Friday, February 10, 2017

சிறை வைக்கப்பட்ட எம்.எல்.ஏ.,க்களை மீட்க ஐகோர்ட்டில் ஆட்கொணர்வு மனு தாக்கல்

DINAMALAR
சென்னை: எம்.எல்.ஏ.,க்களை மீட்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

சென்னை, உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் ஆகியோர் நேற்று, வழக்குகளை விசாரித்துக் கொண்டிருந்தனர். அப்போது, வழக்கறிஞர் ஒருவர் ஆஜராகி, 'குன்னம் தொகுதி எம்.எல்.ஏ., ஆர்.டி.ராமச்சந்திரனை, சட்டவிரோதமாக சிலர் பிடித்து வைத்துள்ளனர்.இவரை போல, 130 எம்.எல்.ஏ.,க்கள், சட்டவிரோத காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீட்க கோரி, குன்னம் தொகுதியை சேர்ந்த வாக்காளர் இளவரசன் என்பவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்ய உள்ளார். அந்த மனுவை, உடனே விசாரிக்க வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். 

இதற்கு நீதிபதிகள், 'ஏற்கெனவே, 'டிராபிக்' ராமசாமி, இதே கோரிக்கையுடன் எங்களது சேம்பரில் முறையிட்டுள்ளதால், முதலில் வழக்கை தாக்கல் செய்யும்படி வலியுறுத்தியுள்ளோம்; நீங்களும், மனு தாக்கல் செய்யுங்கள். மற்ற வழக்குகளுடன், உங்களது வழக்கும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்' என்றனர்.அப்போது, அரசு வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் சுதந்திரமாக, எம்.எல்.ஏ.,க்கள் விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். யாரும் சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்படவில்லை,'' என்றார். இதற்கு, மனுதாரரான வழக்கறிஞர், ''எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் பேருந்தில் ஏற்றப்பட்டு, சென்னைக்கு வெளியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் சிறைபிடித்த நிலையில் தங்கவைக்கப்பட்டுஉள்ளனர்,'' என்றார். இதையடுத்து, 'வழக்கை முதலில் தாக்கல் செய்யுங்கள்' என, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

 மனு தாக்கல்:பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியை சேர்ந்த, வாக்காளர் இளவரசன் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனு: குன்னம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக உள்ள ஆர்.டி.ராமச்சந்திரன், 8ம் தேதி, சென்னையில் நடைபெற்ற, அ.தி.மு.க., கூட்டத்தில் கலந்து கொள்ள சென்றார்; அதன்பின், அவரை காணவில்லை. ராமச்சந்திரன் உட்பட, 130 எம்.எல்.ஏ.க்கள், கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ஒரு சொகுசு பங்களாவில், தங்க வைக்கப்பட்டுள்ளனர் என, அங்கிருந்து தப்பி வந்த, ஸ்ரீவைகுண்டம் தொகுதி, எம்.எல்.ஏ., சண்முகநாதன் தெரிவித்தார்.எம்.எல்.ஏ.க்கள் கடத்தி வைக்கப்பட்டிருப்பது குறித்து, காஞ்சிபுரம் மாவட்டம், கூவத்துார் போலீசில் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

 சட்டவிரோதமாக பிடித்து வைக்கப்பட்டுள்ள, எங்கள் தொகுதி எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் உட்பட, 130 எம்.எல்.ஏ.,க்களையும், உயர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த, கூவத்துார் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு உத்தரவிட வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.இதேபோல, கிருஷ்ணராஜபுரம், எம்.எல்.ஏ., கீதாவை, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த கோரி, உறவினர் ஒருவர், ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார்.

