Monday, October 2, 2017

10 நாள் விடுமுறை நிறைவு : நாளை பள்ளிகள் திறப்பு
பதிவு செய்த நாள்01அக்
2017
23:47


சென்னை: காலாண்டு தேர்வு விடுமுறை முடிந்து, நாளை அனைத்து பள்ளிகளும் திறக்கப்படுகின்றன. அன்றே, மாணவர்களுக்கு, இரண்டாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.

தமிழக பள்ளிக்கல்வி பாடத் திட்டத்தில், முதல் பருவத்துக்கான காலாண்டு தேர்வு, செப்., ௨௨ல் முடிந்தது. 23 முதல், பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. 

தேர்வு மற்றும் பண்டிகை கால விடுமுறை நேற்றுடன் முடிந்தது. இன்று, காந்தி ஜெயந்தி விடுமுறை. 10 நாட்கள் தொடர் விடுமுறை முடிந்து, நாளை மீண்டும் பள்ளிகள் திறக்கப்படுகின்றன. அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளில், ஒன்று முதல், ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்றே இரண்டாம் பருவ புத்தகங்கள் வழங்கப்பட உள்ளன.
இதற்காக, அனைத்து பள்ளிகளிலும், புத்தகங்கள் தயாராக வைக்கப்பட்டு உள்ளன.

மாணவர்களுக்கு நிலவேம்பு கஷாயம் : தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், டெங்கு காய்ச்சல் வேகமாக பரவுகிறது. இவர்களில் பெரும்பாலானோர் மாணவர்கள், குழந்தைகள். எனவே, நாளை பள்ளிகள் திறந்ததும், டெங்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த, உத்தரவிடப்பட்டுள்ளது. அனைத்து பள்ளி, கல்லுாரிகளிலும் மாணவர்களுக்கு, நிலவேம்பு கஷாயம் வழங்கப்பட உள்ளது. மேலும், டெங்கு அதிக அளவில் பாதித்த பகுதிகளில் உள்ள பள்ளிகளில், மருத்துவ முகாம் நடத்தப்பட உள்ளது. விடுதிகள், பள்ளி வளாகங்களில் குடிநீர் தொட்டிகள், நீர் தேக்கி வைக்கப்படும் இடங்களை, சுகாதாரத் துறையினர் ஆய்வு செய்ய உள்ளனர். கல்வி நிறுவன வளாகங்களில், கொசு உற்பத்தியை ஏற்படுத்தும் வகையில், தேங்கி கிடக்கும் குப்பை கூளங்கள், உடைந்த பொருட்களை அப்புறப்படுத்தும் பணியில், உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.

சென்னை: நாளை(அக்.,3) அதிகாலையில் மெட்ரோ ரயில்


பதிவு செய்த நாள்02அக்
2017
00:58




சென்னை : சென்னையில், விமான நிலையம் மற்றும் பரங்கிமலையில் இருந்து, நேரு பூங்கா வரையும்; விமான நிலையம் முதல் சின்னமலை வரையும், மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. தினமும் காலை, 6:00 மணி முதல், இரவு, 10:00 மணி வரை ரயில்கள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், 'ஆயுதபூஜை தொடர் விடுமுறைக்காக, வெளியூர் சென்றோர், சென்னை வருவதற்கு ஏதுவாக, வரும், 3ம் தேதி அதிகாலை, 5:00 மணியில் இருந்து, மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும்' என, மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
ஷீரடி ஏர்போர்ட்: நாட்டுக்கு அர்ப்பணிப்பு
பதிவு செய்த நாள்
அக் 02,2017 01:11



ஷீரடி: மஹாராஷ்டிரா மாநிலம் ஷீரடியில் புதிதாக கட்டப்பட்டுள்ள விமான நிலையத்தை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று(அக்.,01) நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

ஷீரடி - மும்பை இடையேயான முதல் விமான சேவையை அவர் கொடியசைத்து துவக்கி வைத்தார். தினமும் 60 ஆயிரம் பக்தர்கள் ஷீரடிக்கு யாத்திரை வரும் நிலையில் அவர்களில் 10 சதவீதம் பேர் விமான சேவையை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதல்-அமைச்சர் அதிகாரிகளுடன் ஆலோசனை நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தல்


சேலத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

அக்டோபர் 02, 2017, 04:30 AM
சேலம்,

சேலம் அஸ்தம்பட்டியில் உள்ள ஆய்வு மாளிகையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று தனது எடப்பாடி சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மாவட்ட அளவிலான அனைத்துத்துறை முதன்மை அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:-

பொதுமக்களுக்கு தேவையான குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி, ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அடிப்படை தேவைகள் உரிய நேரத்தில் விரைந்து கிடைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேளாண்மைத்துறையின் மூலம் விவசாயிகளுக்கு உரம், விதை ஆகியவற்றை தேவையான அளவு வழங்கிட வேண்டும்.

