Sunday, November 15, 2015

சேது சமுத்திர திட்டம் எப்போது?...daily thanthi

மிகவும் ரப்பராக இழுத்துக்கொண்டு இருக்கும் ஒரு திட்டம் என்றால், அது சேது சமுத்திர திட்டம்தான். இந்துமகா சமுத்திரத்தில் பாக் ஜலசந்தியில் ஆழம் இல்லாமல் இருப்பதால், அரபிக்கடல் பகுதியில் இருந்து வரும் கப்பல்கள் சென்னை, விசாகப்பட்டினம், கொல்கத்தா போன்ற துறைமுகங்களுக்கு செல்ல இலங்கையைச் சுற்றித்தான் வரவேண்டும். இடையில் மணல் திட்டுகளும் இருக்கிறது. இந்த பகுதியில் கடலை ஆழப்படுத்தும் திட்டம்தான் ‘சேதுசமுத்திர திட்டம்’. தமிழர் தந்தை அமரர் சி.பா.ஆதித்தனார் இந்த திட்டத்தில் மிகத்தீவிர ஆர்வம் காட்டிவந்தார். சேது சமுத்திர திட்டத்தை அவர் ‘தமிழன் கால்வாய்’ என்றே அழைத்தார். ‘தினத்தந்தி’யை அவர் தொடங்கிய அதே 1942–ம் ஆண்டில் ‘தமிழ்பேரரசு’ என்று ஒரு நூலை வெளியிட்டார். அதில் அவர், ‘சேது சமுத்திரத்தை ஆழப்படுத்தி, அதிலே கப்பல் போகிறபடி கால்வாயைத் தோண்ட வேண்டும் என்கிற ‘தமிழன் கால்வாய்த்திட்டம்’ தமிழ்நாட்டுக்கு முக்கியமானது. சேது சமுத்திரம் என்கிற கடல், தமிழ்நாட்டுக்கும், இலங்கைக்கும் இடையே இருக்கிறது. இந்த கடலுக்கு மேற்கே ராமநாதபுரம் மாவட்டமும், கிழக்கே யாழ்ப்பாணமும் இருக்கின்றன. இந்த கடலில் ஆழம் மிகவும் குறைவு. ஆகையால் தற்போது அதன் வழியாக கப்பல் போகமுடியாத நிலையில் இருக்கிறது. இதை கொஞ்சம் ஆழப்படுத்தி கடலுக்கு உள்ளேயே சிறு கால்வாய்கள் வெட்டினால் கப்பல் போவதற்கு வசதி ஏற்படும். அவ்வாறு வசதிகள் ஏற்படுத்தினால், ஐரோப்பிய நாடுகளில் இருந்து கிழக் கிந்திய நாடுகளுக்கு போகிற கப்பல்கள் எல்லாம் இதன் வழியாகத்தான் போய் ஆகவேண்டும் என்ற நிலை ஏற்படும்’ என்று எழுதியிருக்கிறார்.

சேது சமுத்திர திட்டத்தைப்பற்றி அவ்வளவு எளிமையாக எழுதியிருக்கிறார். இந்த திட்டத்தை உருவாக்க முதல் முயற்சி எடுத்தவர் ஆங்கிலேய இந்திய கடற்படையைச் சேர்ந்த கமாண்டர் டெய்லர் என்பவர்தான். 1860–ல் அவர் தான் முதலில் இதற்காக ஒரு திட்டத்தை உருவாக்கினார். அதிலிருந்து பல திட்டங்கள் உருவாக்கப்பட்டாலும், 2005–ம் ஆண்டு மதுரையில் நடந்த விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, தி.மு.க. தலைவர் கருணாநிதி முன்னிலையில் அனைத்து கட்சித்தலைவர்களும் பங்கேற்க, அப்போது பிரதமராக இருந்த மன்மோகன்சிங் ரூ.2,400 கோடி செலவிலான மன்னார் வளைகுடாவையும், வங்காள விரிகுடாவையும் இணைத்து, ஆதம் பாலம் வழியாக 167 கிலோ மீட்டர் தூரத்துக்கு கடல்வழி திட்டம் உருவாக்கும் திட்டத்தை தொடங்கிவைத்தபோதுதான் சேது சமுத்திர திட்டம் தொடக்கத்தைக்கண்டது. ஆனால், இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், கடலுக்குள் ராமர் கட்டிய பாலம் தகர்க்கப்படும், இதனால் இந்துமத மக்கள் மனம் புண்படும் என்று எதிர்ப்புகள் கிளம்பின. இந்த திட்டத்தை ரத்து செய்யவேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் சுப்பிரமணியசாமி வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கில் முதல்–அமைச்சர் ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அரசு இந்த திட்டம் கேள்விக்குரியது, பொருளாதார ரீதியாக சாத்தியம் இல்லாதது, பொதுமக்களின் நலனுக்கு ஏற்றதில்லை என்று தெரிவித்தது. இந்த வழக்கு முழுவதுமே ராமர் பாலத்தை சுற்றியே இருந்தது.

இந்த நிலையில், தற்போது பா.ஜ.க. அரசு ராமர் பாலம் அதாவது, ஆதம் பாலத்தை பாதிக்காமல் 5 மாற்று வழிகளைத் தயாரித்துள்ளது. இந்த வழிகள் தொடர்பாக பிரதமர் மோடி ஒப்புதல் கொடுத்தவுடன், மத்திய அரசாங்கம் அதை உச்சநீதிமன்றத்துக்கு தெரிவித்துவிடும். எனவே, நிச்சயமாக சேது சமுத்திர திட்டத்துக்கு விரைவில் ஒரு விடிவுகாலம் வந்துவிடும் என தமிழ்நாடு எதிர்பார்த்துக் கொண்டு இருக்கிறது.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...