Tuesday, January 26, 2016

48 நாடுகளுக்கு விசா கட்டணத்தை தள்ளுபடி செய்து இந்தியா அறிவிப்பு

logo

புதுடெல்லி,

கடந்த டிசம்பர் 14-ந்தேதி மத்திய வெளியுறவுத்துறை அறிவுறுத்தியதன் அடிப்படையில் 48 வளர்ச்சி குன்றிய நாடுகளில் இருந்து பிஸினஸ் மற்றும் எம்ப்ளாய்மண்ட் விசாவுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு கட்டணத்தை தள்ளுபடி செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது. எனினும், அவுட்சோர்சிங் நிறுவனத்தின் சேவைக் கட்டணம் மற்றும் இந்தியன் கம்யூனிட்டி வெல்ஃபேர் பண்டு கட்டணம் ஆகியவை வழக்கம்போல் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விசா கட்டண சலுகை வழங்கப்பட்டுள்ள 48 வளர்ச்சி குன்றிய நாடுகளின் பட்டியலில் இடம் பெற்றுள்ள சில முக்கிய நாடுகள் பின்வருமாறு:-


ஆப்கானிஸ்தான்
அங்கோலா
வங்காளதேசம்
பெனின்
பூட்டான்
புருண்டி
புர்கினா பாசோ
கம்போடியா
மத்திய ஆப்பிரிக்க குடியரசு
சாட்
கோமோரோஸ்
கொங்கோ குடியரசு
திஜிபோதி
ஈகுவேடிரியர் குனியா
எரிடீரியா
எத்தியோபியா
காம்பியா
கினியா
ஹைதி
லாவோஸ்
லெசாதோ
லைபீரியா
நேபாளம்
மடகாஸ்கர்
மலாவி
மாலி
மொசாம்பிக்
மியான்மர்
நைஜர்
ருவாண்டா
செனேகல்
சாலமோன் தீவு
சோமாலியா
தெற்கு சூடான்
டோகோ
உகாண்டா
தான்சானியா
ஏமன்
சாம்பியா
கினியா-பிசாவோ
கிரிபாதி
மவுரிதானியா
சாவோ தோம்

