Tuesday, September 19, 2017


தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது: உச்ச நீதிமன்றம் திட்ட வட்டம்

By DIN | Published on : 19th September 2017 01:13 AM |

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை கலந்தாய்வு தேதியை நீட்டிக்க முடியாது என உச்ச நீதிமன்றம் திட்டவட்டமாகத் தெரிவித்தது.
இது தொடர்பாக திருநெல்வேலியைச் சேர்ந்த திருமா மங்கள், மனு தாக்கல் செய்திருந்தார். அதில் 'இடஒதுக்கீடு 50 சதவீதத்துக்கும் மேல் இருத்தல் ஆகாது என உச்ச நீதிமன்றம் கடந்த 1992-ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. ஆனால், தமிழகத்தில் 69 சதவீதம் இட ஒதுக்கீடு அமலில் உள்ளதால் மருத்துவக் கல்லூரியில் சேரும் உரிமை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, கல்வி, வேலைவாய்ப்பு உள்ளிட்டவற்றில் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பழங்குடியினர் ஆகியோருக்கு 69 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் தமிழக அரசின் சட்டத்தை அரசியலமைப்புக்கு எதிரானது என அறிவிக்க வேண்டும். மேலும், தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரியில் 2017-18 கல்வியாண்டில் எம்பிபிஎஸ் படிப்பில் பொதுப் பிரிவின் கீழ் சேர்ந்து படிக்க உத்தரவிட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான மனு உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.எம். கான்வில்கர், டி.ஒய். சந்திரசூட் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் திங்கள்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் சார்பில் மூத்த வழக்குரைஞர் கே.எம். விஜயன், சிவபால முருகன் ஆஜராகினர்.
அப்போது நீதிபதிகள், 'மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பாக ஏன் ஆகஸ்ட் 31-ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தை அணுகவில்லை. இடைக்கால உத்தரவு பிறப்பித்த பிறகு ஏன் நீதிமன்றத்தை அணுகியுள்ளீர்கள். இவ்வளவு தாமதம் ஏன்? தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கை தொடர்பான கலந்தாய்வு தேதியை நீட்டிப்பதாக இல்லை' என்றனர்.

இதைத் தொடர்ந்து, வழக்குரைஞர் கே.எம். விஜயன், ' நீட் விவகாரம் தொடர்பாக தமிழகத்தில் நிலவிய பிரத்யேக சூழல் காரணமாக மருத்துவ மாணவர் சேர்க்கை செப்டம்பர் 5-ஆம் தேதி வரை நீடித்தது. மனுதாரருக்கு செப்டம்பர் 2-ஆம் தேதிதான் அழைப்புக் கடிதம் கிடைத்தது. அதன் பிறகு காத்திருப்புப் பட்டியலில் இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது' என்றார். அவரது வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், இது தொடர்பான மனுவைத் தள்ளுபடி செய்தனர்.
மஹாளய அமாவாசை தர்ப்பணம் குறித்த சந்தேகங்களும், பதில்களும்...
Published on : 18th September 2017 02:53 PM


மஹாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு கொடுக்கு தர்ப்பணம், சிரார்த்தம் குறித்த பொதுவான சந்தேகங்களுக்கு தினமணி ஜோதிடர் பெருங்குளம் ராமகிருஷ்ணன் அவர்கள் பதிலளித்துள்ளார்.

• சரி, முன்னோர்களை வழிபட என்னென்ன முறைகள் உள்ளன?
அவர்கள் இறந்த திதி, வருடா வருடம் வரும், அன்று கட்டாயம் தர்ப்பணம் செய்ய வேண்டும். தர்ப்பணத்திற்கு கட்டாயம் கறுப்பு எள்தான் பயன்படுத்த வேண்டும். கட்டாயம் கீழ்க்கண்ட பெயர்களை
சொல்லிச் செய்ய வேண்டும்.

