Saturday, April 29, 2017

சார் - பதிவாளர்களுக்கு தினமும் ரூ.500 அபராதம் : வருமான வரித்துறை கெடுபிடி

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017

23:39 'தமிழகத்தில், 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான சொத்து பரிமாற்ற விபரங்களை தராத, சார் ---- பதிவாளர்களுக்கு, தினமும், 500 ரூபாய் அபராதம்' என, வருமான வரித்துறை, 'கெடுபிடி' போட்டுள்ளதால், பதிவுத்துறையில் பதற்றம் ஏற்பட்டுள்ளது.

சொத்து பரிமாற்றத்தில் ஈடுபடுவோர், அது குறித்த உண்மை தகவலை, வருமான வரித்துறையிடம் தெரிவிக்காமல் மறைப்பதால், வரி ஏய்ப்பு நடக்கிறது. இவர்களை கண்காணிக்க, வருமான வரி சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, ஐந்து லட்சம் ரூபாய்க்கும் மேற்பட்ட சொத்து பரிமாற்றங்களின் போது, விற்பவர்கள், வாங்குபவர்களின் பான் எண் அல்லது படிவம் - 60ஐ, சார் - பதிவாளர்கள் பெற வேண்டும். இந்த விபரங்களை, வருமான வரித்துறைக்கு அனுப்ப வேண்டும். ஆனால், பெரும்பாலான சார் - பதிவாளர்கள், இந்த விஷயத்தில், அலட்சியமாக செயல்படுவதால், சொத்து பரிமாற்ற விபரங்கள், வருமான வரித்துறைக்கு கிடைப்பதில்லை. இந்நிலையில், பதிவுத்துறை தலைமையகத்தில், உயர் அதிகாரிகளுடன், வருமான வரித்துறையினர், சமீபத்தில் ஆலோசனை நடத்தினர். அதில், அபராதம் விதிப்பது குறித்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, பதிவுத்துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது: வருமான வரி சட்ட திருத்தப்படி, 2016 ஏப்., 1க்கு பின், 10 லட்சம் ரூபாய் மதிப்புக்கு மேலாக, சொத்து பரிமாற்றம் செய்தோரின் விபரங்களை, உடனே அனுப்ப உத்தரவிடப் பட்டுள்ளது. அவ்வாறு அனுப்பாத சார் - பதிவாளர்களுக்கு, 2016 செப்., 1 முதல் நாள் ஒன்றுக்கு, 200 ரூபாயும், 2017 மே, 2க்கு பின், 500 ரூபாயும் அபராதமாக விதிக்கப்படும். அப்படியும், தகவல் அனுப்பாத சார் - பதிவாளர்களுக்கு சிறை தண்டனை விதிக்கவும், சட்டத்திருத்தத்தில் வழி உள்ளது என, வருமான வரித்துறையினர் சுட்டிக்காட்டினர். இதனால், 10 லட்சம் ரூபாய்க்கும் மேலான, சொத்து பரிமாற்ற விபரங்களை அனுப்பும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் கூறினார். வருமான வரித்துறை, 'கெடுபிடி'யால், பதிவுத்துறை அதிகாரிகள், பதற்றம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -
'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு 24 லட்சம் பேருக்கு கிடைக்குமா

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017
22:46

'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுக்கு, புகைப்படம் எடுக்க வரும்படி, 24 லட்சம் பேருக்கு, உணவு துறை அழைப்பு விடுத்துள்ளது. தமிழகத்தில், ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு வருகிறது. மத்திய அரசு வழங்கிய, 'ஆதார்' அட்டையில் உள்ள விபரங்கள், 'ஸ்கேன்' செய்யப்பட்டு, ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. மொத்தம் உள்ள, 1.90 கோடி ரேஷன் கார்டுகளில், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் வழங்கிய கார்டுகளின் எண்ணிக்கை, 1.32 கோடி. அதில், 24 லட்சம் கார்டுகளில், குடும்ப தலைவர்களின் புகைப்படம் நல்ல நிலையில் இல்லை. இதனால், அவர்களின் ஸ்மார்ட் கார்டுகளை, அச்சிடுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து, உணவு மற்றும் கூட்டுறவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: புகைப்படம் சரியில்லாத நபர்களின் விபரம், ரேஷன் கடைகளில் உள்ளது. அவர்களை, அலைபேசியில் ஊழியர்கள் தொடர்பு கொண்டு, பொது வினியோக திட்ட இணையதளம் மற்றும் மொபைல், 'ஆப்' மூலம் புகைப்படத்தை பதிவேற்றம் செய்யும்படி கூறி வருகின்றனர்; அதை யாரும் செய்யவில்லை. இதனால், அவர்களின் கார்டு அச்சிடும் பணி தாமதமாகிறது. புது முயற்சியாக, அவர்கள் கடைக்கு வந்தால் போதும். ஊழியர் சொல்லும் இடங்களுக்கு சென்றால், அங்குள்ள அதிகாரிகளே, தங்கள் அலைபேசியில் புகைப்படம் எடுத்து, 'மெயின் சர்வருக்கு' அனுப்புவர். அடுத்த ஒரு மணி நேரத்தில், ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படும். மற்றவர்கள், தங்களின் முகவரி உள்ளிட்ட விபரங்கள், இணையதளத்தில் சரியாக இருக்கிறதா என சரிபார்க்கலாம், என்றார்.