இம்மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், மதிவாணன் முன், விரைவில் விசாரணைக்கு வரவுள்ளன.
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் வருமான வரித்துறை கண்காணிப்பு

DINAMALAR

சசிகலாவை ஆதரிக்கும் எம்.எல்.ஏ.,க்களுக்கு, பெரும் தொகை வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளதால், அவர்களை, வருமான வரித்துறை கண்காணிக்க துவங்கி உள்ளது.சசிகலாவுக்கு எதிராக, முதல்வர் பன்னீர்செல்வம், போர்க்கொடி துாக்கி உள்ளார். இதனால், கட்சியில் பிளவு ஏற்படும் சூழல் உருவாகி உள்ளது. கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், முதல்வர் பன்னீர்செல்வத்திற்கு, ஆதரவு தெரிவித்துள்ளனர். முதல்வர் பதவியை பெற துடிக்கும் சசிகலா, தன் ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை தக்க வைத்துக் கொள்ள, கோடிக்கணக்கான ரூபாய் வழங்கி உள்ளதாக, தகவல் பரவி உள்ளது. அதைத் தொடர்ந்து, வருமான வரித்துறை, சசிகலா ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களை, கண்காணிக்க துவங்கி உள்ளது.

- நமது நிருபர் -
மருந்து, மாத்திரை இல்லாமல் பரிதவித்த எம்.எல்.ஏ.,க்கள்!

DINAMALAR

மருந்து, மாத்திரைகளை எடுத்துச் செல்லாததால், அ.தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் பலர், இரவில் துாங்க முடியாமல் தவித்துள்ள தகவல் வெளியாகியுள்ளது. அ.தி.மு.க.,வில், சசிகலாவுக்கு ஆதரவு தரும், எம்.எல்.ஏ.,க்கள் எல்லாரும் கடத்தப்பட்டு, கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள, ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

 எம்.எல்.ஏ.,க்கள் கூட்டத்திற்கு என அழைத்து விட்டு, திடீரென கடத்தப்பட்டதால், தங்களுக்கு தேவையான உடை, மருந்து, மாத்திரைகளை, அவர்களால் எடுத்துச் செல்ல முடியவில்லை. ஆனாலும், சசிகலா உத்தரவையும், அவரது குடும்பத்தினர் கெடுபிடியையும், அவர்களால் மீற முடியவில்லை. அவர்கள் சொல்படி நடந்து கொண்டனர். இருப்பினும், இரவில் துாங்க முடியாமல் தவித்துள்ளனர்.திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த, எம்.எல்.ஏ., ஒருவருக்கு, ரத்த அழுத்தம், சர்க்கரை நோய், காய்ச்சல் என, பல பாதிப்புகள் இருந்துள்ளன. அவரும், சசிகலா உத்தரவை தட்ட முடியாமல், பஸ்சில் ஏறி விட்டார். 

போன இடத்தில் தான், அவருக்கு உடல் நல பிரச்னை வந்துள்ளது. மொபைல் போன்களை, 'ஆப்' செய்து விட்டதால், யாருடனும் தொடர்பு கொள்ள முடியவில்லை. நீண்ட முயற்சிக்கு பின், சென்னையில் தங்கியுள்ள தன் உறவினருடன் பேச, அவருக்கு அனுமதி கிடைத்துள்ளது. இதையடுத்து, நேற்று காலையில், மாத்திரிரைகள் எடுத்து வரச் செய்து, அவர் உட்கொண்டுள்ளார். இதேபோன்று, பெண், எம்.எல்.ஏ.,க்களும் பாதிக்கப்பட்டதாக, அந்த எம்.எல்.ஏ., தெரிவித்தார்.
- நமது நிருபர் -
ரேஷனில் பொருட்கள் வாங்க ஆதார் எண் கட்டாயம் : பதிவு செய்ய ஜூன் 30 வரை அவகாசம்