பிரின்சிபி
திமோர்-லெஸ்டே
துவாலு
வான்உவாது
சியாரா லியோனே

நுகர்வு கலாசாரமும் கடன் வாங்கும் பழக்கமும்

Dinamani



By இரா. கதிரவன்

First Published : 26 January 2016 01:23 AM IST


"நான் முதன் முதல் வாங்கிய டெரிலின் சட்டை, பதினைந்து வருடம் ஆகியும், கிழியவில்லை, நிறம் மாறவில்லை'.
- இப்படிப் பல பொருள்கள், வெகு காலம் வரை உழைத்தன என்பதை பெருமையாக பலரும் பேசுவதை முன்பெல்லாம் கேட்பதுண்டு. அன்றையப் பொருள்கள் வெகு நாள் உபயோகத்தில் இருப்பது என்பது பெருமையாக கருதப்பட்டது.
ஆனால், இன்றைய நிலை வேறு. இன்றோ, வாடிக்கையாளர்களுக்கு, சந்தையில் ஏராளமான பொருள்கள் குவிக்கப்பட்டு, அவர்களைத் திக்குமுக்காட செய்கின்றன.
பொருள்களை உடனுக்குடன் மாற்றிக் கொள்ளும் - உபயோகித்து விட்டு தூக்கியெறியும் - use and throw, கலாசாரத்துக்கு நாம் சென்று கொண்டிருக்கிறோம். இப்போது, அவசியத்தின் அடிப்படையில் வாங்குவது என்ற நிலை மாறி, ஆடம்பரத்தின் அடிப்படையில் வாங்குவது என்பதும், அத்தியாவசியப் பொருள்களை வாங்குவது என்ற நிலை மாறி, அனாவசியப் பொருள்களையும் வாங்கி, அவற்றை அத்தியாவசியம் என்று கூறிக் கொள்ளும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.
இந்தியப் பொருளாதாரம் மிக மோசமான நிலையில் இருந்த சமயம், இந்த நாட்டு கதவுகள், பிற நாட்டினருக்காக முதலீடுகளுக்கும் - வர்த்தகத்துக்கும் சற்று விசாலாமாக திறந்து விடப்பட்டன. அதன் விளைவுகளில் நல்லவையும் இருந்தன, சில பாதிப்புகளும் ஏற்பட்டன.
சந்தையில் அதிகப் பொருள்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது - மக்கள் அவற்றை வாங்குவது - அதிக வியாபாரம் - அதிக பணச் சுழற்சி - அதிக லாபம் - அதிக முதலீடு - அதிக வேலை வாய்ப்பு - மேலும் வாங்கும் சக்தி - என்ற புதிய சுழற்சியை உண்டு பண்ணியது...
வாடிக்கையாளருக்குத் தேவை இருக்கிறதோ இல்லையோ, அவரை வாங்க வைக்க வேண்டும் என்பதில் நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு விளம்பர யுக்திகளைக் கையாளுகின்றன. அதிலும் குறிப்பாக, சிறுவர் - சிறுமியரை குறி வைத்து செய்யப்படும் விளம்பரங்கள் ஏராளம்.
இருநூறு ரூபாய் மதிப்பிலான ஓர் ஆரோக்ய பானத்துடன், இரண்டு ரூபாய் பெறுமான ஒரு சிறு பொம்மை இலவசம் என விளம்பரம் செய்யப்படும்பொது, சிறுவர், சிறுமியர் பெற்றோரை,அந்த பானத்தை வாங்க நச்சரிக்கும் சூழலைஉண்டு பண்ணுகிறது.
டீத்தூள் அல்லது சோப்புக் கட்டி வாங்கினால், லண்டனில் நடக்க இருக்கும் கிரிக்கட் பந்தயத்துக்கு குலுக்கல் முறையில் டிக்கட் இலவசம் அல்லது திரைப்பட கதாநாயகனோடு ஒரு வேளை உணவு உண்ணலாம் என்பன போன்ற பிதற்றல்கள், வியாபாரத்தை அதிகப்படுத்த நடைபெறுகின்றன. இவற்றைவிட கொடுமையான விஷயம், நிறுவனங்களுக்கு இடையே ஏற்படும் கடும் போட்டியும், அதன் விளைவாக ஏற்படும் விளம்பர யுத்தமும் ஆகும்.