எத்தனை : இம்மாதம் 1ம் தேதியிலிருந்து நேற்று மாலை வரை 76 லட்சம் ஸ்மார்ட்   கார்டுகள் அச்சிடப்பட்டு ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதில் 38 லட்சம் கார்டுகள்உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.
முதுகலை மருத்துவப் படிப்பு சேர்க்கை மாநில இட ஒதுக்கீடு பின்பற்ற வழக்கு : உயர்நீதிமன்றம் நோட்டீஸ்

பதிவு செய்த நாள் 29 ஏப்
2017
00:01

மதுரை: முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், பூர்த்தி செய்ய நடவடிக்கை கோரி தாக்கலான வழக்கில் மத்திய,மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை அண்ணாநகர் கார்த்திக் ராஜன் தாக்கல் செய்த பொதுநல மனு: வெள்ளலுார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் உதவி அறுவைச் சிகிச்சை டாக்டராக பணிபுரிகிறேன். 2017 --18 முதுகலை மருத்துவப் படிப்பிற்கான தேசிய தகுதி நுழைவுத் (நீட்) தேர்வில் பங்கேற்றேன். எனக்கு அகில இந்திய அளவில் 2180 வது இடம் கிடைத்தது. தமிழகத்தில் முதுகலை மருதுவப் படிப்பிற்கான மொத்த இடங்கள் 1350. மாணவர் சேர்க்கையில் 50 சதவீத இடங்களை மருத்துவக் கவுன்சில் குழு, 50 சதவீதத்தை இட ஒதுக்கீடு அடிப்படையில் மாநில அரசும் நிரப்பும்.

இதில் 25 சதவீத இடங்கள் தொலைதுார மற்றும் மலைப்பகுதியில் பணியாற்றும் டாக்டர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்படும்.
இதன்படி பணிபுரியும் பகுதிக்கேற்ப 10 முதல் 30 சதவீதம் கூடுதல் மதிப்பெண் சலுகை கிடைக்கும். இதனால் பல டாக்டர்கள் தொலைதுார கிராமங்கள், மலைப்பகுதிகளில் பணிபுரிகின்றனர்.

இச்சூழ்நிலையில் முதுகலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகளில், சில திருத்தங்களை இந்திய மருத்துவக் கவுன்சில் செய்துள்ளது. இதனால், அகில இந்திய தகுதி அடிப்படையில் மாணவர்கள் அனுமதிக்கப்படுவர். தொலைதுார கிராமங்கள், மலைப்பிரதேசங்களில் பணிபுரிய டாக்டர்கள் முன் வர மாட்டார்கள்.

முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை நடைமுறை (2017) மற்றும் முதுகலை மருத்துவக் கல்வி ஒழுங்குமுறை விதிகள் திருத்தத்திற்கு டைக்காலத் தடை விதிக்க   வேண்டும்.

முதுகலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கையில், 50 சதவீத இடங்களை மாநில அரசின் இட ஒதுக்கீடு கொள்கை அடிப்படையில், பூர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு கார்த்திக் ராஜன் மனு செய்திருந்தார்.
நீதிபதிகள் ஏ.செல்வம், என்.ஆதிநாதன் கொண்ட அமர்வு மத்திய, மாநில அரசுகளின் சுகாதாரத்துறை செயலர்கள்,
மாநில மருத்துவக் கல்வி இயக்குனர், இந்திய மருத்துவக்
கவுன்சிலுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டு, ஜூன் 15 க்கு ஒத்தி
வைத்தது.
சிறப்பு சுற்றுலா பட்டியல்: ஒகேனக்கல் நீக்கம்

பதிவு செய்த நாள் 29 ஏப்
2017
05:37




தர்மபுரி: காவிரி ஆறு வறண்டதால், சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல் நீக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக்கழகம் ஆண்டுதோறும் மே, ஜூன், ஜூலை ஆகிய 3 மாதங்களில் ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகளை அழைத்துச் செல்வது வழக்கம். இந்த ஆண்டு காவிரி ஆறு வறண்டுள்ளதால் ஒகேனக்கல் அருவி பகுதியில் பாறைகள் மட்டுமே காட்சி அளிக்கிறது. இதனால் இந்த ஆண்டு சிறப்பு சுற்றுலா பட்டியலில் இருந்து ஒகேனக்கல்லை தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் நீக்கி உள்ளது.

