Tuesday, August 22, 2017

வரிசையில் பண்டிகைகள் : புளி, பருப்பு விலை உயர்வு
பதிவு செய்த நாள்22ஆக
2017
02:28


ஈரோடு: பண்டிகை மற்றும் முகூர்த்த சீசன் துவங்குவதால், புளி, பருப்பு, கொள்ளு ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது.

விநாயகர் சதுர்த்தி, ஓணம், சரஸ்வதி பூஜை, தீபாவளி என, தொடர்ச்சியாக பண்டிகைகள், வரிசையாக வருவதாலும், முகூர்த்த சீசன் துவங்கியதாலும், பல மளிகை பொருட்களின் தேவை அதிகரித்து, விலை உயர்ந்துள்ளது.
கடந்த மாதம் புளி கிலோ, சில்லரை விலையில் கிலோ, 90 - 100 ரூபாய்க்கு விற்றது. தற்போது கிலோவுக்கு, 30 ரூபாய் அதிகரித்து, 120 - 130 ரூபாய்க்கு விற்பனையாகிறது. இதில், பழைய புளியை விட, புதிய புளி விலை அதிகமாக உள்ளது.

துவரம் பருப்பு, கிலோவுக்கு, 10 - 20 ரூபாயும், கடலை பருப்பு, 10 ரூபாயும் உயர்ந்து உள்ளது.

கறுப்பு சுண்டல், வெள்ளை சுண்டல் விலையும், 10 ரூபாய் அதிகரித்துள்ளது; கொள்ளு விலை கிலோவுக்கு, 35 ரூபாய் அதிகரித்துள்ளது.
'வறட்சியால் உள்ளூர் மளிகை பொருட்களின் வரத்து குறைந்துள்ளது. கர்நாடகா உட்பட பிற மாநில வரத்தும் குறைவதால், தேவை அதிகரித்து, விலை உயர்ந்து வருகிறது' என, வியாபாரிகள் சங்க நிர்வாகி ஒருவர் கூறினார்.
சித்த மருத்துவம் படிக்க 5,000 பேர் விண்ணப்பம்

பதிவு செய்த நாள்22ஆக
2017
00:50

சென்னை: இந்திய முறை மருத்துவப் படிப்பில் சேர, 5,000 பேர், விண்ணப்பங்கள் பெற்றுள்ளதாக, தேர்வு குழு செயலர், ரவி செல்வன் கூறினார். தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட, இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி படிப்புக்கு, ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், 396 இடங்களும், 22 சுயநிதி கல்லுாரிகளில், 859 இடங்களும், அரசு ஒதுக்கீட்டில் உள்ளன. இதற்கான விண்ணப்பம், கடந்த, 2 முதல், வினியோகிக்கப்படுகிறது.

இந்நிலையில், தமிழகத்தில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கு, மாணவர் சேர்க்கை நடத்தாத நிலையில், இந்திய முறை மருத்துவப் படிப்பில் சேர, மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இது குறித்து, மாணவர் சேர்க்கை செயலர், ரவிசெல்வன் கூறுகையில், ''இந்திய முறை மருத்துவப் படிப்புகளுக்கு, 5,000 பேர் விண்ணப்பங்கள் பெற்றுஉள்ளனர். ''30 வரை விண்ணப்பங்களை, மருத்துவக் கல்லுாரிகளிலும், www.tnhealth.org என்ற இணையதளத்திலும் பெற முடியும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சமர்ப்பிக்க, 31ம் தேதி கடைசி நாள்,'' என்றார்.
'ஸ்டிரைக்'கில் பங்கேற்பில்லை : 'டேக்டோ' திடீர் அறிவிப்பு

பதிவு செய்த நாள்22ஆக
2017
00:52

'ஜாக்டோ - ஜியோ' நடத்தும் வேலைநிறுத்த போராட்டத்தில், 'டேக்டோ' ஆசிரியர் கூட்டமைப்பு பங்கேற்கவில்லை என, அறிவித்துள்ளது. ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின், 75சங்கங்களின் கூட்டமைப்பான, ஜாக்டோ - ஜியோ சார்பில், இன்று வேலை நிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுஉள்ளது; இதில், 10 லட்சம் பேர் வரை பங்கேற்கதிட்டமிட்டுள்ளனர்.
இதில், தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பான, 'டேக்டோ' பங்கேற்காது என, அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து, அந்த அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், ஆரோக்கியதாஸ் கூறுகையில், ''ஏழாவது ஊதியக்குழு பரிந்துரையை ஆய்வு செய்யும் அமைப்புக்கு, காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. அதே போல், பங்களிப்பு ஓய்வூதிய திட்டக் குழுவுக்கும், புதிய தலைவர்நியமிக்கப்பட்டு உள்ளார். எனவே, குழுவின் பரிந்துரைகள், விரைவில் வரும் என்பதால், போராட்டத்தில்பங்கேற்கவில்லை,'' என்றார்

