Wednesday, December 6, 2017

தற்காலிக ஆசிரியர்கள் நியமனம்: தலைமை ஆசிரியர்களுக்கு அதிகாரம்

Added : டிச 05, 2017 22:09 

அரசு மேல்நிலைப் பள்ளிகளில், காலியாக உள்ள இடங்களில், தற்காலிக ஆசிரியர்களை நியமிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், 6,000க் கும் மேற்பட்ட, அரசு உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் செயல்படுகின்றன. 

இவற்றில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட, முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள், பிளஸ் 1, பிளஸ் 2 பாடங்கள் நடத்துகின்றனர். பள்ளிகளில், 3,000க்கும் மேற்பட்ட முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள், காலியாக உள்ளன. அதனால், பல பள்ளிகளில், பிளஸ் 1, பிளஸ் 2 மாணவர்களுக்கு பாடம் நடத்துவதில், பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து, பள்ளிக்கல்வி அதிகாரிகள் ஆய்வு நடத்தி, காலியிடங்களை தற்காலிகமாக நிரப்ப, முடிவு செய்துஉள்ளனர்.


அதன்படி, அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளின் மேற்பார்வையில், அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்களே, தற்காலிக ஆசிரியர்களை நியமித்து கொள்ளலாம். 


மாதம், 7,500 ரூபாய் என, பெற்றோர் - ஆசிரியர் கழகம் வழியே, மாத சம்பளம் வழங்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

- நமது நிருபர் -
புத்தாண்டு முதல், '4ஜி' சேவை : பி.எஸ்.என்.எல்., துவக்கம்

Added : டிச 05, 2017 22:12 |
தமிழகத்தில், புத்தாண்டு முதல், பி.எஸ்.என்.எல்., நிறுவனம், '4ஜி' சேவையை துவங்க உள்ளது. 

இது தொடர்பாக, சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் மாவட்டங்களை உள்ளடக்கிய, சென்னை தொலை தொடர்பு வட்ட, தலைமை பொது மேலாளர், கலாவதி கூறியதாவது:


பி.எஸ்.என்.எல்., வாடிக்கையாளர்கள், எதிர்பார்க்கும், '4ஜி' சேவை, ஜன., முதல் துவங்கும். அதற்காக, 'நோக்கியா' நிறுவனம் வாயிலாக, 200 கோபுரங்களை நிறுவுவதற்கு, கருவிகள் வாங்கப்பட்டு உள்ளன. மேலும், 480, '3ஜி' கோபுரங்கள் மற்றும், 265, '2ஜி' கோபுரங்கள் என, 1,000க்கும் மேற்பட்ட கோபுரங்கள், அதற்கான கட்டுப்பாட்டு அறை அமைப்பதற்கான கருவிகள், நோக்கியாவிடம் வாங்கப்படுகின்றன. இதனால், பி.எஸ்.என்.எல்., சேவை பல மடங்கு அதிகரிக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

- நமது நிருபர் -
சட்ட சிக்கலில் பாரதிதாசன் பல்கலை

Added : டிச 05, 2017 22:08 |

பாரதிதாசன் பல்கலை யில், விதிகளை மீறி பணி நியமனம் மேற்கொள்வதை தடுக்கும்படி, நீதிமன்றத்தில் வழக்கு தொடர, சிண்டிகேட் உறுப்பினர்கள் முடிவு செய்துள்ளனர்.

