Saturday, August 26, 2017

மலைக்க வைக்கும் திண்டுக்கல் மலைக்கோட்டை

பதிவு செய்த நாள்
ஆக 25,2017 22:20

திண்டுக்கல் என்றவுடன் ஞாபகம் வருவது கமகமக்கும் பிரியாணியும், பூட்டும் மட்டுமல்ல, மலைக்க வைக்கும் மலைக்கோட்டையும்தான்.

இந்த மலைக்கோட்டை பல வரலாற்று போர்களையும், சுதந்திர போராட்ட வடுக்களையும் தாங்கி நிற்கிறது. இருப்பினும் இன்றைய தலைமுறையினருக்கு அதிகம் தெரியாது. ஏனோ கண்டு கொள்ளவும் அவர்களுக்கு ஆர்வமில்லை. திண்டுக்கல்லில் பல வரலாறுகள் பின்னிப் பிணைந்துள்ளன. இவற்றை கேட்டாலும், நிகழ்வுகள் நடந்த இடத்தை பார்த்தாலும் சுவையாகவும், பெருமையாகவும் இருக்கும். ஆனால், நகர வளர்ச்சியால் பல வரலாற்று சுவடுகள் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டது. எனவே இதனை சுற்றுலா தலமாக்கினால், அதிகளவு வருமானம், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.





மலைக்கோட்டை

திண்டுக்கல் மலைக்கோட்டை கடல் மட்டத்தில் இருந்து 360 அடி உயரத்தில், 400 மீட்டர் நீளத்திலும், 300 மீட்டர் அகலத்திலும் அமைந்துள்ளது. கர்நாடகாவை சேர்ந்தவர்கள் மதுரைக்கு நுழையும் வாயில் பகுதியாக அப்போது திண்டுக்கல் இருந்தது.

மதுரையை ஆண்ட நாயக்கர் மன்னர்கள் திண்டுக்கல் மலை மீது கோட்டையை கட்டி பாதுகாப்பு அரண் அமைத்தனர். 1605ல் முத்து கிருஷ்ணப்ப நாயக்கர் கோட்டையை கட்டினார். பின்பு கடந்த 1623 முதல் 1659 வரை திருமலை நாயக்கர் இந்த கோட்டையை ஆட்சி செய்தார்.
மராட்டியர்கள் படையெடுப்பிற்கு பின்பு நாயக்கர் ஆட்சி இறக்கப்பட்டது. பின்பு மைசூர் உடையார்கள் படையெடுப்பு நடத்தப்பட்டது. அதன்பின் மைசூருவை சேர்ந்த ஹைதர் அலி 1755ல் திண்டுக்கல் படைக்கு 'பவுத்ஜ்தாராக' நியமிக்கப்பட்டார். ஹைதர்அலி 1766ல் கோட்டையை பிடித்து ஆட்சி செய்தார். அவர் காலத்தில்தான் கோட்டைப் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றது.

திப்புசுல்தான்

கடந்த 1755ல் ஹைதர்அலி தனது மனைவி, மகன் திப்புசுல்தானுடன் திண்டுக்கல்லில் குடியேறினார். 1784 முதல் 1790ம் ஆண்டு வரை திப்புசுல்தான் ஆட்சி செய்தார். இவரது படைத்தளபதி சையது இப்ராகிம் சாகிப் மூலம் திண்டுக்கல் மலைக்கோட்டை சிறைகூடம், பீரங்கித்தளம் ஆகியவை முழுவை பெற்று, புதுப்பிக்கப்பட்டது. பிரஞ்ச் கட்டடக்கலை அமைப்பில் இது கட்டப்பட்டுள்ளது.

பிரிட்டிஷார் வசமானது

கடந்த 1860ம் ஆண்டு பிரிட்டிஷாரிடம் திப்புசுல்தான் தோற்றதையடுத்து கோட்டை பிரிட்டிஷார் வசமானது. பின்பு படை பாதுகாப்பு அரணாகவே விளங்கியது.

சுனைகள்

மலைக்கோட்டை மேலே நீர் சுனைகள் உள்ளன. இது சிறைக்காவலர்கள் குளிப்பதற்கும், குடிப்பதற்கும் பயன்படுத்தப்பட்டது.