- நமது நிருபர் -
அரசு பள்ளிகளில் பாடம் நடத்த தற்காலிக ஆசிரியருக்கு உத்தரவு

பதிவு செய்த நாள்22ஆக
2017
00:47

ஆசிரியர்கள் வேலை நிறுத்தம் காரணமாக, பகுதி நேர ஆசிரியர்கள், 16 ஆயிரம் பேரும் பணிக்கு வந்து, பாடம் நடத்த உத்தரவிடப்பட்டு உள்ளது. அரசு பள்ளி ஆசிரியர்களின், 25க்கும் மேற்பட்ட சங்கத்தினர் அடங்கிய, 'ஜாக்டோ' கூட்டமைப்பும், அரசு ஊழியர்களின், 'ஜியோ' கூட்டமைப்பும் இணைந்து, இன்று, ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டம் அறிவித்து உள்ளன.
இதில், நான்கு லட்சத்துக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்க முடிவு செய்துள்ளனர்.

எனவே, அரசு பள்ளி களில், குறிப்பாக, தொடக்கப் பள்ளிகளில், இன்று வகுப்புகள் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, மாற்று ஏற்பாடுகளை செய்ய, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதன்படி, 'அரசு பள்ளிகளில் பணியாற்றும், 16 ஆயிரம் பகுதி நேர ஆசிரியர்கள், இன்று கட்டாயம் பள்ளிக்கு வர வேண்டும். 'வேலை நிறுத்த நாளில் பணியாற்றும், தற்காலிக தொகுப்பூதிய ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர் - ஆசிரியர் கழக ஆசிரியர்களுக்கு, ஒரு நாள் ஊதியம் கூடுதலாக வழங்கப்படும்.'பணி நிரந்தரம் செய்யும் போது, 'போனஸ்' மதிப்பெண் தரப்படும்' என, அதிகாரிகள் கூறிஉள்ளனர்.பல பள்ளிகளில், தலைமை ஆசிரியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதால், அங்கு அதிகாரிகளே, பள்ளிகளை திறக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

- நமது நிருபர் -
3,600 'டாஸ்மாக்' ஊழியர்கள் ரேஷன் கடைகளுக்கு மாற்றம்
பதிவு செய்த நாள்22ஆக
2017
00:32


'டாஸ்மாக்' கடைகளில் உபரியாக உள்ள ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

உச்ச நீதிமன்ற உத்தரவை அடுத்து, தமிழகத்தில், மாநில நெடுஞ்சாலைகளில் இருந்த, 3,321 மது கடைகள், ஏப்., முதல் மூடப்பட்டன. அவற்றில் பணிபுரிந்த ஊழியர்கள், வேறு கடைகளுக்கு மாற்றப்பட்டனர்.இருப்பினும், தங்களின் கல்வித் தகுதிக்குஏற்ப, அரசு துறைகளில் வேலை வழங்குமாறு, தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்துவந்தனர்.இந்நிலையில், உபரியாக உள்ள டாஸ்மாக் ஊழியர்களை, ரேஷன் கடைகளில் நியமிக்க, தமிழக அரசு உத்தரவிட்டு, அரசாணை பிறப்பித்துள்ளது.இதுகுறித்து, கூட்டுறவுமற்றும் உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:

கூட்டுறவு ரேஷன் கடைகளில், 3,134 விற்பனையாளர்கள், 443 எடையாளர்கள் என, மொத்தம், 3,577 காலி பணியிடங்கள் உள்ளன. டாஸ்மாக் கடைகளில், 15 ஆயிரத்து, 424 பேர் உபரியாக உள்ளனர்.எனவே, 10 மற்றும் பிளஸ் 2 முடித்த டாஸ்மாக் ஊழியர்கள், ரேஷன் கடைகளில் நியமிக்கப்பட உள்ளனர். அதன் படி, ரேஷன் விற்பனையாளர் பதவிக்கு, முதலாண்டுக்கு, மாதம், 5,000 ரூபாய்; எடையாளருக்கு, 4,300 ரூபாய் தொகுப்பூதியம் வழங்கப்படும்.அடுத்த ஆண்டில் இருந்து, விற்பனையாளருக்கு, 4,300 - 12 ஆயிரம் ரூபாய்; எடையாளருக்கு, 3,900 - 11 ஆயிரம் ரூபாய் என்ற, காலமுறை ஊதியம் வழங்கப்படும்.சில தினங்களில், டாஸ்மாக் நிறுவனத்திடம் இருந்து பட்டியல் பெறப்பட்டு, ரேஷன் கடைகளுக்கு ஊழியர்கள் நியமிக்கப்படுவர். அவர்களுக்கு, ரேஷன் தொடர்பாக, 15 நாட்கள் பயிற்சி வழங்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