பாரதிதாசன் பல்கலையில், இந்த ஆண்டு, ஜூன் முதல், துணைவேந்தர் பணியிடம் காலியாக உள்ளது. புதிய துணை வேந்தரை நியமிக்க, தேடல் குழு அமைக்கப்பட்டு, விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில், 241 பேர் விண்ணப்பித்து உள்ளதாக, அவர்களின் பெயர் விபரங்களை, பல்கலை இணையதளத்தில், உயர்கல்வித்துறை வெளியிட்டது. விண்ணப்பித்தோரில், தகுதியானவரை தேர்வு செய்யும் பணி நடந்து வருகிறது. இதுகுறித்து, தகுதியான மூன்று பேர் பட்டியலை, தேடல் குழுவினர், கவர்னரிடம் வழங்குவர். இதனிடையே, துணைவேந்தர் நியமிக்கப்படும் முன், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி, பதிவாளர் மற்றும் தொலைநிலை கல்வி இயக்குனர் பதவிகளை நிரப்ப, உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது.
உயர்கல்வித்துறை செயலர், சுனில் பாலிவால், கல்லுாரி கல்வி இயக்குனர், மஞ்சுளா ஆகியோர் கொண்ட, பாரதிதாசன் பல்கலையின் தற்காலிக நிர்வாக கமிட்டி, இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. இதற்காக, வரும் 12ல், சிண்டிகேட் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்கள், கல்லுாரி பேராசிரியர்கள் தரப்பில், கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த ஆண்டு, ஏப்., 20ல், உயர்கல்வி செயலர், சுனில் பாலிவால் பிறப்பித்த உத்தரவில், 'துணைவேந்தர்களின் பதவிக்காலம் முடிவதற்கு, மூன்று மாதம் உள்ள நிலையில், எந்த பல்கலையும் பணி நியமனம் மேற்கொள்ளக்கூடாது' என, குறிப்பிட்டுள்ளார். இதன்படி, பல்கலை துணைவேந்தர் இல்லாதபோது, பணி நியமனம் செய்யக்கூடாது. ஆனால், பாரதிதாசன் பல்கலைக்கு மட்டும், உயர்கல்வி செயலர், தான் பிறப்பித்த உத்தரவை, தானே மீறுவது போல் உள்ளது என, சிண்டிகேட் உறுப்பினர்கள் குற்றம் சாட்டி உள்ளனர். இதுதொடர்பாக, முதல்வரின் தனிப்பிரிவு, கவர்னர், உயர்கல்வி அமைச்சர் ஆகியோருக்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள் புகார் தெரிவித்துள்ளனர். 


'வரும், 12ல் நடக்க உள்ள சிண்டிகேட் கூட்டத்தை நடத்தக்கூடாது; பணி நியமன நடவடிக்கைகளை ரத்து செய்ய வேண்டும்' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை, சிண்டிகேட் உறுப்பினர்கள் எழுப்பி உள்ளனர். இந்த பிரச்னை தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக, சிண்டிகேட் உறுப்பினர்கள் சிலர் தெரிவித்தனர்.

- நமது நிருபர் -
11 வயது பிள்ளையை MRT ரயிலில் மானபங்கம் செய்த ஆடவர் கைது 

5/12/2017 21:30

சிங்கப்பூரில், 11 வயதுப் பிள்ளையை MRT ரயிலில் மானபங்கம் செய்ததற்காக 26 வயது ஆடவர் இன்று கைதுசெய்யப்பட்டுள்ளார்.

சம்பவம் நேற்று பிற்பகல் கிளமெண்டி மற்றும் ரெட்ஹில் நிலையங்களுக்கு இடையே நடந்தது.

14 வயதிற்குக் கீழானவரை மானபங்கம் செய்ததற்காக ஆடவர் நாளை நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்படுவார்.

குற்றத்திற்கு ஈராண்டுச் சிறைதண்டனை, அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.

சக கட்டுமான ஊழியரைத் தாக்கிய இந்தியக் கட்டுமான ஊழியருக்குச் சிறை, பிரம்படிகள்

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-dec-sungei-attack/3904176.html

இந்தியாவைச் சேர்ந்த அருணாசலம் மணிகண்டன், 21 வயது கணேசன் அருண்பிரகாஷைக் கத்தியால் பலமுறை கழுத்திலும் நெஞ்சிலும் வெட்டினார்.

இருவருக்கும் இடையில் மூண்ட வாக்குவாதத்தைத் தொடர்ந்து அருணாசலம் அவ்வாறு செய்தார். ஓல்ட் சுவா சூ காங் ரோட்டிலுள்ள சுங்கை தெங்கா ஊழியர் தங்குமிடத்தில், கட்டுமான ஊழியர்களான அவ்விருவரும் வசித்து வந்தனர்.

இவ்வாண்டு மார்ச் 21ஆம் தேதி,  குடிபோதையில் தங்குமிடத்துக்குத் திரும்பிய அருணாசலம், அங்கு வாந்தி எடுத்தார். அதனைச் சுத்தப்படுத்த கணேசன் அவரிடம் கோரினார். அருணாசலமோ, அதற்குச் செவிசாய்க்க மறுத்து கணேசனுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அமளியைச் செவியுற்ற அவர்களது மேற்பார்வையாளர் தலையிட்டு, அருணாசலத்தைச் சுத்தம் செய்யச் சொன்னார்.