ஒகேனக்கல்லுக்கு பயணிகளை அழைத்து வரும் திட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது. வெளிமாநிலங்களில் இருந்து வரும் பயணிகளின் வருகையும் நின்று போனதால், ஒகேனக்கல்லில் பரிசல் ஓட்டிகள், உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை இழந்து உள்ளனர்.
2020ல் ரயில் டிக்கெட் கேட்டவுடன் கிடைக்கும்'

பதிவு செய்த நாள் 28 ஏப்
2017
22:08

புதுடில்லி: ''கேட்டவுடன் முன்பதிவு டிக்கெட் என்பது, வரும், 2020ல் சாத்தியமாகும்,'' என, ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு நம்பிக்கை தெரிவித்தார்.

டில்லியில் நேற்று நடந்த கருத்தரங்கு ஒன்றில், மத்திய ரயில்வே அமைச்சரும், பா.ஜ., மூத்த  தலைவருமான சுரேஷ் பிரபு பேசியதாவது:கடந்த, 10 ஆண்டுகளில், சரக்கு ரயில் போக்குவரத்துக்கான தேவை, 1,344 சதவீதமும், பயணியர் போக்குவரத்துக்கான தேவை, 1,642 சதவீதமும் உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், புதிய ரயில் பாதைகள் அமைப்பது, 23 சதவீதம் மட்டும் உயர்ந்துள்ளது. ரயில்வேயின் திறனை உயர்த்துவதற்கு, கூடுதல் ரயில் பாதைகள் அமைப்பதே தீர்வாக இருக்கும். இதற்காக, 8.5 லட்சம் கோடி ரூபாயை ஒதுக்கியுள்ளோம். கடந்த, 70 ஆண்டுகளில், 20 ஆயிரம் கி.மீ., துாரத்துக்கு மட்டுமே புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டது. அதே நேரத்தில், இரண்டரை ஆண்டுகளில் மட்டும், 16,500 கி.மீ., துாரத்துக்கு புதிய ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது.ரயில்வேக்கு கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, பயணியர் போக்குவரத்து மூலம் கிடைக்கிறது. அதே நேரத்தில், இரண்டு பங்கு கிடைக்கும் சரக்கு போக்குவரத்துக்கு என, தனிப் பாதை இல்லை. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன. வரும், 2019க்குள், சரக்கு ரயில் போக்குவரத்துக்கு என, தனி ரயில் பாதை அமைக்கப்படும். அதன் பின், ரயில்களில் கேட்டவுடன் டிக்கெட் கிடைக்கும் சூழ்நிலை, வரும், 2020ல் உருவாகும்.இவ்வாறு அவர் கூறினார்.

Friday, April 28, 2017

மோசடி புகார்: அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
பதிவு: ஏப்ரல் 28, 2017 14:19

பண மோசடி புகாரில் அமைச்சர் காமராஜூக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது.





புதுடெல்லி:

தமிழக அமைச்சரவையில் உணவு மந்திரியாக இருப்பவர் காமராஜ். இவர் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நீடாமங்கலம் செட்டி சத்திரத்தைச் சேர்ந்தவர் குமார். இவர் சென்னையில் வீடு வாங்குவது தொடர்பாக ரூ.30 லட்சம் பணத்தை அமைச்சர் காமராஜிடம் கொடுத்துள்ளார்.

ஆனால் வீடு வாங்கி கொடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. பணத்தையும் திரும்பி கொடுக்காமல் மோசடி செய்ததாக குமார் போலீசில் புகார் கொடுத்திருந்தார்.

போலீஸ் தரப்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால் அவர் கோர்ட்டு உதவியை நாடினார்.



இதுதொடர்பாக அவர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தார். மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு அமைச்சர் காமராஜ் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.

இதனால் அமைச்சர் காமராஜ் பதவிக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.
சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா நாளை தொடங்குகிறது

பதிவு: ஏப்ரல் 28, 2017 13:42

நெல்லை மாவட்டம் சங்கரன்கோவில் சங்கரநாராயண சுவாமி கோவில் சித்திரை திருவிழா கொடியேற்றத்துடன் நாளை தொடங்குகிறது. இது குறித்த செய்தியை பார்க்கலாம்.





நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலில் சங்கரநாராயண சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டிற்கான சித்திரை திருவிழா நாளை (சனிக்கிழமை) அதிகாலை 4.30 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

அதனை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8 மணிக்கு சுவாமி பெருங்கோட்டூரில் உள்ள திருக்கோட்டி அய்யனார் கோவிலில் எழுந்தருளல் நிகழ்ச்சியும், மதியம் 1 மணிக்கு கோவில் யானை கோமதி பிடி மண் எடுக்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.



தொடர்ந்து விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வருகிற 7-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது.

அன்று காலை 5.30 மணிக்கு கோரதம், விநாயகர், சுப்பிரமணியர் பவனியும், காலை 9 மணிக்கு சுவாமி-அம்பாள் தேரோட்டம், தனித்தனியாக நடைபெறுகிறது.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் பொன் சுவாமிநாதன் மற்றும் மண்டகப்படிதாரர்கள் செய்து வருகின்றனர்.

NEWS TODAY 31.01.2026