Tuesday, September 12, 2017


ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் கல்வி உதவித் தொகைக்கான நிதி ரத்து: மத்திய அரசு எச்சரிக்கை


By DIN  |   Published on : 12th September 2017 05:03 AM  |   
AadharCard
Ads by Kiosked
ஆதார் விவரங்களைச் சமர்ப்பிக்காவிட்டால் எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான மத்திய நிதி ரத்து செய்யப்படும் என மத்திய அரசு எச்சரித்துள்ளது.
மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறையின் தென் மாநிலங்களுக்கான ஆய்வுக் கூட்டம் மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர் தாவர்சந்த் கெலோட் தலைமையில் சென்னையில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் தமிழகம், புதுச்சேரி, ஆந்திரம், கேரளம், கர்நாடகம், அந்தமான் நிகோபர் தீவுகள், லட்சத் தீவுகள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சமூக நலத் துறை அதிகாரிகளும், செயலர்களும் பங்கேற்றனர். தமிழக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வளர்மதியும் பங்கேற்றார்.
இதில் மத்திய அரசு சார்பில் நிதியுதவி அளிக்கப்படும் தாழ்த்தப்பட்ட (எஸ்.சி.), பழங்குடியின (எஸ்.டி.) பள்ளி மாணவர்களுக்கான கல்வி உதவித் தொகைக்கான நிதி, முதியோர் ஓய்வூதியத் திட்டம், போதை மறுவாழ்வு மையத் திட்டம் என்பன உள்ளிட்ட திட்டங்கள் குறித்த ஆய்வுகள் நடத்தப்பட்டன.
கூட்டத்தில் பேசிய மத்திய சமூக நீதி மற்றும் மேம்பாட்டுத் துறைச் செயலர் ஜி.லதா கிருஷ்ண ராவ், எஸ்.சி., எஸ்.டி. பள்ளி மாணவர்களின் வங்கிக் கணக்குடன் ஆதார் எண் இணைக்கப்பட்டது தொடர்பான எந்தவொரு விவரங்களையும் தமிழகம், கேரளம், புதுச்சேரி போன்ற சில மாநிலங்கள் இன்னும் சமர்ப்பிக்கவில்லை.
இந்த விவரங்களை உடனடியாக, ஓரிரு வாரங்களில் இந்த மாநிலங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
அப்போதுதான் இந்தத் திட்டத்துக்கான நிதியை மத்திய அரசு விடுவிக்கும். அவ்வாறு குறிப்பிட்ட காலத்துக்குள் விவரங்களைச் சமர்ப்பிக்கவில்லை எனில், நிதி ரத்து செய்யப்படும்.

கோரக்பூர் குழந்தைகள் மரணம்: மயக்க மருந்தியல் மருத்துவர் நீதிமன்றத்தில் சரண்


By DIN  |   Published on : 12th September 2017 02:28 AM 
உத்தரப் பிரதேச மாநிலம், கோரக்பூர் அரசு மருத்துவமனையில் நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து உயிரிழந்த வழக்கில் தொடர்புடைய மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ், நீதிமன்றத்தில் திங்கள்கிழமை சரணடைந்தார்.
இதைத் தொடர்ந்து நீதிபதியின் உத்தரவின்பேரில் அவர் சிறையிலடைக்கப்பட்டார். இதனிடையே, மருத்துவர் சதீஷை இரண்டு நாள் போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி வழங்குமாறு நீதிமன்றத்தில் விண்ணப்பிக்கப் போவதாக உத்தரப் பிரதேச காவல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
கோரக்பூரில் செயல்படும் பாபா ராகவ்தாஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நூற்றுக்கணக்கான குழந்தைகள் அடுத்தடுத்து மரணமடைந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
மாநில பாஜக அரசுக்கு எதிராக கடும் விமர்சனங்களை முன்வைப்பதற்கான சூழலை இச்சம்பவம் உருவாக்கியது. மருத்துவமனையில் பிராண வாயு உருளைகள் போதிய அளவில் இருப்பு இல்லாததே குழந்தைகள் இறப்புக்குக் காரணம் எனவும் கூறப்பட்டது.
இதுகுறித்து விசாரிக்க மாநில தலைமைச் செயலர் ராஜீவ் குமார் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. சம்பவத்தை விசாரித்த அக்குழு, பாபா ராகவ் மருத்துவமனை முன்னாள் தலைவர் மருத்துவர் ராஜீவ் மிஸ்ரா, மயக்க மருந்தியல் துறை முன்னாள் தலைவர் சதீஷ் உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்குமாறு பரிந்துரைத்தது.
இதனிடையே, இந்த விவகாரத்தில் மருத்துவர்கள் உள்பட 4 பேரை போலீஸார் கைது செய்தனர். மயக்க மருந்தியல் துறை மருத்துவர் சதீஷ் தலைமறைவாக இருந்து வந்தார். இந்நிலையில், கோரக்பூரில் அமைந்துள்ள ஊழல் தடுப்பு சிறப்பு நீதிமன்றத்தில் அவர் திங்கள்கிழமை நேரில் சரணடைந்தார்.
இதையடுத்து, மருத்துவர் சதீஷை நீதிமன்றக் காவலுக்கு அனுப்புமாறு நீதிபதி உத்தரவிட்டார். அதேவேளையில் இரு நாள்கள் அவரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்கக் கோரி நீதிமன்றத்தின் முறையிட உள்ளதாக உத்தரப் பிரதேச காவல் துறை உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பருக்குள் கணினி மயமாக்கப்படும்: சு.ஜவஹர்


