Saturday, March 4, 2017


தெங்குமரஹாடா - ‘ட்ரெக்கிங்’ பிரியர்களின் சொர்க்கபுரி! #Mustgospot

சுற்றுலா என்றதும் பலருக்கும் ஊட்டி, கொடைக்கானல்தான் சட்டென்று நினைவுக்கு வரும். ஆனால், இப்படியெல்லாம் கூட தமிழகத்தில் இடம் இருக்கிறதா என, மலைப்பை ஏற்படுத்தும் பகுதிகள் தமிழகத்தில் ஏராளம் உள்ளன. அதில், ஒன்றுதான் தெங்குமரஹாடா. சத்தியமங்கலம் வனப்பகுதியை ஒட்டி நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறிய ஆதிவாசி கிராமம். ஈரோடு மாவட்டம் பவானிசாகர் வழியாக தெங்குமரஹடாவுக்கு செல்லலாம். பவானி சாகர் அணைக்கட்டு அருகே வரும்போதே மீன் வாசனை மூக்கைத் துளைக்கும். அணை மீன் அவ்வளவு ருசியாக இருக்கும். வாங்கிச் சாப்பிடாமல் அந்த இடத்தை விட்டு நகர மாட்டீர்கள்.



சரி...முதலில் தெங்குமரஹாடாவைப் பற்றித் தெரிந்து கொள்வோம். சிறிய அழகிய கிராமம். மாயார் ஆறு இந்த கிராமத்தை வளப்படுத்துகிறது. 900 குடும்பங்கள் வசிக்கின்றன. நர்சரி பள்ளி, மேல்நிலைப்பள்ளி உள்ளன. டாஸ்மாக்கும் இருக்கிறது. இங்கு வசிக்கும் மக்கள் மதுவை தாங்களே தயாரித்துக் கொள்ளும் அனுபவம் கொண்டவர்கள். காலையில் உணவு அருந்தும் போதே மது அருந்தும் பழக்கமுடையவர்கள். அவர்கள் தயாரித்த மது உடலுக்கு தீங்கு விளைவிக்காமல் இருந்தது. ஆனால், டாஸ்மாக் மது இளைஞர் முதல் முதியவர் வரை நோயாளிகளாக மாற்றியிருக்கிறது.



தெங்குமரஹாடாவுக்கு அருகில் உள்ள நகரம் கோத்தகிரி. தெங்குமரஹாடா நீலகிரி மாவட்டத்தில் இருந்தாலும் ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானி சாகர் வழியாகத்தான் செல்ல முடியும். பவானிசாகரில் இருந்து தெங்குமரஹாடாவுக்கு பேருந்து இயக்கப்படுகிறது. மேட்டுப்பாளையம், கோத்தகிரியில் இருந்தும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகள் தெங்குமரஹாடா ஊருக்குள் போவதில்லை. மயார் ஆற்றின் ஒரு கரையில் நின்று விடும். பேருந்தில் இருந்து இறங்கி பரிசலில் அடுத்தக் கரையை அடைய வேண்டும். அடர்ந்த காடு வழியாக பேருந்து செல்லும். தார் சாலையெல்லாம் கிடையாது. மண் சாலைதான். அதனால் 4 வீலர் டிரைவ் கொண்ட ஜீப் போன்ற வாகனங்கள்தான் தெங்குமரஹாடா பயணத்துக்குச் சரியானது. டாடா சூமோ, ஜிப்சி, பொலீரோ போன்ற வாகனங்களும் ஏற்றது.

கொடநாட்டில் இருந்து காட்டு வழியாக மூன்றரை மணி நேரம் நடந்தாலும், 10 கி.மீ தொலைவில் உள்ள தெங்குமரஹாடா கிராமத்தை அடையலாம். ‘ட்ரெக்கிங்’ மேற்கொள்பவர்கள் உதகை வடக்கு மாவட்ட வனத்துறை அதிகாரிகளிடம் முறையாக அனுமதிபெற வேண்டும். கைடுகளுடன்தான் ‘ட்ரெக்கிங்’ மேற்கொள்ள முடியும். வனத்துறை அலுவலவகத்துக்குச் சொந்தமான விடுதியில் தங்கிக்கொள்ள முன் அனுமதி பெறவேண்டும்.