இதில் சோகமான உண்மை என்னவென்றால், இந்த விளம்பர யுத்தத்துக்கு அந்த நிறுவனங்கள் செய்யும் பெரும் செலவு முழுதும், வாடிக்கையாளர்களான நமது தலையில்விழுகிறது என்பதுதான்.
இதன் இன்னொரு அம்சம், இத்தகைய விளம்பரங்கள், மனிதனின் - உணவு முறை, வாழ்க்கை முறை ஆகியவற்றையே மாற்றி விடுகின்றன. வீடுகளில் செய்யப்பட்ட எளிய உணவு வகைகள், நொறுக்குத் தீனிகள் இப்போது மறக்கப்படுகின்றன. உடலுக்கு உபாதைத் தரும் பண்டங்களை வாங்க வேண்டும் என்று குழந்தைகள் நச்சரிக்கும் நிலைதான் எஞ்சுகிறது.
கடன் வாங்கும் பழக்கம்: சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன்னர், சாமான்ய மனிதன் நுழைய முடியாது என்று இருந்த வங்கிகள் இன்றைக்கு, தன்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டு விட்டன. EMI - என்ற ஒரு கோட்பாடு, மாத சம்பளக்காரர்களை, எளிதான தவணை முறையில் பொருள்களை வாங்க, கடன் பெற, வங்கிகள் பெரும் உதவி செய்கின்றன.
ஆனால், சற்று பலகீனமான மன நிலையில் உள்ளவர்கள், இவற்றை சரிவரப் பயன்படுத்தாது, சக்திக்கு மீறி கடன் வாங்கும் பழக்கத்துக்கு ஆளாகி, ஆயுளுக்கும் கடன்காரர்களாக இருக்கின்றனர்.
தங்களது தேவைக்குப் பொருள்களை வாங்குவது போய், தன்னைச் சூழ்ந்து இருப்பவர்கள் வாங்குவதை எல்லாம் தாமும் வாங்க வேண்டும் என்ற நிலைக்கு தம்மைத் தாமே தள்ளிக் கொண்டு விடுகின்றனர்.
இதனால், விட்டில் பூச்சிகள் எப்படி விளக்கில் போய் விழுந்து விடுமோ,அப்படி சராசரி மனிதன், கடனில் சிக்கிக் கொள்ளுகிறான். மேலும், கடன் அட்டைகள் (credit cards) உபயோகமும், பலரது நடவடிக்கைகளை மாற்றிவிட்டன.
வங்கிகள், தங்களது நிலையை உயர்த்திக் கொள்ள, கடன் அட்டைகளை தாராளமாக - எளிதாக கிடைக்கும்படி செய்கின்றன. அதன் அவசியத்தைப் புரிந்து கொள்ளாமல் கடன் அட்டைகளை வாங்கிப் பின்னர், அதற்கு அடிமையாகி, கடன் - வட்டி - அதிக கடன் - அதிக வட்டி என்ற சுழலில் சிக்கிக் கொண்டு - பலர், ஓடி ஒளிந்து கொண்டும், இருப்பதை இழந்தும் -நிம்மதியை தொலைக்கும் நிலையில் இருப்பதும் கண்கூடு.
நிறுவனங்கள் தமது வியாபாரத்தைப் பெருக்க விளம்பரங்களில் ஈடுபடுகின்றன. வங்கிகள் தங்கள் லாபத்தைப் பெருக்க கடன் கொடுத்தல், கடன் அட்டைகள் ஆகியனவற்றை ஊக்கப்படுத்துகின்றன. அவற்றை குறை கூறுவது நமது நோக்கம் அல்ல, அது அவசியம் அற்றதும் கூட...
ஆனால், எந்த ஒரு பொருளை வாங்குவதற்கு முன்னரும், அப்பொருள் அத்தியாவசியமானதா, அதனை வாங்கும் சக்தியும் - அதற்குரிய பணத்தை குறிப்பிட்ட காலக் கெடுவுக்குள் திருப்பிச் செலுத்தும் சக்தியும் உள்ளதா, அதனை வாங்குவதால் வேறு ஏதேனும் இழப்பு ஏற்படுமா, அந்த இழப்பு அவசியம்தானா என்று சிந்தித்து, நமது சக்திக்கு ஏற்பவும் - தேவைக்கு ஏற்பவும் பொருள்களை வாங்குவதை பழக்கமாகக் கொண்டு, கடன் சூழலுக்குள் சிக்காது எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்பதுதான் முக்கியம்.

