Friday, September 8, 2017

தள்ளுவண்டி கடைகளை அகற்ற இட்லியில் பினாயில் தெளிப்பு

பதிவு செய்த நாள்08செப்
2017
00:44




மேட்டூர்: திறந்த வெளியில் தள்ளு வண்டியில் வைத்து விற்பனை செய்த இட்லி, பணியாரம் மீது, நகராட்சி கமிஷனர் பினாயில் தெளித்து விட்டதாக வியாபாரிகள் குற்றம்சாட்டினர்.

சேலம் மாவட்டம், மேட்டூர் அரசு மருத்துவ மனைக்கு செல்லும் சாலையை, விரிவாக்கம் செய்வதற்காக, அப்பகுதியில் ஆக்கிரமித்திருந்த கடைகளை, கடந்த வாரம் நகராட்சி பணியாளர்கள் அகற்றினர். கடையை காலி செய்த வியாபாரிகள் சிலர், இரண்டு நாட்களாக மருத்துவமனை அருகே தள்ளுவண்டியில் இட்லி, பணியாரம் விற்பனை செய்தனர்.
நேற்று காலை ஊழியர்களுடன் அப்பகுதிக்கு ஆய்வுக்கு சென்ற, மேட்டூர் நகராட்சி கமிஷனர் நாராயணன், தள்ளுவண்டி கடைகளை அங்கிருந்து எடுத்து செல்லும்படி எச்சரித்துள்ளார்; வியாபாரிகள் வண்டியை அகற்றவில்லை. இதையடுத்து, கமிஷனர், பாட்டிலில் எடுத்து வந்திருந்த பினாயிலை, தள்ளுவண்டிகளில் விற்பனைக்காக இருந்த இட்லி, பணியாரம் மீது, தெளித்துள்ளார். இட்லி, பணியாரத்தை, வியாபாரிகள், குப்பையில் கொட்டினர்.

'வண்டிகளை அப்புறப்படுத்துமாறு கடுமையாக கூறியிருந்தால், நாங்கள் சென்றிருப்போம். அதற்காக, உணவு பொருட்கள் மீது, பினாயில் தெளித்தது வேதனையளிக்கிறது' என, வியாபாரிகள் தெரிவித்தனர்.

நகராட்சி ஆணையாளர் கூறியதாவது: அரசு மருத்துவமனை அருகே, தள்ளுவண்டிகளில் திறந்தவெளியில் உணவு பொருட்களை வைத்து விற்பனை செய்யக்கூடாது; வரும் நாட்களில் இதுபோன்று செயல்பட்டால், பொருட்கள் பறிமுதல் செய்யப்படும் என எச்சரித்துஉள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
அரசு ஊழியர் 'ஸ்டிரைக்': 30 சதவீதம் பேர் பங்கேற்பு
பதிவு செய்த நாள்08செப்
2017
00:15




ஜாக்டோ - ஜியோ அமைப்பு நடத்திய, அரசு ஊழியர், ஆசிரியர் வேலை நிறுத்த போராட்டத்தில், 30 சதவீதம் பேர் பங்கேற்றனர். முதல்வர் பழனிசாமி நடத்திய பேச்சுக்கு பின், அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களின், ஜாக்டோ - ஜியோ கூட்டமைப்பு இரண்டாக உடைந்தது. ஒரு தரப்பினர் மட்டும், போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசு ஊழியர் சங்கம், முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகம், பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு, ஆசிரியர் முன்னேற்ற சங்கம், உயர்நிலை, மேல்நிலை பட்டதாரி ஆசிரியர் கழகம் உள்ளிட்ட, 15க்கும் மேற்பட்ட சங்கத்தினர் போராட்டத்தில் பங்கேற்றனர். தொடக்க பள்ளிகளில், 17 சதவீதமும், பள்ளிக் கல்வித்துறையில், 15 சதவீதம் பேரும், நேற்று பணிக்கு வரவில்லை. அதனால், 30சதவீத பள்ளிகளில் வகுப்புகள் நடக்கவில்லை. ஆசிரியர்கள் இன்றி, சில வகுப்புகள் ரத்து செய்யப்பட்டன. அரசு அலுவலகங்களில், 30 சதவீதத்திற்கு மேல் பங்கேற்கவில்லை. வருவாய்த் துறையை பொறுத்தவரை, பெரும்பாலானோர் பணிக்கு வராததால், தாலுகா அலுவலகங்களில் பணிகள் முடங்கின. தாலுகா அலுவலகங்கள் முன், மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட, இரண்டு லட்சம் பேர் கைது செய்யப்பட்டனர். மதுரை, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், கோவை, ஈரோடு, சேலம் உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு அலுவலகங்களில் பணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேலும், சில சங்கங்கள் ஆதரவு தெரிவித்து, இன்று போராட்டத்தை தீவிரப்படுத்த திட்டமிட்டிருந்தன. இந்நிலையில், உயர் நீதிமன்ற மதுரை கிளை தடை விதித்துள்ளதால், போராட்டம் முடிவுக்கு வரும் என, தெரிகிறது.

