Sunday, July 2, 2017

அண்ணா பல்கலை குழு கவர்னருடன் சந்திப்பு

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
22:34

சென்னை, அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, தகுதியான நபரை தேர்வு செய்வதற்காக அமைக்கப்பட்டுள்ள, தேடுதல் குழு உறுப்பினர்கள், நேற்று கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

அண்ணா பல்கலை துணைவேந்தர் பதவிக்கு, தகுதியான நபரை பரிந்துரை செய்ய, தேடுதல் குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழு பரிந்துரை செய்த நபர்களை, கவர்னர் வித்யாசாகர் ராவ் ஏற்றுக் கொள்ளவில்லை. அதைத் தொடர்ந்து, தேடுதல் குழு கலைக்கப்பட்டது.

தற்போது, புதிதாக தேடுதல் குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவில், ஓய்வு பெற்ற உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி லோதா, ஓய்வுபெற்ற அரசு கூடுதல் தலைமை செயலர் சுந்தரதேவன், கான்பூர் ஐ.ஐ.டி., முன்னாள் இயக்குனர் அனந்தபத்மநாபன் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இக்குழு, துணை வேந்தர் பதவிக்கு, தகுதியான மூன்று நபர்களை, கவர்னருக்கு பரிந்துரை செய்யும். குழுவில் இடம் பெற்றுள்ள மூன்று பேரும், நேற்று சென்னை ராஜ்பவனில், கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து பேசினர்.

மருத்துவ படிப்பு சேர்க்கையில் சிக்கல்

பதிவு செய்த நாள்01ஜூலை
2017
19:06

'மருத்துவ படிப்புகளின் சேர்க்கைக்கு, பிளஸ் ௨வில், முதல் முறையில் தேர்ச்சி பெற வேண்டும்' என்ற கட்டுப்பாட்டால், தகுதியான மாணவர்கள் மருத்துவம் படிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.மருத்துவ படிப்புகளான, எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, இந்த ஆண்டு முதல் தமிழகம் உட்பட அனைத்து மாநிலங்களிலும், 'நீட்' தேர்வில் தேர்ச்சி கட்டாயமாகி உள்ளது. 

இம்ப்ரூவ்மென்ட்தமிழகத்தில், மருத்துவ
கவுன்சிலிங் மூலம் மாணவர்கள் சேர, பிளஸ் ௨வில் முதல் முயற்சியிலேயே தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என, விதிகளில் கூறப்பட்டுள்ளது.

பத்து ஆண்டுகளுக்கு முன், பிளஸ் ௨வில் குறைந்த, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்றவர்கள், 'இம்ப்ரூவ்மென்ட்' எனப்படும், மதிப்பெண் உயர்த்தும் தேர்வை எழுதி, அதில் அதிக மதிப்பெண் பெற்று, மருத்துவம் மற்றும் இன்ஜி., படிப்பில் சேர்ந்தனர்.
அதனால், கல்வித்தரம் குறைவதாக கூறி, இவ்வாறு விதிகள் வகுக்கப்பட்டன. சில ஆண்டுகளாக, அரசு தேர்வுத்துறை மூலம், இம்ப்ரூவ்மென்ட் தேர்வே நடத்தப்படுவதில்லை.
பிளஸ் ௨ தேர்வுக்கு விண்ணப்பித்து, எழுத முடியாதோர், தேர்வில் பங்கேற்று தேர்ச்சி பெறாதோருக்கு மட்டுமே, சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.

பாரபட்சமானதுபெற்றோர் கூறியதாவது:பிளஸ் ௨ தேர்வு நடக்கும் காலம், கோடை காலம் என்பதால், அந்த நேரத்தில், சின்னம்மை நோய் தாக்கம் ஏற்படுகிறது. அதனாலும், விபத்து, குடும்பத்தில் விரும்பத்தகாத சம்பங்களால், தேர்வில் பங்கேற்க முடிவில்லை. இத்தகைய மாணவர்கள், மீண்டும் தேர்வில் பங்கேற்று, அந்த முதல் முயற்சி யிலேயே தேர்ச்சி பெறுவது உண்டு. அப்படிப்பட்ட மாணவர்கள் கூட, மருத்துவ சேர்க்கைக்கு தகுதி இல்லை என்பது, பாரபட்சமானது.அரசியல் அமைப்பு சட்டம் வழங்கிய அடிப்படை உரிமைகளை பறிப்பது போல் உள்ளது. எனவே, முதல் முயற்சியில் தேர்ச்சி என்ற விதிகளில் தெளிவான திருத்தங்கள் கொண்டு வந்து, அனைத்து தகுதியான மாணவர்களுக்கும், மருத்துவ படிப்பில் சம வாய்ப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -




