதிரும் 20 தெறிப்புகள்! ......ஸ்கிரீனன்



இயக்குநர் சிவா இயக்கத்தில் அஜித், லட்சுமி மேனன், ஸ்ருதிஹாசன், கபீர்கான் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் 'வேதாளம்'. அனிருத் இசையமைப்பில் உருவாகி இருக்கும் படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்திருக்கிறார்.

தீபாவளி அன்று பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது 'வேதாளம்'. அப்படத்தைப் பற்றிய தகவல்கள்:

* இரண்டு கெட்டப்களில் நடித்திருக்கிறார் அஜித். படத்தின் தற்போதைய காலகட்டத்தில் 'விநாயகா' என்ற பாத்திரத்திலும், ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் 'வேதாளம்' என்ற பாத்திரத்திலும் நடித்திருக்கிறார். ஃப்ளாஷ்பேக் பாத்திரத்தின் பெயரைப் படத்தின் பெயராக வைக்கலாம் என்று சிவாவிடம் சிபாரிசு செய்திருக்கிறார் அஜித்.

* ஆக்‌ஷன் கதை என்றாலும் காமெடி அதகளம் அதிகமாக இருக்கும் என்கிறது படக்குழு. சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், பால சரவணன், ‘ஆதித்யா டி.வி.’ தாப்பா, மகேந்திரன் என ஒரு பெரிய காமெடி பட்டாளமே இப்படத்தில் இருக்கிறது. அஜீத் - சூரி இருவர் மட்டுமே நடித்த மிகப்பெரிய காமெடி சீனை மட்டும் இரண்டு நாட்களுக்குப் படமாக்கியிருக்கிறார்கள்.

* 'வேதாளம்' படத்தின் டீஸரைப் பார்த்து, இது பேய் படம் என்று அனைவருமே நினைத்தார்கள். ஆனால், இது பேய் படமல்ல என்று மறுப்பு தெரிவித்திருக்கிறது படக்குழு.

* அஜித்தைப் போன்று நமக்கு ஒரு அண்ணன் இல்லையே என்று பெண்கள் ஏங்கும் வகையில் அஜித் - லட்சுமி மேனன் காட்சிகளை இப்படத்தில் வைத்திருக்கிறார் இயக்குநர் சிவா.

* 'வீர விநாயகா' பாடல் தான் படத்தின் முதல் பாடலாக அமையவிருக்கிறது. கொல்கத்தாவில் படுவிமர்சையாக கொண்டாப்படும் விநாயகர் சதுர்த்தியின் போது இப்பாடலை அஜித் பாடி ஆடுவது போல காட்சிப்படுத்தி இருக்கிறார்கள். ஷோபி மாஸ்டர் இப்பாடலுக்கு நடனம் அமைத்திருக்கிறார். லட்சுமி மேனன், சூரி இருவரும் அஜித்துடன் இப்பாடலில் ஆடியிருக்கிறார்கள்.

* மொத்தம் 100 நாட்களில் படப்பிடிப்பு முடிப்பது என்று திட்டமிட்டார்கள். இடையே ஒரு சில தடங்கல்கள் ஏற்பட, இறுதிகட்டத்தில் இரவு, பகலாக பணிபுரிந்து மொத்த படத்தையும் முடித்திருக்கிறார்கள். சென்சார் அதிகாரிகள் இப்படத்துக்கு 'யு' சான்றிதழ் அளித்திருக்கிறார்கள்.

* சென்னை, கொல்கத்தா, இத்தாலி ஆகிய மூன்று இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது. சென்னையில், பெரம்பூர் பின்னி மில், மீனம்பாக்கம் பின்னி மில், மோகன் ஸ்டுடியோ, கிண்டி ரேஸ் கோர்ஸ், வடபழனி மலர் ஹாஸ்பிட்டல், ஃபிலிம் சிட்டி, மணி மஹால், தரமணியில் உள்ள ஐடி நிறுவனம் ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடைபெற்று இருக்கிறது.

* கொல்கத்தாவில் விக்டோரியா அரண்மனைக்கு அருகிலும், ஹவுரா பிரிட்ஜிலும் வெளிப்புறக் காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. கொல்கத்தாவில் வீட்டிற்குள் நடக்கும் காட்சிகளை எல்லாம் சென்னையில் அரங்குகள் அமைத்து காட்சிப்படுத்தி இருக்கிறார்கள்.

* 'ஆதவன்' படத்தில் வரும் கப்பல் காட்சி படமாக்கப்பட்ட இடத்திலேயே இப்படத்தில் வரும் ஒரு கப்பல் காட்சியும் படமாக்கப்பட்டு இருக்கிறது. இத்தாலியில் உள்ள மிலான் நகரத்தில் ஒரு பாடல் மற்றும் சண்டைக்காட்சியைப் படமாக்கியிருக்கிறார்கள்.

* அஜித்தின் தங்கையாக நடித்திருக்கும் லட்சுமி மேனனின் கதாபாத்திரப் பெயர் 'தமிழ'். ஓவியம் வரைவதில் ஆர்வம் உள்ள பாத்திரத்தில் நடித்திருக்கிறார்.

* கால் டாக்ஸி நிறுவனம் நடத்தி வருவபவராக நடித்திருக்கிறார் சூரி. அவரிடம் டிரைவராக பணிபுரியும் பாத்திரத்தில் அஜித் நடித்திருக்கிறார்.

