Tuesday, September 19, 2017

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில் ரூ.18 ஆயிரம் கோடி டிபாசிட்
பதிவு செய்த நாள்18செப்
2017
23:53


சென்னை: பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், அரசின் பங்களிப்பு தொகை செலுத்தப்பட்டு வருவதாக, சென்னை உயர் நீதிமன்றத்தில், தமிழக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, அரசு ஊழியர் மற்றும் ஆசிரியர்கள் போராட்டத்தில் குதித்தனர். உயர் நீதிமன்ற மதுரை கிளை தலையிட்டதை தொடர்ந்து, போராட்டம் முடிவுக்கு வந்துள்ளது. ஆசிரியர் போராட்டம் குறித்து, சென்னை உயர் நீதிமன்றமும், கண்டனம் தெரிவித்திருந்தது. அரசு ஊழியர்களுக்கான பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், தமிழக அரசு செலுத்திய தொகை குறித்து, நீதிபதி கிருபாகரன் கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு, தமிழக அரசு தரப்பில் அளித்த அறிக்கை:

* பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தில், ஒவ்வொரு ஊழியரின் அடிப்படை சம்பளம் மற்றும் அகவிலைப்படியில், ௧௦ சதவீதம் பிடித்தம் செய்யப்படுகிறது; அதே தொகைக்கு இணையாக, அரசும் வழங்குகிறது

* ஒவ்வொரு ஆண்டும், ஊழியர்கள் மற்றும் அரசு பங்களிப்பு தொகை, பொது கணக்கில், 'டிபாசிட்' செய்யப்படுகிறது. ௨௦௧௭ மார்ச் வரை, வட்டியுடன் சேர்த்து, ௧௮ ஆயிரம் கோடி ரூபாய் உள்ளது

* பங்களிப்பு திட்டத்தின் கீழ், இறுதி, 'செட்டில்மென்ட்' கேட்டு, ௭,௪௦௯ விண்ணப்பங்கள் வந்துள்ளன; ௩,௨௮௮ பேருக்கு, ௧௨௫ கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. மீதி உள்ளவர்களிடம், உரிய ஆவணங்களை பெற்ற பின், விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்படும்

* அரசு தரப்பில், பங்களிப்பு தொகையை வழங்க தவறவில்லை.
இவ்வாறு பதில் மனுவில் கூறப்பட்டுள்ளது.

இதையடுத்து, நீதிபதி கிருபாகரன், நேற்று பிறப்பித்த உத்தரவில், 'அரசு அளித்துள்ள தகவல்கள், போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் தெரிய வேண்டும். அரசு அளித்துள்ள விபரங்கள், உரிய ஆவணங்களுடன், மனுவாக தாக்கல் செய்யப்பட வேண்டும். விசாரணை, நாளை தள்ளிவைக்கப்படுகிறது' என கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

NEWS TODAY 21.12.2025