இதுகுறித்து, ஜாக்டோ - ஜியோ உயர்மட்டக் குழு உறுப்பினர், கே.பி.ஓ.சுரேஷ் கூறுகையில், 'நீதிமன்ற உத்தரவை படித்த பின்பே, போராட்டத்தை கைவிடுவது குறித்து, முடிவு செய்யப்படும்' என்றார்.
காலியான 494 பி.டி.எஸ்., இடங்கள் : சுயநிதி கல்லூரிகள் நிரப்ப அனுமதி
பதிவு செய்த நாள்08செப்
2017
02:05

நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள, 494 பி.டி.எஸ்., இடங்களை, சுயநிதி மருத்துவக் கல்லுாரிகளே நிரப்பி கொள்ள, மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில், 'நீட்' தேர்வு அடிப்படையில், மருத்துவ மாணவர் சேர்க்கை, ஆக., 24ல் துவங்கியது. 

இரண்டு கட்டங்களாக நடந்த கவுன்சிலிங்கில், அரசு ஒதுக்கீட்டுக்கான, 3,534 எம்.பி.பி.எஸ்., - 1,247 பி.டி.எஸ்., இடங்கள் நிரம்பின. சுயநிதி கல்லுாரிகளில், நிர்வாக ஒதுக்கீட்டில், 381 எம்.பி.பி.எஸ்., இடங்கள் நிரம்பின. இதில், 715 பி.டி.எஸ்., இடங்களில், 221 இடங்கள் மட்டும் நிரம்பின; 494 பி.டி.எஸ்., இடங்கள் காலியாக உள்ளன. இதை, மருத்துவ கல்லுாரிகளே நிரப்பிக் கொள்ள, மருத்துவக் கல்வி இயக்ககம் அனுமதி அளித்துள்ளது.
இது குறித்து, மருத்துவ மாணவர் சேர்க்கை செயலர் செல்வராஜ் கூறுகையில், ''நிர்வாக ஒதுக்கீட்டில் காலியாக உள்ள இடங்களுக்கு, அந்தந்த கல்லுாரிகளே மாணவர் சேர்க்கை நடத்தி கொள்ள, 'நீட்'தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் பட்டியல் அளிக்கப்பட்டு உள்ளது. 

''அதன் அடிப்படையில், மாணவர் சேர்க்கையை கல்லுாரிகள் நடத்தும்,'' என்றார்.

உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, வரும், 10க்குள், தமிழகத்தில், பி.டி.எஸ்., இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை நடத்தி முடிக்க வேண்டும்.
மூன்று நாட்களில் மாணவர் சேர்க்கை நடத்தி முடிப்பதில், சிக்கல் உள்ளது. இதனால், உச்ச நீதிமன்றத்தை நாட, சுயநிதி கல்லுாரிகள் திட்டமிட்டு உள்ளன.

- நமது நிருபர் -
மும்பை ,தொடர் குண்டு, வெடிப்பு, வழக்கில், இருவருக்கு,தூக்கு

மும்பை: மஹாராஷ்டிர மாநிலம், மும்பையில்,1993ல் நடந்த, 257 பேரை பலி வாங்கிய, தொடர் குண்டுவெடிப்பு வழக்கில், தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கானுக்கு, மரண தண்டனை விதிக்கப்பட்டு உள்ளது. குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட, தாதா அபு சலீமுக்கு, ஆயுள் தண்டனை விதித்து, 24 ஆண்டுகளாக நடந்துவந்த வழக்கில், தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.



