Tuesday, August 15, 2017


சினிமாக்காரர்களால் தமிழகம் நாசமாகிவிட்டது : கோவையில் பா.ம.க., அன்புமணி வேதனை

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:58




கோவை: ''சினிமாக்காரர்களின் ஆட்சியால், 50 ஆண்டுகளாக தமிழகம் நாசமாகி விட்டது. நவீன அரசியலை நோக்கி, நாம் செல்ல வேண்டும். இதற்கு, ஆரோக்கியமான அரசியல் சூழல் உருவாக வேண்டும்,'' என பா.ம.க., இளைஞரணி தலைவர் அன்புமணி தெரிவித்தார்.

கோவை விமான நிலையத்தில் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: பவானி ஆற்றின் உபரி நீராக, 20 முதல் 100 டி.எம்.சி., தண்ணீர் ஒவ்வொரு ஆண்டும் காவிரியில் இணைந்து, கடலில் வீணாக கலக்கிறது. அதில் 1.2 டி.எம்.சி., தண்ணீரை வாய்க்கால் வாயிலாக திருப்பினால் போதும்; 701
நீர் நிலைகளை நிரப்ப முடியும்; நிலத்தடி நீர் மட்டம் உயரும்.காரமடை காளிங்கராயன் திட்டம் குறுகியது; 'பம்ப்பிங்' செய்து தண்ணீர் எடுப்பது சாத்தியமில்லை; தொழில்நுட்ப பிரச்னை ஏற்படும்; அவிநாசி - அத்திக்கடவு திட்டமே சிறந்தது.காமராஜர் காலத்தில் திட்ட மதிப்பீடு, 10 கோடி ரூபாயாக இருந்தது; இப்போது, 3,500 கோடி ரூபாயாக அதிகரித்திருக்கிறது. மதிப்பீடு அதிகரித்திருந்தாலும், உலக வங்கியிடம் கடன் வாங்கியாவது செய்ய வேண்டும். இத்திட்டத்தை நிறைவேற்றாவிட்டால், கொங்கு மண்டல இளைஞர்களை திரட்டி, போராட்டம் நடத்துவோம்.

கடந்தாண்டு மருத்துவ கல்லுாரிகளில் ஒதுக்கப்பட்ட 3,400 'சீட்'களில், 3,300 'சீட்' சமச்சீர் பாடத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைத்தது. 'நீட்' தேர்வால் 95 முதல் 98 சதவீதம் சி.பி.எஸ்.இ., முறையில் படித்த மாணவர்களுக்கும், 2 முதல் 5 சதவீத இருக்கையே சமச்சீர் மாணவர்களுக்கும் கிடைக்கும். நடப்பாண்டு, 9 லட்சம் மாணவர்கள் சமச்சீர் முறையிலும், 16 ஆயிரம் மாணவர்களே சி.பி.எஸ்.இ., முறையிலும் படித்திருக்கின்றனர்.

 குறைந்தபட்சமாக, அரசு மருத்துவ கல்லுாரி இருக்கையை நிரப்ப மட்டும் விலக்கு அளிக்க வேண்டும்.தமிழக அரசு திவாலாகி விட்டது; அ.தி.மு.க.,வில் உள்ள மூன்று அணிகளும் கொள்ளையர் கூடாரமாக உள்ளது. அவர்களால், தமிழர்களுக்குதான் பாதிப்பு. கல்வித்துறையில் ஊழல் நடப்பதாக குற்றச்சாட்டு கூறினேன்.விவாதிக்க அழைப்பு விடுத்தார், கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். நேரம் ஒதுக்கி,இடம் ஏற்பாடு செய்து, அழைப்பு விடுத்தேன்; அமைச்சர் வரவில்லை. ஆரோக்கிய அரசியல் உருவாக வேண்டும்; அத்தகைய கலாசாரத்தை ஏற்படுத்த வேண்டும். பள்ளி கல்வித்
துறையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டும்.ஸ்டாலினுக்கும் அழைப்பு விடுத்திருக்கிறேன். 50 ஆண்டுகளாக திராவிட ஆட்சியில் என்ன செய்திருக்கிறார்கள் என அவர் சொல்லட்டும். என்னென்ன சீரழிவு நடந்திருக்கிறது; இனி என்ன செய்ய வேண்டுமென, நான் சொல்கிறேன். நவீன அரசியலை நோக்கி, நாம் செல்ல வேண்டும்.அரசியலுக்கு யார் வேண்டுமானாலும் வரலாம். சினிமாக்காரர்களின் ஆட்சியால், 50 ஆண்டுகளாக தமிழகம் நாசாமாகி விட்டது; கடனால் நம் மாநிலம் தத்தளிக்கிறது. தமிழகத்துக்கு நல்ல நிர்வாகி; இளைஞர்கள்; படித்தவர்கள் தேவை.

