Sunday, August 6, 2017

சான்றிதழ்களை ஒப்படைக்க கோரி டாக்டர்கள் மனு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்06ஆக
2017
02:29


சென்னை:அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்காக, சான்றிதழ்களை அரசு வசம் வைத்து கொள்வதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, டாக்டர் ராஜ் சாந்தன் தாக்கல் செய்த மனு:

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது, என்னிடம் உத்தரவாதம் பெறப்பட்டது.
'குறைந்தது இரண்டு ஆண்டுகள், அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்; இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்'
என்பதே நிபந்தனை.

இதை ஏற்று, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி, 'டீன்' வசம், சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டன. படிப்பை முடித்த பின், அரசு வேலையில் சேர தயாராக இருந்தேன்.இதற்கிடையில், உயர் படிப்பை தொடர விரும்பினேன். அசல் சான்றிதழ்கள் அனைத்தும், 'டீன்' வசம் இருந்ததால், அவற்றை திருப்பி தரும்படி கேட்டேன்.

'இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, சான்றிதழ்களை தர இயலாது' என, கூறினார். தமிழக அரசு, 2016 பிப்ரவரியில் பிறப்பித்த அரசாணைப்படி, அதிகாரிகள் செயல்படுவதாக தெரியவந்தது.
இந்த அரசாணை, சட்ட விரோதமானது. இதனால், மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. எனவே, என் சான்றிதழ்கள் அனைத்தையும் தரும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல, 40க்கும் மேற்பட்ட டாக்டர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் எல்லாம், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜராகி, ''இரு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்;

இல்லையென்றால், 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது சட்ட விரோதமானது,'' என்றார்.மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 11க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.
இலவச கேஸ் திட்டம்: ஆதாரை இணைக்க செப்.30 வரை நீட்டிப்பு


பதிவு செய்த நாள்06ஆக
2017
05:02




புதுடில்லி:இலவச சமையல் கேஸ் திட்டத்தில் ஆதாரை இணைக்க காலக்கெடுவை செப்டம்பர் 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவித்துள்ளது.வறுமைக்கோட்டுக்கு கீழ் வாழும் குடும்பங்களுக்கு இலவசமாக சமையல் கியாஸ் இணைப்பு வழங்கும் வகையில் 'பிரதம மந்திரி உஜ்வாலா யோஜனா' என்ற திட்டம் கடந்த ஆண்டு தொடங்கப்பட்டது.

இந்த திட்டத்தின் கீழ் 5 கோடி ஏழை பெண்களுக்கு 3 ஆண்டுகளுக்குள் இலவச கியாஸ் இணைப்பு வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.இந்த திட்ட பயனாளிகளுக்கு ஆதார் கட்டாயம் என கடந்த மார்ச் மாதம் அறிவித்த மத்திய அரசு, இந்த திட்டத்துக்கு விண்ணப்பிப்போர் தங்கள் விண்ணப்பத்துடன் ஆதாரை இணைக்க வேண்டும் அல்லது மே 31ந் தேதிக்குள் ஆதாருக்கு விண்ணப்பித்து அதற்கான பதிவு அட்டை அல்லது விண்ணப்ப நகலை கேஸ் இணைப்பு விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும் என அறிவித்தது.

இந்த காலக்கெடுவை தற்போது அடுத்த மாதம் (செப்டம்பர்) 30ந் தேதி வரை நீட்டித்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. அதன்படி இலவச கேஸ் இணைப்புக்கு விண்ணப்பிக்க விரும்பும் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள பெண்கள், தங்களிடம் ஆதார் அட்டை இல்லாதபட்சத்தில் அடுத்த மாதம் 30ந் தேதிக்குள் அதற்காக விண்ணப்பித்து அதன் நகலை இணைத்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?


பதிவு செய்த நாள்
ஆக 05,2017 16:10



வருமான வரித்தாக்கல் செய்யாவிட்டால் என்னவாகும்?

புதுடில்லி : 2016 -17 ம் நிதியாண்டிற்கான வருமான வரி கணக்கை தாக்கல் செய்ய ஜூலை 31 கடைசி தேதி என நிர்ணயிக்கப்பட்டு, பின்னர் அது ஆகஸ்ட் 5 வரை நீட்டிக்கப்பட்டது. வருமான வரி தாக்கல் செய்ய கடைசி நாளான இன்று, நள்ளிரவு 12 மணி வரை வருமான வரி அலுவலகங்கள் திறந்திருக்கும் என வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

ஒருவேளை, இன்றைக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாவிட்டாலும் கவலைப்பட தேவையில்லை. அரசு நிர்ணயித்த தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்யாமல் இருப்பதற்கு, தாமதிக்கப்பட்ட வரி தாக்கல் என கூறுகின்றனர். வருமான வரித்தாக்கல் சட்டப் பிரிவு 139(4) ன்படி, அரசு நிர்ணயித்த காலக் கெடுவிற்குள் வருமான வரியை தாக்கல் செய்ய முடியாதவர்கள், நடப்பு நிதியாண்டு முடிவதற்குள் எப்போது வேண்டுமானாலும் தங்களின் வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம்.

