Tuesday, August 8, 2017

பணி நேரம் முடிந்ததாக பாதியில் கிளம்பிய பைலட்டுகள்


பதிவு செய்த நாள்07ஆக
2017
22:04


சென்னை: கொச்சி விமான நிலையத்தில் நேற்று முன்தினம் மாலை, மோச மான வானிலை நிலவியதால், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம் சென்னைக்கு திருப்பி விடப்பட்டது. 

அந்த விமானத்தின், பைலட் மற்றும் ஊழியர் கள், தங்கள் பணிநேரம் முடிந்துவிட்டதாக அறிவித்து, விமானத்தை இயக்காமல் சென்றதால், அந்த விமான பயணியர் பெரும் அவதிக்குஉள்ளாகினர்.

சவுதி அரேபியா தலைநகர், ரியாத்தில் இருந்து, 292 பேருடன், 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, கேரள மாநிலம், கொச்சி சென்று கொண்டிருந்தது. 

கொச்சி விமான நிலையத்தை நெருங்கியபோது, அப்பகுதியில் பலத்த மழை பெய்ததால், விமானம், சென்னைக்கு திருப்பி விடப்பட்டு, மாலை, 6:00 மணிக்கு, சென்னையில் தரையிறங்கியது. இரவு, 8:00 மணிக்கு, கொச்சி விமான நிலையத்தில் வானிலை சீரானது. ஆனால், விமான பைலட் மற்றும் ஊழியர்கள், தங்கள் பணி நேரம் முடிந்து விட்டதாகக் கூறி, விமானத்தை இயக்க மறுத்து விட்டனர். இதனால் விமானம் புறப்படுவதில், தாமதம் ஏற்பட்டது. பயணியர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்; விமான நிறுவனத்தினர், பயணியரை சமாதானப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர்.நேற்று காலை, 8:20 மணிக்கு, மற்றொரு, 'சவுதி ஏர்லைன்ஸ்' விமானம், ஜெட்டாவில் இருந்து, சென்னை வந்தது. கொச்சி விமானத்தை இயக்குமாறு, சவுதி ஏர்லைன்ஸ் விமான பைலட்டுகளிடம் கோரிக்கை வைக்கப்பட்டது; அவர்களும் சம்மதித்தனர்.இதையடுத்து, 16 மணி நேரம் தாமதமாக, பயணியர், கொச்சி சென்றடைந்தனர்.

பல்கலை குறைதீர் கூட்டம்: 100 பேருக்கு உடனடி தீர்வு : துணைவேந்தர் முன் கதறி அழுத மாணவி

பதிவு செய்த நாள்07ஆக
2017
23:01




மதுரை: மதுரை காமராஜ் பல்கலை தொலைநிலை கல்வி திட்டம் சார்பில், முதன்முறையாக நடந்த மாணவர்களுக்கான குறைதீர் கூட்டத்தில், 100 பேருக்கு உடனடி சான்றிதழ்கள் அளித்து தீர்வு காணப்பட்டது.

இப்பல்கலையில் 2 ஆண்டுகளுக்கு மேலாக துணைவேந்தர் பணியிடம் காலியாக இருந்ததால், தொலைநிலை கல்வி மையங்களில் படித்த மாணவர் பலருக்கு மதிப்பெண் உட்பட பல்வேறு சான்றிதழ்கள்முறையாக வழங்குவதில் தேக்கம் ஏற்பட்டது. இதை தவிர்க்க மாணவர்கள் குறைதீர் கூட்டம் நடத்த துணைவேந்தர் செல்லத்துரை உத்தரவிட்டார்.இதன்படி முதல் கூட்டம் அவரது தலைமையில் நடந்தது. டில்லி, மும்பை, கோவை, மதுரை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.பெரும்பாலும், 2013ல் இருந்து மதிப்பெண் சான்றிதழ், பட்டம் மற்றும் பட்டய சான்றிதழ், நேரடி மாணவர் சேர்க்கைசான்றிதழ் வழங்காதது, இணையான சான்றிதழ் பெற முடியாதது, கட்டண பிரச்னை, பெயர் திருத்தம் குறித்து 250 மனுக்கள் அளிக்கப்பட்டன. துறைகள் வாரியாக துணை பதிவாளர்கள், கண்காணிப்பாளர்கள் விசாரணை நடத்தி 100 பேருக்கு உடனடியாக சான்றிதழ் அளிக்கப்பட்டன.

