Saturday, November 14, 2015

ஃபேஸ்புக்கில் பவர்பாயிண்ட் .................. by சைபர்சிம்மன்



மாநாடு, கருத்தரங்கு, அலுவலகக் கூட்டங்கள் என்றால் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் தானாக நினைவுக்கு வரும். அலுப்பூட்டக்கூடியது என்று சிலர் விமர்சித்தாலும் மணிக்கணக்காகப் பேச வேண்டிய விஷயங்களைக் கூட பவர்பாயிண்ட் காட்சி விளக்கமாக கச்சிதமாக முன்வைக்கலாம்.

இப்போது பவர்பாயிண்ட் சேவையை மேலும் சுவாரஸ்யமாக்கும் புதிய வசதி அறிமுகமாகியுள்ளது. மைரோசாஃப்ட் நிறுவனம் ‘சோஷியல் ஷேர்' எனும் பெயரில் ‘பிளக் இன்' வசதியாக இதை அறிமுகம் செய்துள்ளது.

சேவையின் பெயரைப் பார்த்ததுமே அதன் தன்மை புரிந்திருக்குமே. ஆம்! இந்தச் சேவை ஃபேஸ்புக் மற்றும் ட்விட்டர் ஆகிய சமூக ஊடகச் சேவைகளில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கங்களைப் பகிர்ந்துகொள்ள வழிசெய்கிறது. தனி ஸ்லைடுகள் ஒளிப்படமாகப் பகிர்ந்துகொள்ளலாம். அல்லது மொத்தக் காட்சி விளக்கத்தையும் ஒளிப்பட ஆல்பமாகப் பகிரலாம். விரும்பினால் ஒருபடி மேலே போய் வீடியோ வடிவிலும் பகிர்ந்துகொள்ளலாம்.

இந்த ஸ்லைடுகளைப் பார்த்து ட்விட்டரிலும், ஃபேஸ்புக்கிலும் நண்பர்கள் தெரிவிக்கும் கருத்துகளையும் பவர்பாயிண்ட் செயலியிலேயே பார்த்துக்கொள்ளலாம்.

அது மட்டுமல்ல, காட்சி விளக்கங்களை நேரடியாக ‘ஒன்டிரை’வில் கோப்பாக சேமித்துக்கொள்ளலாம்.

பவர்பாயிண்ட்டுக்கு மிகவும் தேவையான அப்டேட்தான் இல்லையா?

புதிய திட்டங்களில் ஈடுபட மைக்ரோசாஃப்ட் ஊழியர்களுக்கு வழங்கப்படும் ‘மைக்ரோசாஃப்ட் கராஜ்' திட்டத்தின் கீழ் இந்தச் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இதை உருவாக்கிய குழுவில் நம்மவரான வித்யாராமன் சங்கரநாராயணனும் இடம்பெற்றுள்ளார்.

மாநாடு போன்றவற்றில் பவர்பாயிண்ட் காட்சி விளக்கம் அளிக்கும்போது ட்விட்டரில் அதைப் பகிர்ந்துகொண்டால் பார்வையாளர்கள் அதன் மீது கருத்து தெரிவிப்பது சாத்தியமாகலாம். அதற்கு கேள்வி பதில் நேரத்தின்போது அழகாக பதிலும் சொல்லலாம் என்கிறார் அவர்.

இணைய முகவரி: https://officesocialshare.azurewebsites.net/#

தளம் புதிது: படம் பார்க்க வாங்க! ................ சைபர்சிம்மன்

Return to frontpage

ஹாலிவுட் படங்களின் முன்னோட்டத்தை எல்லாம் ஒரே இடத்தில் பார்க்க முடிந்தால் எப்படி இருக்கும்? ‘ஸ்க்ரீனா' இணையதளம் இதற்கு உதவுகிறது. இந்தத் தளத்தில் புதிதாக வெளியாக உள்ள ஹாலிவுட் படங்களின் முன்னோட்டங்களைப் பார்க்கலாம். அந்தப் படங்கள் தொடர்பான தகவல்களையும் தெரிந்து கொள்ளலாம்.

