Friday, August 25, 2017

கருவூலத்தில் ரூ.1.50 கோடி மோசடி - அதிகாரி மரணம்; விசாரணை சிக்கல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:10

திண்டுக்கல்: அரசு கருவூலத்தில், வறட்சி நிவாரண நிதி, 1.5 கோடியை மோசடி செய்த வழக்கில் தொடர்புடைய அலுவலர் இறந்ததால், விசாரணையில் சிக்கல் நீடிக்கிறது.

கொடைக்கானல் சார்நிலை கருவூல இளநிலை உதவியாளர் அருண்குமார், 34. இவரும் கூடுதல் சார்நிலை கருவூலர் விஜயகுமாரும் கருவூல கணக்கில் இருந்த, அரசின் வறட்சி நிவாரண நிதி, 1.5 கோடியை, 11 பேரின் வங்கி கணக்கில் வரவு வைத்து மோசடி செய்தது, சில நாட்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது.

திண்டுக்கல் மாவட்டம், நத்தத்தில் உள்ள அருண்குமார் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அவரது மனைவி, கனிமொழி பெயரில், 3 ஏக்கர் நிலம் இருப்பது தெரிந்தது. மேலும், 28 சவரன் நகை, 2.40 லட்ச ரூபாயை கைப்பற்றினர்.

இதையடுத்து, அருண்குமார் - கனிமொழியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில், கல்லீரல் பிரச்னைக்காக சிகிச்சை பெற்று வந்த, விஜயகுமார், மதுரையில் இரு நாட்களுக்கு முன் மரணமடைந்தார். இவர் இறந்ததால் விசாரணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதனால், யாரிடம் விசாரணை நடத்துவது என தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர்.
'வீட்டுக்கு போகணும்!'

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:15

புதுச்சேரி விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ள, தினகரன் அணி, எம்.எல்.ஏ.,க்களில் எட்டு பேர், விநாயகர் சதுர்த்தியை கொண்டாட, வீட்டிற்கு செல்ல வேண்டும் என, அடம் பிடித்தும், அவர்களை வெளியே அனுப்ப, தினகரன் ஆட்கள் மறுத்து விட்டனர்.

புதுச்சேரி, சின்ன வீராம்பட்டினம் பகுதியில் உள்ள, நட்சத்திர சொகுசு விடுதியில், தினகரன் ஆதரவு, 19 எம்.எல்.ஏ.,க்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 'ஒரு நாள் பொழுதுபோக்கி விட்டு வரலாம்' எனச் சொல்லி, அவர்களை அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அங்கு வாரக்கணக்கில் தங்க ஏற்பாடுகள்செய்யப்பட்டிருப்பதை அறிந்து, எம்.எல்.ஏ.,க்கள் சிலர் அதிர்ச்சி அடைந்தனர். இவர்களில், ஒரு முன்னாள் அமைச்சர், ஒரு பெண், எம்.எல்.ஏ., உட்பட, எட்டு பேர், தினகரன் நடவடிக்கை பிடிக்காததால், மனம் மாறியுள்ளனர். 'எங்களை வீட்டுக்கு அனுப்பி வையுங்கள்' என, கேட்டுள்ளனர். ஆனால், அனுப்ப மறுத்து விட்டதாக தெரிகிறது.

அதனால், கோபமடைந்த, பெண், எம்.எல்.ஏ., தன் குடும்ப உறுப்பினர்களை சந்திக்க வேண்டும் என, தகராறு செய்துள்ளார். குடும்பத்தினரை அழைத்து வர ஏற்பாடு செய்வதாகக் கூறி, அவரை சமாதானப்படுத்தி உள்ளனர்.
மொத்தத்தில், பெண், எம்.எல்.ஏ., உட்பட, எட்டு பேர், 'விநாயகர் சதுர்த்தி விழாவை கொண்டாட, வீட்டுக்கு செல்ல வேண்டும்' என, வற்புறுத்தியும், அதற்கு, தினகரன் ஆட்கள் மறுத்து விட்டனர்.

இதற்கிடையில், நேற்று காலை, புதுச்சேரி சென்று, அங்கு, எம்.எல்.ஏ.,க்களை தனித்தனியாக சந்தித்து பேச, தினகரன் திட்டமிட்டிருந்தார்.
அவரிடம், தங்கள் விருப்பத்தை சொல்லி, அவரது அனுமதியுடன் வீட்டிற்கு செல்ல, எட்டு, எம்.எல்.ஏ.,க்கள் தயாராக இருந்தனர். 

