Saturday, March 4, 2017


இந்தியன் டாய்லெட்... வெஸ்டர்ன் டாய்லெட்... எது பெஸ்ட்?

கடனில்லா வாழ்க்கை ஆனந்தம். அதிலும் ஒவ்வொருவரும் தீர்த்தே ஆகவேண்டிய முக்கியக் கடன் காலைக் கடன்! காலை நேரத்தில், வயற்காட்டுப் பக்கமும், ஆற்றங்கரைப் பக்கமும் ஒதுங்கவேண்டிய பிரச்னை இன்றைக்குப் பெரும்பாலும் இல்லை. பல வீடுகளில் கழிப்பறை வசதி வந்துவிட்டது. இருந்தாலும், இயல்பாகவே பலருக்கும் இருக்கிற அந்நிய மோகம், கழிப்பறையையும் விட்டுவைக்கவில்லை. `எங்க வீட்ல வெஸ்டர்ன் டாய்லெட்’ என்று பெருமை பொங்கச் சொல்பவர்களும் உண்டு. ரயில்கள், சினிமா தியேட்டர்கள், மால்கள் என எல்லாப் பொது இடங்களிலும் வெஸ்டர்ன் டாய்லெட் வந்துவிட்டது. சொல்லப்போனால், அதிக அளவில் பயன்படுத்தப்படுவது இந்தக் கழிவறைகளே! மேற்கத்திய பாணி கழிவறையை உபயோகப்படுத்துவது எந்த அளவுக்கு ஆரோக்கியமானது என்பது ஒருபுறம் இருக்கட்டும்... `மனிதர்களின் இயல்பான குத்தவைத்து அமரும் நிலையில் (Squatting Method) மலம் கழிப்பதே சிறந்தது’ என்கிறார்கள் மருத்துவர்கள். ஏன்?



கால்மூட்டுகள் வளைந்து, பிட்டம் பாதத்துக்கு அருகில் இருக்கிற மாதிரி வைத்துக்கொண்டு, மேல் உடம்பை வளைத்து, குந்தியிருக்கும் நிலைதான் (Squatting Position) ஓர் இயற்கையான காலைக் கடன் கழிக்கும் முறை. மனிதன் பூமிக்கு வந்த நாளில் இருந்து அன்றாடக் கடனைத் தீர்க்கும் முறை இப்படித்தான். கருவில் இருக்கும்போதே குழந்தை இந்த நிலையில்தான் இருக்கும். மனிதனின் நாகரிகம் வளர்ந்து, தனக்கென வீடு, உடை, உணவுக்கு வேளாண்மை, தனிமனித-சமூக ஒழுக்கங்கள் எல்லாம் மேம்பட்ட நிலையிலும் குந்தவைத்து அமர்ந்துதான் காலைக் கடனைக் கழித்தான். இந்த நிலையில் அமர்வதால், மனிதர்களுக்குக் கிடைக்கும் அரிய நன்மைகள் குடல் நோய்கள், மலச்சிக்கல், இடுப்புத் தசை நோய்கள் வருவதைத் தவிர்க்கலாம் என்பதே!

ஆயுர்வேதத்தில் இப்படி அமரும் நிலையை `மலாசனம்’ என்று குறிப்பிடுகிறார்கள். இப்படி அமர்ந்தால், மலம் வெளியேறுவது எளிதாக நடைபெறும். மலாசனத்தில் குந்தவைத்து அமர்வதன் மூலம், இடுப்பு மூட்டுகள் ஆரோக்கியமாகும். மலாசனத்தின்போது கொடுக்கப்படும் அழுத்தத்தினால், தசைகள் வலிமையடையும். மூலநோய் வராமல் தவிர்ப்பதும் சாத்தியம்.

இனி, மேற்கத்திய பாணி டாய்லெட்டுக்கு வருவோம்... இது கண்டுபிடிக்கப்பட்டது 16-ம் நூற்றாண்டில்! ஆரம்பத்தில் அதற்கான மாதிரி வடிவமே கொஞ்சம் வேடிக்கையானது. ஒரு சிம்மாசனத்தில் ஒரு பெண்ணோ, ஆணோ அமர்ந்திருப்பதுபோல வடிவமைத்திருந்தார்கள். ஆனால், விற்பனையில் சோபிக்கவில்லை. ராயல்டி... அதனால் அதிக விலை என்று மக்கள் வெஸ்டர்ன் டாய்லெட் பக்கம் போகாமல் கொஞ்சம் தள்ளியே நின்றார்கள். ஆனால், அடுத்த சில நூற்றாண்டுகளிலேயே மெள்ள மெள்ள ஐரோப்பா, அமெரிக்கா உள்ளிட்ட மேற்கத்திய நாடுகளுக்குள் ஆழமாக ஊடுருவிட்டது இந்த பாணி. புழக்கத்துக்கு வந்த பிறகு, 19-ம் நூற்றாண்டில் மேற்கத்திய மக்களுக்கு இது வழக்கமான ஒன்றாகவே ஆகிவிட்டது. இன்றைக்கு இந்தியா, பாகிஸ்தான், சீனா, கொரியா, ஜப்பான் போன்ற நாடுகளிலும் இந்த பாணி கழிப்பறைகளின் பயன்பாடு அதிகமாகிவிட்டது.

சில பத்து வருடங்களாக மேற்கத்திய நாடுகளில் குடல் சம்பந்தமான அப்பெண்டிசைட்டிஸ், மலச்சிக்கல், மூலநோய், இர்ரிட்டபுள் பவுல் சிண்ட்ரோம் போன்ற நோய்கள் பரவலானதற்கு காரணங்கள், அவர்களின் உணவு மற்றும் வாழ்வியல் முறைகள். இதைத் தொடர்ந்து ஆய்வு செய்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் இந்த நோய்களுக்கு முக்கியக் காரணமாக ஒன்றைக் கண்டுபிடித்திருக்கிறார்கள்... அது, வெஸ்டர்ன் டாய்லெட். அதாவது, மேற்கத்திய பாணி கழிவறையில் உட்கார்ந்து மலம் கழிப்பது, மனித உடல் அமைப்புக்கு எதிரானது என்கிறார்கள். அதனாலேயே இதைத் தவிர்க்கச் சொல்லி வலியுறுத்தவும் செய்கிறார்கள். இதற்கு மாற்றாக இருப்பது, நம் பழைய பாணி குந்தவைத்து காலைக்கடன் கழிக்கும் முறையே!



இந்திய பாணி டாய்லெட் நல்லது... ஏன்?

மனிதர்களால் மலத்தை அடக்க முடியுமா? ஆசனவாயில் உள்ள சுருக்கத்தை தம்கட்டி லேசாக இழுத்துப் பிடிப்பதன் மூலம் சிறிது நேரம் அடக்கலாம். நீண்ட நேரத்துக்கு இப்படி அடக்க முடியாது. அதாவது, ஆசனவாய் தசையால், இதைத் தன்னிச்சையாக கட்டுப்படுத்த முடியாது. நமது உடலிலிருந்து வெளியேறும் மலக்கழிவுகளின் நிலை, மலக்குடலுக்கும் ஆசனவாய்க்கும் இடையே உள்ள வளைவைச் சார்ந்து இருக்கிறது. நாம் நின்றுகொண்டிருக்கும்போது, 90 டிகிரியில் இருக்கும் `அனோரெக்டல் கோணம்’ (Anorectal Angle) எனப்படும் இந்த வளைவின் விரிவு மலக்குடலுக்கு மேல்நோக்கி அழுத்தம் கொடுத்து, மலம் வெளியேறாமல் வைத்திருக்கும். ஸ்குவாட்டிங் பொசிஷனில் அமரும்போது, இந்த வளைவு சீராகும்.

தோட்டக்குழாயிலிருந்து தண்ணீர் வெளியேறும்போது குழாயில் இருக்கிற முறுக்குத் தன்மை எப்படி வளைவில்லாமல் நேர்த்தன்மைக்கு வருகிறதோ, அதேபோன்று குந்தவைக்கும் நிலையில், நம் மலக்குடலின் வளைவு நேராகி மல வெளியேற்றம் எளிதாகிறது. ஆக வெஸ்டர்ன் டாய்லெட் வேலைக்காகாது. நம் இந்திய பாணி கழிவறைகளே காலைக்கடன் கழிக்கச் சிறந்தவை.

கர்ப்ப காலங்களிலும், அதிக உடல் பருமனாலும் மூல நோய் வரலாம். அடிவயிற்றில் கொடுக்கப்படும் அழுத்தத்தால், மலக்குடல் பாதிக்கப்பட்டு, மலக்குடல் வழியாக ரத்தம் கசியும் வாய்ப்பும் உண்டு. அதனால், குந்தவைத்து அமரும் நிலையில் மலம் கழிக்கிறபோது, வயிற்றுப் பகுதியில் அழுத்தம் குறையும். அதோடு, மலம் கழிப்பதும் எளிதாக இருக்கும்.

