Wednesday, September 13, 2017

ஆமதாபாத் - மும்பை, 'புல்லட்' ரயில்நாளை அடிக்கல் நாட்டுகிறார் பிரதமர்
ஆமதாபாத்:ஆமதாபாத் - மும்பை இடையே, அதிவேக, 'புல்லட்' ரயில் இயக்குவதற்கான அடிக்கல் நாட்டு விழா, ஆமதாபாத்தில் நாளை நடக்கிறது.



குஜராத்தில், முதல்வர் விஜய் ரூபானி தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. மத்தியில், பிரதமர் மோடி தலைமையிலான, தே.ஜ., கூட்டணிஆட்சி அமைந்த பின், தாக்கல் செய்யப்பட்ட, முதல் ரயில்வே பட்ஜெட்டில், 'நாட்டில், அதிவேக புல்லட் ரயில் இயக்கப்படும்' என, அறிவிக்கப்பட்டது.அதில், குஜராத் மாநிலம், ஆமதாபாத்திலிருந்து, மஹாராஷ்டிர மாநிலம், மும்பை வரை, முதல் புல்லட் ரயில் இயக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில், ரயில்வே அமைச்சராக பொறுப்பேற்ற, பியுஷ் கோயல், புல்லட் ரயில் பற்றி, நேற்று கூறியதாவது:நாட்டின், முதல் புல்லட் ரயிலை இயக்குவதற்கான பணிகள், நாளை துவங்குகின்றன. ஆமதாபாத்தில் நாளை நடக்கும் விழாவில், பிரதமர் மோடியும், ஜப்பான் பிரதமர், ஷின்ஷோ அபேவும், புல்லட் ரயில் பணிகளுக்கான அடிக்கல்லைநாட்டுகின்றனர்.

இத்திட்டம், ஜப்பானின் கடனுதவியுடன் செயல்படுத்தப்பட உள்ளது. ஒரு லட்சத்து, 10 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், திட்டம் நிறைவேற்றப்பட உள்ளது. இதில், 65 சதவீத தொகையை, 0.1சதவீத வட்டியில், ஜப்பான் வழங்குகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

320 கி.மீ., வேகம்

* ஆமதாபாத் - மும்பை இடையே, 508 கி.மீ., துாரத்துக்கு இயக்கப்பட உள்ள புல்லட் ரயில், மணிக்கு, 320 கி.மீ., வேகத்தில் செல்லும்; இது, 350 கி.மீ., வரை அதிகரிக்கப்படும்

* இந்த ரயில், சபர்மதி, வதோதரா உட்பட, 12 ரயில்வே ஸ்டேஷன்களில் நின்றுசெல்லும்

* மொத்த வழித் தடத்தில், 92 சதவீத துாரம், மேம்பாலத்தில் புல்லட் ரயில் பயணிக்கும்.6 சதவீதம் துாரம், சுரங்கப்பாதையாக இருக்கும். மீதமுள்ள, 2 சதவீத துாரம், தரையில் பயணிக்கும்

* 21 கி.மீ., துார சுரங்கப்பாதையில், 7 கி.மீ., துாரம், கடலுக்கு அடியில் அமைகிறது

• இந்த திட்டத்தை ஐந்து ஆண்டுகளில் முடிக்க, இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரமாண்ட வரவேற்பு

ஜப்பான் பிரதமர் ஷின்ஷோ அபே, இரண்டு நாள் பயணமாக இந்தியா வருகிறார். குஜராத்தில், பல்வேறு நிகழ்ச்சியில் அவர் பங்கேற்கிறார்.

அவரை வரவேற்க, ஆமதாபாத் விமான நிலையத்தில் இருந்து, மஹாத்மா காந்தி தங்கியிருந்த சபர்மதி ஆசிரமம் வரை, 7 கி.மீ., துாரத்துக்கு வரவேற்பு பேரணி நடத்த திட்ட மிடப்பட்டுள்ளது. குறிப்பிட்ட, 28 இடங்களில், 28 மாநிலங்களைச் சேர்ந்த நடனக் கலைஞர்களின் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.