கல்விச் சூழலின் அவலம்!


Dinamani


By ஆசிரியர்

First Published : 26 January 2016 01:19 AM IST


விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் அருகே இயங்கிவரும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் பயின்ற மாணவிகள், மோனிஷா, சரண்யா, பிரியங்கா ஆகிய மூவரும் சந்தேகத்துக்கு இடமான விதத்தில் கிணற்றில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளனர். இது தற்கொலையாக இருந்தாலும் அல்லது தற்போது பெற்றோர் சொல்வது போல கொலையாக இருந்தாலும், அதற்கான காரணம் கல்லூரியின் செயல்பாடாகத்தான் இருக்க முடியும்.
2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தக் கல்லூரிக்கு மத்திய ஹோமியோபதி மருத்துவக் குழுமம் அங்கீகாரம் அளிக்க மறுத்த பின்னரும், அது தொடர்பான வழக்கில் நீதிமன்றம் கல்லூரிக்கு எதிராகவே தீர்ப்பு வழங்கிய பிறகும், இந்தக் கல்லூரி செயல்பட்டது என்பதே தமிழகத்தில் இயங்கும் தனியார் கல்லூரிக் கல்விச் சூழலின் அவலத்துக்கு அத்தாட்சி.
இந்தக் கல்லூரி போதுமான வசதிகள் பெற்றிருக்கவில்லை என்ற காரணத்துக்காக, எம்ஜிஆர் மருத்துவப் பல்கலைக்கழகம், இதற்கு வழங்கியிருந்த இணைவுத் தகுதியை 2015-லேயே ரத்து செய்துவிட்டதாகக் கூறப்படுகிறது. இருந்தும்கூட, இக்கல்லூரி நடைபெற்றுவந்துள்ளது. போதிய வசதிகள் ஏற்படுத்தாமல், மாணவிகளிடம் அதிகக் கட்டணம் வசூலித்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இக்கல்லூரி மாணவிகள் பலரும் சில மாதங்களுக்கு முன்பு விழுப்புரம் மாவட்ட ஆட்சியரைச் சந்தித்து, இந்தக் கல்லூரியைக் குறித்துப் புகார் மனு கொடுத்தனர். ஆனால், அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தால் இந்தத் தற்கொலை தவிர்க்கப்பட்டிருக்கக்கூடும். தனியார் கல்லூரி சார்ந்த பிரச்னை என்பதால் அதில் தலையிட மாவட்ட ஆட்சியர் தயங்கி இருக்கக் கூடும். இந்த மனுவை ஏற்று, மாவட்ட ஆட்சியர் அந்தக் கல்லூரி வளாகத்துக்கு சென்றிருந்தாலும்கூட, பல உண்மைகள் தெரியவந்திருக்கும்.
கடந்த சில ஆண்டுகளாக, மாணவர்கள் தங்கள் பிரச்னைக்குத் தீர்வு கேட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருவது அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதவித்தொகை வழங்கப்படவில்லை என்றும், விடுதியில் உணவு தரமானதாக இல்லை என்றும், சான்றிதழ் கொடுக்க மறுக்கப்படுகிறது என்றும் பல கோரிக்கைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வருகிறார்கள். ஆனால் பல கோரிக்கைகள், பத்திரிகைகளில் புகைப்படம் வருவதோடு முடிந்து போகின்றன. தீர்வு காணப்படுவதே இல்லை.
தற்போது தனியார் கல்லூரிகளில், குறிப்பாக மருத்துவக் கல்லூரிகளில், கல்விக் கட்டணம் மற்றும் இதர கட்டணங்கள் முறையற்ற வகையில் கட்டாயப்படுத்தப்படுகின்றன. இவர்களை எதிர்த்துக்கொண்டு, அங்கே படித்துப் பட்டம் பெறுவது இயலாது என்ற மனநிலையில், பெற்றோரும் மாணவர்களும் இதனை சகித்துக்கொண்டு இருக்கின்றனர். சில தனியார் கல்லூரிகளில், பயிற்சி மருத்துவராக பணிபுரியும் காலத்துக்கு அரசு நிர்ணயித்துள்ள ஊதியத்தைக்கூட வழங்குவதே இல்லை. இருப்பிடம், உணவு மட்டும் இலவசம் என்பதுதான் அவர்கள் வழங்கும் சலுகை.
பொறியியல் கல்லூரிகள் பலவற்றிலும் மாணவர்கள் சேர்க்கை குறைந்துபோனதால், மாணவர்களைத் தக்கவைக்கவும், மாணவர்களைச் சேர்க்கவும் கல்விக் கட்டணத்தில் "தள்ளுபடி' அறிவிக்கும் காலம் இது. இருப்பினும், பல பொறியியல் கல்லூரிகளும், பாலிடெக்னிக் கல்லூரிகளும் தங்கள் நிதிப்பற்றாக்குறையைச் சமாளிக்க ஓர் உத்தியைக் கையாளுகின்றன. நிர்வாக ஒதுக்கீட்டில் பயிலும் தாழ்த்தப்பட்ட மாணவர்களுக்குக் கல்விக் கட்டணத்தை அரசே முழுமையாக ஈடுசெய்யும் (போஸ்ட் மெட்ரிக் ஸ்காலர்ஷிப்) என்ற அரசாணையைத் தங்களுக்கு ஆதரவாகப் பயன்படுத்துகின்றனர். இந்த விவகாரத்தில் மாணவர்களின் வருகைப் பதிவேட்டை ஒவ்வொரு கல்லூரியிலும் முழுமையாக ஆய்வு செய்தால் பல உண்மைகள் வெளிவரும்.
தனியார் கல்லூரிகளில் மாணவர்கள் மட்டுமல்ல, விரிவுரையாளர்கள் கூடத் துயரத்தில் உள்ளனர். பல பொறியியல் கல்லூரிகள் ஆசிரியர்களுக்குச் சம்பளத்தையே மூன்று மாதங்களுக்கு ஒரு முறை வழங்குவதாக புகார்கள் உள்ளன. மாணவர்கள் குறைவு என்பதால் வருமானம் இல்லை என்கிற நியாயம் முன்வைக்கப்படுகிறது.
தனியார் மருத்துவம், பொறியியல் கல்லூரிகளைக் காட்டிலும் மிக மோசமான நடைமுறை, அதிகக் கட்டணம் என்பது தனியார் மேனிலைப் பள்ளிகளிலேயே அதிகமாகக் காணப்படுகிறது. பிளஸ் 2 மதிப்பெண்கள்தான் உயர்கல்விக்கான அடிப்படை என்பதால், இதையெல்லாம் பெற்றோர் பொறுத்துக்கொள்கின்றனர்.
இந்த அவலங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கத் தமிழக அரசு உடனடியாக ஒரு கல்விச்சூழல் கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும். கட்டண முறைகேடு, கற்பித்தல் குறைபாடு, கற்பதற்கான வசதியின்மை, கல்லூரி விடுதியின் அவலநிலை, தரமற்ற உணவு ஆகியன குறித்த புகார்களை உடனடியாக விசாரிக்கவும், நடவடிக்கை எடுக்கவும், கல்லூரி மீது நடவடிக்கை எடுக்க அதிகாரம் பெற்றதாக இக்குழு அமைய வேண்டும். இன்றைய இன்றியமையாத் தேவை இது.
இந்தக் குழுவில் கல்வித் துறை அலுவலர்கள் பாதி எண்ணிக்கையிலும், பெற்றோர், மாணவர்கள் பாதி எண்ணிக்கையிலும் இருக்க வேண்டும். எந்தவொரு புகாரையும் குழுவின் அங்கத்தினர் இருவரும், புகாருக்கு இலக்கான கல்லூரி அல்லது மேனிலைப் பள்ளி அமைவிடத்தின் மாவட்ட ஆட்சித் தலைவரால் அனுப்பப்படும் இரு வருவாய்த்துறை அலுவலர்களும் அக்கல்லூரி/ பள்ளிக்குச் சென்று நிர்வாகத்திடம் விசாரணை நடத்துவதுடன் மாணவர்களுடனும் தனிஅறை விசாரணை நடத்த வேண்டும்.
இத்தகைய கண்காணிப்புக் குழுக்களின் வெளிப்படைத் தன்மை, உயர்கல்வியில் நிலவும் பல முறைகேடுகளைப் பெருமளவு போக்கிவிடும். இந்தியாவின் ஏனைய மாநிலங்களுக்கு முன்மாதிரியாக தமிழகத்தின் கல்விச் சூழலையும், கல்வியின் தரத்தையும் உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயம்!