`எங்களுக்கு வேறு வழியில்லை... வெஸ்டர்ன் டாய்லெட் வசதிதான் இருக்கிறது’ என்கிறவர்கள் ஒன்று செய்யலாம்... கால்களுக்குக் கீழே முக்காலிருந்து ஓர் அடி உயர ஸ்டூலைப் போட்டு, அதில் கால்களை வைத்துக்கொண்டு மலம் கழிக்கலாம். பிரச்னை இல்லாமல் இருக்கும்.

நம் பாரம்பர்யம் எப்போதுமே நல்லவற்றைத்தான் நமக்குத் தந்து சென்றிருக்கிறது. இயற்கைக்குத் திரும்புவோம்... இந்திய பாணியையே பின்பற்றுவோம்.


- பாலுசத்யா

தெங்குமரஹாடா - ‘ட்ரெக்கிங்’ பிரியர்களின் சொர்க்கபுரி! #Mustgospot

சுற்றுலா என்றதும் பலருக்கும் ஊட்டி, கொடைக்கானல்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், இப்படியெல்லாம் கூட தமிழகத்தில் இடம் இருக்கிறதா என, மலைப்பை ஏற்படுத்தும் பகுதிகள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன. அதில், ஒன்றுதான் தெங்குமரஹாடா. சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஆதிவாசி கிராமம். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக தெங்குமரஹடாவுக்கு செல்லலாம். பவானி சாகர் அணைக்கட்டு அருகே வரும்போதே மீன் வாசனை மூக்கைத் துளைக்கும். அணை மீன் அவ்வளவு ருசியாக இருக்கும். வாங்கிச் சாப்பிடாமல் அந்த இடத்தை விட்டு நகர மாட்டீர்கள்.



சரி...முதலில் தெங்குமரஹாடாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம். சிறிய அழகிய கிராமம். மாயார் ஆறு இந்த கிராமத்தை வளப்படுத்துகிறது. 900 குடும்பங்கள் வசிக்கின்றன. நர்சரி பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளன. டாஸ்மாக்கும் இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் மதுவை தாங்களே தயாரித்துக் கொள்ளும் அனுபவம் கொண்டவர்கள். காலையில் உணவு அருந்தும் போதே மது அருந்தும் பழக்கமுடையவர்கள். அவர்கள் தயாரித்த மது உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தது. ஆனால், டாஸ்மாக் மது இளைஞர் முதல் முதியவர் வரை நோயாளிகளாக மாற்றியிருக்கிறது.



தெங்குமரஹாடாவுக்கு அருகில் உள்ள நகரம் கோத்தகிரி. தெங்குமரஹாடா நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் வழியாகத்தான் செல்ல முடியும். பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடாவுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம், கோத்தகிரியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் தெங்குமரஹாடா ஊருக்குள் போவதில்லை. மயார் ஆற்றின் ஒரு கரையில் நின்று விடும். பேருந்தில் இருந்து இறங்கி பரிசலில் அடுத்தக் கரையை அடைய வேண்டும். அடர்ந்த காடு வழியாக பேருந்து செல்லும். தார் சாலையெல்லாம் கிடையாது. மண் சாலைதான். அதனால் 4 வீலர் டிரைவ் கொண்ட ஜீப் போன்ற வாகனங்கள்தான் தெங்குமரஹாடா பயணத்துக்குச் சரியானது. டாடா சூமோ, ஜிப்சி, பொலீரோ போன்ற வாகனங்களும் ஏற்றது.

கொடநாட்டில் இருந்து காட்டு வழியாக மூன்றரை மணி நேரம் நடந்தாலும், 10 கி.மீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். ‘ட்ரெக்கிங்’ மேற்கொள்பவர்கள் உதகை வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற வேண்டும். கைடுகளுடன்தான் ‘ட்ரெக்கிங்’ மேற்கொள்ள முடியும். வனத்துறை அலுவலவகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கிக்கொள்ள முன் அனுமதி பெறவேண்டும்.



தமிழகத்திலேயே அதிக வனவிலங்குகள் நிறைந்த பகுதி தெங்குமரஹாடா. ‘ட்ரெக்கிங்’-கின்போது, வனவிலங்குகள் கண்டிப்பாக தென்படும். யானைகள், புலிகள், சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, காட்டெருமை, சாம்பார் மான்கள், புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, கரடி என அனைத்து வகை விலங்கினங்களின் புகலிடம் அது. காணக் கிடைக்காத அரிய வகை பறவைகளின் வாழ்விடம். பாறு கழுகுகள் தெங்குமரஹாடாவின் இன்னொரு முக்கிய அம்சம். வெண்முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செந்தலைப் பாறு கழுகு, மஞ்சள் முக பாறு கழுகு ஆகியவைகள் மாயாற்றை ஒட்டிய பகுதிகளில் காணலாம். தெங்குமரஹாடா காட்டுக்குள் சென்றால் அதிர்ஷ்டம் இருந்தால் தனிமை விரும்பிகளான புலியைக் கூட பார்க்க முடியும். உண்மையைச் சொல்லப் போனால், ட்ரெக்கிங்கை விரும்புபவர்களின் சொர்க்கம் கொடநாடு- தெங்குமரஹடா ட்ரெக்கிங் பாதை.



சுற்றுலா செல்பவர்கள் சொந்த வாகனத்தில் செல்வது ஏற்றது. மாயாறில் குறைந்தளவு தண்ணீர் ஓடினால், வாகனத்தைச் செலுத்தி அக்கரையை அடையலாம். அதற்கு முன்னதாக மாயற்றை பற்றி நீங்கள் ஒன்று அறிந்துகொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் குந்தா என்ற அணை உள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமானது. அணையில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் தண்ணீர்தான் மாயாறாக உருவாகி, முதுமலை வழியாக ஓடி தெங்குமரஹாடா வழியாக பவானி சாகர் அணையில் சேர்கிறது. அணையில் நீர் அதிகமாக திறந்து விடப்படும் பட்சத்தில் வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட வாய்ப்பு உண்டு. அதனால், தண்ணீரின் அளவைப் பார்த்துவிட்டுத்தான் வாகனத்தை ஆற்றுக்குள் செலுத்த வேண்டும். தண்ணீர் மாயம் போல் அதிகரிப்பதும் குறைவதுமாக இருப்பதால்தான் இதற்கு 'மாயாறு' என்ற பெயரும் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அரிசி விளையும் ஒரு சில பகுதிகளில் தெங்குமரஹாடாவும் ஒன்று. பசுமை நிறைந்த வயல்வெளிகளைக் காண முடியும். வாழைத்தோட்டங்கள் சூழ்ந்த பாதையில் நடப்பது மனதை மயக்கும். மரங்களின் அழகும் நம் மனதை ஆட்கொள்ளும். மாயற்றில் சில இடங்களில் குளிக்கலாம். முதலைகள் உண்டு. கவனம் தேவை. இந்த கிராமத்திலும் மீன் உணவு ரொம்ப ஸ்பெஷல். உள்ளுர் மக்கள் மணக்க மணக்க மீன் குழம்பு சமைத்து தருகிறார்கள். நாட்டுக்கோழி குழம்பும் சுவைபட சமைக்கிறார்கள். தெங்குமரஹடாவின் இன்னொரு விசேஷம் செவ்வந்திப் பூக்களை விளைவிப்பது.



தெங்குமரஹாடா வனப் பகுதியில் ஹெஜஹட்டி கணவாய் என்ற இடத்தில் ‘ஆதி கருவண்ணையர் பொம்மதேவியார்' கோயில் உள்ளது. இந்த கோயில் ‘உப்பிலி நாயக்கர்' சமூகத்தின் குல தெய்வம். மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோயில் வளாகத்தில் கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செய்வார்கள்.

சில அனுபவங்களை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும். தெங்குமரஹாடா அனுபவமும் அந்த ரகம்தான்.