Advertisement
ஆகஸ்ட் வரை மருந்துகளுக்கு ஜிஎஸ்டி கிடையாது

புதுடில்லி : நோயாளிகள் அத்தியாவசிய மருந்துகளை ஜிஎஸ்டி.,யை அமல்படுத்துவதற்கு முன்பு இருந்த விலையிலேயே வாங்கிக் கொள்ளலாம். அவற்றின் விலை உடனடியாக உயர்த்தப்படாது.ஆகஸ்ட் மாதம் வரை, ஜிஎஸ்டி கொண்டு வரப்படுவதற்கு முன்பு இருந்த விலையிலேயே மருந்துகளை வாங்கிக் கொள்ளலாம் என மருந்து விற்பனை துறையினர் தெரிவித்துள்ளனர். ஜிஎஸ்டி.,யில் அத்தியாவசிய மருந்துகளுக்கு 12 சதவீதம் வரியும், இன்சுலின் மற்றும் அவசர சிகிச்சைக்காக மருந்துவ உபகரணங்களுக்கு 5 சதவீதம் வரியும் விதிக்கப்பட்டுள்ளது.சில்லறை மருந்து விற்பனையாளர்கள் ஏற்கனவே வாங்கி வைத்துள்ள அத்தியாவசிய மருந்துகளை பழைய விலையிலேயே விற்கலாம். அந்த சரக்குகள் விற்று தீர்ந்த உடன், வாங்கும் புதிய சரக்குகளை ஜிஎஸ்டி., யுடன் விற்பனை செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

குழந்தை திருமணத்திற்கு ஆளான பெண் சாதனை

பதிவு செய்த நாள்
ஜூலை 01,2017 22:16



ஜெய்ப்பூர், :குழந்தை திருமணத்திற்கு ஆளாகி, எட்டு வயதில் குடும்ப பொறுப்பேற்ற ராஜஸ்தானைச் சேர்ந்த இளம்பெண், தன் இடைவிடாத முயற்சியால், அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வான, 'நீட்' தேர்வில் வெற்றி பெற்று, சாதனை
படைத்துள்ளார்.ராஜஸ்தானில், பா.ஜ.,வைச் சேர்ந்த வசுந்தரா ராஜே முதல்வராக உள்ளார். இங்குள்ள ஜெய்ப்பூர் மாவட்டம் கரேரி கிராமத்தைச் சேர்ந்த ரூபா யாதவுக்கு, எட்டு வயதில், 12 வயது சிறுவனுடன் திருமணம் நடந்தது. அவரின் மூத்த சகோதரிக்கும், மற்றொரு சிறுவனுடன் குழந்தை திருமணம்
நடந்தது.