* 'வேதாளம்' பாத்திரக் காட்சிகளில் ஸ்ருதிஹாசன் மற்றும் சூரி இருவருமே கிடையாது. லட்சுமி மேனனும் ஒரு சில காட்சிகளில் தான் வருவார். 'வேதாளம்' பாத்திரத்தின் நண்பராக அப்புக்குட்டியும், தந்தையாக தம்பி ராமையாவும் நடித்திருக்கிறார்கள்.

* இப்படத்தில் ஏகப்பட்ட சண்டைக்காட்சிகள் இருக்கின்றன. கிண்டி ரேஸ் கோர்ஸில் ஒரு சண்டைக்காட்சி, பெரம்பூர் பின்னி மில்லில் இரண்டு சண்டைக்காட்சிகள், ஃபிலிம் சிட்டியில் ஒரு சண்டைக்காட்சி, மோகன் ஸ்டுடியோவில் இரண்டு சண்டைக்காட்சிகள், இத்தாலியில் ஒரு சண்டைக்காட்சி படமாக்கி இருக்கிறார்கள். அஜித்தின் நண்பரான சில்வா சண்டைக்காட்சிகளை வடிவமைத்திருக்கிறார்.

* அஜித்தும், லட்சுமி மேனனும் ஹவுரா ரயில் நிலையத்தில் வந்திறங்கும் காட்சி தான், அஜித்தின் முதல்காட்சியாக படத்தில் வரவிருக்கிறது.

* அஜித் - ஸ்ருதிஹாசன் இருவருக்கும் இடையே காதல் காட்சிகள் என்பதே கிடையாது. 'நீ நல்லவன், அதனால உன்னைப் பிடிச்சிருக்கு' என்ற வசனத்தை அடிக்கடி அஜித்தைப் பார்த்து கூறுவார் ஸ்ருதி ஹாசன். இப்படத்தில் வழக்கறிஞராக நடித்திருக்கிறார் ஸ்ருதிஹாசன். பால சரவணன், ‘லொள்ளு சபா’ சாமிநாதன் ஆகியோர் ஸ்ருதிஹாசனோடு வரும் நண்பர்களாக நடித்திருக்கிறார்கள்.

* கொல்கத்தா ரோட்டில் அஜித் - வில்லன்கள் துரத்தல் காட்சியிலும் மற்றும் இத்தாலி கப்பலில் எடுக்கப்பட்ட சண்டைக்காட்சியில் மிகவும் துணிச்சலுடன் ரிஸ்க் எடுத்து நடித்திருக்கிறார் அஜித்.

* உலகம் முழுவதும் இதுவரை 1000-க்கும் அதிகமான திரையரங்குகள் ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறது. படம் வெளியாவதற்கு முந்தைய நாள் தான் எத்தனை திரையரங்குகள் என்பதன் சரியான கணக்கு தெரியும்.

* டப்பிங்கின் போது காட்சிகளை எல்லாம் பார்த்துவிட்டு, "மீண்டும் நாம ஒரு படம் பண்ணலாம் சிவா" என்று கேட்டிருக்கிறார் அஜித். எப்போது என்பது விரைவில் தெரியவரும்.

* நவம்பர் 10ம் தேதி தீபாவளி அன்று வெளியாக இருக்கும் இப்படத்துக்கு இப்போதே அஜித் ரசிகர்கள் கட்-அவுட் எல்லாம் வைக்க தயாராகி வருகிறார்கள்.

* இதுவரை எந்த ஒரு தமிழ் படமும் போலந்து நாட்டில் வெளியானதில்லை. 'வேதாளம்' தான் முதன் முதலில் போலந்து நாட்டில் வெளியாகிறது.

