Monday, July 3, 2017

AirIndia

தனியார்மயமாகும் ஏர் இந்தியா: எதிர்க்கும் ஊழியர்கள் சங்கம்!

ஏர் இந்தியா விமான நிறுவனத்தை தனியார்மயமாக்கும் முயற்சியில் உள்ள மத்திய அரசின் முடிவுக்கு அந்நிறுவனத்தின் ஊழியர்கள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

மத்திய அரசின் நிறுவனங்களில் முதன்மையான ஏர் இந்தியா விமான சேவை நிறுவனம், தொடர் நஷ்டத்தில் சிக்கித் தவித்துவருகிறது. கடன் சுமை தாளாமல், தன் ஊழியர்களுக்கு சம்பளக் குறைப்பு நடவடிக்கையிலும் ஏர் இந்தியா நிறுவனம் இறங்கியது. இந்தச் சம்பளக் குறைப்பு நடவடிக்கையால் அதிர்ச்சிக்குள்ளான நிறுவன ஊழியர்கள், தொடர் போராட்டங்களில் ஈடுபடத் தொடங்கினர்.

இதைத் தொடர்ந்து, மத்திய அரசின் தலையீட்டால் போராட்டங்கள் கைவிடப்பட்டு, சம்பளக் குறைப்பு நடவடிக்கைக்கு ஒப்புக்கொண்டு, ஊழியர்கள் பணியாற்றத் தொடங்கினர்.

இந்த நிலையில், சிறிது காலத்துக்குப் பின் சம்பளம் தருவதையே ஏர் இந்தியா நிறுவனம் மறந்துவிட்டது. ஊழியர்களும் போராட்டம் நடத்தியே களைப்படைந்த வேளையில், மத்திய அரசு ஒரு புதிய முடிவை அறிவித்தது.

இதன்படி, ஏர் இந்தியா நிறுவனத்தை தனியாரிடம் ஒப்படைத்துவிட மத்திய அரசு தீர்மானித்துள்ளது. மத்திய அரசின் இம்முடிவுக்கு முதலில் ஊழியர்கள் ஆதரவு அளிப்பர் எனத் தகவல்கள் வெளியாகின. ஆனால், இத்தகவலை முற்றிலும் மறுக்கிறது ஏர் இந்தியா ஊழியர்கள் சங்கம். தனியார் வசம் ஏர் இந்தியா நிறுவனம் ஒப்படைக்கப்படக் கூடாது என ஊழியர்கள் எதிர்ப்புக் குரல் எழுப்பி வருகின்றனர். மேலும், வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதென்றும் ஊழியர்களின் சங்கம் சார்பில் முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக சங்க நிர்வாகிகள் கூறுகின்றனர்.

Dailyhunt

Swiss Bank Deposit

சுவிஸ் வங்கியில் அதிகப் பணம்... 88-வது இடத்தில் இந்தியா!

சுவிஸ் வங்கிகளில், அதிக பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில் இந்தியா 88-வது இடத்தில் உள்ளது.

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள வங்கிகளில் அதிகப் பணம் வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் பட்டியலில், பிரிட்டன் தொடர்ந்து முதலிடம் வகிக்கிறது. இரண்டாவது இடத்தில் அமெரிக்காவும், அடுத்தடுத்த இடங்களில் மேற்கிந்தியத் தீவுகள், பிரான்ஸ், பனாமாஸ், ஜெர்மனி, ஹாங்காங் உள்ளிட்ட நாடுகளும் உள்ளன. கடந்த 2014-ம் ஆண்டு 61-வது இடத்தில் இருந்த நம் இந்தியா, தற்போது 88-வது இடத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறது. சமீப காலமாக சுவிஸ் வங்கிகளில் கறுப்புப் பணம் வைத்திருக்கும் இந்தியர்களைக் கண்டுபிடித்து நடவடிக்கை எடுக்க, மத்திய அரசு தொடர்ந்து பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டதன் விளைவே, இதற்குக் காரணமாகச் சொல்லப்படுகிறது.

