Saturday, November 14, 2015

வரவேற்புக்குரிய அணுகுமுறை!

Dinamani


By ஆசிரியர்

First Published : 13 November 2015 01:20 AM IST


மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு பல்வேறு ஊழல்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் முயற்சி முடுக்கிவிடப்பட்டிருப்பது உண்மை. குறிப்பாக, இணையதளம் மூலம் ஏலம் முறை அறிவிக்கப்பட்டது, இடைத்தரகர்களை அகற்றி நிறுத்தி இருக்கிறது. நரேந்திர மோடி அரசு ஏற்படுத்தியிருக்கும் மிகப் பெரிய எதிர்பார்ப்பு ரயில்வே துறை சீர்திருத்தம் குறித்த அதன் அணுகுமுறை.

ரயில்வே நிர்வாகம் எடுத்திருக்கும் சமீபத்திய முடிவு ஒன்று, பயணிகளால் பலத்த கரகோஷத்துடன் வரவேற்கப்படுவது உறுதி. ரயில் புறப்படும் 4 மணி நேரத்துக்கு முன்பாக பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகும், ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடத்துக்கு முன்பு வரையிலும்கூடப் பயணிகள் முன்பதிவு செய்ய முடியும் என்பதுதான் பாராட்டுக்குரிய அந்த அறிவிப்பு.

இந்தப் புதிய நடைமுறையால், பயண முகவர்கள் மற்றும் ரயில்வே முன்பதிவு அலுவலர்கள் இடையிலான மிகப்பெரிய, பல கோடி ரூபாய்க்கான ஊழலுக்கு வேகத்தடை போட்டுள்ளது ரயில்வே நிர்வாகம். நவம்பர் 12-ஆம் தேதிக்கு முன்பு வரையிலும், ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரம் வரை, பயணத்தை ரத்து செய்தால் பயணத்தொகையில் 25% பிடித்தம் செய்யப்படும். இது பயண முகவர்கள் - ரயில் முன்பதிவு ஊழியர்கள் தங்கள் வியாபாரத்தை நடத்த வசதியாக அமைந்தது. இப்போது ரயில் புறப்படுவதற்கு 48 மணி நேரம் முதல் 12 மணி நேரத்துக்குள் பயணத்தை ரத்து செய்தால் மட்டுமே 25% தொகை பிடித்தம் செய்யப்படும் என்று மாற்றப்பட்டிருக்கிறது.

ரயில் புறப்படுவதற்கு 6 மணி நேரத்துக்குள் அல்லது ரயில் புறப்பட்டுச் சென்ற 2 மணி நேரம் வரை பயணத்தை ரத்து செய்தால் 50% தொகை திருப்பி வழங்கப்படும் என்ற விதிமுறையும் தற்போது மாற்றப்பட்டு, ரயில் புறப்படுவதற்கு 12 மணி நேரத்துக்குள் இருந்து 4 மணி நேரத்துக்குள்ளாக (முதல் பயணிகள் பட்டியல் முதல் அட்டவணை தயாரிக்கப்படும் வரை) இனிமேல் 50% தொகையைத் திரும்பப் பெற முடியும்.

இந்த முன்பதிவு ரத்துக்கான நேரம் மாற்றமும், பயண ரத்துக்கான கட்டணம் இரட்டிப்பாக்கப்பட்டிருப்பதும் நிச்சயமாக பயண முகவர்கள், ரயில்வே முன்பதிவில் உள்ள கருப்பாடுகளை மனதில் கொண்டு தீர்மானிக்கப்பட்டிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. வழக்கமாக, பயண முகவர்கள், அந்தந்த நாள்களின் தன்மைக்கு ஏற்ப, அனைத்து இருக்கைகளையும் முன்பதிவு செய்துவிடுவார்கள். 6 மணி நேரத்துக்கு முன்புவரை தங்கள் பயணம் உறுதியாகவில்லை என்பதை அறிந்து காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களில் பலர் ரத்து செய்துவிடுவார்கள். பயண முகவர்களோ, 25% இழப்பைப் பற்றிக் கவலைப்படாமல் காத்திருப்பார்கள். அவர்களுக்குப் பயணிகள் கிடைக்கவே செய்வார்கள். இரட்டிப்புக் கட்டணம். இதில் ரயில் முன்பதிவு ஊழியர்களுக்கும் கணிசமான தொகை அவர்களது ஒத்துழைப்புக்குக் கையூட்டாகத் தரப்படுகிறது.

