Wednesday, November 1, 2017


விபத்து பலிக்கு இழப்பீடு : சுப்ரீம் கோர்ட் புதிய உத்தரவு


புதுடில்லி: சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்தாருக்கு இழப்பீடு வழங்கும்போது, உயிரிழந்தவரின் எதிர்கால வருமானத்தை கணக்கிடுவதில், புதிய உத்தரவை, உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

சாலை விபத்தில் உயிரிழப்பவரின் குடும்பத்தாருக்கு, மோட்டார் வாகனச் சட்டத்தின்படி, காப்பீட்டு நிறுவனங்கள் மூலம் இழப்பீடு வழங்கப்படுகிறது. இந்த சட்டத்தின்படி, இழப்பீடு வழங்கும்போது, உயிரிழந்தவரின் எதிர்கால வருமானம் கணக்கிடுவது தொடர்பாக, உச்சநீதிமன்றத்தில், 27 வழக்குகள் தொடரப்பட்டன. தலைமை நீதிபதி, தீபக் மிஸ்ரா தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அரசியலமைப்பு சட்ட அமர்வு, இவ்வழக்குகளை விசாரித்தது. எதிர்கால வருமானம் குறித்து அமர்வு அளித்துள்ள உத்தரவில் கூறியுள்ளதாவது:
சாலை விபத்தில் ஒருவர் உயிரிழக்கும்போது, அவருடைய குடும்பத்தாருக்கு வழங்கும் இழப்பீட்டில், அவருடைய எதிர்கால வருமானம் குறித்து கணக்கிடுவதற்கு, புதிய வழிமுறை வகுக்கப்படுகிறது. அதன்படி, தனியார் அல்லது அமைப்பு சாரா நிறுவனங்களில், நிரந்தரப் பணியாளராக இருந்து சம்பளம் வாங்கியவர், 40 வயதுக்குள் இறந்தால், அவருடைய சம்பளத்துடன், 50 சதவீதம் கூடுதல் தொகையை, எதிர்கால வருவாயாக கணக்கிட வேண்டும். 
அதேபோல, 40 முதல் 50 வயதுள்ளவர்களுக்கு, 30 சதவீதம்; 50 முதல் 60 வயதுக்குட்பட்டவர்களுக்கு, 15 சதவீதமாகவும், எதிர்கால வருவாயை கணக்கிட வேண்டும். சம்பளம் என்பது, வரிக்கு பிந்தைய தொகை. உயிரிழந்தவர், சுய தொழில் செய்பவராக அல்லது தொகுப்பூதியம் பெறுபவராக இருந்தால், 40 வயதுக்குட்பட்டவருக்கு, 40 சதவீதத்தை, எதிர்கால வருவாயாக கணக்கிட வேண்டும். 40 முதல் 50 வயதுக்கு, 25 சதவீதம்; 50 முதல் 60 வயதுக்கு, 10 சதவீதமாகவும் கணக்கிட வேண்டும். இதுதவிர, உறவை இழந்ததால் ஏற்படும் இழப்பீடு மற்றும் இறுதி சடங்குகளுக்கான தொகையை, மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை, 10 சதவீதம் உயர்த்தி கணக்கிட வேண்டும். இவ்வாறு அமர்வு உத்தரவிட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்கள் 16 பேர் கைது

தங்களுக்கு ஒதுக்கப்பட்ட குடியிருப்புகளை, கூடுதல் தொகைக்கு வாடகைக்கு விட்ட, 16 மத்திய அரசு ஊழியர்களை, சி.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
சென்னை, கே.கே. நகரில், மத்திய அரசு ஊழியர்களுக்கான குடியிருப்பு உள்ளது. அங்கு, மத்திய அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களுக்கு, குறைந்த வாடகையில், வீடு ஒதுக்கப்பட்டு உள்ளது. 
அங்கு ஒதுக்கீடு பெற்ற பலர், அவற்றை, மத்திய அரசில் பணிபுரியாத பலருக்கு, அதிக வாடகைக்கு விடுவதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இதனால், சில மாதங்களுக்கு முன், அங்கு, சி.பி.ஐ., அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தியதில், குற்றச்சாட்டு உறுதி என, தெரிய வந்தது. இதையடுத்து, சி.பி.ஐ., வழக்கு பதிந்து, 16 ஊழியர்களையும் கைது செய்துள்ளது. அவர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என, தெரிகிறது.