COURTNEWS

போக்குவரத்து துறை உத்தரவுக்கு ஐகோர்ட் தடை : 'லைசென்ஸ்' இல்லாமலும் வாகனம் வாங்கலாம்

பதிவு செய்த நாள்13செப்
2017
03:17




சென்னை: 'ஓட்டுனர் உரிமம் இல்லாதவர்களின் வாகனங்களை, பதிவு செய்யக் கூடாது' என, போக்குவரத்து துறை ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கைக்கு, சென்னை உயர் நீதிமன்றம், தடை விதித்துள்ளது.

'ஆட்டோமொபைல் டீலர்' சங்கங்களின் சம்மேளனம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனு:விற்பனையாளரிடம் இருந்து வாகனங்கள் வாங்கிய பின், அதை பதிவு செய்ய வேண்டும்; அவ்வாறு பதிவு செய்யும்போது, வாகனம் வாங்கியவருக்கு, அதை ஓட்ட தெரிந்திருக்க வேண்டும் என்கிற அவசியம் இல்லை. அதனால், வாகனத்தை வாங்கியவர், ஓட்டுனர் உரிமம் வைத்திருக்க வேண்டும் என்ற, அவசியம் இல்லை.

உடலில் குறைபாடு உடையவர்கள், ஓட்டுனர் உரிமம் பெற இயலாத நிலை ஏற்படும்; 18 வயதுக்கு குறைவானவர் பெயரில், வாகனங்களை, அவரது, 'கார்டியன்' வாங்க முடியும். இவர்கள், ஓட்டுனர்களை நியமித்து, வாகனங்களை இயக்கிக் கொள்ள முடியும். இந்நிலையில், போக்குவரத்து ஆணையர், ஆக., 21ல் பிறப்பித்த சுற்றறிக்கையில், 'ஓட்டுனர் உரிமம் வைத்திருக்கவில்லை என்றால், அந்த வாகனத்தை பதிவு செய்யக் கூடாது' என, கூறப்பட்டுள்ளது.

வாகனங்களை பதிவு செய்யும் அதிகாரிகளுக்கு, இந்த சுற்றறிக்கை பிறப்பிக்கப்பட்டுள்ளது.வாகன உரிமையாளரிடம் உரிமம் இருந்தால், அவர் வாகனத்தை ஓட்டலாம்; இல்லையென்றால், உரிமம் வைத்திருப்பவரை வாகனம் ஓட்டுவதற்கு, உரிமையாளர் அனுமதிக்கலாம்.

ஓட்டுனர் உரிமம் இல்லாத யாரும், மோட்டார் வாகனங்களை வாங்க முடியும்; அதே போல், சொந்த வாகனம் இல்லாத ஒருவர், ஓட்டுனர் உரிமம் பெற முடியும். எனவே, ஓட்டுனர் உரிமம் வேண்டும் என்பதை வலியுறுத்தாமல், வாகனங்களை பதிவு செய்யும்படி, போக்குவரத்து துறைக்கு உத்தரவிட வேண்டும். போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த சுற்றறிக்கையை, ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மனு, நீதிபதி, எம்.துரைசாமி முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் கோவிந்தராமன் ஆஜரானார்.மனுவுக்கு, நான்கு வாரங்களில் பதில் அளிக்கும்படி, போக்குவரத்து ஆணையருக்கு உத்தரவிட்டு, சுற்றறிக்கைக்கு இடைக்கால தடை விதித்து, நீதிபதி உத்தரவிட்டார்.
ஆன்மிகம்

வாழ்வில் மகிழ்ச்சி தரும் மகாளயம்



புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம்.

செப்டம்பர் 12, 2017, 07:00 AM
19–9–2017

மகாளய அமாவாசை

புரட்டாசி மாதத்தில் செய்யப்படும் ஒரு பொது சிரார்த்த முறை மகாளயம் ஆகும். சிரார்த்தம் என்பதற்கு சிரத்தையோடு செய்யப்படுவது என்று பொருள் கொள்ளலாம். புரட்டாசி மாதத்து அபரபக்கப் பிரதமை முதலாக பூர்வ பக்கச் சதுர்த்தி வரையுள்ள காலம் மகாளயம் என்று அழைக்கப்படுகிறது. இந்த காலகட்டத்தில் இறந்த நமது முன்னோர்களுக்கு கர்ம காரியங்களைச் செய்யலாம். இவ்வாறு செய்யப்படும் கிரியையானது, இருபத்தொரு யாகங்களில் ஒன்று என்று கூறப்படுகிறது.