மஹாராஷ்டிர மாநிலத்தில், முதல்வர் தேவேந்திரபட்னவிஸ் தலைமையிலான, பா.ஜ., அரசு அமைந்துள்ளது. 1993ம் ஆண்டு, அப்போதைய முதல்வர் சரத்பவார் தலைமையில், காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. முதல்வராக, சரத்பவார், மார்ச் 6ல், பொறுப்பேற்றார்.

மார்ச், 12ல், மும்பையின் பல இடங்களில், சங்கிலித் தொடராக, குண்டு வெடிப்புகள்நடந்தன. மொத்தம், 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில், 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் காயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து, மஹாராஷ்டிர போலீசார்விசாரணை நடத்தினர்.

பின், இவ்வழக்கு, சி.பி.ஐ., விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.மும்பை தொடர் குண்டு வெடிப்பு, பிரதானவழக்கில், 2006, செப்., 12ல் தீர்ப்பு வழங்கப்பட்டது. நிழலுலக தாதா, டைகர் மேமன் குடும்பத்தைச் சேர்ந்த, நான்கு பேர்,குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்; மூன்று பேர் விடுவிக்கப்பட்டனர்.மொத்தம், 12 பேருக்கு துாக்கு தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.இதில், டைகர் மேமனின்சகோதரர், யாகூப்மேமனுக்கு விதிக்கப்பட்ட துாக்கு தண்டனையை, 2013ல், உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

அதே சமயத்தில், மற்றவர்களின் துாக்கு தண்டனையை, ஆயுள் தண்டனையாக குறைத்தது. அதைத் தவிர, தண்டனை பெற்றவர்களில்,16 பேரின் ஆயுள் தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது. இந்த,தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவரான, யாகூப் மேமன், 2015, ஜூலை, 30ல் தூக்கிலிடப்பட்டான்.

* இரண்டாவது வழக்கு


இதைத் தவிர, இந்த வழக்கில் தொடர்புடைய, அபு சலீம், தாஹிர் மெர்ச்சன்ட் உள்ளிட்டோர் மீதான வழக்கை, மும்பையில் உள்ள, தடா சிறப்பு நீதிமன்றம், தனியாக விசாரித்து வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு, இந்தாண்டு, ஜூன், 16ல் வழங்கப்பட்டது.

இதில், மும்பையில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டிய முஸ்தபா தோசா, ஆயுதங்கள் சப்ளை செய்த அபு சலீம், தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கான், கரிமுல்லா கான், ரியாஸ் சித்திகி ஆகியோர்,

குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டது. அப்துல் கயாம் என்பவர், விடுவிக்கப்பட்டார். இதனிடையில், சிறையில் இருந்த முஸ்தபா தோசா, மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்டவர்களுக் கான தண்டனை விபரத்தை, மும்பையில் உள்ள தடா சிறப்பு நீதிமன்றம், நேற்று அறிவித்தது. தண்டனை விவரம் வருமாறு:
* தாஹிர் மெர்ச்சன்ட், பெரோஸ் அப்துல் ரஷீத் கான் இருவருக்கும் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது
* அபு சலீம் மற்றும் கரிமுல்லா கானுக்கு ஆயுள் தண்டனை மற்றும் தலா இரண்டு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது
* ரியாஸ் சித்திகிக்கு, 10 ஆண்டு சிறை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு உள்ளது.
கிரிமினல் சதி திட்டம் தீட்டியது, அரசுக்கு எதிராக போர் தொடுத்தது, படுகொலை உள்பட பல்வேறு பிரிவுகளில் இவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டிருந்தன. கடந்த, 24 ஆண்டுகளாக நடந்து வந்த இந்தவழக்கில், நேற்று தண்டனை அறிவிக்கப்பட்டது.