அது மட்டுமல்லாமல் படத்தின் முன்னோட்டம் பிடித்திருக்கிறதா, அந்தப் படத்தைப் பார்க்க வேண்டும் என்று நினைக்கிறீர்களா, அப்படி எனில் அந்தப் படத்தை மறக்காமல் இருக்கவும் இந்தத் தளம் உதவி செய்கிறது.

முன்னோட்டத்தைப் பார்த்ததும், படத்தைப் பார்க்க விரும்புகிறேன் என தெரிவித்தால் (இதற்காக ஆம் மற்றும் இல்லை என இரண்டு கட்டங்கள் கொடுக்கப்பட்டுள்ளன) அந்தப் படத்தை உடனே உங்கள் விருப்பப் பட்டியலுக்கு மாற்றிக்கொள்ளலாம். இந்தப் பட்டியல் மூலம் முன்னோட்டத்தில் பார்த்து ரசித்த படம் ரிலீசாகும்போது மறக்காமல் இருக்கலாம்.

முன்னோட்டத்தைப் பார்த்தோமே, அது என்ன படம், அடடா மறந்துவிட்டதே என குழம்ப வேண்டிய நிலை இனி இருக்காது என்கிறது இந்தப் புதிய இணையதளம்.

இணையதள முகவரி: http://www.screenah.com/

தொடர் கனமழை: சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு சனிக்கிழமை விடுமுறை

சென்னை பெரம்பூரில் பெய்த கனமழை | படம்: எல்.சீனிவாசன்

தொடர் கனமழை காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளதால் கடந்த சில தினங்களாக தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் நேற்று (வியாழக்கிழமை) சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

இன்று (வெள்ளிக்கிழமை) சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது.

இந்நிலையில், கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (சனிக்கிழமை) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டுள்ளனர்.

Updated: November 12, 2015 08:22 IST கனமழையால் பாதிக்கப்பட்ட கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்க கூடுதலாக 2 ஆயிரம் ஊழியர்கள்: மின் வாரியம் நடவடிக்கை



கனமழையால் பாதிக்கப்பட்டுள்ள கடலூரில் மின் விநியோகத்தை சீரமைக்கும் பணியில் வெளிமாவட்டங்களை சேர்ந்த 2 ஆயிரம் ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள் ளனர்.

வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுப்பெற்று கடந்த 9-ம் தேதி இரவு புதுச்சேரி அருகே கரையைக் கடந்தது. இதனால், புதுச்சேரிக்கு அருகில் உள்ள கடலூர் அதிகளவில் பாதிக்கப்பட் டது. சூறைக்காற்று வீசியதால் மரங்கள், மின் கம்பங்கள் சாய்ந்தன. இதனால், கடலூர் முழுவதும் மின் விநியோகம் நிறுத்தப்பட்டது. இதையடுத்து, மின் வாரியம் போர்க்கால அடிப்படையில் இதர பகுதிகளில் இருந்து மின் பணியா ளர்களை கடலூருக்கு அனுப்பி, நிவார ணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

இது தொடர்பாக தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் நேற்று வெளியிட்ட செயதிக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

கடலூரில் 2 ஆயிரம் மின் கம்பங்கள், 64 மின் மாற்றிகள், 226 கி.மீ. தொலை வுக்கு மின் வட கம்பிகள் சேதமடைந்துள் ளன. மின் விநியோகத்தை சீரமைக்க கரூர், திருச்சி, தஞ்சை, காஞ்சிபுரம், விழுப்புரம், ஈரோடு, கோவை, தருமபுரி ஆகிய மின் பகிர்மான வட்டங்களில் பணியாற்றும் 2,039 மின் பணியாளர்கள் மற்றும் 3 மேற்பார்வை பொறியாளர்கள் கடலூருக்கு சிறப்புப் பணிக்காக நியமிக் கப்பட்டுள்ளனர்.

தற்போது 5 நகராட்சிகள், 15 பேரூராட்சி கள், 700 கிராமங்களுக்கு மின்சாரம் விநியோகிக்கப்பட்டுள்ளது. 275 கிராமங் களில் பணிகள் நடந்து வருகின்றன. மேலும் 143 கிராமங்களில் மழை நீர் வடிந்ததும் மின்சாரம் வழங்கப்படும்.

