Monday, August 21, 2017

கோவில் கும்பாபிஷேகம் : இஸ்லாமியர்கள் தரிசனம்

பதிவு செய்த நாள்21ஆக
2017
01:11

செங்கம்: செங்கம், காக்கங்கரை விநாயகர் கோவிலில் நடந்த கும்பாபிஷேக விழாவில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், இஸ்லாமியர்களும் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டம், செங்கம் பஜார் வீதியில் உள்ள, பழமை வாய்ந்த காக்கங்கரை விநாயகர் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று நடந்தது. நேற்று காலை, 10:15 மணிக்கு, யாகசாலையில் வைக்கப்பட்ட புனித கலச நீரை, சுவாமி மூல கருவறையின் மேல் உள்ள கலசத்தின் மீது ஊற்றி, வேத மந்திரங்கள் முழங்க, கும்பாபிஷேகம் நடந்தது. அப்பகுதியை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள், சுவாமி தரிசனம் செய்தனர்.மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில், அப்பகுதியை சேர்ந்த இஸ்லாமியர்களும், கும்பாபிஷேக விழாவில் பங்கேற்று, சுவாமி தரிசனம் செய்தனர்.
சப்போட்டா சீசன் துவக்கம் : கிலோ ரூ.25 - 30 மட்டுமே!
பதிவு செய்த நாள்21ஆக
2017
00:48


சப்போட்டா பழ சீசன் களை கட்ட துவங்கியுள்ளதால், அதன் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.

தமிழகத்தில் வேலுார், திருப்பூர், திருநெல்வேலி, தர்மபுரி, கிருஷ்ணகிரி உள்ளிட்ட, 12 மாவட்டங்களில் சப்போட்டா பழ சாகுபடி நடந்து வருகிறது. தமிழகத்தின் தேவைக்கு, இது போதுமானதாக இல்லாததால் ஆந்திரா, கர்நாடக மாநிலங்களில் இருந்தும், இந்த பழம் விற்பனைக்கு வருகிறது. தற்போது, தமிழகம் மட்டுமின்றி ஆந்திராவிலும், இதன் சீசன் களை கட்டுகிறது. பழங்கள் அறுவடை செய்யப்பட்டு, மாநிலத்தின் பல மார்க்கெட்களுக்கு விற்பனைக்கு அனுப்பப்படுகின்றன. காயாக வரும் சப்போட்டாக்களை, விசேஷ அறைகளில், புகை போட்டு கனிய வைத்து, வியாபாரிகள் விற்பனை செய்கின்றனர். சென்னைக்கு மட்டும், தினமும், 20க்கும் மேற்பட்ட லாரிகளில், வரத்து உள்ளது. இதனால், விலையும் வீழ்ச்சி அடைந்துள்ளது. 1 கிலோ சப்போட்டா, சில்லரை விலையில், 25 முதல், 30 ரூபாய்க்கு கிடைக்கிறது.

- நமது நிருபர் -
காரைக்கால் சிறப்பு ரயில் ரத்து

பதிவு செய்த நாள்21ஆக
2017
00:46


சென்னை: பயணியர் வருகை குறைவால், கொச்சுவேலி - காரைக்கால் சிறப்பு ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 கேரள மாநிலம், கொச்சுவேலியில் இருந்து, புதுச்சேரி மாநிலம், காரைக்காலுக்கு, வரும், 23, 30ம் தேதிகளிலும், காரைக்காலில் இருந்து, கொச்சுவேலிக்கு, 24, 31ம் தேதிகளிலும், சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என, அறிவிக்கப்பட்டிருந்தது. பயணியரிடம் வருகை போதுமானதாக இல்லாததால், ரத்து செய்யப்பட்டுள்ளது

 தாம்பரத்தில் இருந்து, அசாம் மாநிலம் கவுகாத்திக்கு, நாளை இரவு, 9:45 மணிக்கு இயக்கப்படவிருந்த, கவுகாத்தி வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ரத்து செய்யப்பட்டுள்ளது

 திருவனந்தபுரத்தில் இருந்து, கோவை மற்றும் சென்னை சென்ட்ரல் வழியாக கவுகாத்திக்கு, 22ம் தேதி மாலை, 5:00 மணிக்கு இயக்கப்படவிருந்த ரயிலும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக, தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
கேரளாவில் 100 ஆண்டுக்கு முன்பே மாத விலக்கு விடுமுறை அளித்த பள்ளி
பதிவு செய்த நாள்21ஆக
2017
01:02


திருவனந்தபரம்: பெண் ஊழியர்களுக்கு மாத விலக்கு நாட்களில் விடுமுறை அளிக்க வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ள நிலையில், கேரளா வில், 100 ஆண்டுக்கு முன்பே, ஒரு பள்ளியில், ஆசிரியை மற்றும் மாணவியருக்கு மாத விலக்கு விடுமுறை அளிக்கப்பட்ட தகவல், தற்போது தெரிய வந்துள்ளது.