இந்த தகவல் தெரிய வந்ததும், புதுச்சேரி செல்லும் முடிவை, தினகரன் கடைசி நேரத்தில் கைவிட்டு விட்டதாக கூறப்படுகிறது.
70 கிலோ, 'முக்குறுணி' கொழுக்கட்டை : மதுரையில் 36 மணி நேர பக்தி படையல்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:07


மதுரை: மதுரை மீனாட்சியம்மன் கோவிலில் உள்ள முக்குறுணி விநாயகருக்கு, 70 கிலோ, 'முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கப்பட்டு வருகிறது.

மதுரை ரயில்வே காலனி, சித்தி விநாயக செல்வ முத்துக்குமார சுவாமி கோவிலின், சடகோப ராமானுஜ அய்யப்ப பக்த சபை குழுவினர் ஈடுபட்டு உள்ளனர். இது குறித்து, கோவில் குருநாதர் பாலாஜி கூறியதாவது:
மதுரை மீனாட்சி கோவில், பிள்ளையார்பட்டி, திருச்சி உச்சிப்பிள்ளையார் கோவிலுக்கு அடுத்தபடி இங்குதான், 'மெகா முக்குறுணி கொழுக்கட்டை' தயாரிக்கிறோம். 

இது எங்களுக்கு, 11வது ஆண்டு. 18 படி அரிசி, வெல்லம், தேங்காய், நெய், ஏலக்காய் கலந்து தயாராகும் இந்த கொழுக்கட்டையின் எடை, 70 கிலோ.
அரிசியின் அளவை, 'குறுணி' என்ற அளவையில் அளப்பதால் இதற்கு, 'முக்குறுணி கொழுக்கட்டை' என, பெயர் வந்தது. ஒரு குறுணி, 6 படி.
'மெகா' உருண்டையாக உருட்டிய மாவை, பனை துணிப்பைக்குள் வைத்து, பனை ஓலை சுற்றி, நீர் நிரப்பிய பெரிய பாத்திரத்தில் வைத்து விறகு அடுப்பில் வேக வைக்கிறோம். 

கொழுக்கட்டை நேற்று காலை, 6:00 மணி முதல், இன்று மாலை, 6:00 மணி வரை வேகும்.

இதை, 10 பேர் அடங்கிய பக்தர்கள் குழு, 36 மணி நேரமும் கண்காணித்து, பக்குவமாக கொழுக்கட்டையை வெளியே எடுப்பர். வெந்த ழுக்கட்டையை கம்பில் கட்டி சுமந்து வந்து விநாயகருக்கு படையல் வைத்து, பக்தர்களுக்கு வழங்குவோம்.

இதைத் தொடர்ந்து, ஆக., 27 காலை, 10:30 மணிக்கு சித்திதேவிக்கும், விநாயகருக்கும் திருக்கல்யாண விழாவுடன் சதுர்த்தி விழா நிறைவடையும்.
இவ்வாறு அவர் கூறினார்.
பள்ளி கல்வி துறைக்கு முதன்மை செயலர் நியமனம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
00:18



சென்னை: பள்ளி கல்வி துறையின் முதன்மை செயலராக பிரதீப் யாதவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அவரை தற்காலிக முதன்மை செயலராக நியமனம் செய்து தலைமை செயலர் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதேசமயம் உதய சந்திரன் ஐ.ஏ.எஸ்., மாற்றப்படவில்லை. முதன்மை செயலரின் கீழ் செயல்படுவார் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.




A
அசல் சான்றிதழ் இல்லாவிட்டாலும் பங்கேற்கலாம் : மருத்துவ படிப்புக்கு இன்று பொது கவுன்சிலிங்

பதிவு செய்த நாள்25ஆக
2017
01:03

சென்னை: ''எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., கவுன்சிலிங்கில், அசல் சான்றிதழ்கள் இல்லையென்றாலும், மாணவர்கள் பங்கேற்கலாம்,'' என, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை, அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று, மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் துவங்கியது. சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கை துவக்கி வைத்த, சுகாதாரத்துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