தமிழ்நாடு மின்உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவர் மு.சாய்குமார், பகிர்மானப் பிரிவு இயக்குநர் மு.பாண்டி ஆகியோர் கடலூரில் முகாமிட்டு மின் விநியோகத்தை சீரமைப்பதற்கான பணிகளை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

Updated: November 13, 2015 09:01 IST வானிலை முன்னறிவிப்பு: தமிழகத்தில் கனமழை நீடிப்பு; அந்தமானில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை



அந்தமான் அருகே உருவாகியுள்ள புதிய காற்றழுத்த தாழ்வு நிலையால் தமிழகத்தில் மீண்டும் கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருகிறது. இந்த ஆண்டு மழை அளவு அதிகரிக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சமீபத்தில் வங்கக்கடலில் உருவான தீவிர காற்றழுத்த தாழ்வு மண்டலம், புதுச்சேரி அருகே கடந்த 9-ம் தேதி இரவு கரையைக் கடந்தது. இதனால், தமிழகம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நேற்றைய நிலவரப்படி சராசரியாக 31 செ.மீ. மழை கிடைத்துள்ளது.

புதிய காற்றழுத்தம்

இந்நிலையில், லட்சத்தீவுகள் மற்றும் அதை ஒட்டிய பகுதியில் நிலைகொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தென்கிழக்கு, அதை ஒட்டிய கிழக்கு மத்திய அரபிக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தின் தென் மாவட்டங்களில் பெரும்பாலான பகுதிகளிலும் வட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் இன்று மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும். வட கடலோர மாவட்டங்களில் ஆங்காங்கே கனமழைக்கும் வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும், தெற்கு அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதனுடன், வளிமண்டல மேலடுக்கு சுழற்சியும் நிலவி வருகிறது. இதன் பாதிப்பால், தென்கிழக்கு வங்கக்கடலில் 14-ம் தேதி (நாளை) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும். இதனால், நாளை முதல் வட தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளிலும் உள் மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், நாகை, கடலூர் உள்ளிட்ட வட கடலோர மாவட் டங்கள், புதுச்சேரியில் நாளை கனமழையும், நாளை மறுதினம் முதல் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதிகபட்ச மழை

வியாழக்கிழமை காலை வரையான 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக காஞ்சிபுரம்,  பெரும்புதூர் மற்றும் செய்யூரில் 10 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. அரக்கோணம்-9, மதுராந்தகம்-8, சென்னை விமான நிலையம், திண்டுக்கல்-7, தாம்பரம், நுங்கம் பாக்கம்-6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

Wednesday, November 11, 2015

வேலையை சுலபமாக்கும் கூகுள்

Return to frontpage

நிறுவனங்கள் கணிணி மயமாக்கப்பட்ட பிறகு அனைத்து பரிவர்த்தனைகளும் மெயிலிலே நடக்கின்றன. தகவலை தெளிவாக சொல்வது, எப்போது யாருக்கு அனுப்பினோம் என்பதை தெரிந்து கொள்ள முடிவது, ஒரே நேரத்தில் பலருக்கு அனுப்ப முடியும் என்பது உள்ள பல சாதகங்கள் இருக்கின்றன. ஆனால் ஒரு கட்டத்தில் வேலை செய் வதை விட மெயில்களுக்கு பதில் சொல்வதையே பல நிறுவனங்களின் உயரதிகாரிகளுக்கு வேலையாக இருக் கிறது.

சமயங்களில் ஓரிரு நாட்கள் விடுமுறை எடுத்து விட்டு வந்தால் அத்தனை மெயில்களையும் பார்த்து படித்து பதில் அனுப்புவதற்குள் விடிந்துவிடும். அவர்களை போன்றவர்களுக்காக கூகுள் ஸ்மார்ட் ரிப்ளை என்னும் செயலியை உருவாக்கி இருக்கிறது.

