Saturday, August 26, 2017

மருத்துவ கவுன்சிலிங் முதல் 26 பேர் 'ஆப்சென்ட்'

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 22:35



சென்னை: தரவரிசை பட்டியலில் முதல், 26 இடங்களை பெற்றவர்கள், எம்.பி.பி.எஸ்., பொது பிரிவினருக்கான கவுன்சிலிங்கில் பங்கேற்கவில்லை. அடுத்த இடங்களில் வந்த, 10 பேர், சென்னை அரசு மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர்.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு மதிப்பெண் அடிப்படையில், எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., மாணவர் சேர்க்கை கவுன்சிலிங் நடத்த, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து, சென்னை அரசு பல்நோக்கு மருத்துவமனையில், நேற்று முன்தினம், சிறப்பு பிரிவினருக்கான கவுன்சிலிங் நடந்தது. அதிலிருந்த, 131 இடங்களில், 14 இடங்கள் நிரம்பின; நிரம்பாத, 117 இடங்கள் பொதுப்பிரிவில் சேர்க்கப்பட்டன.

பொதுப்பிரிவினருக்கான கவுன்சிலிங், நேற்று துவங்கியது. இதில், தரவரிசை பட்டியலில், ஒன்று முதல், 1,209 இடங்கள் வரை பெற்ற மாணவர்கள் அழைக்கப்பட்டிருந்தனர். அதில், தரவரிசையில், ஒன்று முதல், 26 இடங்கள் வரை பெற்ற மாணவர்கள் பங்கேற்கவில்லை. இவர்கள் அகில இந்திய ஒதுக்கீடு, நிகர்நிலை பல்கலைகளில், இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

தரவரிசையில், 27வது இடத்தில் இருந்த மாணவர் அசிபக் சுலைமான், முதல் ஆளாக கவுன்சிலிங்கில் பங்கேற்று, சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தார். அதைத்தொடர்ந்து வந்த, 10 மாணவர்களும், சென்னை மருத்துவ கல்லுாரியை தேர்வு செய்தனர். அவர்களுக்கு, சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன், எம்.பி.பி.எஸ்., இட ஒதுக்கீட்டுக்கான ஆணைகளை வழங்கினார்.

நேற்றைய கவுன்சிலிங்கில், 800க்கும் மேற்பட்டோர், எம்.பி.பி.எஸ்., இடங்களை பெற்றதாக மருத்துவ கல்வி இயக்கக அதிகாரிகள் தெரிவித்தனர். இன்று, தரவரிசையில், 1,210 முதல், 2,673 வரை இடம் பெற்றோர் பங்கேற்கின்றனர்.
கலெக்டர் மாற்றத்தில் மகிழ்ச்சி ஸ்வீட் எடு... கொண்டாடு...!

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:30

சேலம், சேலம் கலெக்டர் சம்பத் மாற்றப்பட்டதை, அரசு அலுவலர்கள் பலரும் இனிப்பு வழங்கி கொண்டாடினர்.இரு ஆண்டுகளாக,சேலம் கலெக்டராக இருந்த சம்பத், நேற்று முன்தினம் இரவுமாற்றப்பட்டு, புதிய கலெக்டராக, ரோகிணி நியமிக்கப்பட்டார். இது, மாவட்டஅதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை, மகிழ்ச்சியை ஏற்படுத்தியது.எந்நேரமும், கலெக்டர் அலுவலகத்திலேயே ஆலோசனைக் கூட்டத்துக்கு காத்திருக்கும் நிலை; கோப்புகளில் கையெழுத்திடாமல், பல மாதங்களுக்கு இழுத்தடிப்பது; பெண்கள் என்றும் பாராமல், இரவு, 11:00 மணி வரை கூட்டத்தில் இருக்க வைப்பது என, பலவித இடையூறுகளை அனுபவித்து வந்த அலுவலர்களுக்கு, தற்போதைய கலெக்டர் மாற்றம் அறிவிப்பு, பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.நேற்று காலை, நடைபயிற்சியில் சந்தித்து கொண்ட அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள், ஒருவருக்கொருவர் வாழ்த்து தெரிவித்தும், இனிப்புகள் வழங்கியும், மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். ஒரு சிலர், கலெக்டர் அலுவலகம் அருகே, பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
அரசு பஸ்சில் 'வை-பை': கண்டக்டரின் தாராள மனசு