புதுடில்லி: 'நாடு முழுவதும், ரேஷன் கடைகளில் மானிய விலையில் வழங்கப்படும் பொருட்களை வாங்க, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பது கட்டாயமாகிறது. ஜூன் 30ம் தேதிக்கு பின், ஆதார் எண் இணைக்கப்படாத ரேஷன் கார்டுதாரர்களுக்கு பொருட்கள்வழங்குவது நிறுத்தப்படும்' என, மத்திய அரசு நேற்று அறிவித்தது. அனைவருக்கும் உணவு கிடைப்பதை உறுதி செய்யவும், உணவு வழங்குவதை அடிப்படை உரிமையாக வரையறை செய்யவும், முந்தைய, காங்., தலைமையிலான, ஐ.மு., கூட்டணி ஆட்சிக் காலத்தில், தேசிய உணவு பாதுகாப்பு சட்டம் இயற்றப்பட்டது. இதன்படி, ஒவ்வொருவருக்கும், 5 கிலோ கோதுமை அல்லது அரிசி, கிலோ, ஒன்று முதல் மூன்று ரூபாய் விலையில் வழங்கப்படும். இந்த சட்டம், 2013ல் நிறைவேற்றப்பட்ட போதிலும், இதற்கு தமிழகம் உட்பட பல மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தன; 'மானிய விலையில் அரிசி வழங்கி வரும் தங்களுக்கு, இந்த சட்டத்தால் பாதிப்பு ஏற்படும்' என, அம்மாநில அரசுகள் எதிர்ப்பு தெரிவித்தன.எனினும் நீண்ட இழுபறிக்கு பின், 2016 நவம்பரில், அந்த சட்டம் நடைமுறைக்கு வந்தது. இதைத் தொடர்ந்து, 'போலிபயனாளிகளை கண்டறியும் வகையில் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணெய் இணைக்க வேண்டும்' என, மத்திய அரசு அறிவுறுத்தி வருகிறது.பல மாநிலங்களில், இந்த பணி சரிவர நடக்கவில்லை. இதையடுத்து, ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கு, மத்திய அரசு இறுதிக்கெடு விதித்துள்ளது.
இதுகுறித்து, மத்திய உணவுத்துறை அதிகாரிகள் கூறியதாவது: தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ், மானிய விலையில் ரேஷனில் பொருட்களை வாங்குபவர்கள், தங்கள் ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை கட்டாயமாக இணைக்க வேண்டும். மானிய விலையில் உணவு பொருட்கள் வழங்குவதற்கான ஒதுக்கீடு, இதை பொருத்தே முடிவு செய்யப்படும்.ரேஷன் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க, ஜூன் 30 வரை அவகாசம் வழங்கப்படும். அதன் பின், ஆதார் இணைக்கப்படாத ரேஷன் கார்டுகளுக்கு, மானிய விலை உணவு பொருட்கள் ரத்து செய்யப்படும். இதற்கான அறிவிக்கை, பிப்ரவரி 8ல் வெளியிடப்பட்டுள்ளது. அசாம், மேகாலயா, ஜம்மு - காஷ்மீர் ஆகிய மாநிலங்களை தவிர, நாட்டின் மற்ற பகுதிகளுக்கு இந்த உத்தரவு கட்டாயம் பொருந்தும். புதிதாக ரேஷன் கார்டு பெறுபவர்களுக்கும் இந்த நிபந்தனை பொருந்தும். இவ்வாறு அவர்கள் கூறி உள்ளனர். சமையல், 'காஸ்' மானியம், ரயில் பயண சலுகை என பலவற்றிக்கும், ஆதார் ஏற்கனவே கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. இந்நிலையில், ரேஷனில் பொருட்கள் வாங்கவும், ஆதார் எண் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.
ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு தயாராகும் ரேஷன் கடைகள் : மத்திய உணவுத்துறை அமைச்சர், ராம்விலாஸ் பாஸ்வான் கூறியதாவது: குஜராத் மாநிலத்தில், 17 ஆயிரத்து, 250 ரேஷன் கடைகள் உள்ளன. அவற்றில், வாடிக்கையாளர்களின் ரேஷன் கார்டுடன், ஆதார் எண்ணை இணைக்கும் பணி முடியும் நிலையில் உள்ளது. இதையடுத்து, அனைத்து ரேஷன் கடைகளிலும் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் அட்டையை பயன்படுத்தி, ரேஷன் பொருட்களை பெறலாம். ரேஷன் பொருட்களுக்கான தொகையை, 'ஏடிபி' என்னும் 'ஆதார் கார்டு பேமென்ட்' முறையில் செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், 'ஏடிபி' மூலம் ரயில், விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யவும், எல்.ஐ.சி., தவணையை செலுத்தும் வசதியும் உள்ளதால் பொதுமக்கள் ரொக்கமற்ற பரிவர்த்தனை செய்ய முடியும். மார்ச் 31ம் தேதிக்குள், மாநிலத்தில் உள்ள அனைத்து கடைகளிலும், ஏடிபி திட்டம் அமல்படுத்தப்படும் என்றும், அதனால் உணவுப் பொருள் பதுக்கல் மற்றும் கடத்தல் தடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
முடிவு கவர்னர் கையில் : ராஜ்நாத் பேட்டி