காணாமல் போகும் குழந்தைப் பருவம்

Dinamani


By ரமாமணி சுந்தர்

First Published : 06 November 2015 01:29 AM IST


நமது நாட்டில், ஒரு காலத்தில் ஆண் பிள்ளைகளுக்கும் பெண் பிள்ளைகளுக்கும் குழந்தைப் பருவத்திலேயே திருமணம் செய்து வைப்பது மிகவும் சகஜம். திருமணம் ஆன ஒரு சில ஆண்டுகளிலேயே துரதிருஷ்டவசமாக கணவன் இறந்து விட்டால், அந்தப் பெண்ணின் தலை முடியை மழித்து, அவளை விதவைக் கோலம் பூண வைத்து, வாழ்நாள் முழுவதும் நான்கு சுவர்களுக்குள் பூட்டி வைத்து கொடுமைப் படுத்தியதைப் பற்றி நாம் எல்லோரும் கேள்விப்பட்டிருக்கிறோம்.
ஆண்களைப் பொருத்தவரையில், மனைவி இறந்து விட்டால் இருக்கவே இருக்கிறது மறு கல்யாணம். இப்படிப்பட்ட பொம்மைக் கல்யாணங்கள் நாட்டில் வெகுவாகக் குறைந்துவிட்டன. பெண் பிள்ளைகள் மற்றும் ஆண் பிள்ளைகளின் சராசரி திருமண வயது அதிகரித்துக் கொண்டு வருகின்றது என்றாலும், பதின் பருவ (டீன் ஏஜ்) திருமணங்கள் நாட்டில் இன்னமும் நடந்து கொண்டுதான் இருக்கின்றன என்பது பலருக்குத் தெரியாத ஓர் உண்மை.
உலகிலேயே குழந்தைப் பருவத் திருமணங்கள் அதிகமாக நடப்பது வங்க தேசம், நேபாளம், இந்தியா போன்ற நாடுகளைக் கொண்ட தெற்கு ஆசியா மற்றும் ஆப்பிரிக்கா போன்ற பகுதிகளில் தான் என்று புள்ளிவிவரங்கள் சொல்கின்றன.
உலகளவில், 18 வயதிற்குள் உள்ள மணமகள்களில் மூன்றில் ஒருவர் இந்தியப் பெண் என்ற விவரத்தை வெளியிட்டுள்ளது ஐக்கிய நாட்டு அமைப்பு (UNICEF). நமது நாட்டில், 2011-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 15-18 வயது உள்ளவர்களில் சுமார் பத்து விழுக்காடு பெண்களும், 10-14 வயது உள்ளவர்களில் மூன்று விழுக்காடுப் பெண்களும் திருமணம் ஆனவர்கள். 10-19 வயது வரையுள்ள பெண்களில், 1.70 கோடி பெண்களுக்குத் திருமணம் ஆகிவிட்டது.
பிகார், ராஜஸ்தான், ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், குஜராத், ஆந்திரம் - தெலங்கானா போன்ற மாநிலங்களில் பெரும்பான்மையான பெண்களுக்கு 18 வயதுக்குள் திருமணம் செய்து வைத்து விடுகிறார்கள். இதில் 15 வயது நிறைவடைவதற்குள்ளேயே திருமணம் செய்து கொள்ளும் பெண்களும் அடக்கம். நகரங்களைவிட கிராமப்புறங்களிலும், ஏழ்மை நிலையில் உள்ள குடும்பங்களிலும், அதிகம் கல்வி பெறாத பெண்களுக்கும், பதின் பருவத்தில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.
இளம் வயதுத் திருமணங்களால் ஆண்களைவிட அதிகம் பாதிக்கப்படுவது பெண்களே என்று ஆய்வுகள் கூறுகின்றன. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள், உடலும், மனமும் பக்குவமடையாத பருவத்தில் கருவுற்று உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் பெரிதும் பாதிக்கப்படுகிறார்கள். தாங்களே குழந்தைப் பருவத்தைத் தாண்டாத நிலையில் கருவுற்று, ஒரு குழந்தைக்குத் தாயாகும் நிலைக்குத் தள்ளப்படுகிறார்கள்.
பாதுகாப்பான உடலுறவு, குடும்பக் கட்டுப்பாடு போன்றவற்றைப் பற்றியெல்லாம் அதிகம் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதால், இவர்கள் திருமணமான உடனேயே தாய்மை அடைவதற்கான வாய்ப்புகளும், அதிக எண்ணிக்கை குழந்தைகளைப் பெற்றெடுப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. மிகவும் இளம் வயதில் ஏற்படும் மகப்பேறு, தாய் - சேய் நலனுக்கு ஆபத்து விளைவிக்கலாம்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் மனித உரிமைக்குப் புறம்பானது. இப்பெண்களால் முழுமையாகக் கல்வி கற்க முடிவதில்லை. அதனால், அவர்கள் வேலைவாய்ப்புகளை இழக்க நேரிடுகிறது. இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் பெரும்பாலும் தங்களைவிட மிக அதிக வயதான ஆண்களையே மணக்க நேரிடுகிறது.
அதன் காரணமாக குடும்பத்திலும், வெளி உலகத்திலும் இப்பெண்கள் தங்கள் உரிமைகளை நிலைநாட்ட முடிவதில்லை. இவர்கள் குடும்ப வன்முறைக்கும் அதிகமாக ஆளாகுகிறார்கள் என்று சொல்லப்படுகிறது.
1929-ஆம் ஆண்டே, இப்படிப்பட்டத் திருமணங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கத்துடன் குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்பாடு செய்யும் சட்டம் (Child Marriage Restraint Act, 1929) ஒன்றை, ஆங்கிலேய அரசு நிறைவேற்றியது.
சாரதா சட்டம் என்று பரவலாக அறியப்பட்ட அந்தச் சட்டத்தில், பெண்களுக்குத் திருமண வயது 15 என்றும், ஆண்களுக்கு 18 என்றும் அறிவிக்கப்பட்டது. ஆனால், இதற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்புத் தெரிவிக்கவே, அவர்களுக்கென்று தனிப்பட்ட சட்டம் (Muslim Personal Law (Shariat) Application Act of 1937) ஒன்று, கொண்டுவரப்பட்டது.
இந்தச் சட்டத்தின்படி குறைந்தபட்ச திருமண வயது என்ற நிபந்தனையின்றி, பெற்றோர்களின் அனுமதியுடன் இஸ்லாமியர்கள் எந்த வயதிலும் திருமணம் செய்து கொள்ளலாம். நாடு சுதந்திரம் அடைந்த பிறகு 1929-ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட சட்டத்தில், (இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு) பல முறை மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக, 1978-ஆம் ஆண்டு, குறைந்தபட்ச திருமண வயது பெண்களுக்கு 18 என்றும், ஆண்களுக்கு 21 என்றும் உயர்த்தப்பட்டது.
