Monday, October 2, 2017

பிக் பாஸ் வெற்றியாளராக ஆரவ் தேர்வு: சமூகவலைத்தளத்தில் பெருகும் எதிர்ப்பு

Published : 01 Oct 2017 15:40 IST

ESAKKI MUTHU_50090



'பிக் பாஸ்' வெற்றிக் கோப்பையுடன் ஆரவ்

'பிக் பாஸ்' நிகழ்ச்சியின் இறுதிப் போட்டியின் வெற்றியாளராக ஆரவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு சமூகவலைத்தளத்தில் எதிர்ப்பு வலுத்து வருகிறது.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.

மேலும், நேற்றைய நிகழ்ச்சியில் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வெளியேறியவர்கள் அனைவருமே இறுதிப் போட்டியாளர்களைக் காண வீட்டுக்குள் அனுப்பப்பட்டார்கள். அதில் ஸ்ரீ மற்றும் நமீதா இருவரும் கலந்து கொள்ளவில்லை. பிக் பாஸ் வீட்டிற்குள் சென்ற ஓவியா "ஹாய் ஆரவ், எப்படி இருக்க.. நீ ரொம்ப உடல் மெலிந்து விட்டாய்" என்று மட்டுமே பேசினார்.

இறுதிப் போட்டியாளர்கள் நால்வரில் முதல் ஆளாக, கணேஷ் வெங்கட்ராம் வெளியேற்றப்பட்டார். அதனைத் தொடர்ந்து ஹரிஷ் வெளியேற்றப்பட்டார். சிநேகன் மற்றும் ஆரவ் இருவரையும் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று கமல் அழைத்துக் கொண்டு மேடைக்கு வந்தார்.

இறுதியாக வெற்றியாளராக ஆரவ் அறிவிக்கப்பட்டு கோப்பையும், 50 லட்ச ரூபாய் பணமும் பரிசாக அளிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றிக்கு காரணமான தமிழக மக்கள் அனைவருக்கும் நன்றி என்று பேசினார் ஆரவ்.

பிக் பாஸ் போட்டியாளர்கள் அனைவருடனும் 'அண்ணாத்தா ஆடுறார்' பாடலுக்கு நடனமாடினார் கமல். அதனைத் தொடர்ந்து பிக் பாஸ் வீட்டின் விளக்குகள் அனைத்தையும் கமல் அணைக்க நிகழ்ச்சி முடிவுற்று. விரைவில் அடுத்த சீசனில் சந்திக்கலாம் என்பதோடு முடித்துவிட்டார்கள்.

சமூகவலைத்தளத்தில் சர்ச்சை

பிக் பாஸ் இறுதிப் போட்டி நிகழ்ச்சி ஒளிபரப்பாகும் போதே, சமூகவலைத்தளத்தில் வெற்றிக் கோப்பையுடன் ஆரவ் இருக்கும் புகைப்படம் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பலரும் இதற்கு தகுதியானவர் அல்ல என்று கருத்து தெரிவித்து வந்தார்கள். மேலும், சிநேகன் மற்றும் கணேஷ் வெங்கட்ராம் ஆகியோர் மட்டுமே தகுதியானவர்கள் என்று கூறி வருகிறார்கள்.

மேலும், ஆரவ்வின் ட்விட்டர் பக்கத்தில் "இது தான் எனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு" என்று ட்வீட் செய்தார். அதற்கு பதிலடியாக பலரும் அவருடைய ட்விட்டர் கணக்கைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்பி வருகிறார்கள். ஓவியாவால் மட்டுமே இது உங்களுக்கு கிடைத்திருக்கிறது என்று பலரும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன்: அரசியல் வருகைக் குறித்து கமல்

Published : 01 Oct 2017 18:23 IST

ESAKKI MUTHU_50090




ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன் என்று அரசியல் வருகைக் குறித்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமல் தெரிவித்துள்ளார்.

பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று நடந்த நிகழ்வில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.