வாட்ஸ் ஆப்... பேஸ்புக்.... : செல்லத்துரை கூறுகையில்,"படித்தவர் வராதபட்சத்தில் அவரது உறவினர் வந்தாலும் சான்றிதழ் வழங்கப்பட்டது. நேரடி மாணவர் சேர்க்கை மூலம் தேர்வு
எழுதியவர்களுக்கு அவர்கள் அசல் சான்றிதழ் சமர்ப்பித்தால் மதிப்பெண், டிகிரி சான்றிதழ் அளிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பங்கேற்றவர் 'வாட்ஸ் ஆப்' மற்றும் 'பேஸ்புக்'கில் தகவலை பதிவிட்டால், அடுத்த கூட்டத்தில் பலர் பயனடைய வாய்ப்புள்ளது," என்றார்.

இயக்குனர் கலைச்செல்வன், தேர்வாணையர் ஆண்டியப்பன், கூடுதல் தேர்வாணையர் விஜயதுரை, சீனியர் துணை பதிவாளர் முத்தையா, துணை பதிவாளர் நாகசுந்தரம், நிதி அதிகாரி சலீமா, துணை இயக்குனர்கள் இந்திராணி, இளையராஜா, முத்துக்குமார், பி.ஆர்.ஓ., அறிவழகன் மற்றும் பலர் பங்கேற்றனர்.

பெயர் மாறிய டில்லி மாணவர்...

காரியாபட்டி ஜோதி என்ற மாணவி 2008ல் படித்த இளநிலை பட்டம் முடித்து டி.இ.டி., தேர்வு எழுத அதற்கான 'இணையான சான்றிதழ்' கேட்டு விண்ணப்பித்தும் கிடைக்கவில்லை. இதனால் வேலைவாய்ப்பு பாதித்தது. பல்கலையே இதற்கு காரணம் என கூறி கண்ணீர் விட்டு கதறி அழுது, 'தனக்கு சான்றிதழே வேண்டாம்,' என கோபத்தில் தெரிவித்தார். அவரை துணைவேந்தர் சமாதானம் செய்து உரிய நடவடிக்கைக்கு உத்தரவிட்டார்.

டில்லி நித்தின், "தனக்கு வழங்கப்பட்ட எம்.சி.ஏ., சான்றிதழில் எனது பெயர் 'லித்தின்'," என இருப்பதாக தெரிவித்தார். அது உடனடியாக திருத்தம் செய்யப்பட்டது.

கோவை சமீர், தனது மனைவி பரீதா எம்.பில்., முடித்தும் 'வைவா'விற்கு அழைக்கப்படவில்லை என தெரிவித்தார். விசாரணையில் அவரது 'தீசிஸ்' மதிப்பீடு செய்யாதது தெரிய வந்தது. கையோடு அவர் கொண்டு வந்த மற்றொரு பிரதியை சமர்ப்பித்து, உடன் மதிப்பீடு செய்ய உத்தரவிடப்பட்டது.
தபால் நிலையத்தில் ரூ.50க்கு சேமிப்பு கணக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:46

திண்டுக்கல்:திண்டுக்கல் தபால்நிலைய முதன்மை கண்காணிப்பாளர் ராமலிங்கம் கூறியதாவது: தபால் நிலையத்தில் ரூ.50 செலுத்தி கணக்கு துவங்கினால், பாஸ்புக் மற்றும் ஏ.டி.எம்., கார்டு பெறலாம். பணம் எடுக்க கட்டுப்பாடுகள், கட்டணம் கிடையாது. குறைந்த வைப்பு தொகை ரூ.50, செக் புத்தகத்துடன் மினிமம் பேலன்ஸ் ரூ.500. எந்த ஏ.டி.எம்.,மிலும் பணம் எடுத்துக் கொள்ளலாம். சேமிப்பு கணக்குகளுக்கு 4 சதவீத வட்டி வழங்கப்படும். புதிதாக கணக்கு துவங்க ரேஷன், ஆதார், பான்கார்டு போதும் என்றார்.



சூடு பிடிக்கும் ராமமோகன ராவ் வழக்கு

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:39


முன்னாள் தலைமை செயலர், ராம மோகன ராவின் மகனிடம், வருமான வரித்துறையினர், சில தினங்களுக்கு முன் விசாரணை மேற்கொண்டதன் மூலம், ராவ் வழக்கு மீண்டும் சூடு பிடித்துஉள்ளது.

