Thursday, August 17, 2017

பலத்த மழையால் சென்னை வந்த 2 விமானங்கள் திருப்பி விடப்பட்டன



மும்பையில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் பலத்த மழையால் தரை இறங்க முடியாமல் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது.

ஆகஸ்ட் 17, 2017, 06:00 AM
ஆலந்தூர்,

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று மாலை பலத்த மழை பெய்தது. இதனால் மும்பையில் இருந்து சென்னை வந்த பயணிகள் விமானம் தரை இறங்க முடியாததால் ஐதராபாத்துக்கு திருப்பி விடப்பட்டது. அதேபோல் தோகாவில் இருந்து சென்னை வந்த சரக்கு விமானமும் தரை இறங்க முடியாமல் திருவனந்தபுரத்துக்கு திருப்பிவிடப்பட்டது.


மேலும் டெல்லி, கொல்கத்தா, மதுரை, புனே, மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டியது மற்றும் சென்னையில் இருந்து புறப்பட்டு செல்ல வேண்டியது என 18 விமானங்கள் அரை மணி நேரத்தில் இருந்து 2 மணி நேரம் வரை தாமதம் ஏற்பட்டது.


சென்னையில் வானிலை சீரானதும் ஐதராபாத், திருவனந்தபுரத்துக்கு திருப்பி விடப்பட்ட 2 விமானங்களும் மீண்டும் சென்னைக்கு திரும்பி வந்து தரை இறங்க அனுமதிக்கப்பட்டன.
தேசிய செய்திகள்

‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கலாம்; மத்திய அரசின் 3 அமைச்சகங்கள் ஒப்புதல்



மருத்துவ படிப்புக்கான ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு இந்த ஆண்டு மட்டும் விலக்கு அளிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக மத்திய மந்திரி நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

ஆகஸ்ட் 17, 2017, 06:00 AM


புதுடெல்லி,


‘நீட்’ தேர்வில் இருந்து தமிழக மாணவர்களுக்கு விலக்கு அளிக்க கோரும் அவசர சட்ட மசோதாவின் வரைவை மத்திய அரசிடம் தமிழக அரசு தாக்கல் செய்தது.

தமிழக அரசின் சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ஜெ.ராதாகிருஷ்ணன் டெல்லி சென்று உள்துறை அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளை திங்கட்கிழமை அன்று சந்தித்து அவர்கள் கேட்ட அனைத்து ஆவணங்களையும் தாக்கல் செய்தார்.

தமிழக அரசின் அவசர சட்டத்தின் வரைவு சட்ட அமைச்சகம், சுகாதாரம், மனிதவள மேம்பாட்டு அமைச்சகங்களின் ஒப்புதலுக்காக அனுப்பப்பட்டது.

மத்திய அரசின் அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் தமிழக அரசின் இந்த அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கலாம் என்றும் மத்திய அரசுக்கு அறிக்கை வழங்கியுள்ளார்.

அரசியல் சட்டத்தில் ‘கல்வி’ பொது பட்டியலில் வருவதால் மாநில அரசுக்கும் கல்வி தொடர்பான அவசர சட்டத்தை பிறப்பிக்க அனைத்து அதிகாரங்களும் உள்ளது என்று அட்டார்னி ஜெனரல் கருத்து தெரிவித்து இருக்கிறார்.

அட்டார்னி ஜெனரல் அறிக்கையை தொடர்ந்து தமிழக அரசின் அவசர சட்டத்துக்கு நேற்று இரவு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்தது.

இதைத்தொடர்ந்து மத்திய சுகாதாரத்துறை, மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகங்களும் தமிழக அரசின் நீட் தொடர்பான அவசர சட்டத்துக்கு ஒப்புதல் வழங்கின.

ஒரேநாளில் 3 அமைச்சகங்கள் ஒப்புதல் வழங்கி இருக்கின்றன. அடுத்து உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.

தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், செயலாளர் டாக்டர் ஜே.ராதாகிருஷ்ணன் மற்றும் சில மூத்த அதிகாரிகள் டெல்லியிலேயே தங்கியிருந்து மத்திய உள்துறை அமைச்சகம், சட்ட அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம் ஆகியவற்றுக்கு சென்று மூத்த அதிகாரிகளை சந்தித்து அவசர சட்டம் தொடர்பான பணிகளை விரைந்து முடிக்க ஆவன செய்து வருகின்றனர்.