Monday, January 25, 2016

பெண் எனும் பகடைக்காய்: அரும்புகளை மலர விடுங்கள்

பெண் எனும் பகடைக்காய்: அரும்புகளை மலர விடுங்கள்

பா. ஜீவசுந்தரி

பூக்களை ரசிக்காதவர்கள் இங்கு யார்? மென்மையான உணர்வும் கலாபூர்வமான ரசனையும் அழகுணர்ச்சியும் கொண்ட யாராக இருப்பினும் பூக்களின் வண்ணங்களையும் நறுமணத்தையும் ரசிக்காமல் கடந்து போய்விட முடியாது. அந்தப் பூக்களே உயிர் கொண்டு நடமாடினால் எப்படி இருக்குமோ, அதன் மறு வடிவம்தான் பெண் குழந்தைகள்.

தங்கள் குடும்பத்தின் தேவதை என்றும் குலவிளக்கு என்றும் கொண்டாடும் பெற்றோர்கள் ஒருபுறம் என்றால், ‘இந்தச் சனியனும் பொட்டையாப் போச்சே….’ என்று புதிதாகப் பிறந்த பெண் குழந்தையின் மீது வெறுப்பை உமிழ்பவர்கள் மறுபுறம். கிராமப்புறங்களில் பெண் சிசுக்களைக் கள்ளிப்பால் ஊற்றியோ நெல் மணிகளைப் புகட்டியோ கொன்ற நடைமுறைகள் வேண்டுமானால் மாறியிருக்கலாம். மதுரையின் உசிலம்பட்டி பகுதிகளில் அன்றாட நடைமுறையாக இருந்த இந்நிலை இப்போது இல்லை. அதே போல, தர்மபுரி மாவட்டத்திலும் பெண் சிசுக்கொலை வெகு பிரபலம். ஆனால், இந்த நிலை முற்றிலும் மாறியிருக்கிறதா என்றால், இல்லை என்று அழுத்தமாக மிகுந்த மன வருத்தத்துடன் சொல்ல வேண்டிய நிலையில்தான் நாம் இருக்கிறோம்.

மூன்று வயதேயான தன் பெண் குழந்தையுடன், சென்னைக்குப் பிழைக்க வந்தார் காளி (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற இளம் பெண். 18 வயதுகூட நிரம்பாத காளி, தர்மபுரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்; கல்வியறிவு இல்லாதவர். இங்கிருந்த உறவினர்களை நம்பியே அப்பெண் வந்திருந்தார். அவர்களும் காளியை ஏமாற்றாமல் பாதுகாப்பளித்து, பிழைப்புக்கு ஒரு வழியையும் காட்டினார்கள். படிக்காத அந்தப் பெண்ணுக்கு சென்னையில் பெரிதாக என்ன வேலை கிடைத்துவிடப் போகிறது? வீடுகளில் பணிப்பெண் வேலை தாராளமாகக் கிடைத்தது. ஒரு நாளைக்கு ஐந்து வீடுகளில் பாத்திரம் தேய்த்தல், துணி துவைத்தல். வீடு பெருக்கித் துடைத்தல் என்று அயராமல் வேலை செய்து, எல்லோரிடமும் நல்ல பெயரையும் வாங்கினார். இதில் எங்கள் வீடும் அடக்கம்.

கையில் வருமானம் கிடைத்த பின் தன்னம்பிக்கையுடன், உறவினர் வீட்டுக்கு அருகிலேயே தனியாக ஒரு குடிசையில் வாடகைக்குக் குடியேறினார் காளி. மகளையும் அரசுப் பள்ளியில் சேர்த்துப் படிக்க வைத்தார். நாங்களும் அதற்கான உதவிகளைச் செய்தோம். இப்போது அந்தப் பெண் குழந்தை 10-ம் வகுப்பை நிறைவு செய்து ப்ளஸ் ஒன் படிக்கிறாள்.