பொதுப்பணித்துறையின் மூலம் புதியதாக தொடங்கப்பட உள்ள கட்டிடப்பணிகள், ஊரக வளர்ச்சித்துறையில் மேற்கொள்ள வேண்டிய வளர்ச்சி பணிகள், நெடுஞ்சாலைத்துறையின் சார்பில் மேற்கொள்ள வேண்டிய பிரதான சாலை மற்றும் கிராம சாலைகள் உள்ளிட்ட வளர்ச்சி பணிகளை அனைத்துத்துறை அலுவலர்களும் துரிதமாக மேற்கொள்ள வேண்டும்.

சேலம் மாவட்டத்தில் நோய் தடுப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் விரைவுபடுத்த வேண்டும். குறிப்பாக டெங்கு காய்ச்சலை உண்டாக்கக்கூடிய ஏடிஎஸ் கொசுக்கள் திறந்து வைக்கப்பட்ட நல்ல தண்ணீரில் தான் உற்பத்தியாகிறது என்பது குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பொதுமக்களின் பங்களிப்புடன் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் ஒருங்கிணைந்து நோய் தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்கக்கூடிய நிலவேம்பு குடிநீரை பள்ளி, கல்லூரிகளிலும், பஸ் நிலையம், ரெயில் நிலையம், சந்தைகள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் வழங்கிட வேண்டும். அனைத்து மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளும் குறித்த கால அளவில் தூய்மை செய்து குளோரினேசன் செய்ய வேண்டும். சுகாதார வளாகங்களை பராமரிக்கவும் மற்றும் கழிவுநீர் வடிகால்களை முறையாக சுத்தம் செய்யவும் வேண்டும். தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் பொதுமக்களுக்கு காலதாமதமின்றி சென்று சேர்வதை அரசு அலுவலர்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு எடப்பாடி பழனிசாமி பேசினார்.

இந்த ஆய்வு கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் ரோகிணி, பன்னீர்செல்வம் எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் வெங்கடாசலம், சக்திவேல், மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், மேட்டூர் உதவி கலெக்டர் மேகநாதரெட்டி, வேளாண்மைத்துறை இணை இயக்குனர் செந்தமிழ்ச்செல்வன், துணை இயக்குனர்(சுகாதாரம்) பூங்கொடி உள்ளிட்ட அனைத்துத்துறை மாவட்ட அளவிலான முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர். முன்னதாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தன்னுடைய வீட்டில் பொதுமக்களிடம் இருந்து கோரிக்கை மனுக்கள் பெற்றார்.
ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட ஓட்டை உடைசல் பஸ்களால் பயணிகள் பெரும் தவிப்பு



ஆயுத பூஜையையொட்டி இயக்கப்பட்ட சிறப்பு பஸ்கள் ஓட்டை உடைசல்களாக இருந்ததால் பயணத்தின் போது பயணிகள் பெரும் தவிப்புக்கு உள்ளாகினர்.

அக்டோபர் 02, 2017, 04:15 AM
சென்னை,

பண்டிகை காலங்களில் சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு செல்லும் பயணிகளின் நலன் கருதி தமிழ்நாடு அரசு விரைவுப்போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
பயணிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப பஸ்களின் எண்ணிக்கையையும் போக்குவரத்து கழகம் அதிகரித்து வருகிறது.

ஆனால் இந்த பஸ்களில் பயணிகள் இரவு முழுவதும் அதாவது தொடர்ந்து 13 மணிநேரம் பயணம் செய்ய முடியுமா? என்பது பற்றி எவரும் பார்ப்பதாக தெரியவில்லை. வருமானத்தை அதிகரிப்பதில் தான் அதிகாரிகள் ஆர்வம் காட்டுகின்றனரே தவிர பஸ்களின் நிலை குறித்து கவலைப்பட்டதாக தெரியவில்லை.

இதனால் 12 மணிநேரம், 14 மணிநேரம் பயணம் செய்யும் பயணிகளின் அவலநிலை அதிகரித்து வருகிறது.

