Thursday, August 24, 2017

‘நீட்’ தேர்வுக்கு விலக்குகோரி சென்னை மருத்துவக்கல்லூரி முன்பு, பயிற்சி டாக்டர்கள் நேற்று மனித சங்கிலி போராட்டம் நடத்தினர்.
ஆகஸ்ட் 24, 2017, 04:00 AM

சென்னை,

மனித சங்கிலி போராட்டத்தில் பட்ட மேற்படிப்பு மாணவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்கள் சங்கத்தினர் பங்கேற்றனர்.

இதுகுறித்து பயிற்சி டாக்டர்கள் அருள், கார்த்திகேயன் நிருபர்களிடம் கூறுகையில், “கிராமப்புற மாணவர்களுக்கு மருத்துவர்கள் ஆக வேண்டும் என்ற கனவு ‘நீட்’ தேர்வினால் தகர்ந்து போகும் நிலை நிச்சயம் உருவாகும். எனவே ‘நீட்’ தேர்வில் இருந்து தமிழகத்துக்கு விலக்கு வேண்டும். ‘நீட்’ தேர்வு குறித்த தமிழக அரசின் அவசர சட்டத்தை மத்திய அரசு புறக்கணித்தது, பெரிய ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் தவறவிட்டாலும், அடுத்த வருடத்தில் இருந்தாவது ‘நீட்’ தேர்வில் நிரந்தர விலக்கு வேண்டும்”, என்றனர்.
பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்கிறது

பிற்படுத்தப்பட்டோர் வருமான உச்சவரம்பு ரூ.8 லட்சமாக உயர்கிறது
 கல்வி, வேலைவாய்ப்புக்கான இடஒதுக்கீட்டு சலுகையை பெறுவதற்கு, பிற்படுத்தப்பட்டோரின் வருமான உச்சவரம்பை ரூ.8 லட்சமாக உயர்த்த மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது.
புதுடெல்லி, 
மத்திய அரசு கல்வி நிறுவனங்களில் சேர்ந்து படிக்கவும், மத்திய அரசின் வேலை வாய்ப்புகளைப் பெறவும் ஓ.பி.சி. என்றழைக்கப்படுகிற இதர பிற்படுத்தப்பட்டோருக்கு தற்போது 27 சதவீத இடஒதுக்கீடு உள்ளது.
இதற்கு ஓ.பி.சி. சான்றிதழ் அவசியம்.
இந்த சான்றிதழை பெற வேண்டுமானால், அதற்கு பெற்றோரின் ஆண்டு வருமானம் (கிரிமிலேயர்) ரூ.6 லட்சத்துக்குள் இருக்க வேண்டும் என்பது தற்போது அமலில் இருந்து வருகிற விதிமுறை ஆகும். ஆனால் தற்போதைய விலைவாசி உயர்வு, பண வீக்க சூழலில் இந்த வரையறைக்குள் வர முடியாத நிலை உள்ளதால் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு சலுகையை பெற்று அனுபவிக்க முடியவில்லை.
இதனால் இந்த உச்சவரம்பை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வந்தது.
இந்த கிரிமிலேயரை ரூ.6 லட்சத்தில் இருந்து ரூ.8 லட்சமாக உயர்த்தலாம் என மத்திய அரசுக்கு சமூக நீதித்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது. இது தொடர்பாக சமூக நீதித்துறை அமைச்சகம், ஓராண்டுக்கு முன்னதாக மந்திரிசபை குறிப்பை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தது. அது இவ்வளவு காலமும் நிலுவையில் போடப்பட்டிருந்தது.
இந்த நிலையில் மத்திய மந்திரிசபை கூட்டம் டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து நிதி மந்திரி அருண் ஜெட்லி நிருபர்களுக்கு தெரிவித்தார்.
அப்போது அவர், ‘‘இதர பிற்படுத்தப்பட்டோருக்கான கிரிமிலேயர் உச்சவரம்பு (ஆண்டு வருமானம்) ரூ.6 லட்சத்தை ரூ.8 லட்சமாக உயர்த்த வேண்டும் என்ற சமூக நீதி மற்றும் அதிகாரம் வழங்கல் துறை அமைச்சகத்தின் பரிந்துரையை அரசு ஏற்றுக்கொண்டு விட்டது’’ என்று கூறினார்.
இது இதர பிற்படுத்தப்பட்டோர் மத்திய அரசின் கல்வி, வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீட்டின் சலுகையை பெற்று அனுபவிக்க உதவியாக அமையும்.
இதர பிற்படுத்தப்பட்டோர் அனைவரும் இடஒதுக்கீட்டின் சலுகையை பெறுவதை உறுதி செய்யும் வகையில், மத்திய பட்டியலில் பிற்படுத்தப்பட்ட வகுப்புகளை துணை வகைப்படுத்த மத்திய அரசு பரிசீலிக்கிறது.
இது குறித்து ஆராய்வதற்கு ஒரு கமி‌ஷனை அமைப்பதற்கு மத்திய மந்திரிசபை தனது ஒப்புதலை அளித்தது. இது மத்திய மந்திரி சபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட மற்றொரு முக்கிய முடிவு ஆகும்.
இந்த கமி‌ஷன், உருவாக்கப்பட்ட நாளில் இருந்து 12 வாரங்களில் தனது அறிக்கையை மத்திய அரசிடம் தாக்கல் செய்யும்.
மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிற முக்கிய முடிவுகள் வருமாறு:–
* பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கையை குறைத்து, அவற்றை வலுவாக்க மத்திய அரசு விரும்புகிறது. இதற்காக பொதுத்துறை வங்கிகளை ஒருங்கிணைப்பதற்கான திட்டங்களை மேற்பார்வையிட மாற்று வழிமுறை ஒன்றை உருவாக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்தது.
* இந்தியா, நேபாளம் இடையே போதைப்பொருள் கடத்தலை தடுக்கிற விதத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொள்ள மத்திய மந்திரிசபை ஒப்புதல் கொடுத்தது.
* மத்திய அரசின் ‘சம்பாடா’ திட்டத்தின் பெயரை, பிரதான் மந்திரி கிசான் சம்பா யோஜனா (பிஎம்கேஎஸ்ஒய்) என்று மாற்றுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிகள் குழு ஒப்புதல் அளித்தது.
* நஷ்டத்தில் இயங்கி வரும் மத்திய அரசின் பாரத் வேகன் அன்ட் என்ஜினீயரிங் கம்பெனியை மூடி விடுவதற்கு பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய மந்திரிசபை குழு ஒப்புதல் வழங்கியது. இதன் 626 ஊழியர்கள் விருப்பு ஓய்வில் அனுப்பப்படுவர்.
இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு

By DIN  |   Published on : 24th August 2017 01:11 AM  |  
arun-jetly
மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்சவரம்பு (கிரீமிலேயர்) ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை தவிர்க்கும் வகையில் கிரீமிலேயர் என்ற அளவுகோல் உள்ளது.
இப்பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுபவர்களுக்கு, மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படாது. இதுவரை கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பு, ஆண்டுக்கு ரூ.6 லட்சமாக இருந்தது.
அதாவது, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது.
இந்நிலையில், இந்த உச்சவரம்பை ரூ.8 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்கள் இனி இடஒதுக்கீடு பெற முடியும்' என்றார்.
ஓபிசி உட்பிரிவு விவகாரம்:
இதேபோல, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகளை மத்தியப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஓர் ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டைப் பொருத்தவரை, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகள் மத்தியப் பட்டியலில் இடம்பெறுவதில்லை. பெரும்பாலான மாநிலங்களின் இடஒதுக்கீடு பட்டியல்களிலும் இந்த உட்பிரிவுகள் சேர்க்கப்படுவதில்லை.
குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 11 மாநிலங்களின் இடஒதுக்கீடு பட்டியல்களில் மட்டுமே இந்த உட்பிரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில்தான் வேலைவாய்ப்புகளில் இந்த உட்பிரிவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஓபிசி உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பட்டியலில் ஓபிசி வகுப்பில் எந்தெந்த உட்பிரிவுகளை சேர்ப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஓர் ஆணையம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அருண் ஜேட்லி.