இதனால், சுவிட்சர்லாந்து அரசும் தன் நாட்டு வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் இந்தியர்களின் விவரத்தை அளிக்கவும் ஒப்புக்கொண்டது. மேலும், மத்திய அரசின் தீவிர நடவடிக்கைகளால், சுவிஸ் வங்கிகளில் இந்தியர்களின் பண மதிப்பு குறையத் தொடங்கியது. தங்களின் கணக்கிலிருந்த பணத்தை அவர்கள் ஏற்கெனவே பெருமளவில் எடுத்துவிட்டபடியால், சுவிஸ் வங்கிகளில் வெளிநாட்டவர்களின் மொத்த பணத்தில், இந்தியர்களின் பணம் 0.04 சதவிகிதமாகக் குறைந்துவிட்டது. இதன்படி, அந்த நாட்டு வங்கிகளில் இந்தியர்களின் பணம் 4,500 கோடி ரூபாய் உள்ளது என 2016-ம் ஆண்டு இறுதிவரை கிடைத்த தகவல்களின் அடிப்படையில், சுவிஸ் தேசிய வங்கி தெரிவித்துள்ளது. மேலும் அது, ''ஹாங்காங், சிங்கப்பூர் நாடுகளை ஒப்பிடும்போது, தங்கள் நாட்டு வங்கிகளில் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் குறைவான தொகையையே டெபாசிட் செய்துள்ளனர்'' என்கிறது.

2007 முதல் 2013 வரையான காலகட்டத்தில், முதல் 50 இடங்களுக்குள் இருந்த இந்தியா, அதிகபட்சமாக 2004-ம் ஆண்டில் 37-வது இடத்தில் இருந்தது என்பதும் அதேசமயத்தில், 2015-ம் ஆண்டு 75-வது இடத்திலிருந்ததும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவைவிட சுவிஸ் வங்கிகளில் அதிகப் பணம் வைத்திருக்கும் பாகிஸ்தானியர்கள், இந்தப் பட்டியலில் 71-வது இடத்தில் உள்ளனர். நம்முடைய மற்ற அண்டை நாடுகளான சீனா 25-வது இடத்திலும்,வங்கதேசம் 89-வது இடத்திலும், நேபாளம், இலங்கை 150, 151-வது இடங்களிலும் உள்ளன. பூடான் 282-வது இடத்தில் உள்ளது. 

Dailyhunt

Police transfer

கடமையைச் செய்ததற்காகப் பெண் போலீஸ் அதிகாரி இடமாற்றம்!

னது பணியை நேர்மையுடனும் கடமையுணர்வுடனும் செய்ததற்காக மக்களிடம் பாராட்டுப் பெற்ற உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்த பெண் போலீஸ் அதிகாரி, தற்போது இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள புலந்த் சாகர் மாவட்டத்தில், சயன்னா பகுதியைச் சேர்ந்தவர் சிரேஷ்ட தாகூர். போலீஸ் அதிகாரியான இவர், கடந்த சில நாள்களுக்கு முன் வாகனப் போக்குவரத்துச் சோதனையில் ஈடுபட்டிருந்தார். அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி வாகனத்தில் வந்த பி.ஜே.பி-யைச் சேர்ந்த பிரமுகர் ஒருவருக்கு அபராதம் விதித்ததோடு, வழக்கும் பதிவுசெய்தார். ஒருகட்டத்தில், அந்த வாகன ஓட்டி, அபராத்தைச் செலுத்தாமல், பெண் போலீஸ் அதிகாரியைக் கடுமையான வார்த்தைகளால் திட்டியுள்ளார்.

இதனால், கைது செய்யப்பட்ட அந்த வாகன ஓட்டிக்கு ஆதரவாகத் திரண்ட பி.ஜே.பி-யினர் சிரேஷ்ட தாகூருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வீடியோ, சமூக வலைதளங்களில் கடந்த சில நாள்களுக்கு முன் வைரலாகப் பரவியது. இந்த நிலையில், முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பி.ஜே.பி அரசு, மாநிலம் முழுவதும் 234 அதிகாரிகளை இடமாற்றம்செய்துள்ளது. அதில், சிரேஷ்ட தாகூரும் ஒருவர். இதுகுறித்து அவர், "இது வழக்கமான இடமாற்றமா அல்லது அரசியல் சம்பந்தப்பட்டதா என்பதுகுறித்து என்னால் பதில் சொல்ல முடியாது. ஆனால், என்னுடைய பேட்ஜைச் சார்ந்த யாரும் இடமாற்றம் செய்யப்படவில்லை. எங்கள் வீட்டிலிருந்து அதிக தொலைவான இடத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளேன். இருந்தாலும், இது என் தொழில் என்பதால் ஏற்றுக்கொள்கிறேன்" என்று கூறியுள்ளார்.