ஒவ்வொரு ரயில் சந்திப்பு நிலையத்திலும், பயணிகள் பட்டியல் தயாரிக்கப்பட்டுவிட்ட பிறகு மீதமுள்ள இருக்கைகள், அதன்பிறகு கடைசி நேரத்தில் ரத்தாகும் பயணச்சீட்டுகள் ஆகியவற்றை விற்பனை செய்யத் தனி இடம் உள்ளது. இது பயணிகள் பலருக்கும் தெரியாது. அப்படியே விவரம் தெரிந்தவர்கள் அங்கேபோய் முன்பதிவு செய்ய முற்பட்டாலும் அதனால் அதிகம் பயனில்லை. மக்கள் வரிசையில் நின்று கேட்கும்போது இடமில்லை என்று சொல்லும் அதே ரயில்வே ஊழியர், செல்லிடப்பேசியில் பேசிக்கொண்டே கணினியில் பயணச்சீட்டை விற்றுக்கொண்டிருப்பார் - பயண முகவருக்கு!

இந்தப் புதிய நடைமுறையால் பயண முகவர் - ரயில் முன்பதிவு ஊழியர்கள் கூட்டணி முற்றிலுமாக உடைந்துவிடும் என்று கூறிவிட முடியாதுதான். அவர்கள் புதுப்புது வழிகளைக் கண்டுபிடித்துக் கையாளக்கூடும். ஆனால், இந்த நேர மாற்றம் அவர்களுக்கு அதிக நட்டத்தைக் கொடுக்கும். ஆகவே, அவர்கள் கொஞ்சம் தயங்குவார்கள்.

இதேபோன்று, தட்கல் விவகாரத்திலும் ரயில்வே கடும் விதிமுறைகளை உருவாக்க வேண்டும். தட்கல் பயண முன்பதிவை கணினியில் செய்யும்போது பயண முகவர்களே அனைத்தையும் அள்ளிச் சென்றுவிடும் அவலம் ஆரம்பத்தில் இருந்தது. அதன்பிறகு, முதல் ஒரு மணி நேரத்துக்கு முகவர்கள் கணினி முன்பதிவைச் செய்ய முடியாதபடி தடுக்கப்பட்டது. ஆனால், பயண முகவர்கள் போலியாக தனிநபர் இணைய முகவரியை உருவாக்கிக்கொண்டு தட்கல் பயண முன்பதிவைச் செய்தனர். அதைத் தடுப்பதற்கு ஒரு மாதத்தில் 10 முறைக்கு மேலாக முன்பதிவு செய்த இணைய முகவரிகளை தனித்துப் பிரித்து, அவற்றைச் செயல்படாமல் செய்தது ரயில்வே நிர்வாகம்.

இப்போது, அவர்கள் ரயில் நிலைய முன்பதிவு மையத்தில், பெயர்களைக் குறிப்பிடாமலேயே முன்பதிவு செய்கிறார்கள் என்றும், தங்களுக்கான பயணி வந்த பிறகு அந்தப் பெயரை, ரயில் முன்பதிவு ஊழியர் உதவியுடன் பூர்த்தி செய்கிறார்கள் என்றும், சில பத்திரிகைகள் அம்பலப்படுத்தின. இதுகுறித்து ரயில்வே ஊழியர்கள் மீது எந்த நடவடிக்கையும் இதுவரை இல்லை.

முன்பதிவு ரத்து அல்லது உறுதியான பயணச்சீட்டு ரத்து அனைத்துமே இணையதளம் மூலம் ரயில் பயணச்சீட்டு பெறுவோருக்கே சாதகமாக இருக்கிறது. 30 நிமிடத்துக்கு முன்பாக, பயணச்சீட்டை முன்பதிவு செய்ய முடியும். நினைத்தால் உடனே ரத்து செய்யவும் முடியும். ஆனால், ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்தவர்கள் ரயில் நிலையத்துக்குப் போய்த்தான் ரத்து செய்தாக வேண்டும். ரயில் நிலையத்தில் முன்பதிவு செய்த பயணச் சீட்டுகளையும் தொலைபேசி வாயிலாக ரத்து செய்யும் நடைமுறை குறித்தும் ரயில்வே நிர்வாகம் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment

Fake FB page conducts MU admissions

 Fake FB page conducts MU admissions  13.04.2025 Mumbai : The University of Mumbai has lodged an official complaint with the cyber crime dep...