அகழிகள்:
மலைக்கோட்டையை சுற்றி கோட்டைக் குளம், அய்யன் குளம் என அகழிகள் அமைக்கப்பட்டு இருந்தது. அய்யன் குளத்தை குதிரை லாயமாக பயன்படுத்தினர். இதன் மூலம் எதிரிகள் மேலே செல்ல முடியாமல் தடுக்கப்பட்டது.

கல்வெட்டு உள்ளது

மலைக்கோட்டையில் தம்பிரான் சுவாமிகள் கல்வெட்டு உள்ளது. இதில் விஜயநகர மன்னர் கிருஷ்ணதேவராயர் கோயிலுக்கும், பொதுமக்களுக்கும் அளித்துள்ள நன்கொடை தெரிவிக்கப்பட்டுள்ளது. 1790 மைசூர் யுத்தம் பற்றியும் விளக்கப்பட்டுள்ளது.

தாலுகா சமாதி

தற்போது திண்டுக்கல் மேற்கு தாலுகாவாக இருக்கும் இடம், இறந்த வீரர்களை புதைக்கும் இடமாக இருந்தது. மேலும் கோட்டை மேலாளராக இருந்த பிரிட்டிஷார் சமாதியும், தாலுகா அலுவலகம் அருகேயுள்ளது.

கோபால சமுத்திரம் குளம்

திண்டுக்கல்லில் தற்போது நடைப்பயிற்சி மேற்கொள்ளும் இடமாகவும், மழை நீர் சேகரிப்பு மையமாகவும் இருப்பது கோபால சமுத்திரக்கரை. இந்த இடத்திலும் பல வரலாற்று சிறப்புகள் புதைந்து கிடக்கிறது.

திண்டுக்கல்லில் வேலுநாச்சியார்

ஆங்கிலேயேரை எதிர்த்து போருக்கு கிளம்பிய முதல் இந்திய பெண்ணரசி சிவகங்கை அரசி வேலுநாச்சியார். இவருக்கு ஏழு மொழிகள் தெரியும். போர்கலைகள் பலவும் கற்று தேர்ந்தவர்.
கடந்த 1746ல் தனது 16 வயதில் அப்போதைய சிவகங்கை மன்னராயிருந்த முத்து வடுகநாத துரையை மணந்தார். முத்துவடுகநாதரின் படைதளபதிகள் பெரியமருது, சின்னமருது.

18ம் நுாற்றாண்டில் தமிழகம் பல்வேறு ஆதிக்க சக்திகளின் பிடியில் சிக்கித் தவித்தது.

சிவகங்கையில் தமது வியாபார உரிமையை நிலை நாட்டுவதில் ஆங்கிலேயருக்கும், பிரெஞ்சுகாரர்களுக்கும் இடையில் பிரச்னை ஏற்பட்டது. ஆங்கிலேயரின் எதேச்சதிகாரம் பிடிக்காத சிவகங்கை மன்னரோ பிரெஞ்சுகாரர்களை தேர்வு செய்து விட, ஆங்கிலேயருக்கு கோபம் உண்டானது. இதனால் சிவகங்கையின் மீது ஆங்கிலேய கர்னல்கள் ஜோசப் ஸ்மித், பான்ஜோர் தலைமையில் போர் தொடுத்தனர். இந்த போரில் மருது சகோதரர்கள் தலைமையில் சிவகங்கை படைகள் வீரத்துடன் ஆங்கிலப்படைகளை எதிர்த்து நின்றன.

இந்த போரில் வேலுநாச்சியார் தாமே போர்க்களத்துக்கு வந்து ஆங்கிலேயரை எதிர்த்து போரிட்டார். ஆனால் முடிவோ துயரமானதானது. அரசர் முத்து வடுகநாதனை, ஆங்கிலேயர்கள் ஏமாற்றி போர்க்களத்தின் முன்னணிக்கு வரவழைத்து வஞ்சமாக கொன்றுவிட்டனர். இதன் பின்பு சிவகங்கை படை அழிக்கப்பட்டது.