மணல் கான்ட்ராக்டர் சேகர் ரெட்டியின் வீட்டில், 132 கோடி ரூபாய் ரொக்கம் மற்றும், 177 கிலோ தங்கம் ஆகியவற்றை, வருமான வரித்துறையினர், 2016, டிசம்பரில் பறிமுதல் செய்தனர். அந்த சோதனையில் சிக்கிய ஆவணங்களின் அடிப்படையில், ராம மோகன ராவ் வீட்டிலும், தலைமைச் செயலகத்தில் உள்ள அவரது அறையிலும் சோதனை நடத்தினர்.

அது தொடர்பாக, ராவ் மற்றும் விவேக்கிடம், வருமான வரித்துறை விசாரணை மேற்கொண்டது. இந்நிலையில், சேகர் ரெட்டி மற்றும் விவேக்கிடம் மீண்டும் விசாரணை நடந்துள்ளது.

இது குறித்து, வருமான வரித்துறையினர் கூறியதாவது: சேகர் ரெட்டி, ஒரு வாரத்திற்கு முன், நேரில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார். அவரிடம், விஜயபாஸ்கரின் மணல் குவாரி தொடர்பாகவும் விசாரணை நடந்தது. ரெட்டியை போல், சி.பி.ஐ., வழக்கில் கைதான, அவரது நண்பர்கள் ரத்தினம், ரவிச்சந்திரன் மற்றும் ராவின் மகன் விவேக் ஆகியோரிடம், சமீபத்தில் விசாரணை நடத்தி உள்ளோம். இந்த வழக்கின் விசாரணை, இறுதிக் கட்டத்தை நெருங்குகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
மருத்துவ கவுன்சிலிங் எப்போது
பதிவு செய்த நாள்07ஆக
2017
22:21


நாடு முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லுாரிகளில் 15 சதவீத, எம்.பி.பி.எஸ்., - 

பி.டி.எஸ்., இடங்கள், அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு தரப்பட்டுள்ளன. இதன்படி 4,100 எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான முதற்கட்ட கவுன்சிலிங், ஜூலை, 13, 14ம் தேதிகளிலும் மீதமுள்ள இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், ஆக., 5லும் நடந்து முடிந்தது. நிகர்நிலை பல்கலைகளில் உள்ள மருத்துவ படிப்புகளுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நேற்றுடன் முடிவடைந்தது.இந்நிலையில் தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகள் மற்றும் சுயநிதி கல்லுாரிகளில் உள்ள, 5,774 மருத்துவ படிப்பு இடங்களுக்கான கவுன்சிலிங், எப்போது நடக்கும் என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அதிகாரிகள் கூறியதாவது:மாநில பாடத்திட்ட மாணவர்களுக்கு வழங்கிய, 85 சதவீத இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இந்த மனு, இன்று விசாரணைக்கு வர வாய்ப்பு உள்ளது. அதில், சாதமாக தீர்ப்பு வந்தால், கவுன்சிலிங் ஓரிரு நாட்களில் துவங்கப்படும்.அதேபோல் இந்தாண்டு 'நீட்' தேர்வுக்கு விலக்கு அளிக்கும் மசோதாவுக்கு, ஜனாதிபதி ஒப்புதல் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி வரும் 31ம் தேதிக்குள் கவுன்சிலிங்கை முடிக்க வேண்டும். இதனால், இந்த வாரத்தில், முதற்கட்ட கவுன்சலிங் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
நர்சிங்., பி.பார்ம்., விண்ணப்பம்

பதிவு செய்த நாள்07ஆக
2017
22:20



சென்னை: மருத்துவம் சார் படிப்புகளுக்கு விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது.

தமிழகத்தில் பி.எஸ்சி., நர்சிங்; பி.பார்ம்., உள்ளிட்ட ஒன்பது மருத்துவம் சார் படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கு அரசு, தனியார் கல்லுாரிகளில் 12 ஆயிரம் இடங்களுக்கு மேல் உள்ளன. இந்த ஆண்டு சேர்க்கைக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று முதல் துவங்கியது.