திருமணத்தின் போது, மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ரூபா யாதவ், கல்வி மீதான தாக்கத்தால், தொடர்ந்து படிக்க விரும்புவதாக தெரிவித்தார். அவரின் புகுந்த வீட்டாரும், இதற்கு சம்மதம் தெரிவித்தனர். கல்வியில் சிறந்து விளங்கிய ரூபா, 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், 84 சதவீத மதிப்பெண் பெற்றார்.
குடும்ப பொறுப்பை கவனித்துக் கொண்டே, தேர்வில் சாதனை படைத்த ரூபாவை கண்டு, அவரின் கணவர் மிகவும் ஆச்சரியம் அடைந்தார். தொடர்ந்து தன் மனைவியை படிக்க வைக்கவும் முடிவு செய்தார். தினமும், ஆட்டோ ஓட்டி அதில் கிடைக்கும் வருமானத்தில், மனைவி ரூபாவை, பிளஸ் 2 படிக்க வைத்தார். அவரின் முயற்சிக்கு, ரூபாவின் அக்காள் கணவரும் துணை நின்றார்.
பத்தாம் வகுப்பை போலவே, பிளஸ் 2 தேர்விலும், 84 சதவீத மதிப்பெண் பெற்ற ரூபா, அந்த ஆண்டு நடந்த அகில இந்திய மருத்துவ நுழைவு தேர்விலும் வெற்றி பெற்றார். எனினும், அகில இந்திய அளவில், 23 ஆயிரமாவது இடம் பிடித்ததால், அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைக்கவில்லை.
எனினும், சோர்வடையாமல், கல்லுாரியில், பி.எஸ்சி., படிப்பில் சேர்ந்து படித்தார். ரூபாவை, டாக்டர் ஆக்கியே தீர வேண்டும் என முடிவெடுத்த அவரின் கணவர், நீட் பயிற்சி மையத்தில் சேர்த்து படிக்க வைத்தார். 

கடந்த ஆண்டு, நீட் தேர்வில் தோல்வி அடைந்த போதும், அவரது அயராத முயற்சியை கண்டு வியந்த, தனியார் பயிற்சி மையம், ரூபாவுக்கு உதவித் தொகை வழங்கி, பயிற்சியும் அளித்தது.ஏழை குடும்பத்தில் மகளாக பிறந்து, எட்டு வயதில் குழந்தை திருமணத்திற்கு ஆளாகி, குடும்ப பொறுப்பையும் கவனித்து வந்த ரூபா, இந்த ஆண்டு நடந்து முடிந்த நீட் தேர்வில், அகில இந்திய அளவில், 2,612ம் இடம் பிடித்து, சாதனை படைத்துள்ளார். இதன் மூலம், ரூபாவுக்கு, சிறந்த அரசு மருத்துவக் கல்லுாரியில் இடம் கிடைப்பது உறுதியாகியுள்ளது.
"இ-சேவை' மையங்களில்... "ஸ்மார்ட் கார்டு' இனி, எளிதாக பெறலாம்

பதிவு செய்த நாள்02ஜூலை
2017
07:13




திருப்பூர் : மாவட்டம் முழுவதும் உள்ள, பொது "இ-சேவை' மையங்களில், புதிய "ஸ்மார்ட்' கார்டுக்கும், ஸ்மார்ட் கார்டு திருத்தம் கோரியும் விண்ணப்பிக்கலாம்; தாலுகா அலுவலக "இ-சேவை'மையத்தில், திருத்தப்பட்ட ஸ்மார்ட் கார்டு "பிரின்ட்' செய்து கொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
திருப்பூர் மாவட்டத்தில், 6.70 லட்சத்துக்கும் அதிகமான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவற்றில், 3.55 லட்சம் "ஸ்மார்ட்' கார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. மீதியுள்ள கார்டுதாரர்களின் விவரம் சரிபார்த்து, கார்டு அச்சிடப்பட்டு வருகிறது."ஸ்மார்ட்' கார்டு தயாரிப்பு புதிய திட்டம் என்பதால், எதிர்பாராத குழப்பங்கள் அதிகம் உள்ளன. அவற்றை திருத்துவதற்கு, "இ-சேவை' மையம் மட்டுமல்ல, மற்ற கம்ப்யூட்டர் சென்டர்களிலும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. "ஸ்மார்ட்' கார்டில் உள்ள தவறான தகவல்களை திருத்தம் செய்ய, "இ-சேவை' மையங்களில், தகுந்த ஆதாரத்துடன் விண்ணப்பிக்க வேண்டும்.பெயர் தவறாக இருந்தால், அதற்கான ஆதாரத்தையும்; முகவரி மாறியிருந்தால், அதற்குரிய ஆதாரத்தையும் கொடுத்து விண்ணப்பிக்கலாம். விண்ணப்பம் பரிசீலிக்கப்பட்டு, கார்டில் உள்ள தவறுகள் திருத்தப்பட்டதும், தாலுகா அலுவலக "இ-சேவை' மையத்துக்கு சென்று, புதிய கார்டுகளை "பிரின்ட்' செய்து கொள்ளலாம். அதற்காக, நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணங்களை செலுத்தி, சேவைகளை பெறலாம்.புதிய கார்டு தேவைப்படும் குடும்பத்தினர், அனைத்து உறுப்பினர்களின் ஆதார் அட்டை, வீட்டுவரி ரசீது அல்லது வாடகை ஒப்பந்தம், குடும்ப தலைவரின் போட்டோ, வங்கி பாஸ்புக் அல்லது வாக்காளர் அடையாள அட்டை, காஸ் இணைப்பு புத்தகம் ஆகிய ஏதேனும், முகவரி மற்றும் அடையாள ஆவண அசலுடன் சென்று, "இ-சேவை' மையங்களில் விண்ணப்பிக்கலாம். ஆதார் விவரம் பதிவு செய்யப்படுவதால், முன்பு பெயர் இருந்த கார்டில் இருந்து, பெயரை நீக்கியதற்கான சான்று எதுவும் தேவையில்லை.குடிமைப்பொருள் வழங்கல் துறை அதிகாரிகள் கூறியதாவது:பொது "இ-சேவை'மையங்களில்,"ஸ்மார்ட்' கார்டு தொடர்பான சேவைகளை பெறலாம். புதிய கார்டு கேட்டும், திருத்தம் கோரியும் விண்ணப்பிக்கலாம். சரியான ஆவணங்களை இணைத்து விண்ணப்பித்தால், விரைவில் "ஸ்மார்ட்' கார்டு கிடைக்கும். "போட்டோ' மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களையும் எளிதாக மேற்கொண்டு, உடனுக்குடன் திருத்திய அட்டைகளை பெற்றுக்கொள்ளலாம்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.
மருத்துவ மாணவர் சேர்க்கை வழக்கு: சுப்ரீம் கோர்ட் 'நோட்டீஸ்'