- நமது நிருபர் - 
'டெபிட் கார்டில்' மின் கட்டணம் : புதிய சேவையை அமைச்சர் துவக்கினார்
சென்னை: ''மழை காலத்தில், பாதுகாப்பு நடவடிக்கைக்காக, வீடுகளில் மின் சப்ளை நிறுத்தப்படுகிறது,'' என, மின் துறை அமைச்சர், தங்கமணி தெரிவித்தார்.

மின் கட்டண மையங்களில், 'டெபிட் கார்டு' பயன்படுத்தி, 'ஸ்வைப்பிங் மெஷின்' வாயிலாக, மின் கட்டணம் செலுத்தும் சேவையை, அமைச்சர் தங்கமணி, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேற்று துவக்கி வைத்தார். அதில், எரிசக்தி துறை செயலர், விக்ரம் கபூர், மின் வாரிய தலைவர், சாய்குமார் மற்றும் மின் வாரிய அதிகாரிகள் பங்கேற்றனர்.

பின், அமைச்சர் தங்கமணி கூறியதாவது:தமிழகத்தில், தடையில்லாமல் மின் சப்ளை செய்யப்படுகிறது. தற்போது, மழை காலம் என்பதால், புயல் மற்றும் காற்று வேகமாக வீசும்போது, மக்களின் பாதுகாப்பிற்காக, வீடுகளில் மின் தடை செய்யப்படுகிறது. மழை நின்றதும், மீண்டும் மின் சப்ளை துவங்கும். இனி, நுகர்வோர், மின் கட்டண மையங்களில், டெபிட் கார்டு பயன்
படுத்தி, எளிதில் கட்டணத்தை செலுத்தலாம். இந்த சேவையை, முதல் கட்டமாக, சென்னை, மயிலாப்பூரில் உள்ள, 16 கட்டண மையங்களில் பெறலாம். விரைவில், அனைத்து மையங்களுக்கும் விரிவுப்படுத்தப்பட இருக்கிறது.எளிய வகையில், வணிக மின் திட்டத்தின் கீழ், 'ஜி.எம்.ஆர்., கிருஷ்ணகிரி' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது. அதன்படி, அந்நிறுவனம், கிருஷ்ணகிரி மாவட்டம், உதனப்பள்ளியில் அமைக்க உள்ள தொழில் பூங்காவுக்கு, தனி வழித்தடத்தில், தடையில்லா மின் சப்ளை செய்யப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

பிப்ரவரியில் இடமாற்றம்! : மின் வாரிய அலுவலகங்களில் பலர் ஒரே இடத்தில் பல ஆண்டுகளாக பணிபுரிகின்றனர். மூன்று ஆண்டுகளுக்கு மேல், ஒரே இடத்தில் பணி செய்வோரை இடமாற்றம் செய்ய, மின் வாரியம், செப்., மாதம் உத்தரவிட்டது. இது, அரசியல் செல்வாக்கு உள்ள, சில அதிகாரிகளுக்கு பிடிக்கவில்லை. அவர்களின் வலியுறுத்தலால், இடமாற்ற உத்தரவுக்கு காரணமான, மின் வாரிய விஜிலென்ஸ் டி.ஜி.பி.,யாக இருந்த மகேந்திரனை, சமீபத்தில் இடமாற்றம் செய்தனர். இந்நிலையில், அமைச்சர் தங்கமணி, 'மூன்று ஆண்டுகளுக்கு, ஒரே இடத்தில் 
உள்ளவர்களின் இடமாற்ற உத்தரவு, வரும் பிப்., முதல் அமல்படுத்தப்படும்' என நேற்று தெரிவித்தார்.

ரயில்களின் நேரம் மாற்றம் இன்று முதல் அமல்

சென்னை: தெற்கு ரயில்வே கால அட்டவணை, நேற்று வெளியிடப்பட்டது. சென்னை, சென்ட்ரல் - பழநி எக்ஸ்பிரஸ் உட்பட, மூன்று ரயில்கள், முக்கிய நகரங்கள் இடையே நீட்டிக்கப்பட்டுள்ளன. இவை, இன்று முதல் அமலுக்கு வருகின்றன.