தனியாக நடந்த வழக்கு

மும்பை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில், நடிகர் சஞ்சய் தத் உள்ளிட்டோர், 1993, ஏப்., 19ல் கைது செய்யப்பட்டனர். சஞ்சய் தத் உள்பட, 189 பேர் மீது, 10 ஆயிரம் பக்கங்களில், முதல் குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர், இந்த வழக்கு சி.பி.ஐ.,யிடம் ஒப்படைக்க பட்டது.அந்த நேரத்தில், அபு சலீம் உள்ளிட்டோர் தலைமறைவாக இருந்ததால், அவர்களைத் தவிர மற்றவர்கள் மீதான முக்கிய வழக்கு தனியாக விசாரிக்கப்பட்டது.

தெற்கு ஐரோப்பிய நாடான போர்ச்சுகல்லில் பதுங்கியிருந்த, அபு சலீம், நாடு கடத்தப்பட்டு, 2002ல் கைது செய்யப்பட்டான்; 2005ல் இந்தியா கொண்டு வரப்பட்டான்.வளைகுடா நாடான துபாயில் இருந்து டில்லி திரும்பியபோது, முஸ்தபா தோசா, 2003ல் கைது செய்யப்பட்டார்.இவ்வாறு தனித் தனியாக கைது செய்யப்பட்ட, ஏழு பேர் மீது, தனியாக வழக்கு தொடரப்பட்டு, நேற்று தண்டனை விபரம் அறிவிக்கப்பட்டது.

257 உயிர்களை பலி கொண்டவழக்கில் 24 ஆண்டு விசாரணை

மும்பையில், குண்டு வெடிப்பு வழக்கு விசாரணை, 24 ஆண்டுகளாக நடந்து வந்தது. இவ்வழக்கு, கடந்து வந்த பாதை:

மார்ச், 12, 1993 - மும்பையின், 12 இடங்களில் நடந்த குண்டு வெடிப்பு சம்பவங்களில், 257 பேர் உயிரிழந்தனர்; 713 பேர் காயமடைந்தனர்

ஏப்., 12, 1993 - பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் கைது செய்யப்பட்டார்
நவ., 4, 1993 - சஞ்சய் தத் உள்பட, 189 பேர் மீது, 10 ஆயிரம் பக்கங்களில், குற்றச்சாட்டு பதிவு

நவ., 19, 1993 - வழக்கு சி.பி.ஐ.,க்கு மாற்றப்பட்டது

ஏப்., 19, 1995 - பிரதான வழக்கின், விசாரணை துவங்கியது

செப்., 18, 2002 - போர்ச்சுகல்லில், அபு சலீம் கைது செய்யப்பட்டார்

மார்ச் 20, 2003 - துபாயில் இருந்து டில்லிக்கு வந்தபோது, முஸ்தபா தோசா கைது செய்யப்பட்டார்.

செப்., 2003 - பிரதான வழக்கின் விசாரணை முடிந்து, தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது

செப்., 12, 2006 - பிரதான வழக்கில், மும்பை தடா நீதிமன்றம், தீர்ப்பு அளித்தது
மார்ச், 16,2013 - சிறை தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்ததால், சஞ்சய் தத், சரணடைந்தார்

மார்ச், 21, 2013 - பிரதான வழக்கில், யாகூப் மேமனுக்கு தூக்கு தண்டனையை, உச்ச நீதிமன்றம் உறுதி செய்தது.

ஜூலை, 30, 2015 - யாகூப் மேமன், தூக்கிலிடப்பட்டார்டிச., 7, 2015 - இரண்டாவது வழக்கின் இறுதிக் கட்ட விசாரணை துவங்கியது

ஜூன், 16, 2017 - சலீம் உள்ளிட்டோரை, குற்றவாளிகள் என, தடா நீதிமன்றம் அறிவித்தது

செப்., 7, 2017 - சலீம் உள்ளிட்டோருக்கான தண்டனை அறிவிப்பு

தலைமறைவாக தாவூத் உள்பட 33 பேர்

மும்பை குண்டுவெடிப்பு வழக்கில், நிழலுலக தாதா, தாவூத் இப்ராஹிம், டைகர் மேமன் உள்பட, 3௩ பேர் தொடர்ந்து தலைமறைவாக உள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர், பாகிஸ்தானில் பதுங்கியிருப்பதாக கூறப்படுகிறது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வரும், தலைமறைவாக உள்ள சில முக்கிய குற்றவாளிகள்:

தாவூத் இப்ராஹிம்: மும்பை தாதா இருந்த தாவூத், உள்ளூர் தாதாக் கோஷ்டிகளுடன் மோதலில் ஈடுபட்டு வந்தான். ரவுடிகள் சாம்ராஜ்ஜியத்தை ஒரு வர்த்தகமாக மாற்றிய தாவூத், 1984ல், நாட்டை விட்டு தப்பிச் சென்றார். மும்பை தாக்குதலின் மூளையாக கருதப்படும் தாவூத், பாகிஸ்தானின் கராச்சியில் பதுங்கியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்ராஹிம் அப்துல் ரசாக் மேமன் என்கிற, டைகர் மேமன்:

பாபர் மசூதி இடிப்பைத் தொடர்ந்து, 1992ல் மும்பையில் நடந்த கலவரத்தில், மேமன் குடும்பம் பாதிக்கப்பட்டது. தாதாக்களுடன் இருந்த தொடர்புகளை பயன்படுத்தி, பழிக்கு பழி வாங்க திட்டமிட்டான். அதன்படி, துபாய் வழியாக, பாகிஸ்தானுக்கு சென்று, அங்கிருந்தபடியே திட்டமிட்டு, 1993ல், மும்பை தாக்குதலை நடத்தியதாக மேமன் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. நாட்டை விட்டு வெளியேறிய பிறகு, மேமன் குறித்து அதிகளவில் தகவல் எதுவும் இல்லை. இவன் பாகிஸ்தான் மற்றும் துபாயில், மாறி மாறி, தங்கி வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகமது உமர் அஹமது தோசா: மாரடைப்பால் உயிரிழந்த முஸ்தபா தோசாவின் சகோதரரான அஹமது தோசா, மும்பை தாக்குதல் சதி திட்டத்துக்கான சந்திப்புகளுக்கு, ஏற்பாடு செய்தவன். துபாயில், பல்வேறு போலி பெயர்களில், நகைக்கடைகளை நடத்தி வருகிறார்.

தண்டனை அனுபவித்த நடிகர் சஞ்சய் தத்

மும்பை தொடர் குண்டு வெடிப்பு வழக்கின் முக்கிய குற்றவாளிகளில் ஒருவனான அபு சலீம், மூன்று, ஏ.கே., - 56 துப்பாக்கிகள், கையெறி குண்டுகள் உள்ளிட்டவற்றை, பிரபல பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்திடம் கொடுத்து வைத்திருந்தார்.

பயங்கரவாதிகளுக்கு உதவியதாக, சஞ்சய் தத் மீது, தடா கோர்ட்டில் தனியாக வழக்கு நடந்தது. அதில், நடிகர் சஞ்சய் தத்துக்கு, ஐந்து ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது. அதை, உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததால், சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். நன்னடத்தை காரணமாக, தண்டனை காலம் முடியும் முன்பே, சஞ்சய் தத் விடுதலை செய்யப்பட்டார்.
கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து - 5 பேர் உயிரிழப்பு


கோவை சோமனூரில் பேருந்து நிலைய மேற்கூரை இடிந்து விபத்து ஏற்பட்டது இதில் 5 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

செப்டம்பர் 07, 2017, 02:20 PM
கோவை

கோவை சூலூர் அருகே உள்ள சோமனூரில் பஸ் நிலையம் உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக பஸ் நிலைய மேற்கூரை விரிசல் காணப்பட்டது. இந்த நிலையில் இன்று மதியம் பஸ்நிலையத்தில் அதிகமான பயணிகள் காத்து இருந்தனர். அப்போது நகர பஸ் ஒன்று மேர்கூடைமீது மோதியது. இதில் எதிர்பாராதவிதமாக பஸ் நிலையத்தின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதில் இடிபாடுகளுக்குள் சிக்கி 5 பேர் பலியானார்கள். ஒன்றுக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர்.