திண்டுக்கல்லில் தஞ்சம்

வேலுநாச்சியார் தனது மகள் வெள்ளை நாச்சியாருடன், நம்பிக்கைக்கு தகுந்த அமைச்சர் தாண்டவராயருடன் தப்பிச் சென்று திப்புசுல்தான் எல்லைக்குட்பட்ட திண்டுக்கல்லில் தஞ்சம் அடைந்தார். திப்புசுல்தான் ஆதரவோடு திண்டுக்கல் விருப்பாச்சி கோபால்நாயக்கர் உதவியுடன் அய்யம்பாளையத்தில் மறைந்து வாழ்ந்தார். சிவகங்கை பகுதி, ஆங்கிலேயர்களின் கூட்டாளியான ஆற்காடு நவாப்பின் கைக்கு சென்றது. மக்கள் புரட்சி செய்தனர். ஏழு ஆண்டுகள் தலைமறைவாக வாழ்ந்த வேலுநாச்சியார் இந்த புரட்சிக்கு தலைமை வகித்தார்.

போரில் உதவி

இந்த நேரத்தில் திப்புசுல்தானும், கோபால நாயக்கரும் 5,000 குதிரை வீரர்களையும், 5,000 தரைப்படையினரையும், பீரங்கிப்படையின் ஒரு பிரிவையும் அனுப்பி வைத்தனர்.

படை வென்றது

கடந்த 1780ம் ஆண்டு அக்.,17ம் தேதி வேலுநாச்சியார் தலைமையில் மருதுபாண்டியர் தளபதிகளாக செயல்பட்ட படை, சிவகங்கையை பிடித்தது. இந்த வெற்றிக்கு காரணம் கோபால் நாயக்கரும், திப்பு சுல்தான் படைகளும்தான்.

படைகள் ஓய்வெடுத்த குளம்

வேலு நாச்சியாருக்கு அனுப்பி வைத்த 5 ஆயிரம் படை வீரர்களும், குதிரைகளும் தண்ணீர் குடிப்பதற்காகவும், ஓய்வு எடுப்பதற்காகவும் தோண்டப்பட்ட குளம்தான் கோபால் நாயக்கர்
சமுத்திரக் குளம். இந்த குளம் வெட்டுவதற்கு கோபால்நாயக்கர்தான் தலைமை வகித்தார். இந்த குளத்திற்கு நடுவில் 2 கிணறுகளும் வெட்டப்பட்டது.

- -எஸ்.அரியநாயகம்- - படம்: ஏ.ரவிச்சந்திரன்

அபிராமியம்மன் கோயில்

விஜயநகர ஆட்சியில் அபிராமியம்மன் கோயில் கட்டப்பட்டது. செதுக்கப்பட்ட துாண்கள், அழகாகவும், விஜயநகர பேரசின் கட்டட கலையை விளக்கும் சிற்பங்களும் உள்ளன. பறவைகள், விலங்குகள், தாவரங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளது. கோபுரம், சுற்று பிரகாரம், அர்த்த மண்டபத்தில் பல சிற்பங்கள் பொதிந்து கிடக்கின்றன. பல கலை சிற்பங்களும் உருவாக்கப்பட்டது. இந்த கோயிலுக்கு வருவது போல எதிரிகள் மலைக்கோட்டை வரக்கூடும் என்பதால், அபிராமியம்மன் கோயில் அடிவாரத்திற்கு மாற்றப்பட்டது. மேலும் அடிவாரத்தில் திப்புசுல்தான் ஒரு பள்ளிவாசலையும் ஏற்படுத்தினார்.

பாறை மீது சிறைக்கூடம்

இங்கு பாறைகள் நடுவே சிறைக்கூடம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் இரும்பு கதவுகள், மேற்பரப்பில் புகை போக்கி, பாதாள சிறையில் 20 அறைகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அறைக்குள் சூரிய வெளிச்சம் இருக்காது. புகை போக்கி வழியாக காற்று உள்ளே புகும். மேற்பரப்பில் செங்கல், சுண்ணாம்பு, கடுக்காய் கொண்டு பூசப்பட்டு இருக்கும்.

கோபால் நாயக்கருக்கு துாக்கு

சிவகங்கை வேலுநாச்சியாருக்கு உதவியது, ஆங்கிலேயரை தீரமுடன் எதிர்த்து போரிட்டது ஆகிய காரணங்களுக்காக கோபால நாயக்கருடன் ஆங்கில அரசு போர் தொடுத்தது. இதில் முதலில் வெற்றி பெற்றாலும், வஞ்சக வலை விரித்து கோபால நாயக்கரை ஆங்கில அரசு கடந்த 5.9.1801ல் கைது செய்தது. மறுநாள் கோபாலசமுத்திரக்கரையில் உள்ள புளியமரத்தில் துாக்கிலிட்டனர். அதன்பின் இந்த குளம் கோபாலசமுத்திரக்குளம் என பெயர் பெற்றது.