மனிதநேயம் தேவை

By எம். அருண்குமார்  |   Published on : 24th August 2017 01:15 AM  |   
மருத்துவரை கடவுளாககூட மதிப்பவர்கள் நாம். ஆனால் தற்போது அதற்கு தகுதியில்லாதவர்களாக மருத்துவர் செயல்பட்டு வருகின்றனர். மருத்துவரிடத்தில் உண்மையை மறைக்கக் கூடாது என்பார்கள். அப்போதுதான், நாம் கூறும் நோய் அறிகுறிகளை கேட்டு அவர் சரியான சிகிச்சையை அளிக்க உதவியாக இருக்கும்.
ஆனால் தற்போது நோயாளிகளிடம் பேசுவதற்குகூட மருத்துவர்களுக்கு நேரமில்லை. தன்னை பார்க்க வரும் நோயாளிகளை வந்த உடனேயே ஓரிரு வார்த்தைகள் மட்டுமே கேட்டுவிட்டு உடனடியாக மருந்து சீட்டு எழுதி, ஊசி போடுவதற்கு அனுப்பி விடுகின்றனர்.
தன்னிடம் யார் வந்தாலும் அவர்களுடைய நோய் தீர்ப்பது ஒரு மருத்துவரின் கடமை. முன்காலத்தில் மருத்துவர்கள் தம்மிடம் வரும் நோயாளிகளை பரிவுடன், கனிவுடன் விசாரித்து அவர்களுடைய நோயை பேசியே தீர்த்து வைத்துள்ளனர். மருத்துவர்கள் கனிவுடன் பேசுவதிலேயே பாதி நோய் குணமாகிவிடும்.
மருத்துவர்கள் கனிவுடன் பேசி நோய் குறித்த அச்சத்தை போக்குபவராக இருக்க வேண்டும். பெரிய மருத்துவமனைகளில் மிக அதிகமான மக்கள் கூட்டத்தினால் சில நேரம் நல்ல சிகிச்சை கிடைப்பதில்லை.
மருத்துவர்கள் ஒவ்வொருவரிடமும் அதிக நேரம் செலுத்த முடிவதில்லை. தற்போது மருத்துவ சேவை வியாபாரமாகிவிட்டது. அதனால் அவர்களுக்கு நோயாளிகளுடன் பேச நேரமில்லை.
அவர்களுடைய நோயின் தாக்கம் குறித்து அறியாமல் அவசர கதியில் சிகிச்சை அளிக்கின்றனர்.
நண்பர் ஒருவர் கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தன்னுடைய கைக்குழந்தையை இரவு சுமார் 8 மணிக்கு குழந்தை மருத்துவரிடம் அதுவும் பெண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றுள்ளார்.
மருத்துவமனையின் இருந்த பணியாளர் ஏற்கனவே வழங்கப்பட்ட டோக்கன் அடிப்படையில் நோயாளிகளை பார்க்க இரவு 8.30 மணிக்கு மேலாகிவிடும். அதனால் டோக்கன் வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. இதற்கு மேல் மருத்துவரை பார்க்க முடியாது எனக் கூறிவிட்டார்.
அன்று ஞாயிற்றுக்கிழமையானதால் வேறு மருத்துவர்களும் அந்தப் பகுதியில் இல்லை. அதனால் அவர் மருந்து கடைக்கு சென்று குழந்தையின் நிலையை கூறி கடையில் மருந்து வாங்கிச் சென்றார்.
எங்கள் ஊரில் மற்றொரு குழந்தைகளுக்கான மருத்துவர் இருக்கிறார். மிகவும்
அவசர காலத்தில் நள்ளிரவு நேரத்தில் குழந்தைகளுக்கு அவசர சிகிச்சை தேவையான போது அவரது வீட்டுக் கதவை தட்டினால் கண்டிப்பாக திறக்கவே மாட்டார்கள்.
இவர்களை பார்க்கும்போது மிக மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. அதேபோல மற்றொரு மருத்துவர் இருதய நோய் சிகிச்சை நிபுனர். ஆனால் அவரிடம் சிகிச்சைக்கு செல்லும் நோயாளிகளுக்கு இருதய நோய் அதிகரித்துவிடும். அந்த அளவுக்கு அவர் நோயாளிகளிடம் நடந்து கொள்வார்.