நீட்டிக்கப்பட்டுள்ள ரயில்கள்:

 சென்னை, சென்ட்ரலில் இருந்து பழநிக்கு இயக்கப்படும், எக்ஸ்பிரஸ் ரயில், கேரள மாநிலம், பாலக்காடு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், சென்ட்ரலில் இருந்து, இரவு, 9:40 மணிக்கு புறப்பட்டு, மறு நாள் காலை, 11:00 மணிக்கு, பாலக்காடு சென்றடையும். அங்கிருந்து, மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் அதிகாலை, 4:15 மணிக்கு, சென்ட்ரல் வந்தடையும்
 எழும்பூர் - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ், கொல்லம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், எழும்பூரில் இருந்து, இரவு, 7:50 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:00 மணிக்கு, கொல்லம் சென்றடையும். அங்கிருந்து மாலை, 3:00 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 8:05 மணிக்கு, எழும்பூர் வந்தடையும்
 திருவனந்தபுரம் - பாலக்காடு அமிர்தா எக்ஸ்பிரஸ், பொள்ளாச்சி, பழநி வழியாக, மதுரைக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில், திருவனந்த புரத்தில், இரவு, 10:30 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் மதியம், 1:10 மணிக்கு, மதுரை சென்றடையும். மதுரையில் இருந்து, மாலை, 3:45 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை, 6:25 மணிக்கு, திருவனந்தபுரம் சென்றடையும்
 தஞ்சாவூர் - கும்பகோணம் பயணியர் ரயில், மயிலாடுதுறை வரையும், நாகூர் - திருச்சி பயணியர் ரயில், காரைக்கால் வரையும், திருச்செந்துார் - பழநி பயணியர் ரயில், பாலக்காடு வரையும் நீடிக்கப்பட்டுள்ளது.
எழும்பூர் - மன்னார்குடி மன்னை எக்ஸ்பிரஸ், மார்ச், 1 முதல் பாதை மாற்றி, திருவாரூர், நீடாமங்கலம், மன்னார்குடி வழியாக, இயக்கப்பட உள்ளது என, தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.
ரேஷன் கடையில் சர்க்கரை இன்று முதல் கிலோ ரூ.25

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில், கிலோ சர்க்கரை, 13.50 ரூபாய் என்ற குறைந்த விலைக்கு விற்கப்பட்டது. அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், சர்க்கரை வாங்கினர். இந்நிலையில், இன்றுமுதல், சர்க்கரை விலையை, 25 ரூபாயாக உயர்த்த, தமிழக அரசு, சமீபத்தில் உத்தரவிட்டது. அதன்படி, இன்று முதல், சர்க்கரை விலை உயர்வு அமலுக்கு வருகிறது.
உணவுத் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:
சர்க்கரை விலை உயர்வால், ரேஷன் ஊழியர் - மக்கள் இடையில், பிரச்னை ஏற்படக் கூடாது என்பதற்காக, கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், புதிய விலை பதிவேற்றம் செய்யப்பட்டு உள்ளது.
மிகவும் வறுமையில் உள்ள, 'அந்தியோதயா' ரேஷன் கார்டுதாரர்களுக்கு, கிலோ சர்க்கரை, 13.50; காவலர் கார்டுகளுக்கு, 12.50; மற்ற அனைத்து கார்டுதாரர்களுக்கும், 25 ரூபாய்க்கு விற்கப்படும். இந்த விலை உயர்வு, இன்று நடைமுறைக்கு வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.

அனுமதியின்றி உயர் கல்வி படித்த ஆசிரியர்களுக்கு, 'கிடுக்கிப்பிடி'


அரசின் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்த, 4,300ஆசிரியர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, அரசு உத்தரவிட்டு உள்ளது. அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள், பணியில் இருக்கும் போது, மேற்படிப்பு படிக்க, பாஸ்போர்ட் எடுக்க, வெளிநாடு செல்ல மற்றும் சொத்துகள் வாங்க, அரசிடம் முன் அனுமதி பெற வேண்டும். அனுமதி பெறாவிட்டால், சம்பந்தப்பட்டோர் மீது, 'சஸ்பெண்ட், டிஸ்மிஸ்' உள்ளிட்ட, பல நடவடிக்கைகள் பாயும். இந்நிலையில், தமிழக பள்ளிக்கல்வித் துறையில், தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும், 4,300 ஆசிரியர்கள், தங்கள் துறையின் முன் அனுமதி பெறாமல், உயர் கல்வி படித்துள்ளனர்.படித்து முடித்த பின், பின் ஏற்பு அனுமதி தரும்படி, கல்வித் துறைக்கு கடிதம் கொடுத்துள்ளனர்.
இது குறித்து, பள்ளிக்கல்வித் துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி, துறை செயலரிடம் அறிக்கை தாக்கல் செய்தனர். இதையடுத்து, முன் அனுமதி பெறாதவர்கள் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுத்து, அதன் அறிக்கையை தாக்கல் செய்ய, தொடக்கக் கல்வி இயக்குனரகத்துக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. அதனால், நடவடிக்கையில் இருந்து தப்பிக்க, சம்பந்தப்பட்ட ஆசிரியர்கள், சங்க நிர்வாகிகளை அணுகி வருகின்றனர்.