இந்நிகழ்ச்சியில் தனது பேச்சுக்கு இடையே, அரசியல் வருகைக் குறித்து கமல் சூசகமாக பேசினார். அதில் கமல் பேசியதாவது:

இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் காட்டிய அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இந்நிகழ்ச்சியை கண்டு கொண்டிருக்கும் ஆறரைக் கோடி மக்களுக்கு நன்றி. அந்த ஆறரைக் கோடி எட்டு கோடியாக வேண்டும் என்பது ஆசை. இது முடிவல்ல துவக்கம்.

தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கு வருவேன், வந்தே தீருவேன். வருவேன், வருவேன் என்கிறீர்களே என்னவாக வருவேன் என்று கேட்காதீர்கள். தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதில்லை அன்பில் வருகிறேன். வெறும் ஆர்வத்தில் வருவதல்ல, கடமையில் வருகிறேன்.

இங்கு கிடைத்த அதே அன்பு, அங்கும் கிடைக்கும் என்பதற்கான அச்சாரம் எனக்கு கிடைத்துவிட்டது. இனி என்ன வேலை எனக்கு என கேட்க மாட்டேன். உங்கள் வேலைத் தான் என் கடமை, என் வாழ்வு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் நடிக்கிறேன். நடிக்க வேண்டாம் உனக்கு கொடுத்திருக்க வேலையைப் பார், அந்த சேவகம் செய் என்று சொன்னால் செய்கிறேன்.

நீ அதுக்கு லாயிக்கில்லை, வேறு ஆள் பார்த்துக் கொள்கிறோம் என்றால் நன்றி. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா செய்கிறேன். இது மேடையில் உங்களை கைதட்ட வைப்பதற்காக சொல்லவில்லை. என் மனதின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தை.

எனக்கு வேண்டிய பணத்தை, சுகத்தை, வளத்தை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். அதற்கான நன்றியைச் சொல்ல இந்த வாழ்க்கைப் போதாது. அதற்கு கைமாறாக எது செய்தாலும் போதாது. உங்கள் சேவையில் சாவது தான் இந்த நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு

இவ்வாறு அவர் பேசினார்.
தீபாவளி பட்டாசு சீட்டு நடத்துபவர்களுக்கு வருமா... கிடுக்கிப்பிடி? ஊரறிந்த ரகசியம் வருவாய் துறைக்கு தெரியாதாம்

பதிவு செய்த நாள்02அக்
2017
00:31




தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பட்டாசு சீட்டு நடத்துபவர்கள், அதற்கான பரிசு பொருட்களுடன் பட்டாசு பெட்டிகளை இருப்பு வைக்க துவங்கி விட்டனர். உரிய பாதுகாப்பு இன்றி, வீடுகளில் பெருமளவில் அடுக்கி வைக்கப்படும் பட்டாசு பெட்டிகளால், விபத்து நேரிடும் அபாயம் உள்ளது. வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியாளர்கள் செயலில் இறங்கினால், இதை, கட்டுப்படுத்த முடியும் என, சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

ராக்கெட் வேகத்தில் உயரும் பட்டாசு விலையால், நடுத்தர வர்க்கத்தினர், தீபாவளி பண்டிகையில் குழந்தைகளுக்கு பட்டாசு வாங்கி கொடுக்க திணறுகின்றனர்.இந்த சூழலை சாதகமாக்கி கொண்ட நிதி நிறுவனங்கள் மற்றும் தனியார் சீட்டு நிறுவனங்கள் பகுதிவாசிகளிடம் தீபாவளி பட்டாசு சீட்டு நடத்தி, பணம் வசூலித்து வருகின்றன.

கொள்ளை லாபம்வசூலாகும் பணத்தை தங்களின் நிறுவனத்தில் முதலீடு செய்து லாபம் ஈட்டி வருகின்றனர். லாபத்தின் ஒரு சொற்ப தொகையுடன், சீட்டு சேர்ந்தவர்களுக்கு, தீபாவளிக்கு முன்னதாக பட்டாசு பெட்டிகளை வழங்கி வருகின்றன. இந்த பட்டாசு சீட்டில், கொள்ளை லாபம் கிடைப்பதால், புற்றீசலாக ஏராளமானோர் பட்டாசு சீட்டு நடத்துவதில் இறங்கியுள்ளனர்.போட்டி காரணமாக, பட்டாசு பெட்டிகளுடன் பரிசு பொருட்களாக, இனிப்பு, பித்தளை சாமான்கள், தங்க நகைகள் என, நீளும் பட்டியலில், தற்போது ஒரு மாதத்திற்கான மளிகை சாமான்களும் இடம் பிடித்துள்ளன.