DINAMALAR

புதுடில்லி: தமிழக அரசியல் சூழல் விவகாரத்தில் கவர்னா் தான் முடிவு செய்ய வேண்டும் என மத்திய அமைச்சர் கூறினார். தமிழக அரசியல் நிலவரம் குறித்து கவர்னர் வித்யாசாகர் ராவ் தனது அறிக்கையை ஜனாதிபதி, பிரதமர், உள்துறைஅமைச்சகம், அமைச்சர் ராஜ்நாத்சிங் ஆகியோருக்கு அனுப்பி வைத்தார்.

ராஜ்நாத் கைவிரிப்பு

இது குறித்து மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் நியூஸ் எக்ஸ் டி.வி.சானலுக்கு அளித்தபேட்டியில், கவர்னர் அறிக்கை மீது மத்திய அரசு முடிவு எடுக்க முடியாது. இந்த விவகாரம் கவர்னரின் அதிகாரத்திற்கு உட்பட்டது. ஆளும் கட்சியினரி் உள்கட்சி விவகாரத்தில் மத்திய அரசு தலையிட முடியாது. இது குறித்து ஒன்றும் சொல்வதற்கில்லை. ஆட்சி அமைக்க அழைப்பது குறித்து கவர்னர் தான் முடிவு செய்ய வேண்டும் என்றார்.
எம்.எல்.ஏ.,க்களை காணோம்; போலீசில் குவியும் புகார்

ஆரணி தொகுதி எம்.எல்.ஏ.,வும், இந்து அறநிலையத்துறை அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை' என, ஆரணி டவுன் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி அம்பேத்கர் நகர் பகுதி மக்கள், நேற்று மதியம், 2:00 மணிக்கு, ஆரணி எம்.எல்.ஏ.,வும், அமைச்சருமான சேவூர் ராமச்சந்திரன் அலுவலகத்திற்கு மனு கொடுக்கச் சென்றனர். அங்கு அவர் இல்லாததால், ஆரணி டவுன் காவல் நிலையத்திற்கு சென்று, 'அமைச்சர் சேவூர் ராமச்சந்திரனை காணவில்லை; அவரை கண்டுபிடித்து தர வேண்டும்' என, புகார் அளித்தனர். போலீசார், புகாரை பெற்று, அதற்கான ரசீது மட்டும் கொடுத்து அனுப்பினர்.

மதுரை :

மதுரை, அவனியாபுரம் அ.தி.மு.க., மாணவரணி பகுதி செயலர் தினேஷ் போஸ், போலீஸ் கமிஷனர் சைலேஷ் குமார் யாதவிடம், நேற்று புகார் அளித்தார்.

பின், தினேஷ் போஸ் கூறியதாவது: திருப்பரங்குன்றம் தொகுதி, மதுரை மாநகராட்சி, 61வது வார்டில் உள்ளது. அ.தி.மு.க.,வில் பொறுப்பில் இருப்பதால், என்னிடம் பொதுமக்கள், பல்வேறு பிரச்னைகளை தெரிவிப்பர். நான் அவற்றை, எம்.எல்.ஏ., போஸிடம் கொண்டு செல்வேன். ஆனால், 10 நாட்களாக அவரை காண முடியவில்லை; எங்கு சென்றார் எனவும் தெரியவில்லை. எனவே, அவரை கண்டுபிடித்து தரக்கோரி மனு கொடுத்துள்ளேன். இவ்வாறு அவர் கூறினார்.