அதாவது, 2018 ம் ஆண்டு மார்ச் 31 ம் தேதிக்குள் எப்போது வேண்டுமானாலும் திருத்தப்பட்ட தாமதமான வருமான வரியை தாக்கல் செய்து கொள்ளலாம். இதற்குள் வருமான வரியை தாக்கல் செலுத்துவோருக்கு அபராதமும் விதிக்கப்படாது. 2018 ம் ஆண்டு ஏப்ரல் 1 ம் தேதி அல்லது அதற்கு பிறகு வருமான வரியை செலுத்துவோருக்கு ரூ.10000 முதல் அபராதம் வசூலிக்கப்படும்.

அனைவரையும் வருமான வரி செலுத்த வைப்பதற்காக மத்திய அரசு தற்போது இந்த திருத்த்தப்பட்ட தாமத வரி முறையை கொண்டு வந்துள்ளது. இதற்கு முந்தைய ஆண்டுகளில் வருமான வரி செலுத்துவோருக்கு இத்தகைய வசதி அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
வெங்கையா கடந்து வந்த பாதை....
பதிவு செய்த நாள்
ஆக 05,2017 20:05



வெங்கையா கடந்து வந்த பாதை

துணை ஜனாதிபதி தேர்தலில் 272 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு, நாட்டின் 15-வது துணை ஜனாதிபதியாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதன்மூலம் தென்னிந்தியாவைச் சேர்ந்த 6வது துணை ஜனாதிபதி என்ற பெருமை பெற்றார்


பிறந்த தேதி: 1949 ஜூலை 1
வயது: 68
பிறந்த இடம்: நெல்லுார், ஆந்திரா
படிப்பு: பி.ஏ., பி.எல்.,
பெற்றோர்: ரங்கையா நாயுடு, ரமணம்மா
கட்சி: பா.ஜ.,

பார்லிமென்ட்டில் நீண்ட அனுபவம் மிக்க இவர் அனைத்து கட்சிகளின் அன்பை பெற்றவர். பிரச்னைகளை எளிதாக கையாளக்கூடியவர். இளம் வயதில் ஆர்.எஸ்.எஸ்.,சில் பணியாற்றினார். பின் ஆந்திர பல்கலையில் படிக்கும் போது, அகில் பாரதிய வித்யார்தி பரிஷத் இயக்கத்தில் ஈடுபட்டார். பேச்சாற்றல்மிக்க இவர், மாணவர் அமைப்பின் தலைவராகவும் செயல்பட்டார்.

சிறை சென்றவர்

1972ல் 'ஜெய் ஆந்திரா' இயக்கத்தில் பங்கேற்றவர். 1974ல் ஜெயப்பிரகாஷ் நாராயண் இயக்கத்தில் பங்கேற்றார். நெருக்கடி நிலையின் போது சிறைக்கு சென்றார். 1978ல் முதன்முறையாக ஆந்திர சட்டசபைக்கு தேர்வானார். 1983ல் மீண்டும் எம்.எல்.ஏ., வானார். 1985 - 88 வரை ஆந்திர மாநில பா.ஜ., பொதுச்செயலராக இருந்தார்.

1998ல் கர்நாடகாவில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1988 - 93 வரை ஆந்திர பா.ஜ., தலைவராக இருந்தார். 2004 மற்றும் 2010ல் மீண்டும் ராஜ்யசபா எம்.பி., ஆனார். 1996 - 2000 வரை பா.ஜ., செய்தி தொடர்பாளராக இருந்தார். 1999ல் வாஜ்பாய் ஆட்சிக்காலத்தில் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சராக பணியாற்றினார். 2002ல் பா.ஜ., தேசிய தலைவரானார். 2004 லோக்சபா தேர்தலில் கட்சி தோல்விக்கு பொறுப்பேற்று அப்பதவியில் இருந்து விலகினார். 2014 மோடி அமைச்சரவையில் பார்லி விவகாரம் மற்றும் நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சரானார். 2016 மே 29ல் ராஜஸ்தானில் இருந்து ராஜ்யசபா எம்.பி., ஆனார். 2016 ஜூலை 5ல் மத்திய தகவல் ஒலிபரப்பு துறை அமைச்சரானார்.