குடிநீர் ஆதாரமானது


இந்த குளம் நாளடைவில் பொதுமக்களின் குடிநீர் ஆதாரமானது. பின்பு ஆடு, மாடுகள் குளிக்கும் இடமாக மாறியது. நாளடைவில் கழிவு நீர் கலந்து குளம் மாசுபட்டது.

சீரமைப்பு

திண்டுக்கல் மாநகராட்சி நிர்வாகம் ரூ.1.50 கோடி செலவில் குளத்தை மழைநீரை சேகரிக்கும் மையமாக மாற்றியுள்ளது. இந்த குளத்தை சுற்றி நடைப்பயிற்சி செய்வதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கழிவு நீர் கலப்பது சுத்தமாக தடுக்கப்பட்டுள்ளது. மேலும் 108 நன்மை தரும் விநாயகர் கோயில் மற்றும் 'திண்டிமா வனம்' அமைப்பினர் மூலம் குளத்தை சுற்றி நிழல் மற்றும் பலன் தரும் மரங்கள் நடப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் தகவல்கள் பெற 98421 -31524ல் தொடர்பு கொள்ளலாம்.

எத்திசை வந்தாலும் கண்காணிப்பு

திண்டுக்கல் மலைக்கோட்டை மீது மதில்கள் அமைக்கப்பட்டுள்ளன. கோட்டையில் தங்கும் சிப்பாய்கள், கோட்டையை சுற்றி வட்ட வடிவில் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இதில் இருந்து எதிரிகள் எத்திசையில் வந்தாலும் பார்க்க முடியும். மேலும் அவர்களை நோக்கி பீரங்கிகளும் வைக்கப்பட்டுள்ளன. தற்போதும் பிரிட்டிஷாரின் பீரங்கியுள்ளது.

வீரர்கள் கண்காணிப்பு கோபுரம்

எதிரி படைகள் வருவதையும், உள்ளே வீரர்கள், கைதிகள் செயல்பாட்டையும் கண்காணிக்க ஆளுயரத்தில் கூண்டு அமைக்கப்பட்டுள்ளது. இதில் நின்று கொண்டே கண்காணிக்கலாம். கூண்டுக்குள் ஆள் நிற்பது வெளியே தெரியாது. வீரனின் கண்கள் வெளியே பார்க்க ஓட்டைகள் உள்ளன. வெளியில் இருந்து பார்த்தால் படைகலன் இருப்பது தெரியும். இதில் ஆயுத சேமிப்பு கிடங்கும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அதிகாரிகள் வசிப்பதற்கும் தனி அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரமுகர்கள் சொல்வதென்ன

நகரமே சிறப்பு பெறும்

வரலாற்று சிறப்புமிக்கது திண்டுக்கல் மலைக்கோட்டை. இங்குள்ள கோட்டைக் குளத்தில் எப்போதும் தண்ணீர் உள்ளது. இதனை அகலப்படுத்தி படகு சவாரி விடலாம். இதற்கு பல கலெக்டர்கள் முயற்சித்துள்ளனர். சுற்றுலா மூலம் பல ஓட்டல்கள், லாட்ஜ்கள், விடுதிகள் வளர்ச்சி பெறும். போக்குவரத்து வசதியும், வணிகமும், வர்த்தகமும் சிறப்பு பெறும்.

ஜி.சுந்தரராஜன் வர்த்தகர்கள் சங்க துணை தலைவர் திண்டுக்கல்

வசதிகள் செய்துதர வேண்டும்

மலைக்கோட்டையை சுற்றி தரமான ரோடுகள் போட வேண்டும். பயணிகள் வந்து செல்வதற்கு போக்குவரத்து, கார் பார்க்கிங் வசதிகள் செய்து தர வேண்டும். இதன் மூலம் மலைக்கோட்டையின் புகழ் உலகம் முழுவதும் பரவும்.கிருபாகரன் தொழில் வர்த்தக சங்க மாவட்ட தலைவர், திண்டுக்கல்.

புதுப்பொலிவு பெறும்

திண்டுக்கல் மலைக்கோட்டை பொலிவு பெற, ஒளி வீசும் விளக்குகள் அமைக்கவும். பாதுகாப்பு அரண்கள், குமரன் பூங்காவில் இருந்து பயணிகள் மலைக்கோட்டை ஏறுவதற்கும் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. ஆங்காங்கு பயணிகள் அமர்வதற்கும், பூந்தோட்டம் அமைப்பதற்கும் திட்டமிட்டுள்ளோம். இந்த திட்டத்தை கலெக்டர் மூலம் தொல்லியல் துறையிடம் அளித்துள்ளோம்.