பெரம்பலுார்:

பெரம்பலுார் மாவட்டம், குன்னம் தொகுதியைச் சேர்ந்த வழக்கறிஞர் அருள் என்பவர், ஏ.டி.எஸ்.பி.,யிடம் அளித்த புகார்: குன்னம் எம்.எல்.ஏ., ராமச்சந்திரன் எங்கு இருக்கிறார் என தெரியவில்லை. தமிழகத்தில், சட்டசபை உறுப்பினர்கள் கடத்தப்பட்டுள்ளதாக, செய்திகள் வருவதை பார்த்த போது, எங்களுக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது.

ஒருவேளை, எங்கள் தொகுதி உறுப்பினரையும், சமூக விரோதிகள் கடத்தியிருப்பரோ என்ற சந்தேகம் எழுகிறது. மேலும், அவரை காணவில்லை என, நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், செய்திகள் வருகின்றன. எனவே, அவரை கண்டுபிடித்து கொடுக்க வேண்டும். இவ்வாறு புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெற்றோர் பீமரத சாந்தி பங்கேற்காத எம்.எல்.ஏ.,

சசிகலா கும்பல் கட்டுப்பாட்டில் இருக்கும் எம்.எல்.ஏ.,க்கள் பலரை, யாராலும் தொடர்பு கொள்ள முடியவில்லை. இதில், பண்ருட்டி தொகுதி எம்.எல்.ஏ., சத்யா பன்னீர்செல்வமும் ஒருவர்.பண்ருட்டியில் உள்ள வீரட்டானேஸ்வரர் கோவிலில், சத்யா பன்னீர்செல்வத்தின் பெற்றோர் காத்தவராயன் - கஸ்துாரி தம்பதியின், பீமரத சாந்தி எனும், 70வது பிறந்த நாள் விழா நடந்தது.
இந்த விழாவுக்கான அழைப்பிதழ்களை, சத்யா பன்னீர்செல்வம், ஒரு மாதத்துக்கும் மேலாக அனைவருக்கும் வழங்கினார். ஆனால், பெற்றோரின் பீமரத சாந்தி விழாவில், அவராலேயே நேற்று கலந்து கொள்ள முடியவில்லை. இதனால், எம்.எல்.ஏ.,வின் பெற்றோர் சோகத்துடன் காணப்பட்டனர்.




- நமது நிருபர் குழு -
மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினார் கவர்னர் வித்யாசாகர் ராவ்

சென்னை: தமிழக அரசியல் நிலவரம் குறித்து அறிக்கை அனுப்பினார் கவர்னர். தமிழக கவர்னர் வித்யாசாகர்ராவை இன்று முதல்வர் பன்னீர் செல்வம், அ.தி.மு.க.பொதுச்செயலாளர் சசிகலா ஆகியோர் தனித்தனியாக சந்தித்தனர்.

சசிகலா தனது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் கடிதத்தை வழங்கி ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதையடுத்து கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசியல் நிலவரம் குறித்து பிரதமர், மத்திய உள்துறை அமைச்சகம், ஜனாதிபதி ஆகியோருக்கு அறிக்கையாக அனுப்பி வைத்துள்ளதாக கவர்னர் மாளிகை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. கவர்னரிடம் இருந்து விரிவான மற்றொரு அறிக்கை பெற்ற பின்னரே இறுதி தெரிய வரும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.அரசியல் சாசன விதிப்படி இறுதி அறிக்கை தாக்கல் செய்யப்படும் எனவும் மத்திய உள்துறை
ள்அமைச்சர் ராஜ்நாத்சிங்கை கவர்னர் வித்யாசாகர் ராவ் சந்திக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Section of Anna University PhD scholars excluded from convocation

Section of Anna University PhD scholars excluded from convocation Scholars who completed their viva after this date will be awarded degrees ...