இடிபாடுகளுக்குள் அதிகமான பேர் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. தகவல் அறிந்ததும் அருகில் உள்ள கோவை திருப்பூர் ஆகிய ஊர்களில் இருந்து தீயணைக்கும் படைகள் வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

மாநில செய்திகள்

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் வானிலை ஆய்வு மையம் தகவல்


மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

செப்டம்பர் 08, 2017, 04:45 AM
சென்னை,

தமிழகத்தில் பரவலாக தென்மேற்கு பருவமழை சில வாரங்களாக தீவிரமாக பெய்து வருகிறது. இன்னும் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறியதாவது:-

வளிமண்டலத்தில் மேலடுக்கு சுழற்சி ஏற்பட்டுள்ள காரணத்தால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 3 நாட்களுக்கு அநேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். மாலை அல்லது இரவு நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

ஜூன் மாதம் 1-ந்தேதி முதல் நேற்று வரை இயல்பாக பெய்ய வேண்டிய மழை அளவு 223 மில்லிமீட்டர். இயல்பைவிட அதிகமாக 323 மி.மீ. மழை பெய்துள்ளது. இது 45 சதவீதம் கூடுதலாகும்.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேர மழை அளவு வருமாறு:-

ஆலங்குடி, ஆர்.கே. பேட்டை, செய்யாறு தலா 7 செ.மீ, காஞ்சீபுரம் 6 செ.மீ., ஸ்ரீபெரும்புதூர், சின்னகல்லார், வேலூர், உத்திரமேரூர், சென்னை விமான நிலையம், வாணியம்பாடி, ஆரணி தலா 5 செ.மீ., போளூர் 4 செ.மீ., செங்கல்பட்டு, மணியாச்சி, ஆம்பூர், பள்ளிப்பட்டு, காரைக்குடி, கொளப்பாக்கம், பெரியகுளம், காவேரிபாக்கம், சோழவந்தான், மேலலாத்தூர், வால்பாறை, பாளையங்கோட்டை, வேலூர் மாவட்டம் திருப்பத்தூர் தலா 3 செ.மீ., சேரன்மகாதேவி, ஆலங்காயம், ஊத்தங்கரை, நாங்குநேரி, குடியாத்தம், திருமயம், உசிலம்பட்டி, பெரியகுளம், சாத்தனூர் அணைக்கட்டு, பூண்டி, மதுராந்தகம், அஞ்சட்டி, அரிமளம், இளையான்குடி தலா 2 செ.மீ. மழை பெய்துள்ளது. மேலும் 30-க்கும் மேற்பட்ட இடங்களில் ஓரளவு மழை பதிவாகி உள்ளது.
ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய சேலம் கலெக்டர்


ஆத்தூர் அருகே ஆசிரியர்கள் பணிக்கு வராததால் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு பாடம் நடத்திய சேலம் கலெக்டர்

செப்டம்பர் 08, 2017, 04:45 AM

ஆத்தூர்,

சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி, ஆத்தூர் அருகே மல்லியகரையில் சாலையோரங்களில் மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைப்பதற்காக நேற்று காலை வந்தார். பின்னர் தம்மம்பட்டிக்கு புறப்பட்டார். அங்கு செல்லும் வழியில் கருத்தராஜாபாளையம் ஊராட்சி தொடக்கப்பள்ளி வளாகத்தில் ஜாக்டோ - ஜியோ போராட்டம் நடந்ததால் ஆசிரியர்கள் பணிக்கு வரவில்லை. இதனால் மாணவ - மாணவிகள் வகுப்புகளுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தனர். இதைப் பார்த்த கலெக்டர் ரோகிணி அந்த பள்ளிக்கு சென்றார். வெளியே நின்று கொண்டிருந்த மாணவ - மாணவிகளை வகுப்புகளுக்கு அழைத்து சென்று உட்கார வைத்தார். பின்னர் 5-ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு அவர் ஆங்கில பாடம் நடத்தினார். அப்போது மாணவ - மாணவிகளின் சந்தேகங்களுக்கு அவர் பதில் அளித்தார். சிறிது நேரம் அங்கிருந்து விட்டு கலெக்டர் ரோகிணி புறப்பட்டு சென்றார்.

NEWS TODAY 15.07.2026