இவை தனியார் கிளினிக் நடத்தும் மருத்துவர்களின் நிலமை. ஆனால் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்களின் நிலமை இதைவிட மோசமானதாக இருக்கின்றது.
மக்களுடைய வரிப்பணத்தில் மருத்துவக் கல்வி பயின்று, அரசு மருத்துவமனையில் பணிபுரிந்து மக்களுடைய வரிப்பணத்தில் சம்பளம் வாங்குபவர்கள் அதே பொதுமக்களை கனிவுடனும், பரிவுடனும் கவனிப்பதில்லை.
அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் எரிச்சலுடன் பேசுகின்றனர். அரசு மருத்துவனை என்றாலே சேவைதான். சேவை செய்ய வந்துவிட்ட பிறகு மக்களுக்கு சேவை செய்யாமல் வணிக ரீதியில் கிளினிக் நடத்தும் மருத்துவர்களைபோல அரசு மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளிடம் நடந்து கொள்கின்றனர்.
இதற்கு எடுத்துக்காட்டு, அண்மையில் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் பணி நேரத்தில் மருத்துவர்கள் இல்லாததால் இருவர் இறந்த சம்பவம்.
மருத்துவர்கள் சமுதாயத்தையே நான் குறைக் கூறவில்லை. குழந்தை மருத்துவருக்கு குழந்தை மீது பாசமும், கனிவும் இருக்க வேண்டியது அவசியம்.
எவ்வளவு நேரமானாலும் பரவாயில்லை, கடுமையான காய்ச்சலால் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு சிகிச்சை அளித்துவிட்டு தான் செல்வேன் என்று இருப்பவரே நல்ல மருத்துவர். ஆனால் அவ்வாறான மனநிலை தற்போது மருத்துவர்களுக்கு இல்லை.
கிராமபுறங்களில் மருத்துவச் சேவை குறைவாக இருப்பதால் கிராமம் மற்றும் மலைப் பகுதியில் பணிபுரியும் அரசு மருத்துவர்களுக்கு கூடுதல் சலுகை வழங்கப்படுகிறது.
அவர்களுடைய மருத்துவ மேல்படிப்பு நுழைவுத் தேர்வில் வழங்கப்படும் மதிப்பெண்களுடன், அவர்கள் கிராமப்புறம் மற்றும் மலைப் பகுதிகளில் பணிபுரிந்தமைக்காக வழங்கப்படும் கூடுதல் மதிப்பெண்களும் சேர்க்கப்படுவதால் மருத்துவர்களுக்கு மேல்படிப்பில் எளிதாக சேர முடிகிறது.
கிராமபுற மக்களிடம் எளிதாக பழகி, கனிவுடன், பரிவுடன் நடந்து கொள்ள அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. அத்தகைய பயிற்சி பெற்றவர்கள் எந்த பகுதியில் பணிபுரிந்தாலும், நோயாளிகளின் நிலை அறிந்து சிகிச்சை அளிக்க முடியும்.
ஆனால் அவர்கள் நுழைவுத் தேர்வு கூடுதல் மதிப்பெண்கள் பெறுவதற்காக மட்டுமே தற்போது கிராமபுறங்களையும், மலை பகுதிகளையும் நோக்கி பணி செய்ய செல்கின்றனர்.
நோயாளிகளுக்கு ஏற்பட்டுள்ள நோயை தங்களுடைய கனிவான, மனிதாபிமான பேச்சாலேயே பாதியாக குறைத்துவிடுபவராக மருத்துவர் இருக்க வேண்டும். மருந்தால் குணமாவது மீதியாக இருக்க வேண்டும்.
தங்களை மருத்துவர் கனிவாக நடத்த வேண்டுமென நோயாளிகள் எதிர்பார்க்கின்றனர். அதனால் கனிவான மருத்துவரை தேடுகின்றனர். ஆனால் கண்டுபிடிப்பது எளிதான காரியமாக இல்லை.