1929-இல் அமலுக்கு வந்த குழந்தைத் திருமணங்களைக் கட்டுப்பாடு செய்யும் சட்டத்தில் உள்ள குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், குழந்தைத் திருமணங்களைத் தடை செய்யும் சட்டம், 2006 (Prohibition of Child Marriage Act, 2006 - PCMA) என்ற புதிய சட்டம் நவம்பர் 2007-லிருந்து அமலுக்கு வந்துள்ளது.
இந்தப் புதிய சட்டம், குழந்தைத் திருமணங்களை கட்டுப்படுத்துவதற்குப் பதில், தடுப்பதற்கான விதிமுறைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் புதிய சட்டத்தின் படி, 18 வயதிற்குள் பெண்ணிற்கோ, 21 வயதிற்குள் ஆண்பிள்ளைக்கோ திருமணம் செய்து வைத்தால், இரண்டு ஆண்டு சிறைத் தண்டனை அல்லது ஒரு லட்சம் ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும்.
இந்தச் சட்டம் இந்து, சீக்கிய, கிறிஸ்துவ மற்றும் சமண மதங்களைச் சார்ந்தவர்களுக்கு மட்டுமே. இஸ்லாமியர்களின் திருமண வயது அவர்களுடைய ஷரியத் மற்றும் நிக்காஹ் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட விதிகளின் படி (personal law) தீர்மானிக்கப்படுகிறது.
தேசிய குற்றவியல் துறை வெளியிடும் புள்ளிவிவரங்களின்படி குழந்தைத் திருமணங்களைத் தடைச் செய்யும் சட்டம் 2006-இன் கீழ், 2014-ஆம் ஆண்டில் 280 குற்றங்களும், 2013-ஆம் ஆண்டில் 222 குற்றங்களும் மட்டுமே பதிவாகியுள்ளன. இத்தனை குறைவான எண்ணிக்கை குற்றங்களே பதிவாகியுள்ளன என்பது, இந்தச் சட்டத்தை அமல்படுத்துவதில் உள்ள நடைமுறைப் பிரச்னைகளையும், குழந்தைத் திருமணங்களை நடத்தி வைப்பவர்களைக் கைது செய்வதில் உள்ள கஷ்டங்களையும் எடுத்துக் காட்டுகின்றன.
பெண் குழந்தைகளுக்கு, பெற்றோர்கள் இளம் வயதிலேயே திருமணம் செய்து வைத்துவிட வேண்டும் என்று ஏன் அவசரப்படுகிறார்கள்? பெரும்பாலான பெற்றோர்கள் பெண் குழந்தைகளை சுமையாக நினைக்கிறார்கள். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ, அவ்வளவு சீக்கிரத்தில் பெண்ணை ஒருவர் கையில் பிடித்துக் கொடுத்துவிட வேண்டும் என்பதே இவர்கள் குறிக்கோள்.
திருமணமாகாத பெண்ணை வீட்டில் வைத்திருப்பது பாதுகாப்பின்மை என்று எண்ணும் பெற்றோர்களும் உள்ளனர். பல கிராமங்களில் உயர்நிலைப் பள்ளிகள் இல்லாததால், பெண் குழந்தைகள் கல்வியைத் தொடர முடிவதில்லை. பெற்றோர்கள் தன் பெண் பிள்ளைகளுக்குச் சிறு வயதிலேயே திருமணம் முடிப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.
சிறு பெண்ணாக இருக்கும் பொழுதே திருமணம் செய்து விட்டால், வரதட்சணை குறைவாகக் கொடுத்தால் போதும் என்று கணக்குப் போடுபவர்களும் உண்டு.
பெண் குழந்தைகளின் திருமண வயதை அதிகரிக்க வைக்க மத்திய, மாநில அரசுகள் பல திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. 1994-ஆம் ஆண்டில் ஹரியாணா அரசு, "அப்னி பேட்டி அப்னி தன்' (எனது பெண் எனது சொத்து) என்ற திட்டத்தை அறிவித்தது.
இத்திட்டத்தின் படி, 18 வயது வரையில் திருமணம் ஆகாமல், உயர் நிலைக் கல்வியை முடிக்கும் பெண் குழந்தைக்கு கணிசமான தொகை வழங்குவதாக பெற்றோர்களுக்கு அரசு ஆரம்பத்திலேயே உறுதியளித்து, நிதிப் பத்திரம் ஒன்றை வழங்குகிறது.
ஹரியாணாவின் இத் திட்டத்தைத் தொடர்ந்து, பிகார், ஜார்க்கண்ட், குஜராத், மத்தியப் பிரதேசம், ஆந்திரம், கர்நாடகம், இமாசலப் பிரதேசம் போன்ற பல மாநிலங்களும், மத்திய அரசும் (தனலக்ஷ்மி திட்டம்) நிபந்தனையுடன் ரொக்கப் பணம் வழங்கும் திட்டங்களைச் செயல்படுத்தி வருகின்றன.
உயர் நிலைப் பள்ளி இல்லாத கிராமங்களில் வாழும் பெண்களுக்காக, குறிப்பாக தாழ்த்தப்பட்ட வகுப்பினருக்காக பள்ளி விடுதிகள், பள்ளிக்குச் சென்று வர சைக்கிள், பள்ளிப் படிப்பை பாதியில் கைவிட்டப் பெண்களுக்காக வேலைவாய்ப்புடன் கூடிய தொழில்கல்வி என்று, பெண்களின் திருமணத்தை குறைந்தபட்சம் 18 வயது வரையில் தள்ளி வைக்க பல திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
ஆயினும் சட்டங்களினாலும், அரசின் திட்டங்களினாலும் மட்டுமே குழந்தைத் திருமணங்களைத் தடுக்க முடியாது. பெண் குழந்தைகளைப் பற்றிய பெற்றோர்களின் மனோபாவம் மாற வேண்டும்.
பெண் குழந்தைகள் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளைப் பெற்றெடுக்க மட்டுமே பிறவி எடுக்கவில்லை. அவர்களாலும் குடும்பத்திற்காகவும், நாட்டிற்காகவும் சாதிக்க முடியும் என்பதைப் பெற்றோர்கள் உணர வேண்டும். பெண்களையும் சரிசமமாகப் படிக்க வைத்து அவர்களுக்கும் வாய்ப்புகளை உருவாக்குவதன் மூலமே இப்பிரச்னைக்குத் தீர்வு காண முடியும்.
இளம் வயதில் திருமணம் செய்து கொள்ளும் பெண்கள் தங்கள் குழந்தைப் பருவத்தை இழக்க நேரிடுகிறது. இது அவர்களின் மனித உரிமைக்குப் புறம்பானது. இப்பெண்களால் முழுமையாகக் கல்வி கற்க முடிவதில்லை.

