Saturday, August 19, 2017


10 வயதில் தாயான சிறுமிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு

பதிவு செய்த நாள்19ஆக2017 01:07

புதுடில்லி: பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, பெண் குழந்தை பெற்றெடுத்த, 10 வயது சிறுமிக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், சண்டிகர் நிர்வாகத்துக்கும், உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மத்திய உள்துறை அமைச்சக நிர்வாகத்தின் கீழுள்ள, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களின் பொது தலைநகரான, சண்டிகரைச் சேர்ந்த, 10 வயது சிறுமி, பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்டு, சமீபத்தில் பெண் குழந்தை பெற்றெடுத்தார். முன்னதாக, 32 வாரக் கருவை கலைக்க அனுமதி கோரும், அச் சிறுமியின் மனுவை, மருத்துவக் காரணங்களுக்காக உச்ச நீதிமன்றம் நிராகரித்தது. இந்த வழக்கு, நீதிபதிகள், மதன் லோகூர், தீபக் குப்தா அமர்வு முன், நேற்று, மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிமன்றத்துக்கு உதவுவதற்காக, 'அமிகஸ் கியூரி'யாக நியமிக்கப்பட்டுள்ள, மூத்த வழக்கறிஞர், இந்திரா ஜெய்சிங், ஒரு மனுவை தாக்கல் செய்தார். மனுவில் கூறப்பட்டுஉள்ளதாவது: சமீபத்தில், ஒரு வழக்கில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, உச்ச நீதிமன்றம்   உத்தரவிட்டது. அதே நேரத்தில், பாலியல் பலாத்காரத்தால் பாதிக்கப்பட்ட, 10 வயது சிறுமிக்கு, இதுவரை, எந்த இழப்பீடும் வழங்கப்படவில்லை. குழந்தை பெற்றெடுத்தாலும், அவள் ஒரு சிறுமி. அவளால், குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது. அதனால், அந்த சிறுமிக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

சிறுமிக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பதிலளிக்கும்படி, மத்திய அரசுக்கும், சண்டிகர் நிர்வாகத்துக்கும், அமர்வு உத்தரவிட்டுள்ளது. மேலும், இது தொடர்பாக பதிலளிக்கும்படி, தேசிய சட்ட சேவை ஆணையம் மற்றும் சண்டிகர் மாவட்ட சட்ட சேவை ஆணையத்துக்கும், 'நோட்டீஸ்' அனுப்பப்பட்டுள்ளது.வழக்கின் விசாரணை, வரும், 22ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
சேலம், நாமக்கல் மாவட்டத்தில் 'டெங்கு' பாதிப்பு தீவிரம்
பதிவு செய்த நாள்
ஆக 19,2017 02:02




சேலம், நாமக்கல் மாவட்டங்களில், 'டெங்கு' காய்ச்சலுக்கு, உயிர்பலி அதிகரித்துள்ளது.

சேலம் மாவட்டம், கோட்ட கவுண்டம்பட்டியில், டெங்கு காய்ச்சலால், கடந்த, 15ல், மாணவி கிருபனா, 10; கடந்த, 16ல், மாணவர் விக்னேஷ், 15, உயிரிழந்தனர். இந்நிலையில், சேலம் மாவட்டம், முத்துநாயக்கன்பட்டியைச் சேர்ந்த விஜயன், 12, டெங்கு காய்ச்சலால், சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று முன்தினம் இரவு, 7:00 மணிக்கு, அவர் உயிரிழந்தார்.

நாமக்கல் மாவட்டம், கெடமலையைச் சேர்ந்தவர், ஆண்டியம்மாள், 55. டெங்கு காய்ச்சலால், 10 நாட்களாக பாதிக்கப்பட்டிருந்த இவர், மலை மீதிருந்து, கீழே வருவதற்கு சாலை வசதி இல்லாததால், சிகிச்சை வசதியின்றி நோயுடன் போராடிக் கொண்டிருந்தார். நேற்று முன்தினம், உறவினர்கள், அவரை தொட்டில் கட்டி, ராசிபுரம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்; அன்றிரவு, அவர் இறந்தார்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே, காட்டூரை, சேர்ந்த மாணவி புனிதசெல்வி, 9, டெங்கு காய்ச்சல் காரணமாக, சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் நேற்று, உயிரிழந்தார்.அவரின் அண்ணன் பவித்திரன், 11, டெங்கு காய்ச்சல் காரணமாக, சேலம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

- நமது நிருபர் -
பிளாட்பாரம் டிக்கெட்: பயணியர் புது 'ஐடியா'

பதிவு செய்த நாள்19ஆக2017 01:47

தஞ்சாவூர்: ரயிலில் பயணம் செய்யும் கட்டணத்தை விட, பிளாட்பாரம் கட்டணம் இரு மடங்காக வசூலிப்பது, மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. இதை தவிர்க்க, பயணியர் மாற்று வழியை கண்டுபிடித்துள்ளனர்.