அவசர சட்டம் தொடர்பாக உள்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்ததும் ஜனாதிபதியின் ஒப்புதல் பெறப்படும்.

இதன் பிறகு அவசர சட்டம் தொடர்பான அறிவிப்பு தமிழக கவர்னர் மாளிகையில் இருந்து வெளியாகும்.
எவ்வளவு அதிகமோ...அவ்வளவும் ஆபத்து!

2017-08-10@ 17:21:56




நன்றி குங்குமம் டாக்டர்


சென்னையில் உள்ள பிரபல தனியார் உணவகம் ஒன்றுக்குச் சென்றிருந்தேன். ஆர்டர் செய்திருந்த மஷ்ரூம் பிரியாணி கண்களைக் கவரும் வகையில் ‘பளிச்’ நிறத்தோடு சில நிமிடங்களுக்குப் பிறகு பரிமாறப்பட்டது. சாப்பிட்டுவிட்டு கைகளைக் கழுவிய பிறகும், பிரியாணியின் அதீத சிவப்பு நிறம் கையைவிட்டு மறையவில்லை. இது ரசாயன நிறமூட்டிகளின் கைவண்ணமே என்பது புரிந்தது. பஜ்ஜி முதல் பிரியாணி வரை சமீபகாலமாக எல்லா உணவுகளுமே இதுபோல் அதீத நிறத்தோடே தயாரிக்கப்படுகிறது; விற்கப்படுகிறது. மக்களும் அதையே விரும்பி வாங்குகிறார்கள். உணவுகளின் மீது ஏற்றப்படுகிற இந்த செயற்கை நிறம் எந்த அளவுக்கு ஆபத்தானது? உணவியல் நிபுணர் ராதிகாவிடம் பேசினோம்...‘‘இன்றைய அவசர வாழ்வில் எல்லாமே கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று மக்கள் விரும்புகிறார்கள்.

இது கடந்த 50 ஆண்டுகளில் 500 சதவீதம் உயர்ந்திருக்கிறது. அதுதான் நம் உணவிலும் பிரதிபலிக்கிறது. வியாபாரிகளும் அதற்கேற்பவே ரசாயன நிறங்களைக் கொண்டு விற்பனைக்காக உணவுப் பொருட்களைத் தயாரிக்கிறார்கள். இயற்கையில் ஒவ்வொரு உணவுப்பொருளுக்குமே ஒரு பிரத்யேக நிறம் உண்டு. மாம்பழம் என்பது இந்த நிறத்தில்தான் இருக்கும் என்று மக்கள் ஒரு வண்ணத்தை முடிவு செய்து வைத்திருக்கிறார்கள். மக்களின் இந்த மனநிலையைப் பயன்படுத்தித்தான் உணவுப் பொருட்களில் நிறமூட்டிகளைக் கலக்கிறார்கள். நிறமூட்டிகளில் இயற்கையான நிறமூட்டிகள், செயற்கையான ரசாயன நிறமூட்டிகள் என இரண்டு வகைகள் உண்டு. இதில் இயற்கை நிறமூட்டிகளைப் பயன்படுத்தி தயாரிக்கப்படும் உணவுகளை வாங்கிப் பயன்படுத்திக் கொள்ளலாம். தவறு இல்லை.

ஏனெனில் காய், பழம், இலை, பூ போன்றவற்றைப் பயன்படுத்தி இயற்கை நிறமூட்டிகளை எடுக்கிறார்கள். இந்த நிறமூட்டிகள் உணவை வண்ணமயமானதாக மாற்றுவதோடு உணவுப் பொருள் கெட்டுப் போகாமல் தடுப்பதற்கும் உதவுகிறது. மேலும் இந்த இயற்கை வகை நிறமூட்டிகளால் உடலுக்கு எந்த தீங்கும் வருவதில்லை. ஆனால், செயற்கை முறை நிறமூட்டிகள்தான் ஆபத்தானவை. பெட்ரோல், குருடாயில், மரக்கறி, ரசாயனம் போன்றவற்றை பயன்படுத்தியே செயற்கை வகை நிறமூட்டிகளை எடுக்கிறார்கள். இந்த செயற்கை முறை ரசாயனங்கள் கலந்த உணவுகளைத் தொடர்ந்து பயன்படுத்தும்போது, பல்வேறு உடல்நல பாதிப்புகள் ஏற்படுகின்றன. மூளையில் கட்டி, சிறுநீரகக் கோளாறு, கல்லீரல் புற்றுநோய், தைராய்டு கட்டிகள், ஹைப்பர் ஆக்டிவிட்டி, அலர்ஜி, தூக்கமின்மை, நடத்தைக்கோளாறுகள், மரபணு பாதிப்பு போன்ற பல ஆபத்துகள் செயற்கையான நிறமூட்டிகளால் ஏற்படுகிறது.