இரண்டே கிளிக்குகளில் பதில் அனுப்ப வேண்டும் என்பதுதான் கூகுளின் திட்டம். இந்த செயலி, உங்களுக்கு வரும் இமெயில்களை படித்து அதற்கு ஏற்ப, மூன்று விதமான பதில்களை உங்களுக்கு கொடுக்கும். அதில் எந்த பதிலை அனுப்ப நினைக்கிறீர்களோ அதை அனுப்பலாம். அல்லது அந்த வாய்ப்பில் சில திருத்தங்கள் செய்வதாக இருந்தால் அதை செய்து அனுப்பலாம்.

சிறிய பதில் அனுப்ப இந்த செயலியை பயன் படுத்திக் கொள்ள முடியும். மெஷின் லேர்னிங் மற்றும் ஆர்டிபிஷியல் இண்டெலிஜென்ஸை பயன்படுத்தி வரும் மெயில் படிக்கப்படும். பொதுவாக அனுப் பப்படும் 20,000 பதில்களை ஆராய்ந்து மூன்று வாய்ப்புகளை ஸ்மார்ட் ரிப்ளை உங்களுக்கு கொடுக்கும்.

உதாரணத்துக்கு உங்கள் மேலதிகாரி உங்களிடம் ஒரு தகவல் கேட்கிறார் என்று வைத்துக்கொண்டால் இது போன்ற மூன்று விதமான பதில்கள் உங்களுக்கு வரும்.

1. அந்த தகவல் என்னிடம் இல்லை.

2.அதற்காக வேலை செய்து கொண்டிருக்கிறேன்.

3. உடனடியாக அனுப்புகிறேன்.

மேலே உள்ள மூன்று பதில்களில் ஏதாவது ஒன்றை தேர்வு செய்து நேரடியாக அனுப்பலாம். அல்லது தேர்வு செய்த பதிலில் உங்களுக்கு ஏற்றவாறு திருத்தி அனுப்பலாம். இதன் மூலம் மெயிலை பயன்படுத்துபவர்களுக்கு நேரம் மீதமாகும் என்று கூகுள் தெரி வித்திருக்கிறது.

ஒரு வருடத்துக்கு முன்பு இன்பாக்ஸ் (ஜிமெயிலின் மேம்படுத்தப்பட்ட வடிவம்தான் இன்பாக்ஸ்) என்னும் செயலியை கூகுள் அறிமுகப்படுத்தியது. அந்த செயலியை பயன்படுத்தும் தனிநபர்கள் மற்றும் கார்ப்பரேட்கள் இந்த ஸ்மார்ட் ரிப்ளை செயலியை இலவசமாக பயன்படுத்த முடியும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ஆர்டிபிஷியல் இண்டெலிஜன்ஸ் பிரிவில் கூகுள், ஆப்பிள், பேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்கள் தொடர்ந்து முதலீடு செய்துவருகின்றன.

இந்த செயலி ஆண்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் இயங்குதளத்தில் கிடைக்கும். இன்னும் சில நாட்களில் இந்த செயலியை கூகுள் அறிமுகப்படுத்த திட்டமிட்டிருக்கிறது. இந்த செயலிக்கான ஐடியா மென்பொருள் வல்லுநரான பிலின்ட் மிகில்ஸ் உடையது.

வாட் நெக்ஸ்ட் கூகுள்?

முதல் பார்வை: தூங்காவனம் - துடிப்புக்குப் பின் சோர்வு! ...பாரஸ்ட்கம்பன்

Return to frontpage




பிற மொழிகளின் நல்ல இலக்கியப் படைப்புகளைத் தமிழில் தருவதற்கு இணையானது, பிற மொழி திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் தனித்துவ அனுபவத்தை நம் ரசிகர்களுக்குக் கடத்துவதும். அந்தப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். மலையாளத்தின் 'த்ரிஷ்யம்' படத்தைத் தொடர்ந்து, பிரெஞ்சு படைப்பான 'ஸ்லீப்லெஸ் நைட்'-ஐ அதிகாரபூர்வமாகத் தழுவி 'தூங்காவனம்' தந்திருக்கிறது கமல் அண்ட் கோ.