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 22:07



ராமநாதபுரம்: ராமநாதபுரத்தில் இருந்து தஞ்சாவூர் செல்லும் அரசு பஸ்சில், சொந்த செலவில் 'வை-பை' வசதி செய்த கண்டக்டரை பயணிகள் பாராட்டினர்.

ராமநாதபுரம் புறநகர் போக்குவரத்து கிளையில் 70 பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதில், ராமநாதபுரம் பஸ்ஸ்டாண்டில் இருந்து மதியம் 2:20 மணிக்கு, மதுரை வழியாக தஞ்சாவூருக்கு டி.என்.63-என் 1710 என்ற அரசு பஸ் இயக்கப்படுகிறது.இதன் கண்டக்டராக திருச்சியை சேர்ந்த எம்.ஜெயபாலாஜி,28, பணியாற்றுகிறார்.

பயணிகளை கவரவும், அதன் போக்குவரத்து கழகத்திற்கு வருவாய் ஈட்டவும் இவர் பல்வேறு முயற்சிகளை மேற் கொண்டுள்ளார்.இதற்காக, தனது சொந்த பணத்தில் 10 ஆயிரம் ரூபாய் செலவு செய்து, தனியார் பஸ்களுக்கு இணையாக பஸ்சில் கலர் ஸ்டிக்கர் ஒட்டி பயணிகளை கவர்ந்தார். இதனால், பயணிகள் இவரது பஸ்சை எதிர்பார்த்து பயணிக்க துவங்கினர். இதை பார்த்த ஜெயபாலாஜிக்கு பஸ்சில் இலவச இணைய சேவை வழங்க வேண்டும், என்ற எண்ணம் ஏற்பட்டது.

இதையடுத்து, 5000 ரூபாய் செலவு செய்துஇலவச வை-பை வசதி செய்துஉள்ளார். இதனால், பஸ்சில் பயணிக்கும் பயணிகள்இலவசமாக இந்த வசதியை பெறுகின்றனர். இதற்காக அவரை, பயணிகள் பாராட்டி வருகின்றனர்.

ஜெயபாலாஜி கூறுகையில்,'பொதுவாக அரசு பஸ்கள் குறித்து குறை தான் சொல்வார்கள். அந்த எண்ணத்தை மாற்ற வேண்டும், என நினைத்தேன். இதற்காக தனியார் பஸ்களுக்கு இணையாக பஸ்சில் வண்ண வண்ண ஸ்டிக்கர்கள் ஒட்டிஓராண்டிற்கு முன் அலங்கரித்தேன்.இதற்கு பயணிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது, பஸ்சில் அனைவரும் இலவசமாக இணைய சேவை பெறும் வகையில், வை-பை வசதி ஏற்படுத்த வேண்டும், என நினைத்தேன். கடந்த வாரம் எனது சொந்த செலவில் இதனை செய்துள்ளேன்.

புறநகர் போக்குவரத்து கழக மேலாளர் தேவேந்திரன் இதனை, பாராட்டி ஆதரவு தெரிவித்தார்.

இலவச வை-பை வசதி குறித்து பஸ்சின் முன்புறம் ஒட்டப்பட்டுள்ளது.இதனை பார்த்து தற்போது, இன்னும்பயணிகள் வருகை அதிகரித்துஉள்ளது, மகிழ்ச்சி தருகிறது, என்றார். தமிழகத்தில் முதன் முறையாக அரசு பஸ்சில் தனது சொந்த செலவில், இலவச
வை-பை வசதி ஏற்படுத்திய கண்டக்டர் ஜெயபாலாஜியை நாமும் பாராட்ட,96267 32184.
நள்ளிரவில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
20:30