உமாராணி சுற்றுலாத்துறை அதிகாரி.
நாளை தமிழகம் வருகிறார் கவர்னர்

பதிவு செய்த நாள்25ஆக
2017
15:04




தமிழகத்தில் பரபரப்பான அரசியல் சூழலில் கவர்னர் வித்யாசாகர் ராவ் சனியன்று சென்னை வருகிறார்.

சென்னை: முதல்வர் மீது நம்பிக்கையில்லை என தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.,க்கள் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கவர்னர் வித்யாசாகர் ராவை சந்தித்து மனு அளித்தனர். இதன் பின்னர் கவர்னர் வித்யாசாகர் ராவ் மும்பை கிளம்பினார். தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் புதுச்சேரி தனியார் ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு தொற்றியுள்ளது. இந்த சூழ்நிலையில் கவர்னர் வித்யாசாகர் ராவ் நாளை (ஆகஸ்ட் 26) மாலை மும்பையிலிருந்து சென்னை வர உள்ளாதாக கூறப்படுகிறது.
விருந்தில் திளைக்கும் எம்.எல்.ஏக்கள்
பதிவு செய்த நாள்
ஆக 25,2017 21:10



புதுச்சேரி:தினகரன் ஆதரவு எம்.எல்ஏக்கள் தங்க வைக்கப்பட்டிருக்கும் விடுதியில் தடபுடல் கவனிப்பு நடந்து வருகிறது.

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் 19 பேர் புதுச்சேரி சின்னவீராம்பட்டினம் பகுதியில் உள்ள நட்சத்திர விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். அங்கு முன்பதிவு செய்த காலம் முடிந்துவிட்டதை அடுத்து புதுச்சேரி 100 அடிசாலையில் உள்ள சன்வே என்ற தனியார் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர்.

இன்று விநாயகர் சதுர்த்தி தினமாகையால் எம்.எல்.ஏக்களுக்கு கேக், புரூட்ஸ்,கொழுக்கட்டை, சக்கரை பொங்கல் , சாம்பார் சாதம், ரசம் சாதம், தயிர்சாதம், மட்டன் பிரியாணி, காடை, ஈரல், நூடுல்ஸ், பன்னீர் கிரேவி, பன்னீர் டால், பப்பாளி ஜூஸ், அன்னாசி ஜூஸ் போன்றவை வழங்கப்பட்டன.
மாலையில் பீச்சில் சில எம்.எல்.ஏ.,க்கள் ஜாலியாக வாக்கிங் சென்றனர். சிலர் ஷாப்பிங் சென்றனர்.
சுதந்திர போராட்ட தியாகிக்கு 'பென்ஷன்' வழங்க ஐகோர்ட் உத்தரவு

பதிவு செய்த நாள்26ஆக
2017
02:20

சென்னை, 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்தில் பங்கேற்று, சிறை சென்ற தியாகிக்கு, 'பென்ஷன்' வழங்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.நாகை மாவட்டத்தைச் சேர்ந்த, முத்தைய்யன்
தாக்கல் செய்த மனு:

நாடு முழுவதும், 1942ல், 'வெள்ளையனே வெளியேறு' போராட்டம் நடந்தது. மயிலாடுதுறையில், நான் பங்கேற்றேன். 1942 அக்., 7 முதல், 21 வரை, மயிலாடுதுறை கிளை சிறையில் இருந்தேன்; பென்ஷன் கேட்டு விண்ணப்பித்தேன். 