கமல்ஹாசன் திரைக்கதையையும், சுகா வசனத்தையும் கவனிக்க, ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள 'தூங்காவனம்', போதைப்பொருள் கடத்தல் பின்னணியுடன் ஒரே கதைக்களத்தில் ஓர் இரவில் நிகழும் 'த்ரில்லர்' வகை சினிமா.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பல கோடி மதிப்புள்ள சரக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக அபகரிக்கிறார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரியாக வரும் கமல்ஹாசன். சில சொதப்பல்கள், மகன் கடத்தல், மீட்கும் முயற்சியில் தடைகள் என அடுத்தடுத்து சிக்கல்கள். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சக அதிகாரிகள், முன்பின் தெரியாதவர்கள் என பல தரப்பினர் தரும் பிரச்சினைகளைத் தாண்டி, எல்லாவற்றையும் எப்படி எதிர்கொண்டு 'முடிக்கிறார்' என்பதே எல்லாம்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் படம் தொடங்கும்போதும் சரி, எந்த அலப்பறையும் இல்லாமல் கமல் அறிமுகமாகும் காட்சியிலும் சரி, 'இது வேற லெவல்' படம் என்பது ரசிகர்களுக்குப் புரிந்துவிடுகிறது. அடுத்தடுத்த விறுவிறு காட்சிகளும், தமிழ் சினிமா பில்டப் கொள்கைப்படி 'ட்விஸ்ட்'களை மதிக்காமல் அலட்சியமாக அரங்கேற்றுவதும் அபாரம்.

ஹாலிவுட் படங்களை இங்கு பார்க்கும்போது, கட்டாயத்தின் பேரில் ரசிகர்களை வெளியேற்றுவது போல் இடைவேளை இட்ட விதமும் ரசிகர்களுக்கு புத்தம் புதுசு.

ஆனால், ஒரே களத்தில் ஆடு புலி ஆட்டமாக இடைவேளை வரை பரபரவென நகரும் திரைக்கதை, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அசதியை உண்டாக்குகிறது. அதை, உறுதுணைக் கதாபாத்திரங்கள், நகைச்சுவைத் திணிப்புகள் மூலம் நிரப்பும் யுக்தி ஓரளவு மட்டுமே கைகொடுக்கிறது.

கமல்ஹாசன்... மேக்கப்புக்கு மெனக்கெடாமல், கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி அப்படியே வந்திருப்பது சிறப்பு. எனினும், நடிப்பாற்றல் - உடல்மொழிகள் மூலம் தன்னை வழக்கம்போலவே தனித்துவமாக பதிவு செய்யவும் தவறவில்லை. தமிழ் சினிமாவின் மூத்த நடிகை த்ரிஷாவுக்கு ஆற்றலை வெளிப்படுத்த கிடைத்துள்ள மிகச் சில வாய்ப்புகளில் தூங்காவனமும் ஒன்று. ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னியெடுத்து, அண்டர்ப்ளே சீன்களிலும் முத்திரைப் பதிக்கிறார். கமல்ஹாசனுடன் மோதும் காட்சிகளில் தியேட்டரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விசில் பறந்ததும் கவனிக்கத்தக்கது.

பிரகாஷ் ராஜும், கிஷோரும் தங்கள் அதகளமான பங்களிப்பை தரும் அதேவேளையில், 'ஆரண்ய காண்டம்' ஷூட்டிங் இடைவெளியில் வந்துபோனது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் சம்பத். யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி, சோமசுந்தரம், ஜெகன், சாம்ஸ், உமா ரியாஸ், சந்தான பாரதி... உறுதுணை நடிகர்களின் அணிவகுப்பு, ஒற்றைக் களத்தில் ரசிகர்களுக்கு அசதி ஏற்படாமல் இருக்க வகை செய்கிறது. ஆனால், கமல், த்ரிஷாவுக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது என்னவோ, கமலின் மகனாக வரும் அந்த டீன் ஏஜுக்கு நுழைந்த குட்டிப் பையன் அமன் அப்துல்லாதான். தற்போதைய டிஜிட்டல் - வாட்ஸ்ஆப் காலத்துடன் தொடர்பில் இருக்கும் சிறார் உலகின் பிரதிநிதியாகவே அசத்துகிறான்.