சென்னை : நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், ஒரே நாளில் இடமாற்றம் செய்யப்பட்டதும், அதற்கான அரசாணை, நள்ளிரவில் வெளியானதும், சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.தமிழக அரசு, நேற்று முன்தினம், நான்கு மாவட்ட கலெக்டர்கள் உட்பட, 20 ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை இடமாற்றம் செய்தது.இதற்கான அரசாணை, இரவு, 11:00 மணிக்கு வெளியானது. பள்ளிக் கல்வித் துறை செயலர், உதய சந்திரனுக்கும், துறை அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே, மோதல் ஏற்பட்டது. இதனால், பள்ளிக் கல்வித் துறையில் முதன்மை செயலர் என்ற பணியிடம் உருவாக்கப்பட்டு, அந்தப் பொறுப்பிற்கு, பிரதீப் யாதவ் நியமிக்கப்பட்டுள்ளார்.இவ்விபரம், பகல் நேரத்தில் வெளியானால், பெரும் விவாதத்தை உருவாக்கும் என்பதால், ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் அரசாணையை, நள்ளிரவில் அரசு வெளியிட்டதாக கூறப்படுகிறது.



மருத்துவ கல்வி சேர்க்கையில்போலி இருப்பிட சான்றிதழ்

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:00

சென்னை, ''மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு, போலி இருப்பிட சான்றிதழ் அளிக்கும் மாணவர்கள் மீது, கடும் நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறினார்.

விழுப்புரம் மாவட்டம், செஞ்சியைச் சேர்ந்தவர், அஜ்மத் அலி; வழக்கறிஞர். பட்டியலில் ஆய்வுஇவர், சென்னை கமிஷனர் அலுவலகத்தில் கொடுத்த புகார்:கேரளா மருத்துவக் கல்வி குழு மற்றும் தமிழக மருத்துவக் கல்வி இயக்ககம் வெளியிட்ட தரிவரிசை பட்டியல்களை ஆய்வு செய்தேன். அதில், கேரளா முகவரியில் விண்ணப்பித்திருந்த, ஒன்பது பேர், தமிழகத்திலும் வசிப்பது போல், இருப்பிட சான்றிதழ் பெற்றுள்ளனர்; அதை பயன்படுத்தி, இரு மாநிலங்களிலும், மருத்துவ இடம் கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். 

இவ்வாறு, புகார் அளித்திருந்தார்.இது குறித்து, சென்னையில், சுகாதாரத் துறை செயலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது:மருத்துவம் படிக்க, கேரளாவைச் சேர்ந்த ஒன்பது பேர், போலி இருப்பிட சான்றிதழ் அளித்தாக புகார்கள் வந்துள்ளன. இதை தடுக்க, மாணவர்களிடம் உறுதிமொழி சான்றிதழ்கள் வாங்கப்படுகின்றன. நடவடிக்கைபோலி இருப்பிட சான்றிதழ் கண்டுபிடிக்கப்பட்டால், அவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதே போல், அகில இந்திய கவுன்சிலிங் மற்றும் நிகர்நிலை பல்கலையில் இடம் கிடைத்த மாணவர்கள், மாநில கவுன்சிலிங்கில் இடம் பெற முடியாது. அது போன்று, இடம் பெற்ற மாணவர்கள் கண்டறியப்பட்டாலும், அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -


'முத்தலாக் நடைமுறை செல்லும்!'   முஸ்லிம் மத தலைவர் கருத்து

ஐதராபாத்'மூன்று முறை, 'தலாக்' கூறி விவா கரத்து பெறும் முறை தவறு, பாவச் செயல்; ஆனால், மூன்று முறை தலாக் கூறி, விவா கரத்து பெறுவது செல்லும்' என, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின் தெலுங்கானா, ஆந்திரா பிரிவு தலைவர் கூறியுள்ளார்.