நம்பிக்கை துரோகம்!

By ஆசிரியர்  |   Published on : 24th August 2017 01:17 AM  |   
மருத்துவம் மற்றும் பல் மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கை, 'நீட்' எனப் பரவலாக அறியப்படும் தகுதி காண் நுழைவுத் தேர்வின் அடிப்படையில் மட்டுமே நடத்தப்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் அறுதியிட்டுக் கூறிவிட்டிருக்கிறது. மாணவர் சேர்க்கைக்கான கலந்தாய்வை உடனடியாகத் தொடங்கி, செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என்கிற நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து, மாணவர் சேர்க்கைக்கான தரவரிசைப் பட்டியலும் தமிழக அரசால் வெளியிடப்பட்டுவிட்டது.
தமிழகத்தில் 3,534 பொது மருத்துவ இடங்கள் உள்ளன. இதில் 2,445 இடங்கள் அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், மீதமுள்ள இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் தமிழக அரசுக்கு ஒதுக்கப்பட்டுக் கிடைக்கின்றன. இந்த இடங்கள் அனைத்துமே, இனிமேல் 'நீட்' தேர்வின் தேர்ச்சி அடிப்படையில் மட்டுமே நிரப்பப்படும் என்கிற நிலைமை உறுதியாகிவிட்டது.
தமிழக அரசின் சமச்சீர் கல்வித் திட்டத்தில் படித்து, அதிக மதிப்பெண்களுடன் தேறியவர்களில் பெரும்பாலோருடைய மருத்துவக் கல்லூரிக் கனவு தகர்ந்திருக்கிறது. பிளஸ் 2 தேர்வில் குறைந்த மதிப்பெண்களும், தனியார் பயிற்றுவித்தல் மூலமாகப் படித்ததால் 'நீட்' தேர்வில் அதிக மதிப்பெண்ணும் பெற்ற அரசுப் பள்ளி மாணவர்கள் மருத்துவக் கல்லூரியில் சேரும் வாய்ப்பைப் பெறுகிறார்கள். அதிக கட்டணம் செலுத்தி தனியார் பள்ளிகளில் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தில் படிப்பவர்கள் பலரும் 'நீட்' தேர்வின் மூலம் மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெறுகிறார்கள்.
'நீட்' தேர்வின் மூலம் மட்டுமே மருத்துவக் கல்லூரிச் சேர்க்கை என்கிற நிலைமை அநேகமாக உறுதிப்படுத்தப்பட்டுவிட்ட நிலையில், சமச்சீர் கல்வித்திட்ட மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது மத்திய வர்த்தகத் துறை இணையமைச்சர் நிர்மலா சீதாராமனின் அறிவிப்பு. தமக்கு எந்தவிதத்திலும் தொடர்பே இல்லாத சுகாதாரத் துறை சார்ந்த பிரச்னையில் அவர் தலையிட்டிருக்க வேண்டிய அவசியமே இருக்கவில்லை.
'தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்குமானால், இந்த ஓர் ஆண்டுக்கு மட்டும் தமிழகத்துக்கு 'நீட்' அடிப்படையிலான மாணவர் சேர்க்கையிலிருந்து விலக்கு அளிப்பதற்கு மத்திய அரசு உதவும்' என்கிற நிர்மலா சீதாராமனின் அறிக்கைதான் ஆயிரக்கணக்கான தமிழக கிராமப்புற மாணவர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. இப்போது அந்த நம்பிக்கை தகர்ந்து விட்டிருக்கிறது.