தாய் வழி
உங்கள் தாயாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தாயாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தாயாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

தந்தை வழி
உங்கள் தகப்பனாரின் தகப்பனார் - தாயார்
உங்கள் தகப்பனாரின் தாத்தா - பாட்டி
உங்கள் தகப்பனாருடைய தகப்பனாரின் தாத்தா - பாட்டி

மேற்கண்டவர்களுக்கு கட்டாயம் தர்ப்பணம் செய்தல் வேண்டும். மேலும் உங்கள் ரத்த சம்பந்தப்பட்ட உறவுகள் இறந்திருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம். உங்கள் தகப்பனாருடன் பிறந்தவர்கள் இறந்திருந்து அவர்களுக்கு குழந்தைகள் இல்லாமல் இருந்தால் கட்டாயம் சேர்த்துக் கொள்ளலாம்.

• கேள்வி: பெண்கள் செய்யலாமா?

பதில்: தங்களுடன் சகோதரர்கள் பிறக்காத நிலையில் கட்டாயம் செய்யலாம்.

• கேள்வி: இதை ஆற்றங்கரையில்தான் செய்ய வேண்டுமா?

பதில்: எங்கு வேண்மானாலும் செய்யலாம். ஆற்றில், கடலில், அருவியில், கிணற்றடியில், நமது பூஜையறையில், ஹாலில் எங்கு வேண்டுமானாலும் செய்யலாம். மனம் சுத்தமாயிருக்க வேண்டும்.

• கேள்வி: வெளிநாடுகளில் இருப்போர் என்ன செய்யலாம்?

பதில்: வீட்டில் செய்வது நல்லது.

• கேள்வி: தர்ப்பணத்திற்கு தனியாக ஆட்களை வைத்துத்தான் செய்ய வேண்டுமா?

பதில்: அவசியம் இல்லை. தங்களுக்கு முறைகள் தெரிந்திருக்கும் பக்ஷத்தில் தாங்களே செய்து கொள்ளலாம். எனினும் கோவிலுக்கு காணிக்கை செலுத்துவது நல்லது.

• கேள்வி: தர்ப்பணம் செய்யும் முறைகளைச் சொல்லுங்களேன்?

பதில்: முதலில் அவரவர்கள் வீட்டில் இறந்தவர்களுக்கு உண்டான திதி கண்டுபிடித்திருப்பீர்கள். அந்தத் திதி ஒவ்வொரு வருஷமும் வரும் போதும் தர்ப்பணம் கொடுக்க வேண்டும். தாய் தந்தை இருவருமே இருப்பவர்களுக்கு தர்ப்பணம் செய்ய அதிகாரம் கிடையாது. தாயோ தந்தையோ இல்லாதவர்கள், அல்லது இருவருமே இல்லாதவர்கள் தர்ப்பணம் செய்யலாம்.

தர்ப்பணம் அன்று விரதம்

முதலில் தர்ப்பணம் செய்யும் நாள் அன்று காலை சாப்பிடக் கூடாது. மதியம் சாப்பிடலாம். கத்திரிக்காய், வாழைக்காய் கட்டாயம் இடம் பெற்றிருக்க வேண்டும். வெங்காயம், பூண்டு, மாமிசம் உண்ணுதல்
கூடாது. மிளகு சேர்ப்பதும் நன்மையைத் தரும். புரிகிறதா? பச்சரிசி உண்ண வேண்டும். இரவு சாதம் சாப்பிடுதல் கூடாது. இட்லி, தோசை, சப்பாத்தி சாப்பிடலாம்.

தர்ப்பணம் செய்யும் முறைகள்

முதலில் யாருக்கு திதியோ அவருக்குத் தர்ப்பணம் செய்தல் வேண்டும். உதாரணமாக திதி உங்கள் தந்தையாருக்கு என்றால் முதலில் உங்கள் தந்தைக்கு தர்ப்பணம் செய்தல் வேண்டும். பின் தந்தை வழி உள்ளவர்களுக்கு, பின் தாய் வழியில் உள்ளவர்களுக்குச் செய்யலாம்.