இது இப்படித்தான்!

Dinamani

By ஆசிரியர்

First Published : 05 November 2015 01:40 AM IST


வோக்ஸ்வேகன் கார் நிறுவனம் இந்தியாவில் விற்பனை செய்துள்ள மூன்று விதமான டீசல் கார்களின் புகை மாசு குறித்து சோதித்ததில், "குறிப்பிடத்தக்க விதிமீறல்' இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, இந்திய அரசு இந்தக் கார் நிறுவனத்துக்கு காரணக்கேட்பு கடிதம் அனுப்பியுள்ளது.
இந்திய வாகனங்கள் ஆய்வுக் கழகம் நடத்திய சோதனையில், வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஜெட்டா, ஆடி ஏ4, வென்ட்டோ ஆகிய மூன்று வகை கார்களிலும் புகை மாசு தொடர்பாக இந்த நிறுவனம் உறுதி கூறிய அளவைவிடக் கூடுதலாக நச்சுப்புகை வெளிப்படுவது தெரியவந்துள்ளது.
இந்தச் சோதனை திடீரென நடத்தப்படவில்லை. அமெரிக்கா அரசு இந்த கார் நிறுவனத்தின் மோசடியைக் கண்டுபிடித்து, ஒவ்வொரு காருக்கும் 37,500 அமெரிக்க டாலர் அபராதம் விதித்தது. அதன்படி, அமெரிக்காவில் இந்த நிறுவனம் விற்பனை செய்துள்ள 4.82 லட்சம் கார்களுக்கு மொத்தம் 1,800 கோடி அமெரிக்க டாலர் அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இந்த நிறுவனத்தின் பங்கு மதிப்பு 40% வீழ்ச்சியடைந்து, வணிகமும் படுத்துவிட்ட நிலையில், இனி இவர்கள் மீண்டெழுவார்கள் என்பதே சந்தேகம்தான்.
இந்த கார் நிறுவனம் தனது கார்களில் ஒரு மென்பொருளைப் பொருத்தியுள்ளது. இந்த மென்பொருள் கார்கள் நின்ற நிலையில் இயங்கும்போது வெளிப்படும் புகையின் நச்சுப் பொருளை (கார்பன் மோனாக்ûஸடு, நைட்ரஜன் ஆக்ûஸடு, ஹைட்ரோ கார்பன் அளவை) கட்டுப்படுத்தும். ஆனால், வாகனம் சாலையில் ஓடும்போது இந்த மென்பொருள் இயங்காது. எந்தக் கட்டுப்பாடும் இல்லாமல் புகையில் நச்சுப் பொருள் வெளியேறும்.
இந்நிறுவனம் நுகர்வோரிடம் உறுதி கூறும் அளவைக் காட்டிலும் 10% முதல் 40% அதிகமாக நச்சுப்புகை இருப்பதை அமெரிக்க வாகன ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர். இதையடுத்து, அமெரிக்காவில் வோக்ஸ்வேகன் கார் விற்பனை நிறுத்தப்பட்டது. பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி நாடுகள் இந்த நச்சுப்புகை குறித்து ஆய்வைத் தொடங்கியுள்ளன. சீனாவில் இந்நிறுவனம் டீசல் கார்கள் விற்பதற்கு 2003 முதலாகவே தடை உள்ளது. பெட்ரோல் கார்கள் மட்டுமே அங்கே விற்பனை செய்கிறார்கள். இந்நிலையில், இந்தப் பிரச்னை எழுந்தவுடன் இந்தியாவும் இந்தக் கார்களில் சோதனை நடத்த உத்தரவிட்டு, தற்போது முடிவுகள் இந்நிறுவனத்தின் விதிமீறல்களை வெளிப்படுத்தியுள்ளன.
அமெரிக்கா, ஐரோப்பாவில் இத்தகைய நச்சுப்புகைக்கு மிகப்பெரும் முக்கியத்துவம் தரப்படுகிறது என்றால், இந்தியாவில் அவ்வாறான முக்கியத்துவம் இல்லை. இந்தியாவில் வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் ஆடி ஏ4, வென்ட்டோ, ஜெட்டா டீசல் கார்கள் வைத்திருப்போர் எண்ணிக்கை மிகக் குறைவு. மேலும், இந்த நிறுவனம் தங்கள் விற்பனையின்போது நுகர்வோருக்கு கூறும் அளவை விட நச்சுப்புகை அதிகம் என்பது அமெரிக்க ஆய்வின் முடிவு. ஆனால், அமெரிக்க நச்சுப்புகை அளவுகோல் மிகவும் குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் அதைவிட இரு மடங்கு அதிகம்.