அதனால் செயற்கை வகை நிறமூட்டிகளால் தயாரிக்கப்பட்ட உணவு பொருட்களை நாம் வாங்கி பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். ஓர் உணவுப்பொருள் இயற்கையான நிறமூட்டியால் தயாரானதா அல்லது செயற்கையான நிறமூட்டியால் தயாரானதா என்பதை நுட்பமாக சென்றெல்லாம் கண்டுபிடிக்க வேண்டியதில்லை. ஓர் உணவுப் பொருள் அதீத நிறத்தோடு பளிச்சென்று இருந்தால் அது ரசாயன நிறமூட்டிகள் கலக்கப்பட்ட உணவு என்பதைப் புரிந்துகொள்ளலாம். அதேபோல், ஓர் உணவுப் பொருளில் எந்த அளவுக்கு நிறம் கொண்டதாக இருக்கிறதோ, அந்த அளவுக்கு ஆபத்தானது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். அது சாதாரண பஜ்ஜியாக இருந்தாலும் சரி, கேக் வகைகளாக இருந்தாலும் சரி, இல்லை இதுபோல் பிரியாணியாக இருந்தாலும் சரி. அதிக நிறம்... ஆபத்துதான்.

உண்ணும் உணவு தரமானதாக, சுகாதாரமானதாக இருக்க வேண்டுமே தவிர கலர்ஃபுல்லாக இருக்க வேண்டியதில்லை. இந்த விழிப்புணர்வு மக்களிடம் அதிகரிக்க வேண்டும். தொடர்ச்சியாக வாங்கக் கூடிய உணவுப்பொருட்களில் சந்தேகம் இருந்தால் தங்களது உணவியல் நிபுணர் அல்லது மருத்துவரிடம் இந்த பிராண்ட் தரமானதுதானா என்றும் கேட்டுத் தெரிந்துகொள்ளலாம். குழந்தைகளுக்கென தயாரிக்கும் பண்டங்களான ஐஸ்கீரிம், சாக்லெட், பிஸ்கட் போன்றவைகளில் அதிக வகையான செயற்கை நிறங்கள் கலக்கப்படுகின்றன என்பதால், அதிக நிறம் கொண்ட உணவுகளை குழந்தைகளுக்கு வாங்கித் தருவதை பெற்றோர் தவிர்க்க வேண்டும். ஓர் உணவுப் பண்டம் வாங்கும்போது அதில் நிறமூட்டிகள் பயன்படுத்தப்பட்டிருந்தால் அதனுடைய விபரத்தைப் பார்த்து வாங்க வேண்டும்.

உணவுப் பண்டத்தை உற்பத்தி செய்யும் நிறுவனங்களும் அதில் கலக்கப்பட்டுள்ள நிறமூட்டிகளின் விபரங்களைத் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். மக்கள் புரிந்துகொள்ளும் வகையிலும் அந்த நிறமூட்டிகளின் விபரத்தைக் குறிப்பிட வேண்டும். இயற்கை முறையில் நிறமூட்டுவதை அரசு ஊக்குவிக்க வேண்டும். மேலும், உணவு பாதுகாப்புத் துறையான FSSAI இயற்கை முறையில் நிறமூட்டியை பயண்படுத்தி தயாரித்த உணவுக்கு மட்டுமே அனுமதி வழங்க வேண்டும். முக்கியமாக, இந்த குழப்பங்களை எல்லாம் தவிர்க்க உணவை ரெடிமேடாக வாங்கி சாப்பிடுவதைத் தவிர்த்துவிட்டு நேரடியாக சமைத்து சாப்பிட்டு பழக வேண்டும். வீட்டில் சமைக்கும்போதும் உணவு கலர்ஃபுல்லாக இருக்க வேண்டும் என்று வண்ணங்களைத் தெளிக்காமல் இயற்கையான வண்ணத்துடனும், மணத்துடனும் தயாரித்தாலே ஆபத்து எதுவும் இல்லை!’’