மத்திய அரசும், தமிழக அமைச்சர்களிடம் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியது. மத்திய சட்ட அமைச்சகமும், மனிதவள மேம்பாட்டு அமைச்சகமும், சுகாதார அமைச்சகமும் தமிழகத்தில் 'நீட்' தேர்வுக்கு ஓர் ஆண்டு விலக்குக் கோரும் அவசரச் சட்ட முன்வரைவுக்கு ஒப்புதல் அளித்தன. நிகழாண்டுக்கு மட்டும் விலக்கு அளிக்கப்படும் என்று உத்தரவாதம் அளித்த மத்திய அரசு, உச்சநீதிமன்றத்தில் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டதன் விளைவுதான், கடந்த 12 ஆண்டுகள் மருத்துவக் கல்விக் கனவுடன் அரசுப் பள்ளிகளில் படித்துத் தேறிய மாணவர்களின் வருங்காலத்தை இப்போது கேள்விக்குறியாக்கி இருக்கிறது.
ஓர் ஆண்டுக்கு விலக்களிப்போம் என்று உறுதியளித்திருந்தது மத்திய அரசு. 'தமிழக அரசின் அவசரச் சட்ட மசோதாவுக்கு மத்திய சட்ட அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. இருப்பினும், குறிப்பிட்ட மாநிலத்துக்கு மட்டும் விலக்கு அளிக்கக் கூடாது என மத்திய அரசு முடிவு செய்துள்ளது' என்கிற கூடுதல் சொலிசிடர் ஜெனரல் துஷார் மேத்தாவின் தெரிவித்தல்தான், உச்சநீதிமன்றத் தீர்ப்புக்குக் காரணம் எனும்போது, நிர்மலா சீதாராமனும், மத்திய அரசும் நடத்தியதை நயவஞ்சக நாடகம் என்பதா? நம்பிக்கை துரோகம் என்பதா?
கிராமப்புற, அடித்தட்டு வர்க்க மாணவர்கள் மருத்துவக் கல்வி பெற வேண்டும் என்பதற்காக மக்கள் வரிப்பணத்தில் மாவட்டத்துக்கு மாவட்டம் மிகுந்த முதலீட்டில் நிறுவப்பட்டிருக்கும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், அவர்களுக்கு இடமில்லை. தனியார் பள்ளிகளில் தாராளமாக நன்கொடையும் கட்டணமும் செலுத்திப் படித்த வசதி பெற்ற மாணவர்களுக்குத்தான் பெரும்பான்மை அரசு மருத்துவக் கல்லூரி இடங்கள் என்கிற நிலைமை ஏற்பட இருக்கிறது. அதுமட்டுமல்ல, இந்த நகர்ப்புற மாணவர்கள் மருத்துவக் கல்லூரிப் படிப்புக்குப் பின் கிராமப்புறங்களில் சேவை செய்யப் போவதுமில்லை.
எல்லாமே முடிந்துவிடவில்லை. அரசு மருத்துவக் கல்லூரிகளின் கட்டணத்தைத் தனியார் மருத்துவக் கல்லூரிக் கட்டணத்துக்கு நிகராக உயர்த்த அரசு யாரிடமும் கேட்க வேண்டியதில்லை. அந்த மருத்துவக் கல்லூரிகளில் 'நீட்' தேர்வில் வெற்றி பெற்ற அரசுப் பள்ளி மாணவர்களுக்குக் கட்டணச் சலுகை வழங்குவதையும் யாரும் தடுத்துவிட முடியாது. இதையாவது தமிழக அரசு உடனடியாக செய்தாக வேண்டும்.
இன்னொன்றும் இருக்கிறது. கல்வி பெறும் உரிமைச் சட்டத்தில் இருப்பதுபோல, எல்லா அரசு மருத்துவக் கல்லூரிகளிலும், அந்தந்தப் பகுதியிலுள்ள மாணவர்களுக்குத்தான் முன்னுரிமை என்று மாநில அரசு உத்தரவு பிறப்பிக்க முடியும். அந்தந்தப் பகுதி மாணவர்களுக்காக உருவாக்கப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில், வெளியூர் மாணவர்கள் வந்து படிப்பதும், உள்ளூர் மாணவர்கள் புறக்கணிக்கப்படுவதும் நியாயமே இல்லை.
மத்திய அரசின் நம்பிக்கை துரோகம், சரியான வாதங்களை முன்வைத்து சமூக நீதியை நிலைநாட்ட இயலாத மாநில அரசின் கையாலாகாத்தனம், கிராமப்புற மாணவர்களின் நிலையைப் புரிந்து கொள்ள இயலாத நீதிமன்றத்தின் வறட்டுச் சட்ட வியாக்கியானம் இவையெல்லாம், லட்சக்கணக்கான ஏழைப் பெற்றோரின், கிராமப்புற மாணவர்களின் கனவுகளைத் தகர்த்திருக்கிறதே... நெஞ்சு பொறுக்குதில்லையே..!