கட்டணம் ரூ.20 : தஞ்சை ரயில்வே ஸ்டேஷன், மிகவும் பழமை வாய்ந்தது. தஞ்சை வழியாக, 18க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்களும், 20க்கும் மேற்பட்ட பயணியர் ரயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன.ரயிலில் செல்லும் உறவினர்களை வழிஅனுப்ப வருபவர்களும், ரயிலில் செல்லும் உறவினர்களை பார்க்க வருபவர்களும் பிளாட்பாரம் டிக்கெட் எடுக்க வேண்டும். இதற்கான கட்டணம், 10 ரூபாயாக இருந்தது. இந்நிலையில் பிளாட்பாரம் கட்டணத்தை, 20 ரூபாயாக ரயில்வே நிர்வாகம், செப்டம்பர், 15ம் தேதி வரை உயர்த்தி உள்ளது. ரயில்வே ஸ்டேஷன்களில், அதிகமான கூட்டத்தை கட்டுப்படுத்த இந்த திட்டம் அமல்படுத்தப்பட்டது.
ரயிலில் பயணிக்கும் வயதானவர்கள், உடல் ஊனமுற்றவர்களுக்கு உதவ, உறவினர்கள் உடன் வருவர். அவர்கள், 20 ரூபாய்க்கு பிளாட்பாரம் டிக்கெட் வாங்க வேண்டி உள்ளது. இதனால், மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.

இரண்டு மணி நேர அனுமதி : தஞ்சையில் இருந்து, திருச்சிக்கு செல்ல, 15 ரூபாய், கும்பகோணத்திற்கு, 10 ரூபாய் கட்டணம். ஆனால், ரயில்வே ஸ்டேஷனில், இரண்டு மணி நேரத்திற்கு மட்டும் அனுமதிக்கப்படும் பிளாட்பாரம் டிக்கெட் கட்டணம், 20 ரூபாய்.தஞ்சை, கும்பகோணம், திருவாரூர், நாகை, வேளாங்கண்ணி ஆகிய, ஐந்து ரயில்வே ஸ்டேஷன்களிலும் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வந்து உள்ளது. ஆனால், யாரும் பிளாட்பாரம் டிக்கெட் எடுப்பதற்கு முன்வருவதில்லை.உறவினர்களை ரயிலில் ஏற்ற வருபவர்கள் கூட, கும்பகோணம் அல்லது தஞ்சையை அடுத்த ஆலக்குடிக்குரிய, 10 ரூபாய் டிக்கெட் வாங்கி, உறவினர்களை ஏற்றிய பின், திரும்பி விடுகின்றனர்.'இந்த கட்டண உயர்வை வாபஸ் பெற வேண்டும்' என, ரயில் பயணியர் வலியுறுத்தி உள்ளனர்.
அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புத்தகம் வாங்க வங்கிக்கடன்
பதிவு செய்த நாள்19ஆக
2017
01:35

திருவண்ணாமலை: புத்தக திருவிழாவில், 'ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு சிறப்பு கடன் வழங்கப்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.
-திருவண்ணாமலையில், நேற்று துவங்கிய புத்தக திருவிழா, வரும் 28ம் தேதி வரை நடக்கிறது. இதில், 180க்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன; நுாற்றுக்கும் மேற்பட்ட பதிப்பகங்களைச் சேர்ந்தோர், ஒரு லட்சம் தலைப்புகளில், புத்தகங்களை குவித்துள்ளனர்.

இந்த நிகழ்ச்சியில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், புத்தகங்கள் வாங்குவதற்கு வசதியாக, 5,000 முதல் 10 ஆயிரம் ரூபாய் வரை, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் வங்கியில் கடனுதவி பெறுவதற்கு, தி.மலை கலெக்டர், பிரசாந்த் எம்.வடநேரே, ஏற்பாடு செய்துள்ளார்.

இந்த கடன் தொகையை, ஆறு தவணைகளில், சம்பளத்தில் இருந்து திருப்பிச் செலுத்த, வசதி செய்யப்பட்டுள்ளது. இதற்காக, புத்தக கண்காட்சி நடக்கும் இடத்திலேயே, வங்கிகள், வழிகாட்டி மையம் அமைத்துள்ளன.
புத்தக திருவிழா நிகழ்ச்சிகளில், அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள்
புத்தகங்கள் வாங்க, வங்கி கடன் உதவிக்கு ஏற்பாடு செய்யப்
பட்டிருப்பது, இதுவே முதல்முறை.