இங்கே, கடமையைச் செய்தவருக்கு இடமாற்றம் என்றால், தமிழகத்தில் மதுக்கடைக்கு எதிராகப் போராடிய பெண்ணின் கன்னத்தில் அறைந்த ஓர் உயர் போலீஸ் அதிகாரிக்கு, பதவியுடன் கூடிய இடமாற்றம்?

Dailyhunt

Sabarimala

சபரிமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்

தென்னிந்தியாவின் பிரசித்திபெற்ற சபரிமலை சுவாமி அய்யப்பன் கோயிலில் இருந்த தங்கக் கொடிமரம் பழுதடைந்ததைத் தொடர்ந்து, புதிய கொடிமரத்தை, கடந்த மாதம் 25-ம் தேதி, சபரிமலையில் பிரதிஷ்டை செய்துவைத்தனர். அதன்பின், ஆராட்டுத் திருவிழாவுக்காக புதிய தங்கக் கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டு, 10 நாள்கள் திருவிழாவும் நடந்துவருகிறது.

புதிய தங்கக் கொடிமரத்தைத் தரிசிப்பதற்காக, தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிந்துவருகின்றனர். தற்போது, கேரளாவில் தென் மேற்குப் பருவமழை கடுமையாகப் பெய்துவருகிறது. சபரிமலையிலும் கனமழை பெய்ந்து வருவதால், பம்பை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது.சபரிமலைக்கு வரும் அய்யப்ப பக்தர்கள், பம்பை ஆற்றில் குளிக்க போலீஸார் அனுமதி கொடுக்கவில்லை.

பக்தர்கள் யாரும் ஆற்றில் இறங்கிவிடாதபடி போலீஸார் தீவிரமாகக் கண்காணித்துவருகின்றனர்.

தற்போது கர்நாடகா, ஆந்திரா, கேரளா, தமிழக பக்தர்கள் பெருமளவு சபரிமலையில் குவிந்துள்ளனர். அவர்கள், கனமழையையும் பொருட்படுத்தாமல் சுவாமி அய்யப்பனையும் புதிய தங்கக்கொடி மரத்தையும் தரிசிக்க காத்துக்கிடக்கின்றனர். சபரிமலையின் சீசன் காலங்களான மகரவிளக்கு, மண்டல விளக்குப் பூஜை போன்று இப்போதும் கணிசமான பக்தர்களின் கூட்டம் அலைமோதுகிறது. இதனால், போலீஸார் அதிக அளவு பாதுகாப்புப் பணியில் உள்ளனர். வழக்கமாக, சபரிமலை கோயில் நடை இரவு 10 மணிக்கு அடைக்கப்படும். பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், இப்போது 11 மணிக்கு அடைக்கப்படுகிறது. நேற்று மாலை, சபரிமலையில் ஸ்ரீபலி பூஜை நடைபெற்றது. பூஜையின்போது, சுவாமி அய்யப்பன் யானையின் மீது பவனியாக எடுத்து வரப்பட்டார். அதை சபரிமலையில் குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் கண்டு பரவசமடைந்தனர்.

Dailyhunt

Court news

கர்ணன் தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும்! உச்ச நீதிமன்றம் கறார்

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் தண்டனை பெற்றுவரும் முன்னாள் நீதிபதி கர்ணனின் ஜாமீன் அல்லது பரேல் வழங்கக்கோரிய மனுவை நிராகரித்த உச்ச நீதிமன்றம், தண்டனையை முழுவதுமாக அனுபவித்தே ஆக வேண்டுமென உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதிகளால், 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கில் தண்டனை பெற்று தலைமறைவாக இருந்தவர் நீதிபதி கர்ணன். தமிழகத்தைச் சேர்ந்த இவர், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியாகப் பதவி வகித்துவந்தார். சில மாதங்களுக்கு முன்னர், தன் சக நீதிபதிகள் மீது ஊழல் புகார் தெரிவித்திருந்தார். இதையொட்டி, உச்ச நீதிமன்றமே தாமாக முன்வந்து கர்ணன் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்தது. இறுதியாக, நீதிபதி கர்ணன் மீது பல குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன.

உச்ச நீதிமன்ற நீதிபதிகளுக்கே தண்டனை விதித்த கர்ணன் மீது அடுக்கடுக்கான வழக்குகள் பதிவுசெய்யப்பட்டு, சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இதையொட்டி, உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்த கர்ணன், தன் பதவிக்காலத்திலேயே தலைமறைவானார். சுமார் ஒரு மாத காலத்துக்கும் மேலாகத் தலைமறைவாக இருந்தவர், சில நாள்களுக்கு முன்னர் ஓய்வுபெற்றார்.