இது பிதுர் தேவதைகளுடையதிருப்தியின் பொருட்டு செய்யப்படும் பிண்ட கருமம். மரணம் அடைந்தவர்கள்நரகம் எய்துவதைதவிர்த்து, அவர்கள் சுகமாய் இருப்பதைக் குறித்து செய்யப்படும் கிரியை, சிறப்பு வாய்ந்ததாகும்.

தெற்கு நோக்கிச் சஞ்சரிக்கும் சூரியனின் தென்பாகத்து நடுப்பாகம், புரட்டாசி மாதத்தில் பூமிக்கு நேராக நிற்கின்றது. அப்போது சந்திரனது (அபரபக்கம்) தென்பாகமும் நேர்க்கோட்டில் நிற்கும். இந்த தருணத்தில் பிதுர் கர்மங்களைச் செய்வது விச‌ஷமானதாக குறிப்பிடப்படுகிறது. பூர்வபக்கம் என்பது பகல், அபரபக்கம் என்பது இரவு. பூர்வபக்கப் பிரதமை உதயமாகும், இராக்கால முடிவு அமாவாசை, பகற்கால முடிவு பூரணையாகும். இந்த நேரத்தில் பிதுர் கடன் களைச் செய்வது சாலச் சிறந்தது.

சிரார்த்த கர்மங்களுக்குரிய சிறந்த தலங்கள் என சில உள்ளன. அதில் காசி, கயை, பிரயாகை, குருஷேத்திரம், கோகர்ணம், குருஜாங்கலம், புட்கலசே‌ஷத்திரம் முதலியவை முக்கியமானவையாக கருதப்படுகிறது. தமிழ்நாட்டில் ராமேஸ்வரம் இந்த சிறப்பை பெற்று விளங்குகிறது. மேற்கண்ட அனைத்துத் தலங்களிலும், கயை தலத்தில் சிரார்த்தம் செய்வது மிகவும் விசே‌ஷமானது.

தேவர்களின் வருடக் கணக்குப்படி, புரட்டாசி மாதம் நடு ராத்திரியாகும். இந்த நேரத்தில் நிசப்தம் நிலவும். எனவே தேவர்களின் ஆராதனைகளுக்கும், பிதுர்களை உபசரிப்பதற்கும் இதுவே சிறந்த காலமாக கருதப்படுகிறது. சாஸ்திரங்கள், நுண் முறைகள் மற்றும் ஆன்றோர்களின் கூற்றும் அதுவேயாகும். எனவே அந்த காலத்தில் பிதுர்களுக்கு தர்ப்பணம் செய்து கர்மங்களை நிறைவேற்ற வேண்டியது அவசியம்.

அன்றைய தினத்தில் மேலே கூறப்பட்ட புண்ணியத் தலங்களுக்குச் சென்று நம்முடைய மூதாதையர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கலாம். அவ்வாறு செல்ல முடியாதவர்கள், அருகில் உள்ள கோவில்களின் முன்பாக இருக்கும் நீர் நிலைகளில் வைத்து தர்ப்பணத்தை செய்யலாம். பெரும்பாலும் கடற்கரைப் பகுதிகளில் இதுபோன்ற தர்ப்பண நிகழ்வுகள் நடத்தப்படு கின்றன. தமிழ்நாட்டில் ராமேஸ்வரத்தில் மகாளய அமாவாசை அன்று, முன்னோர்களுக்கு பிதுர் காரியங் களைச் செய்து கடமைகளை நிறைவேற்ற ஏராளமானவர்கள் குவிவார்கள். அன்றைய தினம் கடற்கரைப் பகுதியே மக்கள் வெள்ளத்தில் நிரம்பி காணப்படும். நம் முன்னோர்கள், சொர்க்கம் சென்று நற்கதி அடையும் பொருட்டு செய்யப்படும், இந்த பிதுர் காரியங்களின் காரணமாக, முன்னோர் களின் ஆசி அவர்களின் தலைமுறைகளை காப்பாற்றும் என்பது நம்பிக்கையாக உள்ளது.