தில்லி உள்ளிட்ட பல பெருநகர்களில் ஒரு கிலோ மீட்டருக்கு 2.5 கிராம் கார்பன் மோனாக்ûஸடு நச்சுப்புகை அனுமதிக்கப்பட்ட அளவு. மற்ற நகர்களில் இன்னும் அதிகம். இந்த அளவும்கூட ஏட்டில்தான் உள்ளது, நடைமுறையில் இல்லை. இங்கு இதைக் கண்டறியும் நடவடிக்கை மற்றும் கட்டுப்பாடுகள் இல்லை. ஒரு டீசல் கார் உற்பத்தியாளர் கூறிக்கொள்ளும் அளவைக் காட்டிலும் நச்சுப்புகை அதிகம் வெளிப்படும் என்றால், அந்தக் கார் தயாரித்த நிறுவனத்துக்கு என்ன அபராதம் என்பது குறித்து எந்தவிதமான தெளிவும் இந்திய அரசிடம் இதுவரை இல்லை.
ஜெனரல் மோட்டார்ஸ் 1.14 லட்சம் டவேரா கார்களை இந்தியாவில் விற்பனை செய்தது. இந்த டீசல் கார்கள் தரமற்றவை என்பது தனியார் அமைப்புகள் மூலம் வெளிப்பட்ட நேரத்தில், அனைத்து கார்களையும் இந்நிறுவனம் திரும்பப் பெற்றுக்கொண்டது. ஆனால், இதற்காக எந்தவிதமான அபராதமும் சட்டப்படி விதிக்கப்படவில்லை. வளர்ச்சி பெற்ற நாடுகளில் இது நடக்காது. அமெரிக்காவில் ஒரு வாகனத்துக்கு இவ்வளவு என அபராதம் விதிக்கப்படும். இங்கே அதுவே கையூட்டாகப் பெறப்படுமே தவிர, சட்டப்படி வசூலிப்பதற்கான எந்த விதிமுறையும் இதுவரையிலும் இல்லை.
வோக்ஸ்வேகன் நிறுவனத்தின் டீசல் கார்களே நச்சுப்புகையைக் கட்டுப்படுத்த முடியாமல் இருக்கின்றன என்றால், ஏனைய நிறுவனங்களின் வாகனங்களுடைய நிலைமை அதைவிட மோசமாகத்தான் இருக்கும். ஆனால், சாலையில் அனைத்து கார்களும் ஓடிக்கொண்டுதான் இருக்கின்றன.
மேலும், ஒரு லிட்டர் டீசலில் 0.005% சல்பர் மட்டுமே இருக்க வேண்டும் என்ற விதிமுறைப்படி தில்லி உள்ளிட்ட 13 பெருநகரங்களில் மட்டுமே தரமான டீசல் விநியோகிக்கப்படுகின்றன. இந்தியாவின் மற்ற நகரங்களில் விற்பனையாகும் டீசலில் இதைவிடக் கூடுதல் அளவில் சல்பர் உள்ளது. இதை நம்மால் சீர்மை படுத்தவும் முடியவில்லை. கட்டுப்படுத்தும் முயற்சியும் மேற்கொள்ளப்படுவதில்லை.
நச்சுப்புகை அளவு மட்டுமல்ல, கார் மற்றும் இரு சக்கர தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனைக்காக நுகர்வோரிடம் சொல்லும் உத்தரவாதங்கள் பலவும் வெறும் ஏட்டில்தான் இருக்கின்றன. இரு சக்கரம், மூன்று சக்கர வாகன விற்பனையில் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 70 கிலோ மீட்டர் என்று சொல்லி விற்கிறார்கள். ஆனால், அது சாலையில் ஓடும்போது அவர்கள் சொன்னது உண்மையாக இருப்பதில்லை.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் எந்த அளவுக்கு செயல்படுகின்றன என்பது ஊரறிந்த ரகசியம். நுகர்வோர் விழிப்புணர்வு மக்கள் மத்தியில் ஏற்படாதவரை சட்டங்களும் விதிகளும் கையூட்டுப் பெறுவதற்குத்தான் உதவுமே தவிர, மக்களுக்குப் பயனளிக்காது. விழிப்புணர்வை யார் ஏற்படுத்துவது என்பதுதான் கேள்வி.

ஜெயிக்கப் போவது யாரு?