சமீபத்தில், கோவையில் கைதுசெய்யப்பட்ட கர்ணன், கொல்கத்தா சிறையில் அடைக்கப்பட்டார். தற்போது, உடல்நலக் குறைவால் சிகிச்சைபெற்றுவரும் கர்ணன், தனக்களிக்கப்பட்ட தண்டனையில் குறைபாடுகள் உள்ளதென்றும், அவற்றை நிவர்த்திசெய்யும் வரை தனக்கு பரோல் அல்லது ஜாமீன் வழங்க வேண்டுமெனவும் கொல்கத்தா ஆளுநரிடமும் நீதிமன்றத்திடமும் கோரிக்கை மனு அளித்தார்.

இந்த மனு மீதான விசாரணையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம் தண்டனைக் காலத்தை முழுமையாக அனுபவித்தே ஆக வேண்டும் என்று கூறி கர்ணனின் மனுவை நிராகரித்தது.

Dailyhunt

Nursing Recruitment

சவூதியில் செவிலியர்களுக்கு வேலை! தமிழக அரசு அறிவிப்பு

தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "சவூதி அரேபியாவில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு பிஎஸ்சி தேர்ச்சியுடன், ஹீமோடயாலிசிஸ் பிரிவில் இரண்டு வருட பணி அனுபவம் பெற்ற ஆண்/பெண் செவிலியர்கள் தேவைப்படுகிறார்கள்.

தேர்ந்தெடுக்கப்படும் செவிலியர்களுக்குக் குறைந்தபட்சம் ரூ.54,000 மாத ஊதியமும், அதிகபட்ச ஊதியம் தகுதி மற்றும் அனுபவத்துக்கேற்ப வேலையளிப்போரால் நிர்ணயிக்கப்படுவதுடன் இலவச இருப்பிடம், விமான டிக்கெட், உணவு, மருத்துவக் காப்பீடு முதலியவை வழங்கப்படும்.

நேர்முகத்தேர்வு ஜூலை மாதம் மூன்றாவது வாரத்தில் சென்னை மற்றும் பெங்களூரில் வேலையளிப்போரால் நடைபெறவுள்ளது. விருப்பமும் தகுதியும் உள்ள ஹீமோடயாலிசிஸ் செவிலியர்கள் 9.7.2017-க்குள் ovemcleq074@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

மேலும் விவரங்களுக்கு omcmanpower.com என்ற வலைதளத்திலும், 044-22505886/22502267/22500417/8220634389 ஆகிய தொலைபேசி எண்கள் வாயிலாகவும் அறிந்துகொள்ளலாம்" என்று கூறப்பட்டுள்ளது.

Sunday, July 2, 2017

கலக்கலாய் வருது காரைக்கால் 'சரக்கு': தள்ளாடி நிற்குது தமிழகத்து எல்லை




படிப்படியாக மதுவிலக்கை அமல்படுத்து வோம் என்கிறது தமிழக அரசு. ஆனால், முழு மது விலக்கே வந்தாலும் காரைக்கால் சாராயமும், மதுவும் தமிழகத்துக்குள் கரைபுரண்டு வருவதை தடுக்கவே முடியாது போலிருக்கிறது. அந்த அளவுக்கு எல்லையில் நிலைமை ‘தள்ளாடி’க் கொண்டிருக்கிறது.

புதுச்சேரி என்றாலே..

புதுச்சேரி பயணம் என்றாலே மதுப் பிரியர்கள் ஜில்லிட்டுப் போவார்கள். காரணம் கேட்டால், வெரைட்டி கிடைக்கும்; விலை கம்மி என்பார்கள். இதைச் சொல்லியே, புதுச்சேரி ‘சரக்கை’ தமிழகத்துக்குள் கடத்தி வந்து காசு பார்ப்பவர்களும் உண்டு. முன்பு, உள்நாட்டில் தயாராகும் அயல்நாட்டு மதுவகைகள் மட்டும் அரசல்புரசலாகக் கடத்தப்பட்டன. ஆனால், இப்போது புதுச்சேரியிலிருந்து சாராயம், ஸ்பிரிட் உள்ளிட்ட சகல பானங்களும் தமிழகத்துக்குள் தங்கு தடையின்றி கடத்தப்படுவதாகச் சொல்கிறார்கள் எல்லையில் இருப்பவர்கள்.