- க. இளஞ்சேரன்

மதுரை துணைவேந்தர் மீதான புகார்: கவர்னருக்கு தெரியுமா : ஆக.30ல் பதில் அளிக்க உத்தரவு

பதிவு செய்த நாள்17ஆக
2017
00:29


மதுரை: மதுரை காமராஜ் பல்கலை துணைவேந்தர் செல்லத்துரை நியமனத்தை ரத்து செய்ய தாக்கலான வழக்கில், கவர்னரின் முதன்மை செயலாளர் பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

மதுரை மாவட்ட மக்கள் உரிமை பாதுகாப்பு மைய செயலாளர் லயோனல் அந்தோணிராஜ் தாக்கல் செய்த பொதுநல மனுவில், துணைவேந்தர் செல்லத்துரைக்கு விதிகள்படி போதிய தகுதிகள், முன் அனுபவம் இல்லை.துணைவேந்தராக கல்யாணி இருந்தபோது, பல்கலை பாதுகாப்பு குழு கன்வீனர் சீனிவாசன் தாக்கப்பட்டார். செல்லத்துரை உட்பட சிலர் மீது நாகமலை புதுக்கோட்டை போலீசார் 2014 ல் பதிவு செய்த வழக்கு, நிலுவையில் உள்ளது.செல்லத்துரையை துணைவேந்தராக நியமித்த உத்தரவிற்கு இடைக்கால தடை விதித்து, ரத்து செய்ய வேண்டும், என தெரிவித்திருந்தார்.பல்கலை துணைவேந்தர் தேடுதல் குழு உறுப்பினர் ஹரிஷ் எல்.மேத்தா பதில் மனுவில், செல்லத்துரைக்கு எதிராக வழக்கு நிலுவையில் உள்ளது. பல்கலை இளைஞர் நலத்துறை இயக்குனராக இருந்துள்ளார். அது பேராசிரியர் பதவிக்கு இணையானது இல்லை. அவர் மீது புகார் மனுக்கள் வந்தன. அவரது விண்ணப்பத்தில் குறைபாடுகள் இருந்தன,' என ஆட்சேபித்தேன்.

தேடுதல் குழு : கன்வீனர் முருகதாஸ், 'செல்லத்துரை அரசின் தேர்வு,' என்றார். துணைவேந்தர் பதவிக்கான பரிந்துரை பட்டியலில் செல்லத்துரையின் பெயரை சேர்க்க கன்வீனர் அழுத்தம் கொடுத்தார்' என குறிப்பிட்டிருந்தார். தேடுதல் குழு உறுப்பினர் ராமகிருஷ்ணன், 'செல்லத்துரையின் பெயரை சேர்க்க எதிர்ப்புத் தெரிவித்தேன். ஆனால், கன்வீனர் ஆர்வம் காட்டினார். துணைவேந்தர் பதவிக்கான இறுதி பரிந்துரை பட்டியலில், கட்டாயப்படுத்தி எங்களிடம் கன்வீனர் கையெழுத்து வாங்கினார்,' என பதில் மனு தாக்கல் செய்தார்.

நீதிபதிகள் கே.கே.சசிதரன், ஜி.ஆர். சுவாமிநாதன் அமர்வு விசாரித்தது.தேடுதல் குழு கன்வீனர்முருகதாஸ் தாக்கல் செய்த பதில் மனு: துணைவேந்தர் பதவிக்கு 164 விண்ணப்பங்கள் வந்தன. தகுதியான 64 பேர் பரிசீலிக்கப்பட்டனர். மத்திய மனித வளத்துறை மற்றும் பல்கலை மானியக் குழு (யு.ஜி.சி.,) விதிகள்படி தயாரிக்கப்பட்ட படிவம் வினியோகிக்கப் பட்டது. அதில் துணைவேந்தராக தேர்வு செய்யப்படுவோரின் குற்றப்பின்னணி வழக்கு விபரங்கள் பற்றி எதுவும் கோரவில்லை.முருகன் என்பவர் செல்லத்துரைக்கு எதிராக புகார் அனுப்பினார். செல்லத்துரையிடம் விளக்கம் பெற்றோம். பல்கலை 'போர்டு ஆப் ஸ்டடீஸ்' தலைவர் வேளாங்கண்ணி ஜோசப்பிடம் விளக்கம் கோரினோம். அவர், 'பல்கலை இளைஞர் நலத்துறையில் செல்லத்துரை வகித்த பதவியானது கல்விப் பணிக்கு சமமானது,' என்றார். இது ஒரு தகுதியாக ஏற்கப்பட்டது.