கேள்வி: என்றெல்லாம் தர்ப்பணம் செய்யவேண்டும்:

பதில்: ஒரு வருடத்தில் தாய் தந்தையர் இறந்த திதிகளை தவிர, ஒவ்வொரு தமிழ் மாத பிறப்பன்றும், ஒவ்வொரு கிரஹணத்தன்றும், சூரிய சந்திர கிரஹண காலங்களில், ஒவ்வொரு மாத அமாவாஸ்யையின் போதும் செய்யலாம்.

வரலாறு திரும்புகிறது அன்று பி.எச்.பாண்டியன்-இன்று தனபால்
By DIN | Published on : 19th September 2017 01:31 AM |




சட்டப் பேரவையில் எம்.எல்.ஏ.க்களைத் தகுதி நீக்கம் செய்த பிறகு, பெரும்பான்மையை நிரூபிக்கும் நடைமுறை 29 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது மீண்டும் உருவாகியுள்ளது.

தமிழக முதல்வராக இருந்த எம்.ஜி.ஆர். கடந்த 1987-ஆம் ஆண்டு டிசம்பர் 24-இல் மரணம் அடைந்தார். அவரது மறைவுக்குப் பிறகு யார் முதல்வர் என்ற சர்ச்சை அதிமுகவில் வெடித்தது. ஆர்.எம்.வீரப்பனின் ஆலோசனை மற்றும் ஆதரவுடன் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி ராமச்சந்திரன் முதல்வரானார்.
இதனை கட்சியின் மற்றொரு தலைவராக விளங்கிய ஜெயலலிதா ஏற்கவில்லை. அப்போது தமிழக சட்டப் பேரவையில் அதிமுகவுக்கு 132 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருந்தது. அவர்களில் 33 பேர் ஜெயலலிதாவை ஆதரித்தனர். மற்றவர்கள் ஜானகி அணியை ஆதரித்தனர். அப்போது பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் ஜானகி அணியை ஆதரித்தார்.
பேரவையில் நடந்தது என்ன? பேரவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன், ஜெயலலிதா ஆதரவு உறுப்பினர்களை அவையில் இருந்து நீக்கினார். இந்தச் சம்பவங்கள் நடைபெறுவதற்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1986-இல் திமுகவின் பத்து உறுப்பினர்கள் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் அரசியலமைப்புச் சட்ட நகலை எதிர்த்தனர். இதற்காக அவர்கள் அவையில் இருந்து நீக்கப்பட்டிருந்தனர்.

எனவே, சட்டப் பேரவை உறுப்பினர்களின் மொத்த எண்ணிக்கை 191-ஆகக் குறைந்தது. இந்த குறைப்பு நடவடிக்கைகளுக்குப் பிறகு, ஜானகி தலைமையிலான அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு கடந்த 1988-ஆம் ஆண்டு ஜனவரியில் நடந்தது.

நம்பிக்கை வாக்கெடுப்பு நிகழ்வை, அவைத் தலைவராக இருந்த பி.எச்.பாண்டியன் நடத்திக் கொண்டிருந்தார். அப்போது, பேரவை கூடியதும் திடீரென அறிவிப்பை ஒன்றை அவர் வெளியிட்டார். ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் உள்பட இந்திரா காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஆறு உறுப்பினர்கள் தங்களது பதவியில் இருந்து விலகுவதாக தன்னிடம் தொலைபேசியில் தெரிவித்ததாக அதிரடி அறிவிப்பை வெளியிட்டார்.

