Sunday, August 6, 2017

சான்றிதழ்களை ஒப்படைக்க கோரி டாக்டர்கள் மனு அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு

பதிவு செய்த நாள்06ஆக
2017
02:29


சென்னை:அரசு மருத்துவமனைகளில், இரண்டு ஆண்டுகள் பணியாற்றுவதற்காக, சான்றிதழ்களை அரசு வசம் வைத்து கொள்வதை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில், 40க்கும் மேற்பட்ட டாக்டர்கள் மனுக்களை தாக்கல் செய்துள்ளனர். மனுக்களுக்கு பதிலளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப, உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னையைச் சேர்ந்த, டாக்டர் ராஜ் சாந்தன் தாக்கல் செய்த மனு:

முதுநிலை மருத்துவப் படிப்பில் சேரும் போது, என்னிடம் உத்தரவாதம் பெறப்பட்டது.
'குறைந்தது இரண்டு ஆண்டுகள், அரசு மருத்துவமனையில் பணியாற்ற வேண்டும்; இரண்டு ஆண்டுகளை பூர்த்தி செய்ய முடியவில்லை என்றால், 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும்'
என்பதே நிபந்தனை.

இதை ஏற்று, முதுநிலை மருத்துவப் படிப்பில் சேர்ந்தேன். ஸ்டான்லி மருத்துவக் கல்லுாரி, 'டீன்' வசம், சான்றிதழ்கள் ஒப்படைக்கப்பட்டன. படிப்பை முடித்த பின், அரசு வேலையில் சேர தயாராக இருந்தேன்.இதற்கிடையில், உயர் படிப்பை தொடர விரும்பினேன். அசல் சான்றிதழ்கள் அனைத்தும், 'டீன்' வசம் இருந்ததால், அவற்றை திருப்பி தரும்படி கேட்டேன்.

'இரண்டு ஆண்டுகள் முடியும் வரை, சான்றிதழ்களை தர இயலாது' என, கூறினார். தமிழக அரசு, 2016 பிப்ரவரியில் பிறப்பித்த அரசாணைப்படி, அதிகாரிகள் செயல்படுவதாக தெரியவந்தது.
இந்த அரசாணை, சட்ட விரோதமானது. இதனால், மருத்துவ மாணவர்கள் மேற்படிப்பை தொடர முடியாத நிலை ஏற்பட்டுஉள்ளது. எனவே, என் சான்றிதழ்கள் அனைத்தையும் தரும்படி, அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும். தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை, ரத்து செய்ய வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதே போல, 40க்கும் மேற்பட்ட டாக்டர்களும், மனுக்கள் தாக்கல் செய்தனர். மனுக்கள் எல்லாம், நீதிபதி ரவிச்சந்திரபாபு முன், விசாரணைக்கு வந்தன. மனுதாரர்கள் சார்பில், வழக்கறிஞர் தங்கசிவன் ஆஜராகி, ''இரு ஆண்டுகள் பணியாற்ற வேண்டும்;

இல்லையென்றால், 20 லட்சம் ரூபாய் செலுத்த வேண்டும் என்பது சட்ட விரோதமானது,'' என்றார்.மனுக்களுக்கு பதில் அளிக்கும்படி, அரசுக்கு, 'நோட்டீஸ்' அனுப்ப உத்தரவிட்டு, விசாரணையை, வரும், 11க்கு, நீதிபதி தள்ளி வைத்தார்.

No comments:

Post a Comment

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள்

உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம்-முரண்பாடுகள் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் ஒட்டுமொத்த ஓய்வூதியம் முழுமையும் அரசின் பங்களிப்பாக மட்டுமே இர...