By DIN  |   Published on : 12th September 2017 02:44 AM  |   
meeting
காஞ்சிபுரத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிதி மற்றும் மனிதவள மேலாண்மை ஆய்வுக் கூட்டத்தில் பேசிய கருவூல கணக்குத்துறை முதன்மைச் செயலாளர் தென்காசி ஜவஹர். (கீழ் வரிசையில்) கூட்டத்தில் கலந்துகொண்ட அரசுத் துறை
Ads by Kiosked
மாநிலம் முழுவதும் 9 லட்சம் அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடுகள் வரும் டிசம்பர் மாதத்துக்குள் கணினிமயமாக்கப்படும் என கருவூலக் கணக்குத் துறை முதன்மைச் செயலாளரும், ஆணையருமான சு.ஜவஹர் தெரிவித்தார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த நிதி, மனிதவள மேலாண்மைத் திட்டத்தின் கீழ் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகளை கணினி மயமாக்குதல் திட்ட முன்னேற்றம் குறித்த ஆய்வுக் கூட்டம் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்துக்கு தலைமை வகித்து சு.ஜவஹர் பேசியதாவது:
மாநில அரசு நிதி மேலாண்மை மற்றும் மாநில அரசு மனிதவள மேலாண்மையை இணைத்து ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் திட்டம் நடைமுறைப் படுத்தப்பட உள்ளது.
இதில், தற்பொழுது நடைமுறையில் உள்ள தன்னியக் கருவூலப் பட்டியல் ஏற்பளிக்கும் முறை, வலைதள சம்பளப் பட்டியல், மின்னணு வழி ஓய்வூதியம் ஆகியவை சேர்க்கப்படவுள்ளன. இத்திட்டத்தை செயல்படுத்த ரூ.288.91 கோடி ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதற்காக, தனியார் நிறுவனம் ஒன்று தெரிவு செய்யப்பட்டுள்ளது. அதோடு, உள்கட்டமைப்பு வசதிகள், மென்பொருள் உருவாக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இதன்மூலம், மாநிலம் முழுவதும் உள்ள சுமார் 23, 648க்கு மேற்பட்ட பணம் பெற்று வழங்கும் அலுவலர்கள் நேரடி இணையத்தின் மூலம் சம்பளப் பட்டியலை கருவூலத்தில் சமர்ப்பிக்க இயலும். இத்திட்டத்தில் அரசின் வருவாயினை இணையவழி மூலம் பெற வழிவகை செய்யப்பட்டுள்ளதால் அரசின் நடப்பு வரவினை உடனுக்குடன் அறிந்து கொள்ளலாம். மேலும், டிஜிட்டல், விரல் ரேகைப் பதிவுமுறைப்படி தகவல்கள் உறுதிப்படுத்து வதன் மூலம் மாநிலத்தின் நிதிநிலை விவரம் அரசுக்கு விரைந்து கிடைக்கும்.
இதனால், தேவையற்ற காலதாமதமும், முறைகேடுகளும் தவிர்க்கப்படும். இத்திட்டத்தின் மூலம் சுமார் 9 லட்சம் அரசுப் பணியாளர்களின் பணிப் பதிவேடுகள் கணினி மயமாக்கப்படுவ தோடு, சம்பளப் பட்டியல், பதவி உயர்வு, மாறுதல்கள், விடுப்பு மற்றும் இதர விபரங்கள் ஆகியவை அவ்வப்போது விரைந்து பதியப்படும்.
அரசுப் பணியாளர்கள் ஓய்வு பெறும் வரையில், அவர்களது விவரங்கள் பதியப்படுவதால், பல்வேறு அலுவலகங்களுக்கு இடையேயும் வெவ்வேறு ஊர்களுக்கு இடையில் பணிப் பதிவேடுகள் மாற்றப்படுவது தவிர்க்கப்படும். மேலும், பணிப்பதிவேடு காணாமல் போகாது, பணி மாறுதலை விரைந்து தெரிந்து கொள்ளலாம். ஓய்வூதியம் தாமதமின்றி வழங்கப்படும். பணியாளர் தொடர்பான அரசின் ஆய்வுக்கும் திட்டமிடலுக்கும் இக்கணினி ஆவணங்கள் உதவும்.
முதல்கட்டமாக கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் சென்னை, ஈரோடு, திருவண்ணா மலை மாவட்டங்களில் பணிப் பதிவேடு கணினிமயமாக்கல் தொடங்கப்பட்டுள்ளன. அதன்படி,காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள 31,219 அரசு ஊழியர்களின் பணிப் பதிவேடு களும் விரைவில் கணினிமயமாக்கப்படும். எனவே, இதர மாவட்டங்களிலும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டு, வரும் டிசம்பர் மாதத்துக்குள் நிறைவு செய்ய திட்டமிட்டுள்ளோம் என்றார் அவர்.
இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் பா.பொன்னையா, காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானி, கருவூலம், கணக்குத்துறை இணை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    சி.எம்.சி., மருத்துவ கல்லூரியில் ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கை
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    22:12