தனியாக ஊரை விட்டுக் கிளம்பி சென்னைக்கு வந்து பிழைக்க எவ்வளவு மனதிடம் வேண்டும். அது அந்தக் காளியிடம் ஏராளமாக இருந்தது. அவ்வப்போது நான் பேச்சுக் கொடுக்கும்போது, அப்படி வந்ததற்கான காரணத்தையும் சொன்னபோதுதான் அந்தப் பெண்ணின் வலியை உணர முடிந்தது. பதினைந்து வயதிலேயே, சொந்தத்தில் வாழ்க்கைப்பட்டு, அவசரம் அவசரமாக ஒரு பெண் குழந்தையையும் 16 வயதில் பெற்றுக்கொண்டாயிற்று. ஆனால், பிறந்தது பெண் என்பதால் வீட்டில் பிரளயம் கிளம்பிவிட்டது. பிறந்த பெண் சிசுவைக் கொன்றுவிடச் சொல்லிக் கணவனிடமிருந்து உத்தரவு வந்ததும் ஆடிப் போய் விட்டார். காளி எவ்வளவோ எடுத்துச் சொல்லியும் கணவன் காதில் வாங்கிக்கொள்ளத் தயாராயில்லை. குழந்தையைக் கொல்லாவிட்டால் சேர்ந்து வாழ முடியாது என்ற நிலை. ஆனாலும் மிகுந்த மனோதிடத்துடன் குழந்தைக்காக மண வாழ்க்கையைத் துறந்து பிறந்த வீட்டுக்குப் போய் விட்டார் காளி.

சனியன் விட்டதென்ற நிலையில் கணவனும் அடுத்த கல்யாணத்தை முடித்துக்கொள்ள, மனதில் விழுந்த அடியை மீறிய கசப்புணர்வுடனும், எப்படியும் வாழ்ந்தே தீருவேன் என்ற மன உறுதியுடனும் சென்னைக்குப் பயணமானவர்தான் காளி. இப்போது சென்னைவாசியாகவே மாறி மகளுக்காகவே வாழ்ந்து கொண்டிருக்கிறார்.

அவ்வப்போது குடும்ப நிகழ்ச்சிகள், திருமணங்கள் என்று ஊருக்கும் போய் வந்துகொண்டிருக்கிறார். மறு கல்யாணம் செய்துகொண்ட கணவன் பற்றி ஒருநாள் காளி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்ட தகவல், என்னையும் வாய் விட்டுச் சிரிக்க வைத்தது. ஆம்!

பெண் குழந்தை வேண்டாமென்று இரண்டாவது கட்டிக்கொண்டு வந்த மனைவியும் பெண் குழந்தையைத்தான் பெற்றெடுத்திருக்கிறாளாம். மிகக் கொண்டாட்ட மன நிலையில் அதைச் சொன்னார் காளி. பெண் சிசுக்கொலை, மைனர் பெண்ணுக்குத் திருமணம் என்பதற்கு மிகச் சரியான உதாரணம் இந்தக் காளியின் வாழ்க்கை.

படிப்பறிவற்ற, கிராமத்துப் பெண் காளிக்கு மட்டும் அந்த நிலை என்பதல்ல; நகரத்தின் நாகரிகப் பெண்களுக்கும் இதே நிலைதான். கால மாற்றத்தின் விளைவு, மருத்துவத் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி எல்லாம் ஒருங்கிணைந்து இப்போது சிசுக்கொலை என்பதைக் கடந்து கருக்கொலையாக மாறி பூதாகரமாக அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. மருத்துவமனைகளில் ஸ்கேன் செய்து பார்த்த பின், குழந்தையின் பாலினம் பற்றி வெளியில் சொல்லக் கூடாது என்று சட்டம் எச்சரித்தாலும், எல்லாச் சட்டங்களையும் போலவே இதுவும் மீறப்படுகிறது. வெளிப்படையாகச் சொல்லாவிட்டாலும் ஆண் குழந்தை, பெண் குழந்தை என்பதற்கான சங்கேத மொழியும், குறியீடுகளும் உருவாக்கப்பட்டுவிட்டன. இந்தியா முழுமையும் இம்முறை அமலில் இருக்கிறது என்பதை எந்த வார்த்தைகளில் விவரிக்க? அதன் விளைவு ஆண் – பெண் விகிதாசாரம் இப்போது தலைகீழ் விகிதமாகி இருக்கிறது. ஒன்றுக்கு மேற்பட்டு இரண்டாவது குழந்தையும் பெண்ணாக இருந்தால் அவர்களுக்கு அரசு சலுகைகளை அளிக்கிறது என்பது கூடுதலான ஒரு ஆறுதல்.