பாவச் செயல்

'முஸ்லிம்களின், மூன்று முறை, 'தலாக்' கூறி விவாகரத்து பெறும் முறை, சட்டவிரோத மானது, அரசியலமைப்பு சட்டத்துக்கு எதிரானது' என, உச்ச நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பு அளித்தது.இந்நிலையில், முஸ்லிம் மதத் தலைவர்கள் அடங்கிய, முஸ்லிம்களின் சமூக - மத அமைப்பான, ஜமாயித்தே உலாமா ஹிந்த் அமைப்பின், ஆந்திரா மற்றும் தெலுங்கானா பிரிவின் தலைவர், ஹபீஸ் பீர் ஷப்பீர் கூறியதாவது:

எங்கள் அமைப்பின் மத்திய குழு கூட்டம் சமீபத்தில் நடந்தது. அதில், உச்ச நீதிமன்ற தீர்ப்பு குறித்து விவாதித்தோம். உடனடி விவாகரத்து பெறும் முத்தலாக் முறை தவறு, பாவச் செயல், அதை பயன்படுத்தக் கூடாது என்பதை நாங்கள் ஏற்கிறோம்.அதே நேரத்தில், ஒரே நேரத்தில் மூன்று முறை தலாக் கூறினால், திருமணம் ரத்தாகும் முறை தொடரும். இவ்வாறு மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றால், நீதிமன்ற அவமதிப் பாக எடுத்துக் கொள்வார்களா?உடனடி விவாகரத்து முறையின் பாதிப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த, மதத் தலைவர்கள் தவறிவிட்டனர். இந்த பாவச் செயலை தடுக்க முடியாத சூழ்நிலை தற்போது ஏற்பட்டுவிட்டது; பலர் தவறாகப் பயன் படுத்துகின்றனர்; இதை தவிர்த்திருக்கலாம்.

நிதி உருவாக்கப்படும்

முத்தலாக் தீர்ப்பின் மூலம், ஷரியத் சட்டத்தில், நீதிமன்றம் தலையிட்டுள்ளது. இது, பொது சிவில் சட்டம் கொண்டு வருவதற்கான அரசின் முயற்சி. முஸ்லிம் மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங் களை செயல்படுத்தி வருகிறோம். முத்தலாக் முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கும், குழந்தைகளுக்கும் உதவும் வகையில், ஒரு நிதி உருவாக்கப்படும்.ஷரியத் சட்டம், விவாகரத்தை ஏற்கவில்லை. அதனால், மூன்று முறை தலாக் கூறும் முறையை பயன்படுத்த வேண்டாம் என, முஸ்லிம் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள் ளோம்.இவ்வாறு அவர்கூறினார்.

வழக்கு தொடர்ந்தவருக்கு சிக்கல்

முத்தலாக் முறையை எதிர்த்து வழக்கு தொடர்ந்த, முஸ்லிம் பெண்களில் முக்கியமானவர், மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவைச் சேர்ந்த, இஷ்ரத் ஜகான். 2004ல் திருமணமான இவருடைய கணவர் வெளிநாட்டில் உள்ளார்; 2014ல், வெளிநாட்டில் இருந்தபடியே, தொலை பேசி மூலம், மூன்று முறை தலாக் கூறி, கணவர் விவாகரத்து பெற்றார்.உச்ச நீதிமன்ற தீர்ப்புக்கு பின், தான் புறக்கணிக்கப்படுவ தாக, இஷ்ரத் கூறியுள்ளார்.இது குறித்து அவர் கூறியதாவது:

உச்ச நீதிமன்ற தீர்ப்பினால் மட்டும் மாற்றங்கள் ஏற்பட்டு விடாது. மக்களிடையே, சமூகத்தில் மாற்றங்கள் ஏற்பட வேண்டும். தீர்ப்புக்கு பின், என்னுடன் பேசுவதை, எங்கள் பகுதியில் உள்ளவர்களும், உறவினர்களும் நிறுத்திக் கொண்டுள்ளனர். அதே நேரத்தில், முஸ்லிம் பெண்களின் சமூக நீதிக்கான என்னுடைய போராட்டம் தொடரும்.இவ்வாறு அவர் கூறினார்.