குறிப்பாக கடந்த 29-ந் தேதி மாலை 4½ மணிக்கு சென்னை கோயம்பேட்டில் இருந்து கன்னியாகுமரி மாவட்டம் கொல்லங்கோட்டுக்கு புறப்பட்டு சென்ற விரைவு பஸ்சில் இருக்கை சரி இல்லை என்று கண்டக்டரிடம் பயணிகள் புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

சிறப்பு பஸ்களை இயக்கும் விழாவில் கலந்துகொண்ட போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கரிடம், சிறப்பு பஸ்கள் என்ற பெயரில் ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்கப்படுவதாக பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, அதுபோன்று இயக்கப்படாது என்று உறுதி அளித்தார். ஆனால் அதனையும் மீறி ஓட்டை உடைசல் பஸ்கள் இயக்குவது தொடர் கதையாகி வருகிறது.

அரசு விரைவு போக்குவரத்து கழக பஸ்கள் முறையாக பரா மரிக்காமல் வெகு தூரங்களுக்கு இயக்கப்படுகிறது. ஆம்னி பஸ்களை ஒப்பிடுகையில் கட்டணம் குறைவு என்ற காரணத்திற்காக பயணிகள் விரும்பி செல்கின்றனர்.
ஆனால் பெரும்பாலான பஸ்களில் இருக்கைகள் முறையாக இல்லாததால் 13 மணிநேரத்திற்கு மேலாக பயணம் செய்யும் முதியவர்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் முதுகு வலி, கால்வலி ஏற்பட்டு மருத்துவ செலவுக்கு உள்ளாகின்றனர்.

பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்பவர்கள், சொந்த ஊர்களுக்கு சென்று மருத்துவமனையை நாடி செல்லும் அவல நிலைக்கு அரசு விரைவு போக்குவரத்து கழகங்கள் தள்ளி விடுகின்றன.

பஸ் கண்டக்டரிடம் இதுபற்றி புகார் அளித்தால், இருக்கை சரி இல்லை என்றால் பஸ்சை விட்டு கீழே இறங்குங்கள் என்றும், ஆன்-லைனில் டிக்கெட் வாங்கினால் அதற்கான கட்டணத்தை அரசு விரைவு போக்குவரத்து கழக தலைமை அலுவலகத்தில் போய் பெற்றுக் கொள்ளுங்கள் என்றும் பொறுப்பற்ற முறையில் பதிலளிக்கின்றனர்.

அரசு விரைவு போக்குவரத்து கழகம் வருமானத்துக்கு ஆசைப்பட்டு இதுபோன்ற ஓட்டை உடைசல் பஸ்களை பண்டிகை காலம் மட்டும் அல்லாது எப்போதும் இயக்க வேண்டாம். பயணிகளின் உயிரோடு விளையாடுவதை அரசு விரைவு போக்குவரத்து கழகம் நிறுத்திக்கொள்ள வேண்டும். தவறும் பட்சத்தில் நுகர்வோர் நீதிமன்றங்களை நாடுவதை தவிர பயணிகளுக்கு வேறு வழி தெரியவில்லை.

இவ்வாறு பயணிகள் கூறினார்கள்.
டெய்லரை கூறு போட்ட கறிக்கடைக்காரர் கைது

பதிவு செய்த நாள்02அக்
2017
01:00


சென்னை : சென்னை, முகப்பேர் பகுதியில், டெய்லரை கண்டம் துண்டமாக வெட்டி கால்வாய் ஓரம் வீசிய கறிக்கடைக்காரர், கைது செய்யப்பட்டார்.
சென்னை, திருவேற்காடு பகுதியைச் சேர்ந்தவர், பாபு, 45; டெய்லர். இவரது மனைவி, கிரிஜா, 40. இவர்களுக்கு, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

தலையில்லா சடலம்:

கருத்துவேறுபாடு காரணமாக, ஆறு ஆண்டுகளுக்கு முன், மனைவியை பிரிந்த பாபு, சென்னை, முகப்பேர் மேற்கு, 3வது பிளாக் பகுதியில், அரும்பாக்கத்தைச் சேர்ந்த, ஜாகிர் உசேன் என்பவர் நடத்தி வரும் டெய்லர் கடையில் வேலை பார்த்து வந்தார். அதே பகுதியில், வாடகை வீட்டிலும் தங்கி வந்தார். டெய்லர் கடைக்கு எதிரே, நொளம்பூரைச் சேர்ந்த, வெங்கடேஷ் என்பவர் நடத்தி வரும் கறிக்கடை உள்ளது. இந்த கடையில், பல்லாவரத்தைச் சேர்ந்த, முகமது ரசூல், 22, என்பவர், தங்கி வேலை பார்த்து வந்தார். மாதத்திற்கு ஒரு சில நாட்கள் மட்டுமே, வெங்கடேஷ் கடைக்கு வருவார்.
இந்நிலையில், செப்., 26ல், முகப்பேர் மேற்கு, 3வது பிளாக் பகுதியில், கால்வாய் ஓரம், கோணியில், கை, கால், தலை ஏதுமில்லாத, ஆண் சடலம் கிடந்தது.அடுத்தடுத்த நாட்களில் போலீசார், முகப்பேர் மேற்கு, பன்னீர் நகர் பகுதியில், தலை மற்றும் ஒரு கை தவிர, மற்ற உடல் பாகங்களை கைப்பற்றினர். ஆனால், இறந்தது யார் என, அடையாளம் காண முடியவில்லை.

போலீஸ் திணறல்:

சினிமா, 'கிரைம்' காட்சிகள் போல், மனித உடலை கூறுபோட்டு, கால்வாய் ஓரம் மற்றும் முட்புதரில் வீசப்பட்டு கிடந்தது, முகப்பேர் பகுதி மக்களை பீதியடையச் செய்தது. போலீசாரும், கொன்றது யார், கொல்லப்பட்டது யார் என, கண்டுபிடிக்க முடியாமல் திணறினர்.இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் தனிப்படைகள் அமைக்கப்பட்டு, முகப்பேர் மேற்கு பகுதி முழுவதும் விசாரணை நடந்தது வந்தது. அப்போது, டெய்லர் தங்கி வந்த வீட்டு உரிமையாளர், 'பாபுவை, இரண்டு நாட்களாக காணவில்லை; ஆனால், அவர் தங்கி இருந்த வீட்டில், விளக்கு எரிந்து கொண்டே இருக்கிறது' என, போலீசாரிடம் கூறியுள்ளார்.

அதேபோல், டெய்லர் கடை உரிமையாளர் ஜாகிர் உசேனும், 'பாபுவை காணவில்லை; அதே போன்று, எதிரே உள்ள கறிக்கடையில் வேலை பார்த்த, முகமது ரசூலையும் காணவில்லை' என, போலீசாரிடம் கூறியுள்ளார்.இதனால், சந்தேகம் அடைந்த போலீசார், முகமது ரசூல் யார் என, விசாரிக்க துவங்கினர். அவன் பல்லாவரம், ஜி.எஸ்.டி., சாலை, நேரு தெருவை சேர்ந்தவர் என்பதும், அவர் மீது பல்லாவரம், மறைமலை நகர் காவல் நிலையத்தில், நான்கு திருட்டு வழக்குகள் இருப்பது தெரியவந்தது.அவர், பல்லாவரம் பகுதியில் பதுங்கி இருப்பதை, மொபைல் போன் சிக்னல் வழியாக, போலீசார் உறுதி செய்தனர். நேற்று முன்தினம் நள்ளிரவு, இருசக்கர வாகனத்தில் சென்ற முகமது ரசூலை, போலீசார், சினிமா பாணியில் துரத்திச்சென்று, துப்பாக்கி முனையில் பிடித்தனர்.

பணம் கேட்டு நச்சரிப்பு:

விசாரணையில், டெய்லர் பாபுவை கொன்றதை ஒப்புக்கொண்டான்.அவர், போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலம்: இருவரும், தினமும் ஒன்றாக சேர்ந்து, மது அருந்துவோம். பாபுவுக்கு, எவ்வளவு குடித்தாலும் பத்தாது. எப்போதும், போதையிலேயே இருக்க விரும்புவார். அதற்காக, என்னிடம் பணம் கேட்டு நச்சரிப்பார். இதனால், எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. சம்பவம் நடந்த இரு நாட்களுக்கு முன், பாபுவை, 'உன்னை கொல்லாமல் விடமாட்டேன்' என, கூறினேன். அப்போதும், அவர் தொல்லை கொடுத்து வந்தார்.செப்., 25ல், காலை மற்றும் மதியம், மது குடிக்க பாபுவுக்கு பணம் கொடுத்தேன். அன்று நள்ளிரவு, 12:00 மணிக்கு மீண்டும் கதவை தட்டி பணம் கேட்டார்.

