Wednesday, November 11, 2015

முதல் பார்வை: தூங்காவனம் - துடிப்புக்குப் பின் சோர்வு! ...பாரஸ்ட்கம்பன்

Return to frontpage




பிற மொழிகளின் நல்ல இலக்கியப் படைப்புகளைத் தமிழில் தருவதற்கு இணையானது, பிற மொழி திரைப்படங்களின் மூலம் கிடைக்கும் தனித்துவ அனுபவத்தை நம் ரசிகர்களுக்குக் கடத்துவதும். அந்தப் பணியில் தீவிரமாக இறங்கியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். மலையாளத்தின் 'த்ரிஷ்யம்' படத்தைத் தொடர்ந்து, பிரெஞ்சு படைப்பான 'ஸ்லீப்லெஸ் நைட்'-ஐ அதிகாரபூர்வமாகத் தழுவி 'தூங்காவனம்' தந்திருக்கிறது கமல் அண்ட் கோ.

கமல்ஹாசன் திரைக்கதையையும், சுகா வசனத்தையும் கவனிக்க, ராஜேஷ் எம்.செல்வா இயக்கியுள்ள 'தூங்காவனம்', போதைப்பொருள் கடத்தல் பின்னணியுடன் ஒரே கதைக்களத்தில் ஓர் இரவில் நிகழும் 'த்ரில்லர்' வகை சினிமா.

போதைப்பொருள் கடத்தல்காரர்களிடம் பல கோடி மதிப்புள்ள சரக்குகளை சட்டத்துக்குப் புறம்பாக அபகரிக்கிறார், போதைப்பொருள் தடுப்புப் பிரிவு போலீஸ் அதிகாரியாக வரும் கமல்ஹாசன். சில சொதப்பல்கள், மகன் கடத்தல், மீட்கும் முயற்சியில் தடைகள் என அடுத்தடுத்து சிக்கல்கள். போதைப்பொருள் கடத்தல்காரர்கள், சக அதிகாரிகள், முன்பின் தெரியாதவர்கள் என பல தரப்பினர் தரும் பிரச்சினைகளைத் தாண்டி, எல்லாவற்றையும் எப்படி எதிர்கொண்டு 'முடிக்கிறார்' என்பதே எல்லாம்.

ஆர்ப்பாட்டம் இல்லாமல் படம் தொடங்கும்போதும் சரி, எந்த அலப்பறையும் இல்லாமல் கமல் அறிமுகமாகும் காட்சியிலும் சரி, 'இது வேற லெவல்' படம் என்பது ரசிகர்களுக்குப் புரிந்துவிடுகிறது. அடுத்தடுத்த விறுவிறு காட்சிகளும், தமிழ் சினிமா பில்டப் கொள்கைப்படி 'ட்விஸ்ட்'களை மதிக்காமல் அலட்சியமாக அரங்கேற்றுவதும் அபாரம்.

ஹாலிவுட் படங்களை இங்கு பார்க்கும்போது, கட்டாயத்தின் பேரில் ரசிகர்களை வெளியேற்றுவது போல் இடைவேளை இட்ட விதமும் ரசிகர்களுக்கு புத்தம் புதுசு.

ஆனால், ஒரே களத்தில் ஆடு புலி ஆட்டமாக இடைவேளை வரை பரபரவென நகரும் திரைக்கதை, பின்னர் கொஞ்சம் கொஞ்சமாக ரசிகர்களுக்கு அசதியை உண்டாக்குகிறது. அதை, உறுதுணைக் கதாபாத்திரங்கள், நகைச்சுவைத் திணிப்புகள் மூலம் நிரப்பும் யுக்தி ஓரளவு மட்டுமே கைகொடுக்கிறது.

கமல்ஹாசன்... மேக்கப்புக்கு மெனக்கெடாமல், கதாபாத்திரத்துக்கு ஏற்றபடி அப்படியே வந்திருப்பது சிறப்பு. எனினும், நடிப்பாற்றல் - உடல்மொழிகள் மூலம் தன்னை வழக்கம்போலவே தனித்துவமாக பதிவு செய்யவும் தவறவில்லை. தமிழ் சினிமாவின் மூத்த நடிகை த்ரிஷாவுக்கு ஆற்றலை வெளிப்படுத்த கிடைத்துள்ள மிகச் சில வாய்ப்புகளில் தூங்காவனமும் ஒன்று. ஆக்‌ஷன் காட்சிகளில் பின்னியெடுத்து, அண்டர்ப்ளே சீன்களிலும் முத்திரைப் பதிக்கிறார். கமல்ஹாசனுடன் மோதும் காட்சிகளில் தியேட்டரில் அங்கொன்றும் இங்கொன்றுமாக விசில் பறந்ததும் கவனிக்கத்தக்கது.

பிரகாஷ் ராஜும், கிஷோரும் தங்கள் அதகளமான பங்களிப்பை தரும் அதேவேளையில், 'ஆரண்ய காண்டம்' ஷூட்டிங் இடைவெளியில் வந்துபோனது போன்ற உணர்வை ஏற்படுத்துகிறார் சம்பத். யூகி சேது, ஆஷா சரத், மதுஷாலினி, சோமசுந்தரம், ஜெகன், சாம்ஸ், உமா ரியாஸ், சந்தான பாரதி... உறுதுணை நடிகர்களின் அணிவகுப்பு, ஒற்றைக் களத்தில் ரசிகர்களுக்கு அசதி ஏற்படாமல் இருக்க வகை செய்கிறது. ஆனால், கமல், த்ரிஷாவுக்குப் பிறகு ரசிகர்களின் கவனத்தை ஈர்ப்பது என்னவோ, கமலின் மகனாக வரும் அந்த டீன் ஏஜுக்கு நுழைந்த குட்டிப் பையன் அமன் அப்துல்லாதான். தற்போதைய டிஜிட்டல் - வாட்ஸ்ஆப் காலத்துடன் தொடர்பில் இருக்கும் சிறார் உலகின் பிரதிநிதியாகவே அசத்துகிறான்.