செல்லத்துரைக்கு எதிராக வழக்கு (எப்.ஐ.ஆர்.,) நிலுவை உள்ளது பற்றி, உயர்நீதிமன்ற அரசு கூடுதல் வழக்கறிஞர் குமாரிடம் கருத்து கோரப்பட்டது. அவர், 'செல்லத்துரைக்கு எதிராக எப்.ஐ.ஆரில் உள்ள குற்றச்சாட்டுகள் பொய்யானவை; வழக்கிற்கும் அவருக்கும் சம்பந்தமில்லை என தெரிகிறது,' என்றார். இவ்விபரங்களை கவர்னரின் முதன்மை செயலருக்கு
அனுப்பினோம்.செல்லத்துரையை துணை வேந்தராக நியமிக்க யாரும் அழுத்தம், நிர்ப்பந்தம் கொடுக்க வில்லை. தேடுதல் குழு உறுப்பினர்கள் இரண்டு மாதங்களாக அமைதியாக இருந்துவிட்டு, தற்போது தவறான தகவல்களை கூறுகின்றனர். அவர்கள் குறைகளை, கவர்னரிடம் தெரிவித்திருக்கலாம். 

தேடுதல் குழுவின் ஒருமித்த கருத்து அடிப்படையில், செல்லத்துரை தேர்வு செய்யப்பட்டார். அவரை தேர்வு செய்ய கையெழுத்திடுமாறு யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. குழு உறுப்பினர்களின் குற்றச்சாட்டுகள் கற்பனையானது. இவ்வாறு குறிப்பிட்டார்.

செல்லத்துரை, 'துணைவேந்தருக்குரிய தகுதிகள் எனக்குஉள்ளன. குற்ற வழக்கு பற்றி குழுவிடம் விளக்கம் அளித்துள்ளேன். அந்த வழக்கிற்கும், எனக்கும் தொடர்பில்லை. எப்.ஐ.ஆரை ரத்து செய்யக்கோரிய மனு, உயர்நீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது,' என பதில் மனு செய்தார்.

நீதிபதிகள்: செல்லத்துரைக்கு எதிராக கவர்னர் அலுவலகத்திற்குபுகார் சென்றுள்ளது. இது கவர்னரின் பார்வைக்கு கொண்டு செல்லப்பட்டதா? இல்லையா? என்பதை இந்நீதிமன்றம் அறிய விரும்புகிறது. எனவே, கவர்னரின் முதன்மை செயலாளர் ரமேஷ்சந்த்மீனா ஆக.,30ல் பதில்
மனு தாக்கல் செய்ய வேண்டும், என்றனர்.

நடிகர் 'அல்வா' வாசு கவலைக்கிடம்


பதிவு செய்த நாள்17ஆக
2017
00:34




மதுரை: நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு,56,கல்லீரல் பாதிக்கப்பட்டு கவலைக்கிடமாக உள்ளார்.மதுரை ஹார்விபட்டியை சேர்ந்த இவர், 900 படங்களுக்கு மேல் நடித்துள்ளார். இயக்குனர் மணிவண்ணனிடம் உதவி இயக்குனராக இருந்தவர். 'அமைதி படை' படம் மூலம் 'அல்வா' வாசு என அழைக்கப்பட்டார். வடிவேலுடன் இணைந்து பல படங்களில் காமெடி காட்சிகளில் நடித்தார்.கடந்த 8 மாதங்களாக கல்லீரல் பாதிப்பிற்கு சிகிச்சை பெற்று வந்தார். 10 நாட்களுக்கு முன் கடும் பாதிப்பு ஏற்பட்டு, மதுரை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆக.,15ம் தேதி திடீர் மூச்சு திணறலால் தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரது உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.
ரஜினியின் 'ஆஸ்ரம்' பள்ளிக்கு பூட்டுமாணவ மாணவியர் அலைக்கழிப்பு

சென்னை:வாடகை பாக்கி மற்றும் இட பிரச்னை காரணமாக, நடிகர் ரஜினி மனைவி நடத்தும், 'ஆஸ்ரம்' பள்ளிக்கு பூட்டு போடப் பட்டது.