இரு கட்சிகளுக்கும் நீர் மேலாண்மை தெரியாது. அவர்களுக்கு தெரிந்தது இலவச பொருட்கள் வழங்குவது; சாராயம் வழங்குவது; 'டிவி'யில் தொடர் பார்க்க வைப்பது என, மக்களை அடிமையாக வைத்திருக்கின்றனர்.இலவச பொருட்கள் வழங்குவதற்கு பதில், கல்வியில் முதலீடு செய்யுங்கள். ஒரு மாதம் பெய்யும் மழையை, 11 மாதங்கள் சேமித்து வைத்து, பயன்படுத்த பழக வேண்டும்.இவ்வாறு அன்புமணி கூறினார்.

இன்ஜி., துணை கவுன்சிலிங் நாளை விண்ணப்ப பதிவு

பதிவு செய்த நாள்15ஆக
2017
01:04


சென்னை: அண்ணா பல்கலையில் காலியாக உள்ள இடங்களுக்கு, துணை கவுன்சிலிங்குக்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன. அண்ணா பல்கலைக்கு உட்பட்ட, 518 இன்ஜி., கல்லுாரிகளில், ஆக., 11ல், பொது கவுன்சிலிங் முடிந்தது. இதில், 86 ஆயிரம் இடங்களுக்கு, மாணவர்கள் ஒதுக்கீடு பெற்றனர். இந்த கவுன்சிலிங்கில், 89 ஆயிரம் இடங்கள், மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன. இந்நிலையில், காலி இடங்களில் சேர, பிளஸ் 2 முடித்த மாணவர்களுக்கு, மீண்டும் ஒரு வாய்ப்பு வழங்குவதற்கான, துணை கவுன்சிலிங், வரும், 17ல் நடக்கிறது. இதற்கான விண்ணப்பங்கள், நாளை பெறப்படுகின்றன. தொழிற்கல்வி மற்றும் பொது பாடப்பிரிவுகள் முடித்த, தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மதிப்பெண் சான்றிதழ் உள்ளிட்டசான்றிதழ்களை, உரிய நகல்களுடன் நேரில் எடுத்து வரவேண்டும் என, அண்ணா பல்கலை மாணவர் சேர்க்கை கமிட்டி அறிவித்துள்ளது. கவுன்சிலிங் தொடர்பான கூடுதல் விபரங்களை, தமிழ்நாடு மாணவர் சேர்க்கை கமிட்டியின், www.tnea.ac.in இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

கோட்டையில் முதன்முறையாக கொடியேற்றுகிறார் பழனிசாமி

பதிவு செய்த நாள்15ஆக
2017
00:34


சுதந்திர தின விழாவை ஒட்டி, சென்னை, கோட்டை கொத் தளத்தில், இன்று முதன்முறையாக, முதல்வர் பழனிசாமி, தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்க உள்ளார்.