- எம்.குமரேசன்

தூக்கம், நிம்மதி, மகிழ்ச்சி... விரட்டும் மனஅழுத்தம்?! தீர்வுகள் இங்கே..! #RelaxPlease
டென்ஷன்... இதைப்போல மோசமான ஒன்று வேறு இல்லை. எல்.கே.ஜி படிக்கும் குழந்தைக்குக்கூட பள்ளிக்குப் போகும் அவசரத்தில் ஆரம்பமாகிவிடுகிறது டென்ஷன். அப்பா, அம்மாவுக்கு ஆபீஸ்... தாத்தா-பாட்டிக்கு தனிமை... இப்படி எல்லோருக்கும் ஏதோ ஒருவித டென்ஷன்! இது தொடர்ந்தால் உருவாவதுதான் `ஸ்ட்ரெஸ்’ எனப்படும் மனஅழுத்தம். இதற்கு ஆளானவர்களால் தெளிவாக சிந்திக்க முடியாது; நிம்மதி பறிபோய்விடும்; படபடப்பு தொற்றிக்கொள்ளும். மனஅழுத்தம், சாதாரண பிரச்னை இல்லை... அதிகமானால், தற்கொலை உணர்வைத் தூண்டி ஆளையே காலி பண்ணிவிடும். இன்றைக்கு உலக அளவில் மனஅழுத்தத்துக்கு ஆளானவர்கள் கோடிக்கணக்கான பேர். இது ஏன் வருகிறது, இதனால் உருவாகும் நோய்கள், தீர்வுகள்... அனைத்தையும் தெரிந்துகொள்ளவேண்டியது அனைவருக்குமே காலத்தின் கட்டாயம். அவற்றைப் பற்றி கூறுகிறார் டயட்டீஷியன், வைஷ்ணவி சதீஷ்.

ஒரு சவாலை எதிர்கொள்ள, உடல் தன்னைத் தயார்படுத்திக்கொள்கிற நிலைதான் மனஅழுத்தம் (Stress). இந்த சவால், பணிச்சுமையாகவோ, குடும்பப் பொறுப்புகளாகவோ, தோல்வியாகவோ, ஏன்... தனிமையாகவோகூட இருக்கலாம்.



மனஅழுத்தத்தின் வகைகள்...

* அக்யூட் ஸ்ட்ரெஸ் (Acute Stress): இது, அலுவலகத்தில் மேலதிகாரிகள் தரும் பிரஷர், வீட்டிலுள்ள குழப்பங்கள் போன்றவற்றால் ஏற்படும், விரைவில் சரியாகக்கூடிய மனஅழுத்தம். இது மன வைராக்கியத்தைக் கூட்டி, ஒருவகையில் நன்மையையே அளிக்கும்.

* எபிசோடிக் அக்யூட் ஸ்ட்ரெஸ் (Episodic Acute Stress): தொடர்ந்து அக்யூட் ஸ்ட்ரெஸ்ஸில் இருப்பவர்களுக்கு இது ஏற்படும். இதனால் பதற்றம், எரிச்சல், முன் கோபம் உண்டாகும். தோல்வி எண்ணம் உள்ளவர்களும், ஓய்வு ஒழிச்சலின்றி வேலை செய்பவர்களும் இந்த நிலையை எளிதாக அடைந்துவிடுவார்கள்.

* க்ரோனிக் ஸ்ட்ரெஸ் ((Chronic Stress): மனஅழுத்தத்தைப் போக்க எந்த முயற்சியும் எடுக்காமல் இருப்பவர்கள், இந்த நிலைக்குத் தள்ளப்படுவார்கள். பெரும் நோய்கள், விபத்துக்குள்ளாதல், தற்கொலை எண்ணம் வருதல் போன்றவை ஏற்படும். ஏழ்மை, சந்தோஷமில்லாத மணவாழ்க்கை, திருப்தியில்லாத வேலை போன்ற நிலையில் இருப்பவர்களுக்கு இந்த மனஅழுத்தம் ஏற்படும்.


மனஅழுத்தத்தால் ஏற்படும் நோய்கள்...

* உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள், நோய் எதிர்ப்புச் சக்தி குறைதல், தூக்கமின்மை, நுரையீரல் தொடர்பான நோய்கள் போன்றவை ஏற்படலாம்.

* மனஅழுத்தம், நரம்பு மண்டலத்தின் ஹைப்போதாலமஸ் (Hypothalamus) மற்றும் பிட்யூட்டரி சுரப்பியையும் (Pituitary Gland) பாதிக்கும். உடலின் வளர்சிதை மாற்றம், நோய் எதிர்ப்புச் சக்தி, உளவியல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்துகிற இந்த ஹார்மோன்களில் பாதிப்பு ஏற்படுவதால், அதி விரைவில் உடல்நலம் குன்றும்.

* பொதுவாக ஸ்ட்ரெஸ்ஸைச் சமாளிக்க அதிகமாகச் சாப்பிடத் தோன்றும். இப்படிச் சாப்பிடுவது உடல் எடையை அதிகப்படுத்தி, உறக்கமின்மை எனப்படும் `இன்சோம்னியா’ (Insomnia) போன்ற நோய்களுக்கும் வழிவகுக்கும். எனவே, உணவில் கவனம் தேவை.



தடுக்கும் வழிமுறைகள்...

* மூன்று வேளை வயிறாரச் சாப்பிட்ட பிறகும் சாப்பிடத் தோன்றும்போது, சாலட், பழங்கள், முளைகட்டிய பயறுகள், நட்ஸ் போன்றவற்றைச் சாப்பிடலாம். இவை, அதீதப் பசியைப் போக்கும்.

* அதிகமாக நீர் அருந்துவது மனதை அமைதிப்படுத்தி, தெளிவாகச் சிந்திக்க உதவும்.

* அந்தந்த சீசனில் கிடைக்கும் பழங்கள், காய்கறிகளை உண்பதுதான் உடலுக்கு எப்போதும் நன்மை தரும்.

* ஃபாஸ்ட் ஃபுட்ஸ், ஜங்க் ஃபுட்ஸ், ஹோட்டல் உணவுகளின் மீதுள்ள ஆசையைக் குறைத்துக்கொண்டு ஆரோக்கியமான உணவுப் பழக்கத்தைத் தொடர்ந்தால், ஸ்ட்ரெஸ்ஸில் இருந்து விடுபடலாம்.





மனஅழுத்தம் குறைக்க செரட்டோனின் சுரப்பைத் தரும் உணவுகள்...

* முட்டையின் மஞ்சள் கருவிலுள்ள ட்ரிப்டோபான் (Tryptophan).

* அன்னாசி பழத்திலுள்ள புரோம்லின் (Bromelin).

* டோஃபூ, வான் கோழி இறைச்சி, வஞ்சர மீன்.

* நட்ஸ் மற்றும் எண்ணெய் வித்துகளிலுள்ள நார்ச்சத்து நுரையீரல், இதய நோய்களிலிருந்தும் புற்றுநோயில் இருந்தும் பாதுகாக்கும்.

* ஆப்பிள், எலுமிச்சை, பப்பாளி, ஆரஞ்சு, அன்னாசி, நாவல் பழம், அவகேடோ ஆகியவற்றில் ஆன்டிஆக்ஸிடன்ட் அதிகமாக உள்ளது. இவற்றைச் சாப்பிடலாம்.

* தயிர் உடலின் நச்சை அகற்றி, மனச்சோர்வு மற்று மனஅழுத்தத்தில் இருந்து காக்கும்.
இவற்றோடு உடற்பயிற்சி செய்வது நல்ல எண்ணங்களைத் தரும்; நல்ல தூக்கம் கிடைக்கும்.

எல்லோருக்கும் பிடித்த சாக்லேட், ஆன்டி ஆங்சைட்டி டிரக்காக (Anti Anxiety Drug) அறியப்பட்டுள்ளது. அதாவது, மனஅழுத்தத்தைப் போக்கும் சக்தி இதற்கு இருப்பதாகக் கூறுகிறார்கள். பிறகென்ன... சந்தோஷமாக சாக்லேட் சாப்பிடலாமே!

சாக்லேட் சில குறிப்புகள்...

இது, கொக்கோ பீன்ஸிலிருந்து தயாரிக்கப்படுகிறது.

100 கிராம் சாக்லேட்டில் உள்ள சத்துக்கள்...

* எனர்ஜி - 54 கலோரி

* கொழுப்பு - 31 கி

* கார்போஹைட்ரேட் - 61 கி

* புரோட்டீன் - 4.9 கி

* வைட்டமின்கள் - பி1, பி2, பி3, சி

* மினரல்கள் - மக்னீசியம், கால்சியம். இரும்புச்சத்து, துத்தம், காப்பர், பொட்டாசியம், மாங்கனீஸ்

* இதிலுள்ள ஃப்ளேவனாய்டுகளில் இருக்கும் வைட்டமின், ஆன்டிஆக்ஸிடன்ட் ரத்த அழுத்தத்தைச் சீராக்கி, இதய நோய்களிலிருந்து பாதுகாக்கும்.

* சாக்லேட்டிலுள்ள கொழுப்புச்சத்தில் ஒலியிக் (Oleic Acid) அமிலம் உள்ளது. இது, நோய் எதிர்ப்புச் சக்திக்கும் மூளையின் செயல்பாட்டுக்கும் உதவுவது.