மாதந்தோறும் பணத்தை செலுத்துவதன் மூலம், சமையல் எண்ணெய் முதல், பலகாரம் வரை பட்டாசு உட்பட ஒரு மாத்திற்கான மளிகை சாமான்களும் கிடைப்பதால், தீபாவளிக்கு போன்ஸ் கிடைக்காத கூலி தொழிலாளியும், பண்டிகையை கோலாகலமாக கொண்டாட முடிகிறது.தன் வீட்டு குழந்தைகள், அடுத்த வீட்டு குழந்தைகள் கொளுத்தும் வாண வேடிக்கையை பரிதாபமாக பார்த்து ஏங்கும் நிலை இன்றி, கவுரவமாக பட்டாசுகளை தன் வீட்டு வாசலில் வெடித்து மகிழ்கின்றனர். இந்த மகிழ்ச்சியே, பட்டாசு சீட்டு நடத்துபவர்களின் வளர்ச்சிக்கு பெரும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இதனால், சீட்டு நடத்துபவர்களுக்கும், சீட்டு சேர்பவர்களுக்கும் என, இருதரப்பிலும் மகிழ்ச்சி தான். ஆனால், பட்டாசு பெட்டிகளை சிவகாசியில் இருந்து, மொத்தமாக வங்கி வந்து, குடியிருப்புகளுக்கு மத்தியில், வீடுகளில் இருப்பு வைக்கும் சீட்டு கம்பெனிகளால், அருகில் குடியிருப்பவர்கள் தான் அச்சத்தில் இருந்து வருகின்றனர்.

நடவடிக்கை தேவைகுறைந்தபட்சம், 500 பெட்டிகள் வரையிலான பட்டாசுகளை இருப்பு வைக்கும் இடத்தில், உரிய பாதுகாப்பு அம்சங்களை இவர்கள் கடைப்பிடிப்பது இல்லை. பட்டாசு கடைகளை வைப்பவர்கள் வருவாய் துறையினரிடம் உரிய அனுமதி பெற்று, அதற்கேற்ப பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்திருக்க வேண்டும் என்பது விதிமுறை.பட்டாசு கடைகளை விட அதிகளவில் வியாபாரம் நடத்தும், இந்த சீட்டு நிறுவனங்கள் ரகசியமாக இருப்பு வைக்கும் பட்டாசுகளுக்கு எந்தவித பாதுகாப்பும் இல்லை.
கிராமங்கள் தோறும் தங்கியிருந்து பணியாற்றும் வி.ஏ.ஓ., மற்றும் கிராம உதவியார்களுக்கு, பட்டாசு சீட்டு நடத்துபவர்கள் யார் என்பதும், அவர்கள் இருப்பு வைக்கும் இடமும் தெரியாமல் போக வாய்ப்பு இல்லை.வருவாய் துறையினரும், போலீசாரும் உரிய முறையில் இவர்களை கண்டறிந்து, பாதுகாப்பு விதிமுறைகளை பின்பற்ற அறிவுறுத்த வேண்டும். பெரும் விபரீதம் ஏற்படும் முன்பாக நடவடிக்கை தேவை என்பது சமூகஆர்வலர்களை எதிர்பார்ப்பாக உள்ளது.

