Thursday, August 3, 2017

10 ஆண்டில் முதல் முறையாக சிங்கப்பூரில் பெட்ரோல் பங்கில் கொள்ளை: இந்திய வம்சாவளியை சேர்ந்தவர் கைது

2017-08-03@ 00:06:24

சிங்கப்பூர் : கடந்த 10 ஆண்டுகளில் முதல் முறையாக, சிங்கப்பூரில் பெட்ரோல் பங்கில் கத்தியைக் காட்டி கொள்ளையடித்த சம்பவம் நடந்துள்ளது.
சிங்கப்பூரைச் சேர்ந்தவர் விஸ்வநாதன் வடிவேலு(48). இந்திய வம்சாவளியை சேர்ந்தவரான இவர், உப்பர் புகிட் டிமா சாலையில் அமைந்துள்ள ஷெல் பெட்ரோல் பங்கிற்கு கடந்த திங்கட்கிழமை 12.50 மணிக்கு சென்றுள்ளார். அங்கிருந்த ஊழியர்களிடம் பிளாஸ்டிக் கவர் ஒன்றில் அங்கிருந்த பணத்தை போட்டு தரும்படி கத்தியைக் காட்டி மிரட்டியுள்ளார்.பணத்தை எடுத்துக்கொண்ட வடிவேலு இருசக்கர வாகனத்தில் அங்கிருந்து தப்பி சென்றார். இது தொடர்பாக ஊழியர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

ஆனால் அவர் ஹெல்மெட் அணிந்திருந்ததால் ஊழியர்களால் அவரை அடையாளம் காண முடியவில்லை. பெட்ரோல் பங்கில் இருந்த பெண் ஊழியர் அவர் அணிந்திருந்த ஆடைகளின் வர்ணத்தை போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து போலீசார் உஷார்ப்படுத்தப்பட்டனர். சுமார் 5 மணியளவில் வடிவேலுவை அடையாளம் கண்டு போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.32 ஆயிரம் பணம், வங்கி ரசீது மற்றும் இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது. வடிவேலு மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். அவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. சிங்கப்பூரில் கடந்த 10 ஆண்டுகளில் பட்டப்பகலில் முதல் கொள்ளை சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சேலம் அரசு மருத்துவமனையில் நோய் தொற்றியும் அகற்றப்படாத பழைய மருத்துவ உபகரணங்கள்

2017-08-02@ 20:48:18


சேலம் அரசு மோகன் குமாரமங்கலம் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை, கலெக்டர் அலுவலகம் எதிரே உள்ளது. நாள்தோறும் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நோயாளிகள் புறநோயாளிகளாகவும், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உள்நோயாளியாகவும் தங்கி சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதவிர, 25க்கும் மேற்பட்ட துறைகளுடன் செயல்பட்டு வரும் சூப்பர் ஸ்பெசாலிட்டி மருத்துவ மனையில் நூற்றுக்கணக்கான அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதனால், சேலம் மட்டுமல்லாது சுற்றியுள்ள 8 மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்களும் சிகிச்சைக்காக இங்கு வந்து செல்கின்றனர். மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்படுபவர்களுக்காக இரும்பு கட்டில், மெத்தை மற்றும் படுக்கை விரிப்புகள் உள்ளன. மேலும், மருந்துகளை வைக்க இரும்பு டேபிள்கள், குளுக்கோஸ் ஏற்ற இரும்பு ஸ்டேண்ட் போன்றவையும் உள்ளது. பழுதான மற்றும் உபயோகமற்ற இவற்றை மருத்துவமனையில் இருந்து அப்புறப்படுத்த வேண்டும்.