புதுச்சேரியின் ஒரு அங்கம் காரைக்கால் மாவட்டம். இங்கிருந்து தாறுமாறாக பாயும் உள்நாட்டு வெளிநாட்டு சாராயமானது நாகை, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த இளைஞர்களின் எதிர்காலத்தை தவணை முறையில் முடமாக்கிக் கொண்டிருக்கிறது என்கிறார் முகம்காட்ட விரும்பாத மயிலாடு துறையைச் சேர்ந்த ஒரு சமூக ஆர்வலர்.

இது தொடர்பாக அவர் சொன்ன தகவல்கள் நம்மை உலுக்கிப் போட்டது.

“புதுச்சேரியிலும் காரைக்காலிலும் திரும்பிய பக்கமெல்லாம் மதுபானக் கடைகளும் சாராயக் கடைகளும் இருந்தாலும் உள்ளூர்வாசிகள் பெரிய அள வுக்கு இவைகளை நாடமாட்டார்கள். வெளி யூர்க்காரர்களாலும் இங்கிருந்து ‘சரக்கை’ கொள்முதல் செய்து தமிழகத்துக்கு கடத்து கிறவர்களாலும் தான் இந்தக் கடைகள் கணிசமாக கல்லாக்கட்டுகின்றன.

பத்து வழிகள் மூலமாக நாகையிலிருந்து காரைக்காலுக்குள் நுழைந்துவிட முடியும். இவற்றில் பிரதானமான ஆறு இடங்களில் மட்டும் தமிழக போலீஸார் சோதனைச் சாவடிகளை அமைத்துள்ளனர். ஆனாலும், காரைக்காலில் இருந்து மதுபாட்டில்கள், ஸ்பிரிட் மற்றும் சாராய பாக்கெட்டுகள் சரளமாக தமிழகத்துக்குள் கடத்தப்படுகின்றன. காரைக்காலில் இதற்கென இருக்கும் மொத்த வியாபாரிகள் சிலர், மது விலக்கு பிரிவு, உள்ளூர் போலீஸ் என அனைவரை யும் ‘முறையாக’ கண்ணைக் கட்டி விட்டு, கல்லாக் கட்டுகிறார்கள்.’’ என்கிறார் அந்த சமூக ஆர்வலர்.

குவாட்டர் 300 ரூபாய்

அவரே தொடர்ந்தும் பேசுகையில், “உச்ச நீதிமன்ற உத்தரவால் மயிலாடுதுறையிலும், கும்பகோணத்திலும் கிட்டத்தட்ட மதுக்கடைகளே இல்லாத சூழல் ஏற்பட்டிருக்கிறது. இதைத் தங்களுக்கு சாதகமாக்கிக் கொண்ட கடத்தல் புள்ளிகள், ‘சரக்கு’களை இந்தப் பகுதிகளுக்கு கடத்தி வந்து குவாட்டர் 300 ரூபாய் வரை விற்கிறார்கள். இதில் பெரும்பகுதியானவை, வியாபாரிகளே ஸ்பிரிட்டை கலந்து தயார் செய்யும் ஆபத்து மிகுந்த ‘அட்டுச் சரக்கு’ என்பது குடிமகன்களுக்கே தெரியாது.

இதுதவிர, காரைக்கால் சாராயக் கடைகளில் மொத்தமாக சாராயத்தை வாங்கி அவற்றை ஐஸ் பாக்கெட்டுகளில் 200 மில்லி அளவுக்கு அடைத்து தமிழகத்தின் எல்லையோர கிராமங் களில் சப்ளை செய்கிறார்கள். விலை மலிவு என்பதால் இதற்கும் ஏக கிராக்கி. பெரும்பாலும் இருபதிலிருந்து முப்பது வயதுக்குட்பட்ட இளைஞர்கள் தான் இப்படி சாராயம், மது கடத்தலில் ‘குருவி’களாகப் பறக்கிறார்கள்.

குருவிக்கு கூலி 2,000 ரூபாய்

ஐநூறு குவாட்டர் பாட்டில்களை இரு சக்கர வாகனத்தில் கச்சிதமாக கடத்திக் கொடுத்தால் 2,000 ரூபாய் கூலி தருகிறார்கள். இதுக்கு ஆசைப்பட்டு இளைஞர்கள் பலரும் இப்போது இந்த வேலையில் இறங்கி இருக்கிறார்கள். நெடுங்காடு, நல்லாடை, பருத்திக்குடி, குரும்ப கரம், குளக்குடி, பொன்பேத்தி, சுரக்குடி உள் ளிட்ட எல்லையோர கிராமங்களைச் சேர்ந்த இருநூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர்களுக்கு இப்போது இதுதான் முழுநேர தொழிலே.’’ என்று சொன்னார்.