விநாயகர் சதுர்த்தியுடன் தொடர்ந்து மூன்று நாட்கள் விடுமுறை என்பதால், கவுன்சிலிங்கில் பங்கேற்க, 500 ரூபாய்க்கும், கல்வி கட்டணத்துக்காகவும், வங்கியில், 'டிடி' எடுக்க முடியாத நிலை ஏற்படலாம்; அதற்காக கவலைப்பட வேண்டாம். கவுன்சிலிங் நடைபெறும் இடத்தில், நேரடியாக பணத்தை செலுத்தி ரசீதை பெற்று கொள்ளலாம்; இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

'நீட்' தேர்வு அடிப்படையில், முதன் முதலாக கவுன்சிலிங் நடைபெறுகிறது. இது தொடர்பான சந்தேகங்களுக்கு, கவுன்சிலிங் அரங்கில் உள்ள, ஆலோசனை மையத்தில், தெளிவு பெறலாம். கவுன்சிலிங் பங்கேற்போர், அசல் சான்றிதழ்களை சமர்ப்பிக்க வேண்டும்.

மருத்துவம் அல்லாத பொறியியல் உள்ளிட்ட பிற படிப்புகளில் சேர்ந்தோர், தங்கள் கல்லுாரிகளில் இருந்து, உண்மையறிதல் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு சான்றிதழ் பெற முடியாதோர், அசல் சான்றிதழ்களை பின் சமர்ப்பிப்பதாக ஒப்புதல் கடிதம் எழுதி கொடுத்து விட்டு, கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இடங்கள் ஒதுக்கீடு எவ்வளவு?

சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகளுக்கு, 122; விளையாட்டு பிரிவினருக்கு மூன்று; முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகளுக்கு ஆறு என, மொத்தம், 131 இடங்கள் உள்ளன. கவுன்சிலிங்கில், மாற்றுத்திறனாளிகள் பிரிவில், 20 பேர்; விளையாட்டு பிரிவில், ஆறு பேர்; முன்னாள் ராணுவ வீரர்கள் பிரிவில், 60 பேர் பங்கேற்றனர்.
கவுன்சிலிங் முடிவில், விளையாட்டு பிரிவு, முன்னாள் ராணுவ வீரர்கள் வாரிசுகள் பிரிவில், அனைத்து இடங்களும் நிரம்பின. 

மாற்றுத்திறனாளிகளுக்கான, 122 இடங்களில், ஐந்து இடங்கள் நிரம்பின; மீதம், 117 இடங்கள் உள்ளன. இந்த இடங்களில், பொதுப்பிரிவில் சேர்க்கப்படும் என, மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர்.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், இன்று காலை, 9:00 மணிக்கு துவங்குகிறது. இதில், தரவரிசை பட்டியலில், ஒன்று முதல், 1,209 வரையிலான இடங்களை பெற்றவர்கள் பங்கேற்கலாம். அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்ய இயலாதோர், தங்கள் தரவரிசை அடிப்படையில் கவுன்சிலிங்கில் பங்கேற்கலாம் என, அறிவிக்கப்பட்டுள்ளது.
'எய்ம்ஸ் கிளை அமைவிடத்தை மத்திய அரசு முடிவு செய்யும்'

பதிவு செய்த நாள்25ஆக
2017
00:15

சென்னை: ''தமிழகத்தில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு முடிவு செய்யும்,'' என, சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறினார்.

'தமிழகத்தில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்கப்படும்' என, அறிவித்த மத்திய அரசு, அதற்கான இடங்களை பரிந்துரைக்கும்படி, தமிழக அரசுக்கு அறிவுறுத்தியது. இதன்படி, மதுரை மாவட்டம், தோப்பூர்; தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டி; புதுக்கோட்டை; ஈரோடு மாவட்டம், பெருந்துறை; காஞ்சிபுரம் மாவட்டம், செங்கல்பட்டு என, ஐந்து இடங்களை, தமிழக அரசு பரிந்துரைத்தது. இதில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, தஞ்சாவூர் மாவட்டம், செங்கிப்பட்டியை தேர்வு செய்யும்படி, தமிழக அரசு பரிந்துரைத்ததாக கூறப்பட்டது. மேலும், 'ஐந்து இடங்களில் உள்ள, அடிப்படை வசதிகள் குறித்து, தமிழக அரசு அளித்த தகவல்கள் போதவில்லை' என, கூடுதல் தகவல்களை, மத்திய அரசு கேட்டது. இதற்கு, இரு மாதங்களுக்கு பின், தமிழக அரசு பதிலளித்தது. தமிழக அரசு தகவல் கொடுப்பதில் தாமதம் ஏற்பட்டதால், எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு முடிவு செய்யவில்லை. 