    வேலுார்: மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், சி.எம்.சி., மருத்துவ கல்லுாரியில், ஒரே ஒரு மாணவர் மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.

    'நீட்' தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து, வேலுாரில் உள்ள, சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, இந்தாண்டு மாணவர் சேர்க்கையை நிறுத்தியது. இது தொடர்பாக, உச்ச நீதிமன்றத்தில், சி.எம்.சி., நிர்வாகம் வழக்கு தொடர்ந்துள்ளது. இதன் தீர்ப்பு, அக்டோபரில் வெளியாக உள்ளது.இதனால், 100 எம்.பி.பி.எஸ்., மற்றும், 60 எம்.டி., மருத்துவர் படிப்பு இடங்கள் காலியாக உள்ளன. 

    இந்நிலையில், மத்திய அரசின் இட ஒதுக்கீடு அடிப்படையில், கேரள மாநிலம், திருவனந்த புரத்தை சேர்ந்த சித்தாந்த் நாயர், 18, என்ற ஒரே ஒரு மாணவர் மட்டும், இந்தாண்டு, எம்.பி.பி.எஸ்., படிக்க நேற்று சேர்க்கப்பட்டார். அவருக்கு நேற்று வகுப்பு துவங்கியது.

    கல்லுாரி அதிகாரிகள் கூறியதாவது: சி.எம்.சி., மருத்துவக் கல்லுாரி, மத்திய அரசுடன் ஒரு ஒப்பந்தம் செய்துள்ளது. அதன்படி, நாட்டுக்காக உயிர் தியாகம் செய்தவர்களின் பிள்ளைகளுக்கு, ஆண்டுக்கு, ஒரு 'சீட்' வழங்கப்படும். தற்போது, சேர்க்கப்பட்டு உள்ள மாணவரின் தந்தை, ராணுவ வீரர்; 2,001ல், காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் இறந்து விட்டார். இந்த மாணவரை, மத்திய அரசு தேர்வு செய்து அனுப்பியுள்ளது.இவ்வாறு அவர்கள்
    கூறினர்.
    கோவை சிறையில் தொடரும் உயிரிழப்பு! : 13 நாளில் 4 பேர் பலி; உணவில் ஊழல் என குற்றச்சாட்டு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    21:55

    கோவை: கோவை மத்திய சிறையில், 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர்; சிறையில் கைதிகளுக்கு கொடுக்கும் உணவில் ஊழல் நடப்பதால், ஊட்டச்சத்து குறைந்து, உயிரிழப்பு ஏற்படுவதாக புகார் எழுந்துள்ளது.

    கோவை மத்திய சிறையில், விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என, 1,800க்கும் மேற்பட்டோர் அடைக்கப்பட்டுள்ளனர். பெண்களுக்கான பிரத்யேக சிறையில், 40க்கும் மேற்பட்ட பெண் கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். கோவை மத்திய சிறையில், உடல்நலக் குறைவால் கைதிகள் உயிரிழப்பது அதிகரித்துள்ளது. 13 நாட்களில், நான்கு கைதிகள் உயிரிழந்துள்ளனர். இதற்கு, கோவை மத்திய சிறையில் நடக்கும் உணவு ஊழல் தான் முக்கிய காரணம் என, கூறப்படுகிறது.

    சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சிறையில் உள்ள கைதிகளுக்கு, சிந்தாமணி மூலம், உணவு பொருட்கள் ரேஷனில் வழங்கப்படுகின்றன. எப்.சி.ஐ., குடோனில் இருந்து அரிசி பெறப்படுகிறது. 1,800 கைதிகளுக்கு நாள்தோறும், 200 கிலோ பருப்பு வழங்க வேண்டும். ஆனால், 20 - 25 கிலோ தான் வழங்கப்படுகிறது. இதேபோன்று, வேர்கடலை வெறும், 20 சதவீதம் தான் வழங்குகின்றனர். எண்ணெய், காய்கறி, கோழிக்கறி என, அனைத்திலும் மிகவும் குறைந்த அளவு தான் வழங்குகின்றனர்.கைதிகளை பரிசோதிக்கும் சிறை மருத்துவமனை டாக்டர்கள், சத்து குறைபாடு உள்ளதாக கூறுகின்றனர். 

