Sunday, November 15, 2015

முகப்பு » சினிமா » தினத்தந்தி 725 நாட்கள் படப்பிடிப்பு நடந்த 'சந்திரலேகா'!

ஒரு தமிழ்ப்படத்தைத் தயாரிக்க ஆகும் மொத்த செலவு 2 லட்சம் ரூபாய் என்று இருந்த காலகட்டத்தில், 30 லட்சம் ரூபாய் செலவில் பிரமாண்டமாய் ஒரு படத்தைத் தயாரிக்க ஜெமினி எஸ்.எஸ்.வாசன் திட்டமிட்டார் என்றால் அவர் துணிச்சல் எப்படிப்பட்டதாக இருக்கும்.

படத்தை சிறப்பாக எடுத்தால், நிச்சயம் நன்றாக ஓடும் என்று அவர் உறுதியாக நம்பினார். தன் சொத்துக்களை எல்லாம் முதலீடு செய்தார். அம்மாவின் நகைகளை எல்லாம் வாங்கி விற்றார். பலரிடம் கடன் வாங்கினார்.

பத்து படங்களை தயாரிக்கப் போதுமான பணத்தையும், காலத்தையும் சந்திரலேகாவுக்காக செலவிட்டார்.

அவருடைய நம்பிக்கையும், கடும் உழைப்பும், வீண் போகவில்லை. 1948-ம் ஆண்டு ஏப்ரல் 9-ந் தேதி வெளிவந்த சந்திரலேகா மகத்தான வெற்றி பெற்றது.

அக்காலக்கட்டத்தில், தமிழ்ப்படங்கள் 15 அல்லது 20 பிரிண்ட்கள் தான் போடப்படும். அவ்வளவு ஊர்களில் தான் படம் 'ரிலீஸ்' ஆகும்.

சந்திரலேகாவுக்கு 120 பிரிண்ட்கள் போடப்பட்டு, 120 ஊர்களில் 'ரிலீஸ்' ஆகியது.

'ஆங்கிலப் படங்களுக்கு நிகரான படம்' என்று பத்திரிகைகள் பாராட்டின. ரசிகர்கள் மீண்டும் மீண்டும் பார்த்து ரசித்தனர்.

ஆங்கிலப்படங்களில் 'பென்ஹர்' என்றால், பிரமாண்டமான ரதப் போட்டி நினைவுக்கு வரும். அதுபோல் சந்திரலேகா என்றால், அதில் வரும் முரசாட்டம் நம் கண்முன் தோன்றும்.

மேல்நாட்டில் சிசில்-பி-டெமிலிக்கு 'பத்துக்கட்டளைகள்' (டென் காமன் மெண்ட்ஸ்), ஜேம்ஸ் கேமரோனுக்கு 'டைட்டானிக்', ஸ்டீபன் ஸ்பெல்பர்க்குக்கு 'ஜூராசிக் பார்க்' என்பது போல், எஸ்.எஸ்.வாசனுக்கு 'சந்திரலேகா'.

'சந்திரலேகா'வில் நடனக்காட்சியில்  டி.ஆர்.ராஜகுமாரி.


அதிசயம்-அற்புதம்

சந்திரலேகாவைப் பார்க்காதவர்கள் தமிழ்நாட்டில் அநேகமாக இருக்க மாட்டார்கள்.

எம்.கே.ராதா, ரஞ்சன், டி.ஆர்.ராஜகுமாரி ஆகிய மூவரை மையமாக வைத்து பின்னப்பட்ட கதை. எல்லோருமே நன்கு நடித்தனர். குறிப்பாக டி.ஆர்.ராஜகுமாரி அவர் வாழ்நாளில் இவ்வளவு சிறப்பாக வேறு எந்தப்படத்திலும் நடிக்கவில்லை.

சந்திரலேகாவில் அமைந்த அதிசயங்களும் அற்புதங்களும் அநேகம்.

* 'சந்திரலேகா' என்ற கனமான பாத்திரத்தை டி.ஆர்.ராஜகுமாரி தாங்கி சிறப்பாக நடித்திருந்தார். தவிர தன் சொந்தக்குரலில் பாடியுள்ளார்.

* பிரமாண்டமான இந்த திரைப்படத்திற்கு இசையமைத்தவர் சுமார் இருபது வயது நிரம்பிய இளைஞர் எஸ்.ஆர்.ராஜேஸ்வர ராவ்.

வாசன் குரல்

* இந்தப் படத்தின் சர்க்கஸ் காட்சியில் வாசன் தன் சொந்தக் குரலிலேயே சந்திரலேகாவை மக்களுக்கு அறிமுகப்படுத்தி வைக்கிறார்.

'...கூடாரத்திலே அறுபதடி உயரம் கொண்ட கம்பத்தின் உச்சியிலே அந்தரமாய்த் தொங்கும் கயிற்று ஊஞ்சலிலே உலகத்திலே முதல் தடவையாக ஒரு பெண் அநாயாசமாக தாவிப் பறந்து விளையாடுகிறாள். இந்த அற்புத சாகசத்தை செய்யப் போகிறவர் எங்களது புதுபெண் திலகம் சந்திரலேகா'.

இப்படி சர்க்கஸ் கூடாரத்தின் உள்அமைந்த ஒலிபெருக்கியில் கணீரென்றும் ஒலிக்கும் குரல் எஸ்.எஸ்.வாசன் அவர்களுடையதே.

* இப்படத்தில் நடிகை வி.என்.ஜானகி (பிற்காலத்தில் எம்.ஜி.ஆரின் மனைவி) ஒரு ஜிப்சி பெண்ணாக நடித்துள்ளார்.

* பின்னாளில் நகைச்சுவை நட்சத்திரமாக விளங்கிய 

டி.பி.முத்துலட்சுமி முதலில் தோன்றியது இந்தப்படத்தில்தான். முரசு நடன மாதுக்களில் ஒருவராக அவர் முரசு நடனக்காட்சியில் பங்கேற்றுள்ளார்.

'சந்திரலேகா'வில் 'ஜிப்சி' நடனம். நடுவில் இருப்பவர் வி.என்.ஜானகி.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...