இதனால், 2017 இறுதிக்குள், எய்ம்ஸ் மருத்துவமனை அமைவதற்கான பூர்வாங்க பணிகள் துவங்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது குறித்து, சென்னை யில், சுகாதாரத் துறை செயலர், ராதாகிருஷ்ணன் கூறுகையில், ''தமிழக அரசு பரிந்துரைத்த, ஐந்து இடங்களில் உள்ள வசதிகள் குறித்த அறிக்கை, மத்திய அரசுக்கு அளிக்கப்பட்டு உள்ளது. ''எனவே, எய்ம்ஸ் மருத்துவமனை அமையும் இடத்தை, மத்திய அரசு தான் முடிவு செய்யும்,'' என்றார்.
'பிளாக்'கில் டிக்கெட் விற்பனை : ஆளுங்கட்சியினர், 'விவேகம்'
பதிவு செய்த நாள்25ஆக
2017
00:10


அஜித் நடித்த, விவேகம் படம் வெளியான தியேட்டர்களில், அ.தி.மு.க., பிரமுகர்கள், மொத்தமாக டிக்கெட் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றனர். இதனால், அஜித் ரசிகர்கள் டிக்கெட் கிடைக்காமல் ஏமாற்றம் அடைந்தனர்.

நடிகர் அஜித் நடித்த, விவேகம் திரைப்படம், நேற்று வெளியானது. தமிழகத்தில் பெரும்பாலான தியேட்டர்களில், ஆளுங்கட்சி பிரமுகர்கள் அணுகி, டிக்கெட்டுகளை மொத்தமாக வாங்கி, பிளாக்கில் அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது உண்மை தான் என நிரூபிக்கும் வகையில், சேலம் மாவட்டம், ஆத்துாரில் ஆளுங்கட்சியினர் களத்தில் இறங்கியது தெரியவந்தது. ஆத்துாரில், இரு தியேட்டர்களில் படம் வெளியானது. ஆத்துாரில், அ.தி.மு.க., வைச் சேர்ந்த, நகர செயலர், முன்னாள் துணை சேர்மன், ஒரு தியேட்டரில் நான்கு காட்சிகளுக்கும், மற்ற இரண்டு தியேட்டர்களில் காலை, மதியம் என, இரண்டு காட்சிகளுக்கும், டிக்கெட் வாங்கியதாக கூறப்படுகிறது. அதை, கட்சியினர் சிலருக்கு விற்றுள்ளார். அவர்கள், 150 முதல், 300 ரூபாய்க்கு மேல், முதல் காட்சிக்கான டிக்கெட்டை விற்றுள்ளனர். ரசிகர்கள், தியேட்டரில் டிக்கெட் கேட்டபோது, 'ஆளுங்கட்சியினர் மொத்தமாக டிக்கெட் வாங்கிவிட்டனர்; அவர்களிடம் வாங்கிக் கொள்ளுங்கள்' எனக் கூறினர். சில ஆண்டுகளுக்கு முன், அஜித் ரசிகர் மன்றம் கலைக்கப்பட்டதால், ரசிகர்களுக்கு மொத்தமாக டிக்கெட் கொடுக்க தியேட்டர் நிர்வாகம் முன் வரவில்லை. இதை சாதகமாக பயன்படுத்திய உள்ளூர் ஆளுங்கட்சி நிர்வாகிகள், கோவில் திருப்பணிக்கு நன்கொடை வசூலிப்பதாக கூறி, தியேட்டரில் குறைந்த விலைக்கு டிக்கெட் வாங்கி, கூடுதல் விலைக்கு விற்றுள்ளனர். நான்கு காட்சிகளுக்கும், தியேட்டர்களில் டிக்கெட் கிடைக்காததால், ரசிகர்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

ஆத்துார், அ.தி.மு.க., நகர செயலர், மோகன் கூறுகையில், ''கோவையில் உள்ளேன். அஜித் பட டிக்கெட்டுகளை, நான் வாங்கவில்லை. டிக்கெட் வாங்கியவர்கள், என் பெயரை கூறுவதில் உண்மையில்லை,'' என்றார்.

- நமது நிருபர் -

NEWS TODAY 10.07.2026