இதனால், அவையில் பெரும் அமளி ஏற்பட்டது. இந்த கூச்சல்-குழப்பத்தைத் தவிர்க்க பேரவையை நண்பகல் வரை ஒத்திவைத்தார். மீண்டும் பேரவை கூடியதும், ஜெயலலிதா தரப்பு எம்.எல்.ஏ.-க்கள் அனைவரையும் வெளியேற்றி, வெறும் 111 உறுப்பினர்களுடன் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்தினார். அதில், ஜானகி ராமச்சந்திரன் அணி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இப்போதைய நிகழ்வு: இப்போது அதிமுக உறுப்பினர்களில் தினகரன் அணியைச் சேர்ந்த 18 பேரை பேரவைத் தலைவர் தனபால் தகுதி நீக்கம் செய்துள்ளார். இதனால், பெரும்பான்மையை நிரூபிக்கத் தேவையான உறுப்பினர்களின் எண்ணிக்கை 108-ஆகக் குறைந்துள்ளது. அப்போது பி.எச்.பாண்டியன் எடுத்த அஸ்திரத்தை, இப்போது பி.தனபால் எடுத்துள்ளார்.

முதுமை போற்றுவோம்


By கே.ஜி. இராஜேந்திரபாபு  |   Published on : 19th September 2017 01:23 AM  |   
மற்ற பருவங்களைப் போலவே முதுமைப் பருவமும் மகிழ்ச்சிக்குரிய பருவம்தான் என்பதை ஏனோ பலரும் ஏற்றுக் கொள்வதில்லை.
முதுமைப் பருவம் எய்திவிட்டாலே வெந்ததைச் சாப்பிட்டுவிட்டு விதிவழியே போகவேண்டியதுதான் என்று விரக்தியாய் பேசிக்கொண்டு, வந்து போகிறவர்களிடமெல்லாம் தன் துயரத்தைப் புலம்பி, கண்ணீரால் முகத்தை அலம்பி, மூலையிலே குந்தத்தான் தனக்குத் தகுதி, கூடத்திலே அமர அருகதையில்லை என்று தனக்குத்தானே கோடிட்டுக் கொண்டு, இனியென்ன வாழ்க்கை இருக்கிறது என்றும் என்னை யார் மதிக்கிறார்கள் என்ற சுயபச்சாதாபத்தோடும் காலம் தள்ளும் பருவம் என்று பலரும் எண்ணுகிறார்கள்.
முதுமை என்பது கலங்கும் பருவமல்ல; கம்பீரமான பருவம்.
முதியவர்கள் தங்கள் மனத்தில் தாழ்வு மனப்பான்மை அனுமதிக்க வேண்டாம். வயதை இழந்துவிட்டோம் அதனால் வாழ்க்கையில் ஒதுக்கப்படுவோமோ என்று வதங்க வேண்டாம்.
முதியவர்கள் இளைஞர்கள் போல் இயல்பாக இருக்கலாம். உடற்பயிற்சி செய்யலாம். நடைப்பயிற்சி செய்யலாம். வானொலி கேட்கலாம். தொலைக்காட்சி பார்க்கலாம். கம்ப்யூட்டரிலோ, லேப்-டாப்பிலோ இணையத்தைப் பற்றி அறிந்து கொள்ளலாம்.
தினமும் புதிய புதிய நூல்கள் படிக்கலாம். இனி படித்து என்ன செய்யப்போகிறோம் என்ற விரக்தி மனப்பான்மை கூடாது. விரக்தி மனப்பான்மை வயதைக் கூட்டிவிடும்.
புதிய புதிய செய்திகளைப் பேரப்பிள்ளைகளுக்குச் சொல்லலாம். அவர்கள் வயதுக்குத் தக்கவாறு கதைகளையோ, தகவல்களையோ சொன்னால் பேரப்பிள்ளைகள் தாத்தாவை விரும்பி தினமும் எதிர்பார்ப்பார்கள்.
தனது வயது நபர்களுடன் நட்பு பாராட்டி ஒரு குழுவாக அமர்ந்து பேசலாம். குடும்பத்தில் உள்ள குறைகளையோ, மனக்குறைகளையோ சொல்லி அதிலேயே ஒரு சுகம் காணுவதைத் தவிர்த்து, மகிழ்ச்சியான செய்திகளையே பேசலாம். 
ஏதாவது ஒன்றின் சார்பாக வாதிட்டுக் கொண்டு மனதிற்குள்ளேயே எதிர்ப்பலையை ஏற்படுத்திக் கொண்டு நிம்மதியை இழந்து விட வேண்டாம். குழுவாய் அமர்ந்து பேசுவதே மனத்தை மென்மைபடுத்தத்தானே!