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் நடந்த, கேரள சட்டசபை கூட்டத்தில், காங்., உறுப்பினர் சபரிநாதன், 'பல நாடுகளில், பெண் ஊழியர்களுக்கு, மாத விலக்கு நாட்களில் விடுமுறை அளிக்கப்படுகிறது. 

'அதேபோல், கேரளாவிலும், பெண் ஊழியர்களுக்கு விடுமுறை வழங்கப்பட வேண்டும்' என, கோரிக்கை விடுத்தார். இது குறித்து பரிசீலிப்பதாக, முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். இந்நிலையில், கேரளாவில், 105 ஆண்டுக்கு முன், ஆசிரியைகள், மாணவியருக்கு, மாத விலக்கு நாட்களில், பள்ளி நிர்வாகம் விடுமுறை அளித்துள்ளது தெரிய வந்துள்ளது. வரலாற்று ஆய்வாளர், பி.பாஸ்கரன் உன்னி, 19ம் நுாற்றாண்டில் கேரளா என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். அதில், 'எர்ணாகுளம் மாவட்டம் திருபுனித்துராவில் உள்ள, அரசு பெண்கள் பள்ளியில் தான், 105 ஆண்டுக்கு முன், ஆசிரியை மற்றும் மாணவியருக்கு, மாத விலக்கு நாட்களில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது' என, குறிப்பிட்டுள்ளார்.

இதுபற்றி அந்த புத்தகத்தில் கூறப்பட்டுள்ள தாவது: கடந்த, 1900களின் துவக்கத்தில், மாணவ - மாணவியர், 300 நாட்களுக்கு குறையாமல் பள்ளிக்கு வருகை தந்திருந்தால் மட்டுமே, ஆண்டு தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர் என்ற விதி இருந்தது. திருப்புனித்துரா பெண்கள் பள்ளியில், மாத விலக்கு நாட்களில், ஆசிரியை மற்றும் மாணவியர் பள்ளிக்கு வரமாட்டார்கள். இதனால், வருகை நாட்கள் குறைவதாக கூறி, மாணவியருக்கு தேர்வு எழுத அனுமதி மறுக்கப்பட்டது. 

இதையடுத்து, பள்ளி யின் அப்போதைய தலைமை ஆசிரியர் விஸ்வநாத ஐயர், பள்ளி கல்வி உயர் அதிகாரிகளை சந்தித்து, நிலைமையை விளக்கினார். இதன்பின், 'மாத விலக்கு நாட்களில், மாணவியர் எடுக்கும் விடுமுறை, கணக்கில் எடுத்துக் கொள்ளப்படாது' என, அதிகாரிகள், 1912ல் உத்தரவிட்டனர்.இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பரவலாக கன மழை

பதிவு செய்த நாள்
ஆக 20,2017 17:56



சென்னை: தமிழகத்தில் பல மாவட்டங்களின் கனமழை பெய்தது.
ராயப்பேட்டை,மயிலாப்பூர், சேப்பாக்கம், திருவல்லிக்கேணி , தேனாம்பேட்டை, கோயம்பேடு, பெரம்பூர், ஆர்.கே.நகர், திருமங்கலம் ஆகிய பகுதிகளில் மழை பெய்கிறது.

சேலம் மாவட்டம் ஆத்தூர், தலைவாசல், கெங்கவல்லி, வாழப்பாடி சுற்றுவட்டார பகுதிகளில் இடி மின்னலுடன் பலத்த மழை பெய்தது.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி, கோலியனூர், விக்கிரவாண்டி, ஜானகிபுரம், முண்டியம்பாக்கம் பகுதிகளில் பலத்த மழை பெய்தது.
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி, ஆதனூர், காமக்கூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.

வேலூர் மாவட்டம் ஜோலார்ப்பேட்டை, குரிசிலிப்பட்டு, நாட்றம்பள்ளி, திருப்பத்தூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்தது.
நீலகிரி மாவட்டம் ஊட்டி, குன்னூர், கோத்தகிரியில் கனமழை பெய்து வருகிறது. தொடர் மழை காரணமாக ஊட்டி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுற்றுலா வந்தவர்கள் பெரும் ஏமாற்றம் அடைந்தனர்.