பட்டாசு கடைகள் வைப்பவர்கள் உரிய விதிமுறைகளை கடைப்பிடித்து, அதற்கேற்ப பாதுகாப்பு கட்டமைப்புகளை ஏற்படுத்தி இருந்தால் மட்டுமே, அவர்களுக்கு இருப்பு வைக்கவும், விற்பனை செய்யவும் உரிமம் வழங்கப்படும். ஆனால், விதிகளை மீறி பட்டாசு இருப்பு மற்றும் விற்பனை செய்வது சட்டப்படி குற்றம். அவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். வீடுகளில் வைத்து பட்டாசு வினியோகம் செய்பவர்கள் குறித்து, இதுவரை எந்த புகாரும் வரவில்லை.-என்.ஜெயராமன், திருத்தணி கோட்டாட்சியர்

- நமது நிருபர் -
சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளி ஆட்கள் பணியாற்ற தடை
பதிவு செய்த நாள்01அக்
2017
23:46

'சார் - பதிவாளர் அலுவலகங்களில் வெளி ஆட்கள் பணிபுரிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதை மீறி, வெளியாட்களை பணியில் ஈடுபடுத்தினால், பதிவாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, பதிவுத்துறை, ஐ.ஜி., குமரகுருபரன் எச்சரித்துஉள்ளார்.

தமிழகத்தில், பத்திரப்பதிவு பணிக்காக, 578 சார் - பதிவாளர் அலுவலகங்கள் உள்ளன. இவற்றில், பத்திரங்களை பதிய, பொது மக்கள் நேரடியாக அணுக முடியாத சூழல் நிலவுகிறது. மிக சரியாக பத்திரங்களை தயாரித்து சென்றாலும், சார் - பதிவாளர்கள் ஏற்பதில்லை.
தங்களுக்கு வேண்டிய, ஆவண எழுத்தர் வாயிலாக சென்றால் மட்டுமே ஏற்கின்றனர்.

பெரும்பாலான அலுவலகங்களில், சார் - பதிவாளர்கள், சொந்தமாக சம்பளம் கொடுத்து, வெளி ஆட்களை பணியில் அமர்த்தி உள்ளனர். இது, லஞ்ச ஊழலுக்கே வழிவகுக்கும் என, பொது மக்கள் தொடர்ந்து புகார் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், பதிவுத்துறை தலைவர், குமரகுருபரன், அனைத்து, டி.ஐ.ஜி.,க்கள், மாவட்ட பதிவாளர்கள், சார் - பதிவாளர்களுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கை: 

 சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்களை பணியில் ஈடுபடுத்தக் கூடாது. சுற்றறிக்கையின் இணைப்பாக அனுப்பப்பட்டுள்ள சான்று படிவத்தில், 'எங்கள் அலுவலகத்தில், வெளி ஆட்கள் யாரும் பணியில் இல்லை' என, சார் - பதிவாளர்கள், எழுத்துப்பூர்வமாக உறுதி அளித்து, தலைமையகத்துக்கு அனுப்ப வேண்டும்

 வெளி ஆட்கள் பணியில் ஈடுபடுத்தப்படுவது கண்டுபிடிக்கப்பட்டால், சார் - பதிவாளர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து, சார் - பதிவாளர்கள் கூறியதாவது: இந்த சுற்றறிக்கையின் வாயிலாக, சார் - பதிவாளர் அலுவலகங்களில், வெளி ஆட்கள் பணியில் இருப்பதை, ஐ.ஜி., ஒப்புக்கொள்கிறார். பல்வேறு சார் - பதிவாளர் அலுவலகங்களில் பணிபுரிய வேண்டியவர்களை, அயல் பணி என, தலைமையகத்திலேயே வைத்துக் கொள்கின்றனர். இதனால், ஏற்படும் காலியிடம், அதற்கான பணிகளை மேற்கொள்ள மாற்று ஏற்பாட்டையும், ஐ.ஜி.,யே சுட்டிக்காட்டினால் நல்லது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.

- நமது நிருபர் -
சமையல் காஸ் விலை அதிரடி உயர்வு
சென்னை: பண்டிகைகள் வரிசை கட்டும் நிலையில், சமையல் காஸ் சிலிண்டர் விலை, இரண்டு மாதங்களில், 123.50 ரூபாய் உயர்ந்துள்ளது.



இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் ஆகிய, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள், வீடுகளுக்கு, 14.20 கிலோ; வணிக பயன்பாட்டுக்கு, 19 கிலோ என, இரண்டு வகையான காஸ் சிலிண்டர்களை வினி யோகம் செய்கின்றன.சர்வதேச சந்தையில், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, ஒவ்வொரு மாதமும்,எண்ணெய் நிறுவனங்கள், சமையல் காஸ் சிலிண்டர் விலையில், மாற்றம் செய்கின்றன.