இதேபோல், நோயாளிகளை ஒரு பிரிவில் இருந்து மற்றொரு பிரிவுகளுக்கு மாற்றவும், ஆம்புலன்சில் அழைத்து வரப்படும் நோயாளிகளை மருத்துவமனைக்குள் தூக்கி செல்லவும், சக்கர நாற்காலி மற்றும் ஸ்டெச்சர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலானவை, துருப்பிடித்தும், சக்கரங்கள் எதுவும் இல்லாமலும் பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது.பொதுவாக அரசு மருத்துவமனைகளில் இவ்வாறு உபயோகமற்ற பொருட்களை ஏலம் விட்டு, அதன்மூலம் வரும் வருவாயை கொண்டு புதிதாக பொருட்கள் வாங்கப்படுவது வழக்கம். ஆனால் சேலம் அரசு மருத்துவமனையில் உள்ள உபயோகமற்ற பொருட்கள், தேங்கி கிடக்கின்றன. மருத்துவமனையில் பல் மருத்துவ பிரிவுக்கு அருகில், பிரேத பரிசோதனை கூடம் உள்ளிட்ட இடங்களில் மலைபோல் இவை குவித்து வைக்கப்பட்டுள்ளன.

இதனால், அந்த இடம் புதர் போல் காணப்படுகிறது. மேலும் விஷசந்துக்களின் புகலிடமாகவும் மாறிவிட்டது. குறிப்பாக மழைக்காலங்களில் தண்ணீர் தேங்கி ஏராளமான கொசுக்கள் உருவாகின்றன. இதன்மூலம் பல்வேறு நோய் தொற்றுகளுக்கு ஆளாக வேண்டியுள்ளது. மேலும், கடும் துர்நாற்றமும் வீசுவதால், நோயாளிகளும், மருத்துவமனை பணியாளர்களும் கடும் சிரமங்களை சந்தித்து வருகின்றனர். இதுகுறித்து மருத்துவமனை பணியாளர்கள் கூறியதாவது: சுகாதார சீர்கேட்டால் உடல்நலம் பாதிக்கப்பட்டு, அதனை குணமாக்க அரசு மருத்துவமனைகளுக்கு வருகின்றனர். ஆனால், நோயை உருவாக்கும் மையமாக சேலம் அரசு மருத்துவமனை மாறிவிட்டது. எங்கு பார்த்தாலும் கடும் சுகாதார சீர்கேடு தான் நிலவுகிறது. இதுகுறித்து பலமுறை கூறியும், மருத்துவமனை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை.

இதனிடையே, மருத்துவமனையில் பயனற்ற பொருட்களை அங்கிருந்து வெளியேற்றாமல் வைத்துள்ளனர். அவை மலைபோல் குவித்து வைக்கப்பட்டுள்ளதால் பல்வேறு நோய் தொற்றுகள் ஏற்படுகின்றன. மருத்துவமனையின் பல் மருத்துவ சிகிச்சை பிரிவுக்கு அருகே பயிற்சி செவிலியர் களின் ஹாஸ்டல் உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கியுள்ளனர். ஹாஸ்டலுக்கு அருகிலேயே நூற்றுக்கணக்கான உடைந்த கட்டில்கள், மெத்தைகள், டேபிள், சேர்கள் வைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் ஏராளமான கொசுக்கள் உருவாகிறது.

இதனால், கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட செவிலிய மாணவிகள் 10க்கும் மேற்பட்டோர் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு, சிகிச்சை பெற்று திரும்பியுள்ளனர். இதனால் மருத்துவமனை பணியாளர்களுக்கே, நோய் தொற்றும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவத்திற்கு பிறகு படுக்கை விரிப்புகள் மட்டும் அங்கிருந்து அகற்றப்பட்டது. ஆனால், கட்டிட கழிவுகள் எதுவும் அப்புறப்படுத்தப் படவில்லை. எனவே, இதனை முழுமையாக அகற்றி, ஏலம் மூலம் வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மருத்துவமனை பணியாளர்கள் கூறினர்.