* இதிலிருக்கும் ரெஸ்வெரட்ரால் (Resveratrol) இதய நோய் வராமல் தடுக்கும். இது, சாக்லெட்டில் 13.1 எம்.சி.ஜியும், ரெட் ஒயினில் 18 எம்.சி.ஜியும், திராட்சைப் பழத்தில் அதிகமாகவும் காணப்படுகிறது.

* இதில் இருக்கும் காகாவோ (Cacao) மூளைச் சோர்வைப் போக்கும்.

* டார்க் சாக்லேட்டில் உள்ள எல்-ட்ரிப்டோபான் (L-tryptophan) செரட்டோனின் சுரப்பைத் தூண்டுகிறது.



தேவையான சத்துக்கள்...

கார்போஹைட்ரேட், புரோட்டீன் மற்றும் கொழுப்பு வகைகளை மேக்ரோ நியூட்ரியன்ட்ஸாகவும், வைட்டமின், மினரல்களை மைக்ரோ நியூட்ரியன்ட்ஸாகவும் பிரித்து வைத்திருக்கிறார்கள். முதலில் உள்ளவை, உடல் செயல்பாட்டுக்கும் மற்றவை, சத்துக்கள் உறிஞ்சப்படுவதற்கும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கவும் உதவுகின்றன.

வைட்டமின் பி:

உடல்வளர்ச்சிக்கு உறுதுணையாக இருக்கும் இவை, நீரில் கரையும் தன்மை கொண்டவை. இவை குறையும்போது உடல்பருமன், நரம்பியல் கோளாறுகள், டிப்ரஷன் உணர்வுகளில் சமநிலையற்ற தன்மை போன்றவை ஏற்படுகின்றன.

* வாழைப்பழம், மீன், கோழி இறைச்சி, ஈரல், பருப்புகள், பட்டாணி, பீன்ஸ், நட்ஸ் முதலியவற்றில் இந்த வைட்டமின் அதிகமாக உள்ளது.

வைட்டமின் சி:

நீரில் கரையும் தன்மையுடைய இந்த வைட்டமின் ஸ்ட்ரெஸ்ஸை ஏற்படுத்தும் ஹார்மோன்களைக் குறைத்து, மூளையை அமைதிப்படுத்தும்.

* புகைபிடித்தல், கருத்தடை மாத்திரைகள், டிரக்ஸ் போன்றவை வைட்டமின் சி-யைக் குறைக்கக் கூடியவை.

* சிட்ரஸ் பழங்கள், கொய்யா, குடமிளகாய், கீரை வகைகள், தக்காளி ஆகியவற்றில் வைட்டமின் சி அதிகமாக உள்ளது.

மக்னீசியம்:

* ஆன்டி ஸ்ட்ரெஸ் மினரலான இது, உடலின் உயிரியல் வளர்ச்சி மாற்றங்களுக்கு துணைபுரிகிறது.

* செல்களிலிருந்து சக்தியை வெளியேற்ற உதவுவதோடு, நரம்பு மண்டலத்தைச் சுறுசுறுப்பாகச் செயல்பட வைக்கிறது.

* காய்கறிகள், பழங்கள், கீரைகள், பயறு வகைகள், கொட்டைகள், இறைச்சி ஆகியவற்றில் உள்ள இந்த மினரல் உடலைச் சமச்சீராக்கும்.

காம்ப்ளக்ஸ் கார்போஹைட்ரேட் (Complex Carbohydrate):

* இது, செரிமானத்தக்குப் பின் வெளியாகும் சக்தியை மெதுவாக வெளியிடுவதால், வயிறு நிறைந்திருக்கும் உணர்வை ஏற்படுத்தும். இதனால் உடலின் சர்க்கரை அளவை சரிநிலைப்படுத்தும்.

* முழு தானியங்கள், கோதுமை பிரெட், ஓட்ஸ், சிவப்பரிசி முதலியவற்றில் அதிகமாக உள்ளது.

கொழுப்பு அமிலங்கள்:

* இது குளுகோகார்டிகாய்ட்ஸ் (Glucocorticoids)-ஐக் குறைக்கிறது.

* மீன், ஆளி விதை, பூசணி விதைகளில் காணப்படுகிறது.

கால்சியம்:

உடலுக்குத் தேவையான இந்தச் சத்து சூடான பால், ராகி, கஞ்சி, சாலட், புரோக்கோலி, எள், கரும்பு ஆகியவற்றில் இருக்கிறது.

தவிர்க்கவேண்டிய உணவுகள்:

இனிப்புகள்: முழுவதுமாகத் தவிர்க்கவும். இவை, உடல் ஆரோக்கியத்தைத் தடுத்து, உடல் தளர்ச்சியையும் மந்தநிலையையும் உருவாக்கும்.

பதப்படுத்தபட்ட உணவுகள்: இவை 58 சதவிகிதம் டிப்ரஷனுக்கு உள்ளாக்கக் கூடியவை. இந்த உணவுகள் ஒருவித அடிமைத்தனத்துக்கு (Addiction) உள்ளாக்கி, ஹெல்த்தைப் பாதிக்கும்.

காஃபின் (Caffeine): காபியிலுள்ள காஃபின் மக்னீசியத்தை அழித்து, தூக்கமின்மை, நடுக்கம் போன்றவற்றை எற்படுத்தும்.

மனஅழுத்தம் குறைக்க உதவும் ரெசிப்பி!

சாக்லேட் மில்க்‌ஷேக்:

தேவையானவை:

கோக்கோ பவுடர் - 2 1/2 டேபிள்ஸ்பூன்
குளிர்ந்த பால் - 2 கப்
கருப்பட்டி அல்லது நாட்டு சர்க்கரை - ¼ டீஸ்பூன்
ஐஸ் க்யூப்கள் - 10
கிரேட்டடு சாக்லேட் - 2 டேபிள்ஸ்பூன்.

செய்முறை:

எல்லாவற்றையும் மிக்ஸில் போட்டு மென்மையாக நுரைத்து வரும் வரை பிளெண்ட் செய்யவும். பிறகு, ஒரு கண்ணாடி டம்ளரில் ஊற்றி, கிரேட்டடு சாக்லேட்டால் அலங்கரித்துப் பரிமாறவும்.

- வைஷ்ணவி

10,000 ரூபாய் பட்ஜெட்: என்ன மொபைல் வாங்கலாம்? #MobileMania

வாரந்தோறும் ஏதேனும் ஒரு பிராண்டில் இருந்து குறைந்தது ஒரு மொபைல் போனாவது புதிதாக சந்தைக்கு வந்துவிடுகிறது. இதனால் தற்போது புதிதாக மொபைல் வாங்க வேண்டுமென்றால் ஆப்ஷன்களுக்கு பிரச்னையே இல்லை. ஆனால் எதைத் தேர்வு செய்வது என்பதில்தான் பலருக்கும் சிக்கல். அவர்களுக்கு கைகொடுக்கவே இந்தக் கட்டுரை.

இன்றளவும் புதிய மொபைல் போன் என்றாலே பலரும் ஒதுக்கும் பட்ஜெட் தொகை 10,000-தான். பத்தாயிரம் ரூபாய்க்கு குறைவான மொபைல்கள்தான் மார்க்கெட்டில் குபீர் ஹிட் அடிக்கின்றன. அப்படி 10,000 ரூபாய் விலை அளவில் வந்து, நல்ல ரெவ்யூஸ் குவித்துவரும் மொபைல்களின் தொகுப்பு இங்கே...

1. மோட்டோ E3 பவர் :

பட்ஜெட் போன்களில் மார்க்கெட் லீடரான மோட்டோரோலா நிறுவனத்தின் வந்திருக்கும் புதிய மொபைல் இது. 5 இன்ச் டிஸ்ப்ளே, 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 8 எம்.பி ரியர் கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, 3500 mAh பேட்டரி என டிரேட்மார்க் மோட்டோ டச்சுடன் இருக்கிறது E3 பவர்.



ப்ளஸ்:

பேட்டரி திறன், சரியான விலை ஆகியவை இதன் ப்ளஸ்.

மைனஸ்:

கேமரா, மெதுவான சாப்ட்வேர் அப்டேட்ஸ் ஆகியவை இதன் மைனஸ்.
விலை: ₹ 7,999

2. லெனோவா K6 பவர் :

லெனோவா நிறுவனத்தின் லேட்டஸ்ட் ஹிட் இந்த போன். 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 GHz ஆக்டாகோர் பிராஸசர், 32 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 13 எம்.பி ரியர் கேமரா, 8 எம்.பி முன்பக்க கேமரா, 4000 mAh பேட்டரி என எல்லா ஏரியாவிலும் அசத்துகிறது K6 பவர். 3 ஜி.பி ரேம், 4 ஜி.பி ரேம் என இரண்டு வகைகளில் கிடைக்கிறது.