அதை, நாகை மாவட்ட கலெக்டர் நிராகரித்து விட்டார். நான் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்று உள்ளேன். எனக்கு, பென்ஷன் தர மறுப்பது சரியல்ல. எனவே, பென்ஷன் வழங்கும்படி, அரசுக்கு உத்தரவிட வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இம்மனு, நீதிபதி வைத்தியநாதன் முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் ரூபா ஆஜாரானார். அரசு தரப்பில், வழக்கறிஞர் அகில் அக்பர் அலி ஆஜராகி, 'தியாகிகளுக்கான பென்ஷன் பெற வேண்டும் என்றால், குறைந்தது, 21 நாட்கள் சிறையில் இருந்திருக்க வேண்டும்.
'சுதந்திர போராட்டத்தில் மனுதாரர் பங்கேற்றதற்கு, எந்த ஆதாரத்தையும் தாக்கல் செய்யவில்லை' என்றார்.மனுவை விசாரித்த,
நீதிபதி வைத்தியநாதன் பிறப்பித்த உத்தரவு:

பென்ஷன் கோரிய மனுவை நிராகரித்து, அரசு பிறப்பித்த உத்தரவில் மனுதாரர், அப்போது, 18 வயதை பூர்த்தி செய்து இருக்கவில்லை. 21 நாட்கள் சிறையில் இல்லை என, கூறப்பட்டு உள்ளது.
ஆனால், மனுதாரர் தரப்பில், சிறையில் இருந்ததற்கான ஆவணங்களை தாக்கல் செய்திருக்கிறார். அந்த நாட்கள், பென்ஷன் பெற போதுமானதாக இல்லை என, அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. மனுதாரரை பொறுத்த வரை, 15 நாட்கள் சிறையில் இருந்துள்ளார்.சுதந்திரத்திற்காக போராடியவர்களின், துன்பங்களை குறைப்பதற்காக, பென்ஷன் திட்டம் கொண்டு வரப்பட்டது. சுதந்திர போராட்டத்தில், 18 வயதுக்கு குறைவானவர்களும் பங்கேற்று
உள்ளனர். 

அவர்கள் தரப்பில் ஆதாரங்களை சமர்ப்பித்தால், அதை பரிசீலிக்க வேண்டும். தொழில்நுட்ப காரணங்களுக்காக, விண்ணப்பத்தை நிராகரிப்பது சரியல்ல.
சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற போது, 18 வயது நிரம்பாதவர்களுக்கும், பென்ஷன் வழங்க வேண்டும் என, உயர் நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் ஏற்கனவே உத்தரவிட்டுஉள்ளது.

மனுதாரரை பொறுத்தவரை, சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றுள்ளார். தாக்கல் செய்த, ஆவணங்களின் அடிப்படையில் பென்ஷன் வழங்கப்பட வேண்டும். பென்ஷன் பெற தகுதியான தேதியில் இருந்து, இன்று வரை, பென்ஷன் தொகை வழங்கப்பட வேண்டும்.நாட்டின் விடுதலைக்காக போராடிய, மனுதாரர் போன்றவர்களுக்கு, சட்டப்பூர்வமான உரிமை மறுக்கப்படுவதை கண்டு, இந்த நீதிமன்றம் வேதனை கொள்கிறது.
இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
கடித்து குதறிய குரங்குகள் அரக்கோணத்தில் 12 பேர் காயம்
பதிவு செய்த நாள்26ஆக
2017
02:24


அரக்கோணம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷனில், குரங்குகள் கடித்து, 12 பயணியர், காயம் அடைந்தனர்.வேலுார் மாவட்டம், அரக்கோணம் ரயில்வே ஸ்டேஷன் வழியாக, தினமும், நுாற்றுக்கணக்கான ரயில்கள் இயக்கப்படுகின்றன; 140 சரக்கு ரயில்கள் தினமும் சென்று, வருகின்றன. இதனால், இங்கு எப்போதும் பயணியர் கூட்டம் நிரம்பி வழியும்.
இங்கு, நுாற்றுக்கணக்கான குரங்குகள் வசிக்கின்றன. ரயில்வே ஸ்டேஷனுக்கு வரும் பயணியர் உடமைகள், சாப்பாட்டு பொட்டலங்களை, குரங்குகள் பறித்து செல்கின்றன. 

அப்போது, பயணியரை குரங்குகள் தாக்கும் சம்பவங்களும் நடக்கின்றன. கடந்த மே, 7ல், பிளாட்பாரத்தில் காத்து இருந்த பயணியரை
குரங்குகள் கடித்ததில், 21 பேர் காயமடைந்தனர்.இந்நிலையில், நேற்று காலை, 10:00 மணிக்கு, இரண்டாவது பிளாட்பாரத்தில் ரயிலுக்காக காத்திருந்த, காட்பாடி, வேலுாரை சேர்ந்தவர்கள் உட்பட, 12 பயணியரை, குரங்குகள் கடித்து குதறின.