வேளாங்கண்ணிக்கு சுவிதா சிறப்பு ரயில்கள்

2017-08-02@ 23:30:54
சென்னை: தெற்கு ரயில்வே நேற்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:சென்னை எழும்பூரில் இருந்து ஆக.28ம் தேதி இரவு 10.45 மணிக்கு புறப்படும் பல மடங்கு கட்டண சுவிதா சிறப்பு ரயில்(82647) மறுநாள் காலை 6.45  மணிக்கு வேளாங்கண்ணி சென்றடையும்.வேளாங்கண்ணியில் இருந்து ஆக.29ம் தேதி இரவு 10.30 மணிக்கு புறப்படும் பல மடங்கு கட்டண சுவிதா சிறப்பு ரயில்(82648) மறுநாள்8.05மணிக்கு  சென்னை எழும்பூர் வந்து சேரும்.
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின் 'பிராட்பேண்ட்' சேவை பாதிப்பு

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
04:13
dinamalar

வைரஸ் தாக்குதல் காரணமாக, பி.எஸ்.என்.எல்., நிறுவனத்தின், 'பிராட்பேண்ட' இணையதள சேவைகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பொதுத்துறை நிறுவனமான, பி.எஸ்.என்.எல்., அதன் வாடிக்கையாளர்களுக்கு, தரைவழி தொலைபேசி வழியாக, 'பிராட்பேண்ட்' எனும் அதிவேக இணைய சேவையை வழங்குகிறது. சில மாதங்களாக, தமிழகம் உட்பட, பல்வேறு மாநிலங்களில், பிராட்பேண்ட் சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பலர், அந்த சேவையை ரத்து செய்ய துவங்கி உள்ளனர்.

சென்னை, பி.எஸ்.என்.எல்., அதிகாரிகள் கூறியதாவது: தரைவழி தொலைபேசிக்கும், கணினிக்கும் இடையே பொருத்தப்படும், 'மோடம்' எனும் சிறிய கருவியில் ஏற்பட்ட பிரச்னையே அதற்கு காரணம். அது தான், இணைய சேவைக்கு உதவுகிறது. சில ஆண்டுகளுக்கு முன் கொள்முதல் செய்யப்பட்ட, 'டெராகாம்' எனும் மோடத்தை, ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்களுக்கு தந்தோம்; அதில், எளிதாக வைரஸ் புகுந்து தாக்கி உள்ளது.
அதனால், வாடிக்கையாளர்களுக்கு, மோடம் தருவதை நிறுத்தி விட்டோம். புதிய வாடிக்கையாளர்களிடம், அதை வெளியில் வாங்கி, பயன்படுத்த அறிவுறுத்தி உள்ளோம். பழுதான மோடத்தை மட்டும், அருகில் உள்ள, பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர் மையத்தில் தந்து, சரி செய்து கொள்ளலாம். இதற்காக, ஊழியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
ஊருக்குள் வரமறுத்த தனியார் பஸ்: கண்டக்டருக்கு அடி

பதிவு செய்த நாள் 02 ஆக
2017
23:22
dinamalar


ஸ்ரீவில்லிபுத்துார், ஊருக்குள் வராமல் மறுத்து, பயணிகளை ஏற்ற மறுத்த தனியார் பஸ் கண்டக்டரை தாக்கிய கிராமத்தினர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கன்றனர்.

ஸ்ரீவில்லிபுத்துார் அழகாபுரியை சேர்ந்தவர் செல்வராஜ். நேற்று முன்தினம் மதுரை ரிங்ரோட்டில் இருந்து ராஜபாளையம் செல்லும் தனியார் பஸ்சில் அழகாபுரிக்கு வருவதற்கு, கண்டக்டர் காளமேகபெருமாள் மறுத்துள்ளார். பஸ் அழகாபுரி அருகே வரும்போது, கிராமத்தை சேர்ந்தவர்கள் மறித்து, அழகாபுரிக்குள் வரமறுப்பது ஏன் எனக்கேட்டு கண்டக்டரை தாககினர்.
கண்டக்டரின் புகாரில், அழகாபுரியை சேர்ந்த செல்வராஜ், முத்துபாண்டி, சிவலிங்கம், மாரிசெல்வம், கருப்பசாமி ஆகியோர் மீது 5 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து, எஸ்.ஐ.,காளைமுத்தையா விசாரித்தார்.
சிங்கப்பூரில் இந்தியர் கைது