தமிழகத்திலேயே அதிக வனவிலங்குகள் நிறைந்த பகுதி தெங்குமரஹாடா. ‘ட்ரெக்கிங்’-கின்போது, வனவிலங்குகள் கண்டிப்பாக தென்படும். யானைகள், புலிகள், சிறுத்தைப்புலி, கருஞ்சிறுத்தை, காட்டு மாடு, காட்டெருமை, சாம்பார் மான்கள், புள்ளிமான்கள், முள்ளம்பன்றி, கரடி என அனைத்து வகை விலங்கினங்களின் புகலிடம் அது. காணக் கிடைக்காத அரிய வகை பறவைகளின் வாழ்விடம். பாறு கழுகுகள் தெங்குமரஹாடாவின் இன்னொரு முக்கிய அம்சம். வெண்முதுகு பாறு கழுகு, கருங்கழுத்து பாறு கழுகு, செந்தலைப் பாறு கழுகு, மஞ்சள் முக பாறு கழுகு ஆகியவைகள் மாயாற்றை ஒட்டிய பகுதிகளில் காணலாம். தெங்குமரஹாடா காட்டுக்குள் சென்றால் அதிர்ஷ்டம் இருந்தால் தனிமை விரும்பிகளான புலியைக் கூட பார்க்க முடியும். உண்மையைச் சொல்லப் போனால், ட்ரெக்கிங்கை விரும்புபவர்களின் சொர்க்கம் கொடநாடு- தெங்குமரஹடா ட்ரெக்கிங் பாதை.



சுற்றுலா செல்பவர்கள் சொந்த வாகனத்தில் செல்வது ஏற்றது. மாயாறில் குறைந்தளவு தண்ணீர் ஓடினால், வாகனத்தைச் செலுத்தி அக்கரையை அடையலாம். அதற்கு முன்னதாக மாயற்றை பற்றி நீங்கள் ஒன்று அறிந்துகொள்ள வேண்டும். நீலகிரி மாவட்டத்தில் குந்தா என்ற அணை உள்ளது. தமிழ்நாடு மின்வாரியத்துக்கு சொந்தமானது. அணையில் மின் உற்பத்திக்கு பயன்படுத்தப்பட்டு வெளியேற்றப்படும் தண்ணீர்தான் மாயாறாக உருவாகி, முதுமலை வழியாக ஓடி தெங்குமரஹாடா வழியாக பவானி சாகர் அணையில் சேர்கிறது. அணையில் நீர் அதிகமாக திறந்து விடப்படும் பட்சத்தில் வாகனங்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு விட வாய்ப்பு உண்டு. அதனால், தண்ணீரின் அளவைப் பார்த்துவிட்டுத்தான் வாகனத்தை ஆற்றுக்குள் செலுத்த வேண்டும். தண்ணீர் மாயம் போல் அதிகரிப்பதும் குறைவதுமாக இருப்பதால்தான் இதற்கு 'மாயாறு' என்ற பெயரும் ஏற்பட்டது.

நீலகிரி மாவட்டத்தில் அரிசி விளையும் ஒரு சில பகுதிகளில் தெங்குமரஹாடாவும் ஒன்று. பசுமை நிறைந்த வயல்வெளிகளைக் காண முடியும். வாழைத்தோட்டங்கள் சூழ்ந்த பாதையில் நடப்பது மனதை மயக்கும். மரங்களின் அழகும் நம் மனதை ஆட்கொள்ளும். மாயற்றில் சில இடங்களில் குளிக்கலாம். முதலைகள் உண்டு. கவனம் தேவை. இந்த கிராமத்திலும் மீன் உணவு ரொம்ப ஸ்பெஷல். உள்ளுர் மக்கள் மணக்க மணக்க மீன் குழம்பு சமைத்து தருகிறார்கள். நாட்டுக்கோழி குழம்பும் சுவைபட சமைக்கிறார்கள். தெங்குமரஹடாவின் இன்னொரு விசேஷம் செவ்வந்திப் பூக்களை விளைவிப்பது.



தெங்குமரஹாடா வனப் பகுதியில் ஹெஜஹட்டி கணவாய் என்ற இடத்தில் ‘ஆதி கருவண்ணையர் பொம்மதேவியார்' கோயில் உள்ளது. இந்த கோயில் ‘உப்பிலி நாயக்கர்' சமூகத்தின் குல தெய்வம். மாசி மாதத்தில் இங்கு நடைபெறும் திருவிழாவின்போது, ஆயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். கோயில் வளாகத்தில் கிடா வெட்டி, நேர்த்திக்கடன் செய்வார்கள்.

சில அனுபவங்களை வார்த்தைகளால் விவரித்து விட முடியாது. அனுபவித்தால் மட்டுமே தெரியும். தெங்குமரஹாடா அனுபவமும் அந்த ரகம்தான்.

- எம்.குமரேசன்

No comments:

Post a Comment

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP

Peon, an MA in Eng, checks Hindi answer sheets at college in MP Amarjeet.Singh@timesofindia.com 10.04.2025 Bhopal : Twice ‘outsourced’, the ...