ஒவ்வொரு ஆண்டும், சுதந்திர தின விழா அன்று, சென்னை செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் உள்ள கொடிக் கம்பத்தில், முதல்வர் தேசியக் கொடியேற்றி, அணிவகுப்பு மரியாதையை ஏற்பது வழக்கம். முதன்முறையாக, முதல்வராகியுள்ள பழனி சாமி, இன்று, கோட்டை கொத்தளத்தில், காலை, 8:30 மணிக்கு, தேசியக் கொடியேற்றி, போலீஸ் அணிவகுப்பு மரியாதையை ஏற்கிறார். அணிவகுப்பில், நல்லெண்ண அடிப்படையில், முதன்முறையாக, ஆந்திர போலீசார் பங்கேற்கின்றனர்.பின், முதல்வர் பழனி சாமி சிறப்புரையாற்றுவார். அப்போது, அவர் முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என, எதிர்பார்க்கப்படுகிறது. வீர தீர செயல் புரிந்த பெண்களுக்கான, கல்பனா சாவ்லா விருது, சிறந்த விவசாயிகளுக்கான விருது உட்பட, பல்வேறு விருது களை, முதல்வர் வழங்குகிறார்.விழாவை ஒட்டி, கோட்டையை சுற்றி, பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது. கோட்டை வளாகம், மின் விளக்கு களால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

- நமது நிருபர் -
சுதந்திர தினத்தை ஒட்டிவடை, பாயாசத்துடன் விருந்து
பதிவு செய்த நாள்15ஆக
2017
00:01

காஞ்சிபுரம்:சுதந்திர தினத்தை ஒட்டி, மாவட்டத்தில் உள்ள முக்கியமான ஆறு கோவில்களில், வடை, பாயாசத்துடன் இன்று மதியம் பொது விருந்து வழங்கப்படுகிறது.காஞ்சிபுரம் மாவட்டத்தில், அறநிலைய துறை கட்டுப்பாட்டில் உள்ள ஆறு கோவில்களில், சுதந்திர தினத்தை ஒட்டி, ஆண்டுதோறும் பொது விருந்து நடைபெறும்.அதன்படி, ஏகாம்பரநாதர் கோவில், வரதராஜப்பெருமாள் கோவில், குமரகோட்டம் முருகன் கோவில், செங்கல்பட்டு சக்திவிநாயகர் கோவில், திருப்போரூர் கந்தசாமி கோவில்.இது மட்டுமல்லாமல், கோவூர் பெருமாள் ஆகிய ஆறு கோவில்களில், இன்று மதியம் அப்பளம், வடை, பொரியல், பாயாசம், மோர் ஆகிய உணவுகளுடன், பொது விருந்து நடைபெறுகிறது.

ரயில்கள் ரத்து

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:56


சென்னை: வடகிழக்கு பிராந்திய ரயில்வேயில், ரயில் பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால், திருவனந்தபுரத்தில் இருந்து, சென்னை, சென்ட்ரல் வழியாக, இன்று மாலை, 5:00 மணிக்கு, கவுஹாத்திக்கு இயக்க வேண்டிய, வாராந்திர எக்ஸ்பிரஸ், ரத்து செய்யப்பட்டு உள்ளது.

தாம்பரத்தில் இருந்து, எழும்பூர் வழியாக, அசாம் மாநிலம், திப்ரூகருக்கு, வரும், 17ம் தேதி இரவு, 9:45 மணிக்கு இயக்கவேண்டிய, வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயிலும் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

சுதந்திர தின விழா: டில்லியில் பலத்த பாதுகாப்பு


பதிவு செய்த நாள்
ஆக 15,2017 06:25



புதுடில்லி: நாட்டின் 71-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, தலைநகர் டில்லி உள்ளிட்ட நாட்டின் முக்கிய நகரங்களில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

டில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தேசியக் கொடியேற்றுவதை முன்னிட்டு, கடுமையான பாதுகாப்பு அரண்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
கிருஷ்ண ஜெயந்தி, சுதந்திர தினம் என அடுத்த கொண்டாட்டங்கள் காரணமாக, டில்லியி்ல் 70 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். டில்லி செங்கோட்டையைச் சுற்றி மட்டும் ஒன்பதாயிரத்து 100 போலீசார் உள்ளிட்டோர் நிறுத்தப்பட்டுள்ளனர்.