பதிவு செய்த நாள் 03 ஆக
2017
04:44

dinamalar

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் சமீபத்தில் பெட்ரோல் 'பங்க்'கிற்கு ஸ்கூட்டரில் வந்தவர் பெட்ரோல் நிரப்பிய பெண் ஊழியரிடம் பணம் தருவதற்கு பதில், அவரிடம்  கத்தியை காட்டி மிரட்டி, 58 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள, சிங்கப்பூர் டாலர்களை பறித்து சென்றான்.   'பங்க்'கில் கொள்ளையடித்த நபரை போலீசார், கைது செய்தனர். விசாரணையில், அவன் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த வடிவேலு என தெரிந்தது.அவனிடமிருந்து ஸ்கூட்டரையும் கொள்ளையடிக்கப்பட்ட பணத்தையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
அடுத்தடுத்து வரும் சனி பிரதோஷம்

பதிவு செய்த நாள் 02 ஆக
2017
22:31

ஆர்.கே.பேட்டை : சனி பிரதோஷ விழாக்கள் அடுத்தடுத்து வருவதால், சிவ பக்தர்கள் ஏக மகிழ்ச்சியில் உள்ளனர். உபய கைங்கர்யம் செய்ய போட்டா போட்டி நிலவுகிறது.சிவாலயங்களில் பிரதோஷ அபிஷேகம் சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். பிரதோஷ பூஜையில் கலந்து கொண்டு வழிபாடு செய்தால், ஆண்டு முழுவதும் கோவிலுக்கு சென்று வழிபட்ட பலன் கிடைக்கும் என, சொல்லப்படுகிறது. இதனால், பிரதோஷ காலத்தில், சிவாலயங்களில் நந்தியம் பெருமானுக்கு நடக்கும் அபிஷேகத்தை காண, திரளான பக்தர்கள் கூடுவர்.அதிலும், பிரதோஷம் நடந்ததாக கூறப்படும் சனிக்கிழமையில் அமையும் பிரதோஷம் மிகவும் விசேஷம். இந்த ஆகஸ்ட்டில், நாளை மறுதினம் வளர்பிறை பிரதோஷமும், வரும், 19ம் தேதி என, அடுத்தடுத்து இரண்டு பிரதோஷ விழாக்கள் சனிக்கிழமைகளில் அமைகின்றன.சனிக்கிழமையில் அமையும் பிரதோஷ விழாக்கள், சிவாலயங்களில் பிரமாண்டமான முறையில் நடைபெறும். இதையொட்டி, ஆர்.கே.பேட்டை அடுத்த, காந்தகிரி மற்றும் வங்கனுார் மலைக்கோவில்கள், மட்டவளம் கோவத்ச நாதேஸ்வரர், அத்திமாஞ்சேரிபேட்டை கல்யாண சுந்தரேசனார், பொதட்டூர்பேட்டை அகத்தீஸ்வரர் கோவில்களில் பிரதோஷ அபிஷேகம் நடத்தப்படுகிறது.சனி பிரதோஷ விழாவில் உபய கைங்கர்யம் செய்ய, பக்தர்கள் தங்களுக்குள் போட்டா போட்டி நடத்தி வருகின்றனர். இது தவிர, பக்தர்கள் தாங்களாக பக்தி துண்டு பிரசுரங்கள் மற்றும் பிரசாத வினியோகம் செய்யவும் உத்தேசித்து உள்ளனர்.

NEWS TODAY 25.01.2026