உலகெங்கிலும் நடைபெறும் குழந்தைத் திருமணங்களால் பாதிக்கப்படுபவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் என யுனிசெஃப் நிறுவனம் தெரிவிக்கிறது. ராஜஸ்தான், ஹரியானா, பிஹார், ஒடிஷா எனப் பிற மாநிலங்களுடன் ஒப்பிட்டால் தமிழகத்தின் நிலை எவ்வளவோ முன்னேறி இருக்கிறது என்பது வேதனையிலும் ஒரு மன நிறைவு. தமிழகத்தின் மேற்குப் பகுதியான தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், நாமக்கல் போன்ற மாவட்டங்களில் நிலைமை பெரிதாக மாறிவிடவில்லை. தமிழகம் முழுவதும் 24% சிறுமிகளுக்கு மணம் செய்விக்கும் நிலை இந்த இருபத்தோராம் நூற்றாண்டிலும் மாறவில்லை என்றும் யுனிசெஃப் அறிவிக்கிறது. இவற்றைத் தடுப்பதற்கான முயற்சிகளைத் தீவிரமாக எடுக்காவிட்டால் 2050-ம் ஆண்டுக்குள் இதனால் பாதிக்கப்படும் சிறுமிகளின் எண்ணிக்கை 100 கோடிகளை எட்டும் எனவும் அது எச்சரிக்கிறது.

ஆண் குழந்தைகளுக்குக் கொடுக்கும் மதிப்பு பெண் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவதில்லை என்னும்போது மனம் வலிக்கத்தான் செய்கிறது. பெண் குழந்தைகளைப் பெற்று வேண்டா வெறுப்பாக வளர்ப்பதும், அவர்களைப் பெரும் சுமையாக நினைப்பதும், வீட்டை விட்டுத் தள்ளிவிட்டால் போதும் என நினைத்துச் சிறுமிகளுக்குத் திருமணம் செய்து வைப்பதும் தொடர்கதையாக இருக்கும் நிலை மாற வேண்டும். ‘பொட்டைக் கோழி கூவியா பொழுது விடியப் போவுது’ என்ற நிலைபாடுகளும், சிந்தனைகளும் மாற்றப்பட வேண்டியவை.

கட்டுரையாளர், எழுத்தாளர்.தொடர்புக்கு: asixjeeko@gmail.com

Sunday, January 24, 2016

சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநருக்கு குடியரசுத் தலைவர் கவுரவம்

மரியஜீனா ஜான்சன்

சத்தியபாமா பல்கலைக்கழக இயக்குநர் முனைவர் மரியஜீனா ஜான்சன் சிறந்த பெண்மணியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு குடியரசு தலைவர் விருந்து வழங்கி கவுரவித்தார்.

இதுகுறித்து, சத்தியபாமா பல் கலைக்கழகம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:

இந்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் முன்னேற்ற அமைச்சகமும், பேஸ்புக் சமூக வலைதளமும் இணைந்து நடத்திய போட்டியில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த நூறு பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களுக்கு குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி, ராஷ்டிரபதி பவனில் நேற்று மதிய விருந்தளித்து கவுரவித்தார்.

இதில் சத்தியபாமா பல்கலைக் கழகத்தின் இயக்குநர் முனைவர் மரியஜீனா ஜான்சன் கல்வித் துறைக்கான சாதனையாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

முனைவர் மரியஜீனா ஜான்சன் சென்னை பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். இவர் மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் முன்னேற்றத்துக்காக பல்வேறு திட் டங்களை செயல்படுத்தி வருகிறார். “என் சனிக்கிழமை பல்கலைக் கழகம்” என்ற பள்ளிகள் தத்தெடுப் புத் திட்டத்தின் மூலம் நலம்பாக்கம் கிராம பள்ளி, அஸ்தினாபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி, காரப்பாக்கம் துவக்கப்பள்ளி, கண்ணகிநகர் அரசுப்பள்ளி, எழில் நகர் அரசுப்பள்ளி ஆகிய ஐந்து பள்ளிகள் பலன் பெற்றிருக்கின்றன.

விருது பெற்ற முனைவர் மரிய ஜீனா ஜான்சன் கூறும்போது, “இந்த விருது பெண் இனம் முழுமைக்கு மானது. கல்வித்துறைக்காக விருது வழங்கியது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. எனக்காக வாக்களித்த அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள் கிறேன்” என்றார்.