வேலைக்குச் சென்றுவிட்டுத் திரும்பும் மகனோ மருமகளோ கொஞ்சம் கவனக் குறைவாக நடந்தால், உதாரணத்திற்கு, சாப்பிடும்போது கூப்பிட மறந்தால் - தான் அலட்சியம் செய்யப்பட்டுவிட்டோம், ஓய்வுபெற்ற உடனேயே ஒதுக்கப்பட்டுவிட்டோம் என்று எண்ண வேண்டாம்.
சொந்த வீட்டில் எப்போதும் ஒருவரை ஒருவர் மதித்துக் கொண்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
முதியவர்கள், ஒவ்வொன்றுக்கும் மரியாதையை எதிர்பார்ப்பதற்குக் காரணம் ஓய்வு பெற்றவுடன் தான் ஓரங்கட்டப்பட்டுவிட்டோம் என்ற எண்ணத்தை ஏற்கெனவே மனத்தில் ஏற்படுத்திக் கொண்டதால்தான். அந்தக் கண்ணாடியை மாட்டிக் கொண்டு பார்க்கும்போது அவர்களுக்கு அப்படித்தான் தெரியும். 
இன்னும் சிலர் தாங்கள் பணியாற்றி ஓய்வுபெற்ற அலுவலகத்திற்குச் சென்றால் அங்கு தங்களை மதிக்கவில்லை என்று புலம்புவார்கள். ஒரு வாடிக்கையாளருக்குத் தரவேண்டிய முக்கியத்துவத்தை தங்களுக்குக் கொடுத்தால் போதும் என்று நினைத்தால் இந்த மன உளைச்சல் இருக்காது.
முதியவர்களில் இரண்டு வகையினர் உண்டு. ஒன்று இயன்றவர்கள் (ஓய்வு ஊதியமாகவோ பிற வடிவிலே வருமானம் உள்ளவர்). இன்னொரு வகையினர் இயலாதவர்கள்.
இயலாதவர்கள் வாரிசுகளை நம்பி வாழ்கிறவர்கள்.
இயலாத பெற்றோரைப் பிள்ளைகள் பாதுகாக்க வேண்டும். கெளரவத்தோடு நடத்த வேண்டும். சோறுபோட்டு துணி எடுத்துக் கொடுத்தால் மட்டும் போதாது. 
அவர்களின் தேவையை அறிந்து சேவை செய்ய வேண்டும். ஒரு நாளைக்கு அரைமணி நேரமாவது பெற்றோருடன் அளவளாவ வேண்டும்.
எக்காரணம் கொண்டும் அவர்கள் இயலாமையைச் சுட்டிக்காட்டி வேதனைப்படுத்தக்கூடாது. எந்தச் சூழலிலும் பெற்றோரை அலட்சியப்படுத்தக்கூடாது. 
பெற்றோர் கேள்வி கேட்டால் அதை காதிலே வாங்காத மாதிரி அலட்சியப்படுத்தக்கூடாது. அவர்களை மதித்து பதில் சொல்ல வேண்டும்.
குடும்பத்தில் நடக்கும் அத்தனை நிகழ்வுகளையும் பெற்றோரிடம் பகிர்ந்து கொள்ள வேண்டும். பிள்ளை தங்களைக் கலந்தாலோசிக்கிறான் என்பதே பெற்றோர்க்குப் பூரிப்புத் தரும். 
வீட்டில் தாங்கள் உரிமையுள்ளவர்கள் என்ற உணர்வைப் பெற்றோர்களுக்கு ஊட்ட வேண்டும்.
குழந்தைகள், பெற்றோர், தாத்தா, பாட்டி முதலிய பெரியவர்கள் என்ற அடுக்குள்ள குடும்பம் அழகாக இருக்கும். பிள்ளைகளைப் பெற்றோர் கண்டிப்பர். தாத்தாவும், பாட்டியும் செல்லம் கொஞ்சுவர். 
பிள்ளைகளுக்கு இரண்டுமே வேண்டும். பிள்ளைகள் பெற்றோர்களிடம் வெளிப்படுத்தாத எண்ணங்களை தாத்தா பாட்டியிடம் கொட்டுவர். கூடுதலான சுதந்திரத்தோடு விளையாடுவர்.
பெற்றோர் சுமையென பிள்ளைகள் நினைத்தல் கூடாது. சிறு சிறு குறைகள் முதியவர்களிடம் இருந்தாலும் பொறுக்க வேண்டும். இளம் வயதில் தன்னுடைய குறைகளை பொறுத்தவர்கள்தான் என்பதை நினைவுகூர வேண்டும்.
பெற்றோருடன் சேர்ந்து வாழ்வது பிள்ளைகளுக்குப் பெருமை மட்டுமல்ல; பாதுகாப்புமாகும்.
பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ரூ.18 ஆயிரம் கோடி டிபாசிட்
பதிவு செய்த நாள்18செப்
2017
23:53


சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆசிரியர் போராட்டம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றமும், கண்டனம் தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழக அரசு செலுத்திய தொகை குறித்து, நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் அளித்த அறிக்கை:

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், ௧௦ சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது; அதே தொகைக்கு இணையாக, அரசும் வழங்குகிறது

* ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்கள் மற்றும் அரசு பங்களிப்பு தொகை, பொது கணக்கில், 'டிபாசிட்' செய்யப்படுகிறது. ௨௦௧௭ மார்ச் வரை, வட்டியுடன் சேர்த்து, ௧௮ ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது

* பங்களிப்பு திட்டத்தின் கீழ், இறுதி, 'செட்டில்மென்ட்' கேட்டு, ௭,௪௦௯ விண்ணப்பங்கள் வந்துள்ளன; ௩,௨௮௮ பேருக்கு, ௧௨௫ கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களிடம், உரிய ஆவணங்களை பெற்ற பின், விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்

* அரசு தரப்பில், பங்களிப்பு தொகையை வழங்க தவறவில்லை.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், நேற்று பிறப்பித்த உத்தரவில், 'அரசு அளித்துள்ள தகவல்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிய வேண்டும். அரசு அளித்துள்ள விபரங்கள், உரிய ஆவணங்களுடன், மனுவாக தாக்கல் செய்யப்பட வேண்டும். விசாரணை, நாளை தள்ளிவைக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி மருத்துவ மாணவர்கள் போராட்டம்

பதிவு செய்த நாள்19செப்
2017
01:05

ஆண்டிபட்டி;தேனி அரசு மருத்துவக் கல்லுாரி மாணவர்களை அவதுாறாக பேசி தாக்கியதாக எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, மருத்துவ கல்லுாரி வளாகத்தில் மாணவர்கள்போராட்டம் நடத்தினர்.தேனி மருத்துவ கல்லுாரி மாணவர்கள் சிலர் செப்.16ல் இருசக்கர வாகனத்தில் தேனி சென்றுள்ளனர். பங்களா மேடு அருகேவாகன சோதனையில் ஈடுபட்டிருந்த போலீசார் ெஹல்மெட் அணியாமல் இருசக்கரவாகனத்தில் சென்ற மாணவர்களுக்கு அபராதம் விதித்துள்ளனர். இருதரப்பிற்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அங்கிருந்த எஸ்.ஐ.அமுதன்மூன்றாம் ஆண்டு மாணவர் நிரஞ்சனை அவதுாறாக பேசியதுடன், தாக்கியதாகவும் மாணவர்கள் தெரிவித்தனர்.