அமெரிக்கா, பிரிட்டன், சிங்கப்பூர், பிரான்ஸ், பெல்ஜியம், நெதர்லாந்து, ஆஸ்திரேலியா, மொரிஷியஸ், மாலத்தீவு, தாய்லாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு சென்றுள்ளார்.

ஆக.11-ல் பதவியேற்கிறார்

வரும் 11-ம் தேதி காலை 11 மணிக்கு பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக வெங்கையாவின் சொந்த மாவட்டத்தில்அவரது உறவினர்கள் இனிப்புகள் வழங்கி வாழ்த்துக்களை பரிமாறி கொண்டனர்.

ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்துவேன்

துணை ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற வெங்கையா நாயுடு செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, எனக்கு ஆதரவு அளித்த கட்சிகளுக்கு நன்றி. ஜனாதிபதி கரங்களை வலுப்படுத்த பாடுபடுவேன். ராஜ்யசபாவை நடத்தை நெறிமுறைகளை நிச்சயம் நிலைநாட்டுவேன் என்றார்.
மாநில செய்திகள்

சென்னையில் ஆசிரியர்கள்- அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்; 22-ந்தேதி வேலைநிறுத்தம் என்று அறிவிப்பு



ஆகஸ்ட் 06, 2017, 05:15 AMபுதிய ஊதியக்குழுவை அமல்படுத்தக்கோரி சென்னையில் ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 22-ந்தேதி வேலைநிறுத்தத்தில் ஈடுபட இருப்பதாகவும் அறிவித்துள்ளனர்.
சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும், 8-வது ஊதியக்குழு பரிந்துரையை அமல்படுத்த வேண்டும், அதுவரை இடைக்கால நிவாரணமாக 20 சதவீதம் வழங்க வேண்டும், சிறப்பு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு ஆசிரியர்கள் சங்க கூட்டு நடவடிக்கைக்குழு (ஜாக்டோ) மற்றும் அரசு ஊழியர்கள் சங்கம் (ஜியோ) சார்பில் சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தின்போது ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் பெ.இளங்கோவன், ஜெ.கணேசன் ஆகியோர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கோரிக்கைகளின் மீது பாராமுகமாக இருந்தால் கடுமையான போராட்டங்களுக்கு தயாராக வேண்டிய நிலை உருவாகும். ஜாக்டோ-ஜியோ கூட்டமைப்பு நிர்வாகிகளை அழைத்து பேசி கோரிக்கைகளை நிறைவேற்றுவதற்கு உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்க வேண்டும். இல்லையென்றால் ஏற்கனவே எடுத்த தீர்மானங்கள் அடிப்படையில் வருகிற 22-ந்தேதி ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தம் நடத்தப்படும்.

அன்றையதினம் பள்ளி-கல்லூரிகள், அரசு அலுவலகங்கள் மூடப்படும். அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் யாரும் வேலைக்கு செல்ல மாட்டார்கள். இதன்பின்னரும் அரசு கோரிக்கைகளை நிறைவேற்ற முன்வரவில்லை என்றால் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோம். அதில் இருந்து யாரும் பின்வாங்கமாட்டோம்.

இந்த போராட்டத்துக்கான ஆயத்த மாநாடுகளை மாவட்ட தலைநகரங்களில் வருகிற 26 மற்றும் 27-ந்தேதி நடத்த உள்ளோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.

இதற்கிடையே ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்பதற்காக வந்த ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் சென்னை மற்றும் புறநகரில் பல்வேறு இடங்களில் போலீசாரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். சில இடங்களில் அவர்களை போலீசார் கைது செய்தனர்.

Saturday, August 5, 2017

சனி மகாபிரதோஷத்தின் 17 பலன்கள்!

மு.ஹரி காமராஜ்

சனி மகாபிரதோஷம் சகல வினைகளையும் போக்கும்..

1. ஒவ்வொரு மாதமும் வளர்பிறை மற்றும் தேய்பிறை திரயோதசி தினங்களில் மாலை 4.30 முதல் ஆறு மணிவரை உள்ள காலம் பிரதோஷ காலம் எனப்படுகிறது. அன்றுதான் ஈசன் ஆலகால விஷத்தை உண்டு அகிலத்தை காத்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த திரயோதசி திதி சனிக்கிழமைகளில் வந்தால் சனி மகாபிரதோஷம் என்று சொல்லப்படுகிறது.