விண்ணப்ப படிவங்களை, 22 அரசு மருத்துவ கல்லுாரிகளிலும் www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளத்திலும் 23ம் தேதி வரை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், ஆக., 24க்குள் சென்னை, கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்ககத்துக்கு வந்து சேர வேண்டும்.'விண்ணப்பங்கள்
பரிசீலிக்கப்பட்டு, செப்., 6ல் தகுதி பட்டியல் வெளியிடப்படும். செப்டம்பர் இரண்டாம் வாரத்தில் முதற்கட்ட கவுன்சிலிங் நடைபெறும்' என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

5 கி.மீ., அப்பாலே டாஸ்மாக் : வழிகாட்டுகிறது புதுக்கோட்டை

பதிவு செய்த நாள்07ஆக
2017
19:53


புதுக்கோட்டை: புதுக்கோட்டையில், டாஸ்மாக் கடையே இல்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், குடிமகன்கள், மதுகுடிக்க, ஊருக்கு வெளியே, 15 கி.மீ., செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. தொடர் போராட்டங்களால், இதை சாதித்துள்ள பெண்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள, 180 மதுக்கடைகளில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் மட்டும், 15 டாஸ்மாக் மதுக்கடைகள் செயல்பட்டு வந்தன.

90 கடைகள் மூடல் : 'நாடு முழுவதும், மாநில நெடுஞ்சாலை, தேசிய நெடுஞ்சாலைகளை ஒட்டி இயங்கி வரும் மதுக்கடைகளை உடனடியாக மூட வேண்டும்' என்ற உச்ச நீதிமன்ற உத்தரவின் பயனால், புதுக்கோட்டை மாவட்டத்தில் செயல்பட்ட கடைகளில், 90 கடைகள் மூடப்பட்டன.
இதில், புதுக்கோட்டை நகராட்சி பகுதியில் செயல்பட்டு வந்த, 15 கடைகளில், 14 கடைகள் அடக்கம். அரிமளம் சாலையில், அன்னச்சத்திரம் பகுதியில் மட்டும் ஒரு மதுக்கடை, நகராட்சிக்கு எல்லைப்பகுதியில் செயல்பட்டு வந்தது. இந்நிலையில், புதுகை நகரில் மூடப்பட்ட மதுபானக் கடைகளை, நகரைச் சுற்றியுள்ள, பல்வேறு ஊராட்சிகளில் திறக்க மாவட்ட டாஸ்மாக் நிர்வாகம் தீவிர முயற்சி செய்தது. பெண்களின் தொடர் போராட்டங்கள் காரணமாக அவை பலன் அளிக்கவில்லை.

படையெடுப்பு : அன்னசத்திரம் பகுதியில், செயல்பட்ட ஒரே கடையை நோக்கி, நகரிலுள்ள குடிமகன்கள் படை எடுத்தனர். இதனால், அப்பகுதியே தினமும் திருவிழாக் கூட்டம் போல காட்சியளித்தது. குடிமகன்களால், பல்வேறு தொல்லைகளும் பொதுமக்களுக்கு ஏற்பட்டது.

இதனால், அந்த கடையையும் மூட வேண்டும் என்று கலெக்டரிடம் மனு அளித்தும், நடவடிக்கை இல்லை. இதையடுத்து, பெண்கள் தொடர் போராட்டம் நடத்தினர். இதன் பயனாக, ஜூலை 31ல் கடை மூடுவதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், கடையை தொடர்ந்து நடத்த, டாஸ்மாக் நிர்வாகம் முயன்றது. பெண்கள் மீண்டும் போராட்டத்தில் இறங்கியதால், புதுக்கோட்டை நகரில் செயல்பட்டு வந்த ஒரு கடையும், 1ம் தேதியோடு மூடப்பட்டது. தற்போது புதுக்கோட்டை நகராட்சியில் மதுக்கடையே இல்லை.

கள்ள சந்தை : இதனால், புதுக்கோட்டை நகர குடிமகன்கள், மது குடிக்க, 15 கி.மீ., செல்ல வேண்டியுள்ளது. இது குடிமகன்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியுள்ளது. பலர் அவ்வளவு துாரம் செல்ல வேண்டுமா என, மது குடிப்பதை தவிர்த்து வருகின்றனர். இது பெண்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், புதுக்கோட்டை நகரில், கள்ளச்சந்தையில் மதுபானங்கள் விற்பது அதிகரித்துள்ளது. பலர் வெளியில் இருந்து மதுபாட்டில்களை வாங்கி வந்து, கூடுதல் விலைக்கு விற்று வருகின்றனர்.

NEWS TODAY 26.01.2026