உயர் சிறப்பு மருத்துவ படிப்பு 1,140 பேருக்கு இடம்

பதிவு செய்த நாள்19ஆக
2017
00:56

சென்னை: சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும், உயர் சிறப்பு மருத்துவ படிப்புக்கான கவுன்சிலிங்கில், 1,140 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர்.தமிழகத்தில், அரசு மருத்துவ கல்லுாரிகளில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி எனப்படும,் முதுநிலை உயர் சிறப்பு மருத்துவ படிப்புகளான, டி.எம்., - எம்.சி.எச்., என்ற படிப்புக்கு, 192 இடங்கள் உள்ளன. நாடு முழுவதும், 1,215 இடங்கள் உள்ளன.

இதற்கான கவுன்சிலிங், 16ம் தேதி நடந்தது. தமிழக கல்லுாரிகளில், 121 பேர் உட்பட, நாடு முழுவதும், 1,140 பேர் இட ஒதுக்கீடு பெற்றுள்ளனர். விடுபட்ட இடங்களுக்கான இரண்டாம் கட்ட கவுன்சிலிங், வரும், 24ம் தேதி நடக்கிறது.
'அல்வா' வாசு குடும்பத்துக்கு நடிகர் விஷால் ஆறுதல்

பதிவு செய்த நாள்19ஆக  2017 00:34

மதுரை: மதுரையில் கல்லீரல் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நகைச்சுவை நடிகர் 'அல்வா' வாசு, 56, நேற்று முன்தினம் இரவு இறந்தார். நேற்று இறுதி அஞ்சலிக்காக அவரது உடல் மதுரை ஓபுளாபடித்துறையில் உள்ள வீட்டில் வைக்கப்பட்டு, மாலையில் தத்தனேரியில் தகனம் செய்யப்பட்டது. மனைவி அமுதாவிடம் நடிகர் சங்க செயலாளர் விஷால் சார்பில் 30 ஆயிரம் ரூபாயை நடிகர் விக்னேஷ் வழங்கினார். அதில் 5 ஆயிரம் ரூபாயை திருப்பி கொடுத்து, தன் கணவர் நினைவாக ஏதாவது செய்யும்படி அமுதா கூறினார். நடிகர் சரவணசக்தி நேரிலும், நடிகர் எஸ்.வி. சேகர், இயக்குனர் கவுதமன் அலைபேசியிலும் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர்.

தலைமை செயலர் மிரட்டல்: அஞ்ச மாட்டோம் : அரசு ஊழியர் சங்க தலைவர் உறுதி
பதிவு செய்த நாள்19ஆக
2017
00:17

ராமநாதபுரம்: ''தலைமை செயலாளர் மிரட்டலுக்கு ஒருபோதும் அஞ்ச மாட்டோம்'', என ஜாக்டோ- - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினரும், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தலைவருமான சுப்பிரமணியன் தெரிவித்தார்.

ராமநாதபுரத்தில் அவர் கூறியதாவது:பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். ஊதிய முரண்பாடுகளை களைந்து 8-வது ஊதிய மாற்றத்தை உடனடியாக செயல்படுத்த வேண்டும். அதுவரை 1.1.2016 முதல் 20 சதவீத இடைக்கால நிவாரணம் வழங்க வேண்டும்.

சிறப்பு காலமுறை, தொகுப்பூதியம், மதிப்பூதிய முறைகளை ஒழித்து அனைவருக்கும் வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து ஆசிரியர் அரசு ஊழியர் கூட்டமைப்பு (ஜாக்டோ--ஜியோ) சார்பில் தொடர் போராட்டங்கள் நடக்கிறது.இதன் ஒருபகுதியாக ஆக.,22ல் ஒருநாள் அடையாள வேலைநிறுத்தம் நடக்கிறது. இதில், தமிழகத்தில் உள்ள 10 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பங்கேற்கின்றனர். 

போலீஸ் துறை அமைச்சு பணியாளர்கள், நீதித்துறை ஊழியர்கள், தலைமை செயலக ஊழியர்கள் என அனைவரும் பங்கேற்கின்றனர். அன்றைய தினம் தாலுகா தலைமையகத்தில் ஆர்ப்பாட்டம் நடக்கும்.அதன்பிறகும் பேச்சுவார்த்தை நடத்தி, அரசு தீர்வு காணாவிட்டால் ஆக.,27 ல் மாவட்டங்களில் வேலைநிறுத்த ஆயத்த மாநாடு நடத்தப்படும். இறுதியாக செப்.,9 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தம் நடக்கும்.''போராட்டத்தில் ஈடுபட்டால், துறை ரீதியான நடவடிக்கை பாயும். சம்பளம் பிடித்தம் செய்யப்படும்'', என தலைமை செயலாளர் கிரிஜாவைத்திய நாதன் எச்சரித்துள்ளார். மிரட்டல்களுக்கு ஒருபோதும் பயப்பட மாட்டோம்.பிரச்னைகளுக்கு தீர்வு காணாமல், மிரட்டுவது சரியல்ல.இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 29.01.2026