சென்னை, கிண்டியில், வெங்கடேஸ்வரலு என்பவருக்கு சொந்தமான இடத்தில், ரஜினி மனைவி லதா, ஆஸ்ரம் மெட்ரிகுலேஷன் பள்ளி நடத்தி வருகிறார். இங்கு, 300க்கும்

மேற்பட்ட, மாணவ மாணவியர் படிக்கின்றனர். அறங்காவலராக, ரஜினி உள்ளார்.

பள்ளி இடம் தொடர்பாக, கடந்த ஆண்டு, உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு இருந்தது. இதில், சமரச மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், வாடகை நிலுவைத் தொகை, மாத வாடகை மற்றும் காலி செய்வது தொடர்பாக, சமரச தீர்வு காண போவதாக கூறப்பட்டிருந்தது. ஆனால், அதற்கு, லதா தரப்பு ஒத்துழைக்கவில்லை என, கூறப்படுகி றது. இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை, வெங்கடேஸ்வரலு தரப்பினர், பள்ளி வாயில் கதவை, பூட்டுப் போட்டு பூட்டினர்.

அவர்களுடன் பள்ளிதரப்பினர் பேச்சு நடத்தியும், சமரசம் எட்டப்படவில்லை. இதனால் நேற்று, மாணவ மாணவியர் பள்ளிக்குள் செல்ல முடியா மல் தவித்தனர். இதையடுத்து, வாகனங்கள் மூலம், வேளச்சேரி பிரதான சாலையில் உள்ள, மற்றொரு

ஆஸ்ரம் பள்ளிக்கு, அவர்கள் அழைத்துச் செல் லப்பட்டனர். ஆதம்பாக்கம், கிண்டி, ஆலந்துார் பகுதியில் இருந்து வரும் மாணவ மாணவியர், திடீர் இடமாற்றத்தால் பாதிக்கப்பட்டனர். இந்த தகவல்தெரிந்து, மாணவ மாணவியரின் பெற்றோரும், கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
ஏர்வாடி தர்கா சந்தனக்கூடு விழா
பதிவு செய்த நாள்17ஆக
2017
00:07




கீழக்கரை: ராமநாதபுரம் மாவட்டம், ஏர்வாடி தர்காவில் சந்தனக்கூடு விழா நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். ஏர்வாடியில் அல்-குத்புல் அக்தாப் சுல்தான் செய்யது இப்ராகீம் ஷஹீது பாதுஷா நாயகம் தர்கா உள்ளது. இங்கு 843ம் ஆண்டு சந்தனக் கூட்டிற்கான புகழ்மாலை ஜூலை 24ல் தொடங்கியது. ஆக., 2ல் அடிமரம் ஊன்றப்பட்டது. ஆக.,3 மாலையில் கொடி ஊர்வலமும், கொடியேற்ற நிகழ்ச்சியும் நடந்தது. ஆக.,15ல் மாலை 6:00 மணி முதல் அதிகாலை 3:00 மணி வரை பாதுஷா நாயகத்தின் புகழ்மாலை ஓதப்பட்டது. ஆக.,16 அதிகாலை 3:00 மணிக்கு, ஏர்வாடி நல்ல இப்ராஹிம் மஹாலில் இருந்து தாரை, தப்பட்டை, வாண வேடிக்கை முழங்க சந்தனக் குடத்தை தர்கா ஹக்தார்கள் கொண்டு வந்தனர். தொடர்ந்து 35 அடி கூடுதல் உயரத்துடன் சந்தனக்கூடு தேர் கொண்டு வரப்பட்டது. அதிகாலை 5:00 மணிக்கு பாதுஷா நாயகத்தின் அடக்கஸ்தலத்தில் சந்தனம் பூசப்பட்டு, வண்ணப் போர்வை, மல்லிகை சரத்துடன் போர்த்தப்பட்டது.
ஆக.,23ல் கொடியிறக்கம் செய்யப்பட்டு, அன்னதானம் வழங்கப்படும். ஏற்பாடுகளை ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதி கே.தேவதாஸ், ஆணைய உதவியாளர் எம்.கே.தமிழரசு மற்றும் ஏர்வாடி தர்கா ஹக்தார்கள் பொதுமகா சபையினர் செய்திருந்தனர்.

NEWS TODAY 28.01.2026