- நமது நிருபர் -
சென்னை புறநகரின் பல பகுதிகளில் பாதிப்பு சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்ததால் போக்குவரத்து துண்டிப்பு



சென்னை புறநகரின் பல பகுதிகளில் தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர். சுரங்கப்பாதையில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் 01, 2017, 04:15 AM

ஆலந்தூர்,

சென்னை புறநகர் பகுதிகளான கிண்டி, ஆலந்தூர், ஆதம்பாக்கம், பரங்கிமலை, மடிப்பாக்கம், பள்ளிக்கரணை, துரைப்பாக்கம், பெரும்பாக்கம், மேடவாக்கம் புழுதிவாக்கம், வேளச்சேரி, கீழ்க்கட்டளை உள்ளிட்ட பல பகுதிகளில் நேற்று முன்தினம் காலை முதல் நள்ளிரவு வரை பலத்த மழை கொட்டியது. இதனால் இந்த பகுதிகளில் உள்ள குடியிருப்புகளில் மழைநீர் சூழ்ந்தது.

ஆலந்தூரில் உள்ள சாலைகளில் மழைநீர் தேங்கி இருந்ததால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டனர். மடிப்பாக்கம்–புழுதிவாக்கம் ராம்நகர் வடக்கு பகுதியில் உள்ள 10–க்கும் மேற்பட்ட பகுதிகளில் உள்ள தெருக்களில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கி உள்ளது. இந்த பகுதிகளில் உள்ள மழைநீர் கால்வாய்கள் சரியாக தூர்வாரப்படாததால் தண்ணீர் செல்ல வழியின்றி கழிவு நீருடன் தேக்கம் அடைந்துள்ளது.

ஒரே நாளில் பெய்த மழையிலேயே முழங்கால் அளவுக்கு தண்ணீர் தேங்கி இருப்பதால் மீண்டும் மழை பெய்தால் வீடுகளை விட்டு வெளியேறக்கூடிய நிலை ஏற்படும் என்ற அச்சத்தில் இருப்பதாகவும், மாநகராட்சி அதிகாரிகள் விரைந்து வந்து தண்ணீரை அகற்றி நிரந்தரமாக வடிகால்வாய்களை அமைக்க வேண்டும் என அப்பகுதியினர் கோரிக்கை விடுத்தனர்.

வேளச்சேரி பாரதி நகர், உதயம் நகர் போன்ற பகுதிகளிலும் மழைநீர் முழங்கால் அளவுக்கு தேங்கி இருந்ததால் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வரமுடியாத நிலை ஏற்பட்டது. கீழ்கட்டளை காசிவிஸ்வநாதபுரம் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்தது. கோவிலம்பாக்கம் என்ஜீனியர்ஸ் அவென்யூ பகுதியில் உள்ள ஓடை தூர் வாரப்படாததால் மழைநீர் வீடுகளுக்குள் புகுந்தது.

கிண்டி கத்திப்பாரா மேம்பாலத்தின் கீழ் உள்ள சுரங்கப்பாதை வழியாக போரூர், வடபழனி போன்ற பகுதிகளுக்கு வாகனங்கள் சென்று வருகின்றன. ஆனால் இந்த சுரங்கப்பாதை மழைநீரினால் குளம்போல் நிரம்பியதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் வேலைக்கு செல்வோர் என அனைவரும் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.

மின்மோட்டார் மூலம் அங்கு இருக்கும் தண்ணீரை அகற்ற நெடுஞ்சாலை துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். கால்வாய்களில் ஏற்பட்டுள்ள அடைப்புகள் அகற்றப்படாததே மழைநீர் தேங்குவதற்கு காரணம் என்று பொதுமக்கள் குற்றம்சாட்டினார்.

NEWS TODAY 06.12.2025