Wednesday, November 4, 2015

தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை

logo


கடந்த மாதம் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் நடந்த மத்திய அமைச்சரவை கூட்டத்தில், சில முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. அதில், ஒரு முக்கிய முடிவாக ரூ.4 ஆயிரத்து 949 கோடி செலவில், மராட்டிய மாநிலம் நாக்பூரிலும், ஆந்திராவில் உள்ள மங்களகிரியிலும் மேற்கு வங்காளத்தில் உள்ள கல்யாணியிலும் அகில இந்திய விஞ்ஞான மருத்துவக்கழகம் என்ற சிறப்பு பல்நோக்கு மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த எய்ம்ஸ் மருத்துவமனை மிகவும், உயர்தரமான சிகிச்சைகளை அளிக்கும் வகையிலான வசதிகளை கொண்டதாக இருக்கும். இப்போது தொடங்க திட்டமிடப்பட்டுள்ள ஒவ்வொரு எய்ம்ஸ் மருத்துவமனையிலும், 960 படுக்கைகள் வசதி நோயாளிகளுக்காக இருக்கும். மருத்துவமனையோடு, மருத்துவ கல்வி பிளாக், ஆயுர்வேதம், யோகா, இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, ஓமியோபதி போன்ற மருத்துவ சிகிச்சைகளுக்கும் தனித்தனி பிளாக்குகள் இருக்கும். இது மட்டுமல்லாமல், பொதுவாக எய்ம்ஸ் மருத்துவமனையில் உயர்தர மருத்துவக்கல்வி வசதியும் இருக்கும்.

இந்த மாநிலங்களில் எல்லாம் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படுவதாக மத்திய அரசாங்கம் அறிவித்து இருக்கிறதே!, தமிழ்நாட்டில் எப்போது தொடங்கப்படும்? என்ற பலத்த எதிர்பார்ப்பு தமிழக மக்களிடையே எழுந்துள்ளது. இந்த 3 மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கும் முடிவு இப்போது அறிவிக்கப்பட்டது என்றாலும், இதற்கான அறிவிப்பு, 2014–ம் ஆண்டே வெளியிடப்பட்டது. நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க. அரசாங்கம், அனைத்து மாநிலங்களிலும், எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்று அறிவித்த உடனேயே, முதல்–அமைச்சர் ஜெயலலிதா, பிரதமர் நரேந்திரமோடிக்கு உடனடியாக தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குங்கள், அரசின் சார்பில் இடவசதி மற்றும் சாலை வசதி, குடிநீர் வசதி, மின்சார வசதி போன்ற அனைத்து உள்கட்டமைப்பு வசதிகளும் வழங்குகிறோம் என்று கடிதம் எழுதியிருந்தார். அதன்பின்பு முதல்–அமைச்சரின் கோரிக்கையை ஏற்று, பிரதமரும் இந்த ஆண்டு பட்ஜெட்டில் தமிழ்நாட்டில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்கப்படும் என்ற அறிவிப்பை வெளியிட்டிருந்தார். தமிழ்நாட்டில் உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கு வாய்ப்புள்ள 5 இடங்களை தேர்ந்தெடுத்து மத்திய அரசாங்கத்துக்கு அனுப்ப முதல்–அமைச்சர் பிறப்பித்த உத்தரவுக்கேற்ப, தஞ்சாவூரில் உள்ள செங்கிப்பட்டி, மதுரையில் உள்ள தோப்பூர், செங்கல்பட்டு, ஈரோட்டில் உள்ள பெருந்துறை, புதுக்கோட்டை ஆகிய இடங்களில் ஒவ்வொரு இடத்திலும், அரசுக்கு சொந்தமான அனைத்து வசதிகளையும் கொண்ட 200 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து மக்கள் நல்வாழ்வுத்துறை அனுப்பியது.

தமிழக அரசின் கருத்துருவை பெற்றுக்கொண்ட மத்திய அரசாங்க உயர்மட்டக்குழு, கடந்த ஏப்ரல் மாதம் 25–ந் தேதி தமிழ்நாட்டிற்கு வந்து 5 இடங்களையும் பார்வையிட்டு, தனது விரிவான அறிக்கையை மத்திய அரசாங்கத்திற்கு தாக்கல் செய்தது. ஆனால், மத்திய அரசாங்கம் இன்னும் இறுதி முடிவு எடுக்கவில்லை. தமிழக அரசும் தொடங்கப்போகும் குளிர்கால கூட்டத்தொடரில் தமிழக எம்.பி.க்களும், உடனடியாக இந்த 5 இடங்களில் ஒரு இடத்தில் எய்ம்ஸ் மருத்துவமனை தொடங்குவதற்கான அறிவிப்பை மத்திய அரசாங்கம் இந்த ஆண்டே வெளியிட்டு, சிறப்பு நிதி ஒதுக்கி உடனடியாக தொடங்கவேண்டும் என்று வலியுறுத்தவேண்டும். சட்டசபை தேர்தலுக்கான அறிவிப்பு வந்துவிட்டால், இதுபோன்ற எந்த புதிய அறிவிப்புகளையும் வெளியிடமுடியாத சூழ்நிலை ஏற்பட்டுவிடும். எனவே, உடனடியாக இந்த பணிகளை அனைவரும் கட்சி வேறுபாடு இன்றி, தமிழ்நாட்டு நலனுக்காக மேற்கொள்ளவேண்டும்.

No comments:

Post a Comment

Regulatory grey area ?

Regulatory grey area ?  BRD Medical college student remains in MBBS first year for 11 years Written By : Divyani Paul Published On 31 Dec 20...