ஒரு ஹைடெக் 'பப்'பும் பப் சார்ந்த இடங்களையும் கச்சிதமாக வடிவமைத்துள்ள கலை அமைப்பு கச்சிதம்.

ஒரு பப்-புக்குள் சுழன்று கொண்டிருந்தாலும், உறுத்தல் இல்லாமல், க்ளோசப் ஷாட்களுக்கு தேவையான அளவு முக்கியத்துவம் தந்து பதிவு செய்துள்ள சானு வர்கீஸின் ஒளிப்பதிவும் சிறப்பு.

திரைக்கதையாளர், இயக்குநரின் பங்களிப்புடன், பிற்பகுதிகளில் கச்சிதமாக சில டெலிட்டிங் ஒர்க் செய்திருந்தால், ஷான் முகமதின் எடிட்டிங் இன்னும் எடுபட்டிருக்கும். எல்லாவற்றுக்கும் மேலாக, ஓர் இறைச்சல் மிகுந்த பப் சூழலில் நிகழும் கதைக்கு, நெருடலை ஏற்படுத்ததாக பின்னணி இசையைத் தந்து, படத்துக்கு பக்க பலமாக இருந்திருக்கிறார் இசையமைப்பாளர் ஜிப்ரான். கதை - கதைக்களத்தில் இருந்து இயல்பான பேச்சுகளின் வழியாக, குட்டி குட்டி சிரிப்பு வெடிகளைத் தெளிக்க முயற்சி செய்திருக்கிறது சுகாவின் வசனம்.

தமிழ் சினிமா ரசிகர்கள் பெரும்பாலானோருக்கு அந்நியமான கதைக்களத்தை, கதையையும், கதாபாத்திரங்களையும், அந்த அந்நியத்தன்மையை உடைத்திடும் வகையில், ஒரு க்ரைம் த்ரில்லரை காட்சிப்படுத்திய விதத்தில், இயக்குநர் ராஜேஷ் எம். செல்வாவிடம் இருந்து அடுத்த படைப்பில் நிறைய எதிர்பார்க்கலாம் என்பது உறுதியாகிறது.

அதிரடி - த்ரில்லிங் சதுரங்க ஆட்டத்தில் ஜெயிக்கப்போவது யார் என்பதை ஆரம்பத்திலேயே ரசிகர்கள் யூகித்தாலும்கூட, அது எப்படி சாத்தியமாகிறது என்பதற்கு துணைபுரியும் திருப்பங்கள்தான் படத்துக்கு பலம் சேர்ப்பவை. ஒரு வழியாக எல்லா முடிச்சுகளும் அவிழ்க்கப்பட்ட பிறகும் 'போராட்டம்' நீடிப்பதுதான் ரசிகர்களுக்கு பெரும் போராட்டமாகிவிடுகிறது.

போகிற போக்கில் தன்னைக் கடந்து செல்பவரிடம் எல்லாம் பட்ட இடத்திலேயே அடிவாங்கி ஹீரோயிசம் என்பதை தகர்த்தெறியப்பட்டு விட்டதே என்று ரசிகர்கள் நினைத்துக் கொண்டிருந்த நேரத்தில், கமல் உரிய பதிலடிகள் மூலம் ஹீரோயிசத்தைத் தக்கவைத்தது இதுவும் அதே லெவல் படம்தான் போல என்பதை உணரவைத்தது.

ஒரு கட்டத்தில் படம் முடிந்த நிறைவில் இருக்கும்போது, கமல் - த்ரிஷாவின் அந்த பில்டப் காட்சிகள் மூலம் வழக்கமான பொழுதுபோக்கு தமிழ் சினிமாவைப் பார்த்த திருப்தியை ஏற்படுத்தும் தேவையற்ற முயற்சியாகவே ரசிகர்கள் பலரும் பார்த்திருக்கக் கூடும். அதுவும், கடைசியில் டைட்டில் கார்டு போடும்போது ஒலிக்கும் பாடலுக்கும் ஒட்டுமொத்த கதாபாத்திரங்களும் டான்ஸ் ஆடுவது, இதுவரை பார்த்த ஒரு வகை த்ரில் அனுபவத்தைக் கரைக்கும்படியாகவே இருந்திருக்கும்.

இதுபோன்ற சில அம்சங்கள்தான், தூங்காவனத்தின் ஒரிஜினல் படத்தைப் பார்த்த மிகச் சிலருக்காக புகுத்தப்பட்ட பிரத்யேக காட்சிகளாக இருந்திருக்கக் கூடும்... 'ஸ்லீப்லெஸ் நைட்' படத்தின் பிரெஞ்ச் தலைப்பான Nuit Blanche-ஐ ஓபனிங் டைட்டில் கார்டில் 0.5 நொடியில் காட்டி கிரெடிட் கொடுத்தற்கான அர்த்தமும் புரிந்திருக்கும்!

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...