காசுக்காக இப்படி கடத்தலுக்குத் துணிந்தவர் களில் சிலர், வாகனங்களில் பதற்றத்துடன் வேகமாக பறக்கும்போது விபத்துக்களை எதிர்கொள்ளும் சம்பவங்களும் நடக்கின்றன. இதனால் கை, கால் முடமாகிப் போகிறவர்களும் உண்டு. மதுக்கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு கைமீறிய வருமானம் கிடைப் பதால் அவர்களும் போதைக்கு அடிமையாகிறார்கள். இவர்கள் மிதமிஞ்சிய போதையில் தங்களது மனைவியை துன்புறுத்துவதும் அவர்களையும் குடி நோயாளிகளாக்கும் அவலங்களும் நடக்கின்றன.

நல்லாடை என்ற கிராமத்தில், தினமும் மது வாங்கித் தரும் கணவன் தொடர்ந்து இரண்டு நாள்கள் வாங்கித் தரவில்லை என்பதால் விஷம் அருந்தி தற்கொலைக்கு துணிந்தி ருக்கிறார் ஒரு பெண்மணி. இன்னொரு கிராமத்தில், தான் வீட்டில் இல்லாதபோது தனது மனைவி வேறு ஒருவருடன் சேர்ந்து மது அருந்தியதாக மரத்த டிப் பஞ்சாயத்தைக் கூட்டி இருக்கிறார் ஒரு ‘குடிமகன்.’

பெண்களும் கடத்துகிறார்கள்

மதுக்கடத்தலில் கிடைக்கும் வருமானத்தைப் பார்த்துவிட்டு தற்போது ஆண்களுக்குப் போட்டியாக பெண்களும் இந்தத் தொழிலில் குதித்திருக்கிறார்கள். போலீஸ் காவல் இருக்கும் வேலங்குடி சோதனைச்சாவடி வழியாக தினமும் இரு சக்கர வாகனத்தில் ஊடுருவும் ‘டிப் டாப்’ நங்கையர் இருவர், கட்டைப் பைகளில் சர்வ சாதாரணமாக சரக்குகளை அள்ளிக்கொண்டு பறப்பதாய் சொல்கிறார்கள். இப்படி, ஆம்னி பேருந்தில் சரக்குக் கடத்திய இளம் பெண்கள் இருவர் அண்மையில் கைது செய்யப்பட்டார்கள்.



நடமாடும் மதுக்கடைகள்

மதுக்கடைகள் அகற்றப்பட்ட தமிழக பகுதிகளில் பலர் நடமாடும் மதுக்கடைகளையும் நடத்துகிறார்கள். இந்த நேரத்துக்கு, இந்த இடத்துக்குப் போனால் இன்னாரிடம் ‘சரக்கு’ வாங்கலாம் என்று பட்டியலே வைத்திருக் கிறார்கள் ‘சரக்கு’ச் சக்கரவர்த்திகள். இவர்கள் தங்களுக்கு பிசின்ஸ் கொடுக்கிறார்கள் என்ப தால் பார்டரில் இருக்கும் புதுச்சேரி மதுக்கடைக் காரர்கள் சிலர், இவர்களைக் கண்டுகொள்ளாமல் இருக்க போலீஸுக்கும் ‘படியளப்பதாக’ சொல்கிறார்கள். அதேசமயம், சோதனைச் சாவடிகளில் ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் கடத்தல் நபர்களை பிடித்ததாகவும் அவர்களிடமிருந்து மது பாட்டில்கள் கைப்பற்றப்பட்டதாகவும் கணக்குக் காட்டுகிறார்கள். இவைகளில் பெரும்பாலான வழக்குகள் பக்கா ‘செட்-அப்’ என்கிறார்கள்.

மொத்தத்தில், தங்குதடை இல்லாமல் ஜரூராய் நடக்கும் புதுச்சேரி - தமிழக ‘சரக்கு’ப் போக்குவரத்தால் ‘தள்ளாடி’க் கொண்டிருக்கின்றன தமிழகத்தின் எல்லையோர கிராமங்கள்!

NEWS TODAY 31.01.2026