இதன்படி, சென்னையில், செப்., 1ல், வீட்டு சிலிண்டர் விலை, 607 ரூபாய்க்கும், வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை, 1,167 ரூபாய்க்கும் விற்பனையானது.எண்ணெய் நிறுவனங்கள், செப்., 28ல், காஸ் ஏஜென்சிகளுக்கான கமிஷன் தொகையை உயர்த்தின. இதனால், வீட்டு சிலிண்டருக்கு, 47.48 ரூபாயாக இருந்த கமிஷன், ரூ.1.41 உயர்ந்து, 48.89 ரூபாயானது. இதனுடன், வரியும் சேர்த்து, வீட்டு சிலிண்டர் விலை, இரண்டு ரூபாய் அதிகரித்து, செப்., 29 முதல், வீட்டு சிலிண்டர் விலை, 609 ரூபாய்க்கு விற்பனையானது.

இந்நிலையில், சர்வதேச விலை நிலவரத்துக்கு ஏற்ப, நேற்று முதல், காஸ் சிலிண்டர் விலையில், மாற்றம் செய்யப்பட்டது. இதன்படி, 609 ரூபாயாக இருந்த சிலிண்டர் விலை, 47.50 ரூபாய் உயர்ந்து, 656.50 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னையில், 1,167 ரூபாயாக இருந்த வணிக சிலிண்டர் விலை, 77.50 ரூபாய் அதிகரித்து, 1,244.50 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பொதுமக்கள் கூறியதாவது: சென்னையில், ஆகஸ்டில், வீட்டு சிலிண்டர், 533 ரூபாய்; வணிக சிலிண்டர், 1,052 ரூபாய்க்கும் விற்பனையானது. இரண்டு மாதங்களில் மட்டும், வீட்டு சிலிண்டர் விலை, 123.50 ரூபாயும், வணிக சிலிண்டர் விலை, 192 ரூபாயும் உயர்ந்துள்ளது.

இதனால், பண்டிகைகாலத்தில் கூடுதல் செலவு ஏற்பட்டு உள்ளது. இதனால், மற்ற அத்தியாவசிய பொருட்களின் விலை அதிக மாகி விடும். எனவே, சிலிண்டர் விலையை குறைக்க, மத்திய அரசு, நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

'வீட்டு காஸ் சிலிண்டருக்கு, வரி இல்லாமல் இருந்தது. தற்போது, ஜி.எஸ்.டி.,யில், 5 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. அத்துடன், கச்சா எண்ணெய் விலை குறைந்தாலும், அவற்றின் இறக்குமதி செலவு அதிகரித்துள்ளதால், இந்த விலை உயர்வு ஏற்பட்டுள்ளது' என, எண்ணெய் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சென்னையில் இன்று முதல் குப்பை சேகரிப்பு முறையில் மாற்றம்
பதிவு செய்த நாள்02அக்
2017
05:56




சென்னை: காந்தி ஜெயந்தி நாளான இன்று(அக்.,2) முதல், சென்னையில், குப்பை சேகரிப்பு முறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வீடுகளிலேயே, குப்பையை, மட்கும் மற்றும் மட்காத குப்பையாக தரம் பிரித்து பெறப்படும் நடைமுறை பின்பற்றப்பட உள்ளது. அதே சமயம், ஒரே வளாகத்தில், தினமும், 100 கிலோவிற்கு மேல் குப்பையை உருவாக்கினால், அந்த நிர்வாகமே, குப்பையை மறுசுழற்சி செய்துகொள்ள வேண்டும்.

திடக்கழிவு மேலாண் மை விதியின் படி, நாள் ஒன்றுக்கு, 100 கிலோவிற்கு மேலாக குப்பையை உருவாக்கும் வணிக வளாகங்கள், திருமணமண்டபங்கள், அடுக்குமாடி குடியிருப்புகளின் குப்பையை, மாநகராட்சி இனி வாங்காது.அந்தந்த நிறுவனங்களே, குப்பையை, மறு சுழற்சி செய்யவோ, உரம் தயாரிக்கவோ வேண்டும்.