காயமடைந்தவர்களை, ரயில்வே போலீசார் மீட்டு, அரக்கோணம் ரயில்வே மருத்துவமனையில் சேர்த்தனர்.குரங்குகளை அப்புறப்
படுத்தாவிட்டால், விரைவில் ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என, அரக்கோணம் ரயில்வே பயணியர் நலச்சங்கம், எச்சரித்துள்ளது.
ஓய்வூதியர்களுக்கு குறைதீர் கூட்டம்

பதிவு செய்த நாள்25ஆக
2017
22:38

திருவள்ளூர்;திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில், வரும், 12ம் தேதி, ஓய்வூதியதாரர் குறை தீர்க்கும் கூட்டம் நடைபெற உள்ளது.திருவள்ளூர் மாவட்ட ஓய்வூதியதாரர் குறைதீர் கூட்டம் வரும், 12ம் தேதி, ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. ஓய்வூதியதாரர்கள், தங்கள் பெயர், முகவரி, இறுதியாக பணிபுரிந்த அலுவலகம், தலைமை அலுவலகத்தின் முகவரி, ஓய்வு பெற்ற நாள், ஓய்வூதியப் புத்தக எண் மற்றும் கோரிக்கை விபரங்களை, மனுவில் குறிப்பிடப்பட வேண்டும்.
இம்முறையீடுகள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன், வரும் 12ம் தேதி காலை, 10:30 மணிக்கு, பரிசீலனை செய்யப்பட்டு, தீர்வு காணப்படும்.ஓய்வூதியதாரர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக் கொள்ளும்படி, மாவட்ட ஆட்சியர் சுந்தரவல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
தஞ்சைக்கு 'எய்ம்ஸ்' வேண்டும் பிரதமருக்கு குவியும் மனுக்கள்
பதிவு செய்த நாள்25ஆக
2017
22:29

தஞ்சாவூர், 'தஞ்சாவூர் அருகே, செங்கிப்பட்டியில், 'எய்ம்ஸ்' மருத்துவமனை அமைக்க வேண்டும்' என, தஞ்சை மக்கள் சார்பில், பிரதமருக்கு ஆயிரக்கணக்கில் மனுக்கள் அனுப்பி வைக்கப்படுகின்றன.தமிழகத்தில், 2,000 கோடி ரூபாய் செலவில், எய்ம்ஸ் மருத்துவமனை அமைக்க, மத்திய அரசு முடிவு செய்தது.அதற்கான இடங்களை தேர்வு செய்து அனுப்ப, தமிழக அரசை கேட்டுக் கொண்டது. மறைந்த முதல்வர் ஜெயலலிதா, தஞ்சாவூர் - செங்கிப்பட்டி, ஈரோடு - பெருந்துறை, செங்கல்பட்டு, மதுரை மற்றும் புதுக்கோட்டை ஆகிய, ஐந்து இடங்களை தேர்வு செய்து, மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தார்.தஞ்சை மக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள், மாணவர்கள் என பலரும், 'செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வேண்டும்' என, பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்னர்.எய்ம்ஸ் மருத்துவமனை போராட்டக்குழு தலைவர் முருகேசன் கூறியதாவது:

செங்கிப்பட்டியில், எய்ம்ஸ் அமையும் பட்சத்தில், கடைக்கோடி பகுதியான நாகை வரை உள்ள மக்கள் பயன்பெறுவர்.
இது குறித்து, பிரதமருக்கு தொடர்ந்து, கடிதம் மூலம் வலியுறுத்தி வருகிறோம். 

எங்கள் கோரிக்கை மனுக்கள், பிரதமருக்கு குவியலாக சென்றுள்ளது. செங்கிப்பட்டியில் எய்ம்ஸ் அமையும் என, நம்புகிறோம்.செங்கிப்பட்டியில், 200க்கும் மேற்பட்ட ஏக்கர் அரசு நிலம், மாவட்ட, மாநில மற்றும் தேசிய நெடுஞ்சாலைகள், 24 மணி நேர தண்ணீர் வசதி, 30 கி.மீட்டரில் திருச்சி விமான நிலையம், பஸ் மற்றும் ரயில் வசதி உள்ளதால், இங்கேயே எய்ம்ஸ் அமைக்க வேண்டும் எனவும் கோரிக்கை மனுக்களில் குறிப்பிட்டு அனுப்பப்படுகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TODAY 10.07.2026