2. பிரதோஷ காலம் என்பது மாலை 4 மணியில் இருந்து 6.30 வரை என சொல்கிறார்கள். இந்த நேரத்தில் சிவாலயம் சென்று வலம் வந்து ஈசனைத் தரிசிக்க வேண்டும். வசதி உள்ளவர்கள் இறைவனுக்கும் நந்திக்கும் அபிஷேக ஆராதனைகள் செய்தால் நல்லது.

3. பிரதோஷ தரிசனம் காணும்வரை உணவு தவிர்த்து முழு விரதம் இருக்க வேண்டும். சனி மகாபிரதோஷ நாளில் இருக்கும் விரதம் ஆயிரம் சாதாரண தினப் பிரதோஷப்பலனைத் தரும் என்பது ஆன்மிக நம்பிக்கை.

4. பிரதோஷ வேளையில் நந்தியம்பெருமானுக்கு அருகம்புல் அல்லது வில்வ மாலை சார்த்தி நெய் விளக்கு ஏற்றி பச்சரிசி வெல்லம் வைத்து பூஜை செய்யலாம்.

5. பிரதோஷ நேரத்தில் மட்டும் சிவபெருமானை வலம் வரும் விதத்தை சோமசூக்தப் பிரதட்சணம் என்பர். சோமசூக்தம் என்றால் அபிஷேக நீர்விழும் கோமுகி தீர்த்தத் தொட்டியை குறிக்கிறது. இந்தத் தொட்டியை மையமாக வைத்து வலம் இடமான இடவலமாக மேற்கொள்ளப்பெறும் பிரதட்சண முறையே பிரதோஷப் பிரதட்சணம் எனப்படுகிறது.

6. நித்தியப் பிரதோஷம், பட்சப் பிரதோஷம், பிரளயப் பிரதோஷம் என இருபது வகை பிரதோஷங்கள் உள்ளதாக புராணங்கள் கூறுகின்றன.

7. சனிக்கிழமை பிரதோஷ காலங்களில் ஈசனை தரிசிப்பதால், சகல பாவங்களும் விலகி, புண்ணியம் சேரும்; சகல செளபாக்கியங்களும் உண்டாகும்; இந்திரனுக்கு சமமான புகழும் செல்வாக்கும் கிட்டும்; அன்று செய்யப்படும் எந்த தானமும் அளவற்ற பலனைக் கொடுக்கும். பிறப்பே இல்லாத முக்தியை கொடுக்கும் என்றெல்லாம் புராணங்கள் தெரிவிக்கின்றன.

8. சனிப்பிரதோஷ நேரத்தில் எல்லா தேவர்களும் ஈசனின் நாட்டியத்தை காண ஆலயம் வருவார்கள் என்பது நம்பிக்கை. எனவே, ஆலயத்தில் உள்ள மற்ற சந்நிதிகள் திரையிடப்பட்டு இருக்கும். பிரதோஷ நேரத்தில் மற்ற ஆலயங்களுக்குச் செல்லக் கூடாது என்பதும் ஒரு ஐதீகம்.



9. நந்தியெம்பெருமானின் கொம்புகளுக்கிடையே சிவன் ஆடும் நேரமே பிரதோஷம் என்பதால் அன்று நந்தியின் கொம்புகளுக்கிடையே சிவனை தரிசிப்பது சிறப்பு தரும்.

10. சிவபெருமான் ஆலகால விஷம் உண்ட மயக்கத்தில் சக்தியின் மடியில் சயனிக்கும் கோலத்தில் இருக்கும் சுருட்டப்பள்ளி பள்ளிகொண்டீஸ்வர் கோயிலில் சனிப்பிரதோஷ வழிபாடு செய்வது பொருத்தமானது. பஞ்செட்டி அருகே அமைந்துள்ள வாலீஸ்வரர் ஆலயத்தில் பிரதோஷ வழிபாடு செய்வது இன்னமும் சிறப்பானது என்கிறார்கள். இங்கு உறையும் சிவன் ஆலகாலத்தை ஏற்று கருமையாக இருக்கிறார், அவருக்குப் பால் அபிஷேகம் செய்யும்போது பால் கருநீலமாக வழிவதை இங்கு காணலாம்.

11.பிரதோஷ நேரத்தில் நமசிவாய மந்திரம் ஜபிப்பதால், நமது முன்னோர்கள், ஏழு தலைமுறையினர் செய்த பஞ்சமாபாதகங்கள் யாவும் அழிந்துவிடும் எனப்படுகிறது.