காந்தி ஜெயந்தி நாளான இன்று முதல், இத்திட்டம் அமலுக்கு வருகிறது. வீடுகளிலேயே குப்பையை தரம் பிரித்து, அனைத்து நாட்களிலும், மக்கும் குப்பையையும்; புதன்கிழமை மட்டும், மக்காத குப்பையையும், மாநகராட்சி ஊழியர்களிடம், பொதுமக்கள் வழங்க வேண்டும். சென்னை மாநகராட்சியின், 15 மண்டலங்களிலும் சேர்த்து, தினமும், 5,000 டன் குப்பை சேர்கிறது.
கொட்டிய கன மழையால் மக்கள் நிம்மதி : குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என நம்பிக்கை
பதிவு செய்த நாள்
அக் 02,2017 00:21

குடிநீர் தட்டுப்பாட்டில் தவிக்கும் சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்டத்தினருக்கு, நிம்மதி தரும் வகையில், கன மழை கொட்டி தீர்த்தது. தமிழகம் முழுவதும் ஓர் ஆண்டுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு நிலவுகிறது. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, வேலுார், கடலுார் போன்ற வட மாவட்டங்களில், இரண்டு ஆண்டுகளாக பருவ மழை ஏமாற்றியதால், ஏரி, குளங்கள் வறண்டு விட்டன. வட மாவட்டங்களில், ஆறு மாதங்களுக்கு மேலாக குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், சென்னை உள்ளிட்ட வட மாவட்டங்களில், தென்மேற்கு பருவ மழை பரவலாக பெய்து வருகிறது.

 நேற்று முன்தினம் இரவும், சென்னை, காஞ்சி புரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில், கன மழை கொட்டியது. 

இதனால், முக்கிய குடிநீர் ஆதாரமான புழல், செங்குன்றம், சோழவரம் போன்ற ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.தமிழகத்தில் அதிகபட்சமாக, எண்ணுாரில்,14 செ.மீ., மழை பதிவானது. பூண்டி, 13; சோழவரம், 12; தாமரைப்பாக்கம், 11; ஸ்ரீபெரும்புதுார், 10; பொன்னேரி, 9; திருவள்ளூர், 8; பூந்தமல்லி, செம்பரம்பாக்கம், தாம்பரம், 5; திருத்தணி, 4; கேளம்பாக்கம், விமான நிலையம், அடையாறு, 3; மற்ற இடங்களில், 1 முதல், 2 செ.மீ., மழை பதிவானது.

நாளை காலை, 8.30மணி வரை உள்ள, 24 மணி நேரத்தில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பல இடங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக, வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
பருவமழை காரணமாக, ஏரிகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளதால், சென்னை மற்றும் சுற்றுப்புற மாவட்ட மக்கள் நிம்மதி அடைந்துள்ளனர்.

விமானங்கள் தாமதம் : சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், நேற்று முன்தினம் நள்ளிரவு, 12:00 மணி முதல், நேற்று காலை, 6:30 மணி வரை சூறைக்காற்றுடன் பலத்த மழை பெய்தது. இதனால், குவைத், சார்ஜா, கொழும்பு, லண்டன் ஆகிய வெளிநாட்டு நகரங்களில் இருந்து வந்த விமானங்கள், சென்னையில் தரை இறங்க முடியாமல், ஐதராபாதிற்கு திருப்பி விடப்பட்டன. இதேபோல், புனே, அந்தமான், மற்றும் ஐதராபாத் நகரங்களில் இருந்து, சென்னை வந்த விமானங்கள், அருகில் இருந்த விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டன.

நேற்று காலை, 6:30 மணிக்கு நிலைமை சீரானதும், பிற விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்ட, 14 விமானங்கள், நேற்று காலை, 7:30 மணி முதல், சென்னையில் தரையிறங்கின.
விமானங்கள் தாமதத்தால் பயணியர் சிரமப்பட்டனர்.

NEWS TODAY 31.01.2026