ஒரு ஹைடெக் 'பப்'பும் பப் சார்ந்த இடங்களையும் கச்சிதமாக வடிவமைத்துள்ள கலை அமைப்பு கச்சிதம்.

ஒரு பப்-புக்குள் சுழன்று கொண்டிருந்தாலும், உறுத்தல் இல்லாமல், க்ளோசப் ஷாட்களுக்கு தேவையான அளவு முக்கியத்துவம் தந்து பதிவு செய்துள்ள சானு வர்கீஸின் ஒளிப்பதிவும் சிறப்பு.

திரைக்கதையாளர், இயக்குநரின் பங்களிப்புடன், பிற்பகுதிகளில் கச்சிதமாக சில டெலிட்டிங் ஒர்க் செய்திருந்தால், ஷான் முகமதின் எடிட்டிங் இன்னும் எடுபட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் இறைச்சல் மிகுந்த பப் சூழலில் நிகழும் கதைக்கு, நெருடலை ஏற்படுத்ததாக பின்னணி இசையைத் தந்து, படத்துக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். கதை - கதைக்களத்தில் இருந்து இயல்பான பேச்சுகளின் வழியாக, குட்டி குட்டி சிரிப்பு வெடிகளைத் தெளிக்க முயற்சி செய்திருக்கிறது சுகாவின் வசனம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அந்நியமான கதைக்களத்தை, கதையையும், கதாபாத்திரங்களையும், அந்த அந்நியத்தன்மையை உடைத்திடும் வகையில், ஒரு க்ரைம் த்ரில்லரை காட்சிப்படுத்திய விதத்தில், இயக்குநர் ராஜேஷ் எம். செல்வாவிடம் இருந்து அடுத்த படைப்பில் நிறைய எதிர்பார்க்கலாம் என்பது உறுதியாகிறது.

அதிரடி - த்ரில்லிங் சதுரங்க ஆட்டத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை ஆரம்பத்திலேயே ரசிகர்கள் யூகித்தாலும்கூட, அது எப்படி சாத்தியமாகிறது என்பதற்கு துணைபுரியும் திருப்பங்கள்தான் படத்துக்கு பலம் சேர்ப்பவை. ஒரு வழியாக எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட பிறகும் 'போராட்டம்' நீடிப்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் போராட்டமாகிவிடுகிறது.

போகிற போக்கில் தன்னைக் கடந்து செல்பவரிடம் எல்லாம் பட்ட இடத்திலேயே அடிவாங்கி ஹீரோயிசம் என்பதை தகர்த்தெறியப்பட்டு விட்டதே என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கமல் உரிய பதிலடிகள் மூலம் ஹீரோயிசத்தைத் தக்கவைத்தது இதுவும் அதே லெவல் படம்தான் போல என்பதை உணரவைத்தது.

ஒரு கட்டத்தில் படம் முடிந்த நிறைவில் இருக்கும்போது, கமல் - த்ரிஷாவின் அந்த பில்டப் காட்சிகள் மூலம் வழக்கமான பொழுதுபோக்கு தமிழ் சினிமாவைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தும் தேவையற்ற முயற்சியாகவே ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கக் கூடும். அதுவும், கடைசியில் டைட்டில் கார்டு போடும்போது ஒலிக்கும் பாடலுக்கும் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களும் டான்ஸ் ஆடுவது, இதுவரை பார்த்த ஒரு வகை த்ரில் அனுபவத்தைக் கரைக்கும்படியாகவே இருந்திருக்கும்.

இதுபோன்ற சில அம்சங்கள்தான், தூங்காவனத்தின் ஒரிஜினல் படத்தைப் பார்த்த மிகச் சிலருக்காக புகுத்தப்பட்ட பிரத்யேக காட்சிகளாக இருந்திருக்கக் கூடும்... 'ஸ்லீப்லெஸ் நைட்' படத்தின் பிரெஞ்ச் தலைப்பான Nuit Blanche-ஐ ஓபனிங் டைட்டில் கார்டில் 0.5 நொடியில் காட்டி கிரெடிட் கொடுத்தற்கான அர்த்தமும் புரிந்திருக்கும்!

NEWS TODAY 26.01.2026