Dinamani


By ஆசிரியர்

First Published : 06 November 2015 01:24 AM IST


பிகார் சட்டப்பேரவைக்கான ஐந்து கட்டத் தேர்தல் நேற்றுடன் முடிவடைந்திருக்கிறது. கடந்த மூன்று மாதங்களாக பிகார் மட்டுமல்ல, ஒட்டுமொத்த இந்தியாவே அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தாலும், பாரதப் பிரதமரே வரிந்து கட்டிக் கொண்டு தேர்தல் களத்தில் இறங்கிவிட்டிருந்ததாலும், பரபரப்பில் ஆழ்ந்தது. பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்துதான் இந்தியாவின் வருங்காலமே இருக்கப் போகிறது என்பதுபோன்ற தோற்றம் ஏற்பட்டிருப்பதை மறுப்பதற்கில்லை.
பிரதமர் நரேந்திர மோடியையும், பா.ஜ.க.வையும் பொருத்தவரை, கடந்த மக்களவைத் தேர்தலில் பெற்ற வெற்றியை மீண்டும் பெற்றுவிட முடியாவிட்டாலும், நிதீஷ்குமார் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் கூட்டணி ஆட்சி அமையாமல் தடுத்தால் அதுவே மாபெரும் வெற்றியாக இருக்கும்.
கடந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் தனித்தனியாகப் போட்டியிட்ட ஐக்கிய ஐனதா தளம், ராஷ்ட்ரீய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய மூன்று கட்சிகளும் இப்போது "மகா கூட்டணி' என்ற பெயரில் இணைந்திருப்பதால், வாக்கு வங்கி அரிச்சுவடிக் கணக்கு அந்த அணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது. இந்தக் கூட்டணி 2014-இல் இருந்திருந்தால் 145 இடங்களிலும், பா.ஜ.க.வின் தேசிய ஜனநாயகக் கூட்டணி 92 இடங்களிலும் வெற்றி பெற்றிருக்கும்.
மகா கூட்டணி இல்லாத நிலையில், பிகாரில் 2014 மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி 40 இடங்களில் 31 இடங்கள் வெற்றி பெற முடிந்ததுபோல, இந்த முறை வெற்றி பெறுவது என்பது சாத்தியமே இல்லை. ஆனால், நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளமும், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளமும் தலா 100 இடங்களில் மட்டுமே போட்டியிடும் நிலையில், அடுத்த சட்டப்பேரவையில் அதிக எண்ணிக்கை பலம் கொண்ட கட்சியாக பா.ஜ.க. தனது எதிர்க்கட்சி அந்தஸ்தை தக்க வைத்துக் கொள்வது என்பது சாத்தியம்.
பிரதமர் நரேந்திர மோடி பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இந்த அளவுக்கு முனைப்புக் காட்டியிருக்க வேண்டுமா என்கிற கேள்வி பரவலாக எழுப்பப்படுகிறது. இதுவரை எந்தவொரு பிரதமரும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலுக்காக இந்த அளவுக்குப் பிரசாரத்தில் ஈடுபட்டதில்லை. தில்லி சட்டப்பேரவைப் படுதோல்வி, நாடாளுமன்றம் சுமுகமாக நடைபெறாத நிலைமை ஆகிய பின்னடைவுகளைப் புரட்டிப்போட்டு, தனது ஆட்சிக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது என்பதை நிரூபிக்க அவர் முயற்சிக்கிறார் என்பதைத்தான் அவரது பிரசாரம் காட்டுகிறது.
முதல்வர் நிதீஷ்குமாரைப் பொருத்தவரை, மகா கூட்டணி வெற்றி பெற்றால் மட்டும் போதாது, ஐக்கிய ஜனதா தளமும், கணிசமான தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். ஆட்சியைத் தக்கவைத்துக்கொள்ள முடியாமல் போனாலோ அல்லது லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்ற நிலையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலோ, விரைவிலேயே நிதீஷ்குமாரின் அரசியல் வாழ்க்கை அஸ்தமனமாகிவிடும். அதேநேரத்தில், கணிசமான இடங்களில் ஐக்கிய ஜனதா தளம் வெற்றி பெற்று நிதீஷ்குமார் முதல்வரானால், 2019-இல் நரேந்திர மோடியை எதிர்கொள்ளும் எதிர்க்கட்சிப் பிரதமர் வேட்பாளராக நிதீஷ்குமார் இருப்பார் என்பதில் சந்தேகம் வேண்டாம்.
லாலு பிரசாத் யாதவின் மீதுதான் அத்தனை அரசியல் நோக்கர்களின் பார்வையும் குவிந்து கிடக்கிறது. பிகாரைப் பொருத்தவரை கணிசமான வாக்கு வங்கியுடன் கூடிய அரசியல் கட்சி லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரீய ஜனதா தளம்தான். ஊழல் வழக்குகளில் சிக்கித் தேர்தலில் நிற்க முடியாத நிலைமை ஏற்பட்டிருப்பதால்தான் முதல்வர் வேட்பாளராக நிதீஷ்குமாரை லாலு பிரசாத் யாதவ் ஏற்றுக் கொண்டிருக்கிறார். தனது ஆட்சியை "காட்டாட்சி' என்று வர்ணித்து, பா.ஜ.க.வைக் கூட்டணி அமைத்து வீழ்த்தியவர் நிதீஷ்குமார் என்பதை லாலு பிரசாத் யாதவ் அவ்வளவு எளிதில் மறந்துவிடமாட்டார் என்பது அனைவரும் அறிந்த ரகசியம்.
சட்டப்பேரவைத் தேர்லில் முதல்வர் நிதீஷ்குமாரின் ஐக்கிய ஜனதா தளம் அதிக இடங்களில் வெற்றி பெற்று, "மகா கூட்டணி' மீண்டும் ஆட்சி அமைத்தால், அதனால் பலியாகப் போவது தனது அரசியல் வருங்காலம் மட்டுமல்ல, தனது குடும்பத்தின், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் வருங்காலமும்கூட என்பது லாலு பிரசாத் யாதவுக்கு நன்றாகவே தெரியும். பா.ஜ.க. கூட்டணி வெற்றி பெற்றால் மட்டுமே எதிர்க்கட்சியாக ராஷ்ட்ரீய ஜனதா தளம் செயல்படும் என்பதையும் அவரது தொண்டர்கள் உணராமல் இல்லை.
வாக்கு வங்கி அரிச்சுவடிக் கணக்கு நிதீஷ்குமார் தலைமையிலான கூட்டணிக்குத்தான் சாதகமாக இருக்கிறது என்கிற நிலையில், பா.ஜ.க.வினர் நம்புவது லாலு பிரசாத் யாதவின் உள்குத்து வேலையால் ஐக்கிய ஜனதா தளம் பல இடங்களில் தோல்வியைத் தழுவக்கூடும் என்பதைத்தான். பலவீனமான காங்கிரஸ் போட்டியிடும் 41 இடங்களில் பெரும்பாலான தொகுதிகளில் தங்களுக்கு வெற்றி வாய்ப்பு உறுதி என்பதும் அவர்கள் எதிர்பார்ப்பு.
1980 தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தி.மு.க.வும், காங்கிரஸும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்ட நிலைமை பிகாரில் ஏற்பட்டால் வியப்படையத் தேவையில்லை. பா.ஜ.க.வின் எதிர்பார்ப்பு அதுதான்.÷
பிகார் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளைப் பொருத்தவரை தோற்கப் போவது நிதீஷ்குமாரா, லாலு பிரசாத் யாதவா என்பதுதான் மிகப் பெரிய கேள்வி. முடிவு எப்படி அமைந்தாலும் அது பிகாரில் மட்டுமல்ல, இந்திய அரசியலிலும் மிகப் பெரிய திருப்புமுனையாக இருக்கும்!