இதுகுறித்து, டாஸ்மாக் ஊழியர்கள் கூறியதாவது:மது கடைகளில், பட்டதாரிகள், ஆசிரியர் பயிற்சி முடித்தவர் என, பலர் வேலை செய்கின்றனர்.கல்வி தகுதிக்கு ஏற்ப, வேறு அரசு துறைகளில் வேலை வழங்குமாறு கேட்டால், ரேஷன் கடைகளில் குறைந்த ஊதியத்தில் வேலை வழங்க, அரசு உத்தரவிட்டுள்ளது.அதிலும், டாஸ்மாக் பணி அனுபவத்தை கணக்கில் எடுத்து கொள்ளவில்லை. இது, ஏற்புடையது அல்ல.இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
தாலுகா அலுவலகங்கள் இன்று செயல்படாது : வருவாய் அலுவலர்கள் அறிவிப்பு


பதிவு செய்த நாள்22ஆக
2017
00:01

மதுரை: 'ஜாக்டோ-ஜியோ போராட்டத்தில் வருவாய்த் துறையில் உதவியாளர் முதல் அலுவலர்கள் வரை பங்கேற்பதால் தாலுகா அலுவலகங்கள் இன்று(ஆக., 22) செயல்படாது' என வருவாய்த்துறை அலுவலர் சங்கம் அறிவித்துள்ளது.

சங்க பொதுச்செயலர் பார்த்திபன், செயலர் முருகையன் கூறியதாவது: புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என மறைந்த முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். அதை நிறைவேற்றாமல் அரசு காலம் தாழ்த்தி வருகிறது. கோரிக்கைகளை நிறைவேற்றக்கோரி ஜாக்டோ-ஜியோ போராட்டம் அறிவித்தது.நிர்வாகிகளை பேச்சு வார்த்தைக்கு அழைக்காமல், தலைமை செயலர் போராட்டத்தில் ஈடுபட்டால் ஒரு நாள் சம்பளம் பிடித்தம் செய்யப்படும் என அறிக்கை அளித்திருப்பது கண்டனத்திற்குரியது. இன்று நடக்கும் ஒரு நாள் வேலைநிறுத்தத்தில், மாநிலத்தில்வருவாய் அலுவலர் சங்கத்தினர் உதவியாளர் முதல் தாசில்தார் வரை 12 ஆயிரம் பேர் பங்கேற்பர். இதனால் தாலுகா உட்பட வருவாய் அலுவலகங்கள் செயல்படாது.
செப்., 7ல் நடக்கும் காலவரையற்ற வேலை நிறுத்தத்திலும் வருவாய் அலுவலர்கள் பங்கேற்பர், என்றனர்.
சபரிமலையில் ஜேசுதாஸ் தரிசனம்

பதிவு செய்த நாள்21ஆக
2017
23:55




சபரிமலை: கர்நாடக இசைக் கலைஞரும், பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் சபரிமலையில் சுவாமி தரிசனம் செய்தார்.சபரிமலையில் ஆவணி மாத பூஜைகள் நடக்கின்றன. நேற்று காலை ஜேசுதாஸ், மனைவி பிரபாவுடன் இருமுடி கட்டு ஏந்தி சன்னிதானம் வந்தார். தேவசம்போர்டு அதிகாரிகள் வரவேற்றனர்.ஸ்ரீகோயில் முன் வந்த அவர்களுக்கு பூஜாரி பிரசாதம் கொடுத்தார். கணபதி கோயிலில் வழிபாடு நடத்திய பின் இருமுடி கட்டு அவிழ்த்து, ஐயப்பனுக்கு நெய் அபிஷேகத்திற்காக கொடுத்தார். மாளிகைப்புறம் கோயிலில், நாக தோஷம் தீர்ப்பதற்காக வீணை வாசிப்போரின் இசையை ரசித்தார்.

NEWS TODAY 09.07.2026