கனமழை காரணமாக குற்றாலம் மெயின் அருவியில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

மக்கள் கூட்டம்:

சிறுமலை பகுதியில் பெய்துவரும் மழை காரணமாக, கடந்த சில நாட்களாக குட்லாடம்பட்டி அருவிக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது. இதனையறிந்த சுற்றுலா பயணிகள் ஏராளமானோர் அங்கு வந்து குளித்து மகிழ்ந்தனர்.
கன்னியாகுமரி மாவட்டம் திற்பரப்பு அருவியிலும் நீர்வரத்து அதிகரித்துள்ளதால், சுற்றுலா பயணிகள் அங்கு திரண்டனர்.
பள்ளிகளில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளுக்கு திடீர் தடை
பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:23



கல்வி வளர்ச்சி நாள், ஆசிரியர் தினம், குழந்தைகள் தினம் மற்றும் அப்துல் கலாம் பிறந்த நாள் போன்றவற்றின் போது, பள்ளிகளில், மாணவ - மாணவியர் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன.

அப்போது, சில தனியார் பள்ளிகளில், சினிமா நடிகர், நடிகையர் போன்று பேசுவது, நடிப்பது, திரைப்பட பாடல்களை இசைக்கச் செய்து ஆடுவது உட்பட, பல விதமான கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. தனியார், 'டிவி'க்களை காப்பியடித்தும், சில நிகழ்ச்சிகள் அரங்கேற்றப்படுகின்றன. இவையெல்லாம், பள்ளி மாணவர்களின் ஒழுக்கத்தை கெடுப்பதாக, உயர் அதிகாரிகளுக்கு புகார்கள் சென்றன.

அதனால், பள்ளிகளில் இத்தகைய நிகழ்ச்சிகளை நடத்த, அதிகாரிகள் தடை விதித்துள்ளனர். மீறி நடத்தினால், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளிடம், மாணவர்கள் புகார் அளிக்கலாம் என, பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

-நமது நிருபர் -
பி.ஆர்க்., படிப்பில் 60 சதவீத இடம் காலி: ஆர்க்கிடெக்சர் கல்லூரிகள் அதிர்ச்சி

பதிவு செய்த நாள்
ஆக 21,2017 01:25



தமிழக அரசு நடத்திய, பி.ஆர்க்., கவுன்சிலிங்கில், 60 சதவீத இடங்கள் மாணவர்களின்றி காலியாக உள்ளன.

தமிழக அரசு சார்பில், இன்ஜினியரிங் மற்றும் பி.ஆர்க்., படிப்புக்கு, அண்ணா பல்கலையில் கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு, இன்ஜி., கவுன்சிலிங், ஆக., 18ல் முடிந்தது. தொடர்ந்து, பி.ஆர்க்., கவுன்சிலிங், ஆக., 19ல் நடந்தது. இதில், அண்ணா பல்கலை, அரசு மற்றும் தனியார்கல்லுாரிகளின், 2,267 இடங்களுக்கு, 1,719 பேர்விண்ணப்பித்தனர். அவர்களில், 1,446 பேர் தகுதி பெற்று, கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டனர்.

நேற்று முன்தினம் நடந்த கவுன்சிலிங்கில், 453 பேர் பங்கேற்கவில்லை; 993 பேர் மட்டுமே பங்கேற்றனர். அவர்களில், 87 பேர் தங்களுக்கு விருப்பமான கல்லுாரிகள் கிடைக்காமல், இடங்களை பெறவில்லை. மீதமுள்ள, 906 பேர், இட ஒதுக்கீடு பெற்றனர். இதன்படி, 2,267 இடங்களில், 40 சதவீதம் மட்டுமே, கவுன்சிலிங்கில் நிரம்பியுள்ளது. மீதி, 60 சதவீதமான, 1,361 இடங்கள் காலியாக உள்ளன.

இது குறித்து, ஆர்கிடெக்சர் கல்லுாரி நிர்வாகத்தினர் கூறுகையில், 'இந்த ஆண்டு, தேசிய ஆர்கிடெக்சர் கவுன்சில் நடத்திய, 'நாட்டா' தேர்வில், புதிய மாற்றங்கள் கொண்டு வந்ததால், பெரும்பாலான மாணவர்கள் தேர்ச்சி பெறவில்லை. அதனால், காலியிடங்கள்அதிகரித்துள்ளன' என்றார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 29.01.2026