10 மாதங்களுக்குப் பின் திருப்பதி உண்டியல் துணி தைக்கும் பணி தொடக்கம்

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியல் (கோப்பு படம்).

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் உண்டியல் துணி தைக்கும் பணி 10 மாதங்களுக்கு பின் மீண்டும் தொடங்கியுள்ளது.

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோயிலில் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்த பின், அங்குள்ள உண்டியலில் காணிக்கை செலுத்துகின்றனர். தினமும் சுமார் ரூ. 2 கோடியை தாண்டும் இந்த காணிக்கை மூலம் பல்வேறு நலத்திட்ட பணிகளை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் செய்து வருகிறது.

உண்டியல் மீது பித்தளை கொப்பரை வைத்து, திருநாமம் வரைந்த வெள்ளை நிற துணியால் கொப்பரையும் உண்டியலும் மூடப்பட்டு, சுற்றிலும் பக்தர்கள் காணிக்கை செலுத்தும் வகையில் அது கட்டப்பட்டிருக்கும். இந்த உண்டியல் துணியை தைப்பவரை ‘தர்ஜி’ என்று அழைக்கின்றனர்.

பல ஆண்டுகளாக கே.தேவ தாஸ் என்பவர்தான் இந்த உண்டியல் துணியை தைத்து வந்தார். இவருக்கு மாதம் ரூ. 6,400 ஊதியமும், தினமும் திருப்பதியிலிருந்து திருமலைக்கு சென்று வர பஸ் பாஸும் வழங்கப்பட்டு வந்தது. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். ஆயினும் இவருக்கு மேலும் 2 ஆண்டுகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் வேலை வழங்கப்பட்டது.

இந்நிலையில், கடந்த ஆண்டு மார்ச் மாதம் இவரை தேவஸ் தானம் பணியில் இருந்து நிறுத்தி யது. அப்போது முதல் பழைய உண்டியல் துணிகளையே துவைத்து தினமும் 3 வேளை மாற்றப்பட்டு வந்ததாக கூறப்படு கிறது. இதுகுறித்து பக்தர் களிடையே விமர்சனமும் எழுந்தது.

இந்நிலையில் கே.தேவதாஸை மீண்டும் பணி நியமனம் செய்ய தேவஸ்தான தலைமை நிர்வாக அதிகாரி சாம்பசிவ ராவ் தீர்மா னித்து, அதற்கான உத்தரவையும் வழங்கினார். இதைத் தொடர்ந்து நேற்று முதல் அவர் மீண்டும் தனது பணியை தொடங்கினார்.

இதுகுறித்து தேவதாஸ் கூறும்போது, “நாடு முழுவதிலும் உள்ள பக்தர்கள் மட்டுமின்றி வெளிநாட்டு பக்தர்களும் காணிக்கை செலுத்தும் அட்சய பாத்திரமாக இந்த உண்டியல் உள்ளது. இதன் துணியை தைக்கும் பணியை ஏழுமலையான் எனக்கு மீண்டும் வழங்கி இருப்பதை புண்ணியமாக கருதுகிறேன்” என்றார்.

கன்னத்தில் 5 அறைகள்: பலாத்கார குற்றவாளிகளுக்கு பஞ்சாயத்து அளித்த தண்டனை

THE HINDU TAMIL

உத்தரப்பிரதேசத்தில் 15 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 3 பேரை, 5 முறை கன்னத்தில் அறைந்த பின் விடுவித்துள்ளது உள்ளூர் பஞ்சாயத்து.

பக்பத் மாவட்டத்தைச் சேர்ந்த இச்சிறுமி பள்ளிக்கு செல்லும்போது 3 பேரும் கடத்திச் சென்று பலாத்காரம் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதை விசாரித்த உள்ளூர் பஞ்சாயத்து மேற்கண்ட அதிர்ச்சி அளிக்கும் தீர்ப்பை வழங்கியுள்ளது.

இது தொடர்பாக பக்பத் மாவட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் கூறும்போது, “பலாத்கார குற்றம் சாட்டப்பட்டுள்ள 3 பேர் மற்றும் கிராம பஞ்சாயத்து மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட 3 பேரும் தலைமறைவாக உள்ளனர். இந்த வழக்கில் விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஹரியாணாவில் சிறுமியை பலாத்காரம் செய்த இருவரை 5 முறை ஷூவால் அறைந்த பின் பஞ்சாயத்து விடுவித்த சம்பவம் சில வாரங்களுக்கு முன் நடந்தது. இந்நிலையில் தற்போது உ.பி.யில் இதுபோன்ற சம்பவம் நடந்துள்ளது.

NEWS TODAY 29.01.2026