இது குறித்து கல்லுாரி நிர்வாகத்திடம் முறையிட்ட மாணவர்கள்தாக்கிய எஸ்.ஐ., மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி எஸ்.பி.பாஸ்கரனிடம் மனுகொடுத்தனர். எந்த நடவடிக்கையும் இல்லாததை கண்டித்து நேற்றுவகுப்புகளை புறக்கணித்து கல்லுாாரி வளாகத்தில் அமர்ந்து போராட்டம் நடத்தினர்.மாணவர்களை தகாத வார்த்தையால் திட்டிய எஸ்.ஐ.,மீது நடவடிக்கை எடுப்பதாக ஆண்டிபட்டி டி.எஸ்.பி.,குலாம் உறுதி அளித்தார். இதனைதொடர்ந்து நேற்று கல்லுாரி முதல்வர் திருநாவுக்கரசு மற்றும் மாணவர்கள் சார்பில்மீண்டும் அவரிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது. இதன் பின் மாணவர்கள் போராட்டத்தைகைவிட்டு வகுப்புகளுக்கு சென்றனர்.
அமைச்சர் அலுவலகத்தில் அனாதையாக, 'அண்ணாதுரை'
dinamalar
பதிவு செய்த நாள்18செப்
2017
21:55




திருநெல்வேலி: தமிழக செய்தித் துறை அமைச்சர் ராஜுவின், எம்.எல்.ஏ., அலுவலக நுழைவாயிலில், முன்னாள் முதல்வர் அண்ணாதுரை சிலை, அனாதையாக கிடக்கிறது.

துாத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி தொகுதி, அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ராஜு. இவர் தான், தமிழக செய்தித் துறை அமைச்சர். இவரது தொகுதி அலுவலகம், எட்டயபுரம் சாலையில் உள்ளது. கோவில்பட்டி - எட்டய புரம் சாலையை, நான்கு வழிச் சாலையாக மாற்றும் பணி, தற்போது நடந்து வருகிறது.
இதனால், இந்த சாலையில் இருந்த, சுந்தரலிங்கம், அம்பேத்கர், அண்ணாதுரை சிலைகள் அகற்றப்பட்டு, அந்தந்த சிலை பராமரிப்பு கமிட்டியிடம் ஒப்படைக்கப் பட்டன.

சுந்தரலிங்கம் சிலை, சாலை விரிவடையும் பகுதியில் இருந்து, சற்று தள்ளி நிறுவப்பட்டிருக்கிறது. அம்பேத்கர் சிலை, அரசு மருத்துவமனைக்கு அருகில் நிறுவப்பட்டு விட்டது. அண்ணாதுரை சிலை மட்டும் இன்னும் நிறுவப்படாமல், ராஜுவின், எம்.எல்.ஏ., அலுவலக வாசலில், கவனிப்பாரின்றி கிடக்கிறது.

இந்த சிலை, 30 ஆண்டுகளுக்கு முன், அ.தி.மு.க.,வினரால் நிறுவப்பட்டது. அதனாலேயே, அ.தி.மு.க.,வினர் வசம், சிலை ஒப்படைக்கப் பட்டது.
பதவி, மற்றும் உட்கட்சி பூசலில் கவனம் செலுத்தவே நேரம் இல்லாத நிலையில், அண்ணாதுரை சிலையை நிறுவும் பணியை, அ.தி.மு.க., நிர்வாகிகள் கிடப்பில் போட்டுவிட்டனர். 

அதுவும், அமைச்சரின் அலுவலக வாசலிலேயே, அண்ணாதுரை அனாதையாக கிடக்கிறார்.

'அண்ணாதுரையின் கொள்கைகளை தான் மறந்து விட்டனர். அவரது சிலையையாவது, அலுவலகத்தின் உள்ளே வைத்து பராமரிக்கலாமே...' என, உண்மையான, அ.தி.மு.க., தொண்டர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

NEWS TODAY 17.07.2026