மீரட்டில் முதல் வழக்கு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு பின், முத்தலாக் கூறி விவாகரத்து பெற்றதாக, உத்தர பிரதேச மாநிலம், மீரட்டைச் சேர்ந்த ஒருவர் மீது, அவருடைய மனைவி போலீசில் புகார் கொடுத் துள்ளார்.முத்தலாக் சட்டவிரோத மானது என்று உச்ச நீதிமன்றம், சமீபத்தில் தீர்ப்பு கூறியது. அதன்பின், மீரட்டைச் சேர்ந்த சிராஜ் அலி என்பவர், தன் மனைவி, ஆர்ஷி பேகத்தை, பொது இடத்தில், மூன்று முறை தலாக் கூறி விவாகரத்து பெற்றார்.

வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக வும், அதை தராததால் விவாகரத்து பெற்றதாக வும், ஆர்ஷி பேகம், போலீசில் புகார் கொடுத் துள்ளார். குடும்ப வன்முறை சட்டம் மற்றும் வரதட்சணை தடுப்பு சட்டத்தின் கீழ், சிராஜ் அலி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
2௦௦ ரூபாய் நோட்டு வெளியீடு ஏ.டி.எம்.,மில் கிடைக்காது

பதிவு செய்த நாள்25ஆக
2017
19:43




புதுடில்லி, ரிசர்வ் வங்கி, புதிய ௨௦௦ ரூபாய் நோட்டு வெளியிட்டது; இந்த நோட்டுகள், ஏ,.டி.எம்.,களில் கிடைக்க தாமதமாகும் என, தெரிகிறது.கறுப்பு பணம் ஒழிப்பு நடவடிக்கையாக, கடந்த ஆண்டு, நவ.,௮ல், பழைய, 500 - 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி அறிவித்தார். அதைத் தொடர்ந்து, புதிதாக ௨,௦௦௦ - ௫௦௦ நோட்டுகள் வெளியிடப்பட்டன.எனினும், சில்லரை தட்டுப்பாடு தொடர்ந்து நீடிப்பதால், ௨௦௦ ரூபாய் நோட்டு வெளியிட, அரசாணை பிறப்பிக்கப்பட்டது.இந்நிலையில், புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டை, ரிசர்வ் வங்கி, நேற்று வெளியிட்டது. நாட்டில் பல வங்கி கிளைகளில், புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு புழக்கத்துக்கு வந்தது. எனினும், இந்த நோட்டு களை வழங்கும் வகையில், 'புரோகிராம்' செய்யப்படாததால், ஏ.டி.எம்.,களில் நேற்று, இந்த நோட்டு கிடைக்கவில்லை. 'ஏ.டி.எம்.,களில், புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு கிடைக்க, சில நாட்களாகும்' என, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.பல்வேறு பாதுகாப்பு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ள புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு, வெளிர் மஞ்சள் நிறத்தில் அச்சடிக்கப்பட்டுள்ளது. நோட்டை மேலும், கீழுமாக அசைக்கும் போது, நோட்டில் உள்ள பச்சை இழையின் நிறம், நீல நிறமாக மாறுகிறது.இந்த நோட்டு, 66 மில்லி மீட்டர் உயரமும், 146 மில்லி மீட்டர் அகலமும் உடையது.

மக்கள் ஆர்வம்

புதிய ௨௦௦ ரூபாய் நோட்டை பார்ப்பதில், மக்கள் அதிக ஆர்வம் காட்டினர்.புதிய ௨௦௦ ரூபாய் நோட்டு வாங்குவதற்காக, டில்லியில், பார்லிமென்ட் தெருவில் உள்ள வங்கி கிளையில், வங்கி திறப்பதற்கு முன்பே, வரிசையில் மக்கள் நின்றனர். புதிய, ௨௦௦ ரூபாய் நோட்டு கிடைத்தவுடன், அதை மற்றவர்களிடம் காட்டி, தங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில் உள்ள ரிசர்வ் வங்கி முன், நீண்ட வரிசையில் நின்று, புதிய ௨௦௦ ரூபாய் நோட்டுகளை, மக்கள் பெற்றனர்.

NEWS TODAY 10.07.2026