தலை மீட்பு:

இதனால் ஆத்திரத்தில், கடைக்குள் அழைத்து, தாக்கினேன்; அவர் இறந்துவிட்டார். பின், அவரது உடலை கூறு போட்டு, ஆறு கோணி பையில் வைத்து, ஒவ்வொன்றாக துாக்கிச்சென்று, கால்வாய் ஓரம் வீசிவிட்டு மாயமாகிவிட்டேன். இவ்வாறு, அவர் வாக்குமூலம் அளித்துள்ளார். முகமது ரசூல் கைதுக்கு பின், முகப்பேர் மேற்கு பகுதியில், முட்புதரில் கிடந்த பாபுவின் தலையை, போலீசார் கைப்பற்றினர்.
புற்றீசல் போல் பெருகும் மதுக்கடைகள்'மது'ரை:போதையில் பொங்கி வழியும் குடிமகன்கள்
பதிவு செய்த நாள்
அக் 02,2017 02:05



மதுரை;மதுரையில் மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் மீண்டும் புற்றீசல் போல் திறக்கப்பட்டு வருகிறது. போதையில் பொங்கி வழியும் 'குடிமகன்'களின் கூட்டத்தால் மதுரையே தள்ளாடிக் கொண்டிருக்கிறது.சில மாதங்களுக்கு முன் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து சாலையோர மதுக்கடைகள் மூடப்பட்டன. இதனால் ஏற்படும் வருவாய் இழப்பை ஈடுகட்ட குடியிருப்பு பகுதிகளில் புதிய டாஸ்மாக் மதுக்கடைகள் திறக்கப்பட்டன.

பொறுத்தது போதும் என பொங்கி எழுந்த பொதுமக்கள் புதிதாக அமைத்த மதுக்கடைகளை அடித்து நொறுக்கினர். இப்பிரச்னைக்கு பின் மதுக்கடைகள் அமைக்கும் பணிகள் நிறுத்தப்பட்டன. ஆனால், மதுரையில் தற்போது மூடப்பட்ட மதுக்கடைகள் எல்லாம் திறக்கப்பட்டு வருகிறது. குறிப்பாக பெரியார் ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் பஸ்ஸ்டாண்ட் வளாகத்தில் அடுத்து, அடுத்து மூன்று மதுக்கடைகள் 'பட்டை'யை கிளப்பிக் ண்டிருக்கிறது.குடிமகன்களின் தொல்லையால் பஸ் ஸ்டாண்ட்டுக்குள் பெண்கள் தலைகாட்ட அஞ்சுகின்றனர். திறந்த வெளி பார் போல் இங்குள்ள கடைகள் உள்ளன. உள்ளே இருந்து குடிப்பது யார், என்ன ரகம் குடிக்கிறார்கள் என்பது வரை பளிச் என தெரிகிறது. 

பஸ் ஸ்டாண்டில் உள்ள குழந்தைகள், பெண்கள் இதை வேடிக்கை பார்க்கும் அவலம் உள்ளது. இந்த கடைகளுக்கு எங்கும் இல்லாத வகையில் இரண்டு வழிப்பாதை வேறு. இதே, போல் மதுரை ஆத்திகுளம் - புதுார் ரோட்டில் வீடுகளுக்கு நடுவே, புதுநத்தம் ரோடு திருப்பாலை கோயில் மற்றும் பள்ளிக்கு அருகில், நரிமேட்டில் பள்ளி அருகே என, பெண்கள், குழந்தைகள், மாணவர்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மதுக்கடைகள் தடையின்றி செயல்பட்டு வருகிறது.இது போன்ற பொது இடங்களில் மதுக்கடைகள் அமைக்கக் கூடாது என்று தெரிந்தும், சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் கடைகளை திறப்பது, திறந்து வருவது வேடிக்கையாக இருக்கிறது. 

இந்த லட்சணத்தில் மது பாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்யும் சம்பவங்களும் நடக்கிறது. மது விஷயத்தில் அதிகாரிகள் மயங்கி விடாமல் மக்கள் கூடும் இடங்களை பாதுகாக்க வேண்டிய நடவடிக்கைகளில் உடனடியாக ஈடுபட வேண்டும். பஸ் ஸ்டாண்ட் கடைகளுக்கு மூடுவிழா நடத்தி மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டும்.

NEWS TODAY 31.01.2026