எம்.பி.பி.எஸ். தர வரிசைப் பட்டியல் வெளியீடு: 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்பு

By DIN  |   Published on : 24th August 2017 04:39 AM  |   
radhakrishnan
தரவரிசைப் பட்டியலை வெளியிடும் சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ்., பிடிஎஸ் படிப்புகளுக்கான தர வரிசைப் பட்டியல் புதன்கிழமை வெளியிடப்பட்டது. இதன்படி 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
51 ஆயிரம் விண்ணப்பம்: தமிழகத்தில் மருத்துவம் (எம்.பி.பி.எஸ்.) மற்றும் பல் மருத்துவப் (பிடிஎஸ்) படிப்புகளில் அரசு இடங்களுக்கு 31,629 விண்ணப்பங்களும் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கு 20,244 விண்ணப்பங்களும் என மொத்தம் 51,873 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டன. அவற்றில் அரசு இடங்களுக்கு 27,212 விண்ணப்பங்களும், நிர்வாக ஒதுக்கீட்டுக்கு 18,040 விண்ணப்பங்களும் தகுதியானவை.
மொத்த இடங்கள்: தமிழகத்தில் 22 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 2,445, ராஜா முத்தையா கல்லூரியில் 127, அகில இந்திய ஒதுக்கீடு போக மீதம் சமர்ப்பிக்கப்பட்ட இடங்கள் 102, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 860 என மொத்தம் 3,534 அரசு ஒதுக்கீட்டு எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. இதுதவிர 592 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
பல் மருத்துவத்தைப் பொருத்தவரை அரசு கல்லூரியில் 85, ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரியில் 68, தனியார் மருத்துவக் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்கள் 1,045 என மொத்தம் 1,198 அரசு பிடிஎஸ் இடங்கள் உள்ளன. இதுதவிர, 715 நிர்வாக ஒதுக்கீட்டு இடங்கள் உள்ளன.
தரவரிசைப் பட்டியல்: தகுதி பெற்ற விண்ணப்பங்களின் அடிப்படையிலான தரவரிசைப் பட்டியல் மருத்துவக் கல்வி இயக்ககத்தில் புதன்கிழமை வெளியிடப்பட்டது. சுகாதாரத் துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் தரவரிசைப் பட்டியலை வெளியிட்டார். மருத்துவக் கல்வி இயக்குநர் டாக்டர் ஏ.எட்வின் ஜோ, தேர்வுக் குழுச் செயலர் டாக்டர் ஜி.செல்வராஜ் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