அப்போதும், அருணாசலம் சுத்தம் செய்யாமல், துணியைக் கொண்டு வாந்தியை மறைத்தார்.
சற்று நேரத்திற்குப் பிறகு, அருணாசலம் 30 செண்டிமீட்டர் நீளக் கத்தியை எடுத்துக்கொண்டு, கட்டிலில் படுத்திருந்த கணேசனைப் பலமுறை வெட்டியதாக நீதிமன்ற ஆவணங்கள் குறிப்பிடுகின்றன.

தேசியப் பல்கலைக்கழக மருத்துவமனையில் திரு கணேசனுக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது. வெட்டுக் காயங்களில் ஒன்று அவரது மூச்சுக்குழாய்க்கு அருகில் இருந்தது.
காயங்கள் பலமாக இருந்தபோதும் அவர் உயிர் தப்பினார்.வேண்டுமென்றே பலத்த காயத்தை ஏற்படுத்திய குற்றத்திற்கு, ஆயுள் தண்டனையுடன் அபராதம் அல்லது பிரம்படி விதிக்கப்படலாம்.
1.31 கிலோகிராம் போதைப்பொருள் பறிமுதல் 

6/12/2017 19:42

https://seithi.mediacorp.sg/mobilet/singapore/06-dec-drug-bust/3904392.html

மத்திய போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு நடத்திய சோதனையில் 1.31 கிலோகிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதன் தொடர்பில், சந்தேக நபர்கள் ஐந்து பேரை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

கைப்பற்றப்பட்ட போதைப் பொருளின் சந்தை மதிப்பு, 138,000 வெள்ளிக்கும் அதிகம். தோ பாயோ ஈஸ்ட்டிலுள்ள அடுக்குமாடி வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியபோது அங்கு இரண்டு ஆடவர்களும் ஒரு பெண்ணும் கைது செய்யப்பட்டனர். அந்த வீட்டிலிருந்து சுமார் 1 கிலோகிராம் போதைமிகு அபின் கைப்பற்றப்பட்டது.

தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், தம்பனீஸ் ஸ்ட்ரீட் 44-இல், போதைப்பொருள் கடத்திய சந்தேகத்தின் பேரில், 44-வயது ஆடவர் ஒருவர் கைதானார்.அந்த நபரிடம் இருந்து 313 கிராம் போதைமிகு அபின் பறிமுதல் செய்யப்பட்டது.

கைதுச் சம்பவத்துக்கு முன்னர் அந்த ஆடவரைச் சந்திக்கச் சென்ற சந்தேகத்துக்குரிய போதைப் புழங்கி ஒருவரையும் காவல்துறையினர் கைது செய்தனர்.

விசாரணை தொடர்கிறது.

போதைப் பொருளுக்கு எதிரான சட்டத்தின்படி, 15 கிராமுக்கு அதிகமான போதைமிகு அபினைக் கடத்துவோருக்கு மரண தண்டனை விதிக்கமுடியும்.


சமூக வலைதளங்களில் வைரலாகும் விஜயகாந்த்தின் புதிய புகைப்படம்! 
















மருத்துவ சிகிச்சைக்காகச் சிங்கப்பூர் சென்றுள்ள தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்தின் புகைப்படம் வெளியாகியுள்ளது.

உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்த தே.மு.தி.க பொதுச் செயலாளர் விஜயகாந்த், ஏற்கெனவே சிங்கப்பூர் சென்று சிகிச்சைபெற்று வந்திருந்தார். ஆனால், விஜயகாந்த்துக்கு பேசுவதில் தொடர்ந்து சிரமம் இருந்துவந்தது. இந்தநிலையில், கடந்த 28-ம் தேதி மருத்துவ சிகிச்சைக்காக விஜயகாந்த் சிங்கப்பூர் சென்றார். சிங்கப்பூர் சென்றிருந்த நிலையில், அங்கு அவர் ஹோட்டல்களில் விஜயகாந்த் இருக்கும் போட்டோக்கள் வெளிவந்து சமூக வலைதளங்களில் வைரலாகியது.

தற்போது, சிகிச்சைப் பெறும் உடை அணிந்து மருத்துவமனை ஊழியருடன் விஜயகாந்த் நிற்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அந்தப் புகைப்படம் தற்போது, சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது. 


Dailyhunt

NEWS TODAY 26.01.2026