பதிவு செய்த நாள்02ஜூலை
2017
04:07



புதுடில்லி: தமிழகத்தில், மருத்துவ கல்லுாரி மாணவர் சேர்க்கையை, 'நீட்' நுழைவுத் தேர்வு மதிப்பெண்களுக்கு பதிலாக, பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் நடத்தக்கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது, மத்திய அரசும், இந்திய மருத்துவ கவுன்சிலும், பதிலளிக்க, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு, நீதிபதிகள், ஏ.எம்.சாப்ரே மற்றும் சஞ்சய் கிஷன் கவுல் அடங்கிய சுப்ரீம் கோர்ட்டின் விடுமுறை கால அமர்வு முன் நேற்று விசாரணைக்கு வந்தது.தமிழக அரசுஅப்போது, மனுதாரர் சார்பில் கூறப்பட்டதாவது:மருத்துவ மாணவர் சேர்க்கைக்காக நடத்தப்பட்ட, 'நீட்' எனப்படும், தேசிய நுழைவுத் தேர்வுக்கு, கடந்த கல்வியாண்டில், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களுக்கு விலக்கு அளிக்கப்பட்டு இருந்தது; இந்த ஆண்டும் விலக்கு பெறுவதாக தமிழக அரசு கூறி வந்தது.

இதனால், பிளஸ் 2 மதிப்பெண்கள் அடிப்படையில் மட்டுமே மாணவர் சேர்க்கை நடைபெறும் என, மாணவர்களும், பெற்றோரும்எண்ணி இருந்தனர்.ஆனால் தற்போது, 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், மாணவர் சேர்க்கை நடைபெறும் என, தமிழக அரசுஅறிவித்துள்ளது.இதனால், பிளஸ் 2 தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு, தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையை, பிளஸ் 2 தேர்வு அடிப்படையில் நடத்த வேண்டும்.

இவ்வாறு மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.ஒத்திவைப்புஇதையடுத்து, மத்திய அரசு மற்றும் இந்திய மருத்துவ கவுன்சில் சார்பில் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, நீதிபதிகள் விசாரணையை ஒத்தி வைத்தனர்.