    உணவில் போதுமான சத்துகள் இல்லாததால், கைதிகளுக்கு வயிற்றுவலி, வாந்தி, பேதி, நெஞ்சு வலி, மஞ்சள் காமாலை, காய்ச்சல் போன்ற வியாதிகள்
    ஏற்படுகின்றன.சிறையின் உள்ளே, உணவு பொருட்களை சப்ளை செய்ய வருவோர், 'பில்' கொண்டு வருவதில்லை. இதனால், எத்தனை கிலோ பொருட்கள் உள்ளே செல்கின்றன என்பதும் தெரியாது. இந்த உணவு ஊழல் குறித்து, சிறைத் துறை உயரதிகாரிகள் விசாரித்து, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
    'புகாரில் உண்மை இல்லை'

    கோவை சிறை, எஸ்.பி., செந்தில்குமாரிடம் கேட்ட போது, ''சிகிச்சையில் இருந்த கைதிகள் தான், உயிரிழந்துள்ளனர். சத்து குறைபாடு போன்ற காரணங்கள் இல்லை. கைதிகளின் உடல்நிலை குறித்து, முகாம் நடத்தி, சோதனை செய்யப்படுகிறது. உணவில் ஊழல் என்பதில் உண்மையில்லை. கைதிகளுக்கு யோகா பயிற்சி அளிக்கிறோம்,'' என்றார்.
    தரமில்லா பாதுஷா விற்பனை : ரூ.50 ஆயிரம் இழப்பீடு
    பதிவு செய்த நாள்11செப்
    2017
    19:50

    சென்னை: தரம் குறைந்த பாதுஷா விற்ற கடைக்காரர், பாதிக்கப்பட்டவருக்கு, வழக்கு செலவு தொகையுடன், 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க, நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    சென்னை மாவட்ட, வடக்கு நுகர்வோர் நீதிமன்றத்தில், சூளையைச் சேர்ந்த, வேணுகோபால் தாக்கல் செய்த மனு: சென்னை, சவுகார்பேட்டையில் உள்ள, இனிப்பு மிட்டாய் கடையில், 250 கிராம் பாதுஷா வாங்கினேன். வீட்டிற்கு சென்று, அதை சாப்பிட்ட சிறிது நேரத்தில், வாந்தி, மயக்கத்தால் உடல் நலம் பாதிக்கப்பட்டது. இது குறித்து, நேரில் புகார் கூறியும், என் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்பியும், இனிப்பு கடைக்காரர் கண்டு கொள்ளாததால், மன உளைச்சலுக்கு ஆளானேன். எனவே, ஐந்து லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்.

    இவ்வாறு, மனுவில் கூறியிருந்தார். வழக்கு விசாரணையின் போது, இனிப்பு மிட்டாய் கடைக்காரர் சார்பில், யாரும் ஆஜராகவில்லை.

    இதையடுத்து, நீதிபதி ஜெயபாலன், நீதித்துறை உறுப்பினர், உயிரொலி கண்ணன் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு: கிண்டியில் உள்ள, 'கிங்' ஆய்வு மையத்தில் சோதனை செய்ததில், 'பாதுஷா தரமற்றது' என, அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது. கடைக்காரரின் சேவையில் குறைபாடு உள்ளது. அதனால், மனுதாரருக்கு, 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடும், வழக்கு செலவு தொகையாக, 5,000 ரூபாயும், அவர் வழங்க வேண்டும். இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
    அரசு டாக்டர் சங்க நிர்வாகிகள் தேர்வு

    பதிவு செய்த நாள்11செப்
    2017
    23:41

    மதுரை: அரசு டாக்டர்கள் சங்க நிர்வாகிகள் தேர்தலில் மாநில தலைவராக மதுரை டாக்டர் கே.செந்தில் தேர்வு செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கலில் அரசு டாக்டர்கள் சங்க மாநில நிர்வாகிகள் தேர்தல் நடந்தது. இதில், மாநில தலைவராக மதுரை டாக்டர் கே.செந்தில், செயலாளர் கோவை ரவிசங்கர், பொருளாளர் சிவகங்கை கே.ராமு, துணைத் தலைவர்களாக சீனிவாசன், அன்பழகன், இணை செயலாளர்களாக புலிகேசி, சுந்தர்ராஜன் ஆகியோர் தேர்வு
    செய்யப்பட்டனர்.

    NEWS TODAY 15.07.2026