Thursday, August 24, 2017

ஓபிசி பிரிவினருக்கான கிரீமிலேயர் உச்ச வரம்பு ரூ.8 லட்சமாக உயர்வு

By DIN  |   Published on : 24th August 2017 01:11 AM  |  
arun-jetly
மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடு பெறுவதற்கான வருமான உச்சவரம்பு (கிரீமிலேயர்) ரூ.8 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் (ஓபிசி) கல்வி, பொருளாதாரத்தில் முன்னேறியவர்களுக்கு இடஒதுக்கீடு வழங்குவதை தவிர்க்கும் வகையில் கிரீமிலேயர் என்ற அளவுகோல் உள்ளது.
இப்பிரிவின்கீழ் வகைப்படுத்தப்படுபவர்களுக்கு, மத்திய அரசுப் பணிகளில் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கான இடஒதுக்கீடு வழங்கப்படாது. இதுவரை கிரீமிலேயர் வருமான உச்ச வரம்பு, ஆண்டுக்கு ரூ.6 லட்சமாக இருந்தது.
அதாவது, ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மேல் உள்ளவர்கள் இடஒதுக்கீடு பெற முடியாது.
இந்நிலையில், இந்த உச்சவரம்பை ரூ.8 லட்சமாக மத்திய அரசு உயர்த்தியுள்ளது. தில்லியில் புதன்கிழமை மத்திய அமைச்சரவை கூட்டத்தில், இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.
இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 'இதர பிற்படுத்தப்பட்ட பிரிவினரில் ஆண்டு வருமானம் ரூ.8 லட்சம் வரை உள்ளவர்கள் இனி இடஒதுக்கீடு பெற முடியும்' என்றார்.
ஓபிசி உட்பிரிவு விவகாரம்:
இதேபோல, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகளை மத்தியப் பட்டியலில் சேர்ப்பது தொடர்பாக ஆய்வு மேற்கொள்ள ஓர் ஆணையம் அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை புதன்கிழமை ஒப்புதல் அளித்துள்ளது.
இதுகுறித்து மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
நம் நாட்டைப் பொருத்தவரை, இதர பிற்படுத்தப்பட்டோர் வகுப்பில் உள்ள உட்பிரிவுகள் மத்தியப் பட்டியலில் இடம்பெறுவதில்லை. பெரும்பாலான மாநிலங்களின் இடஒதுக்கீடு பட்டியல்களிலும் இந்த உட்பிரிவுகள் சேர்க்கப்படுவதில்லை.
குறிப்பாக, ஆந்திரம், தெலங்கானா, ஜார்க்கண்ட், மேற்கு வங்கம், ஜம்மு-காஷ்மீர் உள்ளிட்ட 11 மாநிலங்களின் இடஒதுக்கீடு பட்டியல்களில் மட்டுமே இந்த உட்பிரிவுகள் இடம்பெற்றிருக்கின்றன. அதன்படி, மேற்குறிப்பிட்ட மாநிலங்களில்தான் வேலைவாய்ப்புகளில் இந்த உட்பிரிவுகளின் அடிப்படையில் இடஒதுக்கீடு அளிக்கப்பட்டு வருகிறது.
எனவே, மத்திய அரசின் வேலைவாய்ப்புகள் மற்றும் கல்வி நிலையங்களில் ஓபிசி உட்பிரிவுகளைச் சேர்ந்தவர்களுக்கும் சலுகைகள் வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, மத்திய பட்டியலில் ஓபிசி வகுப்பில் எந்தெந்த உட்பிரிவுகளை சேர்ப்பது என்பது குறித்து ஆய்வு செய்ய ஓர் ஆணையம் அமைக்கவும் தீர்மானிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், அந்த ஆணையத்தை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை தற்போது ஒப்புதல் அளித்துள்ளது என்றார் அருண் ஜேட்லி.

No comments:

Post a Comment

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது...

ரயில் கட்டண உயா்வு இன்று அமல் கட்டண உயா்வு வெள்ளிக்கிழமை அமலுக்கு வருகிறது... தினமணி செய்திச் சேவை Updated on:  26 டிசம்பர் 2025, 5:02 am  ர...