இதனிடையே, ஐ.ஐ.டி., எனப்படும், இந்திய தொழிற்நுட்ப நிறுவன மாணவர் சேர்க்கைக்கான, ஜே.இ.இ., தேர்வில், தவறான கேள்விகளுக்கு கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், மத்திய அரசு, ஜே.இ.இ., மற்றும் ஐ.ஐ.டி., இயக்குனருக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது.

Saturday, July 1, 2017

Doctor News

3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் மாயமான டாக்டர் குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார்

மாயமான டாக்டர் குடிநீர் தொட்டியில் பிணமாக கிடந்தார். 3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்டாரா? என போலீசார் விசாரித்து வருகின்றனர்.

ஜூலை 01, 2017, 04:45 AM

செங்குன்றம்,

சென்னையை அடுத்த கொளத்தூர், பூம்புகார் நகர் 2–வது பிரதான சாலையில் வசித்து வருபவர் நாகராஜன். இவருடைய மனைவி சாந்தி. இவர்களது மகன் ராஜேஷ்குமார் (வயது 26), மகள் ஸ்ரீலேகா. இவர்களுடைய சொந்த ஊர் சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர்.

டாக்டரான ராஜேஷ்குமார் முகப்பேர் மேற்கு பகுதியில் கிளினிக் மற்றும் மருந்து கடை நடத்திவந்தார். மருந்து கடையை அவருடைய தந்தை நாகராஜன் கவனித்து வந்தார்.

டாக்டர் ராஜேஷ்குமாருக்கும், காரைக்குடியை சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் செய்ய நிச்சயிக்கப்பட்டது. இவர்களின் திருமணம் 3–ந் தேதி காரைக்குடியில் நடைபெறுவதாக இருந்தது. இதற்காக நாகராஜன்–சாந்தி இருவரும் தங்கள் உறவினர்கள், நண்பர்களுக்கு அழைப்பிதழ் கொடுக்க சொந்த ஊரான திருப்பத்தூர் சென்றுவிட்டனர்.

வீட்டில் ராஜேஷ்குமாரும், அவருடைய தங்கை ஸ்ரீலேகாவும் மட்டும் இருந்தனர். கடந்த 28–ந் தேதி வீட்டில் இருந்து வெளியே சென்ற ராஜேஷ்குமார் அதன் பிறகு மாயமானார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்ரீலேகா, தனது பெற்றோருக்கு தகவல் கொடுத்தார். உடனடியாக அவர்கள் சென்னைக்கு விரைந்து வந்து நண்பர்கள், உறவினர்கள் வீடுகளில் தேடினர். ஆனால் அவர் கிடைக்கவில்லை.

இதுபற்றி கொளத்தூர் போலீசில் நாகராஜன் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷ்குமாரை தேடிவந்தனர்.

இந்த நிலையில் நேற்று மாலை கொளத்தூர் பூம்புகார் நகர் அருகே உள்ள சென்னை குடிநீர் வாரியத்துக்கு சொந்தமான தரைமட்ட குடிநீர் தொட்டியில் இருந்து துர்நாற்றம் வீசுவதாக அந்த பகுதி மக்கள் கொளத்தூர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

அண்ணாநகர் துணை கமி‌ஷனர் சுதாகர், வில்லிவாக்கம் உதவி கமி‌ஷனர் ஜெய்சிங், இன்ஸ்பெக்டர் முனிசேகர் (கொளத்தூர்), கோபிநாத் (ராஜமங்கலம்) மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, குடிநீர் தொட்டியின் மூடியை பொக்லைன் எந்திரம் மூலம் திறந்து பார்த்தனர்.

அப்போது குடிநீர் தொட்டியின் உள்ளே டாக்டர் ராஜேஷ்குமார், அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். போலீசார் அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பிவைத்தனர்.

இதுகுறித்து கொளத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து டாக்டர் ராஜேஷ்குமாரை யாராவது கொலை செய்து, உடலை குடிநீர் தொட்டியில் வீசிச் சென்றார்களா? அல்லது அவர் தற்கொலை செய்துகொண்டாரா? என விசாரித்து வருகின்றனர்.

3–ந் தேதி திருமணம் நடைபெற இருந்த நிலையில் டாக்டர் மர்மமான முறையில் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

________________________________

NEWS TODAY 31.01.2026