மகாளய அமாவாசை அன்று, காலையில் எழுந்து வீட்டைச் சுத்தப்படுத்த வேண்டும். பின்னர் குளித்து முடித்து, அருகில் உள்ள கோவில்களில் இருக் கும் நீர்நிலைகளிலோ, அல்லது கடற்கரைப் பகுதியிலோ சென்று பிதுர் தர்ப்பணம் செய்ய வேண்டும். அன்றைய நாள் முழுவதும் உபவாசம் இருந்து, முன்னோர்களை நினைத்து வழிபட வேண்டும். அவர்களுக்கு பிடித்த உணவு பதார்த்தங்களை நைவேத்தியமாக படைத்து இறைவனை வணங்க வேண்டும். மேலும் அன்றைய தினத்தில், இறை அடியார்களுக்கு நம்மால் இயன்றவரை அன்னதானம் செய்து மகிழ்வித்தல் வேண்டும். இவ்வாறு செய்வதால் முன்னோர்களுக்கு சிறப்பான பலன்கள் கிடைத்து அவர்கள் நற்கதி அடைவார்கள். அதன் வாயிலாக அவர்களின் தலைமுறையும் நல்ல நிலையை அடையும்.
மாவட்ட செய்திகள்

ராஜபாளையம் பகுதியில் மழை: வாரம் ஒரு முறை குடிநீர் வழங்க நடவடிக்கை



மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தேக்கம் வறண்டது.

செப்டம்பர் 12, 2017, 03:45 AM

ராஜபாளையம்,

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த சில மாதங்களாக மழை பெய்யவில்லை. இதனால் நகராட்சி பகுதிக்கு தண்ணீர் வழங்கும் குடிநீர் தேக்கம் வறண்டது. நகர் பகுதியில் கடந்த 4 மாதங்களாக 30 முதல் 35 நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 2 நாட்களாக ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் மழை பெய்து வருவதால், அய்யனார் கோவில் ஆற்றில் தண்ணீர் வருகிறது. இதனை தங்கப்பாண்டியன் எம்.எல்.ஏ. நேரில் சென்று பார்வையிட்டு வரக்கூடிய தண்ணீர் முழுவதையும் குடிநீர் தேக்கத்தில் தேக்கிவைக்க அதிகாரிகளை கேட்டுக்கொண்டார். அதேபோல், நகராட்சி ஆணையர் மற்றம் அதிகாரிகளை தொடர்பு கொண்டு, ஆற்றில் தண்ணீர் வருவதால் விரைவில் நகர் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் வழங்கி தண்ணீர் வினியோகத்தை மேம்படுத்த அறிவுறுத்தினார். அதிகாரிகளும் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததையடுத்து இனி நகர் பகுதியில் வாரம் ஒருமுறை குடிநீர் கிடைக்க வாய்ப்புள்ளது என்று தங்கப்பாண்டியன் கூறினார். அவருடன் தி.மு.க. நகர செயலாளர் ராமமூர்த்தி மற்றும் கட்சி நிர்வாகிகள் சென்று இருந்தனர்.
மாவட்ட செய்திகள்

கலெக்டர் அலுவலகம் முன்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மறியல் போராட்டம் 965 பேர் கைது


சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 13, 2017, 04:30 AM

சிவகங்கை,

தமிழ்நாடு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழுவான ஜாக்டோ–ஜியோ அமைப்பின் சார்பில் தன்பங்கேற்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்திட வேண்டும், ஊதிய முரண்பாடுகளை களைந்து புதிய ஊதியக்குழு ஊதியத்தை அமல்படுத்தி காலமுறை ஊதியத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக நேற்று முன்தினம் சிவகங்கை கலெக்டர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்தநிலையில் நேற்று 2–வது கட்டமாக நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பு மறியல் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டத்திற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் முத்துப்பாண்டியன், இளங்கோ, தமிழரசன் ஆகியோர் தலைமை தாங்கினர். இந்த போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் சத்துணவு ஊழியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 515 பெண்கள் உள்பட 965 பேரை சிவகங்கை துணை போலீஸ் சூப்பிரண்டு மங்களேசுவரன், இன்ஸ்பெக்டர் மோகன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். தொடர் போராட்டத்தில் இன்று(புதன்கிழமை) 3–ம் கட்டமாக கலெக்டர் அலுவலகம் முன்பு காத்திருக்கும் போராட்டம் நடைபெற உள்ளது.
தேசிய செய்திகள்

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு கூடுதலாக ஒரு சதவிகிதம் அகவிலைப்படி உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது.

செப்டம்பர் 12, 2017, 05:24 PM

புதுடெல்லி,

மத்திய அரசு ஊழியர்களுக்கு ஒரு சதவிகிதம் அகவிலைப்படியை உயர்த்தி வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. ஏற்கனவே 4 சதவிகித அகவிலைப்படி உயர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில் கூடுதலாக ஒரு சதவிகிதம் உயர்த்தி வழங்கப்பட்டுள்ளது.

விலைவாசி உயர்வை கருத்தில் கொண்டு அகவிலைப்படியை உயர்த்தி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முன் தேதியிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பு மூலம், 50 லட்சம் அரசு ஊழியர்கள் 61 லட்சம் ஓய்வூதியதாரர்கள் பயன்பெறுவர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில செய்திகள்

சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் போராட்டம்



சென்னை கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

செப்டம்பர் 13, 2017, 04:30 AM

சென்னை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை தொடர வேண்டும் என்பது உள்பட 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பு சார்பில் அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் கடந்த 7-ந்தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் நேற்று மாவட்ட கலெக்டர் அலுவலகங்களை முற்றுகையிட்டும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக நுழைவுவாயில் முன்பு ஜாக்டோ-ஜியோ மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் தலைமையில் சுமார் 300 அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

300 பேர் கைது

அதன்பின்னர், கலெக்டர் அலுவலகம் எதிரே சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். அவர்களை போலீசார் கைது செய்து வேனில் ஏற்றினார்கள். அந்த வேளையில் 20-க்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் வேறு வழியில் வந்து சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டு கோஷங்கள் எழுப்ப தொடங்கினார்கள். அவர்களையும் போலீசார் கைது செய்தனர். மொத்தம் 300 பேர் கைது செய்யப்பட்டனர்.

முன்னதாக ஜாக்டோ- ஜியோ கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

புதிய ஓய்வூதிய திட்டத்துக்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தை தமிழகம் பெறவில்லை. அதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தமிழக அரசு இதுவரை கையெழுத் திடவில்லை. ஜெயலலிதா 110-விதியின் கீழ் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்வோம் என்று அறிவித்தார். அதற்காக ஒரு குழுவும் அமைத்தார். ஆனால் அவருடைய அறிவிப்புக்கு மாறாக இப்போது நடந்து கொண்டு இருக்கிறது.

காத்திருப்பு போராட்டம்

நீதிபதி ரத்தினவேல் பாண்டியன் 5-வது ஊதியக்குழுவில் ஊதியக்குழு வருவதற்கு முன்பாகவே குழு அமைத்து அது தரும் அறிக்கையை பெற்று, ஊதியக்குழு அமல்படுத்தும் தேதியில் சரியாக அமல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார். இதை மதுரை ஐகோர்ட்டு கிளை நீதிபதிகள் பரிசீலனை செய்ய வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளுக்கு தெளிவான அறிவிப்பு வரும் வரை போராட்டத்தை தொடருவோம். முதல்-அமைச்சர் அழைத்து பேசி அரசாணை வெளியிடும் வரை நாளை முதல் (இன்று) அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்கள் முன்பு காத்திருப்பு போராட்டம் நடத்த திட்டமிட்டு இருக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

NEWS TO DAY 16.07.2026