ப்ளஸ்:

பில்ட் குவாலிட்டி, டிசைன், நல்ல பேட்டரி, பெர்பார்மன்ஸ் ஆகியவற்றில் ஸ்கோர் செய்கிறது.

மைனஸ்:

கேமரா திறனில் கொஞ்சம் பின்தங்கிவிடுகிறது.

விலை:
3 ஜி.பி வெர்ஷன்: ₹ 9,999
4 ஜி.பி வெர்ஷன்: ₹ 10,999

3. ரெட்மி 3S ப்ரைம்:

ஜியோமிதான் சி.எஸ்.கே என்றால், இந்த போன்தான் அந்த டீமின் தோனி. எல்லா ஏரியாவிலும் வெளுத்துவாங்கிய சூப்பர் ஹிட் மாடல் இது. 5 இன்ச் டிஸ்ப்ளே, 1.4 GHz ஆக்டாகோர் பிராஸசர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, 4100 mAh பேட்டரி, ஃபிங்கர் பிரின்ட் சென்சார், 13 எம்.பி ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா என கலக்குகிறது ரெட்மி 3S ப்ரைம்.



ப்ளஸ்:

டிசைன், சரியான விலை, பேட்டரி திறன், டிஸ்ப்ளே குவாலிட்டி ஆகியவை இதன் ப்ளஸ்.

மைனஸ்:

சிம் கார்டுக்கு, ஹைப்ரிட் ஸ்லாட் என்பதுதான் இதன் மைனஸ்.
விலை: ₹ 8,999

4. லீ இகோ லீ 1S:

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, 3000 mAh பேட்டரி, 13 எம்.பி ப்ரைமரி கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா என பக்காவாக இருக்கிறது லீஈகோ. இந்தியாவில் வளர்ந்துவரும் பிராண்ட் என்பதுடன், ஆன்லைன் வணிகத்தில் அசத்தி வருகிறது லீஈகோ நிறுவனம்.



ப்ளஸ்:

ப்ரீமியம் லுக் மற்றும் டிசைன், டிஸ்ப்ளே தரம் ஆகியவை இதன் ப்ளஸ்.

மைனஸ்:

மெமரி கார்டு போடமுடியாது என்பதால், எக்ஸ்டர்னல் ஸ்டோரேஜ்க்கு வசதியில்லை. அத்துடன் போனும் சூடாகிறது என பயனாளர்களிடம் இருந்து ரெவ்யூக்கள் வருகின்றன.
விலை: ₹ 10,999

5. கூல்பேட் நோட் 3S:

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 1.36GHz ஆக்டாகோர் பிராஸசர், 3 ஜி.பி ரேம், 32 ஜி.பி மெமரி, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, 13 எம்.பி ரியர் கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, 2500mAh பேட்டரி எனக் காட்சியளிக்கிறது இது. அனைத்து விஷயங்களிலும் ஓகே என்றாலும், கொஞ்சம் யோசிக்க வைப்பது இதன் பேட்டரி திறன்தான்.



ப்ளஸ்:

3 ஜி.பி ரேம், ப்ரீமியம் லுக் தரும் வடிவமைப்பு ஆகிய ஏரியாக்களில் பாஸ் ஆகிறது கூல்பேட் நோட் 3S.

மைனஸ்:

2500 mAh பேட்டரி.
விலை: ₹ 9,999

6. ரெட்மி நோட் 4 :

ஜியோமி களமிறக்கிய லேட்டஸ்ட் வரவு இது. 5.5 முழு ஹெச்.டி டிஸ்ப்ளே, 2.0GHz பிராஸசர், ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ, MIUI 8, 4G டூயல்சிம் வசதி, 4100mAh திறனுடைய பேட்டரி ஆகியவற்றைக் கொண்டுள்ளது ரெட்மி நோட் 4. கேமராவைப் பொறுத்தவரை பின்பக்கம் 13 எம்.பி மற்றும் முன்பக்கம் 5 எம்.பி கேமராவைக் கொண்டுள்ளது.

2 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி, 3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மற்றும் 4 ஜி.பி ரேம்/64 ஜி.பி மெமரி என மொத்தம் மூன்று மாடல்களில் கிடைக்கிறது இந்த நோட் 4.



ப்ளஸ்:

பில்ட் குவாலிட்டி, கேமரா பெர்பார்மன்ஸ், சரியான விலை போன்றவை இதன் சிறப்பு.

மைனஸ்:

ரெட்மி ப்ரைம் போலவே இதிலும் இருப்பது, ஹைப்ரிட் சிம் ஸ்லாட்.

விலை:
2 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மாடல் - ₹ 9,999
3 ஜி.பி ரேம்/32 ஜி.பி மெமரி மாடல் - ₹ 10,999
4 ஜி.பி மெமரி/64 ஜி.பி மெமரி மாடல் - ₹ 12,999

7. மோட்டோ G4 ப்ளே:

5 இன்ச் டிஸ்ப்ளே, 1.2 GHz குவாட்கோர் பிராஸசர், 2 ஜி.பி ரேம், 16 ஜி.பி மெமரி, 8 எம்.பி பின்பக்க கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ. 2800 mAh பேட்டரி என எல்லா பொருத்தங்களும் இதிலும் இருக்கின்றன. கேமரா பிரியர்களுக்கு இதில் பெரிய ஆப்ஷன்கள் எல்லாம் இல்லை என்பதால் அவர்களுக்கு இந்த போன் பொருந்தாது.



ப்ளஸ்:

விலைக்கு ஏற்ற வசதிகள், பில்ட் குவாலிட்டி என தனது ஏரியாவில் மோட்டோ ஸ்ட்ராங்.

மைனஸ்:

ரேம் மற்றும் கேமரா ஆகியவை போதாது.
விலை: ₹ 8,999

8. அசூஸ் ஜென்ஃபோன் மேக்ஸ் :

5.5 இன்ச் டிஸ்ப்ளே, 13 எம்.பி பேக் கேமரா, 5 எம்.பி முன்பக்க கேமரா, 5000 mAh பேட்டரி, 202 கிராம் எடை, 1.5 GHz ஆக்டாகோர் பிராஸசர் என ஆல்ரவுண்டராக இருக்கிறது ஜென்ஃபோன் மேக்ஸ். 2 ஜி.பி ரேம்/ 16 ஜி.பி மெமரி, 2 ஜி.பி ரேம் / 32 ஜி.பி மெமரி, 3 ஜி.பி ரேம் / 32 ஜி.பி மெமரி என மொத்தம் மூன்று மாடல்களில் கிடைக்கிறது.



ப்ளஸ்:

5,000 mAh பேட்டரிதான் இந்த போனின் பெரிய ப்ளஸ். மேலும் இந்த போனின் பேட்டரியையே இன்னொரு போனுக்கு பவர் பேங்க் ஆகவும் பயன்படுத்த முடியும். அதாவது OTG கேபிளை இந்த போனுடன் இணைத்துவிட்டால், இதனுடன் இணைந்திருக்கும் இன்னொரு போனும் சார்ஜ் ஆகும்.

மைனஸ்:

ஃபிங்கர்பிரின்ட் சென்சார் கிடையாது. பேட்டரி திறன் அதிகம் என்பதால் போனின் எடையும் அதிகமாக இருக்கிறது.

விலை:
2 ஜி.பி ரேம்/ 16 ஜி.பி மெமரி மாடல்: ₹ 9,499
2 ஜி.பி ரேம்/ 32 ஜி.பி மெமரி மாடல்: ₹ 9,999
3 ஜி.பி ரேம்/ 32 ஜி.பி மெமரி மாடல்: ₹ 11,999 முதல்.


தினம் எவ்வளவு நேரம்... மாதம் எத்தனை ஜிபி... மொபைலும் நாமும்..! #Infographics #MobileMania




தினசரி காலை எழுந்ததும், மொபைல் பார்க்கும் பழக்கம் உங்களுக்கு உள்ளதா? உங்களைப்போலவே உலகில் எத்தனை பேர் இருக்கிறார்கள் தெரியுமா? உலகில் ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் 100ல் 50 பேர் காலை எழுந்ததும் ஸ்மார்ட் போனைத்தான் பார்க்கிறார்கள். இந்த எண்ணிக்கை, இணைய ஊடுறுவலைப் பொறுத்து அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. கடந்த ஒரு வருடத்தில் மட்டும் உலகம் முழுவதும் 1 பில்லியனுக்கு மேல் 4ஜி இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. இந்த எண்ணிக்கை, 2020ல் 2.6 பில்லியனை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2016-ம் ஆண்டில் ஸ்மார்ட் போன் பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை 4.8 பில்லியனாக அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் தினசரி இணையம் பயன்படுத்துபவர்கள், 3 பில்லியனுக்கும் மேல் உள்ளனர். அதில், 80 சதவிகிதம் பேர் ஸ்மார்ட்போன் மூலமாகத்தான் இணையத்தைப் பயன்படுத்துகிறார்கள். தனிமனிதனாக ஸ்மார்ட்போன் பயன்படுத்துபவரின் தகவல்களைப் பார்த்தால், ஆச்சர்யமான தகவல்கள் கிடைக்கின்றன.

ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டாளர், ஒரு நாளைக்கு 1.8 மணி நேரம் சராசரியாக ஸ்மார்ட்போனைப் பயன்படுத்துகிறார். அதில், ஆப்ஸ்களில் 89 சதவிகித நேரத்தையும், ப்ரெளசர்களில் 9 சதவிகித நேரத்தையும், மற்ற விஷயங்களில் 2 சதவிகித நேரத்தையும் பயன்படுத்துகின்றனர். அது மட்டுமல்லாமல், ஒரு நாளைக்கு சராசரியாக 46 முறை ஸ்மார்ட்போனை ஆன் செய்து செக் செய்கிறார். உலக அளவில் பார்த்தால், ஒரு நாளைக்கு 8 பில்லியன் முறை ஸ்மார்ட் போன்கள் ஆன் செய்து செக் செய்யப்படுகிறது. மேலும், சராசரியாக ஒரு ஸ்மார்ட்போன் பயன்பாட்டளர், மாதத்துக்கு 2.9 ஜி.பி டேட்டாவைப் பயனபடுத்துகிறார். இது, தொழில்நுட்ப ரீதியாக 2ஜி, 3ஜி, 4ஜி என்ற அளவில் வேறுபட்டிருந்தாலும், இந்த அளவு பிரமிக்கவைப்பதாகவே உள்ளது. மேலும் 4ஜி இணைப்புகள் அதிகமாகும்போது இந்த எண்ணிக்கை கூடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று எல்லாவற்றுக்குமே செல்போன்கள் என்று ஆகிவிட்ட நிலையில், அலுவலக வேலைகள்கூட செல்போனுக்குள்ளேயே முடிந்துவிடுகிறது. 2018-ம் ஆண்டில் அனுப்பப்படும் 10 இ-மெயில்களில் 8, மொபைல்மூலம் அனுப்பப்பட வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இதற்கெல்லாம் ஆப்ஸ்களும், இணைய சேவை வசதிகளும் எளிமையான முறையில் ஸ்மார்ட்போன்களில் புகுத்தப்பட்டதுதான். 2016-ம் ஆண்டு மட்டும் கூகுள் ப்ளே ஸ்டோரில் 90 பில்லியன் ஆன்ட்ராய்ட் ஆப்ஸ்களும், ஆப்பிள் ஸ்டோரில் 13 பில்லியன் ஐஓஎஸ் ஆப்ஸ்களும் டவுண்லோட் செய்யப்பட்டுள்ளன. உலகம் முழுவதும் 2016-ம் ஆண்டில் மட்டும் 900 பில்லியன் மணி நேரம் ஆப்ஸ்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது. அதாவது, 37,500 கோடி மணி நேரம் அல்லது 10 கோடி வருடத்துக்கு இணையாக, உலகம் முழுவதும் ஆப்ஸ் பயன்படுத்துகிறார்கள்.

நாம், பத்தாயிரம் ரூபாய்க்கு வாங்கும் மொபைல் துவங்கி, பல லட்சம் ரூபாய் செலவில் வாங்கும் மொபைல் வரை இந்தியாவில் வர்த்தகமாகும் இந்த ஸ்மார்ட்போன்களின் மார்க்கெட் என்பது, 20 ட்ரில்லியன் டாலராக உள்ளது. இது, இந்திய ஜிடிபி-யில் 0.9 சதவிகிதமாக உள்ளது. உலகம் முழுவது இந்த அளவு, 3.1 ட்ரில்லியன் அமெரிக்க டாலராக உள்ளது. இது, உலக ஜிடிபி-யில் 4.2 சதவிகிதமாகும். ஸ்மார்ட்போன்களும், ஸ்மார்ட்போன் அக்ஸசரிஸ் மார்க்கெட் என்பது உலகின் மிகப்பெரிய பொருளாதாரக் காரணியாக உருவெடுத்துவருகிறது.

இதைப் படிக்கலைனா படிச்சிருங்க ப்ளீஸ்


சென்னைவாசிகள் ஆக்சிஜனைக் கடன் வாங்குவது தெரியுமா? - மிரட்டும் நிஜம்!

கோடை தொடங்கிவிட்டது, கூடவே மின்வெட்டுப் பிரச்னையும், தண்ணீர்த் தட்டுப்பாடும்... ‘‘இந்த ஆண்டு மலைப் பிரதேசங்களில்கூட வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்’’ என எச்சரித்துள்ளது இந்திய வானிலை ஆராய்ச்சி மையம். அதேநேரத்தில் ‘‘கடந்த 116 வருடங்களில் இல்லாத அளவுக்கு சென்ற ஜனவரியில்தான் அதிகபட்ச வெப்பநிலை நிலவியது’’ என்றும் தெரிவித்துள்ளது. 2015 டிசம்பரில் சென்னையை வெள்ளத்தில் தவிக்கவிட்ட இயற்கை, கடந்த டிசம்பரில் புயல் காற்றால் துவம்சம் செய்து ஓய்ந்தது. சென்னையின் சுவாசமாக இருந்த ஆயிரம் ஆயிரம் மரங்கள் வேரோடு வீழ்ந்து குப்பையாகின. ஆயிரக்கணக்கான மின் கம்பங்கள் முறிந்து விழுந்தன. இருட்டிலும், தாகத்திலும் தவித்துப் போனது சென்னை.



கடந்த டிசம்பர் 1-ம் தேதி தமிழகத்தை நோக்கிப் பாய்ந்து வந்த ‘நடா’ புயல், பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தாமல் கடந்தது. ‘‘அப்பாடா’’ என்று நிம்மதி அடைந்த நிலையில், வங்கக்கடலில் இன்னுமொரு காற்றழுத்த மண்டலம் உருவாகி இருப்பதாகவும், அது புயலாக மாற வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார் மண்டல வானிலை மைய இயக்குனர் பாலச்சந்திரன். எதிர்பார்த்தபடியே வீரியம் பெற்றது புயல். 150 கி.மீக்கு அதிகமான வேகத்தில் சென்னையைச் சுற்றிச் சூழ்ந்து களமாடியது காற்று.



சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்கள் கிட்டத்தட்ட அதி தீவிர யுத்தம் நடந்த போர்க்களம் போலாகிவிட்டன. எங்கு பார்த்தாலும் பிணங்களைப்போல குவிந்து கிடந்தன மரங்கள்...வர்தா புயலை அடுத்து சென்னையின் பல்வேறு இடங்களில் சமூக ஆர்வலர்களும் மாநகராட்சியும் இணைந்து மரங்கள் நடப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் நடப்பட்ட மரக்கன்றுகளை எங்கும் பார்க்க முடியவில்லை.

சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் ஏராளமான தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன. பெரும் சுற்றுச்சூழல் சிக்கல் மிகுந்த இப்பகுதிகளை வாழும் பகுதிகளாக மாற்றுபவை, இங்கிருக்கும் மரங்களும் கடலும்தான். வர்தா புயலால் 10,682 மரங்கள் விழுந்ததாக மாநகராட்சி செய்திக் குறிப்பு கூறினாலும், விழுந்த மரங்களின் எண்ணிக்கை நான்கு மடங்குக்கு மேல் இருக்கும் என்று சூழலியலாளர்கள் தெரிவிக்கிறார்கள். ‘இதன் விளைவுகள் மிகவும் மோசமாக இருக்கும்’ என்றும் அவர்கள் அச்சமூட்டுகிறார்கள். பெரும்பாலான மரங்கள் வீழ்ந்ததற்கு திட்டமிடலில் ஏற்பட்ட தவறுகளே காரணம் என்ற குற்றச்சாட்டையும் அவர்கள் முன் வைக்கிறார்கள்.

"பொதுவாக, பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கப்படும் மரங்களின் வேர் மடங்கிச் சுருங்கிவிடும். அதுமாதிரி செடிகளால் மண்ணைப் பிடித்து வலுவாக வளர முடியாது. சென்னை போன்ற நகரங்களில் நடப்பட்டிருக்கும் பெரும்பாலான மரங்கள், பிளாஸ்டிக் பைகளில் வளர்க்கப்பட்டவைதான். நகரங்களைப் பொறுத்தவரை மரங்கள் வெறும் நிழல் மட்டும் தருவதில்லை, 'மைக்ரோ கிளைமேட்' எனப்படும் நுண்கால நிலையையும் மரங்களே தீர்மானிக்கின்றன. நுண்கால நிலைதான் அந்தந்த இடத்தின் பருவநிலையை உருவாக்கும்.