Thursday, November 5, 2015

அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் பதவி பறிபோகும்: மத்திய அரசு புதிய விதிமுறை

அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் வெளிநாட்டில் தங்கினால் பதவி பறிபோகும்: மத்திய அரசு புதிய விதிமுறை

First Published : 04 November 2015 01:03 AM IST
ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட உயர் பதவி வகிக்கும் அரசு அதிகாரிகள் பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்கு சென்று ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்தால் அவர்களைப் பதவி நீக்கம் செய்வதற்கான விதிமுறையை மத்திய அரசு வகுத்துள்ளது.
 அதேபோல உரிய முன் அனுமதியின்றி அதிக நாட்கள் விடுப்பில் இருந்தாலும் இந்திய ஆட்சிப் பணிகளில் உள்ள அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள்.
 இது தொடர்பாக மத்திய பணியாளர் நலன் மற்றும் பயிற்சித் துறை, அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச தலைமை செயலாளர்களுக்கு செவ்வாய்க்கிழமை ஓர் அறிவிக்கையை அனுப்பியுள்ளது. மத்திய உள்துறை, சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகங்களுக்கு இந்த அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
 அதில் கூறப்பட்டுள்ளதாவது: பணி நிமித்தமாக வெளிநாடுகளுக்குச் செல்லும் ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎப்ஒஎஸ் அரசு அதிகாரிகள் ஒரு மாதத்துக்கு மேல் அங்கு தங்கியிருந்தால் அவர்களாகவே பதவியில் இருந்து நீங்கிவிட்டதாக கருதி பணிநீக்கம் செய்யப்பட வேண்டும். இது தவிர உரிய அனுமதியின்றி நீண்ட நாள்கள் விடுப்பில் இருக்கும் அதிகாரிகள் மீதும், விடுமுறைக் காலம் முடிந்த பிறகும் பணிக்குத் திரும்பாமல் இருக்கும் அதிகாரிகள் மீதும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் இந்த நடவடிக்கை மேற்கொள்ளாவிட்டால், மத்திய அரசு தலையிட்டு உரிய நடவடிக்கையை எடுக்கும்.
 அதே நேரத்தில் பணி நீக்க நடவடிக்கைக்கு முன்பு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தங்கள் தரப்பு வாதத்தை தெரிவிக்க வாய்ப்பு அளிக்கப்படும். அதற்காக அவர்களுக்கு காரண விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்படும். எனினும் உரிய அனுமதியின்றி ஓராண்டுக்கு மேல் விடுப்பில் இருந்தால் அவர்கள் தாங்களாகவே பணியில் இருந்து விலகியதாக எடுத்துக் கொள்ளப்படுவார்கள்.
 இப்போதுள்ள விதிப்படி அரசு அனுமதித்த நாள்களை காட்டிலும் கூடுதலாக ஓராண்டு வெளிநாட்டில் ஓர் அதிகாரி தங்கியிருந்தால் அவர் தானாகவே பதவி விலகியதாக கருதப்படுவார். அதேபோல அனுமதிக்கப்பட்ட விடுமுறைக்காலம் முடிந்த பிறகு ஓராண்டு பணியில் இருந்து விலகியிருந்தால் அவர் பதவி விலகிவிட்டதாக கருதப்படுவார்.
 இப்போதைய நிலையில் 10 ஐஏஎஸ் அதிகாரிகள், உரிய அனுமதியின்றி விடுப்பில் உள்ளார்கள். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

NEWS TODAY 26.01.2026