செங்கோட்டையைச் சுற்றிலும் நூற்றுக்கும் மேற்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த துப்பாக்கி ஏந்திய வீரர்கள், கமாண்டோக்கள், துணை ராணுவத்தினர் என செங்கோட்டை பல அடுக்கு பாதுகாப்புக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. டில்லி போலீசாரின் 60 மோப்ப நாய்களும் இந்தப் பணிகளில் பங்கேற்றுள்ளன.
பிரதமர் உரையாற்றும் நிகழ்ச்சியில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுத்து முறியடிக்க 25 வாகனங்களில் சிறப்பு அதிரடிப்படையினர் தயார் நிலையில் உள்ளனர்.

பாதுகாப்பு காரணங்களுக்காக, பிரதமர் மோடி உரையாற்றும் பகுதியின் வழியே பாராகிளைடிங், பலூன்கள் பறக்கவிட தடை விதிக்கப்பட்டுள்ளது. டில்லியி்ல் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களில் மதியம் 2 மணி வரை வாகனங்களை நிறுத்தவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

டில்லியில் பிரதமர் மோடி கொடியேற்றுவதைப் போல, அனைத்து மாநில தலைநகரங்களில் முதலமைச்சர்கள் கொடியேற்றுகின்றனர். எனவே, நாடு முழுவதும் முக்கிய நகரங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.

கிருஷ்ண ஜெயந்தி விழா சென்னையில் கொண்டாட்டம்

பதிவு செய்த நாள்14ஆக
2017
23:33


சென்னை நகரில் உள்ள கிருஷ்ணர் கோவில்களில், கிருஷ்ண ஜெயந்தி விழா, உறியடி உற்சவத்துடன் களைகட்டியது.ஆவணி மாதம் தேய்பிறை, அஷ்டமி திதி, ரோகிணி நட்சத்திரம் சேர்ந்த நாள், கிருஷ்ண பரமாத்மாவின் அவதார திருநாள். இந்த நாள், இந்துக்களின் பண்டிகையாக நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது.

சென்னை, சோழிங்கநல்லுார், அக்கரையில் உள்ள இஸ்கான் கோவிலில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று மாலை, 3:00 மணிக்கு கிருஷ்ண யாகம் நடத்தப்பட்டது. இன்று காலை முதல், நள்ளிரவு வரை, சிறப்பு தரிசனம் நடக்கிறது. இரவு, 10:30 மணி முதல், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.சென்னை, கோபாலபுரத்தில் உள்ள, 90 ஆண்டுகள் பழமையான வேணுகோபால சுவாமி கோவிலில், ஜூலை முதல், தினமும் கச்சேரிகள், உபன்யாசங்கள் நடந்து வருகின்றன. கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, நேற்று இரவு, 7:30 மணிக்கு, தாமல் ராமகிருஷ்ணனின், 'கிருஷ்ணன ஜனனம்' சொற்பொழிவு நடந்தது. மேலும் முத்தங்கி சேவை அலங்காரத்துடன், சுவாமி அருள்பாலித்தார்.
சென்னை, கவுடியா மடத்தில், கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இன்று விழா நடக்கிறது. 

சென்னை, மயிலாப்பூர் நந்தலாலாவில், நேற்று முன்தினம் காலை, 7:00 மணிக்கு, கோ பூஜையுடன் விழா துவங்கியது. மாலையில், விஷ்ணு சகஸ்ரநாம பாராயணம் நடந்தது. நேற்று மாலை, கிருஷ்ண ஜனன வைபவம் நடந்தது. 

இன்று, அமிர்தம் கடைதல், குசேலர் வைபவம், உறியடி உற்சவம் நடக்கிறது.இதேபோல, பல்வேறு கிருஷ்ணர் கோவில்களில் மூலவர், உற்சவருக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார வழிபாடுகள் நடந்தன.சென்னை நகரில், பலரதுவீடுகளில் வீதி முதல், பூஜை அறை வரை, கிருஷ்ணர் கால் பாதம் வைத்து அலங்கரித்தனர். - நமது நிருபர் -

NEWS TODAY 27.01.2026