ஓசூர் மாணவர் முதலிடம்: தரவரிசைப் பட்டியலில் 23,830 பேர் மாநிலப்பாடத் திட்ட மாணவர்கள், 3,382 பேர் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்கள். அதில் அரசு இடங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரைச் சேர்ந்த சிபிஎஸ்இ மாணவர் ஆர்.சந்தோஷ், நீட் தேர்வில் 656 மதிப்பெண் பெற்று தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ளார். கோவை பொன்னையராஜபுரத்தைச் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர் ஜி.எம். முகேஷ் கண்ணா, நீட் தேர்வில் 655 மதிப்பெண் பெற்று இரண்டாம் இடத்தையும், திருச்சியைச் சேர்ந்த மாநிலப் பாடத்திட்ட மாணவர் இசட். சையத் ஹஃபீஸ் 651 மதிப்பெண் பெற்று மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
முதல் 20 இடங்களில் 15 சிபிஎஸ் இ மாணவர்கள்: முதல் 20 இடங்களைப் பெற்றவர்களில் 15 பேர் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்கள், 5 பேர் மாநிலப் பாடத் திட்ட மாணவர்கள்.
2,224 இடங்களுக்கு வாய்ப்பு: மொத்தமுள்ள 3,534 அரசு எம்.பி.பி.எஸ். இடங்களில் சுமார் 63 சதவீத இடங்கள் மாநிலப் பாடத்திட்டத்தில் படித்த மாணவர்களுக்கு கிடைக்க வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
இது தொடர்பாக துறைச் செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியது: மொத்தம் உள்ள அரசு இடங்களில் சுமார் 2,224 இடங்கள் மாநிலப் பாடத்திட்ட மாணவர்களுக்கும், 1,310 இடங்கள் சிபிஎஸ்இ உள்ளிட்ட பிற பாடத்திட்ட மாணவர்களுக்கும் கிடைக்க வாய்ப்புள்ளது என்றார்.
இன்று முதல் கலந்தாய்வு: மருத்துவக் கலந்தாய்வு வியாழக்கிழமை (ஆக.24) முதல் தொடங்க உள்ளது. முதல்நாளில் விளையாட்டுப் பிரிவு, மாற்றுத்திறனாளிகள், ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்குக் கலந்தாய்வு நடைபெறும். இதில் பங்கேற்க 48 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஓமந்தூரார் பல்நோக்கு சிறப்பு மருத்துவமனையில் காலை 11 மணிக்கு கலந்தாய்வு தொடங்கும்.
பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வு ஆகஸ்ட் 25-ஆம் தேதி முதல் தொடங்கும். கலந்தாய்வில் பங்கேற்பதற்காக தொலைபேசி மூலமும், குறுந்தகவல் மூலமும் அழைப்பு அனுப்பப்பட்டுள்ளது. அழைப்பு கிடைக்கப் பெறாதோர் தரவரிசை மற்றும் கலந்தாய்வு அட்டவணையின் அடிப்படையில் கலந்தாய்வில் பங்கேற்கலாம்.
இடைவிடாமல் கலந்தாய்வு: செப்டம்பர் 4-ஆம் தேதிக்குள் கலந்தாய்வை நடத்தி முடிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் விநாயகர் சதுர்த்தி, ஞாயிற்றுக்கிழமை உள்ளிட்ட அனைத்து விடுமுறை தினங்களில் கூட இடைவிடாமல் கலந்தாய்வு நடைபெறும்.
ஒரே நேரத்தில் இடங்கள் தேர்வு: அரசு இடங்களுக்கான பொதுப்பிரிவு கலந்தாய்வின்போது, கலந்தாய்வு அரங்கில் உள்ள திரையில் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களுக்கான விவரங்களும் இடம்பெறும். ஒருவேளை எதிர்பார்த்த அரசுக் கல்லூரியில் இடம் கிடைக்காத மாணவர்கள், விருப்பப்பட்டால் நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களை அப்போதே தேர்வு செய்யலாம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


முதுநிலை இன்ஜி., படிப்பில் 82 சதவீத இடங்கள் காலி

பதிவு செய்த நாள்24ஆக
2017
00:00

அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., படிப்புகளில், 82 சதவீத இடங்கள் மாணவர்கள் இன்றி காலியாக உள்ளன. பி.இ., - பி.டெக்., முடித்த மாணவர்கள், மத்திய அரசின், 'கேட்' அல்லது மாநில அரசின், 'டான்செட்' நுழைவு தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே, முதுநிலை படிப்பில் சேர்க்கப்படுகின்றனர். இந்த தேர்வுப்படி, அண்ணா பல்கலையின் இணைப்பு கல்லுாரிகளில், எம்.இ., - எம்.டெக்., - எம்.ஆர்க்., மற்றும் எம்.பிளான் படிப்புகளில், கவுன்சிலிங் நடத்தி, மாணவர்கள் சேர்க்கப்படுகின்றனர். இந்த ஆண்டுக்கான, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங், ஆக., 20 முதல், 23 வரை நடந்தது. மொத்தம், 300க்கும் மேற்பட்ட கல்லுாரிகளில், 19 ஆயிரத்து, 677 இடங்களுக்கு கவுன்சிலிங் நடந்தது. இதில், 4,985 பேர் தகுதி பெற்றனர்; 1,359 பேர் கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. பிடித்த பாடப்பிரிவு, கல்லுாரி கிடைக்காததால், 148 பேர் இடங்களை தேர்வு செய்யவில்லை. மீதம், 3,478 பேருக்கு இடங்கள் ஒதுக்கப்பட்டன.

மொத்த இடங்களில், 18 சதவீதம் மட்டும் நிரம்பியது. சேர மாணவர்கள் இன்றி, மீதம், 82 சதவீத இடங்கள் காலியாக உள்ளது. இதனால், இன்ஜி., கல்லுாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. மிகவும் சொற்ப இடங்களில், மாணவர் சேர்க்கை பெற்ற கல்லுாரிகள், வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்புகளை முடித்துக்கொள்ள முடிவு செய்துள்ளன.

- நமது நிருபர் -

NEWS TODAY 10.07.2026