12. மற்ற பிரதோஷ நேரத்தில் செய்யப்படும் தரிசனம், தானம், ஜெபதபங்கள் யாவுமே சனிப்பிரதோஷ நாளில் செய்யப்படும்போது பல மடங்கு பலன்களைத் தரும் என்பது புராணங்கள் தெரிவிக்கும் தகவல்.

13. பிரதோஷ நேரத்துக்குள் சிவனுக்கான அபிஷேக ஆராதனைகள், தரிசனம், புறப்பாடு என எல்லாவற்றையும் செய்துவிட வேண்டும். மாலை ஆறரை மணியுடன் பிரதோஷ காலம் முடிவதால் அதன்பின்னர் செய்யும் வழிபாடுகள் அந்திபூஜைதான் என்பதால் அது பிரதோஷ வழிபாடு ஆகாது.

14. பிரதோஷ காலத்தில் சக்தியோடும், முருகப்பெருமானோடும் இணைந்த சோமாஸ்கந்த மூர்த்தியாகத் தரிசித்தால் குடும்ப உறவுகள் மேம்படும். இந்த நேரத்தில் நடராஜ மூர்த்தியை வழிபட்டால் வாழ்வில் முன்னேற்றத்தை காணலாம்.

15. சனிப்பிரதோஷத்தில் நந்தியை வணங்கி, வழிபட்டால் சனி பகவானால் உண்டாகும் சகல துன்பங்களும் விலகிப் போகும்.

16. அன்றைய நாள் முழுக்க உண்ணாமல் இருந்து சிவதரிசனம் முடித்தபிறகு உப்பு, காரம்,புளிப்பு சேர்க்காமல் உண்பது வழக்கம். சாதாரண பிரதோஷ நேரத்தில் சோம சூக்த பிரதட்சணம் செய்வதால், ஒரு வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும், சனிப் பிரதோஷ நேரத்தில் ஈசனை வழிபாடு செய்தால், ஐந்து வருடத்துக்கு ஈசனை வழிபாடு செய்த பலனும் கிடைக்கும் என்கிறார்கள்.


17. ஏகாதசியன்று ஆலகாலம் உண்ட ஈசன் துவாதசி முழுவதும் மயக்க நிலையில் இருந்தார். பின்னர் திரயோதசி நாளில் பகலும் இரவும் சந்திக்கும் சந்தியா வேளையில் எழுந்து, சூலத்தை சுழற்றி டமருகத்தை ஒலித்து சந்தியா நிருத்தம் எனும் நாட்டியம் ஆடினார். பிரளய தாண்டவம் எனப்படும் இந்த நாட்டியம் ஆக்கல், அழித்தல், காத்தல், மறைத்தல், அருளல் எனும் ஐவகை தொழிலையும் ஊக்கப்படுத்தும் விதமாக ஈசனால் ஆடப்பட்டது என்கிறார்கள். நாளைய தினம் சனி மகாபிரதோஷம் வருகிறது. அன்பர்கள் ஆலயம் சென்று ஈசனை தரிசித்து அருள்பெற வேண்டுகிறோம்.
vikatan
அ.தி.மு.க பொதுச் செயலாளர் யார்? ஆர்.டி.ஐ கேள்விக்கு அதிர்ச்சி பதில்

பிரேம் குமார் எஸ்.கே.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர், அ.தி.மு.க பொதுச் செயலாளராக தேர்வுசெய்யப்பட்டார் சசிகலா. சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தற்போது சிறைத் தண்டனையில் உள்ளார்.




அதன் பின்னர் அந்த கட்சி உடைந்து தற்போது மூன்று அணியாக உள்ளது. இந்நிலையில், சென்னை தியாகராய நகரை சேர்ந்த சுவாமிநாதன் கல்யாணசுந்தரம் என்பவர் ஆர்.டி.ஐ மூலம் தேர்தல் ஆணையத்திடம் கேள்வி கேட்டிருந்தார். அதில், தேர்தல் ஆணையத்தை பொறுத்த வரை அ.தி.மு.க. பொதுச் செயலாளர் யார்? துணை பொதுச்செயலாளர் யார் என்று கேள்விகள் கேட்டிருந்தார். இந்த கேள்விகளுக்கு பதிலளித்துள்ள தேர்தல் ஆணையம், ''அ.தி.மு.க கட்சியில் உட்கட்சி விவகாரங்கள் நடைபெற்று வருகிறது. கட்சியின் பொதுச் செயலாளர் இன்னும் நிலுவையில் தான் உள்ளது'' என்று கூறப்பட்டுள்ளது.

NEWS TODAY 25.01.2026