‘மரங்கள் அடர்ந்திருக்கும் பகுதியைவிட மரங்களும் பசுமையும் இல்லாத இடங்களில் ஏறத்தாழ 200 மடங்கு கிருமிகள் காற்றில் பரவி இருக்கின்றன' எனச் சொல்கிறது ஓர் ஆய்வு. சென்னை மாதிரியான நகரங்களில் இருக்கும் மரங்கள், வாகனங்களிலிருந்து வெளியாகும் கார்பன் மோனாக்ஸைடை உறிஞ்சிக் கொள்வதோடு, வாகனங்கள் எழுப்பக்கூடிய ஒலியையும் சத்தங்களையும் சமன்படுத்துகிறது. இது எல்லாமே சேர்ந்துதான் மைக்ரோ கிளைமேட்டைத் தீர்மானிக்கும். நெருக்கமான நகரங்களில் மரம் நடுவதைக் காட்டிலும் நேரடியாக விதைகளைப் பதித்து மரம் வளர்ப்பது சிறந்தது.

ஒரு ஏக்கரில் அடர்த்தியாக இருக்கும் மரங்கள் ஒரு வருடத்துக்கு 18 மனிதனுக்குத் தேவையான ஆக்சிஜனைக் கொடுக்கிறது. சென்னையில் இருக்கும் மக்கள் தொகையையும், மரங்களின் எண்ணிக்கையையும் கணக்குப் போட்டுப் பார்த்தால் மரங்களின் தேவை என்ன என்பது புரியும். சென்னையில் இருக்கும் மக்கள் வேறொரு பகுதியிலிருந்துதான் ஆக்சிஜனைக் கடனாக வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்..." என்று அழுத்தமாகச் சொல்கிறார் சூழலியலாளர் நக்கீரன்.



சென்னையின் மொத்தப் பரப்பளவு 424 சதுர கிலோ மீட்டர். இதில் மூன்றில் ஒரு பங்கு, அதாவது 144 சதுர கிலோமீட்டர் பரப்பளவுக்குப் பசுமைப் பரப்பு இருக்க வேண்டும் என்பது விதி. ஆனால் சென்னையில் இருப்பதோ 9 சதுர கிலோமீட்டர் பசுமைப் பரப்பு மட்டும்தான். சென்னை மாநகராட்சியில் மொத்தம் 456 பூங்காக்கள் இருக்கின்றன. ஆனால் அந்தப் பூங்காக்களைப் பராமரிப்பதற்கு இருக்கும் ஊழியர்களைத் தவிர, அவர்களை மேற்பார்வையிட வேளாண்மை படித்த அதிகாரிகள் யாரும் இல்லை. ஒரு கட்டடம் கட்ட சிஎம்டிஏ-வில் அனுமதி வாங்கும்பொழுது குறிப்பிட்ட அளவு நிலத்தை இதுபோன்று பசுமைச் சூழலை உருவாக்கக் கொடுக்க வேண்டும். அப்படி நிலம் கொடுக்காத பொழுது குறிப்பிட்ட தொகை கட்டப்பட வேண்டும். இப்படி சிஎம்டிஏ-வில் கட்டப்படும் பணம் பூங்காக்களைப் பராமரிப்பதற்கும், பசுமையான சூழலை உருவாக்கவும் மாநகராட்சிக்குக் கொடுக்கப்படுகிறது. ஆனால் அந்தப் பணம் முழுவதும் பிற திட்டங்களுக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

‘‘சென்னையில் உள்ள மரங்கள் குறித்து அரசுத் தரப்பில் எந்தவித ஆய்வுகளும் நடக்கவில்லை. பிரிட்டிஷார் தங்கள் வசதிக்காக ஊட்டி போன்ற மலைப்பிரதேசங்களில் யூகலிடப்ஸ் மரங்களை வளர்த்ததைப்போல சென்னையிலும் நம் மண்ணுக்குத் தொடர்பில்லாத அயல் நாட்டு மரங்கள் நடப்பட்டன. புயலில் விழுந்த மரங்களில் பெரும்பாலானவை, அதுமாதிரியான மரங்கள்தான். சூழலியல் கொள்கைகள், பேரிடர் மேலாண்மை கொள்கைகள் குறித்து அரசு தீவிரமாக ஆய்வு செய்ய வேண்டிய காலக்கட்டம் இது.

அரசு மட்டும்தான் சென்னையின் பசுமைச் சூழலை பாதுகாக்க முயற்சிகள் எடுக்க வேண்டும் என்பதில்லை. நாம் ஒவ்வொருவரும் அதற்கான செயல்பாடுகளில் இறங்க வேண்டும். சென்னை கடலோரத்தில் இருக்கிறது என்பதும், பசுமையான சூழல் நிறைந்திருக்கிறது என்பதும்தான் சென்னையின் பலம். ஆனால் தொடர்ச்சியாக பசுமைப் போர்வையை இழந்தால் சென்னை மிகப்பெரிய சுற்றுச்சூழல் பிரச்னையைச் சந்திக்கும்..." என்கிறார் பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்கறிஞர் வெற்றிச் செல்வன்.

வர்தா புயலில் வேரோடு சாய்ந்த மரங்களில் மூன்றில் இரண்டு பங்கு தூங்குமூஞ்சி, குல்மோகர் ரக மரங்கள்தான். இந்த வகை மரங்கள் எல்லாமே அழகுக்காகவும், விரைவாக வளர வேண்டும் என்பதற்காகவும் வெளிநாட்டிலிருந்து கொண்டு வரப்பட்ட மரங்கள். அமெரிக்கா போன்ற நாடுகளில் புதியவகை தாவரத்தைப் பார்த்தால் உடனே அரசுக்குத் தெரியப்படுத்த வேண்டும் என்ற நிலை இருக்கிறது.



‘‘ஒரு மரத்தில் 1600 வகையான வண்டு இனங்கள் இருப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆயிரக்கணக்கான பூச்சி இனங்களும், உயிர்களும் மரத்தைச் சார்ந்து இருக்கின்றன. இப்படி சார்ந்து வாழ்தல் என்பது பல்லாயிரம் கோடி ஆண்டுகளாக இருந்து வரும் நீட்சி. நம் ஊர் இலுப்பை மரத்திலும், வேம்பு மரத்திலும் இந்தப் பல்லுயிர் சூழல் தொடர்ந்து இருந்து வருகிறது. பசுமையான சூழலை உருவாக்க வேண்டும், காடுகளை உருவாக்க வேண்டும் எனச் சொல்லி பழமையான மரங்களை அழித்துவிட்டு வேகமாக வளரக்கூடிய அயல் மரங்களை வளர்த்து உயிரினங்களின் வாழ்வாதாரத்தையும் அழித்து வருகிறோம். இதனால் பல்லுயிர் சூழலும் பாதிக்கப்படும். அத்தி, இச்சி, பனை, புரசு, மருதம், கடம்பம், தில்லை, இலவு, முள்ளிலவு, நாவல், தான்றி, குமிழ், சந்தனம், இலுப்பை, ஆலம், அரசு, வேம்பு, அகில், நெல்லி, அலிஞ்சில், வெள்வேலம், ஆசினி பலா, ஆத்தி, இலந்தை, புங்கம், உசில், ஒதியன், காஞ்சரை, கிளுவை, கொன்றை, கொன்னை, கோங்கம், செண்பகம், சரக்கொன்றை, தணக்கு, தேற்றா, மஞ்சநத்தி, மா, பன்னீர், வெப்பாலை, ஏழிலைப்பாலை, தோதகத்தி, புன்னை, பூவரசு, மகிழம், மந்தாரை, கருங்காலி, மூங்கில், வலம்புரி, வன்னி, வேங்கை. என நூற்றுக்கணக்கான நாட்டு மர வகைகள் இருக்கின்றன. அவற்றையெல்லாம் நகர்ப்புறங்களில் வளர்க்கலாம்..." என்கிறார் ‘நாணல்’ சூழலியல் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் தமிழ்தாசன்.

மரம் என்பது மரம் மட்டுமல்ல... அது பலநூறு உயிர்களின் கூடு. ஒரு மரம் வீழ்வதால் பல நூறு உயிர்கள் வீடிழக்கின்றன. உணவிழக்கின்றன. பூமி உயிர்ச்சூழலை இழக்கிறது. நகரங்களைத் திட்டமிடும்போதே, அதன் பசுமைச்சூழலையும் திட்டமிட வேண்டும். ஆனால் தமிழகத்தின் எந்த மாநகர உருவாக்கத்திலும் இது கணக்கில் கொள்ளப்படுவதில்லை என்பதுதான் நிதர்சனம்.

சென்னை உயிர்ப்பிக்கப்பட வேண்டிய தருணமிது..!

உறவைப் பிரிக்கும் குறட்டை... தவிர்க்க 7 வழிகள்! #HealthAlert

இறைவன் நமக்குக் கொடுத்த மிக உயர்ந்த பரிசு தூக்கம். தூக்கம் மட்டும் இல்லையென்றால், மனிதர்கள் மனநோயாளிகளாக மாறிவிடுவார்கள். எவ்வளவு பணத்தைக் கொடுத்தாலும் கிடைக்காதது இயற்கையான தூக்கம். அதே நேரத்தில், அருகில் இருப்பவர்களின் தூக்கத்தைக் கெடுப்பது, ஒருவர் தூங்கும்போதுவிடும் குறட்டைதான். இதைச் சாதாரணமாக நினைத்துவிட முடியாது. 2013-ம் ஆண்டு கணக்குப்படி, அமெரிக்காவிலும் இங்கிலாந்திலும் விவாகரத்துக் கேட்டு வரும் தம்பதிகள் சொல்லும் காரணங்களில் குறட்டைக்கும் இடம் உண்டு. ஆக, உறவைக்கூட பிரிக்கும் குறட்டை என்பது நிரூபணமான உண்மை. ஒருவர் விடும் குறட்டை, அவருக்குத் தெரியாமல் இருக்கலாம்; மற்றவர்களுக்கு அசூயையைக் கொடுக்கும். சிலருக்குக் கழிவிரக்கத்தை ஏற்படுத்தும்; சமயத்தில் தன்னம்பிக்கை குறைவதற்குக்கூடக் காரணமாகிவிடும்.



`உங்களுக்குக் குறட்டைவிடுற பழக்கம் இருக்கா?’ என்று கேட்டுப் பாருங்கள். `இல்லை’ என்றுதான் நிறையப் பேர் பதில் சொல்வார்கள். அதிலும் சிலர் `ரொம்ப டயர்டா இருந்தா வரும்’ என்றோ, `எப்போவாவது...’ என்றோ, `குறட்டையா... நானா? சான்ஸே இல்லை. நான் ரொம்ப டீசன்ட்’ என்றோ தங்களை விட்டுக்கொடுக்காமல்தான் பதிலளிப்பார்கள். உண்மையில், குறட்டை என்பது கௌரவ பிரச்னை அல்ல; அது உடல்ரீதியான பிரச்னை.

குறட்டை வருவதற்கான காரணங்கள் என்னென்ன?

* ஒருநாள் சீக்கிரமும், மறுநாள் நேரம் கழித்தும் தூங்குவது என தினமும் குறித்த நேரத்தில் தூங்காமல் இருப்பது; நீண்ட நேரம் தூங்காதது; உறங்கப் போகும் கடைசி நேரம் வரைக்கும் வேலை செய்துகொண்டு இருப்பது.

* சில நேரங்களில் ஆழ்ந்து தூங்கும்போது, தொண்டைக்குப் பின்னால் இருக்கும் சதை வழக்கத்துக்கு மாறாக தளர்வடையும்போது குறட்டைவிடுவதுபோலச் சத்தம் எழும். சைனஸ் தொந்தரவு இருந்தாலும் குறட்டை வரும்.



* மாலை 4 மணிக்கு மேல் டீ அல்லது காபி சாப்பிடும்போது அதிலுள்ள தற்காலிக சக்தியளிக்கும் கஃபைன் போன்றவை, நம் மூளையை சில மணி நேரம் வரைக்கும் சுறுசுறுப்பாக வைத்திருக்கும். அதனாலும் நம் தூக்கத்தை அது பாதிக்கும். இதனாலும் குறட்டை ஏற்படலாம்.

* தூசி நிறைந்த காற்றைச் சுவாசிக்கும்போதோ, தூங்கும் அறை சுத்தமாக இல்லாவிட்டாலோ நம் தொண்டை சவ்வுகள் மற்றும் மேல்நாக்குக்குப் பின்னால் இருக்கும் திசுக்கள் பாதிப்படையும். அப்போது தொண்டை சவ்வுகள் வீக்கம் அடைவதோடு மட்டுமல்லாமல் சுவாசப்பாதையையும் ஒடுக்கிவிடும். இதனாலும் தூக்கத்தில் நாம் சுவாசிக்கும்போது குறட்டை உண்டாகும்.

* உடல்பருமனாக இருப்பதும் குறட்டைக்கு ஒரு காரணமே. தொடர்ந்து இவர்களுக்கு குறட்டை வந்தால், தூக்கத்தில் மூச்சுத்திணறல் (Sleep Apnea) ஏற்படும் வாய்ப்பு உள்ளது. இதை சரிவர கவனிக்காமல் விட்டுவிட்டால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன.



கீழே குறிப்பிட்டிருக்கும் `ஸ்லீப் ஆப்னியா’ அறிகுறிகள் தெரிந்தால், உடனே மருத்துவரிடம் பரிசோதிக்க வேண்டும்.

* சத்தமாகக் குறட்டைவிடுவது.

* தூங்கும்போது தொண்டையை அடைப்பதுபோன்ற உணர்வால் திடீரென்று கண்விழிப்பது.

* அமைதியற்ற தூக்கத்தால் எழுந்ததும் ஏற்படும் தலைவலி.

* நன்றாகத் தூங்கினாலும் ஏற்படும் தீவிரச் சோர்வு.

* மனநிலை மாற்றங்கள் மற்றும் ஆண்மைக் குறைவு ஏற்படுவது.

தூக்க மாத்திரையை சிறிது காலத்துக்கு மட்டும் எடுத்துக்கொண்டாலும் குறட்டை வரும். தூக்க மாத்திரை மட்டுமல்ல... மதுவும் நரம்பியல் மண்டலத்தில் மனஅழுத்தத்தை ஏற்படுத்தக்கூடிய விளைவை உண்டாக்கும். இவை சுவாசப்பாதையில் சீரற்ற தன்மையை ஏற்படுத்துவதால் தூங்கும்போது குறட்டை ஏற்படுகிறது.

குறட்டையை தவிர்க்க வழிகள்...

* போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். இதனால் மூக்கு மற்றும் தொண்டையில் உள்ள திசுக்கள் ஈரப்பதம் அடைந்து சுவாசிப்பதை எளிதாக்கும்.

* மது மற்றும் புகைப்பழக்கத்தை நிறுத்துவது நல்லது. புகைப்பதால் சுவாசப்பாதை அடைபட்டு, உறங்கும்போது குறட்டை ஏற்பட வாய்ப்பு உண்டு.

* உடல் எடையைக் குறைப்பதால் தூக்கத்தில் ஏற்படும் மூச்சுத்திணறலில் இருந்து நம்மைப் பாதுகாத்துக் கொள்ளலாம். காய்கறிகள், பழங்கள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளைச் சாப்பிடுவது உடல் எடையைக் குறைக்க உதவும்.

* தினமும் உடற்பயிற்சி செய்வதால் நம் உடலிலுள்ள தசைகள் தளர்வடையும்; தொண்டையும் தளர்வடையும். இதனால் உடல் எடை குறையும்; குறட்டையையும் தவிர்க்கலாம்.



* உறங்கச் செல்வதற்கு இரண்டு மணி நேரத்துக்கு முன்னர் கடினமான உடற்பயிற்சிகளைச் செய்ய வேண்டாம். இதனால் தூக்கம் பாதிக்கும். உறங்குவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே உங்கள் மொபைல்போனைத் தள்ளி வைத்துவிடுங்கள். டி.வி மற்றும் விளக்குகளை அணைத்துவிடுங்கள். இதனால் தூக்கம் நன்றாகவும் ஆழமானதாகவும் இருக்கும்.

* தூங்கும்போது ஒரு பக்கமாக படுத்துக்கொள்ளுங்கள் அல்லது உயர்ந்த தலையணையை வைத்துக்கொள்ளுங்கள். இதனால் சுவாசப்பாதையில் அடைப்பு எதுவும் ஏற்படாமல் இருக்கும்; அதிகச் சத்தத்துடன் குறட்டை வராமலும் தடுக்கும்.

* தொடர்ந்து மூச்சுப் பயிற்சி செய்து வந்தாலும், குறட்டை வருவதைத் தடுக்கலாம்.

* தினமும் 30 முறை `ஆ... ஆ... ஆ...’, `ஈ... ஈ... ஈ...’, `ஐ... ஐ... ஐ...’, `ஓ... ஓ... ஓ...’ `ஊ... ஊ... ஊ...’ என்று சத்தம் போட்டுச் சொல்லுங்கள். இது உங்கள் தொண்டைப் பகுதியில் உள்ள தசைகளுக்குச் சிறந்த பயிற்சியாக இருக்கும். குறட்டை குறையவும் வழிபிறக்கும்!

- கி.சிந்தூரி

NEWS TODAY 31.01.2026